தொகுப்பு

Archive for செப்ரெம்பர், 2009

அட்டென்ஷன் டூ பீட்டர்ஸ்………..

செப்ரெம்பர் 17, 2009 11 பின்னூட்டங்கள்

இந்த மடலும், மெயிலில் வந்தது..சும்மா சொல்லக் கூடாது அனுபவிச்சு எழுதியிருக்காங்க…………………..

எழுதிய புண்ணியவானுக்கு மனமார்ந்த பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்
——————————————————————————————————————————————————————————————————————–

எப்ப பாரு, கையில மினரல் வாட்டரை வச்சிகிட்டே திரிவாங்க… (அவங்க சுகாதாரமா இருக்காங்களாமாம்!)

வெளி நாட்டிலிருந்து இந்தியாவுக்கு லக்கேஜ் கொண்டு வந்த பேக்கில் உள்ள ஸ்டிக்கரை 4 மாசம் ஆனாலும் கிழிக்க மாட்டாங்க (இந்த டிசிஎஸ், இன்ஃபோசிஸ்னு பெரிய கம்பெனியில வேலை பாக்குறவனுங்க, பரங்கிமலை ஜோதி, விஜயா தியேட்டரு மாதிரி மொக்கை தியேட்டருல கூட டேகை கழட்ட மாட்டாங்களே அந்த மாதிரி!!!!!) ..
(10 லட்ச ரூபாய் லாட்டரி சீட்டு போல, பத்தரமா வச்சிகிட்டு என்ன பண்றாங்களோ?)

கேபின் லக்கேஜ் பேக்கை, நம்ம ஊரு ரோட்டுல உருட்டிகிட்டு அல்லது தள்ளிகிட்டு போறதுக்கு முயற்சி செய்வாங்க..(நம்ம ஊரு ரோட்ல கார் ஓட்டுரதே, சர்கஸ் சாகசம் மாதிரி.. இதுல இதுவேறையா?)

குளிக்கவே தேவையில்லாத மாதிரி சென்ட்டு, டியோட்ரன்ட், பாடி ஸ்பிரே அடிச்சிகிட்டு அலையறது….(பக்கத்துல நின்னு பேசறவங்களுக்கே.. மறுநாள்தான் அந்த வாசனையே போகும்னா பாத்துகோங்களேன்!)

கையேந்தி பவன்ல கூட கிரடிட் கார்டை எடுத்து நீட்டுவாங்க… (மப்புல இல்ல, மேகம் தெளிவா இருக்கும்போதே!)

சுத்தத்தைப் பத்தி அடிக்கடி மறக்காம கருப்பு எம்.ஜி.ஆர் போல பேசிகிட்டே இருப்பாங்க. ரோட்டு கடையில டீ சாப்டுட்டு, கப்பை கரைக்டா குப்பதொட்டியிலதான் போடுவேன்னு அடம் பிடிப்பாங்க! (வீட்டுல சாப்பிட்ட தட்டை எடுங்கப்பா முதல்ல..)

எதைவாங்கினாலும் திர்கம்ஸ்ல, டாலர்ல யோசிச்சி “ஹேய்.. சாப்பாடு 2 திர்கம்ஸ்தான்!, வாவ்.. மட்டன் கிலோ 10 திர்கம்ஸ்தான்”னு ராமானுஜர் ரேஞ்சிக்கு கணக்கு பண்ணுவாங்க.. (ஜெர்ரி கிங் கூட, புக் எழுதும்போது இப்டி யோசிச்சிருக்க மாட்டாரு!)

தும்மலோ.. கொட்டாவியோ.. வந்தா முடிச்சிட்டு “எக்ஸ்சூஸ்மீ” ன்னு சொல்றது...(அப்படி சொல்லும்போது நாம அவங்கள வடிவேலு ரேஞ்சிலதான் பார்போம்ங்கறது வேற விசயம்!!)

“செளக்கியமா”ன்னு கேக்காம.. “ஹாய்”ன்னு சொல்றது, “லட்ச”த்துக்கு பதிலா.. “மில்லியன்ல” சொல்றது, தயிருக்கு பதிலா.. “யோகர்டு”ன்னு சொல்றது, “ஹய்வே”க்கு பதிலா “ஃப்ரீவே”ன்னு சொல்றதுன்னு பீட்டருக்கே பீஸா குடுக்குற ரேஞ்சிக்கு பிரிப்பாய்ங்க! (இந்த பாயின்ட் பெங்களூர் பீட்டர்களுக்கும் பொருந்தும்!)

சாப்பாட்டுல காரம், மசாலா அயிட்டங்களை தவிர்ப்பது. சாப்பிடறப்பவோ.. இல்லனா, சாப்ட்டு முடிச்ச அப்புறமோ.. கண்டிப்பா “கோக்கோ (அ) பெப்சியோ” இருக்கனுமுன்னு அடம்புடிக்கிறது! (சுகாதாரம்..சுகாதாரம்ன்னு சொல்லிட்டு, டாய்லெட் ஆசிட்டை குடிங்கடே!)

சாதா ஹோட்டலுக்கு சாப்பிட போயிட்டு.. “தாபா இருக்கா, ஃபப்பே சிஸ்டம் இல்லியா, குபாக்/குணாஃபா உண்டா” ன்னு சப்ளையருக்கு கொலவெறியை கெளப்புறது! (வீட்ல இதெல்லாம் கேட்டா, சுடுதண்ணியை சுட வைப்பாங்கன்னு தெரிஞ்சிதான்.. ஹோட்டல்ல இந்த அலப்பரை!)

வந்த ஏர்லைன்ஸ்ச பத்தி… அந்த ஃபிளைட்ல சீட்டு சரியில்ல, ஜன்னல் பக்கதுல உக்காரமுடியல, பணிபெண்னுக்கு முக்கு சப்பை, கஞ்சப்பசங்க.. சாப்பிட ஒன்னும் குடுக்கல, ன்னு வந்து சேர்ந்துட்டு 2 மாசமா கொறை சொல்லிகிட்டு சுத்துறது.. (யப்பா.. கொடுத்த பணம், டிராவல் பண்றதுக்கு மட்டும்தான், ஃபிளைடையே உங்க பேருக்கு எழுதி வைக்கல! இதுல வர்றப்பவே ஹெட்ஃபோனு, டிஷ்யூ பேப்பருல்லாம் சுட்டுட்டு வந்துடறது)

நாம இது வரைக்கும் உலக வரைபடத்தில மட்டுமே பார்த்து இருக்கற இடங்களில்ல நின்னு எடுத்துகிட்ட போட்டோகளை ஆர்குட்லயும் ஃபேஸ்ஃபுக்லயும், ஜிமெயில் ஸ்டேடஸ்ல ஊர் பேரையும் போட்டு சீன் போடுவாங்க….

கடைசியா ஆனா நங்குன்னு ஒன்னு…
எதை சொல்ல வந்தாலும்.. “இப்படிதான் துபாய்ல…”, “இப்படிதான் நான் சிங்கபூர்ல இருந்தப்ப… ” ன்னு ஆரம்பிப்பாங்க!!

பிரிவுகள்:காமெடி குறிச்சொற்கள்:

சாதனை மங்கை – கிம் கிளிஸ்டர்ஸ்

செப்ரெம்பர் 15, 2009 12 பின்னூட்டங்கள்

டென்னிஸ் உலகின் நான்கு கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான யுஎஸ் ஓபன் போட்டி  என்னதான் மிகப் பெரிய ஒன்றாக இருந்தாலும், வருடா வருடம் நடைபெறும் போட்டி என்பதால் அதில் யாராவது ஒருவர் வெற்றி பெறுவதென்பது ஒரு சாதாரண நிகழ்வே. நேற்று (14.09.09) நடந்த பெண்களுக்கான இறுதிப்போட்டியில் வென்று இந்த வருடக் கோப்பையை கிம் கிளிஸ்டர்ஸ் கைப்பற்றியதும் ஒரு சாதாரண நிகழ்வாகவே இருந்திருக்கக் கூடும்…..

கிளிஸ்டர்ஸுக்கு இந்த வெற்றி ஒன்றும் புதிதல்ல. ஏற்கனவே 2005ல் இதே யுஎஸ் ஓபன் கோப்பையை வென்றவர்தான். ஆனால் இந்த இரண்டு வெற்றிகளுக்கும் ஒரு மாபெரும் வித்தியாசம் இருக்கிறது. ஏன் இதுவரை நடந்த அத்தனை போட்டிகளையும், சாதனைகளையும் விட இந்த வெற்றிக்கு பின் ஒரு பெருந் தனிச்சிறப்பு இருக்கிறது. ஆம், இந்த போட்டியின் வென்றதன் மூலம் 1980 க்கு பின்பு கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வெல்லும் முதல் ‘அம்மா’ என்கிற வார்த்தைதான் இந்த வருட வெற்றிக்குப் பின் ஒளிந்திருக்கும் தனிச் சிறப்பு (முதல் வைல்டு கார்டு சேம்பியனும் கூட)

எந்த ஒரு ஆணுடைய வாழ்விலும் திருமணமோ, இல்லற வாழ்வில் சம பங்கு வகித்தாலும், குழந்தைகளின் வரவோ அவனது முன்னேற்றத்திற்கு தடைக்கல்லாக இருந்ததில்லை. ஆனால் ஒரு பெண்ணைப் பொறுத்தவரை திருமணம் என்கிற விஷயமே பலரது வாழ்வில் தடைக் கல்லாக இருக்கக் கூடிய சமூக அமைப்புதான் நிலவுகிறது. இந்த அமைப்புதான் சினிமா போன்ற துறைகளில், தனக்கு பேத்தியோ அல்லது பேரனோ வந்தாலும் அந்த ஆணை இன்னொரு பெண்ணுடன் டூயட் பாடவைத்து அழகு பார்க்கும் சமூகம், 18 வயதிலேயே திருமணம் செய்தால் கூட, பெண்ணை துறையை விட்டே விலக்கிவைக்கிறது.

திருமணம் என்கிற விஷயமே இந்த நிலையில் இருக்கும் போது, குழந்தை விஷயத்தைச் சொல்லவா வேண்டும். தகவல் தொழில் நுட்பம் போன்ற நிறுவனம் சார்ந்த வேலைகளுக்குச் செல்லக் கூடிய பெண்கள் கூட, இயற்கையின் இந்த படைப்பு முறையின் மூலம் தங்களது கேரியர் வாழ்க்கையில் சின்னச் சின்னச் தியாகங்களோ அல்லது ஒட்டு மொத்தமாக விட்டுக் கொடுக்கவேண்டியச் சூழலே இருந்து வருகிறது. அந்தக் காலத்தைப் போன்று பெண்கள் பலசாலிகளாக இல்லை (அந்தக் காலத்தைப் போன்று ஆண்களும் பலசாலிகளாக இல்லையெனினும், அதை யாரும் சொல்வதில்லை) என்ற அங்கலாய்ப்புகளை கேட்கின்ற அதே சூழலில்தான் தனது ஒன்பதாவது மாதம் வரையிலும் வேலைக்குச் சென்று கொண்டும், குழந்தை பெற்ற பின்பு மிகக் குறைந்த காலத்திலேயே அலுவலகத்திற்கு திரும்பி, அலுவலகத்திற்கும், வீட்டிற்கும் இடையே மாறி மாறி ஓடிக் கொண்டிருக்கும் பெண்களையும் காணமுடிகிறது….

இப்படி சமூகமும், இயற்கையும் ஏற்படுத்திக் கொடுத்திருக்கும் முட்டுக்கட்டைகளுக்கு நடுவில், டென்னிஸ் போன்ற உடல் வலு அதிகம் தேவைப்படுகின்ற ஒரு துறையில் கலந்து கொண்டு, அதுவும் குழந்தை பிறந்த இரண்டு வருடங்களிலேயே இந்தக் கோப்பையை வென்றது என்னைப் பொறுத்தவரை மிகப் பெரிய சாதனைதான். தனது அப்பா ஒரு கால்பந்து வீரராகவும், அம்மா ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனையாகவும் இருந்ததாலேயே, கால்பந்து வீர்ர்களின் உறுதியான கால்களும், ஜிம்னாஸ்டிக்ஸ் வீரர்களின் வளைந்து கொடுக்கும் உடலமைப்பும் கொண்டுள்ளார் என்று புகழப்பட்ட கிளிஸ்டர்ஸ், அதே உத்வேகத்தை குழந்தை பெற்ற பின்பும் கொண்டு வந்திருப்பது அரிய விஷயமே!!!!

கிளிஸ்டர்ஸ் (திருமணத்திற்கு முன்னும் பின்னும்)

கிளிஸ்டர்ஸ் (திருமணத்திற்கு முன்னும் பின்னும்)

ஏற்கனவே 2003ல் தரவரிசையில் முதல் இடத்தைப் பிடித்திருந்தாலும், 2005ல் யுஎஸ் ஒபன் முதற்கொண்டு, திருமணத்திற்கு முன் 34 கோப்பைகளை வென்றிருந்தாலும், குழந்தை பெற்ற பின் தனது விளையாட்டுத் திறனையும்,  வாழ்க்கையையும் பூஜ்யத்திலிருந்துதான் அவர் ஆரம்பிக்கவேண்டியிருந்தது. அதிலும் தனது இரண்டாவது வாழ்வை ஆரம்பித்த முதல் 15 முதல்தர போட்டிகளுக்குள்ளேயே இந்த பதக்கத்தை அவர் வென்றிருக்கிறார்….

இந்தப் கோப்பைக்கான இறுதிப்போட்டியில் மோதும் போது கிளிஸ்டர்ஸ், தர வரிசைப் பட்டியலிலேயே இல்லை. ஆனால் இந்தக் கோப்பையைப் பெற, தர வரிசைப் பட்டியலில் முதல் 20 இடத்திற்குள் இருக்கும் 5 பேரை அவர் தோற்கடிக்க வேண்டியிருந்தது. இரண்டாவது சுற்றில் 14ஆம் இடத்தைப் பெற்ற மேரியன் பர்டோலியையும், நான்காம் சுற்றில் உலகின் மூன்றம் இடத்திலுள்ள வீனஸ் வில்லியம்சையும், காலிறுதியில் 18வது இடத்திலுள்ள நா லி யையும், அரையிறுதியில் இரண்டாம் இடத்திலுள்ள செரீனா வில்லியம்சையும், இறுதிப் போட்டியில் 9 ஆம் இடத்திலுள்ள கரோலினையும் வென்றுள்ளார்.

அரையிறுதிப் போட்டியில் செரீனா வில்லியம்சின் கோபமும், நடுவரிடம் நடந்து கொண்ட முறையும், போட்டியை விட்டு வில்லியம்சை வெளியேற வைத்தது போன்ற செயல்கள்  கிளிஸ்டர்சின் விளையாட்டுத்திறனை பத்திரிக்கைகள் கவர் செய்யாமல் மறைத்தது எனலாம். ஏனெனில் அந்த போட்டியில் கிளிஸ்டர்ஸ் வெற்றிபெறக் கூடியச் சூழலில்தான் (6–4, 7–5) இருந்தார். ஒரே போட்டிச் சுற்றில் வில்லியம்ஸ் சகோதரிகள் இருவரையும் வென்ற முதல் பெண் இவரே என்ற பெருமையையும் பெற்றுள்ளார்!!!! யு எஸ் ஒப்பன் போட்டி வரலாற்றில் முதல் வைல்டு கார்டு சேம்பியன் என்ற பெருமையையும் பெற்றார்.

இயற்கை பெண்களுக்கு மட்டும் அளித்திருக்கும் நிர்ப்பந்தமா அல்லது நிகரற்ற அற்புதமா என்று எளிதில் சொல்லிவிட முடியாத ஒரு நிதர்சனம்தான் இந்த குழந்தையைப் பெறக் கூடிய உடலமைப்பு முறை. பெரும்பாலும் வரமாகவும், கிடைத்தற்கரிய பேறாகவும் கருதப்பட்டாலும், சந்தர்ப்ப சூழ்நிலைகளும், சமூக அமைப்புகளும் இதையே சாபமாகவும் சிலருக்கு மாற்றியதுண்டு. எந்த ஒரு ஆணும் தன் வாழ்விலோ, துறையிலோ வெற்றி பெற, சமூகம் முதற்கொண்டு பல காரணிகளை எதிர் கொண்டு போராடுகிறான் என்றால், ஒரு பெண் வெற்றி பெறவோ இவை எல்லாவற்றையும் தவிர இயற்கையையும் சேர்த்து எதிர்கொண்டு போராட வேண்டியிருக்கிறது…..

அப்படிப்பட்ட ஒரு சூழலில் கிம் கிளிஸ்டர்ஸ் அடைந்திருக்கும் வெற்றி மிகப்பெரிய வெற்றி மட்டுமல்ல, பலருக்கு முன்னுதாரனமும் கூட (இதே பெல்ஜியத்தைச் சேர்ந்த, தர வரிசையில் முதலிடத்தில் இருந்த, ஏற்கனவே ஓய்வு பெற்றிருந்த ஜஸ்டின் ஹெனினும் மீண்டும் விளையாட வரக்கூடும் என்கிற பேச்சு நிலவுகிறது)………

வாழ்த்துக்கள் கிம் கிளிஸ்டர்ஸ்………………………

பின்குறிப்பு:

என்னதான் போட்டி விறுவிறுப்பாக இருந்தாலும், வெற்றி பெற்ற பின் கிளிஸ்டர்ஸ் அடைந்த மகிழ்ச்சி நமக்கும் பரவினாலும், போட்டியைக் காண வந்திருந்த ஒரு சிறப்பு விருந்தினர்தான் எனது கவனத்தை மட்டுமல்ல, அங்கிருந்த பலரது கவனத்தையும் ஈர்த்தார். போட்டி முடிந்த பின் காமிராக்கள் அவரை பல முறை காட்டினாலும், அவரையோ அல்லது அல்லது கிளிஸ்டர்ஸையோ காட்டும் போது அவர் காட்டிய உற்சாகம் நம்மையும் தொற்றியது. வெறுமனே பார்வையாளர் கூட்டத்தில் மட்டுமே இருக்காமல், கிளிஸ்டர்ஸ் கோப்பையை வாங்கிய பின் மைதானத்திற்கு வந்து கிளிஸ்டர்சுடன் வெற்றியையும், மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொண்டது கண்கொள்ளாக் காட்சி….

அந்த சிறப்பு விருந்தினர் இவர்தான் (Jada Ellie)…..

Kim with kid

நான் வேணுமா? கப்பு வேணுமா?

குழந்தையின் உற்சாகம்

குழந்தையின் உற்சாகம்

இனி நான் உனக்கு சொல்லித் தருகிறேன்!!!!

இனி நான் உனக்கு சொல்லித் தருகிறேன்!!!!

உனக்கு ஃபோட்டோவுக்கு போஸே கொடுக்க தெரியலை, என்னை மாதிரி கொடு

உனக்கு ஃபோட்டோவுக்கு போஸே கொடுக்க தெரியலை, என்னை மாதிரி கொடு

எனக்கு வெக்கமா இருக்கு!!!!

எனக்கு வெக்கமா இருக்கு!!!!

பிரிவுகள்:சாதனை குறிச்சொற்கள்:

நினைத்தாலே இனிக்கும் – திரைப்பார்வை

செப்ரெம்பர் 9, 2009 16 பின்னூட்டங்கள்

சன் டிவியின் திரைப்படம் என்றாலே பின்னங்கால் பிடறியிலடிக்க ஓடும் நான் துணிந்து அவர்களுடைய ‘நினைத்தாலே இனிக்கும்’ படத்தை பார்க்கச் சென்றேனென்றால் அதற்குக் காரணம் நண்பர் மூலமாக இந்தத் திரைப்படத்தைப் பற்றிய செய்திகளைத் தொடர்ந்து கேள்விப்பட்டிருந்ததும், படத்தின் இயக்குநர் கல்யாணராமன், கடல் மீன்கள், மீண்டும் கோகிலா போன்ற மிகச் சிறந்த திரைப்படங்களை அளித்த ரங்கராஜன் அவர்களின் புதல்வர் என்பதும், ஏற்கனவே வெளியாகியிருந்த இந்தப் படத்தின் பாடல்கள் ஏற்படுத்தியிருந்த எதிர்பார்ப்பும்தான்…

மற்ற படங்களையும், பாடல்களையும் அப்படியே காப்பி+பேஸ்ட் செய்து விட்டு இயக்குநர் என்ற இடத்திலும், இசையமைப்பாளர் என்ற இடத்திலும் தனது பெயரை போட்டுக் கொள்ளும் ஆட்களுக்கு மத்தியில், படத்தின் பெயர் ஆரம்பிக்கும் முன்னரே இந்தப் படம் மலையாளத்தின் ’கிளாஸ்மேட்ஸ்’ திரைப்படத்தை தழுவி எடுக்கப்பட்டது (பல மாற்றங்கள் செய்து வந்திருந்தாலும்) என்று அறிவித்ததற்காகவே  இயக்குநரை தாராளமாகப் பாராட்டலாம் (எனக்கு தெரிந்து இதுதான் இப்படி வருவது இதுதான் முதல் படம் என்று நினைக்கிறேன்)….

படத்தின் பெயர் போடும் போது, கறுப்பு வெள்ளையில், மென்மையான இசையின் பிண்ணனியில் காமிராக்கள் கல்லூரிக் கட்டிடங்களினூடே மெல்ல நம்மை அழைத்துச் சென்று, இறுதியில் மழைநீரில் மேலிருந்து ஒரு வண்ணப் பூ உதிர்ந்து விழும் இடத்தில் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் என்று இயக்குநர் குமரவேல் (முதல் படம்!) என்று பெயர் போடும் போது மெல்லிய புன்னகையையும், சற்றே எதிர்பார்ப்பையும்  ஏற்படுத்துகிறது…

படத்தின் ஆரம்பக் காட்சிகளிலேயே இது ஒரு ’லோ பட்ஜெட் படம்’ என்பது மிகத் தெளிவாக உணர்ந்தாலும், ஒளிப்பதிவின் நேர்த்தியும், அழகும் அதனை ஒத்துக் கொள்ளவைக்க மறுக்கிறது. ’இது மாணவர் உலகம்’ பாடலை காட்டும் போதே ஒளிப்பதிவின் நேர்த்தி மனதில் அழுத்தமாகப் பதிகின்றது.

'இது மாணவர் உலகம்; பாடம்

'இது மாணவர் உலகம்; பாடல்

நட்பையும், கல்லூரி நினைவுகளையும் சொல்லும் படமென்றால், கல்லூரி கலாட்டாக்களையும், அட்டகாசங்களையும், நெகிழ்வுகளையும், மென்மையான காதலையும் சொல்லி அசத்தியிருக்க வேண்டாமா??? மெதுவாக ஆரம்பிக்கும் திரைக்கதை, முதல் பாதி முழுக்க ஆமை வேகத்திலேயே செல்கிறது. இடைவேளைக்கு சற்று முன்பு வரை படத்தில் கவனத்தை ஈர்க்கும் சம்பவங்களோ, காட்சிகளோ, வசனங்களோ இல்லவே இல்லை….அதிலும் முதல் பாதியில் சில காட்சிகள் ஏனோ ஒரு முழுமையாக இல்லாதது போன்ற ஒரு உணர்வை ஏற்படுத்துகிறது. முதல் திரைப்படம் என்பதனால் இது பராவாயில்லையாகத் தோன்றினாலும், கமலஹாசன், பாலுமகேந்திரா போன்றோரிடம் உதவி இயக்குநராக இருந்து வந்தவரிடம் இதை ஒப்புக் கொள்ள முடியவில்லை.

பாக்யராஜ் வசனம் பேசுவதற்காகவும், சக்திக்கு ஆஸ்துமா இருக்கிறது என்பதை உணர்த்துவதற்காகவே ஒரு கால்பந்து போட்டியை வைத்தது போலிருந்தது, சமீப காலங்களில் இவ்வளவு மோசமாக ஒரு விளையாட்டுப் போட்டியைக் காட்டி நான் பார்த்த்தில்லை….அதற்கு முந்தைய காட்சிகளிலெல்லாம் பயங்கரமாக சண்டை போட்டு விட்டு திடிரென்று கல்லூரி கலாட்டாவின் போது, பிரியாமணியை பிருத்விராஜ் காப்பாற்றியவுடன், அவரது பர்சில் தனது புகைப்படம் இருக்கக் காரணம் தன்னைக் காதலிப்பதுதான் என்று உணர்ந்தவுடன் காதலை ஒத்துக் கொள்ளும் போது ’இந்த மேட்டருல உன் டோடல் ரியாக்‌ஷனே அவ்ளோதானா???’ என்றுதான் பிரியாமணியைப் பார்த்து கேட்கத் தோன்றுகிறது”…

ஆமை வேகத்தில் செல்லும் திரைக்கதைக்கு மத்தியில் முதல் பாதியிலேயே நான்கு பாடல்கள் வருவது சற்றே சலிப்பை ஏற்படுத்தினாலும், அனைத்து பாடல்களையும் படமாக்கியிருக்கும் விதம் மிக மிக அழகு…’செக்சி லேடி’ பாடல் (யாருங்க அந்த அம்மிணி???) அருமையாக இருந்தாலும், அந்தப் பாடல் எதற்காக அங்கு வருகிறது என்பது தியேட்டரில் இருக்கும் யாருக்குமே புரியவில்லை… எடிட்டிங் கோளாறா, என்ன பிரச்சினையென்று தெரியவில்லை, முழு படமுமே இரண்டே கால் மணி நேரம்தான் என்றாலும், மூணு மணி நேரம் ஓடிய ஒரு உணர்வை ஏற்படுத்துகிறது…

'அழகாய் பூக்குதே' பாடல்

'அழகாய் பூக்குதே' பாடல்

முதல் பாதியில் ரொம்ப லேசானதாக இருந்த்தாலோ என்னமோ இரண்டாவது பாதியில் வரும் திடுக்கிடும் திருப்பங்களோ, வேகமோ, காட்சிகளோ எதுவுமே மனதில் பதிய மறுக்கிறது. ’அழகாய் பூக்குதே’ பாடல் படமாக்கியிருக்கும் விதம் மிக மிக அருமை என்றாலும், பாடல் வரும் போது தியேட்டரில் பலருக்கு சலிப்பு ஏற்பட்டு விடுகிறது. இறுதிக் காட்சியில் பாக்யராஜ் அனைவரையும் நிற்க வைத்து வசனம் பேசும் போது நாடக பாணியாகத் தோன்றுகிறது.

இறுதிக் காட்சியில் வரும் ‘உங்க எல்லார்கிட்டயும் நான் ஃப்ரெண்ட்சா பழகுனேன், ஆனா என் பையன்கிட்ட நான் வெறும் அப்பாவா பழகிட்டேன்”, கால்பந்து போட்டியின் போது பேசும் வசனம் என்று சில இடங்களைத் மற்ற இடங்களிலெல்லாம் வசனம் மிகச் சாதாரணம். சன் டிவி படம் என்பதை, பிரித்விராஜ் மற்றும் நண்பர்கள் தியேட்டரில் திருநங்கைகளுடன் அமர்ந்து படம் பார்க்கும் காட்சியின் மூலம்தான் நிரூபிக்க வேண்டுமா??? ராம்கி திரைப்படம், ஈரமான ரோஜாவே முதற்கொண்டு இன்னும் எத்தனைக் காலத்துக்கு திருநங்கைகளை அவமானப் படுத்த வேண்டும்????

லோ பட்ஜெட் படமாக இருந்தாலும், காட்சிகளை மிக அழகாக காட்டுவதில் இயக்குநர் பட்ட மெனக்கெடல், நுட்பமாக அமைப்பதில் படவில்லை என்றே தோன்றுகிறது.

கல்லூரி திரைப்படங்கள் என்றாலே, ஒற்றைத் தூணாய் நாயகன், அவனைச் சுற்றி அல்லக்கையாக நண்பர்கள் என்று காட்டும் வழக்கத்தை தாண்டி எல்லாருக்கும் சமமான பாத்திரங்கள் உள்ள திரைப்படமாக இருப்பது பெரிய ஆறுதல். படத்தின் நாயகன் பிரித்விராஜ் என்பதை விட, படத்தின் நாயகர்கள் என அனைவரையும் சொல்லலாம். அந்தளவு பிரித்விராஜை விட நடிப்பில் நம்மைக் கவர்வது சக்தி, புதுமுகம் விஷ்ணு மற்றும் கார்த்திக் தான்.

அமெரிக்க மாப்பிள்ளை, சாஃப்ட் கேரக்டரில் பார்த்து பழகிய கார்த்திக், எதிர்மறை வேடம் என்றாலும், சில காட்சிகளில் மட்டுமே வந்தாலும் தனது வாய்ப்பினை மிக அருமையாக (தப்பு பண்ணிட்டேன்னு பாக்யராஜிடம் வார்த்தைகள் நடுங்கியவாறே பேசுவது அருமை!!!) பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்று அடம்பிடிக்காமல், நல்ல பாத்திரத்தில் தன்னைப் பொருத்திக் கொண்ட சக்தியின் நடிப்பு மிக இயல்பாக இருந்த்து. யாருப்பா இந்த ஆளு என்ற எண்ணத்தை ஏற்படுத்தும் நடிப்பு புதுமுகம் விஷ்ணுவுடையது (நல்ல எதிர்காலம் இருக்கு இவருக்கு…..). பிரியாமணியை விட தோழியாக வரும் அனுஜா மிக அழகாக இருக்கிறார், அதிலும் கடைசிக் காட்சியில் பிரித்விராஜிடம் விடை பெற தலையசைக்கும் போது அவர் மட்டுமல்ல, அந்த காட்சியமைப்பும் மிக அழகாக அமைந்துள்ளது….

நாயகர்கள்

நாயகர்கள்

இயக்குநர்கள் முதற்கொண்டு டான்ஸ் மாஸ்டர்ஸ் வரை எல்லாரும் ஹீரோ ரோலுக்கே அலைந்து கொண்டிருக்கும் தமிழ் சினிமாவில் கேரக்டர் ரோல் செய்வதற்கும், சப்போர்டிவ் ரோல் செய்வதற்கும் ஏற்பட்டிருக்கும் வெறுமையை கார்த்திக், விஷ்ணு போன்றோர் மிக அழகாக நிறைவு செய்யலாம்…

வெறுமனே ஒளிப்பதிவோடு இல்லாமல், வண்ணமயமான காட்சிகளை படம் முழுக்க்க் கொடுத்திருப்பதும், அருமையான பாடல்களை உள்ளடக்கியிருப்பதும், பாடல்காட்சிகளை படமாக்கியிருக்கும் அழகும் படத்திற்கு மிகப் பெரிய பலம் (அழகாய் பூக்குதே பாடல் இன்னும் கண்ணுக்குள்ளேயே இருக்கு!!!) என்றால், முதல் பாதியின் மிகச் சாதாரணமான காட்சியமைப்புகளும் (இதே திரைப்படம் முதல் பாதியில் கவனமாக கையாளப்பட்டிருந்தால் அடைந்திருக்கும் வெற்றியே வேறு!!!), குறைந்த பட்சம் ஒரு ஐந்து வருடத்திற்கும் முந்திய ‘ஸ்கிரிப்டோ’ என்ற உணர்வைத் தரும் திரைக்கதையும் இதன் பலவீனங்கள்…

மாசிலாமணி போன்ற திரைப்படங்களையே வெற்றிப்படமாக்கிய சன் டிவிக்கு ’நினைத்தாலே இனிக்கும்’ ஒரு நல்ல வெற்றியாக அமையும் என்பதிலோ, லோ பட்ஜெட் படத்தையே அழகாக கொடுத்ததனால் அடுத்த வாய்ப்பு இயக்குநருக்கு எளிதில் கிடைக்கலாம் என்பதிலோ ஆச்சரியப்பட அதிகம் இல்லை என்றாலும் இரண்டாம் பாதியில் வரும் சில காட்சிகளையும், பாடல் காட்சிகளையும் தவிர்த்து ஒரு நல்ல இயக்குநர் என்ற பெயரை எடுப்பதற்கு இயக்குநர் நிரூபிக்கவேண்டியது இன்னும் அதிகம் இருக்கிறது!!!

மொத்தத்தில் சிரிப்பை வரவழைக்கும் பஞ்ச் டயலாக்குகளோ, முகத்தைச் சுளிக்க வைக்கும் ஆபாச காட்சிகளோ, அதே சமயம் புருவத்தை உயர்த்த வைக்கும் அற்புதக் காட்சிகளோ இல்லாமல் வெளிவந்திருக்கும் ஒரு சராசரி, வண்ணமயமான திரைப்படம் இந்த ‘நினைத்தாலே இனிக்கும்’.

சன் டிவி பாணியில் சொல்வதென்றால் நினைத்தாலே இனிக்கும் – சுகர் குறைவு!!!!

தொடர்புடைய மற்ற பதிவுகள்

சரவணகுமரன்

பரிசல்காரன்

பிரிவுகள்:சினிமா குறிச்சொற்கள்:

இவனுங்க காமெடி தாங்க முடியலடா சாமி!!!!

செப்ரெம்பர் 2, 2009 11 பின்னூட்டங்கள்

முகத்தில் அறைந்தார் போன்றே இருந்தது அந்த உண்மை நிகழ்ந்த போது….நிலையின்மை மட்டுமே நிலையானது என்று நன்கு தெரிந்திருந்தாலும், சில நிதர்சனங்கள் நடந்தேறும் போது தாங்கிக்கக் கூடிய மனநிலையோ, திடமோ ஏனோ நமக்கு வாய்க்கப் பெறுவதில்லை….

யாருக்குத்தான் அதிர்ச்சியாய் இருக்காது அந்த செய்தியைப் பார்த்தாலோ கேள்விப்பட்டாலோ???? சன் டிவியின் டாப் டென் நிகழ்ச்சியில் முதலிடத்திலிருந்த மாசிலாமணி திரைப்படம் இரண்டாவது இடத்திற்கு வந்துவிட்டதாக போன வாரம் கேள்விப்பட்ட போது யாருக்காவது அதிர்ச்சி ஏற்படாதிருக்குமா???? உலகத்தரமான நடிப்பு, இயக்கம் திரைக்கதை என்று பல தரங்கள் இருந்ததனாலேயே அதன் தராதரம் சாதாரண ரசிகர்களுக்கு தெரியாதிருந்தாலும், வழக்கமாக தரமான படங்களை அரவணைத்துச் செல்லும் சன் டிவி, மாசிலாமணியை அரவணைத்துக் கொண்டதில் வியப்பேதுமில்லைதான்

மற்ற குப்பை படங்களான நாடோடிகள், பசங்க எல்லாம் தேவையில்லா விளம்பரங்கள், பில்டப்புகள் மூலம் எதிர்ப்பார்ப்பையும் வெற்றியையும் ஏற்படுத்தியிருந்த நிலையில் மாசிலாமணியோ எந்த வித ஆரவாரமுமின்றி விண்னைத் தொடும் வெற்றியை அடைந்தது.

என்னுடைய ஒரே வருத்தம் என்னவென்றால் சன் டிவி நடுவில் வந்த ஐந்தாம் படை என்ற ஒரு உலகத்தரம் வாய்ந்த படத்தையும் ரிலீஸ் செய்யாமல் ஏன் விட்டார்கள் என்பதுதான், இது போன்ற நல்ல தரமான படங்களை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டிய கடமை உங்களுக்கு இருக்குங்க ஆஃபீசர்!!!!……..

ஆனா ஒண்ணு, உலகத் தரமான படங்களை கொடுப்பது மட்டுமல்ல, திருட்டு விசிடியை ஒழிப்பதிலும் சன் டிவியின் பங்கு அளப்பறியதுதாங்க…சும்மாவா!!!! இவிங்க படம்னா திருட்டு விசிடில வாங்கி பாக்குறதுக்கு கூட பயமா இருக்குன்னா பாத்துக்கோங்களேன்!!!!

——————————————————————————————————————————————————————————————————————

முக்கியமான நிகழ்வுகளை மக்களுக்கு கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்பதில் இந்த பேப்பர்காரங்களுடைய பங்களிப்பை குறைத்து மதிப்பிடவே முடியாது……..

சினேகாவிற்கு குறுஞ்செய்தி மூலம் தொல்லை கொடுத்த ஆளை எப்புடி மடக்கி புடிச்சாங்க, இதே மாதிரி ரம்பா வீட்டுல தகராறு பண்ண ஆளை எப்புடில்லாம் விரட்டுனாங்க, பிரபுதேவாவுக்கும் நயந்தாராவுக்கும் எப்படி அந்த தெய்வீகக் காதல் மலர்ந்தது, சோனியா அகர்வாலுக்கும், செல்வராகவனுக்கும் ஏன் விவாகரத்து நடக்குது இப்படி எல்லாத்தையும் விலாவரியா சொல்றதுனாலத்தான் நாட்டுல மக்களுக்கு ஜெனரல் நாலெட்ஜ்ன்னு ஒண்ணே இருக்கு!!! இவங்க இல்லாமப்போனா நாட்டுல மக்களுடைய நிலையோ, அரிப்போ என்னவாகியிருக்கும்னே சொல்ல முடியலியே????

இதுல தினத்தந்தில கட்டம் கட்டி சில செய்திகளைப் போடுவாங்க பாருங்க, அந்தச் செய்திகள் ஒவ்வொண்ணும் அப்படியே அரிப்புப் (மன்னிக்கவும்) அறிவுப் பொக்கிஷங்கள்……என்னா இதே மாதிரி அந்த பத்திரிக்கைகாரங்க குடும்பத்துலியும் யாரு யாரோட ஓடிப் போனாங்க, யாருக்கு விவாகரத்து நடந்தது, ஏன் நடக்குதுன்னு போட்டாங்கன்னா இன்னும் இண்ட்ரெஸ்ட்டா இருக்கும்

என் சந்தேகம் என்னான்னா, பிரபுதேவா, நயந்தாராவிற்கு இடையே காதல் மலர்ந்தது எப்புடி, அந்தக் காதலோட ஆழம் என்ன, நீளம் என்ன, அகலம் என்னான்னு எல்லாத்தையும் புட்டு புட்டு வெச்சாங்களே எல்லாஞ் சரிதான்…………ஆனா எங்க ஊர்லல்லாம், புருஷனோ, பொண்டாட்டியோ இருக்கறப்பவே, ஒருத்தர் இன்னொரு ஆளு கூட ஊர் சுத்துனா கள்ளக் காதல்னுதான் சொல்லுவாங்க, ஆனா இவனுங்க என்னான்னா, அம்பிகாவதி அமராவதிக்கப்புறம் இதுதான் தெய்வீகக் காதல்ங்கிற ரேஞ்சுக்கு காமிக்குறானுங்க……….

என்னமோ போங்கப்பா, சினிமாவுல வர்ற காதல் ரேஞ்சுக்குதான் இருக்கு பத்திரிக்கைக்காரங்களோட கவரேஜூம்…..

——————————————————————————————————————————————————————————————————————

நடிகர் விஜய்யோட செலக்‌ஷன் எப்பவுமே பிரமாதமாத்தான் இருக்கும், அவருடைய படங்களும் சரி, அதில் வரும் காட்சிகளும் சரி சிறப்பானதாகவே இருக்கும். அவரது திரைப்படங்களில் வரும் காட்சிகளுக்கு சற்றும் குறைவில்லாமல்தான் இருந்தது அந்த சந்திப்புக் காட்சியும். போனவாரம் ராகுல் காந்தி சென்னை வந்தப்ப விஜய் போய் அவரைப் பார்த்திட்டு வந்ததுமில்லாம, அந்தக் கட்சியிலியே சேரப்போறதா பேச்சு வந்ததன் மூலம் தனது செலக்‌ஷன் எப்பொழுதும் ‘சோடை போகாதுன்னு இன்னொரு முறை நிரூபிச்சிருக்காரு….

இந்தப் பேச்சு அடங்கி முடியறதுக்குள்ள விஜய்யோட வேட்டைக்காரன் படத்தை சன் டிவியே ரிலீஸ் பண்ணப் போதுன்னு இன்னொரு அறிவிப்பும் வேற வந்திருக்கு!!! சும்மா சொல்லக் கூடாது ரெண்டு மேட்டருமே குட் காம்பினேஷன்!

விஜய் சார் ஒரே ஒரு வேண்டுகோள், நீங்க பண்ண எல்லாமே சரி, தப்பி தவறி ஒரு ஆசையில உங்களோட ஏதாவது ஒரு படத்தை ராகுல்காந்தி பாத்தே ஆகனும்னு சொல்லி கட்டாயப்படுத்திடாதீங்க, அப்புறம் உங்க பிளான்லாம் வீணாப் போயிடும், உங்க படம் மாதிரியே!!!

————————————————————————————————————————————————————————————