தொகுப்பு

Archive for ஏப்ரல், 2013

ஐ.பி.எல் 2013 – ஒரு முன்னோட்டம் – 2

முந்தைய பாகம்: http://wp.me/pl9S3-bw

Inline image 3

ராஜஸ்தான் ராயல்ஸ்

ஃபேர் ப்ளே அவார்டு மட்டுமே வாங்க முடிந்த அணி! ராகானேயின் திறமையை இந்தியாவிற்கு உணர்த்திய அணி! போன முறையோடு அவ்வளவுதான் என்று நினைத்திருந்த டிராவிட்டின் ஆட்டத்தை இந்த முறையும் தரக் கூடிய அணி! அவருக்கு அடுத்து காப்டனாக இருக்கலாம் என நினைத்த போத்தா, அணி மாறிவிட்டாலும், போன முறை அவருடைய பங்களிப்பு பெரிதாக இல்லை! அணிக்கு நம்பிக்கை தரும் முக்கிய விஷயம், வாட்சன் ஆரம்பம் முதலே அணிக்காக விளையாடுவார் என்பதே!

பெரும்பாலும் ஸ்டார் வால்யூ இல்லாமல் களமிறங்கும் அணி, இந்த முறையும் அப்படியே! வாட்சனைத் தவிர்த்து, மற்ற இடங்களுக்கு, டெய்ட், ஓவிஸ் ஷா, ஹோட்ஜ், ஹாக்,எட்வர்ட்ஸ், ஃபல்குனர், கெவான் கூப்பர், சாமுவேல் பத்ரி என 8 பேர் போட்டி! 40 வயது டிராவிட்டும், 42 வயது ஹாக்கும் ஒரே அணியில்! இது தவிர ரகானே, மனேரியா, பின்னி,ஸ்ரீசாந்த் த்ரிவேதி ஆகியோர் மட்டுமே தெரிந்த முகங்கள்! பேட்டிங்கிற்கு வாட்சன், ரகானே,மனேரியா, டிராவிட், பின்னி மட்டுமே என்பதால் வெளிநாட்டு ஆட்டக்காரர்களில் இன்னொரு பாட்ஸ்மேனாக ஷா  விளையாடுவது அணியின் மத்திய வரிசையை பலப்படுத்தும்! அதே சமயம், பந்து வீச்சிலும் அணியில் பெரிய ஆட்கள் இல்லை என்பது இதன் பெரிய பலவீனம்!

யூசுஃப் பதான், ஜடேஜா முதல் ரகானே வரை பலரை இந்திய அணிக்குக் கொடுத்த அணி,பெரும்பாலும் ஆச்சரியங்களை ஏற்படுத்தும் அணி, இந்த முறை என்ன செய்யப் போகிறது என்பது முக்கிய சில ஆட்டக்காரர்களின் கையில் இருக்கிறது!

கிங்ஸ் லவன் பஞ்சாப்

உண்மையாகவே கிங்கோ இல்லையோ, ஆனாலும் ஒரு குயினினுடைய அணியாகத் திகழ்கிறது! முதல் சீசனைத் தவிர்த்து பெரியதொரு ஆட்டத்தை வெளிப்படுத்தவே இல்லை! வலுவற்ற அணியாகவும், தொடர் தோல்விகளையும் போனத் தொடரின் ஆரம்பத்தில் சந்தித்தாலும், திடிரென்று பல ஆச்சரியங்களை ஏற்படுத்தியது! கில்லிதான் இன்னமும் காப்டன்! பழைய கில்லி இல்லையோ என்று போன முறை சந்தேகித்த சூழலில், திடிரென பழைய ஆட்டத்தை வெளிப்படுத்தினார்! அதே ஆட்டம் இந்த முறை வெளிப்படாவிடின், அணிக்கு சுமையாக மாறிவிடும் அபாயம் இருக்கிறது!

கில்லி தவிர, போன முறை கலக்கிய அசார் மகமூத், ஹாரிஸ், டேவிட் ஹஸ்ஸி, ஷான் மார்ஸ், மில்லர், பாம்பர்பாஸ், மாஸ்கரானஸ் என மொத்தமே எட்டு ப்ளேயர்கள்! பந்துவீச்சுக்கு போன முறை ஆச்சரியப்படுத்திய அவானாவுடன், ப்ரவீன் இருக்கிரார்! ப்ரீத்தி போன்றே ஆரம்பத்திலிருந்தே அணியில் இருக்கும் உள்ளூர் ப்ளேயர் பியூஸ் சாவ்லாதான் (ஷான் மார்சூம் கூட!). இது தவிர ஹர்மீத் சிங், கோனி, பட் இருப்பதால், வெளிநாட்டு வீரர்களில் பாட்ஸ்மேன்கள் அலல்து ஆல்ரவுண்டர்களை அதிகம் எடுக்கலாம்! இப்போதைக்கு கில்லி,அசார், மார்ஷ், ஹஸ்ஸிக்கு வாய்ப்புகள் அதிகம்! ஹஸ்ஸி, அசாரின் ஆல்ரவுண்ட் திறமை அணிக்கு பலம்!

ஆனால் பாட்டிங்கில் அணி பலவீனமாகவே உள்ளது! பெரிய நம்பிக்கையைக் கொடுத்த வால்தாட்டி போன் முறையே சோபிக்கவில்லை! போன ஐபிஎல்லுக்குப் பின்பு ஏதாவது அணியில் விளையாடுகிறாரா என்பது கூட தெரியவில்லை! மண்டீப் சிங் மற்றுமே ஓரளவு தெரிந்த முகம்! ஸ்டாடிஸ்டகலி சற்றே பலவீனமான அணியே! ப்ரீத்தி மறுபடி ஃபீல் பண்ணுவதை அதிகம் காணக்கூடிய வாய்ப்புகள் அதிகம்!

ராயல் சாலஞ்சர்ஸ் பெண்களூர்!

ஏகப்பட்ட ஸ்டார்கள் இருப்பது மட்டுமே வெற்றியைத் தந்துவிடாது என்பதற்கு சரியான உதாரணம்! ஆரம்பத்தில் அதிரடி விளையாட தில்சன், கெயில், நடுவில் ஆங்கர் ரோலுக்கு கோலி, மத்தியில் அடித்தாட டிவில்ல்யர்ஸ், திவாரி என பல ஸ்டார்கள்! பந்துவீச்சிலும் முரளிதரன், ஜாகீர்கான், வினய் குமார், ராம்பால், எனப் பலர் இருந்தும் அணி ஐந்தாவது இடத்தையே பிடித்தது போன முறை!

இந்த முறை விட்டோரிக்கு பதில் கோலி காப்டன் என்பது நல்ல மாற்றமே! 4 வெளிநாட்டு வீரர்களின் இடத்திற்கு, கெயில், தில்சன், டி வில்லியர்ஸ், பார்ன்வெல், கிரிஸ்டியன்,ஹென்ரிக்ஸ், மெக்டொனால்ட், முரளிதரன், ராம்பால், வெட்டோரி என 10 பேர் போட்டி! ஏறக்குறைய எல்லாருமே நல்ல வீரர்கள் என்பது அணியின் தேர்வுக்குழுவுக்கு தலைக்கனமா அல்லது தலைவலியா என்பது அவர்களுக்கே வெளிச்சம்! மிஞ்சிப்போனால் கண்டிப்பாக ஒரு வெளிநாட்டு பவுலர் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுவர்!

மீதமுள்ள 3 இடங்கள் பாட்ஸ்மேன்களே! இது தவிர கோலி என்பது பெரிய பலம்! புஜாராவின் ஃபார்ம் அவரையும் விளையாட வைக்கக் கூடும். ஆனாலும், அப்படி ஆடவைக்கப்படும் பட்சத்தில் வெளிப்படும் அவருடைய ஆட்டம், இந்திய அணியின் ஒருநாள், 20-20 அணிக்கான பாதையாக இருக்கும்! இது இல்லாமல் மான்யக் அகர்வால், திவாரி ஆகியோர் இருக்கின்றனர்!

பேட்ஸ்மேன்களைப் போன்றே எந்த பந்துவீச்சாளர்களை தேர்வு செய்வது என்பதும் பெரிய தலைவலியே! ஜாகீர், வினய், மிதுன், ஆர்பி எங், உங்கட், பரமேஷ்வரன், பங்கஜ் சிங், மிதுன் முரளி கார்த்திக் என கண்ணுக்குத் தெரிந்து அணியில் பல முன்னாள், இந்நாள் இந்திய பந்துவீச்சாளர்கள்! வீரர்களை வைத்து பார்க்கும் பொழுது மிக பலமான அணியாக இருந்தாலும், அது மட்டுமே அணிக்கு வெற்றியைத் தந்துவிடாது என்பதும் அவர்களுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கும்! தவிர கோலியின் காப்டன்ஷிப், அவரை இந்திய அணியின் எதிர்கால தலைமைக்கு பழக்கக் கூடும்!

மும்பை இண்டியண்ஸ்

பாண்டிங் தலைமையில் களமிறங்குகிறது மும்பை அணி! மிகப் பெரும் ஜாம்பவான்களான சச்சினும், பாண்டிங்கும் ஒரே அணியில்!!! பாண்டிங்கின் வரவு மட்டுமல்ல, அவரை காப்டனாக்கியது, இன்னமும் பலம் வாய்ந்த அணியாக காட்சியளிக்கிறது! பாண்டிங் தவிர்த்து,ப்ளிசார்டு, கவுண்ட்டர் நில், ஃப்ராங்க்ளின், ஹியூக்ஸ், ஜான்சன், மலிங்கா, மாக்ஸ்வெல், ஓரம்,போலார்டு, ஸ்மித் என அள்ளிக் குவித்திருக்கின்றனர்! பாண்டிங், மலிங்கா உறுதி என்ற சூழலில், மீதமுள்ள இரு இடத்திற்கு 9 பேர் போட்டி! இதில் போலார்டுக்கு அதிக வாய்ப்பு என்ற சூழலில். எதற்காக இத்தனை பேரை அள்ளியிருக்கின்றனர் என்பது புரியாத புதிர்!

இதில் ஹியூக்ஸ் ஆஸியின் முக்கிய வீரர் என்ரால், ஃப்ராங்க்ளின், ஸ்மித் ஆகியோர் போன முறையே மும்பையின் வெற்றிக்கு முக்கிய காரணமாய் இருந்தவர்கள்! இந்த லட்சணத்தில்,மாக்ஸ்வெல்லுக்கு எதற்கு அவ்வளவு விலை கொடுத்து எடுக்க வேண்டும் என்பதும் புரியவில்லை! உள்ளூரில் ஆட்களிலும் ஸ்டார் பட்டாளங்கள்! ஏறக்குறைய பலர் கண்டிப்பாக இருப்பவர்கள்! சச்சின், ரோகித், ராயுடு, தினேஷ் கார்த்திக் உடன் பந்து வீச்சில் ஹர்பஜன்,ஓஜா, முனாஃப், படேல், தவால் குல்கர்னி எனப் பலர் உள்ளனர்!

பல ஸ்டார்கள் இருந்தாலும், அணியாக பார்க்கும் பொழுது சற்றே குழப்பமாகவே இருக்கிறது! போன முறை இருந்த லெவி, கிப்ஸ் இந்த முறை இல்லை! ஆகையால் ஓபனிங்கிற்காகவே ஸ்மித் இருக்க வேண்டும்! அல்லது புதிய மாற்றமாக தினேஷ் கார்த்திக்கை ஓபனிங் ஆக்க வேண்டும்! இல்லாவிடின் கொடுத்த காசுக்கு ஹியூக்ஸ் அல்லது மாக்ஸ்வெல்லுகு வாய்ப்பு கொடுத்து பரிட்சிக்க வேண்டும்! அவர்களைத் தொடர்ந்து பாண்டிங், ரோகித், ராயுடு, கார்த்திக்,போலார்டு என மத்திய வரிசை இருப்பது அணியின் பெரிய பலம்!

பந்து வீச்சிலும் மலிங்கா உடன் குல்கர்னி அல்லது படேல் அல்லது இருவருமே இருக்கும் சூழலில், ஹர்பஜன் / ஓஜா தவிர ஆல்ரவுண்டர்கள் என கைவசம் எப்பொழுதும் ஏகப்பட்ட சாய்சினை வைத்திருக்கும் அணி! இந்த முறையும் பலத்த போட்டியைக் கொடுக்கக் கூடிய அணியாக இருக்கும்!

Inline image 2

டெல்லி டேர்டெவில்ஸ்

ஏறக்குறைய சென்னைக்கு இணையாக தொடர்ந்து நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தும் மற்றொருஅணி! இருந்த போதிலும்  இன்னமும் கோப்பை கைவசமாகவில்லை ஒரு முறைகூட!ஸ்டாடிஸ்டக்கலி, போன முறையை விட இந்த முறை இன்னமும் பலம் குறைவான அணியாகக்காட்சியளிக்கிறது! ராஸ் டெய்லரை விட்டுக் கொடுத்து நெக்ராவை எடுத்திருக்கிறார்கள், பீட்டர்சன்காயம், அணிக்குள் வந்த ரைடர் கோமாவில், சேவாக் ஃபார்மில் இல்லை, வாரனரும் கூட!ஜெயவர்த்தனே சென்னையில் ஆட முடியாது என ஏகப்பட்ட பிரச்சினைகள் அணிக்கு

மார்னே மார்க்கெல், ஜெயவர்த்தனே, வார்னர் உறுதியாக இருக்கக் கூடும். மீதமுள்ள இடத்திற்கு,போத்தா, ருசல், ஜீவன் மெண்டிஸ், போடி, வாண்டர் மெர்வ் போட்டி! இதில் போத்தாவுக்குவாய்ப்புகள் அதிகம்! ஏற்கனவே வருண் ஆரூண், உமேஷ் யாதவ், இர்ஃபான் பதான் இருக்கும்நிலையில், மார்னே மார்க்கெலும் அதிகம் விளையாடக் கூடிய சூழலில், நெக்ராவை எடுக்க, ராஸ்டெய்லரை விட்டுக் கொடுத்ததன் மர்மம் அணியினருக்கே தெரியும்! இதில் ஏறக்குறைய எல்லாபவுலர்களும் காயத்திலிருந்து இப்பொழுதுதான் வருகிறார்கள்!

பந்துவீச்சு ஓரளவு பலமாக இருந்த போதிலும், பாட்டிங், சேவாக், வார்னர், ஜெயவர்த்தனே உடன்உம்குந்த் சந்த், போத்தா, ஜாதவ், பதான் ஆகியோரை நம்பியே இருக்கிறது! ஐபிஎல், சேவாக்கிற்கும்கூட ஒரு முக்கியமான தொடரே! தன்னை நிரூபித்துக் கொள்ளவேண்டிய கட்டாயத்தில் அவர்இருக்கிறார்!

சென்னை சூப்பர்கிங்ஸ்

பெயருக்கேற்ற ராஜாக்கள் எப்பொழுதுமே! தொடர்ந்து நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தும் அணி!எப்படி என்றே யாருக்கும் புரிபடாவிட்டாலும், யாருமே நல்ல ஆட்டத்தைக் கொடுக்காவிட்டாலும்,கடைசி கட்டத்துக்கு வந்துவிடும் அணி! இப்பொழுது இன்னும் வலுவான நிலையில்!

டூ ப்ளசிஸ், மைக் ஹஸ்ஸி, ஆல்பி மார்கெல், ப்ராவோ, ஹில்ஃபெனாஸ், போலிங்கர், குலசேகராஎல்லாம் பத்தாது என்று பந்து வீச்சிற்கு நான்ஸ், லாஃப்ளின், ஹோல்டர் ஆகியோரும்,ஆல்ரவுண்டர் இடங்களுக்கு கிரிஸ் மோரிஸ் மற்றும் தனஞ்செயா ஆகியோர் உள்ளேவந்திருக்கிறார்கள்! குலசேகரா, தனஞ்செயா அணியில் ஆடமுடியாதது, தேர்வுக் குழுவின்வேலையை சுலபமாக்கியது! ஹஸ்ஸி, டூப்ளசில் கண்டிப்பாக இருப்பார்கள்! ப்ராவோவும்அப்படியே! மீதமுள்ள ஒரு இடத்திற்குதான் இத்தனை அக்கப்’பே’ர்கள்! கண்டிப்பாக பவுலர்தான்!

விஜய் வேறு ஃபார்மில் இருக்கிறார்! ஜடேஜா அசத்தியிருக்கிறார்! டூப்ளசிஸ், விஜய் ஓபனிங்!ரெய்னா, பத்ரி, தோனி, ஹஸ்ஸி அல்லது கிறிஸ் மாரிஸ் அல்லது மார்கல், ப்ராவோ, ஜடேஜா,அஸ்வின், ஹில்ஃபெனாஸ் / நான்ஸ், இன்னொருவர் என அணி நல்ல லைன் அப்பில் இருக்கிறது!

ஒவ்வொரு முறையும் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தும் அணி என்பது போன்றே, பலசமயங்களில் சொதப்பி, அடித்து பிடித்தோ அல்லது உள்ளே நுழைய வேறு ஒருவருடையதயவிலோ இருப்பதும் வாடிக்கையான ஒன்றே! இந்த முறையாவது அதை தகர்க்குமா???

கொல்கத்தா நைட்ரைடர்ஸ்!

அடிச்சு புடிச்சு போன முறை கோப்பையை வென்றுவிட்டார்கள்! அதற்கு கண்டிப்பாக ஒருவர் காரணமல்ல. பிஸ்லா முதற்கொண்டு எல்லாரும் தங்களுடைய பங்களிப்பை சிறப்பாகச் செய்தார்கள்!

இந்த முறை அணியில் பெரிய மாற்றங்கள் இல்லை. 4 இடங்களுக்கு, ஹாடின், ப்ரட் லீ, கல்லிஸ், மெக்கல்லம், மெக்லேரன், மார்கன், நரைன், பாட்டின்சன், ஷாகிப் அல் ஹாசன், டென் டாஸ்ட்சே, செனாயகே என 11 பேர் போட்டி! பல ஆல்ரவுண்டர்கள் இருப்பது அணிக்கு கூடுதல் பலம். நரைன் கண்டிப்பாக இருப்பார். மீதி மூன்று இடங்களுக்கு இன்னொரு பவுலர், அது பெரும்பாலும் ப்ரட் லீயாக இருக்கலாம். கல்லிசின் ஆல்ரவுண்ட் திறமை மற்றும் தொடர்ந்து அணியில் இருப்பதால் அதிக முன்னுரிமை இருக்கலாம். மெக்கல்லமின் சமீபத்திய ஃபார்மும், அவருடைய அதிரடியும் அவருக்கு வாய்ப்பினை அதிகப்படுத்துகிறது!

உள்ளூர் ஆட்களில், காம்பீருடன், மனோஜ் திவாரியும், பதானும், பிஸ்லாவும் பலம் சேர்க்கிறார்கள். பந்து வீச்சில் பாலாஜி, ஷாமி அகமது இருக்கிறார்கள். பிஸ்லா, கல்லீஸ், காம்பீர், மெக்கல்லம், பதான், மனோஜ் திவாரி, அப்துல்லா / பாடியா, பாலாஜி, ப்ரட் லீ, நரைன், ஷாமி அகமது / சுக்லா என்ற லைன் அப் இருக்கலாம்!

ஆல்ரவுண்டர்களுக்கு வெளிநாட்டு வீர்ர்களையே நம்பி இருப்பது இதன் பலவீனம். பதான் போன்று இன்னொரு பேட்டிங் ஆல்ரவுண்டர் இருந்திருந்தால் அணி இன்னும் வலுவாக இருக்கும். பதானுக்கு கல்யாணம் ஆன பின்பு வரும் தொடர் இது!

சேவாக்கைப் போன்றே, காம்பீருக்கும் இந்த்த் தொடர், அவரை நிரூபித்துக் காட்ட வேண்டிய கட்டாயமாக இருக்கிறது! மீண்டும் ஒரு முறை கோப்பையை வென்றூ காட்டுவதும், அதற்கு முக்கியக் காரணமாக இருப்பதுமே, இந்திய அணியில் அவருடைய எதிர்காலத்தை முடிவு செய்வதாய் இருக்கும்!

——————————————————————————–

தற்போதைக்கு தேசப்பற்றை மட்டுமல்ல, ஐபிஎல் சமயங்களில் இனப்பற்றை ஊட்டுவதற்கும் கிரிக்கெட் பெரும் பங்கு வகிக்கிறது! நாளை தொடங்கும் போட்டி, ஆரம்பத்தில் பெரிய வரவேற்பையும், நடுவில் தொய்வாகவும், இறுதியில் த்ரில்லிங் ஃபினிஷிங்கை கொடுக்க கூடியதாகவே முடியும்! கைதேர்ந்த மசாலா பட இயக்குநரின் ஆக்கத்தில், முண்ணனி நடிகர்கள் பலருடைய பங்கேற்பில் வெளிவரும் ஒரு திரைப்படத்திற்கான அனைத்து அமசங்களையும், வெற்றியையும் இந்த ஐபிஎல்லும் பெறக் கூடும்!!!

கட்டுரை அதீதம் மின்னிதழில் வெளிவந்துள்ளதுhttp://www.atheetham.com/?p=4546

பிரிவுகள்:கிரிக்கெட் குறிச்சொற்கள்:

ஐ.பி.எல் 2013 – ஒரு முன்னோட்டம் – 1

ஏப்ரல் 2, 2013 1 மறுமொழி

கிரிக்கெட்டில் சூதாட்டம் அதிகரித்துக் கொண்டே போகிறது என்ற குற்றச்சாட்டு ஒரு புறம் இருக்க, ஏறக்குறைய ஐபிஎல் போட்டி முறையே, ஒரு சூதாட்டத்தைப் போன்றுதான் காட்சியளிக்கிறது! சில வீரர்களை அதிக விலை கொடுத்து ஏலத்தில் எடுப்பது சரியான தேர்வா அல்லது ஒரு கேம்பிளா என்ற வார்த்தை சர்வ சாதாரணமாக புழங்குகின்றன!

எனக்கு சூதாட்டக் கிளப் என்றாலே ஞாபகத்திற்கு வருவது, சில பல பழைய தமிழ் படங்களும், ஜேம்ஸ் பாண்ட் படங்களும்தான்! அரைகுறை உடைகளுடன் பெண்கள், அவர்கள் நடனம், எளிதில் புழங்கும் மதுபானங்கள், கோடிக்கணக்கில் புரளும் பணம், நடத்துபவர்களின் பெரிய பின்புலம் என்று இரண்டிற்குமே சில பல ஒற்றுமைகள் இருக்கத்தான் செய்கின்றன!

IPL-2013-Schedule

2013ன் ஐபிஎல் சீசன் ஆரம்பிக்கப் போகிறது! ஐபிஎல்லின் வெற்றியைக் கண்ட பலரும் அதே போன்றதொரு தொடரை அவரவர் நாடுகளில் நடத்த ஆரம்பித்தாலும், ஐபிஎல்லுக்கு இருக்கும் மவுசு தனிதான்! அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக இந்தியா எப்பொழுது வல்லரசாகுமோ, ஆனால் கிரிக்கெட்டில் இந்தியா ஒரு பெரும் வல்லரசாகிவிட்டதன் இன்னொரு அடையாளம், ஐபிஎல்லின் தொடர் வெற்றி! இந்த சீஷனில் மட்டும்தான் காம்பீர் பெங்காலி ஆகின்றார், கோலி கன்னடராகிறார், சமயங்களில் வெளிநாட்டுக்காரர்கள் கூட உள்ளூர் தலைவர்களாகி விடுகின்றனர்!

நாட்டின் முக்கியத் தலைவர்கள், அமைச்ச்சர்கள் எல்லாம் பிசிசிஐயின் முக்கிய பதவியில் இருந்தாலும், அரசியலையும், விளையாட்டையும் ஒன்றாக பார்க்கக் கூடாது என்று சொல்லும் காமெடிகள் அரங்கேறும் சூழலில், உருப்படியாக, சென்னையில் நடைபெறும் போட்டிகளில் இலங்கை வீரர்கள் பங்கேற்கக் கூடாது என்ற கருத்துக்கு தமிழகத்தில் பெருத்த வரவேற்பு!

வெற்றி பெற்றவர்களைப் பற்றி மட்டுமே அனைவரும் பேசும் சூழலில், போன தொடரில் கடைசி 4 இடங்களைப் பிடித்த அணிகளின் பங்கு இந்த முறை எப்படி இருக்கப் போகிறது?

புனே வாரியர்ஸ்

போன தொடரில் கடைசி இடம்! பல மாற்றங்கள் அணியில்! போன முறை தாதா காப்டன்! இந்த முறையோ, தாதா தாத்தாவாகிப் போனதை ஏற்றுக் கொண்டு ஆடவில்லை அல்லது ஆட விடவில்லை. அதைவிட பெரிய மாற்றம், போன முறை ட்ரீட்மெண்டில் இருந்த யுவராஜ், இந்த முறை அணிக்கு முக்கிய பலம்! ஓரளவு நல்ல வீரர்களைக் கொண்டிருந்தும், கடைசி இடம் பிடிக்க வேண்டிய அளவிற்கு அதன் ஆட்டம் இருந்தது பெரிய புதிர்! இந்தமுறை மாத்யூஸ் கேப்டன்! ஆச்சரியம் என்னவென்றால் போன முறை இவர் விளையாடியதும் குறைவான ஆட்டங்களே, தவிர பங்களிப்பும் சுமாரே!

க்ளார்க் இருந்திருந்தால் கேப்டனாகியிருப்பாரோ என்னமோ! ஆனால் இப்போதைக்கு மாத்யூஸ்தான் கேப்டன்! நல்லதொரு ஆல்ரவுண்டர் என்பதும் ப்ளஸ். மீதமுள்ள மூன்று வெளிநாட்டு ஆட்டக்காரர்கள் இடத்திற்கு, பல நல்ல வீரர்கள் உள்ளனர்! ராஸ் டெய்லர், சாமுவேல்ஸ், தமிம் இக்பால், ஸ்டீவன் ஸ்மித், லுக் ரைட், கேன் ரிச்சர்ட்சன், வேய்ன் பார்னல், மிட்சல் மார்ஸ், ஆரூன் ஃபின்ச், என ஒன்பது பேர் உள்ளனர். ஸ்மித்தின் சமீபத்திய ஃபார்ம் மற்றும் 20-20 போட்டியில் அனுபவம், சாமுவேல்சின் ஆல்ரவுண்ட் திறமை, தமிம் இக்பால் மற்றும் ராஸ் டெய்லரின் அதிரடி ஆட்டம் என ஏறக்குறைய பலரும் நல்ல வீரர்கள்!

உள்ளூர் ஆட்டக்காரர்களைப் பொறுத்தவரை, யுவராஜின் வரவு பெரிய பலம். இந்தியாவின் தற்போதைய நம்பிக்கை நட்சத்திரம் புவனேஷ் குமார் பந்துவீச்சுக்கு பலம். இன்னொரு இந்திய பந்து வீச்சாள்ரான திண்டாவும் பந்து வீச்சிற்கு பலம் சேர்க்கிறார்! சுழற்பந்துக்கு ராகுல் சர்மா! இதைத் தவிர தெரிந்த ஆட்கள் உத்தப்பா, மணீஷ் பாண்டே, அபிஷேக் நாயர், சமீப காலங்களில் புதிய கண்டுபிடிப்பாகக் கருதப்படும் ஆல்ரவுண்டர் ரசூல் எனப் பலர் உள்ளனர்! கண்டிப்பாக போன முறையை விட நன்கு பலமான அணியாகவே தோன்றுகிறது! மிக மிக மோசமான பங்களிப்புதான் போன்ற முறை என்ற சூழலில், இந்த முறை நல்லதொரு பங்களிப்பையும், போட்டியையும் ஏறபடுத்தும் அணியில் ஒன்றாக மாறலாம்!

டெக்கான் சார்ஜர்ஸ் (எ) சன்ரைசர்ஸ்

ஐபிஎல் சென்னையில் கூடாது என்பதை வரவேற்கும், ஈழத்திற்காக பாராளுமன்றத்தில் குரல் கொடுத்த மாறன் குடும்பத்திற்கு, அணி கைமாறிய பின்பு நடக்கும் முதல் போட்டி! எந்த இலங்கையை குற்றம் சாட்டுகிறோமோ, அந்த அணியின் முக்கிய வீரரான சங்ககராதான் காப்டன்      அணிக்கு இப்பொழுதும்! புதிய வரவுகளாக, டாரன் சாமி, நாதன் மெக்கல்லம், மெக்கே, பெரேரா ஆகியோர். சங்ககரா எல்லாப் போட்டிகளுக்கும் என்ற சூழலில், மீதமுள்ள இடங்களுக்கு, திஷாரா பெரேரா, சாமி, மெக்கல்லம், டும்னி, ஸ்டெயின், டி காக், மெக்கே, காமரூன் வொயிட், லின் என இங்கேயும் 9 பேர் போட்டி! சங்ககராவைத் தவிர்த்து மற்ற யாரும் தனிப்பட்ட முறையில் பெரிய ப்ளேயர்கள் இல்லை என்பது சாதகமா அல்லது பாதகமா என்பது தொடர் சொல்லிவிடும்!ஸ்டெயினின் பந்து வீச்சு அவருக்கு அதிக வாய்ப்பளிக்கும் சூழலில், மீதமுள்ள இடங்களுக்கு சாமி, பெரேரா, மெக்கல்லம், வொயிட், டும்னி இடையே கடும் போட்டியைக் கொடுக்கும்! மெக்கல்லமின் சமீபத்திய ஃபார்ம் அவருக்கு பலம்!

உள்ளூர் ஆட்களில், போன முறை அணி சில வெற்றிகளைப் பெறக் காரணமாயிருந்த தவான் பலம் என்றாலும், காயம் காரணமாக, ஆரம்பப் போட்டிகளில் அவர் விளையாட முடியாது!  ஸ்டெயினுடன், இஷாந்த் பந்து வீசுவது ஓரளவு பலம் சேர்க்கிறது! இது தவிர தெரிந்த முகங்கள் பர்தீவ் பட்டேல், அமித் மிஸ்ரா, சுதீப் தியாகி மட்டுமே! எப்படிப் பார்த்தாலும், அணி போன முறையைப் போன்றே வெளிநாட்டு வீர்ர்களை நம்பியே பெரிதும் இருக்கிறது! இன்னும் சொல்லப் போனால் டொமஸ்டிக் போட்டிகளில் கூட ஹைதராபாத் அணி என்பது சற்றே பலவீனமான அணியாகவே இருக்கிறது!

இருப்பினும், மிகச் சாமர்த்தியமான வியாபாரியின் கைகளுக்கு அணி சென்றிருக்கிறது! அணியை வாங்கியவர்கள் ஒன்றும் சாதாரணமானவர்களில்லை! எதற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும், எதற்கு அமைதி காக்க வேண்டும் என்ற வித்தையை கைவரக் கற்றவர்கள்! ஈழத்திற்காக பாராளுமன்றத்தில் குரல் கொடுத்துக் கொண்டே, அணிக்கு இலங்கை வீரரை கேப்டனாக நீடிக்க வைத்திருப்பவர்கள். நித்தியானந்தா விவகாரத்தை பெரிது படுத்திவிட்டு, தன்னுடைய செய்தி ஆடிட்டரின் செய்தியினை வெளியேயே கொணராமல், பாதிக்கப்பட்ட பெண்ணை நீக்கியவர்கள்! இவை எல்லாவற்றையும் விட மொக்கைத் திரைப்படமான மாசிலாமணியையே அகில உலக வெற்றிப் படமாக காட்டியவர்கள்! அவர்களுடைய ஆளுமைக்கு கீழுள்ள அணியில் எதுவும் சாத்தியமே!

கட்டுரை அதீதம் இணையத்தளத்தில் வெளிவந்துள்ளது: http://www.atheetham.com/?p=4440

தொடரும்…

பிரிவுகள்:கிரிக்கெட் குறிச்சொற்கள்: