தொகுப்பு

Posts Tagged ‘பாமரன்’

பாமரனின் ‘படித்ததும் கிழித்ததும்’

கவுண்டமணியோட நக்கலை கேள்விப்பட்டிருப்பீர்கள், பாமரனோட நக்கலை தெரியுமா?

அவருடைய ‘படித்ததும் கிழித்ததும்’ புத்தகத்தை படித்தால் உங்களுக்குப் புரியும்.

பாமரனின் சில சில கட்டுரைகளை அவ்வப்போது படித்ததுண்டு. ஆனால் முழு புத்தகமாக படித்தது, புத்தக கண்காட்சி சென்று வாங்கிய வெவ்வேறு புத்தகங்களில் ஒன்றான இந்த பாமரனின் ‘படித்ததும் கிழித்ததும்’ புத்தகம்தான்.

வெறுமனே ஒரு பக்க, இரு பக்க கட்டுரைகள்தான் ஒவ்வொன்றும், ஆனால் ஒவ்வொரு நிகழ்விற்கோ, செய்திக்கோ பாமரன் அடித்திருக்கும் கமெண்ட் செம நக்கல்.

‘மக்களுக்காகப் போராடி மடியும் நெல்லை மணி பாத்திரத்தில் நடித்த பசுபதிக்கு தமிழக அரசின் சிறந்த வில்லன் விருது…
அதுவும் சரிதான்
கலைஞராகட்டும், புரட்சித்தலைவியாகட்டும்…
இவர்கள் எல்லாருக்குமே மக்களுக்காகப் போராடும் போராளிகள் யாராயிருந்தாலும் வில்லன்கள்தானே?’

‘நுழைவுத் தேர்வு ரத்தானதால், மதிப்பெண்களுக்கு அடுத்த படியாக, பிறந்த நாளின் அடிப்படையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் – என்னங்கடா உங்க கணக்கு, பொறந்த நாளுக்கும், வயசுக்கும் என்னய்யா சம்பந்தம்…

கிணத்து தண்ணியை ஆத்து வெள்ளமா அடிச்சுட்டு போயிரப்போகுதுன்னு ரெண்டாம் ஆட்டம் சினிமா பாத்துட்டு வந்து கமுந்தடிச்சு  தூங்குனவனுக்கு இதுதான் முடிவா? இல்ல, முதல் குழந்தை இப்போதைக்கு வேணாம், ரெண்டாம் குழந்தை எப்பவுமே வேணாம்னு அரசாங்கத்தோட கொள்கையை ஒழுங்கா கடைபிடிச்சவனுக்கு அரசாங்கம் கொடுக்கிற மரியாதை இதுதானா?

நிலைமை இப்படியே போனா, அப்புறம் நாளைக்கு யாரும் பிள்ளை  பெத்துக்கறதுக்கு கல்யாணம் வரைக்கும் வெய்ட் பண்ணிட்டு இருக்க மாட்டாங்க, எச்சரிக்கை’

‘எப்படியோ ஒருவழியா 1948ல் எழுதப்பட்ட காந்தி கடிதம் ஏலம் விடுவது தடுக்கப்பட்டு விட்டது. அதற்கு மன்மோகன் சிங், மத்திய கலாச்சார அமைச்சகம், பிரணாப் முகர்ஜி என எல்லோரும் எடுத்துக்கொண்ட முயற்சிகள் சொல்லி மாளாதது.

அந்நியப் பொருள் புறக்கணிப்பு தொடங்கி அந்நிய முதலீடுகள் வரைக்கும் காந்தியையே ஏலம் விட்டாச்சு, இதுல கடுதாசி ஒன்னுதான் பாக்கி’

‘கோர்ட் அவமதிப்பு வழக்கில் ஜெயிலுக்கே போனாலும் சரி, இதை சும்மா விடப் போவதில்லை.

பின்னே அமிதாப் விவசாயி இல்லியாம்! அவருக்கு நிலத்தை ஒதுக்கியது தவறாம்!

அவரு விவசாயி, அவங்க அப்பா விவசாயி, புனேவுல இருக்கற அவங்க அப்பா நெலத்துல அமிதாப் ஏரோட்டியிருக்கார்

சாணி வழிச்சு வறட்டி தட்டியிருக்கார், உரக்கடை கியூவுல கால் கடுக்க நின்னு பாக்டம்பாஸ் வாங்கி தோள்ல வெச்சு தோட்டத்துக்கு கொண்டு போயிருக்கார்

விதர்பாவுல விவசாயிகள் கூட்டம் கூட்டமா தற்கொலை செஞ்சப்ப இந்தப் பயிருக்குப் பயன்படாத பூச்சி மருந்து எனக்காவது பயன்படட்டும்னு அப்படியே வாயில ஊத்தப் போயிருக்கார்

நல்லவேளையா, அந்த நேரம் சுள்ளி பொறுக்கப் போன ஜெயா பச்சன் வந்து காப்பாத்துனதால இந்திய விவசாயமே காப்பாத்தப்பட்டது’

‘நல்லவேளை இளவரசி டயானாவின் வழக்கு முடிவுக்கு வந்தது, அதில் நம் இந்தியப் பத்திரிக்கைகள் ஆற்றிய பங்கிருக்கே!!

பிரிட்டிஷ் பிரஜைகளையே தூக்கி சாப்பிடும் வகையில் ராஜ விசுவாசத்துடன் நடந்து கொண்டன

டயானா ஏதோ இவர்களது அத்தை மகளைப் போலவும்..

இளவரசர் சார்லஸ் ஏதோ இவர்களது சித்தப்பா பையனைப் போலவும்…

புள்ளிவிவரமாக அச்சு பிசகாமல் கொடுத்த செய்திகள் இருக்கிறதே… அடடா…

சார்லஸின் மனைவி டயானா

டோடி பயத்தின் காதலி

டயானாவின் கணவன் சார்லஸ்

கமீலாவின் காதலன்…

இதையே உள்ளூர் கூலித் தொழிலாளிகள் செய்திருந்தால் அந்தக் காதல் கள்ளக்காதலாகி இருக்கும். நம்மவர்கள் காதலை அளப்பதற்கு வைத்திருக்கும் அளவுகோலே தனி ரகம்தான்’

இவையெல்லாம் பாமரனின் நக்கல்களுக்கு சில சாம்பிள்கள்…

அரசியலோ, அரசியல்வாதிகளோ, சமூக நிகழ்வுகளோ, நாட்டு நடப்போ என பல விஷயங்களில் மனிதர் அநியாயத்துக்கு கோபப்படுவதும், நக்கல் அடிப்பதுமாக அழிச்சாட்டியம் பண்ணியிருக்கார்.

என்னதான் நக்கல் அடித்தாலும், அதன் பிண்ணனியிலுள்ள தார்மீக கோபத்தையும், சமுதாய அக்கறையையும் நம்மால் எளிதில் அடையாளம் காணமுடிகிறது.

அங்கவை சங்கவை விஷயத்தில் மனிதரின் கோபம் கட்டுக்கடங்காமல் போகிறது

…இன்று எங்கள் தந்தையையும் இழந்தோம், நாட்டையும் இழந்தோமே, என பாரியின் மகளிர் அங்கவையும், சங்கவையும் கதறிய கதறல் புறநானூற்றைப் புரட்டிப் பார்த்தவர்களுக்கு தெரியும்

இவர்கள்தான் இன்றைய தமிழ் சினிமாவின்  கேலிப் பொருள்

இதற்கு ‘தமிழ்வாய்ந்த’ வாத்தி ஒருத்தர் பல்லை இளித்துக் கொண்டு ‘வாங்க வந்து பழகுக’ என்று மாமா வேலை பார்க்கும் காட்சியைப் பார்க்கும் போது ரத்தம் சூடேறி விட்டது

வசனம்: சுஜாதா

அங்கவை சங்கவைக்குப் பதிலாக பிரியதர்ஷிணி, தேவதர்ஷினி என்றோ … அபித குஜலாம்பாள், குசல குஜாம்பாள் என்றோ அல்லது சிவாஜிராவ்வுக்குப் பிடித்த பர்வதம்மா பசவம்மா என்றோ போட்டிருக்கலாமே, எது தடுத்தது இவர்கள் அனைவரையும்?…….

‘படங்களுக்குத் தமிழில் பெயர் சூட்டுங்கள்’ என்று பொங்கி எழுந்த தமிழ் பாதுகாப்பு பேரவையினர் இப்போது தமிழ்நாட்டில்தான் இருக்கிறார்களா?

கற்பு விஷயத்தில் குஷ்புவை விட்டேனா பார் என்று தொடை தட்டிய ஜாம்பவான்கள் இப்போது மட்டும் எங்கே போய் தொலைந்தார்கள்…

இதில் வக்கிரத்தின் உச்சகட்டம் என்னவென்றால் இருவருக்கும் கருப்புச் சாயம் பூசிக் காட்டியிருப்பதுதான்…

ஒன்றை மட்டும் நினைவில் வையுங்கள்

கருப்பு என்பது நிறமல்ல, இனம். இதை உங்களுக்குப் ‘புரியும் மொழியில்’ சொல்வதனால்…

Black is not a color
to erase
It is a RACE

இத்தோடு நிறுத்துங்கள் உங்கள் விபரீத விளையாட்டை அப்புறம்…

நாங்களும் ‘பழக’ ஆரம்பித்தால்… எச்சரிக்கை.

வெறுமனே நக்கல் மட்டுமாக இல்லாமல், அவர் சொல்லும் சில யோசனைகளும் பரிசீக்கக் கூடியதாக இருக்கிறது.

நுழைவுத்தேர்வு பிர்ச்சனையில், பிறந்த நாளை ஒரு அளவுகோலாய் வைக்காமல், அரசுபள்ளிகளில் படித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கலாம் (பள்ளி இறுதி வரை அரசு நிறுவனங்களை நிராகரித்து விட்டு, பொறியியல், மருத்துவப் படிப்பின் போது மட்டும் அரசு கல்லூரிகளை நாடுவது எந்த விதம்?)

சமத்துவபுரத்தில் இந்த சாதியை சேர்ந்தோர் இத்தனை சதவீதம், இன்னொரு சாதியை சேர்ந்தோர் இத்தனை சதவீதம் என்று வழங்காமல் உண்மையான சாதி மறுப்பு திருமணம் செய்தவர்களுக்கே முன்னுரிமை வழங்கப் படவேண்டும். அப்பதான் …பையன், … பொண்ணுக்கு லெட்டர் கொடுத்தான், …. பொண்ணு, ….பையன் கூட ஓடிப்போயிட்டா போன்ற பிர்ச்சனைகள் அங்கு எழாது

என்பதெல்லாம் யோசிக்க வேண்டிய விஷயங்கள்தான்…

புத்தகத்தில் இவர் பெரிதும் விளாசுவது தமிழில் பெயர் வைத்தால் வரிவிலக்கு என்ற அரசின் ஆணை, தமிழ் சினிமாவின் போக்கு, அரசியல்வாதிகளின் நடவடிக்கைகள், வேடிக்கை பார்ப்பதன் மூலம் சமூகக் கொடுமைகளை ஊக்கப்படுத்துகிற ஊனமுற்ற சமூகம், கம்யூனிஸ்டுகள் (முக்கியமாக கேரள கம்யூனிஸ்டுகள்) மற்றும் ஜார்ஜ் புஷ்! ஆகியோரைத்தான்

இவை தவிர இந்த புத்தகத்தின் வாயிலாக அவர் அறிமுகப்படுத்துகின்ற சில கவிஞர்கள், அவர்களுடைய கவிதைகள் மிக அருமை

காதல் கவிதைகளுக்குத் தப்பித்து அறிவுப்பூர்வமான எழுத்துக்களோடு உலா வரும் கவிஞர்களுள் மனதுக்கு ஆறுதலாக இருந்ததாக அவர் சிலாகிப்பது அ.ப.சிவா அவர்கள் எழுதிய ”கருப்பு காத்து” என்ற நூலைத்தான்…

‘அட்சயத்திரிதியை
தங்கம் வாங்கினான்
கூடியது
கடன்

ஆறு மாதத்துக்கப்புறம்
சீராய் ஓடியிருந்தது
செலுத்திய
சேரி இரத்தம்!

சனி
6-ம் வீட்டில்
புதன்
2-ம் வீட்டில்
நான்
வாடகை வீட்டில்’

”வீடு வாங்குவதற்குப் பதிலாக வீடு நிறைய புத்தகங்கள் வாங்கிய அப்பாவிற்கு” என்று மனதைத் தொடும் வரிகளோடு “நிறமறியாத் தூரிகை”  என்ற கவிதை நூலுக்கு சொந்தக்காரர் கவிஞர் பா. மீனாட்சி சுந்தரம், முதல் நூலை வெளியிட்டது ஆங்கிலத்தில்…

மனிதர்கள் மீது இவர் கொண்டுள்ள காதலுக்கு இவர் வரிகளே சாட்சி

‘வீடற்ற குழந்தையொன்று
சோப்பு நுரையை ஊதியபடி
உடைத்தெறிகிறது
ஓராயிரம் உலகங்களை

இலட்சங்கள் கொடுத்து
வாங்கிய நான்கு சக்கர வாகனம்
எச்சங்களைத் தவிர்க்க
வெட்டியெறியப்பட்ட
மரத்தைத் தேடியவாறு
சுவர் நெடுக மரங்கள்!

எல்லாம் ஒன்றுபோல இருப்பதால்
எதுவென்று தெரிவதில்லை
அப்பாவின் குழிமேடு’

என்ற வரிகள் ஏற்படுத்தும் வலியும், ஏக்கமும்… இந்த புத்தகத்தை நான் வாங்க வேண்டும் என்கிற தாக்கத்தை ஏற்படுத்தியது

காஞ்சிபுரத்தில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் அறிமுகமானதாக, இவரைப் போலவே சமூக கோபங்களை வெளிப்படுத்துவதாக இவர் சிலாகிப்பது பாரதி ஜிப்ரானின் ‘முன்பனிக்காலம்’ என்ற கவிதை நூலைத்தான்…

‘மிகச் சரியாய்
இசைக்கும்
இசைக் கருவிக்கு
இங்கெவனோ
பெயர் வைத்தான்
‘தப்’பென்று
……………………

கடவுளுக்காக
மொட்டையடித்துக்
கொள்கிறான்
மனிதன்…
மனிதனுக்காக
ஒரு மயிரையும்
இழக்கத் தயாராய் இல்லை
கடவுள்.

‘எல்லோரும்
காதலிக்கிறார்கள்
பின்னொரு நாளில்
வருத்தப்படுகிறார்கள்.
சிலர் சேர்ந்ததற்காக
சிலர் பிரிந்ததற்காக’

என்ற கவிதை என்னை ‘அட’ சொல்ல வைத்தது (இப்போ என் கூகள்ல ஸ்டேட்டஸ் மெஸேஜ் இதுதான்)

இது தவிற நம்முடைய சக வலைபதிவர் நவீன் பிரகாஷின் கவிதைகளை, மீண்டும் ஒரு முறை காதலிக்கத் தூண்டுவதாக பெரிதும் பாராட்டுகிறார். இணைய தளங்களில் இளைப்பாறியது போதும், இவற்றை புத்தகமாக போடச் சொல்லி பாராட்டுகிறார். வாழ்த்துக்கள் நவீன் பிரகாஷ்!!!!

ஆனால் இவை எல்லாவற்றையும் விட பாண்டிச்சேரியில் அவருக்கு அறிமுகமான 14 வயது சிறுமி எழுதிய ‘சிறகின் கீழ் வானம்’ என்ற நூல் ஏற்படுத்திய அதிர்ச்சி அவருக்கு மட்டுமில்லை எனக்கும்தான். அந்த சிறுமியின் பெயர் கு.அ. தமிழ்மொழி.

அவருடைய இரு நெத்தியடிகள்

‘அரசு கோப்பு
நடவடிக்கை எடுத்தது
கரையான்…

ஆறுமுகனே
பன்னிரு கைகள் வேண்டும்
வீட்டுப்பாடம்’

மொத்தத்தில் கவுண்டமணி ரசிகனான எனக்கு இந்தப் புத்தகம் மிக பிடித்து விட்டது. நண்பர்கள் யாருக்கு இந்தப் புத்தகம் படிக்க விரும்பினாலும் அணுகலாம் (பதிலுக்கு ஒரு புத்தகத்தோடு மட்டுமே!!!!!)

பிரிவுகள்:புத்தகம் குறிச்சொற்கள்:,