தொகுப்பு
சாப்பாடும் கடலையும்…
கல்லூரிக் காலத்திலும் சரி, இப்போது வேலையில் இருக்கும் போதும் சரி, நான் சாப்பாட்டுக்கு தரும் முக்கியத்துவத்தை பலரும் வியப்புடனே நோக்கினர். அதுவும் நான் வேலை பார்த்து வந்த, பார்க்கின்ற அலுவலகங்களில் ‘நாம இவ்ளோ கஷ்டப்பட்டு வேலை பாக்கறதே நிம்மதியா சாப்பிடத்தான‘னு ஒரு சின்ன விஷயத்தை சொன்னா, என்னமோ உலக மகா தத்துவத்தை சொன்ன மாதிரி ‘கெக்கபிக்க‘ ன்னு சிரிக்கும் போது நாம எதாவது தப்பா சொல்லிட்டமான்னு சுய பரிசீலனை செய்ய வைக்கும்.
கல்லூரிக் காலங்களில் நல்ல சாப்பாடு வேண்டும் என்பதற்காகவே, இரண்டாம் ஆண்டு முடிவில் நண்பர்களுடன் சேர்ந்து தனியாக வீடு பார்த்து, ஒரு அம்மாவை சமையலுக்காகவே அமர்த்தியதும் சாப்பாட்டிற்கு கொடுத்த முக்கியத்துவத்தினால்தான். அதுவும் இரண்டாமாண்டு நடுவில் விடுதியை விட்டு விட்டு தனி வீடாக பார்த்து போய் விடலாமா என்று எழும்பிய ஆசை, சைவ உணவு மட்டுமெ கல்லூரி விடுதியில் போடப்படும் என்ற கல்லூரி நிர்வாகம் கொடுத்த உறுதிமொழியை, கல்லூரி நிர்வாகமே மீறி ‘சீன வகை அசைவ உணவு‘ போட்டதும், அதுவும் ஒரு சனிக்கிழமை மதியம் சிக்கன், மட்டனுக்கு பதிலாக புழு, பூச்சியுடன் சாப்பாடு போட்டது, ”வாராவாரம் சனிக்கிழமை எண்ணெய் தேச்சு குளிக்கறது மட்டுமில்ல, எக்காரணம் கொண்டும் சனிக்கிழமை அசைவம் சாப்பிடக் கூடாது என்ற என் பெற்றோரின் கட்டளையை மீற வைக்கவே, முடிவாகவே மாறியது.
இதே முக்கியத்துவம்தான், பின்னாட்களில், கல்லூரி உணவு இடைவேளையில் கல்லூரி நண்பிகளை உணவு கொணரச் செய்து, அவர்களுடனே சாப்பிடும் போது ”அது ஏண்டா சாப்பாட்டுக்கு மட்டும் எங்க கூட வர மாட்டேங்கிற, கடலை போடுறது அவ்ளோ முக்கியமாடா”, என்ற நண்பர்களின் கிண்டலையும் மீறி உண்ண வைத்தது (அவர்களுக்கு என்ன தெரியும், எனக்கு சாப்பாடுதான் முக்கியம் என்பதும், நான் சாப்பாட்டிற்காகத்தான் அவர்களுடன் சாப்பிடுகிறேன் என்பதும்).
இதே முக்கியத்துவந்தான், பின் சென்னை வந்த போது திருவல்லிக்கேணியில், ஒரு ஆந்திரா மெஸ்ஸுக்கருகில் இருந்த ஒரு மேன்சனை தேர்ந்தெடுத்து தங்க வைத்தது. பின் வடபழனியில் வீடு பார்த்து தங்கலாம் என்ற போது கூட, உடனடியாக கேஸ் கனெக்ஷன் பெற்று, ஒரு வேலையம்மாளை அமர்த்தி சமைத்து, சாப்பிட வைத்தது. அதுவும் சக நண்பர்கள் ஸ்டைலுக்காகவோ, சோம்பேறித்தனத்தினாலோ, சாப்பாடு எடுத்து வர முடிந்தும், எடுத்து வராமல், ஹோட்டலில் சாப்பிடலாம் என்று செல்லும் போது, நான் மட்டும் சாப்பாட்டை எடுத்துச் சென்று சாப்பிட்டதும் அதற்காகத்தான்.
என் நேரம், நான் சாப்பிடும் போது, சக அலுவலக நண்பிகள் மூன்று பேர் சேர்ந்து சாப்பிட நேர, அதுவும் அந்த பெண்கள், ‘நான் சாப்பாட்டுல உப்பு கம்மி‘ என்று சொன்னால் கூட, ஏதோ பெரிய ஜோக்கை சொன்ன மாதிரி சிரிப்பதையும், சேர்ந்து சாப்பிடும் போது நடக்கின்ற ”சாதாரணமான தகவல் பரிமாற்றங்களையும்”, ”சாப்பாட்டுப் பரிமாற்றங்களையும்”, பார்த்த வெளியே போய் சாப்பிடும் கும்பல் ‘இதுக்காகத்தான் நீ எங்க கூட வந்து சாப்பிட மாட்டேங்கிறியா‘ என்று பொறாமையுடன் கேட்க, ‘கடலை மன்னன்‘ என்ற எனது பட்டம், எனது அலுவலகங்களிலும் தொடர்ந்தது.
நான் சாப்பாட்டுக்கு கொடுக்கின்ற முக்கியத்துவம், ஒருவேளை நான் ஒரு கிராமத்திலிருந்து வந்தது ஒரு காரணமாக இருக்கலாம், கிராமங்களில் மக்கள் சாப்பிடுவதே ஒரு அழகுதான், அதுவும் கறி விருந்தில் எவ்வாறு சாப்பிட வேண்டும் என்று என் மாமா எனக்கு பாடமே எடுத்திருக்கிறார். அதுவும் ரசம் சாதத்தையும், தயிர் சாத்தையும் எனது அப்பா உறிஞ்சியும், சப்பியும் சாப்பிடுவதை நினைக்கையில் என்னையறியாமல் என் உதடுகள் புன்னகைக்கின்றன.
இப்படி நான் வாழ்ந்து கொண்டிருக்கையில், சென்னையில், நுங்கம்பாக்கத்திலும், தேனாம்பேட்டையிலும், அலுவலகங்களைக் கொண்டிருக்கின்ற ஒரு பெரிய கம்பெனியிலிருந்து எனக்கு இன்னொரு வேலைக்கான உத்தரவு வந்த போது, அந்த அலுவலகங்களின் பத்தாம் மாடி முழுதும் ‘கேஃப்டீரியா‘க்காக ஒதுக்கி வைத்திருந்த ஒரே காரணத்திற்காக அந்த வேலையை நான் ஒத்துக் கொண்டேன். முதல் நாள் அலுவலகம் சென்றவுடன் அந்த அதிர்ச்சி செய்தி எனக்கு காத்திருந்தது, ஆம், எங்கள் பிரிவையும், இன்னும் ஒரு சிலரை மட்டும் ‘ஓஎம்ஆர்‘ ரோட்டில் உள்ள ஒரு கட்டிடத்திற்கு மாற்றி விட்டதாக சொன்னவுடன், கமல் ரேஞ்சுக்கு ஃபீல் பண்ண ஆரம்பித்து விட்டேன்.
வடபழனியிலருந்து, பக்கத்துலியே போயிட்டு வந்துடலாம் என்ற எனது ஆசையை அது களைத்தது மட்டுமல்ல, ஒன்பது மணிக்கு அலுவலகத்தில் இருக்க வேண்டுமென்றால், ஏழரைக்கே பஸ்ஸை பிடிக்கவேண்டும், அப்படியென்றல், எனது அலுவலகத்துக்கு நான் சாப்பாடு எடுத்துச் செல்ல முடியாது என்ற உண்மை என் முகத்தில் அறைய, கடுப்புடனே அலுவலகத்திற்கு சென்றேன். எப்படி இருந்தாலும், எட்டாம் மாடியில், எங்களுக்கென்று தனி ‘கேஃப்டீரியா‘ இருக்கிறது என்ற செய்தி தந்த புன்னகை, இரண்டாம் நாள் காலை ஒரு இட்லி சாப்பிட்டவுடன் பயமாக மாறியது. என்னுடைய ஒரு வாழ்வாதாரமே கேள்விக்குள்ளாகும் போது எனக்கு பயம் வருவது இயற்கைதானே?. அது எப்படிதான் காலைல எட்டரை மணிக்கு அப்படி ஜில்லுன்னு இட்லி தர முடியுதோ என்ற என் கேள்விக்கு விடை இன்னும் என்னால் கண்டு பிடிக்க முடியவில்லை. இங்கு போடப்பட்ட ஒரு தக்காளி சட்னி மாதிரி வேறு எங்கேயும் நான் சாப்பிட்டதில்லை. டிஃபன் அயிட்டமே இப்படி என்றால், சாப்பாடைப் பத்தி நான் சொல்ல வேண்டியதில்லை.
சரி, நம்ம விதி அவ்ளோதான்னு நினைச்சு சாப்பிடலாம்னு பார்த்தா, இட்லியும், வடையும் ஸ்பூனில் மட்டுமே சாப்பிடும் கூட்டத்தில் உட்கார்ந்து சாப்பிடுவது சிரமமாக இருந்தது. இட்லி பரவாயில்லை, சாப்பாடையும், சாம்பார், ரசம், தயிர் எல்லாத்தையும் ஸ்பூனிலேயெ கலக்கி, ஸ்பூனிலேயே சாப்பிடும் போது, என்னோட அப்பாவும், அம்மாவும், சாப்பாட்டை ஒழுங்கா பெசஞ்சு சாப்பிடத் தெரியாதா என்று திட்டியது என்னையறியாமல் ஞாபகத்திற்கு வந்தது. பத்தாதற்கு, வூட்ல ராமராஜன் படமும், சன் மியுசிக்கும் பாத்துட்டு, ‘கேஃப்டீரியா‘வில் மட்டும், எம் டிவியும், சிஎன்என்னும் மட்டுமே பார்க்கும் கூட்டத்தை கண்டால் வெறுப்பாய் இருந்தது.
இப்படியே நாட்கள் கடக்க, புது வருடம் மற்றவர்களுக்கு எப்படியோ, எனக்க ஆரம்பம் சற்று நல்லபடியாகவே ஆரம்பித்தது. ஆம், சக அலுவலர் ஒருவர் ஐந்து நிமிட நடையில் ஒரு ஆந்திரா மெஸ் இருக்கிறது என்று சொல்ல, உடனடியாக அங்கு சென்றோம். நெய்யும், பொடியும், கறீசும், “பருப்பும்” என்னை என் திருவல்லிக்கேணி வாழ்க்கைக்கே கொண்டு சென்றது. அதுவும் பொடியும், பருப்புமாக, மூணு ரவுண்டை முடித்துவிட்டு கையை சற்றே சப்பும் போது வந்த என் தந்தையின் ஞாபகம், என்னுள் மவுனப் புன்னகையைத் தோற்றுவித்தது. அது மட்டுமல்ல ‘ஓஎம்ஆர்‘ சாலையில் பல இடங்களில் இது போன்ற ஆந்திரா மெஸ்கள் இருப்பதாக என் நண்பன் சொன்ன போது நான் மவுனமாக சொன்னேன் “வாழ்க ஆந்திரா மெஸ்கள், வாழ்க அவர்கள் ஊற்றும் பப்பு”.
பின்குறிப்பு:
இயல்பாக நடந்ததோ, வேண்டுமென்றே நடந்ததோ, கல்லூரிக் காலத்தில் ஆரம்பித்த பெண்களுடன் சேர்ந்து உணவு உண்ணும் வழக்கம், இங்கே அடியோடு நொறுங்கிப் போனது. என்னுடைய அலுவலகப் பிரிவில் ஆட்களும் குறைவு, அதில் பெண்களே இல்லை என்பது ஒரு புறமிருக்க, 400 பேர் அமரக் கூடிய அலுவலகத்தில் இருக்கின்ற வெறும் 50 பேரில் எண்ணி 10 பெண்கள் இருந்தால் அதிகம், அதுவும் வேறு பிரிவில். இன்னும் மக்கள் வருவார்கள், இது தற்காலிக திட்டம்தான், கூடிய சீக்கிரம் நம்மை தேனாம்பேட்டைக்கு மாற்றி விடுவார்கள் என்று வெவ்வேறு செய்திகள் வந்தாலும், இன்னும் ஒரு வருடத்திற்கு இந்த நிலை தொடரும் என்றே தோன்றுகிறது.
ஆகையால், ஆண்களுடன் சேர்ந்து சாப்பிட்டால் எனக்கு ஒவ்வாமை வந்து விடும் காரணத்தினால், எனது அலுவலகத்திலோ அல்லது இதே கட்டிடத்திலுள்ள உள்ள மற்ற கம்பெனி பெண்களுடன் (மற்ற கம்பெனி பெண்கள் என்றால், அவங்க ‘கேஃப்டீரியா‘வுக்கு போய் சாப்ட்டுக்கலாம்) சேர்ந்து உண்ணக் கூடிய தருணங்களை எதிர் நோக்கியபடி காத்துக் கொண்டிருக்கின்றேன்…….