தொகுப்பு

Archive for மே, 2009

பசங்க – திரைப்பார்வை

அவன் பிச்சைக்காரனா இருக்கானேன்னு நீ பாக்குற!

அவன் திருடனாகிடக் கூடாதுன்னு நான் பாக்குறேன்!

இது தப்பா???

இவ்வளவு சீரியசான டயலாக்கை கையாண்டிருந்த விதம்தான் ‘பசங்க’ படத்தை பார்க்க தூண்டியது முதலில். அதிலும் டயலாக்கை கதாநாயகி சொன்னவுடன் பிண்ணனியில் ‘தெண்பாண்டிச் சீமையிலே’ பாட்டுக்கான பிண்ணனி இசை வேண்டுமென்றே போடும் போது ஏற்படுத்துகின்ற சிரிப்பு கொஞ்ச நஞ்சமல்ல!

முதலில் சசிக்குமாரைத்தான் பாராட்ட வேண்டும். சுப்பிரமணியபுரம் என்கிற வெற்றிப்படத்தை கொடுத்தது மட்டுமல்லாமல், அடுத்து உடனே படத்தை தயாரிக்க முன் வந்திருப்பதும், அதுவும் முழுக்க முழுக்க சிறுவர்களை மட்டும் மையமாகக் கொண்டு, எந்த ஒரு ஸ்டார் வேல்யூவும் இல்லாமல் ஒரு படத்தை தயாரித்த தைரியத்தையும் பாராட்டவேண்டும். படத்தின் இயக்குநர் முதல் நடிகர்கள் வரை யாரையும் கேள்விப்பட்டது கூட கிடையாது! எனக்கு இந்த படத்தில் தெரிந்த இரண்டே இரண்டு பெயர்கள் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன், தயாரிப்பாளர் சசிக்குமார் மட்டுமே.

என்னளவில் இது மிகச் சிறந்த மட்டுமின்றி, வித்தியாசமான படமாகவும் பார்க்கிறேன்,காரணம், காதலை மெயின் ட்ராக்கில் விட்டு, அதைச்சுற்றி, நகைச்சுவையையும், ஆக்‌ஷனையும், மசாலாவையும் பின்னும் வழக்கமான தமிழ் சினிமாவுக்கு மத்தியில் சிறுவர்களை பிரதானப்படுத்தியும், காதலை சைட் ட்ராக்கில் மட்டும் ஓடவிட்டு, அதையே நகைச்சுவையாகவும் கையாண்டிருக்கும் விதமும், மிடில் கிளாஸ் தகப்பனின் பாசத்தை வெளிப்பட்டிருக்கும் விதமும், எல்லவற்றிற்கும் மேலாக படத்தில் எல்லாருமே நடித்திருப்பதும் இப்படி பல விஷயங்களைச் சொல்லலாம்.

இவங்கதான் அந்த பசங்க

இவங்கதான் அந்த ”பசங்க”

இரு பள்ளிக்கூட பசங்கள் (ஜீவா, அன்பு), அவர்களுக்கென்று ஒரு க்ரூப், அதில் ஒரு பையனின் (ஜீவா) அப்பாதான் வாத்தியார், அக்கா நாயகி, இன்னொரு பையனின் (அன்பு) சித்தப்பா நாயகன், அந்தக் குடும்பத்தில் சில பிரச்சனைகள், இருவரது குடும்பமும் எதிரெதிர் வீட்டில் இதைச் சுற்றிதான் மொத்தக் கதையும் நகர்கிறது. பள்ளிக்கூட பசங்களை பிரதானப்படுத்திதான் முழுப்படமுமே என்றாலும், அதனிடயே ஒரு கலாட்டா காதல், மிடில் க்ளாஸ் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகள், குழந்தைகளின் லூட்டிகள் என ஒரு காக்டெயிலையே அள்ளி கொடுத்திருக்கிறார் இயக்குநர். முதல் படம் என்கிறார்கள் (வாழ்த்துக்கள் சார், தமிழ் சினிமா மீது நம்பிக்கை ஏற்படுகிறது!)

பசங்களின் வாயிலாகவே அவர்களைப்பற்றியும், அவர்கள் குடும்பத்தைப் பற்றியும் அறிமுகம் கொடுக்கிறார்கள். படத்தின் ஆரம்பக்காட்சிகளிலும், ஜீவாவிற்கு கொடுக்கும் பில்டப்புகளிலும், அவனுடைய ஜால்ராக்களுடனான வசனத்திலும் தமிழ் சினிமாவின் பல்வேறு காட்சிகளையும், வில்லன் பாத்திரங்களையும் கொலை வெறியோடு போட்டுத் தாக்குகிறார்கள் (ஒரு வேளை இதுக்குப் பேருதான் பின்நவீனத்துவ படமோ???)!!!

படம் முழுக்க தெரிகின்ற பாஸிட்டிவ் சென்ஸ், அன்புக்கரசுவின் பாத்திரப்படைப்பு, அப்துல்கலாமின் வரிகள் போன்றவை நம்பிக்கையை ஏற்படுத்துகிறதென்றால், நாயகனுக்கும், நாயகிக்கும் இடையே ஏற்படும் காதலும், அன்பு என்ற பையனின் தம்பியாக வரும் குழந்தையின் லூட்டியும் சிரிப்பை வரவழைக்கிறது.

எல்லாருடைய பாத்திரப் படைப்புமே அருமையாக இருந்தாலும் ஜீவாவின் தந்தையாக வரும் சொக்கலிங்கம் என்கிற வாத்தியாரின் பாத்திரப்படைப்பு மிக அருமை. சண்டை போட்டவ்ரிடமே திரும்ப சென்று பிரச்சனையை தீர்க்க முயல்வது, ‘அன்பு’வை ஊக்கப்படுத்துவது, தன் பையனாக இருந்தாலும் க்ளாசில் சமமாக நடத்துவது என்று சொக்கலிங்கம் வாத்தியாரின் பாத்திரப்படைப்பு மனதை அள்ளுகிறது.

இசை ஜேம்ஸ்வசந்தன், சுப்பிரமணியபுரத்தில் ஏற்படுத்திய நம்பிக்கையை இதிலும் ஏற்படுத்தியிருக்கிறார். அதிலும் ஒரு வெட்கம் வருதே வருதே பாடல் இசையும், எடுக்கப்பட்டிருந்த விதமும், பாடல் வரிகளும் மிக அருமை (இந்தப்படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்ட இந்தப்பாடலும் ஒரு காரணம்). பாடல்களில் மட்டுமின்றி பின்ணனி இசையிலும் பட்டாசு கிளப்பியிருக்கிறார்.

ஒரு வெக்கம் வருதே வருதே

ஒரு வெட்கம் வருதே வருதே

பெயர் போடும் போது, வசனமும், ஒளிப்பதிவும் யார் என பார்க்காமல் விட்டோமே என்ற வருத்தத்தை ஏற்படுத்தச் செய்தது படத்தில் இவர்களுடைய பங்களிப்பு. ஒரு வெட்கம் வருதே பாடலிலேயே ஒளிப்பதிவின் அருமையை புரிந்து கொள்ளலாம் என்றால்,

”நாம சொல்றதை புரிஞ்சுக்குறதுக்கும், ஏத்துக்குறதுக்கும் ஒரு மனசு வேணும், அந்த மனசு உங்ககிட்ட இருக்கு”

ஒருத்தருக்கு ஒண்ணுக்கு வந்தா ஏண்டா எல்லாத்துக்கும் ஒண்ணுக்கு வந்துருது?

“முன்ன பின்ன தெரியாத கஸ்டமர்கிட்ட கடையில் சிரிச்சு பேசறோம், பொண்டாகிட்ட சண்டை போடுறோமே???”

“பாவண்டா அவன், எல்லா வேலையும் அவனே செய்யுறான், ரொம்ப கஷ்டப்படுறான் – யாரா, என்னப்பத்திதாண்டா பேசிட்டிருக்கேன்”

“நாமதான் சார் நம்ம பசங்களோட முதல் ரோல்மாடல்”

இதெல்லாமே ஒரு சில ‘அட’ போட வைக்கும் வசனங்கள். இது மாதிரி படம் முழுக்க பல ‘அட”க்கள்.

கிளாஸில் லீடரை தேர்ந்தெடுப்பது, பேசறவங்க பேரை எழுதி வைக்குறது, ப்ராகரஸ் கார்டு கொடுக்கறது, மெட்ராஸ் ஐ வர்றது, விடியற்காலைல சத்தம் போட்டு படிக்கறது, பிஞ்சு போன ரப்பர் செப்பலை குச்சில தூக்கிட்டு வர்றதுன்னு பல காட்சிகளை பார்க்கும் போது மீண்டும் ஒருமுறை அந்த கள்ளங்கபடமற்ற வாழ்க்கையை வாழ்ந்துபாக்கணுங்கிற ஆசை நம்மை மீறி வருகிறது.

பெற்றோரோ இல்லை சுற்றியிருப்போரோ, அவர்களுடைய செயல்களும், செய்கைகளும் எந்தளவு குழந்தைகளை பாதிக்கும் என்பதை படத்தில் நன்றாகவே சொல்லியிருக்கிறார். உண்மையில் பல காட்சிகள் பெரியவர்கள், குழந்தைகள் உலகத்தை புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் உருவாக்கப்பட்டுள்ளது.

உண்மையில் பசங்க படம் மாணவர்களுக்கு தங்களையே திரையில் காணவும், இளைஞர்களுக்கு தன் மாணவப்பருவத்தை திரும்பிபார்க்கவும், பெரியவர்களுக்கு தங்கள் குழந்தைகளின் உலகை புரிந்து கொள்ளவும், சமூதாயத்திற்கு சமூக முரண்பாடுகளை கொஞ்சம் தெரிந்து கொள்ளவும், எல்லாவற்றிற்கும் மேலாக சி(ப)ல இயக்குநர்களுக்கு படம் எடுப்பது எப்படி என்பதை தெரிந்து கொள்ளவும் வாய்ப்பளிக்கிறது.

என்னடா இவன் ஓவரா பில்டப் கொடுக்கிறான், படத்துல குறையே இல்லியான்னு கேக்கலாம், அதுவும் இருக்கலாம், ஆனா இந்த ஆண்டில் இதுவரை வந்ததில் ஒரு மிகச் சிறந்த படமாகத்தான் என்னால் பசங்க படத்தை பார்க்கமுடிகிறது.

பின்குறிப்பு (வாலிபப்பசங்களுக்கும்):

குளத்தில இருக்குற பூ வேணுமான்னு நாயகன் கேட்க, வேண்டும் என்பதை கண்புருவத்தை உயர்த்தியே பதில் சொன்ன நாயகியின் அந்த செய்கையை பார்க்கவும் (பாட்டுலியே அது மாதிரி ரெண்டு முறை வரும்), நாயகன் நாயகிக்கிடையேயான காதலை பார்க்கவும், அன்புவின் தம்பியாக வரும் குழந்தையின் குறும்பை ரசிக்கவும் மட்டுமே தாராளமாக ஒரு முறை கண்டிப்பாக பார்க்கலாம்…..

பிரிவுகள்:சினிமா குறிச்சொற்கள்:

மனைவியின் பிறந்தநாளை மறக்காதிருக்க சிறந்த வழி!!!

மனைவியின் பிறந்தநாளை மறக்காதிருக்க சிறந்த வழி!!!


 1. உங்கள் மனைவியின் பிறந்த நாளை மறக்காதிருக்க சிறந்த வழி, ஒரு முறையாவது அதை மறந்து விடுவதுதான்….
 2. ஒரு நல்ல மனைவி, அவள் பக்கம் தவறு இருக்கும் போதாவது, தனது கணவனை மன்னிக்க தயாராய் இருப்பாள்!
 3. மகிழ்ச்சியான திருமண வாழ்க்கைக்கான ரகசியம்………………ரகசியமாகவே இருக்கிறது!
 4. எனக்கு திருமணம் ஆகி 2 வருடங்கள் ஆகின்றது, நான் என் மனைவியுடன் பேசியும் 2 வருடங்கள் ஆகின்றது உண்மையில் அவள் பேசும் போது, நான் குறுக்கீடு செய்ய விரும்பவில்லை!
 5. கல்யாணம் ஆகும் வரை ஒரு மனிதன் முழுமை அடைவதில்லை, ஆன பின்போ அவனே முடிந்து விடுகிறான்!
 6. எனது கிரடிட் கார்டை யாரோ திருடிவிட்டார்கள், ஆனால் நான் போலீசிடம் புகார் கொடுக்க விரும்பவில்லை உண்மையில் அந்த திருடன், என் மனைவியை விட குறைவாகத்தான் செலவு செய்கிறான்…
 7. உண்மையான மகிழ்ச்சி என்றால் என்னவென்று திருமணம் ஆகும் வரை எனக்கு தெரிந்திருக்கவில்லை, தெரிந்தபோது மிகத் தாமதமாகியிருந்தது
 8. யார் சொன்னது, திருமணமான ஆண்கள் மற்ற ஆண்களை விட மிக அதிக நாட்கள் வாழுகிறார்கள் என்று? அது பார்ப்பதற்கு அப்படி இருக்கிறது, அவ்வளவே!!!
 9. யோசித்துப்பார்த்தால், கல்யாணம் என்ற ஒன்றைத் தவிர வேறெந்த தவறையும் மனதறிந்து செய்ததில்லை!!!
 10. நானும் எனது மனைவியும் 20 வருடங்களுக்கும் மேலாக சந்தோஷமாகத்தான் இருந்தோம், ஆனால் அதற்கப்புறம் நாங்கள் சந்தித்துக் கொண்டோம்
 11. புடவை கட்டியிருந்தால் என் மனைவியின் அழகு, என்னையேக் கொன்று விடும், அவளது சமையலைப் போல!

பின்குறிப்பு:

இது வெறும் மொக்கையாக இருக்கலாம், ஆனால் இதுதான் சி()லரது வாழ்க்கைக் குறிப்புகளும் கூட.

பிரிவுகள்:மொக்கை குறிச்சொற்கள்: