தொகுப்பு

Archive for the ‘மொக்கை’ Category

இது ஆண்களின் உலகம்….

முன்குறிப்பு: இது சீரியஸா இல்லை மொக்கையா என்று சத்தியமாக எனக்குத் தெரியவில்லை. மொக்கையாக எழுத ஆரம்பித்து நடுவில் ஒரு புண்ணியவான் உண்மையத்தாண்டா சொல்ற? இதை ஏன் மொக்கைன்னு சொல்றன்னு கேள்வி கேட்டதாலேயே என்னுள் ஒரு தடுமாற்றம்! ஆகையால் முடிவை உங்களிடமே விட்டு விடுகிறேன்….

இந்த பதிவு, இதையும் யாராவது ஒருவர் பதிவு செய்ய வேண்டும் என்ற நோக்கிலேயே எழுதப்பட்டது. இது பெண்கள் புரிந்து கொள்ளவேண்டுமென்பதற்காக மட்டுமே…

எங்களைப் பற்றி நாங்களே சொல்லுகிறோம்….எங்களையும் புரிந்து கொள்ளங்கள்!!!!

நாங்கள் ஆண்கள்……

நாங்கள், பெண்களின் உலகத்தை புரிந்து கொள்வதிலேயே வாழ்வின் பெரும்பகுதியை செலவிட்டவர்கள். பல சமயங்களில் அவர்களின் புரிந்துணர்வையும், அணுகுமுறையையும் தெரிந்து கொள்வதற்குள் பல விஜய் படங்கள், சிம்பு படங்கள், விஷால் படங்களை ஒன்றாகப் பார்த்த அனுபவத்தைப் பெறுகின்றோம். பல சமயங்களில் அவர்களை புரிந்து கொள்ளும் அவசரத்திலும், அவசியத்திலும் எங்களைப் பற்றியே நாங்கள் அறிந்துகொள்ளாமல் போய் விடுகிறோம்….

  • உங்கள் மனதில் இருப்பதை எல்லா ஆண்களாலும் அப்படியே புரிந்து கொள்ள முடியாது! நீங்களாகச் சொல்லும் வரை…
  • நாங்கள் என்ன ஆச்சு என்று கேட்டு, நீங்கள் ஒன்றுமில்லை என்று சொன்னால், நாங்கள் ஒன்றுமில்லை என்றுதான் நினைப்போம்…
  • நீங்கள் குண்டாக இருப்பது போன்று நீங்கள் கருதினால் ஒருவேளை அது உண்மையாகவே இருக்கலாம், திருப்பி, திருப்பி எங்களிடம் கேட்காதீர்கள்…
  • கல்யாணத்திற்கப்புறம் நாங்களும் பல விஷயங்களை இழக்கிறோம்
  • ஒரு பிரச்சனையை தீர்க்கும் எண்ணம் இருந்தால் மட்டுமே எங்களிடம் வாருங்கள்
  • உங்களுக்கு தலைவலி நீண்ட நாட்களுக்கு இருந்தால் டாக்டரைப் போய் பாருங்கள், கணவனையோ, பாய்ஃபிரண்டையோ குறை சொல்லாதீர்கள்
  • பெரும்பான்மையான கேள்விகளுக்கு ஆம் அல்லது இல்லை என்று பதிலளித்தாலே சந்தோஷமாக இருக்கும்
  • ஒரு விஷயம் இரு விதங்களில் புரிந்துக் கொள்ளப்படலாம் எனில், அதில் ஒரு விதம் உங்களை கோபமோ, சோகமோ படுத்துகிறது எனில், கண்டிப்பாக நாங்கள் இன்னொரு விதத்தில்தான் சொல்லியிருப்போம்
  • நாங்கள், 6 மாதத்திற்கு முன்பு சொன்ன எந்த ஒரு விஷயமும், வார்த்தைகளும் விவாதத்தின் போது ஒத்துக்கொள்ளப் பட மாட்டாது!!! உண்மையில் எங்களது எல்லா கருத்துக்களுமே ஒரு வாரத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும் (கடையில் வரும் ஆஃபர் போன்று!!!)
  • ஒன்று ஒரு விஷயத்தை எப்படி செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள் அல்லது நாங்கள் செய்த விதத்தை ஒத்துக் கொள்ளுங்கள்… மிக நல்லது என்னவென்றால், உங்களால் அந்த விஷயத்தை மிகச் சிறப்பாக செய்ய முடியும் என்றால் தயவு செய்து நீங்களே செய்து விடுங்கள்….
  • அழுகை என்பது பெரும்பாலும் ப்ளாக்மெயிலே…
  • கிரிக்கெட் மேட்சுகளின் போது ஏதாவது சொல்ல வேண்டுமென்றால், விளம்பர இடைவேளையின் போது தாராளமாக சொல்லுங்கள்… ஆஃப்டர் ஆல் ஒரு ஓவருக்கு ஆறு பந்துகள்தான்…
  • பெண்களுக்கென்றே இருக்கும் பிரத்யோகமான சில விஷயங்களை நாங்கள் விரும்பி கேட்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால், ஆண்களுக்கென்ற பிரத்யோகமான விஷயங்களை நீங்களும் விரும்பிக் கேளுங்கள்…
  • அவசரமாக ஒரு இடத்திற்கு போக வேண்டும் எனில், நீங்கள் எதை அணிந்து வந்தாலும் நன்றாகவே இருக்கும்,சத்தியமாக…… நீங்கள் ரொம்ப மெனக்கெட வேண்டாம்
  • ஒரு விஷயம் வேண்டுமென்றால் நேரடியாகச் கேளுங்கள்….நுண்ணிய, மறைமுக, ஏன் நேரடி குறிப்புகளைக் கூட சில சமயம் நாங்கள் புரிந்து கொள்ளாமல் போகலாம்
  • நீண்ட நாட்களுக்குப் பிறகு நீங்கள் உங்கள் தோழிகளை சந்திப்பதால், உங்களுக்குள் ப்ரைவசி வேண்டும் என்பதற்காகவே நாங்கள் உங்களுடன் வர மறுக்கிறோம்…
  • காதலிக்கும் போது உங்களுக்காக அதிகம் செலவு செய்கிறோம் என்பதற்காக நாங்கள் பணம் படைத்தவர்கள் என்று நீங்கள் நினைத்துக் கொண்டால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல….. அப்போது எங்களுக்கு பணம் ஒரு பொருட்டாகத் தெரியாது!
  • கல்யாணமான முதல் ஒரு வருடத்தைப் போன்றே வாழ்நாள் முழுக்க இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள்…..பிறந்த குழந்தையை எல்லாரும் கொஞ்ச மட்டுமே செய்வார்கள். நாட்கள் ஆக ஆக மட்டுமே, திட்டுவார்கள், சண்டை போடுவார்கள், கேள்வி கேட்பார்கள், முக்கியமாக, ஏதாவது வேண்டுமென்று கேட்டால் அது தேவையா என்று யோசிப்பார்கள்…
  • மாமியாருக்கும், மருமகளுக்குமிடையே சண்டை என்றால், அதை கணவனைத் தீர்த்து வைக்கச் சொல்லாதீர்கள். தீர்ப்புகள் ஒருவருக்கு சார்ந்தும், இன்னொருவருக்கும் எதிராகவும் மட்டுமே இருக்கும்….
  • பரிசாக நாங்கள் தரும் புடவையோ, பொருளோ  சுமாராகவோ, விலை குறைந்ததாகவோ இருந்தால், எங்கள் அன்பு குறைவானது என்று அர்த்தம் அல்ல
  • சில சமயங்களில் உங்களது செய்கைகளையோ, பேச்சுகளையோ புரிந்து கொள்ள முடியாததற்கு காரணம் அவை உண்மையிலேயே புரிந்து கொள்ள முடியாததாக இருக்கலாம்

பி.கு:

வேற யாராவது ஏதாவது சேத்த விரும்பறீங்களா???

அப்படியே இது சீரியஸா இல்லை மொக்கையான்னும் சொல்லுங்க…..

பிரிவுகள்:சீரியஸ், மொக்கை குறிச்சொற்கள்:, ,

மனைவியின் பிறந்தநாளை மறக்காதிருக்க சிறந்த வழி!!!

மனைவியின் பிறந்தநாளை மறக்காதிருக்க சிறந்த வழி!!!


  1. உங்கள் மனைவியின் பிறந்த நாளை மறக்காதிருக்க சிறந்த வழி, ஒரு முறையாவது அதை மறந்து விடுவதுதான்….
  2. ஒரு நல்ல மனைவி, அவள் பக்கம் தவறு இருக்கும் போதாவது, தனது கணவனை மன்னிக்க தயாராய் இருப்பாள்!
  3. மகிழ்ச்சியான திருமண வாழ்க்கைக்கான ரகசியம்………………ரகசியமாகவே இருக்கிறது!
  4. எனக்கு திருமணம் ஆகி 2 வருடங்கள் ஆகின்றது, நான் என் மனைவியுடன் பேசியும் 2 வருடங்கள் ஆகின்றது உண்மையில் அவள் பேசும் போது, நான் குறுக்கீடு செய்ய விரும்பவில்லை!
  5. கல்யாணம் ஆகும் வரை ஒரு மனிதன் முழுமை அடைவதில்லை, ஆன பின்போ அவனே முடிந்து விடுகிறான்!
  6. எனது கிரடிட் கார்டை யாரோ திருடிவிட்டார்கள், ஆனால் நான் போலீசிடம் புகார் கொடுக்க விரும்பவில்லை உண்மையில் அந்த திருடன், என் மனைவியை விட குறைவாகத்தான் செலவு செய்கிறான்…
  7. உண்மையான மகிழ்ச்சி என்றால் என்னவென்று திருமணம் ஆகும் வரை எனக்கு தெரிந்திருக்கவில்லை, தெரிந்தபோது மிகத் தாமதமாகியிருந்தது
  8. யார் சொன்னது, திருமணமான ஆண்கள் மற்ற ஆண்களை விட மிக அதிக நாட்கள் வாழுகிறார்கள் என்று? அது பார்ப்பதற்கு அப்படி இருக்கிறது, அவ்வளவே!!!
  9. யோசித்துப்பார்த்தால், கல்யாணம் என்ற ஒன்றைத் தவிர வேறெந்த தவறையும் மனதறிந்து செய்ததில்லை!!!
  10. நானும் எனது மனைவியும் 20 வருடங்களுக்கும் மேலாக சந்தோஷமாகத்தான் இருந்தோம், ஆனால் அதற்கப்புறம் நாங்கள் சந்தித்துக் கொண்டோம்
  11. புடவை கட்டியிருந்தால் என் மனைவியின் அழகு, என்னையேக் கொன்று விடும், அவளது சமையலைப் போல!

பின்குறிப்பு:

இது வெறும் மொக்கையாக இருக்கலாம், ஆனால் இதுதான் சி()லரது வாழ்க்கைக் குறிப்புகளும் கூட.

பிரிவுகள்:மொக்கை குறிச்சொற்கள்:

சாப்பாடும் கடலையும்…

கல்லூரிக் காலத்திலும் சரி, இப்போது வேலையில் இருக்கும் போதும் சரி, நான் சாப்பாட்டுக்கு தரும் முக்கியத்துவத்தை பலரும் வியப்புடனே நோக்கினர். அதுவும் நான் வேலை பார்த்து வந்த, பார்க்கின்ற அலுவலகங்களில்நாம இவ்ளோ கஷ்டப்பட்டு வேலை பாக்கறதே நிம்மதியா சாப்பிடத்தானனு ஒரு சின்ன விஷயத்தை சொன்னா, என்னமோ உலக மகா தத்துவத்தை சொன்ன மாதிரிகெக்கபிக்கன்னு சிரிக்கும் போது நாம எதாவது தப்பா சொல்லிட்டமான்னு சுய பரிசீலனை செய்ய வைக்கும்.

கல்லூரிக் காலங்களில் நல்ல சாப்பாடு வேண்டும் என்பதற்காகவே, இரண்டாம் ஆண்டு முடிவில் நண்பர்களுடன் சேர்ந்து தனியாக வீடு பார்த்து, ஒரு அம்மாவை சமையலுக்காகவே அமர்த்தியதும் சாப்பாட்டிற்கு கொடுத்த முக்கியத்துவத்தினால்தான். அதுவும் இரண்டாமாண்டு நடுவில் விடுதியை விட்டு விட்டு தனி வீடாக பார்த்து போய் விடலாமா என்று எழும்பிய ஆசை, சைவ உணவு மட்டுமெ கல்லூரி விடுதியில் போடப்படும் என்ற கல்லூரி நிர்வாகம் கொடுத்த உறுதிமொழியை, கல்லூரி நிர்வாகமே மீறிசீன வகை அசைவ உணவுபோட்டதும், அதுவும் ஒரு சனிக்கிழமை மதியம் சிக்கன், மட்டனுக்கு பதிலாக புழு, பூச்சியுடன் சாப்பாடு போட்டது, வாராவாரம் சனிக்கிழமை எண்ணெய் தேச்சு குளிக்கறது மட்டுமில்ல, எக்காரணம் கொண்டும் சனிக்கிழமை அசைவம் சாப்பிடக் கூடாது என்ற என் பெற்றோரின் கட்டளையை மீற வைக்கவே, முடிவாகவே மாறியது.

இதே முக்கியத்துவம்தான், பின்னாட்களில், கல்லூரி உணவு இடைவேளையில் கல்லூரி நண்பிகளை உணவு கொணரச் செய்து, அவர்களுடனே சாப்பிடும் போது அது ஏண்டா சாப்பாட்டுக்கு மட்டும் எங்க கூட வர மாட்டேங்கிற, கடலை போடுறது அவ்ளோ முக்கியமாடா, என்ற நண்பர்களின் கிண்டலையும் மீறி உண்ண வைத்தது (அவர்களுக்கு என்ன தெரியும், எனக்கு சாப்பாடுதான் முக்கியம் என்பதும், நான் சாப்பாட்டிற்காகத்தான் அவர்களுடன் சாப்பிடுகிறேன் என்பதும்).

இதே முக்கியத்துவந்தான், பின் சென்னை வந்த போது திருவல்லிக்கேணியில், ஒரு ஆந்திரா மெஸ்ஸுக்கருகில் இருந்த ஒரு மேன்சனை தேர்ந்தெடுத்து தங்க வைத்தது. பின் வடபழனியில் வீடு பார்த்து தங்கலாம் என்ற போது கூட, உடனடியாக கேஸ் கனெக்‌ஷன் பெற்று, ஒரு வேலையம்மாளை அமர்த்தி சமைத்து, சாப்பிட வைத்தது. அதுவும் சக நண்பர்கள் ஸ்டைலுக்காகவோ, சோம்பேறித்தனத்தினாலோ, சாப்பாடு எடுத்து வர முடிந்தும், எடுத்து வராமல், ஹோட்டலில் சாப்பிடலாம் என்று செல்லும் போது, நான் மட்டும் சாப்பாட்டை எடுத்துச் சென்று சாப்பிட்டதும் அதற்காகத்தான்.

என் நேரம், நான் சாப்பிடும் போது, சக அலுவலக நண்பிகள் மூன்று பேர் சேர்ந்து சாப்பிட நேர, அதுவும் அந்த பெண்கள், ‘நான் சாப்பாட்டுல உப்பு கம்மிஎன்று சொன்னால் கூட, ஏதோ பெரிய ஜோக்கை சொன்ன மாதிரி சிரிப்பதையும், சேர்ந்து சாப்பிடும் போது நடக்கின்ற சாதாரணமான தகவல் பரிமாற்றங்களையும், சாப்பாட்டுப் பரிமாற்றங்களையும், பார்த்த வெளியே போய் சாப்பிடும் கும்பல் இதுக்காகத்தான் நீ எங்க கூட வந்து சாப்பிட மாட்டேங்கிறியாஎன்று பொறாமையுடன் கேட்க, கடலை மன்னன்என்ற எனது பட்டம், எனது அலுவலகங்களிலும் தொடர்ந்தது.

நான் சாப்பாட்டுக்கு கொடுக்கின்ற முக்கியத்துவம், ஒருவேளை நான் ஒரு கிராமத்திலிருந்து வந்தது ஒரு காரணமாக இருக்கலாம், கிராமங்களில் மக்கள் சாப்பிடுவதே ஒரு அழகுதான், அதுவும் கறி விருந்தில் எவ்வாறு சாப்பிட வேண்டும் என்று என் மாமா எனக்கு பாடமே எடுத்திருக்கிறார். அதுவும் ரசம் சாதத்தையும், தயிர் சாத்தையும் எனது அப்பா உறிஞ்சியும், சப்பியும் சாப்பிடுவதை நினைக்கையில் என்னையறியாமல் என் உதடுகள் புன்னகைக்கின்றன.

இப்படி நான் வாழ்ந்து கொண்டிருக்கையில், சென்னையில், நுங்கம்பாக்கத்திலும், தேனாம்பேட்டையிலும், அலுவலகங்களைக் கொண்டிருக்கின்ற ஒரு பெரிய கம்பெனியிலிருந்து எனக்கு இன்னொரு வேலைக்கான உத்தரவு வந்த போது, அந்த அலுவலகங்களின் பத்தாம் மாடி முழுதும்கேஃப்டீரியாக்காக ஒதுக்கி வைத்திருந்த ஒரே காரணத்திற்காக அந்த வேலையை நான் ஒத்துக் கொண்டேன். முதல் நாள் அலுவலகம் சென்றவுடன் அந்த அதிர்ச்சி செய்தி எனக்கு காத்திருந்தது, ஆம், எங்கள் பிரிவையும், இன்னும் ஒரு சிலரை மட்டும் ஓஎம்ஆர்ரோட்டில் உள்ள ஒரு கட்டிடத்திற்கு மாற்றி விட்டதாக சொன்னவுடன், கமல் ரேஞ்சுக்கு ஃபீல் பண்ண ஆரம்பித்து விட்டேன்.

வடபழனியிலருந்து, பக்கத்துலியே போயிட்டு வந்துடலாம் என்ற எனது ஆசையை அது களைத்தது மட்டுமல்ல, ஒன்பது மணிக்கு அலுவலகத்தில் இருக்க வேண்டுமென்றால், ஏழரைக்கே பஸ்ஸை பிடிக்கவேண்டும், அப்படியென்றல், எனது அலுவலகத்துக்கு நான் சாப்பாடு எடுத்துச் செல்ல முடியாது என்ற உண்மை என் முகத்தில் அறைய, கடுப்புடனே அலுவலகத்திற்கு சென்றேன். எப்படி இருந்தாலும், எட்டாம் மாடியில், எங்களுக்கென்று தனி கேஃப்டீரியா இருக்கிறது என்ற செய்தி தந்த புன்னகை, இரண்டாம் நாள் காலை ஒரு இட்லி சாப்பிட்டவுடன் பயமாக மாறியது. என்னுடைய ஒரு வாழ்வாதாரமே கேள்விக்குள்ளாகும் போது எனக்கு பயம் வருவது இயற்கைதானே?. அது எப்படிதான் காலைல எட்டரை மணிக்கு அப்படி ஜில்லுன்னு இட்லி தர முடியுதோ என்ற என் கேள்விக்கு விடை இன்னும் என்னால் கண்டு பிடிக்க முடியவில்லை. இங்கு போடப்பட்ட ஒரு தக்காளி சட்னி மாதிரி வேறு எங்கேயும் நான் சாப்பிட்டதில்லை. டிஃபன் அயிட்டமே இப்படி என்றால், சாப்பாடைப் பத்தி நான் சொல்ல வேண்டியதில்லை.

சரி, நம்ம விதி அவ்ளோதான்னு நினைச்சு சாப்பிடலாம்னு பார்த்தா, இட்லியும், வடையும் ஸ்பூனில் மட்டுமே சாப்பிடும் கூட்டத்தில் உட்கார்ந்து சாப்பிடுவது சிரமமாக இருந்தது. இட்லி பரவாயில்லை, சாப்பாடையும், சாம்பார், ரசம், தயிர் எல்லாத்தையும் ஸ்பூனிலேயெ கலக்கி, ஸ்பூனிலேயே சாப்பிடும் போது, என்னோட அப்பாவும், அம்மாவும், சாப்பாட்டை ஒழுங்கா பெசஞ்சு சாப்பிடத் தெரியாதா என்று திட்டியது என்னையறியாமல் ஞாபகத்திற்கு வந்தது. பத்தாதற்கு, வூட்ல ராமராஜன் படமும், சன் மியுசிக்கும் பாத்துட்டு, ‘கேஃப்டீரியாவில் மட்டும், எம் டிவியும், சிஎன்என்னும் மட்டுமே பார்க்கும் கூட்டத்தை கண்டால் வெறுப்பாய் இருந்தது.

இப்படியே நாட்கள் கடக்க, புது வருடம் மற்றவர்களுக்கு எப்படியோ, எனக்க ஆரம்பம் சற்று நல்லபடியாகவே ஆரம்பித்தது. ஆம், சக அலுவலர் ஒருவர் ஐந்து நிமிட நடையில் ஒரு ஆந்திரா மெஸ் இருக்கிறது என்று சொல்ல, உடனடியாக அங்கு சென்றோம். நெய்யும், பொடியும், கறீசும், பருப்பும் என்னை என் திருவல்லிக்கேணி வாழ்க்கைக்கே கொண்டு சென்றது. அதுவும் பொடியும், பருப்புமாக, மூணு ரவுண்டை முடித்துவிட்டு கையை சற்றே சப்பும் போது வந்த என் தந்தையின் ஞாபகம், என்னுள் மவுனப் புன்னகையைத் தோற்றுவித்தது. அது மட்டுமல்ல ஓஎம்ஆர்சாலையில் பல இடங்களில் இது போன்ற ஆந்திரா மெஸ்கள் இருப்பதாக என் நண்பன் சொன்ன போது நான் மவுனமாக சொன்னேன் வாழ்க ஆந்திரா மெஸ்கள், வாழ்க அவர்கள் ஊற்றும் பப்பு.

பின்குறிப்பு:

இயல்பாக நடந்ததோ, வேண்டுமென்றே நடந்ததோ, கல்லூரிக் காலத்தில் ஆரம்பித்த பெண்களுடன் சேர்ந்து உணவு உண்ணும் வழக்கம், இங்கே அடியோடு நொறுங்கிப் போனது. என்னுடைய அலுவலகப் பிரிவில் ஆட்களும் குறைவு, அதில் பெண்களே இல்லை என்பது ஒரு புறமிருக்க, 400 பேர் அமரக் கூடிய அலுவலகத்தில் இருக்கின்ற வெறும் 50 பேரில் எண்ணி 10 பெண்கள் இருந்தால் அதிகம், அதுவும் வேறு பிரிவில். இன்னும் மக்கள் வருவார்கள், இது தற்காலிக திட்டம்தான், கூடிய சீக்கிரம் நம்மை தேனாம்பேட்டைக்கு மாற்றி விடுவார்கள் என்று வெவ்வேறு செய்திகள் வந்தாலும், இன்னும் ஒரு வருடத்திற்கு இந்த நிலை தொடரும் என்றே தோன்றுகிறது.

ஆகையால், ஆண்களுடன் சேர்ந்து சாப்பிட்டால் எனக்கு ஒவ்வாமை வந்து விடும் காரணத்தினால், எனது அலுவலகத்திலோ அல்லது இதே கட்டிடத்திலுள்ள உள்ள மற்ற கம்பெனி பெண்களுடன் (மற்ற கம்பெனி பெண்கள் என்றால், அவங்க கேஃப்டீரியாவுக்கு போய் சாப்ட்டுக்கலாம்) சேர்ந்து உண்ணக் கூடிய தருணங்களை எதிர் நோக்கியபடி காத்துக் கொண்டிருக்கின்றேன்…….

பிரிவுகள்:நினைவுகள், மொக்கை குறிச்சொற்கள்:,

நான் ஏன் வலைப்பதிவு ஆரம்பித்தேன்…..

அவனவன் திடீர் திடீர்னு கட்சி ஆரம்பிக்கறாங்க, படம் எடுக்கறாங்க (நாயகனை சொல்லலீங்க), ஓடாத படத்துக்கு 150 நாள் ஓடினதா விழா எடுக்கறாங்க (பக்கமா குருவி (பா)டம் 150 நாள் ஓடினதால, விழா எடுத்ததா டெக்கான் குரோனிக்கிள்ல காலைல பார்த்தேன், ஆபிஸ் கிளம்பற நேரத்துல என்னமா வயிறு குலுங்க சிரிக்க வைக்கறாங்க?. இது பரவாயில்லை உளியின் ஓசை படம் அருமையா ஓடினதுக்காக விழா எடுத்ததா கூட கேள்விப்பட்டேன். கலைஞரோட பராசக்தி வசனம் அருமைன்னு சொன்னதுக்கான தண்டனையை இன்னும் எத்தனை காலத்துக்கு அனுபவிக்கணுமோ தெரியலை?). இப்படி எல்லாரும் அழிச்சாட்டியம் பண்ணிட்டிருக்காங்க, நீ மட்டும் ஏண்டா சும்மா இருக்கன்னு என் மனசாட்சி என்னை கேட்க, வீறு கொண்டு எழுந்ததன் விளைவுதான் என்னோட வலைப் பதிவு.
பேசாம அண்ணன் ஜேகே ரித்தீஷோட ஒரு ஒப்பந்தம் போட்டு, அவர் புகழ் பரப்பற மாதிரி வலைப்பதிவை வெச்சுடலாமான்னு பார்த்தா, ஏற்கனவே அவர் புகழ் நரகம் வரைக்கும் பரவியிருக்கு, இதுக்கு மேல புதுசா பரப்ப ஒன்னுமில்லங்கறதுனால, சொந்தமா ஏதாவது எழுதலாம்னு (இது ஒரு சிறந்த காமெடி!!) இந்த வலைப்பதிவை
ஆரம்பிச்சிருக்கேன். நான் வலைப்பதிவு ஆரம்பிக்கறேங்கறதே காமெடிங்கறதுனால, என்னோட வலைப்பதிவும் ஓரளவு காமெடியாதான் இருக்கும்.
பிரிவுகள்:மொக்கை குறிச்சொற்கள்: