தொகுப்பு

Archive for மே, 2015

வாய்க்கப் பெற்றவர்கள்!

corruption

முன்பெல்லாம் ஊரிலும் சரி, பொதுத் தளங்களிலும் சரி, கட்சிக்காரர்கள் குறைவாக இருப்பார்கள்! பொதுமக்கள் அதிகமாக இருப்பார்கள்! அவர்களுக்கும் சில சார்பு நிலை இருந்தாலும், அவை முழுக்க தேர்தல் சமயத்தில் மட்டுமே வெளிப்படும்!

இப்பொழுதோ நிலைமை தலைகீழ்! அரசியல்வாதிகளை விட இவர்கள் எந்நேரமும் அரசியல் பேசுகிறார்கள்.

ஆதாயத்திற்க்காகவோ, ஆதர்சத்திற்காகவோ, ஒரு பெருங் கூட்டமே இன்று, சார்பு நிலையை நோக்கி நகர்ந்து விட்டது! நீதி, நியாயம் எல்லாம் சார்பு நிலைக்கு அப்புறம்தான்!

எஞ்சியிருக்கிற சொச்சமும், தப்பு, தப்பே இல்லை என்கிற மனநிலைக்குதான் கொஞ்சம் கொஞ்சமாக ஆட்பட்டு வருகிறது!

‘அயன் ராண்ட்’ படி, சுய நலம் அப்படி ஒன்றும் தவறான செயல் இல்லைதான்! ஆனால், இங்கு ஒரு பெருங்கூட்டமே, மற்றவர்க்கு என்ன ஆனாலும் பரவாயில்லை, தம் நலன் முக்கியம் என்ற மனநிலைக்கு மாறிக் கொண்டே வருகின்றது!

வெட்டியாக சம்பளம் வாங்கிக் கொண்டு, அதற்கு ஈடான உழைப்பில் பாதி கூட கொடுக்கவில்லை என்ற குற்ற உணர்வு சற்றும் இல்லை பல அரசு துறைகளில்! கேவலம் தெருவில் சற்றேனும் யார் மேலாவது மோதிவிட்டால், சாரி சொல்லவோ அல்லது அப்படி சொன்ன சாரியை ஏற்கும் பக்குவமோ கூட இல்லை!

ஊரில், வாங்கிய கடனைத் திருப்பித் தராமல் இருக்க, கைப்பற்றிய புறம்போக்கு நிலத்தை பிடுங்காமல் இருக்க, மாட்டிக் கொண்ட வழக்கு, பிரச்சினையில் இருந்து தப்பிக்க, போன்ற காரணங்களுக்காகவே, ஒரு கூட்டம் கட்சியை நோக்கி நகர்ந்திருக்கிறது!

வாரம் குறைந்தது இரண்டு, மூன்று முறை தண்ணி அடிப்பவர்கள் கூட விஜயகாந்த் குடிகாரர் என்று நக்கல் அடிக்கிறார்கள்! நடிகை என்பதனாலேயே, குஷ்புவைப் பற்றி வக்கிரமான கமெண்ட்டுகளை பகிர்கிறார்கள்! ஜாலிக்குதான் என்று சொல்லி தொடர்ந்து யாருடனாவது, யாரையாவது இணைத்து எழுதப்படும் கமெண்டுகளுக்கு லைக்கிடுகிறார்கள்!

தன் ஆதர்சத்திற்க்காக, எவ்வளவு வன்மம் கக்க முடியுமோ, அவ்வளவு வன்மமும் கக்கி விட்டு, இனி நாடு எப்படி முன்னேறும் என்று கவலைப் படுகிறார்கள்!

பத்திரிக்கை அலுவலகத்தை எரித்தவர்களும், பேருந்தை எரித்தவர்களும் மோதிக் கொள்கிறார்கள்!

குடி தவறு என்று சொல்லுபவர்கள், குடியிருக்கும் காலணியையே எரிக்கிறார்கள்!

நீதியரசரை மதிக்க வேண்டும் என்று கூப்பாடு போடும் வக்கீல்கள், காவல்துறையை உதாசீனப்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள்!

உண்மையான வாழ்க்கை நெறிமுறை, எங்கள் மதம் என்று சொல்லும் அடிப்படைவாதிகள்தான், இயற்கைச் சீற்றத்திற்கு காரணமே மதக் கோட்பாட்டை மீறியதுதான் என்கிறார்கள்!

சிலை கடத்தியவர்களும், கள்ளச் சாராயம் காய்ச்சியவர்களும், நிலத்தை அபகரித்தவர்களும் கல்வித் தந்தையாய் ஆராதிக்கப்படுகிறார்கள்!

அரசியல்வாதிகளே மோசம் என்று சொல்லிக் கோண்டே, இந்த முறை ஓட்டுக்கு எவ்வளவு என்று பேரம் பேசுகிறார்கள்!

இந்தக் கூட்டத்திற்கு மீண்டும் காமராசரோ, பெரியாரோ, அம்பேத்காரோ கிடைத்து விட முடியுமா என்ன??? சல்மான்கான்களும், சஞ்சய்தத்துகளையும் வெற்றி நாயகர்களாய் வலம் வருவதற்கு ஏற்ற, தகுதி வாய்ந்த கூட்டம் இது!

வாய்க்கப் பெற்றவர்கள் கொஞ்சமேனும், இந்த அதிகாரத்தையும், செல்வத்தையும் பெருக்கிக் கொள்ள உழையுங்கள். வாய்க்கப் பெறாதவர்கள், வாய்க்கப் பெற்றவர்களாய் மாறுவதற்கு உழையுங்கள்!

நாடு நாசமாகப் போனால் நமக்கென்ன! கொஞ்சமேனும் நம் குடும்பம் நன்றாக இருப்பதற்கு பாடுபடுவோம்!

பிரிவுகள்:Uncategorized