தொகுப்பு

Archive for ஜூலை, 2009

சட்டென்று விழுந்தது நெஞ்சம் – நிறைவு

முதல் பாகத்திற்குச் செல்ல

சட்டென்று விழுந்தது நெஞ்சம் – சிறுகதை (பாகம் 1)

பாகம் – 2

சரி, இப்ப இந்த விஷயத்தை எப்படி எங்க அப்பாஅம்மாவுக்கு எப்படி போய் சொல்றது என்று முணுமுணுத்துக்கொண்ண்டே திரும்பியவனை நந்தினியின் குரல் தடுத்தது……

முரளி, நீங்க தப்பா நினைச்சுக்காட்டி உங்களை ஒண்ணு கேக்கலாமா?

சொல்லுங்க?

இல்ல, பொண்ணு பாக்கப் போனா என்ன பேசுறதுன்னு யோசிச்சேன்னு சொன்னீங்களே!!! அப்படி என்ன யோசிச்சீங்க???

இந்தக் கேள்வி முரளிக்கும் மெல்லிய ஆர்வத்தை ஏற்படுத்தியது…..ஏன் கேக்கறீங்க?

ஒரு கியுரியாசிட்டிதான், நீங்க வேற யோசிச்சிட்டு வந்தேனு சொன்னீங்களா, அதான்……

அவன் கேள்வியாக நோக்கியதை உணர்ந்ததாலோ என்னமோ மீண்டும் சொன்னாள், என்னைப் பொருத்த வரை நான் ஒண்ணுமே யோசிக்கலீங்க. இந்த கல்யாணம் வேணாம்னு சொல்லனுங்கிற ஒரே முடிவுல இருந்ததால வேறெதுவும் யோசிக்கலை!!! அதான் கேக்கறேன்…..

மெல்லிய வெட்கத்துடனும், சிரிப்புடனே முரளி சொன்னான், பெரிசால்லாம் ரொம்ப யோசிக்கலைங்க, அந்தப் பொண்ணுக்கு முழு விருப்பமாங்கிறதை தெரிஞ்சுக்கணும்….அவங்க கேரியர்ல என்ன குறிக்கோள், புத்தகம் படிக்கற பழக்கம் இருக்கா, அவங்களோட விருப்பங்கள், எதிர்பார்ப்புகள் என்னென்ன இதெல்லாம்……..என்று இழுத்தவன் சற்றே யோசனையுடன் சொன்னான், அப்புறம், கல்யாணம் உறுதியாயிடுச்சினா என்னை எப்பவும் பேர் சொல்லி, வா, போ ன்னு சொல்லிதான் கூப்பிடணும்னு கேட்டுக்குவேன்……

மெல்லிய சிரிப்புடன் கேட்டுக் கொண்டிருந்த நந்தினிக்கு இந்தப் பதில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது……பேர் சொல்லி, வா போ ன்னா????

ஆமாங்க, அலுவலகத்துல யார் யாரையோ ஜூனியர், சீனியர்னு வித்தியாசம் இல்லாம, நட்பா  பழகணுங்கிறதுக்காக எல்லாரும் பேர் சொல்லி கூப்பிட்டுக்கறோம்…..ஆனா வாழ்க்கைல காலம் முழுக்க இன்னொருத்தரோட தோழமையோட பழகவேண்டிய நிலைல, வெறும் வார்த்தைகள்ல மரியாதை வேணாம்னு தோணுது…..

முதன் முதலாக முரளி மீதான சுவராசியம் நந்தினிக்கு அதிகமாகியது…..

முரளியே பேசினான், உண்மையில இந்த பொண்ணு பாக்கறதெல்லாம் எனக்கு கொஞ்சம் வேடிக்கையாத்தாங்க இருக்கு….. பத்து நிமிஷத்துல ஒரு பொண்ணுகிட்ட பேசி என்னத்தைப் புரிஞ்சிக்க முடியும்னு தெரியலை……அதுவும் எந்தப் புக்லியும் வேற இந்த விஷயத்தைப் பத்தி போடுலியா அதான் ஒரே குழப்பமா இருக்கு………

இயல்பாக பேசிக்கொண்டிருந்தவன் மெல்ல ஜாலியாகவும் பேச ஆரம்பித்தது, நந்தினிக்கும் மகிழ்ச்சியாக இருந்தது……கிண்டலாகவே கேட்டாள், இவ்ளோ நம்பிக்கையில்லைன்னா எதுக்குங்க பொண்ணு பாக்க வரணும்??? பேசாம யாரையாவது லவ் பண்ணி கல்யாணம் பண்ணியிருக்கலாமே!!!!

லவ்வா!!! நானா!!! திகைப்புடனே கேட்டான் முரளி….

ஏன், நீங்க லவ் பண்ணக் கூடாதுன்னு ஏதாவது இருக்கா என்ன? கண்டிப்பா கோ எட் காலேஜ்லதான் படிச்சிருப்பீங்க, இப்ப ஆஃபிஸ்ல, வெளியன்னு ன்னு நீங்க லவ் பண்றதுக்கு நிறைய சான்ஸ் இருந்துருக்குமே???

தோணலைங்க……

என்ன தோணலை?

இல்லை, இதுவரைக்கும் யார்கிட்டயும் அந்த மாதிரி லவ் பண்ணனும்னு தோணலை!!! காலேஜ்ல, ஆஃபிஸ்லன்னு பொண்ணுங்க நிறைய பேரு இருக்காங்கதான்…..அதுக்காக எல்லார்கிட்டயும் சொல்லிட முடியுமா என்ன?……………அவள் ஜாலியாக பேசினதாலோ என்னமோ முரளியும் கேட்டான், இவ்ளோ பேசுறீங்களே நீங்க ஏன் யாரையும் லவ் பண்ணலை???

இப்போது திகைப்பது அவள் முறையாயிற்று…..நானா?

ஏன், நீங்க லவ் பண்ணக் கூடாதுன்னு ஏதாவது இருக்கா என்ன? நீங்களும் கண்டிப்பா கோ எட் காலேஜ்லதான் படிச்சிருப்பீங்க, இப்ப ஆஃபிஸ்ல, வெளியன்னு நீங்களும் லவ் பண்றதுக்கு நிறைய சான்ஸ் இருந்துருக்குமே??? அவள் கேட்ட பாணியிலேயே முரளி கேட்டதில் நந்தினிக்கும் சிரிப்பு வந்தது…………சீரியசாத்தாங்க கேக்கறேன், ஒரு வேளை நீங்க லவ் பண்ணியிருந்தா இப்ப நீங்க கவலைப்படாம இருந்திருக்கலாமே!!!

மெல்ல யோசித்தவாறே சொன்னாள், லவ் பண்ணனுமேன்னு பண்ண முடியுமா என்ன???

என்னைப் பொறுத்த வரை லவ்வுங்கிறதை நட்போட அடுத்த கட்டமாத்தான் பார்க்கறேன், முழுசா புரிஞ்சுக்கலைன்னாலும், அட்லீஸ்ட் ஒரு பேசிக் அண்டர்ஸ்டாண்டிங்னாச்சும் வேணும்லியா…….. சோ, அப்படி யாரும், எதுவும் எனக்கும் இதுவரைக்கும் தோணலைங்க……….ரொம்ப சீரியசா பேசுவது போல் உணர்ந்ததாலோ என்னமோ திடீரென்று நிமிர்ந்து கிண்டலாகவேச் சொன்னாள்., நம்மூரில ஒரு பொண்ணே முதல்ல போய் லவ் பண்றேன்னு சொன்னாலே ஏதாவது சொல்லுவாங்க…….தவிர என்கிட்டயும் யாரும் வந்து லவ் பண்றேன்னு சொல்லலீங்க…….

ஓகோ, அப்ப இனிமே யாராவது வந்து சொன்னா யோசிப்பீங்களோ????

தோளைக் குலுக்கியவாறே அலட்சியமாகச் சொன்னாள், ம்ம்ம்ம், இனிமே யாராவது சொன்னா யோசிப்பே…..

இடைமறித்தார் போல் அவன் குரல் கேட்டது., “I Love You”

சில நொடிகள் செயலற்றுப் போனாள், என்ன, என்ன சொன்னீங்க???

அழுத்தமாகவே பதில் சொன்னான் முரளி ”I     Love     You”

என்னவென்று சொல்ல முடியாத ஒரு உணர்வு அவளை ஆட்கொண்டது, அதையும் மீறி எங்கோ பார்த்தவாறே கேட்டாள், ஏன்???

எனக்கு உங்களைப் புடிச்சுதான் இங்கியே வந்தேன் நந்தினி!!! உங்ககிட்ட பேசினதுக்கப்புறம் இன்னும் அதிகமா எனக்கு புடிச்சிருக்கு!!!! தவிர இதுக்கு மேல நான் யரையாவது பாத்து லவ் பண்ணி கல்யாணம் பண்றதெல்லாம் வேலைக்காவாதுங்க!!!! கிண்டலாக பேசியவன், அவள் சீரியசாக அவளைப் பார்ப்பதை உணர்ந்ததால், சீரியசாத்தாங்க சொல்றேன்…….நீங்க யாரும் ”I Love You”  சொன்னதில்லைன்னவுடனே, ஏன்னு தெரியலை உடனே சொல்லணும்னு தோணுச்சு, சொல்லிட்டேன்………

மவுனத்தை கலைத்தபடி அவனே சொன்னான், இதைவிட வேறென்னங்க எதிர்பார்க்க முடியும் ஒரு பொண்ணுகிட்ட….. உங்க அப்பாஅம்மாவை கடைசி வரை பாத்துக்கணுங்கறதுக்காக கல்யாணத்தை வேணாம்னு சொன்ன அன்பு, என்கிட்ட நேரா சொன்ன தைரியம், வெட்கம் கலந்த கோபம், கிண்டல், காதல்ல இருந்து எல்லா விஷயங்களையும் பேசக் கூடிய தெளிவு இப்படி எத்தனையோ சொல்லலாம்…….

முகத்தில் எந்த உணர்ச்சியும் வெளிப்பட்டுவிடாமலேயே நந்தினி கேட்டாள்…பத்து நிமிஷத்துல என்ன புரிஞ்சிக்க முடியும்னு சொன்னீங்க, இப்ப ரொம்பப் புரிஞ்சவர் மாதிரி பேசுறீங்க???

உங்களை முழுசா புரிஞ்சிகிட்டேன்னு நான் சொல்லலைங்க, ஆனா உங்களை என்னால புரிஞ்சிக்க முடியும்னு சொல்றேன்………….பதில் இன்னும் சொல்லலையே???

சி(ப)ல நொடிகள் யோசித்தவள், மெல்லிய குரலில் சொன்னால் ‘ம்’

ஒற்றை எழுத்து அதுவும் ஒரு ஒற்றெழுத்து தன் வாழ்க்கைக்கே பொருள் தரக்கூடும் என்பதை அக்கணம் முரளி உணர்ந்தான்……. மிகுந்த சந்தோஷத்துடனே கேட்டான், எப்படி, ஏன்????

தெரியலீங்க, வரும்போது வேணாம்னு சொல்லத்தான் வந்தேன், ஆனா எனக்காக நீங்க பேசுனது, புரிஞ்சுக்க முயற்சி செஞ்சது, உண்மையா இருந்தது எல்லாம் என்னை யோசிக்க வெச்சுது…………..

சற்றே வெட்கத்துடனும், கிண்டலாகவும் எங்கோ பார்த்தபடியே சொன்னாள், இதைவிட வேறென்னங்க எதிர்ப்பார்க்க முடியும் ஒரு ஆண்கிட்ட…..என்னை விட என் உணர்வுகளை மதிக்கிற நேசம், காலம் முழுக்க நட்பைத் தருவேங்கிற உறுதி, கிண்டலுக்கு நடுவே இருக்கற மென்மை இப்படி எத்தனையோச் சொல்லலாமே…………

முதன்முறையாக வாய்விட்டுச் சிரித்த முரளி கிண்டலாகவே கேட்டான், அப்ப உன் அப்பாஅம்மா நம்ம கூட இருக்க நான் ஒத்துக்குவேங்கற நம்பிக்கை வந்துருச்சா???

சற்றே யோசனையுடன் சொன்னாள், உங்க மேல முழு நம்பிக்கை வந்துருச்சுன்னு சொல்ல முடியாது, ஆனா உங்களை எப்படியும் ஒத்துக்க வைக்க முடியும்னு தோணுது…..

சிரிப்போடவே சொன்னான் முரளி, நம்ம வாழ்க்கை சந்தோஷமா இருக்குமா என்னான்னு எனக்குத் தெரியலை, ஆனா ரொம்ப சுவராசியமா இருக்கும்னு தோணுது!!!

ஏன்?

இப்படி பதிலுக்குப் பதில் பேசுறியே!!!!

நந்தினியும் தைரியாமகச் சொன்னாள், போகப் போகப் பாருங்க, ரொம்பவே பதில் வரும்.
பாருங்களா????

ஒரு கணம் யோசித்த நந்தினியின் முகம் சட்டெனப் பளிச்சிட்டது, புன்னகையுடன் சொன்னாள் போகப் போக பாரு முரளி, ரொம்பவே பதில் வரும்….

சற்றே தலையைச் சாய்த்தவாறே முரளி கேட்டான், அப்ப கல்யாணத்துக்கு ஓகே ன்னு வீட்ல சொல்லிடலாமா???

நந்தினியும் கிண்டலாகத் தலையை சாய்த்தவறேச் சொன்னாள் “சொல்லிடலாமே”

ஏதேது அம்மையார் போற போக்கைப் பாத்தா என்னை விட ஸ்பீடா இருப்பீங்க போலிருக்கே என்று சொல்லிக்கொண்டே திரும்பியவனை நந்தினி கேட்டாள், முரளி நாம வேணா ஒண்ணா சேந்து ஒரு புக்கை போட்டுறலாமா???

எந்த புக்கு!!!!

பொண்ணு பாக்கப்போறப்ப என்ன பேசணும்னு!!!!!

ஹா ஹா ஹா!!!!

பிரிவுகள்:சிறுகதை, Uncategorized குறிச்சொற்கள்:

சட்டென்று விழுந்தது நெஞ்சம் – சிறுகதை (பாகம் 1)

எப்படிச் சொல்றதுன்னே தெரியலை, எனக்கு இந்தக் கல்யாணத்துல இஷ்டமில்லை! ஐ யாம் சாரி,…… ஐ யாம் ரியல்லி சாரி!!!

பெண் பார்க்கச் சென்ற இடத்தில் எதேதோ கேள்விகளையும், விஷயங்களையும் எதிர்பார்த்திருந்தாலும் சத்தியமாக இதை முரளி எதிர்பார்த்திருக்கவில்லை. அதுவும் பெரியவர்களுக்கெல்லாம் முதல்நிலையில் ஓரளவு திருப்தியாகப் பட்டவுடன், பெண்ணுடன் கொஞ்சம் தனியாகப் பேசிட்டு வா என்று அனுப்புகையில், என்ன பேசுவது, எப்படி ஆரம்பிப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கையில், டக்கென்று நந்தினியே இப்படிச் சொன்னது அவனை மிகுந்த ஆச்சரியப்படுத்தியது மட்டுமில்லாமல் சற்றே சுவராசியத்தையும் ஏற்படுத்தியது!!!

சில நொடி நேர மவுனத்திற்குப் பின்தான் முரளி கேட்டான், என்ன காரணம்னு நான் தெரிஞ்சுக்கலாமா?

நந்தினியும் சற்றே சங்கடத்துடனும், குழப்பமாகவும் இருந்ததை அவள் முகமே காட்டியது…இதைப் பற்றி அதிகம் பேச விரும்பாதவள் போலதான் அவளும் கேட்டாள், கண்டிப்பா சொல்லணுமா என்று!

ஆமாங்க, கண்டிப்பாச் சொல்லணும், தவிரச் சொல்ல வேண்டிய கடமையும் உங்களுக்கு இருக்கு!

மெல்லிய ஆச்சரியத்துடனே நந்தினி கேட்டாள்? கடமையா, எப்படி?

சொல்றேன், அதுக்கு முன்னாடி நீங்க தப்பா நினைக்காட்டி ஒரு சின்ன கேள்வி, நீங்க யாரையாவது லவ் பண்றீங்களா?

இல்லை….

ம்ம்ம்ம், நினைச்சேன்!!!

தான் காதலித்திருக்க முடியாதுன்னு இவன் எப்படி சொல்லுறான் என்கிற மெல்லிய திகைப்புடனும், சற்றே கோபத்துடனும் கேட்டாள், இன்னும் கடமை என்னான்னு சொல்லவே இல்லை……

இல்லைங்க, இந்தப் பொண்ணு பாக்கற விஷயம் ஒண்ணும் உங்களுக்குத் தெரியாம நடந்திருக்க வாய்ப்பில்லை….பெரியவங்கள்லாம் பேசி, ஃபோட்டோ பாத்து, மத்த எல்லாருக்கும் ஓரளவு பிடிச்சுப் போயிதான் இந்த விஷயமே நடக்குது, அப்படி இருக்கறப்ப வேணம்னா, நீங்க முன்னமே சொல்லியிருக்க வாய்ப்புகள் இருந்தது, ஆனா சொல்லலை………

உண்மைதான் என்பதுபோல் பார்த்துக் கொண்டிருந்த நந்தினியைப் பார்த்தபடியே சொன்னான், நீங்க வேலைக்குப் போய்கிட்டிருக்கீங்க நந்தினி, ஓரளவு சுய முடிவுகள் எடுக்கற சுதந்திரம் இருந்திருக்கும், நீங்களும் யாரையும் காதலிக்கலைன்னு வேற சொல்றீங்க, அப்படி இருக்கறப்ப எல்லாரும் ஏறக்குறைய முடிவாயிருச்சின்னு நினைச்சிட்டிருக்கறப்ப வேண்டாம்னு சொல்றீங்கன்னா, என்ன காரணம்னு தெரியலைன்னா……….எல்லாத்துக்கும் மேல வீட்ல வேற நான் பதில் சொல்லணுங்க, என்னாடா தனியா போய் பேசிட்டு வந்தவுடனே பொண்ணு கல்யாணம் வேணாங்குதுன்னு கேட்டாங்கன்னா என்ன பதில் சொல்றது…….

கொஞ்சம் லிமிட் தாண்டுகிறானோ என்கிற கோபத்தில் டக்கென்று நிமிர்ந்து பார்க்கையில், அவன் புன்சிரிப்போடு இருப்பதைக் கண்டு, கிண்டலாகத்தான் பேசுறான் என்பதை  உணர்ந்தாள். முரளி சொன்னதெல்லாம் உண்மையாயிருந்தாலும், இவன் கிண்டலாக பேசும் போது தான் மட்டும் பேசக் கூடாதா என்று வேண்டுமென்றேதான் நந்தினியும் கேட்டாள், எத்தனையோ ஆம்பளைங்க, நிறைய பொண்ணுங்களை நேர்ல போயி பாத்துட்டு கண்ணை மூடிட்டு வேணாம்னு சொல்றாங்க, இப்ப ஒரு பொண்ணு கல்யாணம் வேணாம்னு சொன்னா மட்டும் காரணம் சொல்றது கடமைன்னு சொல்லுறீங்க, இது என்ன நியாயம்? தவிர வேலைக்குப் போறவங்க மட்டும்தான் சுயமா முடிவெடுப்பாங்களா, வேலைக்கு போகாதவங்களுக்கு முடிவெடுக்கத் தெரியாதா???

மென் சிரிப்போடு நந்தினி பேசியதாலோ என்னமோ, முரளி அவள் வேண்டுமென்றேதான் பேசுகிறாள் என்பதை உணர்ந்தவன் போலே சொன்னான், ஏங்க இது பெண்ணீயம் பேச வேண்டிய நேரம் இல்லீங்க.

வேலைக்குப் போறீங்கங்கறதுனால, உங்களை கேட்டுட்டுதான் எல்லாமே பண்ணியிருப்பாங்கங்கிறதைத்தான் அப்படிச் சொன்னேன். என்னைப் பொறுத்த வரை நான் ஒரு பொண்ணைப் பாக்கப் போறதா இருந்தா  சம்மதம் சொல்றதுக்காகத்தான்னு ஒரு கொள்கையே வெச்சுருக்கேன்…. யார் யாரோ பண்ண தப்புக்கு நான் பெண்ணீயத்துக்கு கணக்கு சொல்ல வேண்டியிருக்குன்னு கிண்டலாகச் சொன்னவன் ஏதோ ஞாபகம் வந்தவன் போல் மெலிதாகச் சிரித்துக் கொண்டான்…..

அவனது பதில் திருப்தியை தந்தாலும் இந்த சமயத்துல சிரிச்சிட்டிருக்கானே என்கிற எண்ணத்தில்தான் நந்தினியும் கேட்டாள், எதுக்கு சிரிக்கறீங்க???

இல்லீங்க வேற ஒண்ணு நினைச்சேன், அதான்…….இதை விடுங்க, நீங்க சொல்லுங்க.

நான் மட்டும் காரணம் சொல்லணும்னு கட்டாயப்படுத்தினீங்க? இப்ப உங்களைக் காரணம் கேட்டா சொல்ல மாட்டேங்கறீங்க???

ஏங்க, நீங்க காரணம் சொல்ல வேண்டியது நாம ரெண்டு பேரும் மட்டுமில்லாம நம்ம குடும்பமே சம்பந்தப்பட்ட விஷயம், ஆனா இது அப்படியில்லை…….சரி இருந்தாலும் சொல்றேன், ஆக்சுவலா, எனக்கு இந்த புக்ஸ் படிக்கற பழக்கம் கொஞ்சம் அதிகம்…. நானும் கதை புக்லருந்து செல்ஃப் டெவெலப்மெண்ட், மேனேஜ்மெண்ட் புக்ஸ் வரை ஓரளவு படிச்சிருக்கேன், ஆனா எந்தப் புக்குலியுமே இந்தப் பொண்ணு பாக்கப் போறப்ப என்ன பேசணும், எப்படி பேசணும்னு இல்லியேன்னு உங்களைப் பாக்க வர்றதுக்கு முன்னாடி யோசிச்சிருந்தேன்…..அதுக்கே புக்கில்லைங்கறப்ப, பொன்ணு பாக்கப் போன இடத்துல, ஒரு பொன்ணு கல்யாணத்துல இஷடமில்லைன்னு சொன்னா என்ன பண்ணனுங்கிறது எப்படி இருக்கப்போவுதுன்னு நினைச்சேன், அதான் சிரிப்பு வந்துது……

வேறெதையோ எதிர்பார்த்திருந்தாலும், இது போன்றதொரு பதிலை அவள் எதிர்பார்த்திருக்கவில்லை என்பதை அவள் சிரிப்பும் காட்டியது. அது மட்டுமில்லாமல் அமர்த்தலாய் இருந்தாலும் தானும் தடுமாறிகிட்டுத்தான் இருக்கேன்னு முரளி ஒத்துக்கொண்டது நந்தினிக்கு அர்த்தமற்ற ஒரு மகிழ்ச்சியையும் தந்தது….. அவளுடைய யோசனையை முரளியின் குரல் தடுத்தது.

என்னுடைய ஊகம் சரியா இருந்தா, நீங்க இந்த முடிவை எடுத்துட்டுத்தான் இன்னிக்கு இந்த பொண்ணு பாக்கற இடத்துக்கே வந்திருக்கீங்களோன்னு தோணுது, சரியா? என்றான் முரளி

மெல்லிய ஆச்சரியத்துடனே நந்தினி பதிலளித்தாள், நீங்க சொன்னது சரிதான்….

இதுவரை ஏற்பட்ட உரையாடல்கள் அவளுள்ளும் ஒரு தோழமையுணர்வை ஏற்படுத்தியிருக்க அவளும் என்ன காரணம் என்பதைச் சொல்ல ஆரம்பித்தாள்……..

உங்களுக்கே தெரியும், நான், எங்க அக்கா ரெண்டு பேருதான் எங்க அப்பா அம்மாவுக்கு…….எனக்கும் கல்யாணம் ஆனதுக்கப்புறம் அவங்களோட நிலை என்னன்னு எனக்கு தெரியலை. என்னதான் முன்னேறிட்டோம்னு நாம சொல்லிகிட்டாலும் இன்னமும் கல்யாணத்துக்கப்புறம் அவங்களும் பொண்ணோட சேர்ந்து இருக்கணுங்கிறதிலெல்லாம் பெரிய அளவுல மாற்றம் வர்லைன்னுதான் தோணுது….அவங்கவங்க அப்பாஅம்மாவை பாத்துகிறதுக்கு கூட கணவர், அவங்க குடும்பம், சமூகம்னு நிறைய பேரோட அனுமதியை ஒரு பொண்ணு எதிர்பார்க்க வேண்டியிருக்கு……அதுனால, இந்த விஷயத்துல நான் ஒரு தெளிவு கிடைக்கிற வரைக்கும் நான் கல்யாணம் பண்ணிக்க வேண்டாம்னு நினைக்கறேன், அதான்……..

இந்த முடிவை எப்ப எடுத்தீங்க நந்தினி? இதுதான் உங்க முடிவுன்னா பொண்ணு பாக்க வர்றோம்னு ஒரு வாரத்துக்கு முன்னாடி சொன்னப்பவே வேணாம்னு சொல்லியிருக்கலாமே, இப்பச் சொல்றீங்கன்னா ஒருவேளை உங்க அப்பாஅம்மாவை பாத்துக்கறதுக்கோ இல்ல நம்ம கூட இருக்கறதுக்கோ நான் அனுமதிக்க மாட்டேன்னு தோணுதா???

அய்யய்யோ, அப்டியெல்லாம் இல்லை…. நான் இந்த முடிவையே ரெண்டு நாள் முன்னாடிதான் எடுத்தேன்……..

ம்ம்ம்ம், இந்த முடிவு உங்க அப்பா அம்மாவுக்கு தெரியுமா???

தெரியாது….

திடீர்னு இந்த முடிவை எடுக்கக் காரணம் என்னான்னு தெரிஞ்சுக்கலாமா?

அது…..

பாருங்க நந்தினி, இது எனக்குத் தேவையில்லாத விஷயமா இருக்கலாம்…. ஆனா திடீர்னு நீங்க இந்த முடிவை எடுத்ததுனால, ஒருவேளை மறைமுகமா நான் இதுக்கு காரணமா இருப்பேனோன்னு எனக்குள்ள ஒரு உறுத்தல் அதான்…… அட்லீஸ்ட், என்ன காரணம்னு முழுசா தெரிஞ்சிகிட்டா என்னால முடிஞ்ச ஹெல்ப் எதாவாது சொல்லுவேன், எனக்கும் எங்க வீட்ல பதில் சொல்ல வசதியா இருக்கும்….

இல்லையில்லை…..உங்களால இந்த முடிவை நான் எடுக்கலை, இன்னும் சொல்லப் போனா உங்களைப் பத்தி முழுசா எதுவும் எனக்குத் தெரியாது……….பொண்ணு பாக்க வர்றோம்னு சொன்னப்பல்லாம் இதைப்பத்தியே நான் நினைச்சுப்பார்க்கலை, அப்போ எனக்கும் ஓகேவாத்தான் இருந்துது……..ஆனா, ரெண்டு நாள் முன்னாடி அக்காகிட்ட பேசினப்ப, கல்யாணம் முடிவாயிடுச்சின்னா அப்பாஅம்மாவுக்குத்தான் ரொம்ப கஷ்டமா இருக்கும்…. உன் கூட கொஞ்ச நாள், என் கூட கொஞ்ச நாள்னு இருக்கட்டுங்கா சொன்னப்பதான் அக்கா அந்த உண்மையைச் சொன்னாங்க……

என்ன உண்மை?

இல்லை, அவங்க வீட்ல இருக்கற பெரியவங்க அப்படி ரொம்ப நாளு அவங்க கூட இருக்க  ஒத்துக்கமாட்டாங்களாம்……..இத்தனைக்கும் கல்யாணத்துக்கு முன்னாடியே மாமாகிட்ட பேசி ஒப்புதல் வாங்கிட்டுதான் கல்யாணம் பண்ணிகிட்டாங்க…….. ஆனா இப்ப மாமாவால அவங்க அப்பாஅம்மாவை எதிர்த்து ஏதும் பண்ண முடியாதாம்…….அக்கா சொன்னதுக்கப்புறம்தான் இதைப்பத்தியே நான் யோசிக்க ஆரம்பிச்சேன்………அதான், இந்த விஷயத்துல எனக்கு ஒரு தெளிவு கிடைச்சதுக்கப்புறம் கல்யாணம்னு யோசிக்கறேன்…..

இதுக்காக கல்யாணம் வேணாம்னு சொன்னா உங்க வீட்லியே ஒத்துக்குவாங்களா???

மாட்டாங்க, அவங்களை எப்படி சமாளிக்கப் போறேன்னு எனக்கே தெரியலை….ஆனா அவங்களை பாத்துக்க  முடியலியேன்னு பின்னாடி வருத்தப்பட்டுகிட்டு இருக்கறதுக்கு, இப்ப அவங்க கோவிச்சுகிட்டாலும் பராவாயில்லைன்னு சமாளிக்க வேண்டியதுதான்…..

உங்க மாமா வீட்ல ஒத்துக்கலைங்கிறதுக்காக எல்லாருமே அப்படித்தான்னு ஏன் முடிவு பண்றீங்க……

இல்லை, அது…….

ஓஹோ, ஏற்கனவே இந்த விஷயத்துல அடிபட்டிருக்கறதுனால் யார் மேலயும் நம்பிக்கை வர்லை, அப்டித்தானே???

………………………..

சங்கடத்துடன் மவுனாமாய் இருந்த நந்தினியை பார்த்தவாறே முரளியும் வேறுவழியில்லாம சொன்னான்……இவ்ளோ தெளிவா நீங்க இருக்கறப்ப, நான் அப்படியில்லைன்னு நான் சொல்ற சுயநிலை விளக்கங்கள் எந்தளவுக்கு உங்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும்னு தெரியலை………

சில நொடிகள் அங்கு கனத்த மவுனம் நிலவியது…….மவுனத்தைக் கலைக்க வேண்டுமென்பதற்காகவே நந்தினி சற்று வருத்தத்துடனே சொன்னாள்……நீங்க கொஞ்சம் எதிர்பார்ப்போட வந்திருப்பீங்கன்னு தோணுது, ஐ யாம் ரியலி சாரி……

இதுவரை இருந்த தோழமையுணர்வு மறைந்து அங்கு ஒரு இறுக்கமான சூழல் உருவானதாலோ என்னமோ முரளி மெல்லிய சிரிப்புடனே பேசினான்…..எதிர்பார்ப்புன்னு பெருசா கிடையாது……ஒரு பொண்ணைப் பாக்கப் போனா சம்மதம் சொல்லணுங்கிறதுக்காகத்தான்னு நினைச்சு வந்தேன், உங்க பக்கம்ல இருந்து வந்த பதில்களும் இந்த சம்பந்தம் ஏறக்குறைய முடிவு  செய்யப்பட்ட மாதிரி இருந்துதா, அதனால வீட்ல எல்லாரும் இந்த சம்பந்தம்தான்னு ஏறக்குறை முடிவு பண்ணியிருந்தாங்க, அதுனாலியே உங்ககிட்ட தனியா பேசும்போது என்ன பேசுறதுன்னு யோசிச்சிட்டு வந்தேன், ஆனா அதுக்கு இப்ப அவசியமில்லா போச்சு…..

சரி, இப்ப இந்த விஷயத்தை எப்படி எங்க அப்பாஅம்மாவுக்கு எப்படி போய் சொல்றது என்று முணுமுணுத்துக்கொண்ண்டே திரும்பியவனை நந்தினியின் குரல் தடுத்தது……

பிரிவுகள்:சிறுகதை குறிச்சொற்கள்:

நியுயார்க் – திரைப்பார்வை (இந்தி)

தீவிரவாதத்தைப் பற்றிய அதிர்ச்சியை பலமாக பதிவு செய்யும் இன்னொரு படம் இந்த நியுயார்க்….ஏற்கனவே மும்பை மேரி ஜான், வெட்னஸ்டே போன்ற படங்கள் தீவிரவாதத்தின் வெவ்வேறு பரிணமங்களை படமாக்கியுள்ள நிலையில் வெளிவந்துள்ள படம்தான் இது!!!

இரட்டைக் கோபுரங்கள் தாக்குதல், மும்பை ரயில் நிலையம், தாஜ் ஹோட்டல் தாக்குதல் என்று சம்பவங்கள் நிறைந்த இந்த உலகில் தீவிரவாததின் இன்னொரு முகத்தை துகிலுரித்துக் காட்டியிருக்கிறது. மங்கிய மாலைப்பொழுதொன்றில் மலர்கள் சொறிய ஒரு கவிதையைப் போல் ஆரம்பிக்கும் இந்தத் திரைப்படம், இறுதியில் விருட்சம் விட்டு ஒரு பூந்தோட்டமாய் மலர்ந்திருக்கிறது. திரைக்கதையே மிகச் சிறப்பாக அமைந்திருக்கையில் நடிப்பு, இசை, கேமிரா என்று எல்லா துறையிலிருந்தும் சிறப்பான ஒத்துழைப்பு கிடைக்கும் போது எப்படிப்பட்ட படமாக மாற முடியும் என்பதற்கு இப்படம் ஒரு சாட்சி!!! எழுதி வைத்துக் கொள்ளுங்கள் இந்தப்படம் இவ்வருடத்தில் வெளிவந்த இந்தியப் படங்களிலேயே மிகச்சிறந்த இடத்தைப் பெறும்…….

ப்படி எல்லாம் ஒரு திரைப்பார்வை எழுதணும்னு எனக்கு மட்டும் ஆசையா இருக்காதா??? ஆனா மக்கா, ஏமாத்திட்டானுங்க மக்கா…..சும்மா ரெண்டரை மணி நேரம் கதறக் கதற ரவுண்டு கட்டி அடிச்சானுங்க தியேட்டருல….

ஒரு படத்துக்கு திரைப்பார்வை இருந்துச்சுனா, முடிஞ்ச வரை கதையை சொல்லாம இருக்கணும்னுதான் நினைப்பேன், ஆனா இந்தப் படத்துக்கு முழுக்கதையையும் சொல்லி எழுதலாம்னா கூட எனக்கு கதை கிடைக்க மாட்டேங்குதே அதுக்கு நான் என்ன பண்றது???

படம் ஆரம்பிச்சவுடனே, திடீர்னு ஒருத்தனைப் புடிக்கறாங்க, முடிஞ்சவரை அவனை டார்ச்சர் பண்றேன்னு சொல்லி நம்மளை டார்ச்சர் பண்றாங்க. கடைசியாப் பாத்தா அடிச்சது FBI யாம், அடி வாங்குனது, தீவிரவாதியா இருக்கலாம்னு சந்தேகிக்கறாங்களாம்….அந்த நடிகர்தான் நிதின் முகேஷ்

அவரை சந்தேகப் படக்காரணம், அவரு முன்னாடி படிச்ச காலேஜ்ல நிதினோட ஃபிரண்டா இருந்த ஜான் ஆபிரகாம் பெரிய தீவிரவாதியாம், அதுனாலதான் நிதினையும்  சந்தேகப்பட்டாங்களாம்!!!! இப்ப நிதின் தீவிரவாதி இல்லைங்கறது நிரூபணம் ஆனாலும், திரும்பி நிதின், ஜான் ஆபிரகாம் கூட சேர்ந்து பழகி அவரு உண்மையாலுமே தீவிரவாதிதானா இல்லை திடீர்னு ஜீப்புல ஏறிகிட்டு நானும் ரவுடிதான்னு உதார் உட்டுகிட்டு இருக்காரான்னு போலீசுக்கு சாரி FBI க்கு துப்பு தரணுமாம்….இதுக்கு நடுவுல அப்பவே நிதினுக்கும், ஜான் ஆபிரகாமுக்கும் ஃபிரண்டா இருந்த கேத்ரீனா கைஃப்தான், இப்ப ஜான் ஆபிரகாமோட மனைவியாம்……. இப்படி நட்புக்கும், கடமைக்கும் இடையே நடக்கிற ஒரு பாசப் போராட்டந்தான் கதையாம்…..உஸ்ஸ்ஸ்ஸ் அப்பா, இப்பவே கண்ணைக் கட்டுதே!!!!

இப்படியே போயிட்டிருக்கிற கதையில ஜான் ஆபிரகாம் உண்மையிலியே தீவிரவாதிதான்னு தெரிய வருது, அதுக்கு காரணம் என்னான்னா, செப்டம்பர் 11 பிரச்சனைக்கப்புறம் சந்தேகத்தின் பேருல இவரைப் புடிச்சு கண்ணாபின்னான்னு டார்ச்சர் பண்ணதுனால அவரு இப்படி ஆகிட்டாராம்…..இதையெல்லாம் நிதின் மூலமா கண்டுபிடிக்கிற FBI ஆஃபிசர்தான் இர்ஃபான்கான்…..

New-york
என்னதான் ஒரு நல்ல கருத்து சொல்றேன்னு படம் எடுக்கறேன்னா கூட எப்படி எடுத்தாலும் பாத்துற முடியுமா??? அதுவும் முழு படத்தையும் ஸ்லோ மோஷன்ல எடுத்தா எப்படி பாக்கறது???

எனக்கு தெரிஞ்சு FBIயை இவ்ளோ காமெடியா யாரும் காட்டியிருக்க மாட்டாங்க, அதுவும் க்ளைமாக்ஸ் காட்சில அவங்களை காமிச்சிருக்கற விதம் செம காமெடி!!! ஐயா சாமி நீங்க FBIயைத்தான் ஒழுங்கா காமிக்கலை, இந்த தீவிரவாதிகளைனாச்சும் கொஞ்சம் ஒழுங்கா காமிச்சிருக்கலாம்ல??? அவங்களுக்குன்னு ஒரு மட்டு மரியாதை வேணாம்??? அவனவன் லோக்கல் தாதாக்களையே என்னமோ இண்டர்நேஷனல் கிரிமினல் ரேஞ்சுக்கு பில்டப் கொடுத்து படம் எடுத்துகிட்டு இருக்காங்க, ஆனா இந்தப் படத்துல என்னான்னா தீவிரவாதிகளை என்னமோ லோக்கல் ரவுடியை விட காமெடியா காட்டியிருக்காங்க!!

அமெரிக்காவுக்கு படிக்கப் போனாங்கனு கதையை ஆரம்பிச்சிட்டு, ஒருத்தன் கூட படிக்கற மாதிரி காமிக்கவே மாட்டேங்கிறாங்க, எல்லாரும் ஒண்ணா விளையாடிட்டிருக்காங்க, இல்லாட்டி பார்ட்டிக்கு போறாங்க அதுவும் இல்லாட்டி எல்லாரும் சேந்து பாட்டு பாடுறாங்க!!!

கேத்ரினா கைஃப், ஜான் ஆபிரகாம், நிதின் இவங்கள்லாம் யாரு, இவங்களுக்கெல்லாம் அப்பாஅம்மாவே இல்லியா, இல்லை எல்லாரும் டெஸ்ட் டியூப் பேபியா ஒண்ணும் புரிய மாட்டேங்குது படத்துல!!! ஒருத்தருக்கும் குடும்பம், அப்பா அம்மா, சொந்தம்னு யாருமே இல்லை!!!

படத்துல எல்லாரும் ஏன் இப்படி போட்டி போட்டுகிட்டு நடிக்கறாங்களோ தெரியலை!!! அதுவும் இந்த கேத்ரீனா கைஃப் அம்மணி எப்படித்தான் சோக சீனுக்கும் சரி, லவ் சீனுக்கும் ஒரே மாதிரி உணர்ச்சியை காமிக்கிறாங்களோ தெரியலை!!! ஒருவேளை லவ் பண்ணாலே சோகந்தாங்கிற உண்மைத் தத்துவத்தை தன்னோட நடிப்பின் மூலம் நிரூபிக்கிறாங்களோ என்னமோ??? சும்மாவே அம்மணிக்கு நடிப்புன்னா ஆவாது, அதுலியும் சுத்தி இப்படி போட்டி போட்டு நடிக்கிற ஆளுங்க இருந்து நடிச்சா வெளங்கிடும்….அழகா இருக்குங்கிறதுக்காக ஒரு பொம்மையை கொண்டு வந்து படத்துல நடிக்க வெச்சுடறதா???

மியுசிக் போட்ட புண்ணியவான் யார்னு தெரியலை, ஒட்டு மொத்தமா ஒரு ரெண்டரை மணி நேரம் ஒரு மியுசிக்கை போட்டுட்டு, அப்படியே எடுத்து படத்தோட ஓட விட்டுட்டாங்களான்னு புரியலை, சிச்சுவேஷனுக்கும் அதுக்கும் அப்படி ஒரு ஏகப் பொருத்தம்!!!

படத்தோட டைரக்டர் இனிமேதான் ரொம்ப எச்சரிக்கையா இருக்கணும்!!! ஒருவேளை  FBI, எங்களை அசிங்கப் படுத்திட்டாருன்னு சொல்லி டைரக்டர் மேல மான நஷ்ட வழக்கு போடலாம், இல்லை எங்களை இவ்ளோ மொக்கையா காமிச்சுட்டியேன்னு யாராவது ஒரு தீவிரவாதியே இவரு மேல காண்டாகி அடிக்க வரலாம், இப்படி பல பிரச்ச்சனைகள் அவருக்கு இருக்கு!!!

கடைசியா என்னதான் சொல்ல வர்றாங்கன்னு தெரியலை!!! நீதான் தீவிரவாதின்னு சந்தேகப்பட்டதுனாலதான் எல்லாரும் தீவிரவாதி ஆகுறாங்ககிறாங்கன்னு சொல்றாங்களா இல்ல வேற என்னன்னு புரியலை!!! ஆனா ஒண்ணு, இன்னும் கொஞ்ச நேரம் அந்த தியேட்டர்ல இருந்திருந்தா நானே தீவிரவாதியா மாறியிருப்பேனோ என்னமோ…

பி.கு.
இதுல யாரை நண்பர்கள் என்பது, யாரை எதிரிகள்னு சொல்றதுன்னு வேற தெரியலை!!! சத்யம்ல இந்தப் படம் பாத்து, இண்டர்வெலுக்கு மேல கடுப்புல, மேல் ஃபுளோர்லதாம்பா இந்த வை ஃபை (Wi Fi) கேம்ஸ்லாம் இருக்காமாம், ஒரு மணி நேரம் அங்க போயி விளையாடிட்டு வந்துடலாம், மத்தவங்க அதுக்குள்ள படம் பாத்து முடிச்சுவாங்கன்னு கேட்டா, எல்லாரும் என்னமோ அந்தப் படத்தை ரசிச்சு பாக்கற மாதிரி வரமாட்டேனுட்டாங்க!!!!

ஆனா ஒண்ணு, மும்பை மேரி ஜான், தாரே ஜமீன் பர் படம்லாம் பாக்கறப்ப அய்ய்ய்யோ எனக்கு இந்தி தெரியலியேன்னு ரொம்பவே வருத்தப்பட்டேன், ஆனா இந்தப் படம் பாக்கறப்பதான் நல்லவேளை எனக்கு இந்தி தெரியலைன்னு ரொம்பவே நினைச்சுகிட்டேன்!!! அது ஏந்தான் வேண்டா வெறுப்பா பிள்ளையை பெத்துட்டு காண்டாமிருகம்னு பேரு வெக்குறாங்களோன்னு தெரியலை!!!

பிரிவுகள்:சீரியஸ் குறிச்சொற்கள்:

பள்ளிக்கூடம் போவலாமா?

நண்பர் சரவணகுமரன் ”பள்ளிகூடம் போவலாமா” தொடர் பதிவுக்கு அழைத்திருந்தார்…..அழைப்பிற்கு நன்றி

அழைத்து ஒரு வாரம் ஆகிவிட்டது, தாமதமான பதிவுதான் என்றாலும், இதை விட்டால் நானும் கொஞ்சம் பிசியான ஆள் என்பதைக் காட்ட வேறு வாய்ப்புகளே கிடைக்காது என்பதாலேயே இந்த தாமதமான பதிவு!!!

—————————————————————————————————————

நான் படித்த காலத்தில், எங்கள் ஊரில் மொத்தம் மூன்று பள்ளிக்கூடங்கள் இருந்தன. ஒன்றாவது முதல் ஐந்தாவது வரைக்கான அரசின் ஊ.ஒ.து. பள்ளி, இதில் ஆணும் பெண்ணும் சேர்ந்து ஐந்தாவது வரை படிப்பார்கள். அடுத்து ஆண்களுக்கான மேல் நிலைப்பள்ளி, அரசு உதவியுடன் கிறித்துவ சபை நடத்தும் பள்ளி அது. இங்கு 6வது முதல் 12வது வரைக்கான வகுப்புகள் நடக்கும். அதற்கடுத்து பெண்களுக்கான மேல்நிலைப்பள்ளி, ஆறவது முதல் வரை பத்தாவது வரைக்கான வகுப்புகள் அங்கே நடைபெறும். பெண்கள் 11வது 12வது படிக்க வேண்டுமென்றால் ஒன்று எங்கள் பள்ளிக்கு வரவேண்டும் அல்லது மேட்டூரில் உள்ள ஏதாவது ஒரு பள்ளிக்குச் செல்ல வேண்டும். சுற்றியுள்ள ஊர்களுடன் ஒப்பிடும் போது மேட்டூருக்கு அடுத்தபடியாக அனைத்து வசதிகளையும் கொண்டது எங்கள் ஊர்தான், இதுதான் எங்கள் ஊரின் நிலை….

சுற்றியுள்ள பதினெட்டுப்பட்டி கிராமத்திலிருந்தும் எங்கள் ஊரிலுள்ள மேல்நிலைப்பள்ளியில் வந்துதான் படித்தார்கள், வேறு கிராமங்களில் அந்த வசதி கிடையாது….கல்வியின் தரத்தை உயர்த்த வேண்டும், ஆசிரியர், மாணவர் விகிதம் குறைய வேண்டும் என்றெல்லாம் போராடுபவர்கள் அங்கு வந்து பார்த்தால் பரிதவித்துப் போயிருப்பார்கள், ஆம், ஆறாம் வகுப்பே 5 வகுப்புகள் இருந்தாலும், ஒவ்வொரு வகுப்பிலும் 100க்கும் குறையாத மாணவர்கள் இருப்பார்கள்.

அனைவருக்கும் கல்வி அளிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்தினாலேயே, எவ்வளவு முடியுமோ அவ்வளவு பேருக்கும் அனுமதி என்கிற கொள்கையை எங்கள் பள்ளி கொண்டிருந்தது, அதில் மிகுந்த வறுமையிலிருப்போர் பலர் பாதி கட்டணத்திற்கும், மற்ற பலருக்கு ஊரிலுள்ள பெரியவர்கள் உதவியுடன் படிப்போ நடக்கும். பள்ளியில் இணைந்த பிறகு நல்ல மாணவன் என்றால் ஆசிரியர்களே ஒரு சிலரின் படிப்புக் கட்டணத்தை ஏற்றுக் கொள்வார்கள்….

கிராமத்து பள்ளிக்கூடங்களின் உண்மை நிலையை கண்டறிய, அந்த ஆறாம் வகுப்பில் நுழைந்தால் எளிதில் கண்டுகொள்ளலாம், அந்த வகுப்பில் சிலர் அப்போழுதுதான் எழுத்துக்கூட்டியே படிக்க ஆரம்பிப்பார்கள், இன்னும் சிலருக்கு ஒரு வாக்கியத்தை முழுமையாக எழுதும் திறன் கூட இருக்காது. இப்படி வெவ்வேறு திறன்நிலைகளைக் கொண்ட, 100க்கும் மேற்பட்ட மாணவர்களுக்குத்தான் வகுப்புகள் எடுத்தார்கள் அந்த ஆசிரியர்கள்

அந்த மாணவர்களின் கிராமங்களில் படிப்பிற்கும் வறுமைக்கும் நடைபெறும் போராட்டங்களில் பெரும்பாலும் வறுமையே ஜெயித்துக் கொண்டிருந்தது. எண்ணெயிடாத தலைகளிலும், பொத்தான் இல்லாத டிராயர்களிலும், அழுக்கேறிய வெள்ளைச் சட்டைகளிலும், பத்தாம் வகுப்பில் கூட செருப்பணியாத (முடியாத) கால்களிலும் வறுமையின் திறமை எப்போதும் பளிச்சிட்டேக் காணப்படும். ஏறக்குறைய 500 பேரைக் கொண்டிருக்கும் 6ம் வகுப்பு, போகப் போக பத்தாவது வரும் போது சுமார் 60 பேரை (3 வகுப்புகளில்) மட்டுமே கொண்டிருக்கும். பல சமயங்களில் வறுமையின் காரணமாகவோ அல்லது பையனை கூலி வேலைக்கு அனுப்புவதற்காகவோ படிப்பை பாதியிலேயே நிறுத்தச் செய்யும் காட்சிகள் மிகச் சாதாரணம்…

11வது சேர்க்கும் போதும், 85% சதவீதத்திற்கும் அதிகமான மதிப்பெண்களை வாங்கியவர்களைத்தான் சேர்த்துக்கொள்வது போன்ற தெய்வீகக் கொள்கையின் அடிப்படையிலெல்லாம் மாணவர்களை சேர்த்துக் கொள்வதில்லை. மதிப்பெண்களுக்குத் தகுந்தாற் போல் ஏதாவது ஒரு க்ரூப்பில் எத்தனை பேரை வேண்டுமானாலும் சேர்த்துக் கொள்வர். பள்ளிக்கட்டணமும் கூட மிகக் குறைவுதான், நான் பத்தாவது முடிந்து 11வது சேர்கையில் (96ல்) 100 ரூபாயோ என்னமோதான் கட்டினதாக ஞாபகம் (பத்தாவது டிசி, மதிப்பெண் பட்டியல் வாங்கியது முதல் 11வதிற்கான அனுமதிக் கட்டணம் வரை எல்லாம் சேர்த்து)….

இத்தனை இருந்தாலும் படிப்பிலும், விளையாட்டிலும், தரத்திலும் எங்கள் பள்ளிக்கு மிக நல்லப் பெயர் இருந்தது. கிராமத்தில் உள்ள பள்ளிதானே சின்னதாகத்தானே இருக்கும் என்று யாராவது நினைத்தால் ஏமாந்துதான் போக வேண்டும். மேட்டூரில் கூட விடுதி வசதி இல்லாத நிலையில், எங்கள் பள்ளியில் அப்போதே விடுதி வசதி இருந்தது. சென்னையிலிருந்து வந்து கூட எங்கள் பள்ளி விடுதியில் சேர்ந்து படித்திருக்கின்றனர். கிறித்துவ சபை நடத்தும் பள்ளி என்பதால், கேரளாவிலிருந்து வந்து படிக்கும் கிறித்துவ மாணவர்களும் அங்கு அதிகம் இருந்தனர். அப்போதே மிகப்பெரிய நூலகமும், கம்ப்யூட்டர் லேபும் இருந்திருக்கிறது.

பள்ளியின் தரத்திற்கு இன்னொரு சான்று அதன் தேர்ச்சி நிலை, வெவ்வேறு திறன் கொண்ட மாணவர்கள் இருந்தாலும், எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து எங்கள் பள்ளி, பத்தாவதிலும், 12வதிலும் 90 முதல் 100 சதம் வரை தேர்ச்சி நிலையை அடையக் கூடியதாகவே இருந்தது (பலமுறை 100 சதம் அடைந்திருக்கிறது). விளையாட்டைப் பொறுத்தவரை அந்த மாவட்ட அளவு நடக்கும் தடகளப் போட்டிகளிலும், கால்பந்து போன்றவற்றிலெல்லாம் பல பரிசுகள் வாங்கியிருக்கிறது. சில சமயம் மாநில அளவுப் போட்டிகளில் கூட வென்றிருக்கிறது. மாநில அளவு சென்று வென்றால் அடுத்த நாள் எங்களுக்கு விடுமுறை கிடைக்கும்….

மிகச்சாதாரணமாக 5 விளையாட்டு ஆசிரியர்களை எப்போதும் கொண்டிருக்கும். இரண்டு கால்பந்து மைதானங்கள் (அதில் ஒரு மைதானம் மிகப் பெரியது), இரண்டு கூடைப்பந்து மைதானங்கள் (அதில் ஒன்று அப்போதே கான்கிரீட் போட்டது), இரண்டு கைப்பந்து மைதானங்கள், நீளம் தாண்டுதலுக்கு, உயரம் தாண்டுதலுக்கு, குச்சி வைத்து தாண்டுதலுக்கு குழிகள் அமைத்தது போக இன்னும் நிறையவே அங்கு இடம் இருக்கும். எங்கள் பள்ளியில் எனக்கு மிகப் பிடித்ததும் இந்த மைதானம்தான். விடுமைறை நாட்களில் அந்த மைதானம்தான் எங்களுக்கு கதி. சிறு வயதில், காலை 9 மணி முதல், மாலை வரை அங்கேயே கிரிக்கெட் விளையாடிய உடம்புக்கு தெரியாத வெயில், ஏனோ இப்போது சென்னை வெயில் பயங்கரமாகவே உறைக்கிறது.

வருடத்தின் முதல் பாதியில் படிப்பில் பெரும்பாலும் கழியும் எங்கள் பள்ளியில், வருடத்தின் இரண்டாம் பாதி மிகக் குதூகலமாகவே இருக்கும். விடுமுறைகளும் சரி, விழாக்களும் சரி அந்த சமயத்திந்தான் அதிகமாக இருக்கும். பெற்றோர் தின விழா, இலக்கிய விழா, விளையாட்டு விழா என்று பாதி நாட்கள் இந்த விழா சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளிலேயே போய்விடும். பெற்றோர் தின விழாவிற்கு பேச்சுப் போட்டி முதல் பல்வேறு போட்டிகள் நடைபெற்று பரிசுகள் பெற்றோர் தினத்தன்று வழங்கப்படும். இலக்கிய விழாவிற்கு, ஒவ்வொரு வகுப்புகளுக்குமிடையே கலை நிகழ்ச்சிப் போட்டி வைத்து பரிசுகள் வழங்கப்படும். யாராவது தமிழ் புலவர்கள் அவ்வப்போது வந்து பேசுவார்கள்.

இது போன்றதொரு போட்டிகள் நடத்துவதற்கென்றே மாந்தோப்பு என்று ஒரு இடம் இருக்கும். சுற்றியும் மரத்தின் நிழலில், இயற்கையின் வாசத்தில், இப்போழுது நினைத்தாலும் ஏங்க வைக்கின்ற ஒரு வாழ்க்கையை எங்கள் பள்ளி எங்களுக்கு அமைத்திருந்தது. நான் உட்பட எங்கள் பள்ளியில் பலருக்கும் நாடகம், பேச்சுப்போட்டி என்று பல துறைகளில் கூடுதல் திறன்நிலைகளை வளர்த்துக்கொள்ள தளம் அமைத்துக் கொடுத்தது இந்த மாந்தோப்புதான். எங்கள் பள்ளியில் இருந்து வெளிவந்த ஒவ்வொரு மாணவனின் மனதிலும் இந்த மாந்தோப்பு, மைதானம், இரண்டாம் பாதி விழாக்கள் ஆகியவை நீங்கா இடம் பெற்றிருக்கும்.

சில விஷயங்கள் நடக்கும் பொழுதை விட, முடிந்து நினைவுகளாய் மாறியபின் நெஞ்சில் இன்னும் பசுமையாகவும் சுவையாகவும் இருக்கும். படிக்கும் பொழுது அந்த கள்ளங்கபடமற்ற வாழ்வின் உன்னதம் நம்மில் பலருக்கும் புரிந்திருக்குமா என்று தெரியவில்லை. ஆனால் மீண்டும் அப்படி ஒரு வாழ்வை வாழ்ந்து பார்க்கும் வாய்ப்பு நமக்கு அமையாது என்றாலும், அந்த நிமிடங்களை நினைவு கூர்வதே ஒரு தனி சுவைதான் இல்லையா?????

எங்கள் பள்ளியின் பெயர் நிர்மலா மேல்நிலைப் பள்ளி, கொளத்தூர்

பின்குறிப்பு:
ஒரு விதத்தில் எங்கள் பேட்ச் கொஞ்சம் கொடுத்த வைத்த பேட்ச்தான். எங்கள் முறைக்குப் பின்பு எங்கள் பள்ளியில் 11வது 12வதுக்கு பெண்களைச் சேர்த்துக் கொள்வதில்லை என்று முடிவெடுத்திருந்தார்கள், அவர்களுக்கும் பக்கத்திலிருந்த பெண்கள் பள்ளியிலேயே ஏற்பாடு செய்யப்பட்டது. எங்கள் முறையின் போதுதான், 11வது சேரும் பெண்களுக்கு சுடிதாரை யூனிஃபார்மாக போட்டுக் கொள்ள அனுமதி அளித்தனர். அதற்கு முன்பெல்லாம் தாவணிதான் யூனிஃபார்ம். ஆனால் திடீரென்று எல்லாப் பெண்களும் சுடிதார் அணியச் செய்தது, அங்கு எல்லாருக்கும் ஒரு பெரிய அதிசியமாகத்தான் இருந்தது.

நான் அழைக்க விரும்பும் நபர்கள்

1. மழைக்காதலன் – சார்லஸ்
2. மொழியோடு ஒரு பயணம் – பிரேம்குமார்

பிரிவுகள்:நினைவுகள் குறிச்சொற்கள்: