தொகுப்பு

Archive for செப்ரெம்பர், 2011

நிழல்களைத் தாண்டிய நிஜம்…

இருப்பது இன்னும் ஒரே ஒரு போட்டிதான். ஆனாலும் தன் பழக்கத்தை மட்டும் விடவில்லை. எப்போதும் போல அணியின் மற்ற வீரர்கள் பயிற்சிக்கு வருவதற்கு ஒரு மணி நேரம் முன்பே அன்றும் வந்திருந்தார். தன்னுடைய ஆட்ட நுணுக்கத்தில் தேவைப்படும் சின்னச் சின்ன மாற்றங்களிலேயே பயிற்சிகளின் போது கவனம் இருந்தது. அவர் ஒரு நாள் போட்டிகள் விளையாடுவதற்கான முழுத் தகுதிகளையும் பெற்றிருக்கவில்லைதான். ஆனாலும் அதற்கான திறமைகளுக்கு தன்னை உட்படுத்திக் கொண்டும், வளர்த்துக் கொண்டே இருந்தார். தன் கேரியர் முழுக்க தன்னை முழுக்க முழுக்க அணிக்காகவே அர்ப்பணித்துக் கொண்ட அந்த சாதனையாளனின் கடைசி ஒரு நாள் போட்டி இன்று… அந்த வீரனுக்கு என் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்

உண்மையில் அவருடைய கடைசி டெஸ்ட் போட்டி விளையாடும் போது இந்த பதிவினை எழுதுவதை விட, கடைசி ஒரு நாள் போட்டியின் போது வாழ்த்தவே என் மனம் விரும்பியது. காரணம், டெஸ்ட் போட்டிகளுக்கென்றே உருவான ஒரு மனிதன் அதில் சாதிப்பது ஒன்றும் பெரிய விஷயமல்லவே?

ஜாம்பவான்களுக்கு இருக்கும் ஒரு முக்கிய தகுதி இவருக்கும் இருக்கிறது. அது, தன்னைப் பற்றி, மற்ற யாரையும் விட தான் மிகச் சரியாக புரிந்து வைத்திருப்பது. அந்த புரிதல்தான், தான் டெஸ்ட்டுகளை விட ஒரு நாள் போட்டிகளுக்கு அதிகம் பயிற்சி பெற வேண்டியிருந்தது என்பதனை ஒத்துக் கொள்ள வைத்தது. ஆரம்பத்தில் தான் தடுமாறியதை ஒத்துக் கொள்ளும் அதே சமயத்தில், அந்த தடுமாற்றம்தான் தன்னுடைய கவனம் எது என்பதையும், ஆட்டிடியூட் எது என்பதையும் தனக்கு போதித்தது என்கிறார். அவருடைய ஒரு நாள் போட்டி வாழ்வில் ஏற்றங்களும் இறக்கங்களும் இல்லாமல் இல்லை. நடுவில் அணியில் இல்லாமலும் இருக்க வேண்டியிருந்தது. ஆனாலும் எந்த சமயத்திலும் அவருடைய கற்றலும், கவனமும் குறையவே இல்லை, மாறாக அதிகரித்துக் கொண்டே இருந்தது


99 வரை ஒரு நாள் போட்டிகளில் மிகவும் தடுமாறிய டிராவிட், 99 லிருந்து 2005 வரையிலான ஆட்டங்களில் ஸ்ட்ரைக் ரேட்டை கங்குலி, இன்சமாமிற்கு இணையாகவே வைத்திருந்தார். வெறும் புள்ளி விவரம் மட்டுமே சாதனைகளைச் சொல்லும் என்றால், பெவன் போன்றோர் நினைவிலே இருக்க முடியாது. ஏனெனில் பெவனின் மேன் ஆஃப் தி மேட்ச் விருதுகள் 12 மட்டுமே. பெவன், டிராவிட் போன்றோரின் சாதனைகளை புள்ளி விவரங்கள் சொல்வதில்லை, உணர்வுகளே சொல்கின்றன. அவருடைய விளையாட்டுக்காலம் எப்படி இருந்தது என்பதற்கு இந்த இங்கிலாந்து தொடரே உதாரணம். ஒபனிங் பேட்ஸ்மேன்கள் காயம், டிராவிட்டை இறக்கு. கீப்பிங் ஆள் வேண்டும், கூப்பிடு அவரை. ஒரு நாள் போட்டிக்கு ஆளில்லை, கூப்பிடு. மிடில் ஆர்டர் ஸ்ட்ராங்காக இல்லை, அவருடைய பேட்டிங் ஆர்டரை மாத்து. அணிக்கு தேவைப்படும் சமயங்களில், எல்லாவித மாற்றங்களுக்கும் தன்னை உட்படுத்திக் கொள்ளுவதில் அவர் தயாராகவே இருந்தார். இன்னமும், கங்குலியின் தலைமையில் நாம் அதிக வெற்றிகளை பெற ஒரு காரணமாக இருந்தது, டிராவிட்டை கீப்பராக இருக்கச் செய்து, அந்த இடத்தில் ஒரு கூடுதல் பேட்ஸ்மேனை வைத்ததே…

டிராவிட், லாரா, கங்குலி போன்ற ஜாம்பவான்களின் காலத்தில் இருந்ததும், ஒரு ஹிட்டராக இல்லாமல் இருந்ததும் ஏனோ அவருடைய புகழை சற்று மங்கலாகவே வைத்தது. இன்றும் அவர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு தன்னுடைய பேட்டிங்கிலேயே பதில் சொல்லியிருந்தாலும் கவனம் அவர் மேல் விழவில்லை. டிராவிட் ஒரு நாள் போட்டிகளுக்கு தகுதியில்லை, வெல் ஒரு நாள் போட்டிகளின் ரன் குவிப்பில் 7 வது இடத்தில் இருக்கிறார். ஓ, அவரால ரொம்ப அடிச்சு ஆட முடியாதே – மிக விரைவாக 50 ரன் குவித்த இந்திய வீரர்களில் இரண்டாம் இடத்தில் இருக்கிரார். தன்னுடைய முதல் மற்றும் கடைசி 20-20யில் தொடர்ச்சியாக மூன்று சிக்சர்கள் அடித்திருக்கிரர். இதுவரை இதை யாரும் செய்ததில்லை.. ம்ம்ம், அவர் அதிகமாக பந்தினை வேஸ்ட் செய்கிறார், அதுனால மற்றவர்கள் டென்ஷன் ஆகி விக்கட்டுகளை விடுகின்றனர் – கிரிக்கெட் வரலாற்றில் இரு முறை 300 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் கொடுத்தவர். இந்தியாவின் 7 சிறந்த பார்ட்னர்ஷிப்பில் 3ல் அவருடைய பங்கிருக்கிறது. தான் விளையாடிய 343 போட்டிகளில் 160ல் இந்தியா வெற்றி. அந்த 160 போட்டிகளில் அவருடைய பங்கு 5729 ரன்கள் (சராசரி 50.69)

டிராவிட் அதிக பட்ச ஸ்கோரினை எடுத்த போட்டிகளில் கங்குலியும், சச்சினும் 200 ரன்களுக்கு அருகே ரன் எடுத்திருந்தனர். அவருடைய முதல் செஞ்சுரியின் போது அன்வர் 194 ரன்களை எடுத்திருந்தார். டிராவிட்டின் தலைமை தோனிக்கு அடுத்த படியான வெற்றிச் சதவீதத்தைக் கொன்டிருந்தாலும், தொடர்ச்சியாக இந்தியாவின் அதிக வெற்றிகளைக் கொண்டிருந்தாலும், ஞாபகத்தில் இருப்பதென்னமோ 2007ல், அவருடைய தலைமையில் இந்திய அணியின் தோல்வியைத்தான். விக்கட் கீப்பர் பேட்ஸ்மேனாக உலகின் இரண்டாவது (முதல் இடம் தோனிக்கு – 49.09, அப்புறமே சங்கா, கில்லி எல்லாம்) சிறந்த சராசரியைக் (44.23) கொண்டிருந்தாலும், அவர் இன்னும் சிறப்பாக கீப்பிங் செய்திருக்க வேண்டும் என்ற எண்ணமே பலருக்கு தோன்றுகிறது. உலகக் கோப்பைகளில் 750க்கும் மேலான ரன்களை குவித்தவர்களில் இரண்டாவது (இதில் முதல் இடம் விவியன் ரிச்சர்ட்ஸ் – 85) அதிக சராசரியைக் (75) கொன்டிருந்தாலும் மனதில் நிற்ப்பதென்னமோ 2007 உலகக் கோப்பைதான்

சமகாலங்களில் விளையாடிய சாதனையாளர்களான, டிராவிட், சச்சின், கும்ளே ஆகிய மூவருக்கும் வேற்றுமைகள் பல இருந்தாலும், ஒரு ஒற்றுமை இருக்கிறது. அது, மூவருமே அர்ப்பணிப்பிற்கும், பயிற்சிகளுக்கும், ஆடிடியூட் மற்றும் கடின உழைப்பிற்கும் கொடுக்கும் முக்கியத்துவமே. இன்றும் சச்சின், டிராவிட், கும்ளே என சிலர் மட்டுமே ஆராதிக்கப்படுவதன் பிண்ணனி வெறும் சாதனைகள் மட்டுமல்ல. அதன் பின்னே நி(ம)லைத்து நிற்கும் ஒழுங்கும், உண்மையும், நடந்து கொள்ளும் முறைகளுமே. இந்த பண்புகள்தான் ஏனோ அணியின் மற்ற சாதனையாளர்களுக்கு மத்தியிலும் கில்கிரிஸ்ட், கல்லிஸ், ஃபிளமிங், கபில் தேவ் எனச் சிலரை மட்டும் தனியாக முன்னிறுத்துகிறது

அணிக்காகவே விளையாடிய அந்த மனிதனின், தென் ஆப்பிரிக்க டூரின் போது, தந்தை பைபாஸ் அறுவை சிகிச்சைக்கு உட்பட்ட போதும் சதத்தினை அடித்த மனிதனின், தன்னால் ஒரு பணியை சிறப்பாக செய்ய முடியவில்லை எனத் தெரிந்த உடன் தலைமையை ராஜினாமா செய்த மனிதனின், எந்தச் சமயத்திலும் திறமையையும் உண்மையையும் முன்னிறுத்திய மனிதனின் சாதனைகளை மனமார வாழ்த்துகிறேன்…

டிராவிட் – வீ வில் மிஸ் யூ

இந்த வாழ்த்துக்களும், பாராட்டுகளும், பதிவும் வெறும் சாதனைகளுக்காக மட்டுமல்ல, அவருடைய அர்ப்பணிப்பிற்கு…

பிரிவுகள்:சாதனை