தொகுப்பு

Archive for the ‘நினைவுகள்’ Category

பள்ளிக்கூடம் போவலாமா?

நண்பர் சரவணகுமரன் ”பள்ளிகூடம் போவலாமா” தொடர் பதிவுக்கு அழைத்திருந்தார்…..அழைப்பிற்கு நன்றி

அழைத்து ஒரு வாரம் ஆகிவிட்டது, தாமதமான பதிவுதான் என்றாலும், இதை விட்டால் நானும் கொஞ்சம் பிசியான ஆள் என்பதைக் காட்ட வேறு வாய்ப்புகளே கிடைக்காது என்பதாலேயே இந்த தாமதமான பதிவு!!!

—————————————————————————————————————

நான் படித்த காலத்தில், எங்கள் ஊரில் மொத்தம் மூன்று பள்ளிக்கூடங்கள் இருந்தன. ஒன்றாவது முதல் ஐந்தாவது வரைக்கான அரசின் ஊ.ஒ.து. பள்ளி, இதில் ஆணும் பெண்ணும் சேர்ந்து ஐந்தாவது வரை படிப்பார்கள். அடுத்து ஆண்களுக்கான மேல் நிலைப்பள்ளி, அரசு உதவியுடன் கிறித்துவ சபை நடத்தும் பள்ளி அது. இங்கு 6வது முதல் 12வது வரைக்கான வகுப்புகள் நடக்கும். அதற்கடுத்து பெண்களுக்கான மேல்நிலைப்பள்ளி, ஆறவது முதல் வரை பத்தாவது வரைக்கான வகுப்புகள் அங்கே நடைபெறும். பெண்கள் 11வது 12வது படிக்க வேண்டுமென்றால் ஒன்று எங்கள் பள்ளிக்கு வரவேண்டும் அல்லது மேட்டூரில் உள்ள ஏதாவது ஒரு பள்ளிக்குச் செல்ல வேண்டும். சுற்றியுள்ள ஊர்களுடன் ஒப்பிடும் போது மேட்டூருக்கு அடுத்தபடியாக அனைத்து வசதிகளையும் கொண்டது எங்கள் ஊர்தான், இதுதான் எங்கள் ஊரின் நிலை….

சுற்றியுள்ள பதினெட்டுப்பட்டி கிராமத்திலிருந்தும் எங்கள் ஊரிலுள்ள மேல்நிலைப்பள்ளியில் வந்துதான் படித்தார்கள், வேறு கிராமங்களில் அந்த வசதி கிடையாது….கல்வியின் தரத்தை உயர்த்த வேண்டும், ஆசிரியர், மாணவர் விகிதம் குறைய வேண்டும் என்றெல்லாம் போராடுபவர்கள் அங்கு வந்து பார்த்தால் பரிதவித்துப் போயிருப்பார்கள், ஆம், ஆறாம் வகுப்பே 5 வகுப்புகள் இருந்தாலும், ஒவ்வொரு வகுப்பிலும் 100க்கும் குறையாத மாணவர்கள் இருப்பார்கள்.

அனைவருக்கும் கல்வி அளிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்தினாலேயே, எவ்வளவு முடியுமோ அவ்வளவு பேருக்கும் அனுமதி என்கிற கொள்கையை எங்கள் பள்ளி கொண்டிருந்தது, அதில் மிகுந்த வறுமையிலிருப்போர் பலர் பாதி கட்டணத்திற்கும், மற்ற பலருக்கு ஊரிலுள்ள பெரியவர்கள் உதவியுடன் படிப்போ நடக்கும். பள்ளியில் இணைந்த பிறகு நல்ல மாணவன் என்றால் ஆசிரியர்களே ஒரு சிலரின் படிப்புக் கட்டணத்தை ஏற்றுக் கொள்வார்கள்….

கிராமத்து பள்ளிக்கூடங்களின் உண்மை நிலையை கண்டறிய, அந்த ஆறாம் வகுப்பில் நுழைந்தால் எளிதில் கண்டுகொள்ளலாம், அந்த வகுப்பில் சிலர் அப்போழுதுதான் எழுத்துக்கூட்டியே படிக்க ஆரம்பிப்பார்கள், இன்னும் சிலருக்கு ஒரு வாக்கியத்தை முழுமையாக எழுதும் திறன் கூட இருக்காது. இப்படி வெவ்வேறு திறன்நிலைகளைக் கொண்ட, 100க்கும் மேற்பட்ட மாணவர்களுக்குத்தான் வகுப்புகள் எடுத்தார்கள் அந்த ஆசிரியர்கள்

அந்த மாணவர்களின் கிராமங்களில் படிப்பிற்கும் வறுமைக்கும் நடைபெறும் போராட்டங்களில் பெரும்பாலும் வறுமையே ஜெயித்துக் கொண்டிருந்தது. எண்ணெயிடாத தலைகளிலும், பொத்தான் இல்லாத டிராயர்களிலும், அழுக்கேறிய வெள்ளைச் சட்டைகளிலும், பத்தாம் வகுப்பில் கூட செருப்பணியாத (முடியாத) கால்களிலும் வறுமையின் திறமை எப்போதும் பளிச்சிட்டேக் காணப்படும். ஏறக்குறைய 500 பேரைக் கொண்டிருக்கும் 6ம் வகுப்பு, போகப் போக பத்தாவது வரும் போது சுமார் 60 பேரை (3 வகுப்புகளில்) மட்டுமே கொண்டிருக்கும். பல சமயங்களில் வறுமையின் காரணமாகவோ அல்லது பையனை கூலி வேலைக்கு அனுப்புவதற்காகவோ படிப்பை பாதியிலேயே நிறுத்தச் செய்யும் காட்சிகள் மிகச் சாதாரணம்…

11வது சேர்க்கும் போதும், 85% சதவீதத்திற்கும் அதிகமான மதிப்பெண்களை வாங்கியவர்களைத்தான் சேர்த்துக்கொள்வது போன்ற தெய்வீகக் கொள்கையின் அடிப்படையிலெல்லாம் மாணவர்களை சேர்த்துக் கொள்வதில்லை. மதிப்பெண்களுக்குத் தகுந்தாற் போல் ஏதாவது ஒரு க்ரூப்பில் எத்தனை பேரை வேண்டுமானாலும் சேர்த்துக் கொள்வர். பள்ளிக்கட்டணமும் கூட மிகக் குறைவுதான், நான் பத்தாவது முடிந்து 11வது சேர்கையில் (96ல்) 100 ரூபாயோ என்னமோதான் கட்டினதாக ஞாபகம் (பத்தாவது டிசி, மதிப்பெண் பட்டியல் வாங்கியது முதல் 11வதிற்கான அனுமதிக் கட்டணம் வரை எல்லாம் சேர்த்து)….

இத்தனை இருந்தாலும் படிப்பிலும், விளையாட்டிலும், தரத்திலும் எங்கள் பள்ளிக்கு மிக நல்லப் பெயர் இருந்தது. கிராமத்தில் உள்ள பள்ளிதானே சின்னதாகத்தானே இருக்கும் என்று யாராவது நினைத்தால் ஏமாந்துதான் போக வேண்டும். மேட்டூரில் கூட விடுதி வசதி இல்லாத நிலையில், எங்கள் பள்ளியில் அப்போதே விடுதி வசதி இருந்தது. சென்னையிலிருந்து வந்து கூட எங்கள் பள்ளி விடுதியில் சேர்ந்து படித்திருக்கின்றனர். கிறித்துவ சபை நடத்தும் பள்ளி என்பதால், கேரளாவிலிருந்து வந்து படிக்கும் கிறித்துவ மாணவர்களும் அங்கு அதிகம் இருந்தனர். அப்போதே மிகப்பெரிய நூலகமும், கம்ப்யூட்டர் லேபும் இருந்திருக்கிறது.

பள்ளியின் தரத்திற்கு இன்னொரு சான்று அதன் தேர்ச்சி நிலை, வெவ்வேறு திறன் கொண்ட மாணவர்கள் இருந்தாலும், எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து எங்கள் பள்ளி, பத்தாவதிலும், 12வதிலும் 90 முதல் 100 சதம் வரை தேர்ச்சி நிலையை அடையக் கூடியதாகவே இருந்தது (பலமுறை 100 சதம் அடைந்திருக்கிறது). விளையாட்டைப் பொறுத்தவரை அந்த மாவட்ட அளவு நடக்கும் தடகளப் போட்டிகளிலும், கால்பந்து போன்றவற்றிலெல்லாம் பல பரிசுகள் வாங்கியிருக்கிறது. சில சமயம் மாநில அளவுப் போட்டிகளில் கூட வென்றிருக்கிறது. மாநில அளவு சென்று வென்றால் அடுத்த நாள் எங்களுக்கு விடுமுறை கிடைக்கும்….

மிகச்சாதாரணமாக 5 விளையாட்டு ஆசிரியர்களை எப்போதும் கொண்டிருக்கும். இரண்டு கால்பந்து மைதானங்கள் (அதில் ஒரு மைதானம் மிகப் பெரியது), இரண்டு கூடைப்பந்து மைதானங்கள் (அதில் ஒன்று அப்போதே கான்கிரீட் போட்டது), இரண்டு கைப்பந்து மைதானங்கள், நீளம் தாண்டுதலுக்கு, உயரம் தாண்டுதலுக்கு, குச்சி வைத்து தாண்டுதலுக்கு குழிகள் அமைத்தது போக இன்னும் நிறையவே அங்கு இடம் இருக்கும். எங்கள் பள்ளியில் எனக்கு மிகப் பிடித்ததும் இந்த மைதானம்தான். விடுமைறை நாட்களில் அந்த மைதானம்தான் எங்களுக்கு கதி. சிறு வயதில், காலை 9 மணி முதல், மாலை வரை அங்கேயே கிரிக்கெட் விளையாடிய உடம்புக்கு தெரியாத வெயில், ஏனோ இப்போது சென்னை வெயில் பயங்கரமாகவே உறைக்கிறது.

வருடத்தின் முதல் பாதியில் படிப்பில் பெரும்பாலும் கழியும் எங்கள் பள்ளியில், வருடத்தின் இரண்டாம் பாதி மிகக் குதூகலமாகவே இருக்கும். விடுமுறைகளும் சரி, விழாக்களும் சரி அந்த சமயத்திந்தான் அதிகமாக இருக்கும். பெற்றோர் தின விழா, இலக்கிய விழா, விளையாட்டு விழா என்று பாதி நாட்கள் இந்த விழா சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளிலேயே போய்விடும். பெற்றோர் தின விழாவிற்கு பேச்சுப் போட்டி முதல் பல்வேறு போட்டிகள் நடைபெற்று பரிசுகள் பெற்றோர் தினத்தன்று வழங்கப்படும். இலக்கிய விழாவிற்கு, ஒவ்வொரு வகுப்புகளுக்குமிடையே கலை நிகழ்ச்சிப் போட்டி வைத்து பரிசுகள் வழங்கப்படும். யாராவது தமிழ் புலவர்கள் அவ்வப்போது வந்து பேசுவார்கள்.

இது போன்றதொரு போட்டிகள் நடத்துவதற்கென்றே மாந்தோப்பு என்று ஒரு இடம் இருக்கும். சுற்றியும் மரத்தின் நிழலில், இயற்கையின் வாசத்தில், இப்போழுது நினைத்தாலும் ஏங்க வைக்கின்ற ஒரு வாழ்க்கையை எங்கள் பள்ளி எங்களுக்கு அமைத்திருந்தது. நான் உட்பட எங்கள் பள்ளியில் பலருக்கும் நாடகம், பேச்சுப்போட்டி என்று பல துறைகளில் கூடுதல் திறன்நிலைகளை வளர்த்துக்கொள்ள தளம் அமைத்துக் கொடுத்தது இந்த மாந்தோப்புதான். எங்கள் பள்ளியில் இருந்து வெளிவந்த ஒவ்வொரு மாணவனின் மனதிலும் இந்த மாந்தோப்பு, மைதானம், இரண்டாம் பாதி விழாக்கள் ஆகியவை நீங்கா இடம் பெற்றிருக்கும்.

சில விஷயங்கள் நடக்கும் பொழுதை விட, முடிந்து நினைவுகளாய் மாறியபின் நெஞ்சில் இன்னும் பசுமையாகவும் சுவையாகவும் இருக்கும். படிக்கும் பொழுது அந்த கள்ளங்கபடமற்ற வாழ்வின் உன்னதம் நம்மில் பலருக்கும் புரிந்திருக்குமா என்று தெரியவில்லை. ஆனால் மீண்டும் அப்படி ஒரு வாழ்வை வாழ்ந்து பார்க்கும் வாய்ப்பு நமக்கு அமையாது என்றாலும், அந்த நிமிடங்களை நினைவு கூர்வதே ஒரு தனி சுவைதான் இல்லையா?????

எங்கள் பள்ளியின் பெயர் நிர்மலா மேல்நிலைப் பள்ளி, கொளத்தூர்

பின்குறிப்பு:
ஒரு விதத்தில் எங்கள் பேட்ச் கொஞ்சம் கொடுத்த வைத்த பேட்ச்தான். எங்கள் முறைக்குப் பின்பு எங்கள் பள்ளியில் 11வது 12வதுக்கு பெண்களைச் சேர்த்துக் கொள்வதில்லை என்று முடிவெடுத்திருந்தார்கள், அவர்களுக்கும் பக்கத்திலிருந்த பெண்கள் பள்ளியிலேயே ஏற்பாடு செய்யப்பட்டது. எங்கள் முறையின் போதுதான், 11வது சேரும் பெண்களுக்கு சுடிதாரை யூனிஃபார்மாக போட்டுக் கொள்ள அனுமதி அளித்தனர். அதற்கு முன்பெல்லாம் தாவணிதான் யூனிஃபார்ம். ஆனால் திடீரென்று எல்லாப் பெண்களும் சுடிதார் அணியச் செய்தது, அங்கு எல்லாருக்கும் ஒரு பெரிய அதிசியமாகத்தான் இருந்தது.

நான் அழைக்க விரும்பும் நபர்கள்

1. மழைக்காதலன் – சார்லஸ்
2. மொழியோடு ஒரு பயணம் – பிரேம்குமார்

பிரிவுகள்:நினைவுகள் குறிச்சொற்கள்:

சாப்பாடும் கடலையும்…

கல்லூரிக் காலத்திலும் சரி, இப்போது வேலையில் இருக்கும் போதும் சரி, நான் சாப்பாட்டுக்கு தரும் முக்கியத்துவத்தை பலரும் வியப்புடனே நோக்கினர். அதுவும் நான் வேலை பார்த்து வந்த, பார்க்கின்ற அலுவலகங்களில்நாம இவ்ளோ கஷ்டப்பட்டு வேலை பாக்கறதே நிம்மதியா சாப்பிடத்தானனு ஒரு சின்ன விஷயத்தை சொன்னா, என்னமோ உலக மகா தத்துவத்தை சொன்ன மாதிரிகெக்கபிக்கன்னு சிரிக்கும் போது நாம எதாவது தப்பா சொல்லிட்டமான்னு சுய பரிசீலனை செய்ய வைக்கும்.

கல்லூரிக் காலங்களில் நல்ல சாப்பாடு வேண்டும் என்பதற்காகவே, இரண்டாம் ஆண்டு முடிவில் நண்பர்களுடன் சேர்ந்து தனியாக வீடு பார்த்து, ஒரு அம்மாவை சமையலுக்காகவே அமர்த்தியதும் சாப்பாட்டிற்கு கொடுத்த முக்கியத்துவத்தினால்தான். அதுவும் இரண்டாமாண்டு நடுவில் விடுதியை விட்டு விட்டு தனி வீடாக பார்த்து போய் விடலாமா என்று எழும்பிய ஆசை, சைவ உணவு மட்டுமெ கல்லூரி விடுதியில் போடப்படும் என்ற கல்லூரி நிர்வாகம் கொடுத்த உறுதிமொழியை, கல்லூரி நிர்வாகமே மீறிசீன வகை அசைவ உணவுபோட்டதும், அதுவும் ஒரு சனிக்கிழமை மதியம் சிக்கன், மட்டனுக்கு பதிலாக புழு, பூச்சியுடன் சாப்பாடு போட்டது, வாராவாரம் சனிக்கிழமை எண்ணெய் தேச்சு குளிக்கறது மட்டுமில்ல, எக்காரணம் கொண்டும் சனிக்கிழமை அசைவம் சாப்பிடக் கூடாது என்ற என் பெற்றோரின் கட்டளையை மீற வைக்கவே, முடிவாகவே மாறியது.

இதே முக்கியத்துவம்தான், பின்னாட்களில், கல்லூரி உணவு இடைவேளையில் கல்லூரி நண்பிகளை உணவு கொணரச் செய்து, அவர்களுடனே சாப்பிடும் போது அது ஏண்டா சாப்பாட்டுக்கு மட்டும் எங்க கூட வர மாட்டேங்கிற, கடலை போடுறது அவ்ளோ முக்கியமாடா, என்ற நண்பர்களின் கிண்டலையும் மீறி உண்ண வைத்தது (அவர்களுக்கு என்ன தெரியும், எனக்கு சாப்பாடுதான் முக்கியம் என்பதும், நான் சாப்பாட்டிற்காகத்தான் அவர்களுடன் சாப்பிடுகிறேன் என்பதும்).

இதே முக்கியத்துவந்தான், பின் சென்னை வந்த போது திருவல்லிக்கேணியில், ஒரு ஆந்திரா மெஸ்ஸுக்கருகில் இருந்த ஒரு மேன்சனை தேர்ந்தெடுத்து தங்க வைத்தது. பின் வடபழனியில் வீடு பார்த்து தங்கலாம் என்ற போது கூட, உடனடியாக கேஸ் கனெக்‌ஷன் பெற்று, ஒரு வேலையம்மாளை அமர்த்தி சமைத்து, சாப்பிட வைத்தது. அதுவும் சக நண்பர்கள் ஸ்டைலுக்காகவோ, சோம்பேறித்தனத்தினாலோ, சாப்பாடு எடுத்து வர முடிந்தும், எடுத்து வராமல், ஹோட்டலில் சாப்பிடலாம் என்று செல்லும் போது, நான் மட்டும் சாப்பாட்டை எடுத்துச் சென்று சாப்பிட்டதும் அதற்காகத்தான்.

என் நேரம், நான் சாப்பிடும் போது, சக அலுவலக நண்பிகள் மூன்று பேர் சேர்ந்து சாப்பிட நேர, அதுவும் அந்த பெண்கள், ‘நான் சாப்பாட்டுல உப்பு கம்மிஎன்று சொன்னால் கூட, ஏதோ பெரிய ஜோக்கை சொன்ன மாதிரி சிரிப்பதையும், சேர்ந்து சாப்பிடும் போது நடக்கின்ற சாதாரணமான தகவல் பரிமாற்றங்களையும், சாப்பாட்டுப் பரிமாற்றங்களையும், பார்த்த வெளியே போய் சாப்பிடும் கும்பல் இதுக்காகத்தான் நீ எங்க கூட வந்து சாப்பிட மாட்டேங்கிறியாஎன்று பொறாமையுடன் கேட்க, கடலை மன்னன்என்ற எனது பட்டம், எனது அலுவலகங்களிலும் தொடர்ந்தது.

நான் சாப்பாட்டுக்கு கொடுக்கின்ற முக்கியத்துவம், ஒருவேளை நான் ஒரு கிராமத்திலிருந்து வந்தது ஒரு காரணமாக இருக்கலாம், கிராமங்களில் மக்கள் சாப்பிடுவதே ஒரு அழகுதான், அதுவும் கறி விருந்தில் எவ்வாறு சாப்பிட வேண்டும் என்று என் மாமா எனக்கு பாடமே எடுத்திருக்கிறார். அதுவும் ரசம் சாதத்தையும், தயிர் சாத்தையும் எனது அப்பா உறிஞ்சியும், சப்பியும் சாப்பிடுவதை நினைக்கையில் என்னையறியாமல் என் உதடுகள் புன்னகைக்கின்றன.

இப்படி நான் வாழ்ந்து கொண்டிருக்கையில், சென்னையில், நுங்கம்பாக்கத்திலும், தேனாம்பேட்டையிலும், அலுவலகங்களைக் கொண்டிருக்கின்ற ஒரு பெரிய கம்பெனியிலிருந்து எனக்கு இன்னொரு வேலைக்கான உத்தரவு வந்த போது, அந்த அலுவலகங்களின் பத்தாம் மாடி முழுதும்கேஃப்டீரியாக்காக ஒதுக்கி வைத்திருந்த ஒரே காரணத்திற்காக அந்த வேலையை நான் ஒத்துக் கொண்டேன். முதல் நாள் அலுவலகம் சென்றவுடன் அந்த அதிர்ச்சி செய்தி எனக்கு காத்திருந்தது, ஆம், எங்கள் பிரிவையும், இன்னும் ஒரு சிலரை மட்டும் ஓஎம்ஆர்ரோட்டில் உள்ள ஒரு கட்டிடத்திற்கு மாற்றி விட்டதாக சொன்னவுடன், கமல் ரேஞ்சுக்கு ஃபீல் பண்ண ஆரம்பித்து விட்டேன்.

வடபழனியிலருந்து, பக்கத்துலியே போயிட்டு வந்துடலாம் என்ற எனது ஆசையை அது களைத்தது மட்டுமல்ல, ஒன்பது மணிக்கு அலுவலகத்தில் இருக்க வேண்டுமென்றால், ஏழரைக்கே பஸ்ஸை பிடிக்கவேண்டும், அப்படியென்றல், எனது அலுவலகத்துக்கு நான் சாப்பாடு எடுத்துச் செல்ல முடியாது என்ற உண்மை என் முகத்தில் அறைய, கடுப்புடனே அலுவலகத்திற்கு சென்றேன். எப்படி இருந்தாலும், எட்டாம் மாடியில், எங்களுக்கென்று தனி கேஃப்டீரியா இருக்கிறது என்ற செய்தி தந்த புன்னகை, இரண்டாம் நாள் காலை ஒரு இட்லி சாப்பிட்டவுடன் பயமாக மாறியது. என்னுடைய ஒரு வாழ்வாதாரமே கேள்விக்குள்ளாகும் போது எனக்கு பயம் வருவது இயற்கைதானே?. அது எப்படிதான் காலைல எட்டரை மணிக்கு அப்படி ஜில்லுன்னு இட்லி தர முடியுதோ என்ற என் கேள்விக்கு விடை இன்னும் என்னால் கண்டு பிடிக்க முடியவில்லை. இங்கு போடப்பட்ட ஒரு தக்காளி சட்னி மாதிரி வேறு எங்கேயும் நான் சாப்பிட்டதில்லை. டிஃபன் அயிட்டமே இப்படி என்றால், சாப்பாடைப் பத்தி நான் சொல்ல வேண்டியதில்லை.

சரி, நம்ம விதி அவ்ளோதான்னு நினைச்சு சாப்பிடலாம்னு பார்த்தா, இட்லியும், வடையும் ஸ்பூனில் மட்டுமே சாப்பிடும் கூட்டத்தில் உட்கார்ந்து சாப்பிடுவது சிரமமாக இருந்தது. இட்லி பரவாயில்லை, சாப்பாடையும், சாம்பார், ரசம், தயிர் எல்லாத்தையும் ஸ்பூனிலேயெ கலக்கி, ஸ்பூனிலேயே சாப்பிடும் போது, என்னோட அப்பாவும், அம்மாவும், சாப்பாட்டை ஒழுங்கா பெசஞ்சு சாப்பிடத் தெரியாதா என்று திட்டியது என்னையறியாமல் ஞாபகத்திற்கு வந்தது. பத்தாதற்கு, வூட்ல ராமராஜன் படமும், சன் மியுசிக்கும் பாத்துட்டு, ‘கேஃப்டீரியாவில் மட்டும், எம் டிவியும், சிஎன்என்னும் மட்டுமே பார்க்கும் கூட்டத்தை கண்டால் வெறுப்பாய் இருந்தது.

இப்படியே நாட்கள் கடக்க, புது வருடம் மற்றவர்களுக்கு எப்படியோ, எனக்க ஆரம்பம் சற்று நல்லபடியாகவே ஆரம்பித்தது. ஆம், சக அலுவலர் ஒருவர் ஐந்து நிமிட நடையில் ஒரு ஆந்திரா மெஸ் இருக்கிறது என்று சொல்ல, உடனடியாக அங்கு சென்றோம். நெய்யும், பொடியும், கறீசும், பருப்பும் என்னை என் திருவல்லிக்கேணி வாழ்க்கைக்கே கொண்டு சென்றது. அதுவும் பொடியும், பருப்புமாக, மூணு ரவுண்டை முடித்துவிட்டு கையை சற்றே சப்பும் போது வந்த என் தந்தையின் ஞாபகம், என்னுள் மவுனப் புன்னகையைத் தோற்றுவித்தது. அது மட்டுமல்ல ஓஎம்ஆர்சாலையில் பல இடங்களில் இது போன்ற ஆந்திரா மெஸ்கள் இருப்பதாக என் நண்பன் சொன்ன போது நான் மவுனமாக சொன்னேன் வாழ்க ஆந்திரா மெஸ்கள், வாழ்க அவர்கள் ஊற்றும் பப்பு.

பின்குறிப்பு:

இயல்பாக நடந்ததோ, வேண்டுமென்றே நடந்ததோ, கல்லூரிக் காலத்தில் ஆரம்பித்த பெண்களுடன் சேர்ந்து உணவு உண்ணும் வழக்கம், இங்கே அடியோடு நொறுங்கிப் போனது. என்னுடைய அலுவலகப் பிரிவில் ஆட்களும் குறைவு, அதில் பெண்களே இல்லை என்பது ஒரு புறமிருக்க, 400 பேர் அமரக் கூடிய அலுவலகத்தில் இருக்கின்ற வெறும் 50 பேரில் எண்ணி 10 பெண்கள் இருந்தால் அதிகம், அதுவும் வேறு பிரிவில். இன்னும் மக்கள் வருவார்கள், இது தற்காலிக திட்டம்தான், கூடிய சீக்கிரம் நம்மை தேனாம்பேட்டைக்கு மாற்றி விடுவார்கள் என்று வெவ்வேறு செய்திகள் வந்தாலும், இன்னும் ஒரு வருடத்திற்கு இந்த நிலை தொடரும் என்றே தோன்றுகிறது.

ஆகையால், ஆண்களுடன் சேர்ந்து சாப்பிட்டால் எனக்கு ஒவ்வாமை வந்து விடும் காரணத்தினால், எனது அலுவலகத்திலோ அல்லது இதே கட்டிடத்திலுள்ள உள்ள மற்ற கம்பெனி பெண்களுடன் (மற்ற கம்பெனி பெண்கள் என்றால், அவங்க கேஃப்டீரியாவுக்கு போய் சாப்ட்டுக்கலாம்) சேர்ந்து உண்ணக் கூடிய தருணங்களை எதிர் நோக்கியபடி காத்துக் கொண்டிருக்கின்றேன்…….

பிரிவுகள்:நினைவுகள், மொக்கை குறிச்சொற்கள்:,

வார்த்தைகள்…..

வார்த்தைகளுக்கு இருக்கக் கூடிய சக்தி மிகப் பெரியதுதான். ஆறுதல் தரும் வார்த்தைகளாகட்டும், கோபத்தில் திட்டும் வார்த்தைகளாகட்டும், காதலில் கொஞ்சும் வார்த்தைகளாகட்டும், ஊக்கம் தரும் வார்த்தைகளாகட்டும் ஒரு சில வார்த்தைகள் நம்முள்ளோ () இந்த சமூகத்திலோ ஏற்படுத்தும் மாற்றங்கள் பிரமிக்க வைக்க கூடியவை.

2003 ஆம் வருடத்தில் நான் படித்த () அறிந்த இருவருடைய வார்த்தைகள் என்னை மிகவும் யோசிக்க வைத்தவை. என்னுள் சில மாற்றங்களை ஏற்படுத்தியவை. ஓரளவு என்னை ஊக்கமூட்டியவை என்று சொல்லலாம்.

உண்மையில் அந்த வார்த்தைகள் ஒன்றும் அவ்வளவு பிரபலமான வார்த்தைகள் அல்ல. அது ஒன்றும் பலரது கவனத்தையும் ஈர்த்திருக்க வில்லை. ஆனால் என்னைப் பொறுத்த வரை அந்த வார்த்தைகள் ஏற்படுத்திய விளைவுகள் சாதாரணமானதன்று.

முதல் நிகழ்ச்சிக்கு சொந்தக்காரர் முன்னாள் உலக அழகியும், பாலிவுட்டில் தற்போதைய முண்ணனி நடிகையும், அந்த காலகட்டத்தில் அப்போதுதான் பாலிவுட்டில் கால் பதித்திருந்த நடிகையுமான பிரியங்கா சோப்ரா.

என்ன காரணத்திலோ எனக்கு நடிகைகள் எல்லாம் முட்டாள்கள் என்ற எண்ணம் எனக்கு இருந்து வந்தது. இது காலங் காலமாக சினிமாவில் அவ்ர்கள் சித்தரிக்கப்பட்ட விதம் காரணமாக இருக்கலாம் () தொலைகாட்சியில் அவர்கள் கொடுக்கும் பேட்டி காரணமாக இருக்கலாம் (எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து எந்த ஒரு நடிகையின் பேட்டியை விரும்பியோ, காத்திருந்தோ பார்த்தது கிடையாது. அந்தளவு உப்பு சப்பில்லாமல் இருக்கும்).

வருடா வருடம் எகனாமிக்ஸ் டைம்ஸ் பத்திரிக்கை நடத்தும் அவார்டு ஃபார் கார்பரேட் எக்ஸலன்ஸ் (Award for Corporate Excelence)’ என்ற விழாவில் கலந்து கொண்டு பேச பிரியங்கா சோப்ராவிற்கும் அழைப்பு வந்திருந்தது என்று கேள்விப்பட்டவுடன் என்னுள் எழுந்த கேள்வி கார்பரேட் எக்ஸலன்ஸ் அவார்டு ஃபங்சனுக்கும் ஒரு நடிகைக்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும்?

தவிர இது போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் நடிகைகளின் புத்திசாலித்தனமோ () புரட்சிகர சிந்தனையோ பெரும்பாலும் அவர்களது ஆடைகளிலும், நகைகளிலும், இதர ஃபாஷன் சமாச்சாரங்களிலும் மட்டுமே வெளிப்படும். மேலும் இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு அவர்கள் அழைக்கப் படுவதே நிகழ்ச்சி சற்று கலர்ஃபுல்லாக இருக்க வேண்டும் என்பதற்காகவே போல் இருக்கும். அவர்களும் அதை செவ்வனே நிறைவேற்றவும் செய்வார்கள். பிரியங்கா சோப்ராவின் அழைப்பிற்கு பின்னும் வேறு காரணங்கள் இருந்திருக்க முடியாது.

ஆனால் பிரியங்கா சோப்ரா பேசிய பேச்சு எனது எண்ணத்தை மாற்றச் செய்தது.

 

அவருடைய பேச்சின் சாரம்சம்,

 

இன்று, இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக சீக்கிரம் எனது படப்பிடிப்பை முடித்துக் கொள்ளுமாறு தயாரிப்பாளரிடம் சொன்ன போது அவர் என்ன விசேஷம் என்று கேட்டார், அப்போதுதான் நான் இந்த விழாவைப் பற்றி சொன்னேன். அவர் சிரித்துக் கொண்டே கேட்டார், உனக்கும் இந்த விழாவிற்கும் என்ன சம்பந்தம்? இல்லை உனக்கும் இந்திய பொருளாதாரத்திற்கும்தான் என்ன சம்பந்தம்?. எனக்கு தெரிந்த ஒரே சம்பந்தம் உன்னுடைய பேரும் P.C., இந்த விழாவை தலைமை தாங்குறவரும் P.C. (.சிதம்பரம்). மற்றபடி வேறு ஒரு சம்பந்தமும் இல்லை என்றார்.

உண்மைதான், நாங்கள் எல்லாம் சினிமாக் கலைஞர்கள். எங்களுக்கும் கலைக்கும் சம்பந்தம் இருக்கலாம். ஆனால் எங்களுக்கும் இந்திய பொருளாதார முன்னேற்றத்திற்கும் அதிக சம்பந்தம் இல்லை என்பது உண்மைதான். ஆனால் எங்கள் துறையில் நாங்கள் பல விஷயங்களை சாதித்திருக்கிறோம். உலக சினிமாவிற்கு இணையாக இந்திய சினிமாவையும், அதில் தொழில் நுட்பத்தின் பங்கையும் பெருமளவு வளர்த்திருக்கிறோம். சத்யஜித்ரேயின் மூலமாக உலகிற்கு எங்களது இருப்பை தெரிவித்த நாங்கள், இன்று ஒரு இந்திய சினிமாவை (லகான்) ஆஸ்காருக்கு தகுதி பெறச் செய்திருக்கிறோம்.

சில வருடங்களுக்கு முன்பாக இன்னொரு இந்தியரின் படத்தை 7 ஆஸ்கார் விருதிற்காக தகுதி பெறச் செய்திருக்கிறோம். இப்படி எங்கள் துறையின் வளர்சியை உலகிற்கு கம்பீரமாக அறிவித்து வருகிறோம். ஆனால் எங்களுக்கும் இந்திய பொருளாதார முன்னேற்றத்திற்கும் அதிக சம்பந்தம் இல்லைதான்.

இன்று என் முன்னால் அமர்ந்துள்ள பலருடன் எனது பரிச்சயம் நியூஸ் பேப்பரின் மூலம் மட்டுமே. இவ்வளவு ஏன்?இதுவரை இந்த விழாவில் நான் யாருடனும் () என்னுடன் யாரும் கை குலுக்கவோ () பேசவோ இல்லை!

நாங்கள் சினிமாக் கலைஞர்கள். நாங்கள் சாதரண மனிதனின் கனவுகளையும், ஆசைகளையும் திரையில் காண்பிக்கிறோம். எங்களுக்கு அவனது சந்தோசம் மட்டுமே முக்கியம். அவனது கனவுகளை அவனுக்கு திரையில் காண்பிப்பதில் அவனை மகிழ்விக்கிறோம். ஆனால் நீங்கள் அவனது ஆசைகளையும் கனவுகளையும் அவனுக்கு நிஜமாக்கித் தருகிறீர்கள். திரையில் நாங்கள் காட்டும் மாற்றத்தை, நிஜத்தில் செயலாக்குகிறீர்கள். நாங்கள் எங்களது வளர்ச்சியை உலகிற்கு எடுத்துச் சொல்கிற வேளையில், நீங்கள் இந்தியாவின் வளர்ச்சியை உலகிற்கு எடுத்துச் செல்கிறீர்கள். திரையில் வேண்டுமானால் நாங்கள் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கலாம். ஆனால் நிஜ வாழ்வில் நீங்கள் ஹீரோவாக வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள்………”

அன்று அந்த பேச்சை முடித்து விட்டு அவர் கீழே இறங்கும் போது அவ்ரை முதல் ஆளாக நின்று எதிர்கொண்டது வேறு யாருமல்ல, .சிதம்பரம்தான், அது மட்டுமல்ல அவர் பின் ஏறக்குறைய எல்லா தொழிலதிபர்களும் வரிசையில் நின்றனர் பிரியங்கா சோப்ராவிடம் கை குலுக்குவதற்கும், அவருடன் பேசுவதற்கும்.

ஒரு கூட்டத்தையே தன் பக்கம் திருப்பும் ஆற்றலும், சொல்லாடலும் அனைவருக்கும் வந்து விடாது!. அதுவும் புத்திசாலிகளும், பொருளாதார வல்லுநர்களும் நிறைந்த அந்த சபையை தன் பக்கம் திருப்பினார் என்றால் அது ஒன்றும் சாதாரண விஷயம் இல்லை.

—————————————————————————­——————————————————————

முதலாமானவரின் விஷயத்தில் அவருடைய வார்த்தைகளுக்கான விளைவுகள் உடனடியாக தெரிந்தன. ஆனால் இரண்டாமவரின் விஷயத்தில் அவருடைய வார்த்தைகளை விட அதில் அடங்கிய செய்தியும், செய்தியைத் தொடர்ந்த நிகழ்சிகளின் விளைவுகளும் மிகவும் சக்தி வாய்ந்ததாக அமைந்தது. அதனுடைய விளைவுகள் கூட உடனடியாக தெரியவில்லை, ஜனவரி 10, 2008ல் தான் தெரிந்தது. ஆனால் தெரிந்த போது அதன் சக்தி வரலாற்றில் எழுதப்பட்டு விட்டது.

அந்த செய்திகளுக்கு சொந்தக்காரர் ஒன்றும் சாதாரணமானவரள்ள! அவர் ஜனவரி மாதத்தில் (2008) உலக அளவில் ஒரே சமயத்தில் 25க்கும் மேற்பட்ட பத்திரிக்கைகளில் இடம் பெற்றிருந்தார், கார்னகி மெடல் ஆஃப் பிலந்த்ராபி அவார்டுக்கு சொந்தக்காரர், 2007 ல் உலகின் மிக முக்கியமான மனிதர்கள் பட்டியலில் இடம் பெற்றிருந்தவர், 2007ல் இந்தியாவின் மிகப் பெரிய பிசினஸ் acquasition க்கு சொந்தக்காரர், இந்தியா டுடே பத்திரிக்கையின் இந்தியாவின் மிகச் சக்தி வாய்ந்த மனிதர்கள்பட்டியலில் தொடர்ந்து மூன்று வருடங்களாக முதல் இடத்திலும், தொடர்ந்து ஆறு வருடங்களாக முதல் மூன்று இடங்களுக்குள் இருப்பவர் ……

இப்படி ஒரு நீண்ட பட்டியலுக்கு சொந்தக்காரரான அவர், ஜனவரி 10, 2008ல் சொன்ன வார்த்தகள் ‘A Promise is a Promise’.

 

அந்த சரித்திரம் என்ன? அதனை படைக்க அவர்கள் எடுத்துக்கொண்ட முயற்சிகள் என்ன? ஒரு அசாத்தியம் எப்படி சாத்தியமாகிற்று? மிக விரைவில்!…..