தொகுப்பு

Archive for திசெம்பர், 2008

“அபியும் நானும்” – திரைப் பார்வை

திசெம்பர் 29, 2008 5 பின்னூட்டங்கள்

“வாழ்க்கையில பல விஷயங்களை நாம நம்ம குழந்தைகளுக்கு சொல்லித் தர்றோம், ஆனா வாழ்க்கையையே நம்ம குழந்தைங்க நமக்கு சொல்லி தந்துராங்க இல்ல”

இது போன்ற வசனங்கள் ஏற்படுத்தும் மெல்லிய அதிர்வலைகளை, உணர்வுகளை உங்களால் புரிந்து கொள்ள முடியுமா? அப்படியானால் “அபியும் நானும்” படம் உங்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும். மொக்கை படங்கள்லாம் பத்து நிமிஷத்துக்கு ஒரு முறை விளம்பரமா வந்து வெற்றிகரமாக ஓட்டப் பட்டுக் கொண்டிருக்கையில், “அபியும் நானும்” படத்திற்கு அதிகம் விளம்பரமும், ஆர்ப்பாட்டமுமில்லாமல் கடந்த வாரம் திரைக்கு வந்தது. வெகு சீக்கிரமாக பார்த்ததாலும், எந்த வித எதிர்பார்ப்புமில்லாமல் சென்றதால் படத்தை ரசித்துப் பார்க்க முடிந்தது.

இதுவரை தந்தை மகன், தாய் மகன் போன்றோருக்கிடையான உணர்வுகளையே காட்டி வந்த தமிழ் சினிமாவில், முதன் முறையாக தந்தை மகளுக்கிடையேயான உணர்வுகளை காட்டியிருகிறார்கள், தந்தை மகனுக்கிடையேயான உணர்வுகளை மிக சமீபத்தில் வெளி வந்த “வாரணம் ஆயிரம்”, “ஆட்டோகிராப்” போன்ற படங்கள் பிரதி பலித்துக் கொண்டிருக்கையில், “அபியும் நானும்” சற்றே வேறுபட்டு நிற்கிறது.

“ஆட்டோகிராப்” போன்ற படங்கள் மகனின் மனதிலுள்ள குற்ற உணர்ச்சியை மையமாக வைத்து, சற்றே கதைப் போக்குடன் வெளிவந்த படங்கள் எனில், “அபியும் நானும்” மிகச் சாதாரணமாக பல்வேறு நிகழ்வுகளை நம்மோடு பகிர்ந்து கொள்வது போல் அமைந்துள்ளது.

பாசமிகு தந்தையாக பிரகாஷ் ராஜ், அம்மாவாக ஐஸ்வர்யா என இருவருமே நடிப்பில் அசத்தியுள்ளனர். முதல் பாதியில் த்ரிஷாவிற்கு பள்ளியில் சேர்க்க தொடர்ந்து நடைபெறும் நகைச்சுவைக் காட்சிகளாகட்டும், பின் பாதியில், மனைவியின் உணர்வுகளை புரிந்து அவளது பெற்றோரை அழைக்கும் காட்சியிலும் சரி எல்லாவற்றிலும், இருவரும் ஜமாய்த்துள்ளனர்.

மகளாக த்ரிஷா, தனக்கு என்ன வருமோ அதை உணர்ந்து நடித்துள்ளார். துணைக் கதாபாத்திரங்களாக பிரித்விராஜ், தலைவாசல் விஜய், மனோபாலா, கணேஷ் என பலர் இருந்தாலும், ரவி சாஸ்திரி என்ற பெயரில் வரும் குமரவேலின் நடிப்பு, அவருடைய பாத்திரம் இரண்டுமே மிக அருமை. அதிலும் முக்கியமாக ஒரு குறிப்பிட்ட காட்சியில் அவர் நடிப்பு, என்னையறியாமல் என் கண்களைக் கலங்க வைத்தது.

பிரித்விராஜிடம், தனது மகளைப் பற்றியும், அவர்களது குடும்பத்தில் நிகழ்ந்த சில சம்பவங்களையும் பிரகாஷ் ராஜ் பகிர்ந்து கொள்வதுதான் படமே என்றாலும், எனக்கென்னமோ அவர் நமிமிடம் கதை சொன்னது போன்ற உணர்வுதான் இருந்தது.

படத்தில் வரும் சம்பவங்கள் பெரும்பாலும் மிக சாதாரணமானதுதான் என்றாலும், அது சொல்லப் பட்டிருக்கும் விதமும், உளவியல் ரீதியாய் நிகழும் நிகழ்வுகளை காட்டியிருப்பதும் மிக அருமை

படத்திலுள்ள அனைத்து பாத்திரங்களிலும் உள்ள நல்லதன்மை, படம் முழுக்க வரும் பாசிட்டிவ் அப்ரோச், சர்தாஜி பற்றி வரும் வசனம் என பல விஷயங்களில் மனிதர்களை நேசிக்க வேண்டியதன் அவசியத்தை ராதா மோகன் உணர்த்துகிறார். அதிலும் குறிப்பாக, மனநலம் குன்றிய பெண்ணுக்கு த்ரிஷா செய்யும் உதவி, அதை வேடிக்கை பார்ப்ப்தோடல்லாமல், வேடிக்கை செய்கின்ற சமுதாயம், அதைத் தொடர்ந்த காட்சியில் பிரகாஷ்ராஜின் நடிப்பின் போது என்னையறியாமல் என் கைகள் தட்டப்படுகின்றன.

விஜி இல்லாமல் வசனமா என்ற எண்ணத்தை,

”என் பொண்ணுக்கு தோணுன இந்த சின்ன விஷயம் எனக்கு ஏண்டா தோணலை? – ஏன்னா நாமதான் பெரியவங்களாயிட்டம்ல”

”ஒவ்வொரு குழந்தை பிறக்கும் போதும், ஒவ்வொரு அப்பாவும் பிறக்கிறான், என்ன, குழந்தைங்க சீக்கிரம் வளர்ந்துர்றாங்க, ஆனா சில அப்பாக்கள்தான் வளர மாட்டேங்குறாங்க, இல்ல கொஞ்சம் லேட்டாகுது”

”சார், நான் இப்ப வீட்டுக்கு போகனும், வீடு பக்கம்தான், ஆனா நான் போக வேண்டிய தூரம் ரொம்ப அதிகம்”

போன்ற வசனங்களும், முதல் பாதி முழுக்க வரும் நகைச்சுவை வசனங்களும், வசனங்களில் வரும் சமுக அக்கறையும் நிவர்த்தி செய்கின்றன.

சரி என்ன ரொம்ப பில்டப் கொடுக்கறேனே, படம் அவ்ளோ சூப்பரா, இதிலே குறையே இல்லியான்னு கேக்குறீங்களா?

பொதுவா த்ரிஷா, பாவனா, நயந்தாரா, நமீதா நடிக்கும் படங்களில் குறையே இருக்காது என்பது ஒரு புறமிருந்தாலும், படம் முழுக்க தெரியும் சற்றே மெலோ டிராமா பாணியும், இரண்டாம் பாதியில் சற்றே தொய்வடைந்தாற் போல் இருந்ததும், சில இடங்களில் தென்படும் அதீதமும், குறிப்பிடத்தக்க அளவில் பாடல்கள் வெற்றிகரமாக இல்லை என்பதும் படத்தின் குறை என்றே தோன்றுகிறது.

ஆனால் இவையெல்லாம் மீறி படம் முடிந்ததும், எழுந்து நின்று ஒரு முறை கை தட்ட வேண்டும் என்ற எண்ணம் வருகிறது பாருங்கள் அதுதான் படத்தின் மிகப் பெரிய வெற்றி என்று தோன்றுகிறது.

நீங்கள் ஒரு பெற்றோராக இருந்தால், இந்த படம் உங்களை சற்று அதிகமாகமாக பாதிக்கும் என்றே தோன்றுகிறது.

படத்தில் பிரகாஷ் ராஜ் அடிக்கடி சொல்லும் ஒரு வசனம் ”Life is beautiful”, படம் முடிந்து வெளிவரும் போது என் மனதும் அதையே பிரதிபலித்தது

பின்குறிப்பு:
இந்த வாரம் சன் டிவி டாப் டென்னில் முதல் இடம் திண்டுக்கல் சாரதி, இரண்டாம் இடம் தெனாவட்டு என்று கொடுத்திருக்கிறார்கள். நீ இவ்ளோ பில்டப் கொடுத்த “அபியும் நானும்” ஏன் வர்லைன்னு தயவு செஞ்சு கேக்காதீங்க.

மொழி அளவு “அபியும் நானும்” ஒரு சிலருக்கு தாக்கத்தை ஏற்படுத்தாமல் போகலாம். ஆனால் “தெனாவட்டுகளுக்கு” மத்தியில் இது போல் ஒரு படத்தை கொடுத்ததற்காக கண்டிப்பாக ராதா மோகன் மற்றும் குழுவை பாராட்டியே தீர வேண்டும்.

பிரிவுகள்:சினிமா குறிச்சொற்கள்:

தகவல் தொழில்நுட்பத்துறையினர் மற்றும் மாணவர்கள் நடத்திய போராட்டக் குறிப்புகள்

திசெம்பர் 16, 2008 2 பின்னூட்டங்கள்

ஒன்றுக்கொன்று சற்றும் பரிச்சயமில்லாத முகங்கள்தான்; ஆனால் எல்லாருக்கும் ஒரே முகம்!

14.12.08 (சனிக்கிழமை) கூடியிருந்த அந்தக் குழுவினர் அனைவருமே ஒரே உணர்வால் இணைக்கப் பட்டிருந்தனர். ஏறக்குறைய 200 பேர் இருந்த அந்தக் குழு ஒரு உன்னத இலக்கை நோக்கிய நீண்ட பயணத்தின் முதல் படியை அன்றுதான் தாண்டியது

மனித சங்கிலியில் ஆரம்பித்த அந்தப் போராட்டம் அடுத்த கட்டத்தை அன்றுதான் அடைந்திருந்தது. தகவல் தொழில் நுட்பத்துறையினர் மற்றும் மாணவர்கள் இணைந்து நடத்திய உண்ணாநிலைப் போராட்டம் பழ. நெடுமாறன் அவர்களால் துவக்கி வைக்கப் பட்டது

சுமார் 9.30 மணிக்கு போராட்டம் துவங்கிய போது 100க்கும் குறைவான தோழர்களே இருந்தாலும், நேரம் செல்ல செல்ல எண்ணிக்கை 200ஐ தாண்டியிருக்கும் என்றே தோன்றுகிறது.

அழைப்பிதழில் தகவல் தொழில் நுட்பத்துறையினர் நடத்தும் போரட்டம் என்று போட்டிருந்தாலும், பேனரில் தகவல் தொழில் நுட்பத்துறையினர் மற்றும் மாணவர்கள் இணைந்து நடத்தும் போரட்டம் என்று உருமாறியதிலேயே போராட்டம் மெல்ல மெல்ல அதன் தளத்தை விரிவுபடுத்தி வருவதும், பல்துறையிலிருந்தும் அதன் ஆதரவு பெருகுவதும் புரிந்தது. இதற்கு சாட்சியாக வெவ்வேறு துறைகளில் இருந்து கலந்து கொண்ட நண்பர்களும், வலைப்பதிவிற்கோ, குழுமத்திற்கோ எந்தவித சம்மந்தமும் இல்லாமல் வெறுமனே ஃபார்வார்டு செய்த மடலைப் பார்த்தும், அழைப்பிதழைப் பார்த்தும் உணர்வால் உந்தப்பட்டும் வந்தவர்களே சாட்சி

பழ.நெடுமாறன், சுப.வீரபாண்டியன், சீமான், விடுதலை ராசேந்திரன், தோழர் தியாகு, தோழர் மகேந்திரன், இலங்கை நாடளுமன்றப் எம்பி சிவாஜிலிங்கம், ஊடகவியலார் டிஸ்ஸ் மணி, பேரா.கல்யாணி, வழக்குரைஞர் அருள்மொழி, கவிஞர் அறிவுமதி, திரு. ஜெகத் கஸ்பார், கவிஞர் தாமரை, எழுத்தாளர் ராசேந்திரச் சோழன் மற்றும் பலர் கலந்து உரையாற்றினார்கள்!

இடையே கவிஞர், வலைப்பதிவாளர் தமிழ் நதி ஈழப் போராட்டம் பற்றிய தமது கவிதையை படைத்தார்.

வெறுமனே உண்ணாவிரதம் இருப்பதே கடினம் என்ற நிலையில், தொடர்ச்சியாக உரையை ஊன்றி கவனித்து, போராட்டத்தின் தேவைக்கேற்ப செயல் புரிவது என்பது சற்றே கடினம்தான். ஆனால் தோழர்கள் மிக அழகாக கஷ்டங்களை தாங்கிக் கொண்டனர்

ஈழப்பிரச்சனையின் முழு வரலாறும், அதிலுள்ள நுண்ணரசியலும், வெவ்வேறு காலகட்டங்களில் இந்தியாவின் நிலைப்பாடுகளும், தற்போதைய நிலைப்பாட்டின் பிண்ணனியும், ஈழப் போராளிகளைப் பற்றியும் மற்றும் மக்களின் மனதில் இருக்கும் பல்வேறு கேள்விகளுக்கும் விளக்கமாக பழ.நெடுமாறன், சுப.வீரபாண்டியன், விடுதலை ராசேந்திரன், தோழர் மகேந்திரன், இலங்கை நாடளுமன்றப் எம்பி சிவாஜிலிங்கம், ஊடகவியலார் டிஎஸ்எஸ் மணி, பேரா.கல்யாணி போன்றோரின் உரை அமைந்ததென்றால், ஈழப் போராட்டத்தில் நம் போன்றோரின் பங்கு எவ்வாறாக இருக்க வேண்டும் என்ற விளக்கம் திரு. ஜெகத் கஸ்பாரின் உரை அமைந்திருந்தது.

சுமார் 3.30 மணி அளவில் போரட்டத்தைப் பற்றி கேள்விப் பட்டு திரு வைகோ அவர்களும், திருமாவளவன் அவர்களும் கலந்து கொண்டு உரையாற்றியதோடு, படித்த, வேலைக்கு செல்லும் இளைஞர்கள் உணர்வோடு நடத்தும் போராட்டத்தில் கலந்து கொண்டு போராட்டக் குழுவை பாரட்டுவது தமது க்டமை என்பதாலேயே, இதே போன்ற இன்னொரு போராட்டத்திற்கு செல்லுமுன் வந்ததாக கூறினார்கள்

போராட்டத்தில் ஆணித்தரமாக வைக்கப் பட்ட நமது நான்கு கோரிக்கைகள்

1. எங்களது வரிப்பணத்தில் வாங்கப்படும் ஆயுதங்களை இலங்கை அரசுக்கு தராதே!
2. இந்திய அரசே! தமிழீழ மக்கள் விடுதலைப் போராட்டத்தை ஆதரி (அங்கீகரி)!
3. ஈழ அரசு உடனான அரசியல், பொருளாதார, விளையாட்டு உறவினை துண்டித்துக் கொள்1
4. இந்திய மீனவர்களை இலங்கை ராணுவம் சுட்டால் திருப்பி தாக்கு!

இந்த போராட்டம் உணர்ச்சிப் பூர்வமாக இல்லாமல், உணர்வுப் பூர்வமாக இருக்க, நம்முடைய தீவிரத்தை காட்ட, தொடர்ந்து 15.12.08 (ஞாயிற்றுக் கிழமையும்) உண்ணாவிரதத்தை சுமார் 30 பேர் தொடர்வதாக தோழர்கள் அறிவித்தனர்

தொடர்ந்து ஞாயிறு நடந்த போராட்டத்தில் ஓவியர் புகழேந்தி அவர்களின் ஓவியம் வெளியிடப்பட்டது. தோழர் தியாகு, காசி அனந்தன் ஆகியோர் உரையாற்றினர்

இறுதியில் திரு காசி அனந்தன் அவர்களால் இந்த உண்ணாவிரதம் முடித்து வைக்கப்பட்டது. இறுதியில் தோழர் தியாகு முன்னிலையில் இந்தப் போராட்டத்தை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் செல்வது பற்றி ஆலோசிக்கப் பட்டது

பி.கு.
1. மிகப் பெரிய சபாஷ்: சிறிய மனித சங்கிலியில் ஆரம்பித்து, இன்று 200 பேர் பங்கேற்ற உண்ணாநிலைப் போராட்டமாக வளர்ச்சி பெறச் செய்ததோடு இல்லாமல், அதற்கு இந்தப் போராட்டத்தில் நீண்ட காலமாக பங்கு பெற்று வரும் அறிஞர்களை அழைத்து வந்து உரையாற்றச் செய்த, எல்லாரும் பேசிக் கொண்டிருந்த சமயத்தில் களத்தில் இறங்கி ஒருங்கிணைத்த அந்த ஒருங்கிணைப்பாளர்கள் குழுவுக்கு எங்கள் சபாஷ்!!!!

2. மிகப் பெரிய நெருடல்: ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக பல்வேறு குரல்கள் வலைப்பதிவில் எழுப்பப் பட்டு வரும் நிலையில், இந்த போராட்டத்திற்கு வருகை தந்த வலைப்பதிவர்கள் மற்றும் குழும நண்பர்களின் எண்ணிக்கை மிக மிகக் குறைவு

3.. போராட்டம் சார்பாக கோயம்பேடைச் சுற்றி நோட்டீஸ் கொடுக்கச் சென்ற போதும், இந்திய அரசை இலங்கை அரசுக்கு ஆயுதம் கொடுக்க கூடாது என்று பலரை பேனரில் கையெழுத்து வாங்கும் போது சில டீக் கடைகளிலும், சலூன் கடைகளிலும் கொடுத்த போது வாங்கிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும், அவர்கள் கண்ணில் தோன்றிய மெல்லிய தயக்கம் ஈழப்போராட்டத்தைப் பற்றி பேசுவதை, ஆதரிப்பதைக் கூட குற்றம் (அ) தவறு என்ற எண்ணத்தை ஏற்படுத்தியிருக்கிறார்களோ என்ற எண்ணம் தோன்றியது.

அதே போல் இந்திய அரசை இலங்கை அரசுக்கு ஆயுதம் கொடுக்க கூடாது என்று பலரை பேனரில் கையெழுத்து வாங்கும் போதும் நோட்டீஸ் கொடுக்கும் போதும்,  படித்தவர்கள் (அல்லது படித்தவர்கள் போன்று காட்சி அழைத்தவர்கள்) நோட்டீஸ் வாங்கவும், கையெழுத்து போடவும் தயங்கும் போது, படிப்பறிவு குறைவாக இருந்த பலர் முன்வந்து கையெழுத்து போட்டதும், ஆட்டோ மற்றும் மினி லாரி டிரைவர்கள், எல்லாரும் போராடுறீங்க, ஆனால் தீர்வுதான் இன்னும் கிடைக்கலை என்று அங்கலாய்த்த படியே நோட்டீஸ் வாங்கியது இன்றைய கல்வி முறை மனிதனுக்குள் தயக்கங்களை குடியேற்றியிருக்கிறதோ என்ற எண்ணத்தை வலுப்பெறச் செய்ததுடன், இந்த தயக்கங்களை களையவும், எம்.ஜி.ஆர் காலத்தில் மக்களிடையே வெளிப்படையாக இருந்த ஆதரவு குறைந்து பல்வேறு தயக்கங்களாகவும், கேள்விகளாகவும் மாறியிருப்பது, நம்முள்ளேயே நாம் ஆற்ற வேண்டிய நீண்ட கடமையை நினைவுறுத்தியது

பி.பி.கு.

போராட்டத்தில் ஈழ வரலாறு பற்றிய அறிஞர்களின் சுருக்கமான உரையும், அடுத்து நாம் என்ன செய்ய வேண்டும் என்ற அறிஞர்களின் கருத்தும் மிக விரைவில்……….

பிரிவுகள்:ஈழம் குறிச்சொற்கள்:

ஈழப் பிரச்சனைக்காக தகவல் தொழில்நுட்பத்துறையினர் மற்றும் மாணவர்கள் நடத்திய (தொடர்கின்ற) உண்ணாநிலைப் போராட்டம்

திசெம்பர் 14, 2008 6 பின்னூட்டங்கள்

நேற்று, சனிக்கிழமை (13.12.08) காலை 09:30 முதல் மாலை 06:00 வரையில் சென்னையில் கோயம்பேடு அருகில் நடைபெற்ற உண்ணாநிலைப் போராட்டம் எதிபார்த்ததற்கும் மேற்பட்ட கவனத்தை ஈர்த்தது என்பதற்கு எதிர்பாராத இன்ப அதிர்ச்சியாக வைகோ மற்றும் திருமாவளவன் வருகையே சான்றாக அமைந்தது

சிறிய மனிதசங்கிலிப் போராட்டம், உண்ணாநிலைப் போராட்டமாக உருப்பெற்றதும், ஈழப் பிரச்சனை தொடர்பான போராட்டம் பல்வேறு தளங்களிலிருந்தும், பல்வேறு துறையினரும் போராட வேண்டியதன் அவசியத்தையும், இந்தப் போராட்டத்தில் தகவல் தொழில்நுட்பத்துறையினரும், மற்ற துறையினரும் மற்றும் மாணவர்களும் இயங்க வேண்டிய தளமும் அவர்கள் ஆற்ற வேண்டிய பணியும்   ஆலோசிக்கப் பட்டது

போரட்டத்தில் பழ.நெடுமாறன், சுப.வீரபாண்டியன், சீமான், விடுதலை ராசேந்திரன், தோழர் தியாகு, தொழர் மகேந்திரன், இலங்கை நாடளுமன்றப் எம்பி சிவாஜிலிங்கம், ஊடகவியலார் டிஸ்ஸ் மணி, பேரா.கல்யாணி, வழக்குரைஞர் அருள்மொழி, கவிஞர் அறிவுமதி, ஜெகத் கஸ்பார் மற்றும் பலர் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்

ஈழப் பிரச்சனையில் இந்திய அரசின் போக்கை கண்டித்தும், இந்திய அரசுக்கும் நம்முடைய கோரிக்கைகளாக நம்முடைய (இந்திய மக்களின்) வரிப்பணத்தில் இருந்து இலங்கை அரசுக்கு ஆயுதம் தராதே, இலங்கையுடனான பொருளாதார, அரசியல், விளையாட்டு உறவுகளை துண்டித்துக்கொள், தமிழீழ மக்களின் விடுதலைப்போராட்டத்தை அங்கீகரி போன்றவை எழுப்பப்பட்டன.

வெறும் உணர்ச்சிப் போராட்டமாக இல்லாமல், உணர்வுப் போராட்டமாக இருக்கவும், இந்தப் போராட்டத்தில் நம்முடைய அர்ப்பணிப்பு மற்றும் தீவிரத்தை உணர்த்தவும் 30 பேர் மட்டும் இன்றும் உண்ணாவிரத்தை தொடர்ந்து கடைப் பிடிக்கப் போவதாக அறிவித்துள்ளனர்.

இன்று ஓவியக் கண்காட்சி தொடக்கமும், காசி அனந்தன் போன்றோர் கலந்து உண்ணாநிலையை முடித்து வைக்கப் போவதாக அறிவித்துள்ளனர்

தோழர்கள் இன்றும் போராட்டத்தில் கலந்து கொண்டு நம்முடைய நிலைப்பாடையும், போராட்ட உணர்வையும் பதிவு செய்யலாம்

போராட்டத்தில் விவாதிக்கப் பட்டது, நிகழ்ச்சிகள் பற்றிய நீண்ட பதிவு விரைவில்………

பிரிவுகள்:ஈழம் குறிச்சொற்கள்: