தொகுப்பு
இவனுங்க காமெடி தாங்க முடியலடா சாமி….
அதிமுக கட்சியில் இருக்கும் ஒருவர் செல்வி.ஜெயலலிதாவை எதிர்த்து குரல் எழுப்ப முடியுமா? கிண்டல் பண்ணி போஸ்டர்லாம் ஒட்ட முடியுமா?
முடியும் என்று நிரூபித்திருக்கிறார்கள் ஒரு சில தொண்டர்கள். நானும் ஆரம்பத்தில் அப்படி எல்லாம் நடக்க வாய்ப்பில்லை என்றே நினைத்திருந்தேன். ஆனால் அந்த பேனரை பார்த்த பொழுது என் கண்களையே என்னால் நம்ப முடியவில்லை.
பிப்ரவரி 24 ஆம் தேதியன்று செல்வி அவர்களின் பிறந்த நாள் வந்ததல்லவா? அதையொட்டி அவருக்கு வாழ்த்து தெரிவிக்க ஒட்டப்பட்ட பேனர்தான் அது. கிண்டி ஸ்டேட் பாங்க் ஆஃப் இண்டியா க்கு பக்கத்தில்தான் வைக்கப்பட்டிருந்தது அந்த பானர்.
அப்படி என்ன சொல்லியிருந்தாங்கன்னு கேக்கறீங்களா? இவங்க ஒழுங்கா ‘அம்மா’வுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் சொன்னதோட நிப்பாட்டியிருக்கலாம். ஆனா ஆரம்பிக்கறதே, “இலங்கைத் தமிழர்களுக்குகாக பாடுபடும் ஒரே தலைவி…..”
அப்படின்னு என்னென்னமோ எழுதியிருந்தாங்க!!!!
எனக்கோ பயங்கர ஷாக், இவங்க தெரிஞ்சுதான் வெச்சாங்களா, இல்லியா?. பொதுவாகவே ஈழப் பிரச்சனையில் ”தாயுள்ளத்தின்” நிலைப்பாடு எல்லாருக்கும் தெரிந்ததே. அப்படியிருக்க இப்படி ஒரு பேனர் வெச்சிருக்காங்களே, இந்த விஷயம் தலைமைக்கு தெரியுமா? தெரிஞ்சா சும்மா விடுவாங்களா?
ஐயா, பேனர் வெச்ச நல்லவங்களே, சீக்கிரம் பேனரை தூக்கிருங்க, தப்பி தவறி அம்மா அந்தப் பக்கம் போகறப்ப அந்த பேனரை பாத்தாலோ, அல்லது கட்சிகாரங்களே யாராவது உங்க மேல பொறாமை கொண்டவங்க அம்மா காதுக்கு கொண்டு போயிட்டாங்கன்னா அப்புறம் உங்களை கட்சியை விட்டே தூக்கிடுவாங்க அது மட்டுமில்லாம தங்கள் தலைவியை அவமானப் படுத்துனதால கட்சிகாரங்க முழுக்க எதிரி ஆகிடுவாங்க, சொல்லிபுட்டேன்…..
*******************************************************************************
”ஹிந்துஸ்தான் பெட்ரோல் பங்க்குல இந்துக்கள் மட்டும்தான் பெட்ரோல் போடுறாங்களா? முஸ்லீம்கள் போடுறதில்ல!!!!
…..காதர் பாய் கறி கடையில முஸ்லீம்கள் மட்டும்தான் கறி வாங்குறாங்களா? இந்துக்கள் வாங்குறதில்ல!!!!
வரிசையாக சானல் மாற்றிக் கொண்டே வரும் போது ”கலைமாமணி.திரு, சுந்தர்.சி” அவர்கள் ஒரு வில்லனிடம் இந்த டயலாக் சொல்லிக்கொண்டிருந்தார்.
அட, வித்தியாசமான சிந்தனையா இருக்கே, இந்த சிந்தனை ஏன் இத்தனை நாளா எனக்கு தோணவே இல்லைன்னு நான் யோசிக்க ஆரம்பிக்கும் போதே ‘நமீதா’ சேலை கட்டிய படி (இந்த மாதிரில்லாம் சேலை கட்ட யார் சொல்லி கொடுத்தாங்க மேடம்?), தன்னுடைய வழக்கமான பாணியில் ஆடிக்கொண்டே வந்தார்.
அப்புறம்தான் தெரிந்தது அது கலைமாமணி.திரு, சுந்தர்.சி அவர்கள் நடிக்கும் ‘தீ’ படத்தின் டிரைலராம். அடுத்து வந்த காட்சிகள், எல்லாம் அந்தப் படம் எந்த லட்சணத்தில் இருக்கும் என்பதை தெளிவாக காட்டின.
அதுவும் படம் சன் குழுமத்தோடது. செத்தானுங்கடா தமிழ்நாட்டுக் காரனுங்க, இனி இந்த படம் வெளி வரும் வரை 5 நிமிஷத்துக்கொரு முறை இதுக்கு விளம்பரம் வரும், படம் வந்ததுக்கப்புறம் சன் நியூஸிலேயே, இது தலைப்பு செய்தியாக வரும், தொடர்ந்து அடுத்த படம் இதே குழுமம் வெளியிடும் வரை டாப் டென்ல முதல் இடத்துல வரும் (இப்படியே வரும் வரும்னு குணா ஸ்டைல்ல சொல்லிகிட்டே இருக்க வேண்டியதுதான்…..)
சரி இவனுங்க தொந்தரவு தாங்க முடியலைன்னு இன்னொரு சானலில் ‘சிம்பு’ “நான் தமிழண்டா, தமிழன்னா எழுந்து நில்லுடா” னு கூவிகிட்டு இருந்தாரு. ஆகா, நமக்கு அடுத்த தமிழினத் தலைவர் கிடைச்சிட்டாருடான்னு சிலாகிக்கும் போதே, கொஞ்ச நேரத்திலியே “where is the party” போட்டாங்க. சும்மா சொல்லக் கூடாது, பாரதி கண்ட புதுமைப் பெண்ணை இயக்குநர் என்னாமா படைச்சிருந்தாரு!!! நடன அசைவுகள்லாம் உலகத் தரம்….
பாட்டையே இந்த லட்சணத்துல எடுத்துட்டு அப்புறம் என்ன வெங்காயத்துக்கு “தமிழா நிமிர்ந்து நில், குமிஞ்சு நில், கமுந்து படு” னு பாட்டு எழுதறாங்களோன்னு தெரியலை. இவங்க போதைக்கு நம்மளை ஊறுகாய் ஆக்கிட்டே இருக்கானுங்க.
கொடுக்கறது டப்பா மசாலா படம், அதுல எதுக்கு ஹிந்துஸ்தான் பெட்ரோலியமும், காதர் பாய் கறி கடையும், தமிழாவும்…
யப்பா புண்ணியவான்களே, நீங்க மசாலா படம் எடுங்க இல்ல மலையாளப் படம் எடுங்க, ஆனா தயவு செஞ்சு அதுல கருத்து சொல்லாதீங்க!!!, நாடு தாங்காது.
நான் கேட்க விரும்பும் பத்து கேள்விகள்
- நடிகைகளிடம்: நீங்க குடிக்கிற பால்ல ‘ஆடை’ இருந்தா குடிப்பீங்களா இல்லை தூக்கிப் போட்டுடுவீங்களா?
- வில்லன்களிடம்: நல்லா பயங்கரமா உடம்பை வளத்துட்டு ‘குச்சி’ மாதிரி இருக்கிற ஹீரோகிட்ட அடி வாங்கும் போது உங்க மனநிலை எப்படி இருக்கும்?
- நடிகர்களிடம்: ‘பஞ்ச்’ டயலாக் பேசும் போது வரும் சிரிப்பை எப்படி கட்டுப் படுத்துறீங்க? (சொல்லிக் கொடுத்தீங்கன்னா அதே டெக்னிக்கை, அந்த சீன் வரும் போது நாங்களும் பயன்படுத்துவோம்!!!)
- இசை அமைப்பாளர்களிடம்: முன்னனாச்சும் இங்கிலீசு பாட்டையோ அல்லது வேறெதோ தெரியாத பாட்டையோ யாருக்கும் தெரியாம சொந்த சரக்கு மாதிரி கொடுத்தீங்க, ஆனா இப்ப அது இல்லாம, பழைய தமிழ் பாட்டையே ‘ரீ மிக்ஸ்’ பண்ணிட்டு, டைட்டில்ல இசைன்னு உங்க பேரை போட்டுக்கறீங்களே அது எப்படி?
- மேக்கப் மேன்களிடம்: நடிகைகளுக்கு மேக்கப் போட எவ்ளோ நேரம் செலவாகுது, எவ்ளோ பவுடர் செலவாகுது?
- பாடலாசிரியர்களிடம்: “பொட்டிக்கடை யக்கா யக்கா” மாதிரியான பாடல்களை எழுதும் போது உங்கள் ‘சொந்தங்களை’ நினைச்சுப் பாத்திருக்கீங்களா?
- இயக்குநர்களிடம்: ஒரே ஒரு பாட்டுக்கு வர்ற நடிகைக்கும், படம் முழுக்க வர்ற நடிகைக்கும் என்ன வித்தியாசம் சார்?
- தமிழக அரசிடம்: “என் புருஷனும் பக்கத்து வீட்டுப் பொண்ணும்”, ”மாமனாரின் இன்ப வெறி” இதெல்லாம் தமிழ் பேருதானே. இப்டி எல்லாம் பேரு வெச்சாலும் வரி விலக்கு கொடுப்பீங்களா சார்?
- வெளி ஆட்களில்
- சுஹாசினி போன்ற திரை விமர்சகர்களிடம்: எப்ப திரை ‘விமர்சனம்’ பண்ணுவீங்க?
- பேட்டி எடுக்கும் நிருபர்களிடம்: நடிக்க வாராட்டி என்ன ஆயிருப்பீங்க, சினிமாக்கு வராட்டி என்ன ஆயிருப்பீங்கன்னு கேக்கறீங்களே, நடிக்க வந்ததால, சினிமாக்கு வந்ததால மக்கள் என்ன ஆனாங்கன்னு என்னிக்காச்சும் கேட்டுருக்கீங்களா?
- மக்களிடம்: ஒரே வேலையை ரெண்டு பேர் செய்யும் போது, ஒருத்தரை மட்டும் ஹீரோன்னும், இன்னொருத்தரை வில்லன்னும் சொல்றீங்களே, அது ஏன்?
இவனுங்க காமெடி தாங்க முடியலடா சாமி….
இந்திய விமானப்படை தனது சாதனையில் இன்னொரு மைல்கல்லை எட்டியுள்ளது. ஆம், இந்திய விமானப்படை, திருவனந்தபுரத்தில் உள்ள தென்னக விமானப்படை பிரிவில் ‘ஏர்சோட்’ என்ற அதிநவீன ராடார் நிறுவ போகிறார்களாம். இந்த ராடார்,மிக சக்தி வாய்ந்ததாம், இது இலக்குகளை மிகத் துல்லியமாக, நெருக்கமாக காட்டக் கூடியதாம். எல்லாம் சரி இதுல காமெடி என்னன்னு கேக்கறீங்களா?
இதை நிறுவ, நம்மாளுங்க சொன்ன காரணம்தான் காமெடி. அதவது 20 ஆம் தேதி, குட்டி விமானங்கள் மூலம் விடுதலைப்புலிகள் கொழும்பில் தாக்குதல் நட்த்தியுள்ளதால், தென்னிந்தியாவை காப்பாற்ற முன்னெச்சிரிக்கையாக இந்த ராடாரை நிறுவியுள்ளனர். எனக்கு என்ன புரியலைன்னா, விடுதலைப் புலிகள் விமானப் படை வெச்சிருக்கறது எனக்கு நினைவு தெரிஞ்ச நாள்லருந்து தெரியும், அதே மாதிரி இலங்கை அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் சண்டை நடப்பதும், விடுதலைப் புலிகள் ஏற்கனவே இலங்கையில் கொழும்பில் விமானம் மூலம் சென்று தாக்குதல் நடத்தியிருப்பதும் தெரிந்த விஷயமே.
அப்டியிருக்க இத்தனை நாள் இல்லாம இப்பதான் நம்ம ஆளுங்களுக்கு அவங்க குட்டி விமானம் வெச்சிருக்கறது ஞாபகத்துக்கு வந்துதா?. கொழும்புல நடந்த மாதிரி இங்கேயும் தாக்குதல் நடத்தலாம்னு முன்னெச்செரிக்கையாக இந்த நடவடிக்கை எடுத்துருக்காங்க. சரி அப்படித்தான் ராடாரை நிறுவிட்டாங்களே, இனிமே நாம் நிம்மதியா இருக்கலாம்னு நினைச்சா அதுலியும் மண். அதாவது, இப்ப போட்டிருக்கறது ஒரு திட்டம்தான். இந்த திட்டம் முடிய இன்னும் ரெண்டு வருஷம் ஆகுமாம். அப்புறம் அதுவரைக்கும், நாங்க எப்டிங்க நிம்மதியா இருக்கறது? ஏன்னா ஒருவேளை யாராவது விமானம் மூலம் தாக்கனும்னு நினைச்சா வந்து சேரவே ரெண்டு வருஷம் ஆகுமா இல்ல தாக்கறவங்க ரெண்டு வருஷம் காத்திருந்து நாம ராடார் வைத்ததுக்கப்புறம் வந்து தாக்குவாங்களா?
ைதுல இன்னொரு விஷயம் என்னான்னா, ஏற்கனவே 2007 ல விடுதலைப்புலிகள் நடத்திய கொழும்பு தாக்குதலில் இருந்தே தென்னிந்திய கடலோர பகுதி முழுதும் விமான எதிர்ப்பு பீரங்கிகளையும், நடமாடும் ராடார்களையும் நிருவி இருப்பதால், அவை 24 மணி நேரமும் கண்காணிப்பில் இருப்பதால் எதிரிகளின் ஊடுருவலை சமாளிக்க எந்நேரமும் தயார் நிலையில் இருக்காங்களாம்.
எனக்கு என்ன சந்தேகம்னா!!! இந்த பீரங்கி மற்றும் ராடார்களாலியோ இல்ல புதுசா நீங்க கொண்டு வர்ற ராடார் மூலமாவோ எங்க மீனவர்களை இலங்கை ராணுவம் எப்பவுமே சுட்டுகிட்டே இருக்கே, அதை தடுக்க முடியாதா? ஏன்னா எனக்கு தெரிஞ்சு விடுதலைப் புலிகள் சம்பந்தப் பட்டு இந்தியாவில் நடந்த ஒரு வன்முறை சம்பவம், ராஜீவ் காந்தி, சில போலீஸ்காரர்கள் மற்றும் சில பொது ஜனங்களின் சாவுதான் (வேறெந்த காங்கிரசு தலைவர்களும் இல்லை!!!!?). அது நடந்து வருஷக் கணக்கு இருக்கும். அதுக்கப்புறம் அவர்கள் தலையிட்டு எந்த வன்முறையோ, அல்லது அவர்கள் தாக்குதலோ தமிழ்நாட்டிலோ அல்லது இந்தியாவின் வேறெந்த பகுதிகளிலோ நடந்தது இல்லை. ஆனா இன்னமும் எங்க மீனவர்களை இலங்கை ராணுவம் சுட்டுடுதான் இருக்கு. அதை தடுக்கறதுக்கு ஏதாவது ஒரு கருவி கண்டு பிடியுங்களேன்….
அப்புறம் இதே மாதிரி ராடார்களை மும்பை கடல் பகுதி, காஷ்மீர், டெல்லி இது மாதிரி இடங்கள்லியும் வெச்சிருங்க. இல்லாட்டி திருப்பி, திருப்பி இன்னொரு கார்கில், இன்னொரு மும்பை சம்பவம்னு ஏதாவது நடந்திட்டே இருக்கும், அப்புறம் நம்ம பத்திரிக்கைகளும் தாஜ் ஹோட்டல்ல செத்தாதான் உயிர் என்று அழுவாச்சி காவியம் படைத்துக் கொண்டே இருக்கும், எல்லாத்துக்கும் மேல இந்தியாவின் பாதுகாப்பு கேள்விக்குள்ளாகிறதா என்று விவாதம் சாருக்கானுக்கு அடுத்த காயம் ஏற்படும்வரையோ, இல்லை ஐஸ்வர்யா அடுத்த படம் நடிப்பதை சொல்லும் வரையிலோ நடத்திக் கொண்டே இருக்கும்…
இன அழித்தலுக்கு எதிராய் ஒன்று கூடுவோம்…
மாபெரும் ஒன்றுகூடல்
சென்னை பெப்ரவரி 22 – 2009 மெரினா கடற்கரை போர் நினைவகம் முதல் காந்திசிலை வரை
அன்புள்ள நண்பர்களுக்கு,
நிறைய பேசியாயிற்று. நிறைய விவாதித்தாயிற்று. மனிதாபிமானம் பற்றி. தற்கொலைப் படையைப்பற்றி. தற்கொலையின் முட்டாள்தனம் பற்றி. தற்கொலையின் தியாகம் பற்றி. ராஜீவ் காந்தியின் கொலைப்பற்றி. அதன் துன்பியல் பற்றி. அதன் மர்மங்கள் பற்றி. இந்திய தேச இறையாண்மைப் பற்றி. தடைசெய்யப்பட்ட இயங்கங்கள் பற்றி. அவைகளைப்பற்றி பேசுவதின் சட்ட சிக்கல் பற்றி. அந்த தடையின் நியாயங்கள் பற்றி .அந்த தடையை உடைப்பதை பற்றி. இனவெறுப்புகள் பற்றி. மனிதக் கேடயங்கள் பற்றி. பாதுகாப்பு வளையம் பற்றி. Cocentration Camp பற்றி. இந்திய தேசிய ஒருமைப்பாடு பற்றி. தமிழ்தேசிய பிரிவினைவாதம் பற்றி. இந்தியனாய் இணைவோம் பற்றி. தமிழனாய் எழுவோம் பற்றி. பயங்கரவாதிகள் பற்றி. விடுதலைப்போராளிகள் பற்றி. மதவெறிகளைப்பற்றி. எல்லாம் கடந்த மனிதநேயம் பற்றி…..
எல்லாம் கடந்து ஒன்று மட்டும் நிச்சயம் அங்கே பிணங்கள் குவிவதை யாரும் மறுப்பதற்கில்லை. இன அழித்தல் நடப்பதை யாரும் அறியாமலில்லை. பிணங்களின் மேல் ஒன்றும் நடக்கவில்லை என்று சத்தியம் செய்ய நாம் தயாராயில்லை.
நேற்று(17- பெப்ரவரி-2009) கொல்லப்பட்ட 104 (50 குழந்தைகள் உள்பட) உயிர்களுக்காய்
இந்த புத்தாண்டில் மட்டும் இறந்த 1700 உயிர்களுக்காய்
4000 மேற்பட்ட படுகாயப்பட்டவர்களுக்காய
இதுவரை 60 ஆண்டுகளில் இறந்த 70 000 அப்பாவி தமிழர்களுக்காய்
ஒன்று கூடுவோம் ஒரே குரலாய் ஒரே குறிக்கோளோடு
‘போர் நிறுத்தம் வேண்டும்.இனஅழித்தலை நிறுத்த வேண்டும். எந்த அரசியல் உள்நோக்கமுமில்லை. எந்த அரசியல் கட்சியுமில்லை
பொதுமக்கள் இணைந்து பொதுமக்களால் நடத்தப்படும் இந்த மாபெரும் அமைதி நடைக்கு ஒன்று கூடுவோம்
இடம்: போர் நினைவகம் தொடங்கி காந்தி சிலை வரை, மெரினா கடற்கரை, சென்னை
நாள் : 22- பெப்ரவரி – 2009 (ஞாயிறு)
நேரம் : மாலை 4 மணி
இதுவரை வர அழைப்பு விடப்பட்டவர்கள் மற்றும் சம்மதித்திருப்பவர்கள்
1.இந்து மதம் சார்ந்த அமைப்புகள் (வாழும்கலை (ART OF LIVING),), இன்னும் பிற அமைப்புகள்
2. முஸ்லீம் மதம் சார்ந்த மதத்தலைவர்கள் மற்றும் அமைப்பினர்
3. எல்லா கிருஸ்து அமைப்புகள்
4. புத்த பிக்குகள்
5. திராவிடர் கழகம் (கட்சிகள் அல்ல)
6. மருத்துவர்கள் அமைப்புகள்
6. பொறியாளர் சங்கம்
7. வணிகர் சங்கங்கள்
8.ஆட்டோ ஓட்டுனர்கள்
9. அரசுத்துறை ஊழியர்கள்
10. அனைத்து கல்லூரி மாணவர்கள் கூட்டமைப்பு
11. விளையாட்டுதுறை சார்ந்த சங்ககங்கள்
12 .கலைத்துறையினர் (நடிகர் சங்கம், துனை நடிகர் சங்கம், இயங்குனர்கள்)
13. தன்னாற்வ தொண்டு நிறுவனங்கள்
14. வணிக நிறுவனங்கள்
15. அனைத்து மீனவ அமைப்புகள்
16. பத்திரிக்கையாளர்கள்
17. பதிவர்கள்
இன்ன பிற அமைப்புகளும்…
ஓர் இனம் அழியும் பொழுது நடுநிலைமை என்பது மனிதத்தன்மை அல்ல. ஒன்று படுவோம் இன அழித்தலைத் தடுப்போம்
இனஅழித்தலுக்கு எதிரான இந்தியர்கள் www.indiansagainstgenocide.org
உங்கள் நண்பர்களுக்கு தெரியபடுத்துங்கள். அழைத்து வாருங்கள். இந்த அமைதி நடையின் மூலம் ஓர் அமைதியைக்கோருவோம்.
பாமரனின் ‘படித்ததும் கிழித்ததும்’
கவுண்டமணியோட நக்கலை கேள்விப்பட்டிருப்பீர்கள், பாமரனோட நக்கலை தெரியுமா?
அவருடைய ‘படித்ததும் கிழித்ததும்’ புத்தகத்தை படித்தால் உங்களுக்குப் புரியும்.
பாமரனின் சில சில கட்டுரைகளை அவ்வப்போது படித்ததுண்டு. ஆனால் முழு புத்தகமாக படித்தது, புத்தக கண்காட்சி சென்று வாங்கிய வெவ்வேறு புத்தகங்களில் ஒன்றான இந்த பாமரனின் ‘படித்ததும் கிழித்ததும்’ புத்தகம்தான்.
வெறுமனே ஒரு பக்க, இரு பக்க கட்டுரைகள்தான் ஒவ்வொன்றும், ஆனால் ஒவ்வொரு நிகழ்விற்கோ, செய்திக்கோ பாமரன் அடித்திருக்கும் கமெண்ட் செம நக்கல்.
‘மக்களுக்காகப் போராடி மடியும் நெல்லை மணி பாத்திரத்தில் நடித்த பசுபதிக்கு தமிழக அரசின் சிறந்த வில்லன் விருது…
அதுவும் சரிதான்
கலைஞராகட்டும், புரட்சித்தலைவியாகட்டும்…
இவர்கள் எல்லாருக்குமே மக்களுக்காகப் போராடும் போராளிகள் யாராயிருந்தாலும் வில்லன்கள்தானே?’
‘நுழைவுத் தேர்வு ரத்தானதால், மதிப்பெண்களுக்கு அடுத்த படியாக, பிறந்த நாளின் அடிப்படையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் – என்னங்கடா உங்க கணக்கு, பொறந்த நாளுக்கும், வயசுக்கும் என்னய்யா சம்பந்தம்…
கிணத்து தண்ணியை ஆத்து வெள்ளமா அடிச்சுட்டு போயிரப்போகுதுன்னு ரெண்டாம் ஆட்டம் சினிமா பாத்துட்டு வந்து கமுந்தடிச்சு தூங்குனவனுக்கு இதுதான் முடிவா? இல்ல, முதல் குழந்தை இப்போதைக்கு வேணாம், ரெண்டாம் குழந்தை எப்பவுமே வேணாம்னு அரசாங்கத்தோட கொள்கையை ஒழுங்கா கடைபிடிச்சவனுக்கு அரசாங்கம் கொடுக்கிற மரியாதை இதுதானா?
நிலைமை இப்படியே போனா, அப்புறம் நாளைக்கு யாரும் பிள்ளை பெத்துக்கறதுக்கு கல்யாணம் வரைக்கும் வெய்ட் பண்ணிட்டு இருக்க மாட்டாங்க, எச்சரிக்கை’
‘எப்படியோ ஒருவழியா 1948ல் எழுதப்பட்ட காந்தி கடிதம் ஏலம் விடுவது தடுக்கப்பட்டு விட்டது. அதற்கு மன்மோகன் சிங், மத்திய கலாச்சார அமைச்சகம், பிரணாப் முகர்ஜி என எல்லோரும் எடுத்துக்கொண்ட முயற்சிகள் சொல்லி மாளாதது.
அந்நியப் பொருள் புறக்கணிப்பு தொடங்கி அந்நிய முதலீடுகள் வரைக்கும் காந்தியையே ஏலம் விட்டாச்சு, இதுல கடுதாசி ஒன்னுதான் பாக்கி’
‘கோர்ட் அவமதிப்பு வழக்கில் ஜெயிலுக்கே போனாலும் சரி, இதை சும்மா விடப் போவதில்லை.
பின்னே அமிதாப் விவசாயி இல்லியாம்! அவருக்கு நிலத்தை ஒதுக்கியது தவறாம்!
அவரு விவசாயி, அவங்க அப்பா விவசாயி, புனேவுல இருக்கற அவங்க அப்பா நெலத்துல அமிதாப் ஏரோட்டியிருக்கார்
சாணி வழிச்சு வறட்டி தட்டியிருக்கார், உரக்கடை கியூவுல கால் கடுக்க நின்னு பாக்டம்பாஸ் வாங்கி தோள்ல வெச்சு தோட்டத்துக்கு கொண்டு போயிருக்கார்
விதர்பாவுல விவசாயிகள் கூட்டம் கூட்டமா தற்கொலை செஞ்சப்ப இந்தப் பயிருக்குப் பயன்படாத பூச்சி மருந்து எனக்காவது பயன்படட்டும்னு அப்படியே வாயில ஊத்தப் போயிருக்கார்
நல்லவேளையா, அந்த நேரம் சுள்ளி பொறுக்கப் போன ஜெயா பச்சன் வந்து காப்பாத்துனதால இந்திய விவசாயமே காப்பாத்தப்பட்டது’
‘நல்லவேளை இளவரசி டயானாவின் வழக்கு முடிவுக்கு வந்தது, அதில் நம் இந்தியப் பத்திரிக்கைகள் ஆற்றிய பங்கிருக்கே!!
பிரிட்டிஷ் பிரஜைகளையே தூக்கி சாப்பிடும் வகையில் ராஜ விசுவாசத்துடன் நடந்து கொண்டன
டயானா ஏதோ இவர்களது அத்தை மகளைப் போலவும்..
இளவரசர் சார்லஸ் ஏதோ இவர்களது சித்தப்பா பையனைப் போலவும்…
புள்ளிவிவரமாக அச்சு பிசகாமல் கொடுத்த செய்திகள் இருக்கிறதே… அடடா…
சார்லஸின் மனைவி டயானா
டோடி பயத்தின் காதலி
டயானாவின் கணவன் சார்லஸ்
கமீலாவின் காதலன்…
இதையே உள்ளூர் கூலித் தொழிலாளிகள் செய்திருந்தால் அந்தக் காதல் கள்ளக்காதலாகி இருக்கும். நம்மவர்கள் காதலை அளப்பதற்கு வைத்திருக்கும் அளவுகோலே தனி ரகம்தான்’
இவையெல்லாம் பாமரனின் நக்கல்களுக்கு சில சாம்பிள்கள்…
அரசியலோ, அரசியல்வாதிகளோ, சமூக நிகழ்வுகளோ, நாட்டு நடப்போ என பல விஷயங்களில் மனிதர் அநியாயத்துக்கு கோபப்படுவதும், நக்கல் அடிப்பதுமாக அழிச்சாட்டியம் பண்ணியிருக்கார்.
என்னதான் நக்கல் அடித்தாலும், அதன் பிண்ணனியிலுள்ள தார்மீக கோபத்தையும், சமுதாய அக்கறையையும் நம்மால் எளிதில் அடையாளம் காணமுடிகிறது.
‘அங்கவை சங்கவை விஷயத்தில் மனிதரின் கோபம் கட்டுக்கடங்காமல் போகிறது
…இன்று எங்கள் தந்தையையும் இழந்தோம், நாட்டையும் இழந்தோமே, என பாரியின் மகளிர் அங்கவையும், சங்கவையும் கதறிய கதறல் புறநானூற்றைப் புரட்டிப் பார்த்தவர்களுக்கு தெரியும்
இவர்கள்தான் இன்றைய தமிழ் சினிமாவின் கேலிப் பொருள்
இதற்கு ‘தமிழ்வாய்ந்த’ வாத்தி ஒருத்தர் பல்லை இளித்துக் கொண்டு ‘வாங்க வந்து பழகுக’ என்று மாமா வேலை பார்க்கும் காட்சியைப் பார்க்கும் போது ரத்தம் சூடேறி விட்டது
வசனம்: சுஜாதா
அங்கவை சங்கவைக்குப் பதிலாக பிரியதர்ஷிணி, தேவதர்ஷினி என்றோ … அபித குஜலாம்பாள், குசல குஜாம்பாள் என்றோ அல்லது சிவாஜிராவ்வுக்குப் பிடித்த பர்வதம்மா பசவம்மா என்றோ போட்டிருக்கலாமே, எது தடுத்தது இவர்கள் அனைவரையும்?…….
‘படங்களுக்குத் தமிழில் பெயர் சூட்டுங்கள்’ என்று பொங்கி எழுந்த தமிழ் பாதுகாப்பு பேரவையினர் இப்போது தமிழ்நாட்டில்தான் இருக்கிறார்களா?
கற்பு விஷயத்தில் குஷ்புவை விட்டேனா பார் என்று தொடை தட்டிய ஜாம்பவான்கள் இப்போது மட்டும் எங்கே போய் தொலைந்தார்கள்…
இதில் வக்கிரத்தின் உச்சகட்டம் என்னவென்றால் இருவருக்கும் கருப்புச் சாயம் பூசிக் காட்டியிருப்பதுதான்…
ஒன்றை மட்டும் நினைவில் வையுங்கள்
கருப்பு என்பது நிறமல்ல, இனம். இதை உங்களுக்குப் ‘புரியும் மொழியில்’ சொல்வதனால்…
Black is not a color
to erase
It is a RACE
இத்தோடு நிறுத்துங்கள் உங்கள் விபரீத விளையாட்டை அப்புறம்…
நாங்களும் ‘பழக’ ஆரம்பித்தால்… எச்சரிக்கை.
வெறுமனே நக்கல் மட்டுமாக இல்லாமல், அவர் சொல்லும் சில யோசனைகளும் பரிசீக்கக் கூடியதாக இருக்கிறது.
நுழைவுத்தேர்வு பிர்ச்சனையில், பிறந்த நாளை ஒரு அளவுகோலாய் வைக்காமல், அரசுபள்ளிகளில் படித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கலாம் (பள்ளி இறுதி வரை அரசு நிறுவனங்களை நிராகரித்து விட்டு, பொறியியல், மருத்துவப் படிப்பின் போது மட்டும் அரசு கல்லூரிகளை நாடுவது எந்த விதம்?)
சமத்துவபுரத்தில் இந்த சாதியை சேர்ந்தோர் இத்தனை சதவீதம், இன்னொரு சாதியை சேர்ந்தோர் இத்தனை சதவீதம் என்று வழங்காமல் உண்மையான சாதி மறுப்பு திருமணம் செய்தவர்களுக்கே முன்னுரிமை வழங்கப் படவேண்டும். அப்பதான் …பையன், … பொண்ணுக்கு லெட்டர் கொடுத்தான், …. பொண்ணு, ….பையன் கூட ஓடிப்போயிட்டா போன்ற பிர்ச்சனைகள் அங்கு எழாது
என்பதெல்லாம் யோசிக்க வேண்டிய விஷயங்கள்தான்…
புத்தகத்தில் இவர் பெரிதும் விளாசுவது தமிழில் பெயர் வைத்தால் வரிவிலக்கு என்ற அரசின் ஆணை, தமிழ் சினிமாவின் போக்கு, அரசியல்வாதிகளின் நடவடிக்கைகள், வேடிக்கை பார்ப்பதன் மூலம் சமூகக் கொடுமைகளை ஊக்கப்படுத்துகிற ஊனமுற்ற சமூகம், கம்யூனிஸ்டுகள் (முக்கியமாக கேரள கம்யூனிஸ்டுகள்) மற்றும் ஜார்ஜ் புஷ்! ஆகியோரைத்தான்
இவை தவிர இந்த புத்தகத்தின் வாயிலாக அவர் அறிமுகப்படுத்துகின்ற சில கவிஞர்கள், அவர்களுடைய கவிதைகள் மிக அருமை
காதல் கவிதைகளுக்குத் தப்பித்து அறிவுப்பூர்வமான எழுத்துக்களோடு உலா வரும் கவிஞர்களுள் மனதுக்கு ஆறுதலாக இருந்ததாக அவர் சிலாகிப்பது அ.ப.சிவா அவர்கள் எழுதிய ”கருப்பு காத்து” என்ற நூலைத்தான்…
‘அட்சயத்திரிதியை
தங்கம் வாங்கினான்
கூடியது
கடன்
ஆறு மாதத்துக்கப்புறம்
சீராய் ஓடியிருந்தது
செலுத்திய
சேரி இரத்தம்!
சனி
6-ம் வீட்டில்
புதன்
2-ம் வீட்டில்
நான்
வாடகை வீட்டில்’
”வீடு வாங்குவதற்குப் பதிலாக வீடு நிறைய புத்தகங்கள் வாங்கிய அப்பாவிற்கு” என்று மனதைத் தொடும் வரிகளோடு “நிறமறியாத் தூரிகை” என்ற கவிதை நூலுக்கு சொந்தக்காரர் கவிஞர் பா. மீனாட்சி சுந்தரம், முதல் நூலை வெளியிட்டது ஆங்கிலத்தில்…
மனிதர்கள் மீது இவர் கொண்டுள்ள காதலுக்கு இவர் வரிகளே சாட்சி
‘வீடற்ற குழந்தையொன்று
சோப்பு நுரையை ஊதியபடி
உடைத்தெறிகிறது
ஓராயிரம் உலகங்களை
இலட்சங்கள் கொடுத்து
வாங்கிய நான்கு சக்கர வாகனம்
எச்சங்களைத் தவிர்க்க
வெட்டியெறியப்பட்ட
மரத்தைத் தேடியவாறு
சுவர் நெடுக மரங்கள்!
எல்லாம் ஒன்றுபோல இருப்பதால்
எதுவென்று தெரிவதில்லை
அப்பாவின் குழிமேடு’
என்ற வரிகள் ஏற்படுத்தும் வலியும், ஏக்கமும்… இந்த புத்தகத்தை நான் வாங்க வேண்டும் என்கிற தாக்கத்தை ஏற்படுத்தியது
காஞ்சிபுரத்தில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் அறிமுகமானதாக, இவரைப் போலவே சமூக கோபங்களை வெளிப்படுத்துவதாக இவர் சிலாகிப்பது பாரதி ஜிப்ரானின் ‘முன்பனிக்காலம்’ என்ற கவிதை நூலைத்தான்…
‘மிகச் சரியாய்
இசைக்கும்
இசைக் கருவிக்கு
இங்கெவனோ
பெயர் வைத்தான்
‘தப்’பென்று
……………………
கடவுளுக்காக
மொட்டையடித்துக்
கொள்கிறான்
மனிதன்…
மனிதனுக்காக
ஒரு மயிரையும்
இழக்கத் தயாராய் இல்லை
கடவுள்.
‘எல்லோரும்
காதலிக்கிறார்கள்
பின்னொரு நாளில்
வருத்தப்படுகிறார்கள்.
சிலர் சேர்ந்ததற்காக
சிலர் பிரிந்ததற்காக’
என்ற கவிதை என்னை ‘அட’ சொல்ல வைத்தது (இப்போ என் கூகள்ல ஸ்டேட்டஸ் மெஸேஜ் இதுதான்)
இது தவிற நம்முடைய சக வலைபதிவர் நவீன் பிரகாஷின் கவிதைகளை, மீண்டும் ஒரு முறை காதலிக்கத் தூண்டுவதாக பெரிதும் பாராட்டுகிறார். இணைய தளங்களில் இளைப்பாறியது போதும், இவற்றை புத்தகமாக போடச் சொல்லி பாராட்டுகிறார். வாழ்த்துக்கள் நவீன் பிரகாஷ்!!!!
ஆனால் இவை எல்லாவற்றையும் விட பாண்டிச்சேரியில் அவருக்கு அறிமுகமான 14 வயது சிறுமி எழுதிய ‘சிறகின் கீழ் வானம்’ என்ற நூல் ஏற்படுத்திய அதிர்ச்சி அவருக்கு மட்டுமில்லை எனக்கும்தான். அந்த சிறுமியின் பெயர் கு.அ. தமிழ்மொழி.
அவருடைய இரு நெத்தியடிகள்
‘அரசு கோப்பு
நடவடிக்கை எடுத்தது
கரையான்…
ஆறுமுகனே
பன்னிரு கைகள் வேண்டும்
வீட்டுப்பாடம்’
மொத்தத்தில் கவுண்டமணி ரசிகனான எனக்கு இந்தப் புத்தகம் மிக பிடித்து விட்டது. நண்பர்கள் யாருக்கு இந்தப் புத்தகம் படிக்க விரும்பினாலும் அணுகலாம் (பதிலுக்கு ஒரு புத்தகத்தோடு மட்டுமே!!!!!)
பதிவர் சந்திப்பு , வீரவணக்கக் கூட்டம்
தோழர்கள் முத்துக்குமார் மற்றும் ரவிக்கான வலைப்பதிவாளர்களின் வீரவணக்கக் கூட்டம்.
வலைப்பதிவுத் தோழர்களே!
ஈழத்தில் இனப்படுகொலைகளை நிகழ்த்திவரும் சிங்களப் பேரினவாதப் பாசிச அரசிற்கு எதிராகவும் அப்பேரின அரசிற்கு ஆயுதங்கள் கொடுத்து போரை வளர்த்து வரும் இந்திய ஏகாதிபத்தியப் பேரரசிற்கு எதிராகவும் அம்மத்திய அரசிற்குத் துணைபோகும் கருணாநிதியின் தமிழினத்துரோக அரசை அம்பலப்படுத்தும் விதமாகவும் தீக்குளித்து மாண்டுபோன போராளித்தோழர்கள் முத்துக்குமார், ரவி மற்றும் ஏனையோருக்கான வீரவணக்கக்கூட்டத்தில் உங்களையும் கலந்துகொள்ள அழைக்கிறோம்.
நாள் : 08.02.2009 ஞாயிறு மாலை 4 மணி
இடம் : நடேசன் பூங்கா, தி.நகர், சென்னை.
மேலும் தொடர்புகளுக்கு :
அதிஷா – 9884881824
ஆழியூரான் – 9840903590
சுகுணாதிவாகர் – 9790948623
லக்கிலுக் – 9841354308
ஒருங்கிணைப்பு : ஒடுக்குமுறைக்கு எதிரான வலைப்பதிவர் குழு.
இப்பதிவை வாசிக்கும் அனைத்து வலைப்பதிவு தோழர்களும் அவரவர் பதிவில் இந்த வீரவணக்க கூட்டத்துக்கான அறிவிப்பினை வெளியிடும்படி கேட்டுக் கொள்கிறோம்