தொகுப்பு

Posts Tagged ‘சட்டம்’

இந்த மயிரான்கள்தான் நீதியைக் காப்பாற்றப் போகிறவர்கள்?

நேற்று சன் நியூஸிலும், ஜெயாவிலும் ஒளிபரப்பப் பட்ட அந்த வீடியோ காட்சிகளைக் கண்டு அதிராதோர் யாரும் இருக்க முடியாது. மனம் இளகியவர்களோ, இதயம் பலகீனமானவர்களோ நிகழ்ச்சியை பார்க்க வேண்டாம் என்ற பீடிகை பலமாக இருந்தாலும், அதைப் பார்த்தவுடன் அது அந்தளவு கொடூர செயலாகத்தான் இருந்தது.

ஒரு சட்டக் கல்லூரி மாணவனை, அதே கல்லூரியைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்டோர் மாறி மாறி குண்டுத் தடிகளாலும், கம்பிகளாலும் அடித்த வண்ணம் இருந்தனர். அடி வாங்கும் மாணவன் நினைவு தப்பி கல்லூரி வெளி கேட்டினருகே மயங்கி விழுந்தாலும் விடாது அடித்தனர் அந்த மாணவர்கள். அதை ஏறக்குறைய 40க்கும் போலீசார், சில பொது ஜனங்கள், ஊடகங்கள் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தன.

போலீசாரே தடுக்க வேண்டுமென்ற என்ற லஜ்ஜையுமின்றி இருக்கும் போது, சக மனிதன் அடிபட்டுக் கிடக்கும் போது கண்டும் காணாமல் செல்லும் பொது ஜனமும், இது போன்ற பிரச்சனைகளில் வியாபாரத்தை பெறுக்க நினைக்கின்ற ஊடகங்கள் மட்டும் தடுத்து விடவா போகிறது. எல்லாரும் 10 அடி தூரத்தில் நின்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருந்தனர்.

இதில் கொடுமை என்னவென்றால், கலவரத்தில் ஈடுபடும் எந்த மாணவர்களும் போலீஸ் இருக்கிறதே என்றோ, ஊடகங்கள் படம் பிடிக்கின்றதே, நாளை தன் முகம் ஒரு ரவுடியாக வருமே என்ற எந்த பயமோ, தயக்கமோ இன்றி கொலை வெறித் தாக்குதலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். (ஒரு வேளை, ரவுடிகளை நாயகனாகவும், கல்லூரி வன்முறைகளை நியாயப் படுத்தி வாலிபத்தில் இதெல்லாம் சகஜம் என்பது போன்ற சினிமாக்களின் தூண்டுதலாக இருக்கலாம்) அடிவாங்கியவரும் சாதரமாணவராகத் தெரியவில்லை, கையிலே நீளக் கத்தியை வைத்திருந்தார் அவர். (நாளை இந்த மயிரான்கள், தன்னுடைய காதலியிடமோ அல்லது காதலியாக்க நினக்கும் தோழியிடமோ இதை ஒரு பெருமையாக பேசிக் கொண்டிருக்கலாம், வீர சாகசத்தை செய்த கர்வத்துடன் உலா வரலாம், தருணத்தை எதிர்பார்த்து பழி வாங்க காத்திருக்கும் கும்பலிடம் அடிபட்டு உயிர் விடலாம்)!.

எல்லாம் முடிந்த பின் கல்லூரி முதல்வரும், போலீசாரும் இணைந்து கொடுத்த நகைச்சுவைப் பேட்டியில் வழக்கமான கடுமையான் நடவடிக்கை எடுக்கப் படும் என்ற உறுதியைக் கொடுத்தனர். ஊடகங்களோ அடிவாங்கிய ஒரு மாணவன் ஆட்டோவில் வலியில் நினைவு பாதி மயங்கிய நிலையில் இருக்கும் மாணவனிடம் என்ன பிரச்சனை என்று கேட்டுக் கொண்டிருந்தனர். அடி பட்டதில் ஒரு மாணவன் கோமா நிலையில், இன்னொருவன் காதறுந்து கிடக்கிறான்.

இது போன்று நடக்கலாம் என்று கல்லூரி நிர்வாகம் ஊகிக்கவில்லையா? அல்லது ஊகித்தும் நடவடிக்கை எடுக்க வில்லையா? அப்புறம் என்ன கருமத்துக்கு அங்க ஒரு நிர்வாகம், முதல்வர் எல்லாம்?

மனம் பதைத்து, என் நண்பனின் தம்பி அந்தக் கல்லூரியில்தானே படிக்கிறான், அவனுக்கு ஏதாவது ஆகியிருக்குமா என்று அழைது கேட்டால், அவனுக்கு ஒன்றுமில்லை. உயர்நீதி மன்றத்தில் வக்கீலாக இருக்கும் நண்பனோ, சாதீப் பிரச்சனையாம்டா என்றான். ஆனால் அவன் சொன்ன மற்ற விஷயங்கள் திடுக்கிட வைத்தது. போலீஸ் உள்ள போக மாட்டாங்கடா, ஏற்கனவே பல பிரச்சனைகளில் போலீஸ் உள்ள போனா, ரெண்டு தரப்பும் சேர்ந்து போலீஸை தாக்கும்டா. பெற்றோரும் அதற்கு ஆதரவு தந்து போலீஸை குற்றம் சொல்லும். அதுக்கு மற்ற சட்டக் கல்லூரிகளில் போராட்டம் நடக்கும். அந்த கடுப்பிலியே போலீஸ் இதெல்லாம் கண்டுக்கறதுல்லடா என்றான்.

ஆனால் இது ஒரு சாதாரண பிரச்சனை இல்லை. சாதீப் பிரச்சனையாக தமிழகத்தின் மூலை முடுக்குகளில் பரவக் கூடிய வாய்ப்பு அதிகம் உள்ளது. முக்கியமாக தமிழகத்தின் மற்ற கல்லூரிகளிலும், தென் தமிழகத்தில் பெரும் கலவரமாக பரவும் வாய்ப்பும் உள்ளது.

இந்த மயிரான்கள் தான் நாளைக்கு நீதி வழங்கப் போகிறார்கள், இந்தியாவின் எதிகாலத் தூண்கள்?. இன்றே சட்டதைக் கையில் எடுக்கும் இவர்கள் கையில் சட்டத்தை நம்பி எப்படிக் கொடுப்பது? இன்றே போலீசாருக்கு பயப்படாதவர்கள் தான், நாளை ஏதோ ஒரு காரணத்துக்காக ஏதோ ஒரு வக்கீலை கைது செய்தால் கோர்ட்டை புறக்கணிப்பார்கள், வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவார்கள். இந்தியாவின் பிரதமராக இருந்தாலும், தேவைப் பட்டால் நீதி மன்றத்தில் நிறுத்தலாம் என்று சொல்பவர்கள், எந்த காரணத்துக்காகவும் ஒரு வக்கீல் போலீசால் கைது செய்யப் படக் கூடாது என்பார்கள்.

ஆனால் இந்த விஷயத்தில் அடிப்படைக் குற்றவாளிகள் நாம் எல்லாருமே என்றுதான் தோன்றுகிறது. சென்னையில் பிரச்சனைகளுக்கு பேர் போனவர்கள் பச்சையப்பா மற்றும் சட்டக் கல்லூரி மாணவர்கள் என்பது எல்லாரும் அறிந்ததே. பல முறை கல்லூரிப் பிரச்சனிகளுக்காகவோ, சோற்றில் உப்பு போட்ட குற்றத்துக்காகவோ அவர்கள் சாலை மறியல், பேருந்தில் கல்லெறிதல் என்று ஆர்ப்பாட்டம் செய்த போது மவுனமாக வேடிக்கைப் பார்த்து அவர்களை ஊக்குவித்த பெற்றோர்கள், ஊடகங்கள், அதிகாரிகள், பொது மக்கள் என அனைவருமே இதற்கு ஒருவகையில் காரணம்தான். அன்று கடுமையான நிலைப்பாட்டை எடுக்கத் தவறியதால்தான் இன்று இந்தளவு பிரச்சனை வளர்ந்து நிற்கிறது.

ஏனிந்த நிலை? இது வெறுமனே சட்டக் கல்லூரி சம்மந்தப் பட்ட பிரச்சனை இல்லை. நீண்ட காலமாகவே சட்டக் கல்லூரிகள் நடைபெறும் விதம், அதற்கான கல்வித் தகுதி, மாணவர்கள் தேர்வு செய்யப்படும் விதம், அங்குள்ள சட்ட திட்டங்கள் என்று பல காரணிகளை சொல்லலாம். ஒரு காலத்தில் டாக்டர், இஞ்சினியருக்கு இணையாக கருதப்பட்ட ஒரு தொழிலுக்குள் வர இன்று ஒரு பெரிய தகுதி எதுவும் தேவையில்லை என்பதே ஒரு அவல நிலைதான் (தகுதி என்பது கல்வித் தகுதி மட்டுமல்ல). பெயருக்கு ஒரு நுழைவுத் தேர்வு, அதுவும் அவ்வளவு கடினமானதாக இருக்காது என்பதுதான் இன்றைய நிலை.

அப்படியே தேர்வு வைத்து சேர்த்தாலும், அங்கே ஒழுங்காக வகுப்புகள் நடப்பதோ, கல்வித் தரம் சரியாக இருப்பதோ, சரியான கட்டுத் திட்டங்கள் இருப்பதோ என்பதெல்லாம் சந்தேகமே! சென்னையில் வக்கீலுக்குப் படிக்கும் என் நண்பனின் தம்பி கூட, 9 மணி முதல் 11 மணி வரை கல்லூரியில் இருப்போம் (வகுப்பில் அல்ல), 11 மணி முதல் 2 மணி வரை தியேட்டரில் இருப்போம், அப்புறம் வீட்டுக்குப் போய் விடுவோம் என்றான். ஏறக்குறைய இரண்டு மாதம் சம்மர் லீவாம் (உண்மையில் வருடம் முழுக்க லீவுதான், இத்தனை கேஸ்கள் தேங்கியிருந்தும், நீதிமன்றங்களுக்கு ஏறக்குறைய ஒரு மாதம் விடுமுறை தருகிற நடைமுறை இருக்கும் போது இது சகஜம் தானே?). இது சென்னையில் மட்டுமல்ல, ஏறக்குறைய எல்லா ஊர்களிலும் உள்ள சட்டக் கல்லூரிகள் மற்றும் அரசு கலைக் கல்லூரிகளின் நிலை இதுதான்….

அரசாங்கம் வெறுமனே குற்றத்தில் ஈடுபடுபவர்களை கைது செய்வதோடு நின்று விடாமல், கல்லூரிகளை சீர்திருத்தவோ, மேம்படுத்தவோ செய்யா விடில், பெற்றோர்கள் இது போன்ற செயல்களை எதிர்க்காவிடில், 19 வயதில், சட்டக் கல்லூரி சேர்ந்த்தும் சாதீக்காக மனிதத்தை தொலைக்கத் தயாராயிருக்கும் இளைஞர்களை உருவாக்கும் சமூக நிலை மாறாவிடில் இத்தகு செயல்களுக்கு நிரந்தரத் தீர்வு என்று ஒன்றும் இருக்கப் போவதில்லை. அடுத்த முறை இது போன்ற செயல்களின் கொடூரம் நம்மையும் அதிகம் தாக்கப் போவதில்லை….

அதுவரை …..

அடப் போங்க சார், நாளை இந்தியா, இங்கிலாந்து கிரிக்கெட் மேட்சுக்கு முக்கியத்துவம் கொடுப்பதா இல்லை ஒரு சின்ன அடிதடிப் பிர்ச்சனைக்கு குரல் கொடுப்பதா என்று போகலாம்
……………….
தொடர்பான பதிவு்:

http://www.narsim.in/2008/11/blog-post_13.html

http://pitchaipathiram.blogspot.com/2008/11/blog-post_13.html

பிரிவுகள்:வன்முறை குறிச்சொற்கள்:, ,