IPL 2013 – Review

ஏறக்குறைய முக்கால்வாசி போட்டிகள் முடிந்தாயிற்று! ஆச்சரியப்படும் படியாக, சென்னை அடுத்தகட்டத்திற்கு நகருமா என்ற சஸ்பென்ஸ்கள் இல்லாமல், பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது! அணியின் ஃபார்மினை வைத்து பார்க்கும் போதும் சரி, விஜய் விளையாடுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்ற நிலையிலும் சரி, சென்னை அணி அடுத்த கட்டத்திற்கு முன்னேற அதிக வாய்ப்புகள்! அடுத்தகட்டத்திற்கு நகருமா என்ற சஸ்பென்ஸ் இல்லாததினாலோ என்னமோ, ஒவ்வொரு போட்டியிலும் கடைசி ஓவர் வெற்றிக்கான சஸ்பென்சினை கொடுத்துக் கொண்டிருக்கின்றனர்! கிரிக்கெட், ஒரு சினிமா என்றால், சென்னை, மிக அதிகமான மசாலா வெற்றிப்படங்களை கொடுத்த பட்டியலில் கட்டாயம் இடம் பெறும்!

ஆனால், இந்த முறை சத்தமில்லாமல் சாதிக்கும் அணிகள் என்றால் ராஜஸ்தான் ராயல்சும், சன் ரைசர்சும் தான்! எப்பொழுதுமே அர்ப்பணிப்பிற்கும், குழுவாக வேலை செய்வதிலும் பிரகாசிக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ், இந்த முறை டிராவிட், வாட்சன், ரகானேயின் துணையுடன் இன்னும் முன்னேறியிருப்பது ஆச்சரியமூட்டினாலும், அவர்கள் அதற்கு தகுதியானவர்களே என்கிற எண்ணத்தியே அதிகம் ஏற்படுத்தியிருக்கிறது! இன்னும் சொல்லப்போனால், எந்த அணிக்காகவும் நிலைப்பாடு எடுக்காதவர்களின் மத்தியில், ராஜஸ்தான் ராயல்ஸ் ஒரு அபிமானத்தை ஏற்படுத்தியிருக்கிறது! அதுவே ஒருவித நிலைப்பாட்டிற்கும் வழிவகுத்திருக்கிறது!

ஆனால், பட்டியலில் 5வது இடத்தில் இருந்தாலும், புள்ளிகளில் இரண்டாவது இடத்தில் இருக்கும் நிலையை சன்ரைசர்ஸ் எப்படி எட்டியது என்பது எல்லார் மனதிலும் இருக்கும் பெரிய ஆச்சரியமே! ஏனோ தமிழ்நாட்டு ஆட்களுக்கு அந்த ஆச்சரியம் சற்று குறைவாக இருக்கலாம்! இத்தனைக்கும் அணியின் கேப்டன் இன்னமும் ஃபார்முக்கு வரவில்லை! ஏற்கனவே வெற்றிகளை குவித்த அணிக்கு, தவானின் வரவு இன்னொரு பலம்! ஆனாலும், இன்னமும் அணியால் 160 ரன்களை சேஸ் செய்ய முடியாது என்ற கமெண்டுகள் இல்லாமல் இல்லை! எப்படியிருந்தாலும், சத்தமேயில்லாமல் வெளிவந்து வசூலை வாரிக் குவிக்கும் படங்கள் ராஜஸ்தானும், சன்ரைசர்சும்!

Gayle-175-not out-24April2013

பெண்களூர் அணி தொடர்ந்து இரண்டாம் இடத்தில் இருக்கிறது. ஆனாலும் அணி பேட்டிங்கில் கெயில், கோலி, டிவில்லியார்ஸ் என்ற மூவரை மட்டுமே பெரிதும் நம்பி இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால், பல அணிகள் ஸ்டாடிஸ்டிக்கலாக வலுவான பேட்டிங் லைன் அப் வைத்திருக்கும் நிலையில், பெண்களுர் மேலோட்டமான லைன் அப்பையே வைத்திருக்கிறது! இந்த வீக்னெஸ்ஸை எக்ஸ்ப்ளாய்ட் செய்யும் போட்டிகள் பெண்களூருக்கு தோல்வியைத் தருகிறது! ஏறக்குறைய எல்லா போட்டிகளிலும், 5 பவுலர்களை வைத்து விளையாடும் அணியில், அருண் கார்த்திக் கீப்பர் பேட்ஸ்மேன் என்பது வலுவற்ற தோற்றத்தையே ஏற்படுத்தினாலும், மேலே சொன்ன மூவரின் ஃபார்மும், ஐந்து பவுலர்களை வைத்து விளையாடுவதால், வலுவான பந்துவீச்சும், அணிக்கு தொடர் வெற்றிகளைத் தந்து கொண்டிருக்கிறது! அதிக பட்ஜெட்டில் வெளிவந்து நல்ல வசூலைத் தரும் மசாலா படம் ராயல் சேலஞ்சர்ஸ்!

ஓவர் பில்டப் கொடுத்து விட்டு சுமாரான வெற்றியைத் தரும் படங்கள் வகையைச் சார்ந்தது மும்பையும், கோல்கத்தாவும் என்றால் மிகப்பெரிய ப்ளாப்பினைத் தரும் படங்கள் டெல்லியும், புனேவும்! அதுவும் புனேயின் பேட்டிங் லைன் அப்புக்கு, அவர்கள் ஸ்கோரினைப் பார்க்கும் போது, அவர்களை விட அந்த ஓனர்களின் மேல்தான் பரிதாபம் வருகிறது! எந்த ஜென்மத்தில் என்ன பாவம் செய்தார்களோ! தினேஷ் கார்த்திக், ரோகித் சர்மா புண்ணியத்தால் மும்பை தப்பி பிழைக்கிறது! சச்சின், பாண்டிங், யுவராஜ், சேவாக், கில்கிறிஸ்ட், பதான் என இந்த ஐபிஎல் முக்கிய வீரர்களுக்கு கொடுத்திருக்கும் அதிர்ச்சி வைத்தியம் கொஞ்ச நஞ்சமல்ல!

பஞ்சாப், லோ பட்ஜெட்டில் வெளிவந்துள்ள சுமாரான வெற்றிப்படம்! கோல்கத்தாவிற்கெதிரான ஒரே ஒரு வெற்றியைத் தவிர்த்து மற்ற வெற்றிகள் எல்லாமே டெல்லி மற்றும், புனேவிற்கு எதிராகத்தான்!

ஏறக்குறைய செமிக்கான போட்டி முழுக்க சென்னை, பெண்களூர், ராஜஸ்தான், ஹைதராபாத், மும்பைக்கிடையேதான்! கோல்கத்தாவிற்கும், பஞ்சாபிற்கும் மிகக் குறைவான வாய்ப்புகள்!

சென்னை:
ஏற்கனவே 18 புள்ளிகள்! அணியும் நல்ல ஃபார்மில்! மீதமுள்ள நான்கு போட்டிகளில் ஒன்றில் வெற்றி பெற்றாலும் வாய்ப்புகள் மிக அதிகம். இரண்டில் வெற்றி என்றால் ஏறக்குறைய கண்டிப்பாக இடம் உண்டு! ஆனால், இங்கே கவனிக்க வேண்டிய விஷயம், சென்னை பெறும் வெற்றி, இன்னொரு அணியின் செமி ஃபைனல் கனவை தகர்க்கக் கூடும்!

பெண்களூர்:
5ல் ஒன்று டெல்லியுடன், இரண்டு பஞ்சாப்புடன் . மற்ற இரண்டும் கோல்கத்தா, சென்னை உடன்! அணி இருக்கும் ஃபார்மிற்கு, டெல்லி, ப்ஞ்சாப்புடனான போட்டிகளை வெற்றி பெற அதிகம் வாய்ப்பு! அது அணிக்கான அரையிறுதி வாய்ப்பையும் தரும்!

மும்பை:
14 புள்ளிகள் . மீதமுள்ள 5 போட்டிகளில் ஒன்று புனேயுடனும், இன்னொன்று பஞ்சாப்புடனும்! மீதி மூன்றும் சக போட்டியாள்ர்களுடன்! புனே, பஞ்சாப்பின் வெற்றியை விட, இந்த மூன்றில் பெரும் வெற்றி, அவர்களை முன்னிறுத்தும், மற்றவர்களை பின் தள்ளும்!

ராஜஸ்தான்:
5ம் டெல்லி, பஞ்சாப், சென்னை ஹைதராபத், மும்பை உடன் போட்டி! எல்லாமே நல்ல போட்டியை ஏற்படுத்தும் ஆட்டங்களாக இருக்கும்! வெற்றி பெற்றால் உண்டு வாழ்வு!

ஹைதராபாத்:
ஏறக்குறைய ராஜஸ்தான் நிலைமையே, ஹைதராபத்துக்கும்! பஞ்சாப், சென்னை, மும்பை, ராஜஸ்தான், கோல்கத்தா என எல்லாவற்றிலும் வெற்றி பெற பெரிய முயற்சிகள் வேண்டும்!

பஞ்சாப்:
மேலே சொன்ன அணிகள் எல்லாம் பெறும் வெற்றியை விட இரு மடங்கு வெற்றியினைப் பெற்றால் மட்டுமே அரையிறுதிக்கு வாய்ப்பு! 6 போட்டிகளும், மேலே சொன்ன போட்டியாளர்களுடன் என்பதால் எந்த வெற்றியும் ஓரளவு சாதகமளிக்கக் கூடியதே! போன முறை சென்னைக்கு ஒரு நெருக்கடியினைக் கொடுத்தது போல், இந்த முறை யாருக்கேனும் தருவார்களா என்பதே பெரிய கேள்வி!

கோல்கத்தா:
சமயங்களில் ஓனர் கிரிக்கெட் விளையாடுகிறார், வீரர்கள் நடிக்கிறார்களோ என்ற கணக்கில் ஆட்டத்தை தரும் அணி! ரொம்ப நாள் கழித்து பெற்ற வெற்றிக்கு கூட மைதானத்தை வலம் வருகின்றனர்! இவர்களுக்கு என்ன பிரச்சினை அல்லது இவர்களேதான் பிரச்சினையா என்பது இன்னும் முழுமையாக விளங்கவில்லை! அணியின் ஒரே நம்பிக்கை, மீதமுள்ள 5 போட்டிகளில் இரண்டில் புனேயுடன்! மீதி மூன்று மும்பை, பெண்களூர், ஹைதராபாத்துடன்! ஆகவே எப்படியாவது இந்த மூன்றில் வெற்றி பெற்றால், மீதமுள்ள இரண்டில், புனே அணியே வெற்றி பெற வைத்து விடுவார்கள் என்ற கனவில் இருக்கிறது அணி!

டெல்லி:
இழக்க ஒன்றுமில்லை! ஸ்பாய்லர் கேம் வேண்டுமானால் கொடுக்கலாம்!

புனே:
யுவராஜ் போன்றோர் தங்களுடைய பேட்டிங் திறமையை மேம்படுத்திக் கொள்ள கிடைத்திருக்கும் நல்ல வாய்ப்பு மீதமுள்ள மேட்சுகள்!

இந்த ஐபிஎல் சில விஷயங்களை உறுதி செய்திருக்கிறது! சேவாக், யுவாராஜ் போன்றோர் தங்களுடைய ஆட்டத்தை மேம்படுத்த வேண்டியதன் அவசியம். அதிலும் சேவாக் இனி இந்திய அணிக்கும் திரும்ப முடியுமா என்பது கேள்விக்குறியே! காம்பீர், கோலி போன்றோரின் சிறுபிள்ளைத் தனமான நடவடிக்கைகள், தோனி என்ற கேப்டன் இந்திய அணியை வழி நடத்த ஏற்படுத்தி வைத்திருக்கும் ஸ்டாண்டர்டு என்ன என்கிற வியப்பு! ஒரு வகையில் இவர்கள்தான் இப்படியேதான் இருப்பார்களா என்கிற ஆதங்கத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது! ரோகித் சர்மாவின் இன்னொரு திறன் வெளிப்படுத்தும் தொடர் இது, கூடுதலாக அணியினை வழி நடத்தும் பண்பும் கூட! ஆனாலும், பயபுள்ளை இந்திய அணிக்காக மட்டும் இப்படி ஆடுவதில்லையே என்கிற ஆதங்கம்! எல்லாவற்றிற்கும் மேலாக விடா முயற்சிக்கும், அடம் பிடிப்பதற்குமுள்ள வித்தியாசத்தை உணராத சச்சினின் மேல் ஏற்படும் பரிதாபம்!

கட்டுரை அதீத்தத்தில் வெளிவந்துள்ளது: http://www.atheetham.com/?p=4825

பிரிவுகள்:கிரிக்கெட்
  1. இன்னமும் ஒரு பின்னூட்டமும் இல்லை
  1. No trackbacks yet.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: