தொகுப்பு

Archive for மார்ச், 2010

அங்காடித் தெரு – திரைப் பார்வை

திரைப்படம் என்பது வெறும் பொழுது போக்கு சாதனம் மட்டும் அல்ல. நம் திரைப்படங்கள் சற்றே தரத்துடனும், பன்முகத் தன்மையும் கொண்டிருக்க வேண்டும் என்ற அங்கலாய்ப்போ, விருப்பமோ கொண்டிருப்பவர்களா நீங்கள்??? அப்படியெனில் எந்த ஒரு விமர்சனத்தையும், விளம்பரக் காட்சிகளையும் கவனிக்காமல் தைரியமாக அங்காடித் தெரு படத்திற்குச் செல்லுங்கள்!!! ஏனெனில், மிகப் புதிதாய் படத்தின் காட்சிகளைக் காணும் போது ஏற்படு(த்து)ம் அதிர்வுகள் வார்த்தைகளில் விவரிக்க முடியாதவை!!!

************************************************************************************************************

இவர்கள், தான் படித்துக் கொண்டிருந்தாலும், தன்னுடைய அடுத்த வேளை சோற்றுக்கு தந்தையை எதிர்பார்த்திருந்து காத்திருந்தாலும், பார்த்தவுடன் ஏற்பட்டு விடும் காதலுக்காக 50 ரவுடிகளை அடித்து துவைக்கக் கூடிய மாவீரர்கள் இல்லை!!! சமூகத்தில் புரையோடிப் போன அக்கிரமங்களைக் கண்டு வெகுண்டு, வில்லினின்று புறப்பட்ட அம்பாக ஓரிரு வாரங்களில் எல்லா ரவுடிகளையும், அரசியல்வாதிகளையும் தீர்த்து சொர்க்க பூமியைப் படைக்கும் பராக்கிரமசாலிகளும் இல்லை!!! ஆனால் இவர்கள் நாயக, நாயகியர்கள்!!!

இவர்களுக்கு வாழ்வில் பெரிய குறிக்கோள்கள் இல்லை, வாழ்வதைத் தவிர! வாழ்வின் அழகியலைப் ப(டி)டைக்க காதலன், காதலி அழகாக இருக்க வேண்டும் என்று எண்ணுபவர்கள் இல்லை, அந்தக் காதல் மட்டும் அழகாக இருக்க வேண்டும் என்று எண்ணுபவர்கள்!!! சிறுவயதில் நமக்குச் சொல்லிக் கொடுக்கப்படும் மனிதனின் அடிப்படைத் தேவைகள் எவை என்ற கேள்விக்கான விடை தேடலிலேயே தம் வாழ்வின் பெரும்பகுதியைச் செலவு செய்பவர்கள்!!! இத்தனைக்கும் நடுவில் இவர்கள் மகிழ்ச்சியைக் காண்பவர்கள்!!! இவர்களே நாயகர்கள்!!!

சற்றே நிறைவான சம்பளமோ, கட்டமைக்கப்பட்ட ஏட்டுக் கல்வியோ, ஏதோ ஒன்றின் காரணமாக நம்மால் சற்றே அசுவாரசியத்துடனோ, சிலரால் முகச் சுளிப்புடனோ எளிதில் கடந்து செல்ல முடிகின்ற அல்லது கவனிக்க மறுத்த கடை நிலை மக்களைப் பற்றிய பதிவு இது!!! சினிமா என்பது வெறுமனே வண்ணக் கனவுகளை உருவாக்குபவையோ அல்லது நம்முடைய கற்பனையையோ, நம்மால் கற்பனை கூட செய்ய முடியாத காட்சிகளைக் கூடவோ நம் கண் கொண்டு வருபவை மட்டும் அல்ல!!! சில மற(றை)க்கப்படுகின்ற உண்மைகளை, உண்மைகளாகவே காட்டவேண்டுபவையும் கூட என்பதை உணர்த்தும் படம்!!! புறக்கணிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை முறையை, உணர்வை மிக அழகாக வெளிப்படுத்தியுள்ள படம்!!! முகத்திற்கு நேரெதிராக நின்று பளீரென்று அறைகின்ற உண்மையின் வெப்பம் இவ்வளவு சூடாகத்தான் இருக்கும் போல!!!

அங்காடித் தெரு

படத்தின் கதையென்று ஒன்று தனியாக இருந்தாலும், அனாயசமாக, போகிற போக்கில் வரும் காட்சிகள் வெளிப்படுத்தும் க(வி)தைகள் பல!!! காதலாக, ஒருவர் காலினை ஒருவர் மிதித்து விளையாடும் காட்சியில் ஆரம்பித்து, அதே காதலாக, கால் போன பின் வாழும் வாழ்க்கையில் முடிகிறது திரைப்படம்!!! படத்தில் எங்கும் எதற்கும் தீர்வினைச் சொல்லிவிடவில்லை இயக்குநர்!!! உன்னுடைய ஊரின் முழு உருவம் எது என்று நீ பார்த்துக் கொள் என்று காட்டியிருக்கிறார், அவ்வளவே!!! சென்னையை மட்டும் முன்னிருத்தி இதுதான் தமிழகம் என்று பழகிப் போன மனதிற்கு தெற்கு மாவட்டங்களின் வாழ்க்கையை நமக்கு காண்பித்திருக்கிறார்!!!

அஞ்சலி, பாண்டி தவிர மற்ற அனைவரும் புதுமுகங்கள்(?)! ஒட்டுமொத்தமாக எல்லாரும் வாழ்ந்திருக்கிறார்கள், ஒரிரு காட்சிகளில் மட்டும் வந்தாலும் சரி, படம் நெடுக வந்தாலும் சரி!!! அத்தனை பேரையும் மீறி அஞ்சலியின் நடிப்பு!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

நாமல்லாம் வாழுறதுக்கே யோசிக்கனும், விக்கத்தெரிஞ்சவன் வாழத்தெரிஞ்சவன், இங்க சிலருக்கு கையில்ல, காலில்ல ஆனா எல்லாருக்கும் வாயும், வயிறும் இருக்கு, இருட்டு குடவுனிலிருந்து ஏசி ஹாலுக்கு செல்வது ’ப்ரமோஷன்’ என சொல்வது என பல இடங்களில் போகிற போக்கில் சொல்லும் வசனங்கள், கருத்துக்கள் மிக அருமை!!! பெரும்பாலும் வேதனைகளை பதிவு செய்திருந்தாலும், ஆங்காங்கு வெளிப்படும் மனிதம், மகிழ்வான தருணங்கள் எல்லாம் வாழ்வில் நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.

படத்தில் குறைகள் இல்லாமலில்லை. இரண்டாம் பாதியில் ஏற்படும் தொய்வு, சற்றே அதிகப்படியான பாடல்கள், எடிட்டிங் என்று பல இருந்தாலும் ஒட்டுமொத்தப் படைப்பின் முன் அவை ஒன்றும் இல்லாமல் போய்விடுகின்றன!!!

மிகச் சாதாரணமாக நமக்கு காட்டிவிட்டாலும், இந்தக் கூட்டத்திற்கு நடுவில் காட்சிகளை எப்படி எடுத்திருக்க முடியும் என்ற சந்தேகமும் அதற்காக ஒட்டு மொத்தக் குழுவும் எந்த அளவு உழைத்திருக்கும் என்ற எண்ணமும் ஏற்படுத்தும் பிரமிப்பு கொஞ்ச நஞ்சமன்று!!! ஒளிப்பதிவு, இசை, நடிகர் நடிகையர்கள் தேர்வு, வசனம் என பல்துறையும் மிக்க் கடுமையாக உழைத்திருப்பதை உணர முடிகிறது. ஒட்டு மொத்தக் குழுவிற்கும் மிகப் பெரிய வணக்கங்கள்!!!

படம் என்னைப் பல விதங்களில் பாதித்திருக்கிறது…

·         முன்பு போல அந்தக் கடைக்கு மனுஷன் போவ முடியாது, கஸ்டமர்சை மதிக்கவே மாட்டாங்க, சேல்ஸ்ம்மேனுங்க என்று முன்பு போல சொல்ல முடிவதில்லை…

·         ரங்கநாதன் தெரு போன்ற தெருக்களை சற்றே வித்தியாசமாக பார்க்க வைத்திருக்கிறது…

·         படத்தை மறுபடி பார்க்க வேண்டும் என்ற உந்துதலுக்கும், ஏன் பார்த்தோம் என்ற நிம்மதியின்மைக்கும் இடையே சிக்கி தவிக்க வைத்திருக்கிறது!!!

பிடித்திருக்கு, பிடிக்கவில்லை, கமர்சியல் வெற்றி, தோல்வி என்பதையெல்லாம் தாண்டி, படத்தின் ஒருகாட்சியாவது பார்ப்பவர் மனதில் மெல்லிய சலனத்தையாவது ஏற்படுத்தாமல் விட்டுவிடாது!!! என்னுடைய ஒரே விருப்பம் இது சரவணா ஸ்டோர் போன்ற ஒற்றை அல்லது சில கடைகளில் மட்டுமோ அல்லது, அண்ணாச்சி போன்ற ஒற்றை மனிதர்களின் குரூரம் மட்டுமோ இல்லை. இந்தக் கட்டமைப்பின் பின்னே அரசு எந்திரம், அரசியல்வாதிகள், அதிகாரிகள், சமூகம், முதலாளிகள் ஏன் சில தொழிலாளிகள் என எல்லாரும் தெரிந்தோ, தெரியாமலோ காரணமாய் இருக்கிறார்கள் என்பதை சரியாகப் புரிந்து கொள்ளவேண்டும் என்பதே!!!

அசாமுக்கு வேலைக்கு செல்லும் சிறு பெண்ணின் தைரியம், அண்ணன் வேலை பார்க்கும் கடையின் பையை சாமி ஃபோட்டோவிற்கு அருகே மாட்டியிருப்பது, பாலியல் தொந்தரவுக்கிற்கு உள்ளானதற்கு அப்புறம் மிகச் சாதாரணமாக துணி விற்பனையில் ஈடுபடும் நாயகி என அதிர்வுகளை ஏற்படுத்தும் காட்சிகளைச் சொல்ல ஆரம்பித்தால் ஏறக்குறைய முக்கால் படத்தை சொல்ல வேண்டியிருக்கும்!!!

வசந்தபாலன் சார், தலைவணங்குகிறேன். உங்களுக்கு என் வணக்கங்களும் மரியாதைகளும்!!!

பிரிவுகள்:சினிமா குறிச்சொற்கள்: