தொகுப்பு
இந்த மயிரான்கள்தான் நீதியைக் காப்பாற்றப் போகிறவர்கள்?
நேற்று சன் நியூஸிலும், ஜெயாவிலும் ஒளிபரப்பப் பட்ட அந்த வீடியோ காட்சிகளைக் கண்டு அதிராதோர் யாரும் இருக்க முடியாது. மனம் இளகியவர்களோ, இதயம் பலகீனமானவர்களோ நிகழ்ச்சியை பார்க்க வேண்டாம் என்ற பீடிகை பலமாக இருந்தாலும், அதைப் பார்த்தவுடன் அது அந்தளவு கொடூர செயலாகத்தான் இருந்தது.
ஒரு சட்டக் கல்லூரி மாணவனை, அதே கல்லூரியைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்டோர் மாறி மாறி குண்டுத் தடிகளாலும், கம்பிகளாலும் அடித்த வண்ணம் இருந்தனர். அடி வாங்கும் மாணவன் நினைவு தப்பி கல்லூரி வெளி கேட்டினருகே மயங்கி விழுந்தாலும் விடாது அடித்தனர் அந்த மாணவர்கள். அதை ஏறக்குறைய 40க்கும் போலீசார், சில பொது ஜனங்கள், ஊடகங்கள் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தன.
போலீசாரே தடுக்க வேண்டுமென்ற என்ற லஜ்ஜையுமின்றி இருக்கும் போது, சக மனிதன் அடிபட்டுக் கிடக்கும் போது கண்டும் காணாமல் செல்லும் பொது ஜனமும், இது போன்ற பிரச்சனைகளில் வியாபாரத்தை பெறுக்க நினைக்கின்ற ஊடகங்கள் மட்டும் தடுத்து விடவா போகிறது. எல்லாரும் 10 அடி தூரத்தில் நின்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருந்தனர்.
இதில் கொடுமை என்னவென்றால், கலவரத்தில் ஈடுபடும் எந்த மாணவர்களும் போலீஸ் இருக்கிறதே என்றோ, ஊடகங்கள் படம் பிடிக்கின்றதே, நாளை தன் முகம் ஒரு ரவுடியாக வருமே என்ற எந்த பயமோ, தயக்கமோ இன்றி கொலை வெறித் தாக்குதலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். (ஒரு வேளை, ரவுடிகளை நாயகனாகவும், கல்லூரி வன்முறைகளை நியாயப் படுத்தி வாலிபத்தில் இதெல்லாம் சகஜம் என்பது போன்ற சினிமாக்களின் தூண்டுதலாக இருக்கலாம்) அடிவாங்கியவரும் சாதரமாணவராகத் தெரியவில்லை, கையிலே நீளக் கத்தியை வைத்திருந்தார் அவர். (நாளை இந்த மயிரான்கள், தன்னுடைய காதலியிடமோ அல்லது காதலியாக்க நினக்கும் தோழியிடமோ இதை ஒரு பெருமையாக பேசிக் கொண்டிருக்கலாம், வீர சாகசத்தை செய்த கர்வத்துடன் உலா வரலாம், தருணத்தை எதிர்பார்த்து பழி வாங்க காத்திருக்கும் கும்பலிடம் அடிபட்டு உயிர் விடலாம்)!.
எல்லாம் முடிந்த பின் கல்லூரி முதல்வரும், போலீசாரும் இணைந்து கொடுத்த நகைச்சுவைப் பேட்டியில் வழக்கமான கடுமையான் நடவடிக்கை எடுக்கப் படும் என்ற உறுதியைக் கொடுத்தனர். ஊடகங்களோ அடிவாங்கிய ஒரு மாணவன் ஆட்டோவில் வலியில் நினைவு பாதி மயங்கிய நிலையில் இருக்கும் மாணவனிடம் என்ன பிரச்சனை என்று கேட்டுக் கொண்டிருந்தனர். அடி பட்டதில் ஒரு மாணவன் கோமா நிலையில், இன்னொருவன் காதறுந்து கிடக்கிறான்.
இது போன்று நடக்கலாம் என்று கல்லூரி நிர்வாகம் ஊகிக்கவில்லையா? அல்லது ஊகித்தும் நடவடிக்கை எடுக்க வில்லையா? அப்புறம் என்ன கருமத்துக்கு அங்க ஒரு நிர்வாகம், முதல்வர் எல்லாம்?
மனம் பதைத்து, என் நண்பனின் தம்பி அந்தக் கல்லூரியில்தானே படிக்கிறான், அவனுக்கு ஏதாவது ஆகியிருக்குமா என்று அழைது கேட்டால், அவனுக்கு ஒன்றுமில்லை. உயர்நீதி மன்றத்தில் வக்கீலாக இருக்கும் நண்பனோ, சாதீப் பிரச்சனையாம்டா என்றான். ஆனால் அவன் சொன்ன மற்ற விஷயங்கள் திடுக்கிட வைத்தது. போலீஸ் உள்ள போக மாட்டாங்கடா, ஏற்கனவே பல பிரச்சனைகளில் போலீஸ் உள்ள போனா, ரெண்டு தரப்பும் சேர்ந்து போலீஸை தாக்கும்டா. பெற்றோரும் அதற்கு ஆதரவு தந்து போலீஸை குற்றம் சொல்லும். அதுக்கு மற்ற சட்டக் கல்லூரிகளில் போராட்டம் நடக்கும். அந்த கடுப்பிலியே போலீஸ் இதெல்லாம் கண்டுக்கறதுல்லடா என்றான்.
ஆனால் இது ஒரு சாதாரண பிரச்சனை இல்லை. சாதீப் பிரச்சனையாக தமிழகத்தின் மூலை முடுக்குகளில் பரவக் கூடிய வாய்ப்பு அதிகம் உள்ளது. முக்கியமாக தமிழகத்தின் மற்ற கல்லூரிகளிலும், தென் தமிழகத்தில் பெரும் கலவரமாக பரவும் வாய்ப்பும் உள்ளது.
இந்த மயிரான்கள் தான் நாளைக்கு நீதி வழங்கப் போகிறார்கள், இந்தியாவின் எதிகாலத் தூண்கள்?. இன்றே சட்டதைக் கையில் எடுக்கும் இவர்கள் கையில் சட்டத்தை நம்பி எப்படிக் கொடுப்பது? இன்றே போலீசாருக்கு பயப்படாதவர்கள் தான், நாளை ஏதோ ஒரு காரணத்துக்காக ஏதோ ஒரு வக்கீலை கைது செய்தால் கோர்ட்டை புறக்கணிப்பார்கள், வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவார்கள். இந்தியாவின் பிரதமராக இருந்தாலும், தேவைப் பட்டால் நீதி மன்றத்தில் நிறுத்தலாம் என்று சொல்பவர்கள், எந்த காரணத்துக்காகவும் ஒரு வக்கீல் போலீசால் கைது செய்யப் படக் கூடாது என்பார்கள்.
ஆனால் இந்த விஷயத்தில் அடிப்படைக் குற்றவாளிகள் நாம் எல்லாருமே என்றுதான் தோன்றுகிறது. சென்னையில் பிரச்சனைகளுக்கு பேர் போனவர்கள் பச்சையப்பா மற்றும் சட்டக் கல்லூரி மாணவர்கள் என்பது எல்லாரும் அறிந்ததே. பல முறை கல்லூரிப் பிரச்சனிகளுக்காகவோ, சோற்றில் உப்பு போட்ட குற்றத்துக்காகவோ அவர்கள் சாலை மறியல், பேருந்தில் கல்லெறிதல் என்று ஆர்ப்பாட்டம் செய்த போது மவுனமாக வேடிக்கைப் பார்த்து அவர்களை ஊக்குவித்த பெற்றோர்கள், ஊடகங்கள், அதிகாரிகள், பொது மக்கள் என அனைவருமே இதற்கு ஒருவகையில் காரணம்தான். அன்று கடுமையான நிலைப்பாட்டை எடுக்கத் தவறியதால்தான் இன்று இந்தளவு பிரச்சனை வளர்ந்து நிற்கிறது.
ஏனிந்த நிலை? இது வெறுமனே சட்டக் கல்லூரி சம்மந்தப் பட்ட பிரச்சனை இல்லை. நீண்ட காலமாகவே சட்டக் கல்லூரிகள் நடைபெறும் விதம், அதற்கான கல்வித் தகுதி, மாணவர்கள் தேர்வு செய்யப்படும் விதம், அங்குள்ள சட்ட திட்டங்கள் என்று பல காரணிகளை சொல்லலாம். ஒரு காலத்தில் டாக்டர், இஞ்சினியருக்கு இணையாக கருதப்பட்ட ஒரு தொழிலுக்குள் வர இன்று ஒரு பெரிய தகுதி எதுவும் தேவையில்லை என்பதே ஒரு அவல நிலைதான் (தகுதி என்பது கல்வித் தகுதி மட்டுமல்ல). பெயருக்கு ஒரு நுழைவுத் தேர்வு, அதுவும் அவ்வளவு கடினமானதாக இருக்காது என்பதுதான் இன்றைய நிலை.
அப்படியே தேர்வு வைத்து சேர்த்தாலும், அங்கே ஒழுங்காக வகுப்புகள் நடப்பதோ, கல்வித் தரம் சரியாக இருப்பதோ, சரியான கட்டுத் திட்டங்கள் இருப்பதோ என்பதெல்லாம் சந்தேகமே! சென்னையில் வக்கீலுக்குப் படிக்கும் என் நண்பனின் தம்பி கூட, 9 மணி முதல் 11 மணி வரை கல்லூரியில் இருப்போம் (வகுப்பில் அல்ல), 11 மணி முதல் 2 மணி வரை தியேட்டரில் இருப்போம், அப்புறம் வீட்டுக்குப் போய் விடுவோம் என்றான். ஏறக்குறைய இரண்டு மாதம் சம்மர் லீவாம் (உண்மையில் வருடம் முழுக்க லீவுதான், இத்தனை கேஸ்கள் தேங்கியிருந்தும், நீதிமன்றங்களுக்கு ஏறக்குறைய ஒரு மாதம் விடுமுறை தருகிற நடைமுறை இருக்கும் போது இது சகஜம் தானே?). இது சென்னையில் மட்டுமல்ல, ஏறக்குறைய எல்லா ஊர்களிலும் உள்ள சட்டக் கல்லூரிகள் மற்றும் அரசு கலைக் கல்லூரிகளின் நிலை இதுதான்….
அரசாங்கம் வெறுமனே குற்றத்தில் ஈடுபடுபவர்களை கைது செய்வதோடு நின்று விடாமல், கல்லூரிகளை சீர்திருத்தவோ, மேம்படுத்தவோ செய்யா விடில், பெற்றோர்கள் இது போன்ற செயல்களை எதிர்க்காவிடில், 19 வயதில், சட்டக் கல்லூரி சேர்ந்த்தும் சாதீக்காக மனிதத்தை தொலைக்கத் தயாராயிருக்கும் இளைஞர்களை உருவாக்கும் சமூக நிலை மாறாவிடில் இத்தகு செயல்களுக்கு நிரந்தரத் தீர்வு என்று ஒன்றும் இருக்கப் போவதில்லை. அடுத்த முறை இது போன்ற செயல்களின் கொடூரம் நம்மையும் அதிகம் தாக்கப் போவதில்லை….
அதுவரை …..
அடப் போங்க சார், நாளை இந்தியா, இங்கிலாந்து கிரிக்கெட் மேட்சுக்கு முக்கியத்துவம் கொடுப்பதா இல்லை ஒரு சின்ன அடிதடிப் பிர்ச்சனைக்கு குரல் கொடுப்பதா என்று போகலாம்
……………….
தொடர்பான பதிவு்:
http://www.narsim.in/2008/11/blog-post_13.html
http://pitchaipathiram.blogspot.com/2008/11/blog-post_13.html
தமிழ் பேச்சு எங்கள் மூச்சு – கவிதைச் சுற்று
“இன்றையதேதியில்
அஜீத், விஜய்யை விட
மின்சாரத்தடைக்குத்தான்
விசிறிகள் அதிகமாக இருக்கின்றது”
வெள்ளிக்கிழமை மாலை வரிசையாக சேனல்களை மாற்றிக் கொண்டே வரும் போது விஜய் டிவியில் ராஜ் மோகனின் இந்தக் கவிதையை தொடர்ந்து ஞாயிற்றுக் கிழமை காலை 9.00 மணிக்கு இந்த வாரம் கவிதைச் சுற்று என்று விளம்பரம் செய்தனர். என்னதான் விரும்பி பார்க்கும் நிகழ்ச்சி என்றாலும் சில காரணங்களால் தொடர்ச்சியாக பார்க்க முடியாத சூழ்நிலையில், இந்த வாரம் கண்டிப்பாக பார்ப்பது என்ற முடிவுடன் ஞாயிற்றுக் கிழமை காலை அதிகாலை 8.45க்கே எழுந்து டீ குடித்து விட்டு வரும் போது மணி சரியாக 9.00.
தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சு நிகழ்ச்சி கடைசி கட்டத்தை நெருங்கியிருந்தது. இதில் விஜயன், நெல்சன், அருள் பிரகாஷ் மற்றும் ராஜ் மோகனின் பேச்சுகள் எனக்கு மிகப் பிடிக்கும்.
அதிலும் விஜயனின் பாவனைகள், பேச்சுகள் அனைத்தும் வைகோவை ஞாபகப் படுத்துவதாக நெல்லைக் கண்ணனே நெகிழ்ந்திருக்கிறார்.
கவிதையாகப் பொழிந்த இந்த ஞாயிறில், கலக்கியதில் முதலிடம் அருள் பிரகாஷுக்குதான். அவரது கவிதைப் பேச்சு சில இடங்களில் ஏனோ எனக்கு வைரமுத்துவை ஞாபகமூட்டியது. நிகழ்ச்சி மரபுச் சுற்ரறு மற்றும் புதுக்கவிதை என இரண்டாகப் பிரிக்கப் பட்டிருந்தது.
மரபுக்கவிதைகள் பகுதிக்கு ”ஆற்றுக்கு பாதையிங்கே யார் போட்டது” எழுதிய கவிஞர் புலமைப்பித்தன் தலைமை வகித்தார். அவர் பேசும் போது, மழை வறண்டு இருக்கும் சமயத்தில் நீருக்கு என்ன செய்வது என்று சிந்தித்து, நீரை தேக்க வேண்டும் என்று சிந்தித்தவன் தமிழன். உலகில் முதன் முதலில் ஆற்றுக்கு குறுக்கே அணையைக் கட்டியவன் கரிகாலன். அப்பேர்பட்ட தமிழனுக்குத்தான் இன்று தண்ணீரில்லை என்று கூறினார்.
தொடர்ந்து நெல்லைக் கண்ணன் பேசும் போது, நம் பெரியவர்கள் கங்கை, சிவன் தலையில் உதிக்கிறது, திருமால் கடலில் பள்ளி கொண்டுள்ளார். குளக்கரையில் பிள்ளையாரை கொண்டுவந்து வைத்தார்கள், கடலுக்கருகில் முருகனை வைத்தார்கள், வேப்ப மரம் அம்மனுக்கு உகந்தது…. இப்படி இயற்கையை கடவுளோடு சேர்த்து சொன்னதே அதை பாதுகாக்க வேண்டுமென்றுதான். ஆனால் நம்மாட்கள் அப்போதும் கோட்டை விட்டார்கள் என்றார்.
அடுத்து “ஆகஸ்ட் 15” (ஆ’கஷ்டப்’ 15) தலைப்பில் தேவகோட்டை ராமநாதன் பேசினார். அவர் கவிதையில் சில வரிகள்,
”காசில்லாமல் கல்வி கஷ்டம்
காவேரியில் தண்ணீர் கஷ்டம்
பாமரருக்கு கஞ்சி கஷ்டம்
படித்தவனுக்கு வேலை கஷ்டம்
…………………………………………………………..
…………………………………………………………..
தமிழைப் படிக்க தமிழருக்கே கஷ்டம்
ஒருமைப்பாடு நாட்டில் கஷ்டம்
ஒலிம்பிக்கில் தங்கம் கஷ்டம்”
தட்சணை வாங்கி தாலியின் ஆயுள்
நிச்சயம் செய்கிற நிதர்சனம் விடுமா?” என்றும் வினவினார்.
அவரைத்தொடர்ந்து சுந்தரராமன் “புவி வெப்பமயமாதல்” தலைப்பில் இரு வெண்பாக்களை பதிவு செய்தார்.
அவரைத் தொடர்ந்து பேசிய நெல்சன் மரபுக் கவிதை சுற்றில் அந்தளவுக்கு சோபிக்க வில்லையென்றாலும், அவரது பேச்சு அர்த்தம் நிறைந்ததாக இருந்தது
மரபுக்கவிதை சுற்றைத் தொடர்ந்து கவிஞர் நந்தலாலா தலைமையில் புதுக் கவிதை மற்றும் ஹைக்கூ கவிதைச் சுற்று ஆரம்பமாகியது.
கவிஞ்ர் நந்தலாலா சொன்ன இரு ஹைக்கூ கவிதைகள்
“கையிலே மை
முகத்திலே கரி’
வருகிறது தேர்தல்”
”பூங்காவில் மாமிச நாற்றம்
காதலர்கள் பேசிக் கொள்கிறார்கள்
ஏதோ ஓர் இதயம் எரிகிறதென்று”
புதுக்கவிதை சுற்றில் முதலில் பேசியது அபிராமி அவர்கள் “இயற்கை” என்ற தலைப்பில்
“அரும்புகழ் கொண்ட உங்கள் முன் இந்த
அரும்புகளின் அரைகுறை கவிதைகள்தான் இதுவும்” என்று ஆர்ப்பாட்டமாக ஆரம்பித்தார்..
“நான் பேருந்தில் பயணம் செய்துகொண்டிருந்தேன்
என்னை ஓர் அழகான் இளம்பெண் கடந்து சென்றாள்
அவள் கைகளில் சூரிய வெப்பம் படாதிருக்க கையுறை அணிந்திருந்தாள்
சுத்தமான காற்றை சுவாசிக்க வேண்டுமென்பதற்காக முகமூடி அணிந்திருந்தாள்
முகம் முழுக்க முகப்பூச்சு!
அழகான பெண்ணுக்கு இந்த நிலைமை என்றால்,
என் பூமித்தாய் எவ்வளவு அழகானவள்!!!
அவளுக்கு நாம் எந்தப் பாதுகாப்பையும் செய்வதில்லையே?” என்பதைத் தொடர்ந்து
“வரமும் சாபமானது – இங்கே
மழையும் அமிலமானது
என் ஓசோன் படலத்தில் ஓட்டையிட்டாய்
உன் பசுமைப் படலத்தை ஏனோ கோட்டை விட்டாய்
உருவாக்க உனக்கு திறமையில்லாத போது
அழிக்கத் தந்தது யார் தந்த உரிமை”
இவரைத் தொடர்ந்து “மின்சாரம்” தலைப்பில் ராஜ்மோகன் பேசினார்
அவரது கவிதை வரிகளில் சில…
“தடங்கலுக்கு வருந்துகிறோம்
வீட்டில் இருப்பதென்னவோ
வண்ணத்தொலைக்காட்சிப் பெட்டிதான்.
மின்சாரம் இல்லாததால் அது
கறுப்பாகவே இருக்கிறது.
அம்மாக்கள் அனைவரும்
எந்த பயமும் இல்லாமல்
கொடிக்கம்பிக்கு பதிலாக
மின்சாரக்கம்பியிலேயே
துணி காயப்போடுகிறார்கள்.
சங்ககாலம் பொற்காலம்
எல்லாம் அந்தக்காலம்
வெளிச்சமில்லாமல்
வகுப்புகளெல்லாம்
வீதிக்கு வந்துவிட்டதே
இதுதான் இருண்டகாலம்.
இன்றையதேதியில்
அஜீத், விஜய்யை விட
மின்சாரத்தடைக்குத்தான்
விசிறிகள் அதிகமாக இருக்கின்றது.
வ.உ.சி. கப்பல்களை
ஒட விட்டார்.
இன்று வ.உ.சி.வீட்டில்கூட
மிக்சி, க்ரைண்டர்
எதுவுமே ஓடுவதில்லை.
குழந்தைகளின்
பிறப்பைத் தடுப்பது
கருத்தடை.
குழந்தைகளின்
சிரிப்பைத் தடுப்பது
மின்தடை.
அதிகாரிகளே…
சீக்கிரம்
எங்கள் வீடுகளுக்கு
சிம்னி விளக்காவது தாருங்கள்.
அதற்கும் பட்ஜெட் போதவில்லையென்றால்
சிக்கிமுக்கி கற்களையாவது தாருங்கள்.
இந்த இருண்ட இரவுகள்
நெருங்கிக் கொண்டிருக்கும்
எங்கள் கடைசி இரவுகளை
நினைவுறுத்துகிறது..”
“மின்சாரத்தடை
முதிர்கன்னியாய்
இருந்த மெழுகுவர்த்திகளுக்கு
முகூர்த்தம் கொடுத்திருக்கிறது….”
ராஜ்மோகனைத் தொடர்ந்து அருள் பிரகாஷ் “காதல்” தலைப்பில் புதுக்கவிதை வழங்கினார்.
“பொறு பெண்ணே!
தாடியின் தத்துவம் தெரியுமா உனக்கு?
காதலிக்கும் போது, என் காதலி முகம் பார்க்க வேண்டுமென்பதற்காக
சவரம் செய்து எங்கள் முகத்தை சலவைக் கல்லாக வைத்திருக்கிறோம்!
பிரிவு நேர்ந்தால்,
அவள் முகம் பார்த்த கண்ணாடியில், வேறு யாரும்
முகம் பார்த்து விடக் கூடாது என்பதற்காக
ஒரு கருப்புத் திரை போட்டு வைத்திருக்கிறோம்
அதற்கு நீங்கள் தாடி என்று பெயர் வைத்திருக்கிறீர்கள்!!!!
காதல் சட்டமன்றத் தேர்தலில்
இதயமெனும் தொகுதிக்கு வேட்பு மனு தாக்கல் செய்தேன்!
விழிப்பார்வையெனும் வாக்குகள் விழந்ததென்னவோ உண்மைதான்,
ஆனால் இந்த வேட்பாளன் தொகுதியிடம் தோற்றுப் போனான்!
இதய டெபாசிட் இழந்து போனான்!
நம் காதல் கூட ஒரு சுதந்திரப் போராட்டம்தான்!
இதயம் நடத்தும் ஒத்துழையாமை இயக்கம்
கண்கள் நடத்தும் உப்புச் சத்தியாகிரகம்
கனவுகள் நடத்தும் வட்ட மேஜை மாநாடு
ஆங்கிலேயப் பிரதிநிதியாய் ஜாதியின் பெயரைச் சொல்லி
பெற்றவர்கள் நடத்தும் ஜாலியின் வாலாபாக் படுகொலை!
நம் காதல் கூட ஒரு சுதந்திரப் போராட்டம்தான்!
இரண்டையுமே கண்டுபிடித்த பின்
தொலைத்து விட்டோம்!!!!!”
அருள்பிரகாஷ் ஹைக்கூவைப் பற்றி பேசும் போது,
“முதல் இரண்டு வரிகளில் வியப்பை ஏற்படுத்த வேண்டும்
கடைசி வரியில் புருவத்தை உயர்த்த வேண்டும்
இதுதான் ஹைக்கூவின் இலக்கணம்..”
தமிழில் இதை குறும்பா என்பார்கள்,
குறுகிய பாவாக இருப்பதாலும்
அடிக்கடி குறும்பு செய்வதாலும் இதைக் குறும்பா என்பார்கள்!!!
இவரைத் தொடர்ந்து “தண்ணீர் பஞ்சம்” தலைப்பில் விஜயன் பேசினார். அவரது கவிதை வரிகளில் சில..
“தண்ணீர் வெறும் தண்ணீரல்ல
நீல வானத்தின் ஆனந்தக் கண்ணீர் இந்த தண்ணீர்
பூமித்தாய் சுரக்கும் தாய்ப்பால் தண்ணீர்
தண்ணீர் வெறும் தண்ணீரல்ல
வானம் பூமிக்கு வீசி எறிகிற வைரக் கற்கள் தண்ணீர்
விண்ணுக்கும், மண்ணுக்கும் இயற்கை அமைத்த பாலம் இந்த தண்ணீர்!
தண்ணீர் வெறும் தண்ணீரல்ல
குழந்தையைச் சுமந்த இடுப்புகளெல்லாம் – இன்று
குடங்களைச் சுமந்து அலைவது ஏனோ
குடமே குழந்தையாய் மாறியதால் தானோ!
பனிக்குடம் உடைத்த மனிதா – உனக்கு
மண்குடம் உடைக்க தண்ணீர் உண்டா?
முடிந்த போருக்கே கண்ணீரில்லை
தண்ணீருக்காக இன்னொரு போரா?”
என்று அசத்திய விஜயனின் ஹைக்கூ கவிதைகள்,
“முத்தமிடாத காவிரி
ஏக்கத்தில் பெருமூச்சு விடும்
வங்கக்கடல்”
“காவிரிப்பிரச்சனை
காவிரிப்பபிரச்சனை
இப்படிப் பேசிப்பேசியே
வறண்டுபோகும் நாக்கு”
எனக்கு நினைவில் இருக்கும் வரிகளை அளித்துள்ளேன். உண்மையில் இது அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய நிகழ்ச்சி……..
பி.கு.1. கவிதை மட்டும் அசத்தலல்ல. அதை கம்பீரமான குரலில் கேட்கும் போது மிக அருமை!
பி.கு.1. இந்த அசத்தலான நிகழ்ச்சியின் மறு ஒளிபரப்பு, வாரநாட்களில் ஏதோ ஒரு நாளில், மாலை வேளையில் இருக்கிறது. வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக பாருங்கள்.
தொடர்பான பதிவு்:
வார்த்தைகள் (A promise is a promise) – part 2
வார்த்தைகள் (A promise is a promise) – part ன் தொடர்ச்சி
ஆகஸ்ட் 2005, கீரீஷ் வாஹ், அந்த குழுவில் இணைந்தது ஒரு முக்கிய தருணம் எனலாம். கீரீஷ் வாஹ் – டாட்டாவின் ஏஸ் (கனரக வண்டி) உருவாக்கத்தில் பெரும் பங்காற்றியவர். அவர் இணைந்த போதுதான், டாட்டாவின் முதல் மூல் (Mule) உருவாகியிருந்தது. (மூல் (Mule) என்பது ஆட்டோமொபைல் பேச்சு வழக்கில் என்ஜின், ட்ரான்ஸ்மிஷன், எலக்ட்ரானிக் சென்சார் மற்றும் சில பாகங்கள் மட்டும் கொண்ட வண்டி – இது சோதனைக்காக மட்டுமே பயன்படுத்துவது). அப்போது அவர்கள் 20bhp சக்தி கொண்ட என்ஜினைத்தான் உபயோகித்தனர்.
ஒரு புறம் டாட்டா நிறுவனம், காரின் தொழில் நுட்பத்தில் ஈடுபட்டிருக்க, மறுபுறம் அதனுடைய இத்தாலிய டிசைன் ஹவுஸ் (I.D.E.A – இண்டிகாவை டிசைன் செய்தது இவர்கள்தான்) நேனோவின் டிசைன், ஸ்டைலிங்கில் ஈடுபட்டிருந்தனர்.
டிசைனிங்கில் ரத்தன் டாட்டா அவரது பங்கை அடக்கி வாசித்தாலும், அவருடைய பங்கு மிக முக்கியமானது என்கிறார் கீரீஷ் வாஹ். ஒவ்வொரு மூல் (Mule) சோதனையின் போதும் அவர் உடனிருந்தார், ஏன் லாஞ்ச் செய்வதற்கு சில நாட்கள் முன்பு கூட அவர் டிசைனில் சில மாற்றங்களை மேற்கொண்டார் என்கிறார் கீரீஷ் வாஹ்.
டிசம்பர் 2005ல் இரண்டாவது மூல் (Mule) சோதனை செய்யப்பட்டது. 2006ன் மத்தியில் முதல் புரோட்டோடைப் (அ) ஆல்ஃபா சோதனை செய்யப்பட்டது. அநத சோதனை ஓரளவு வெற்றிகரமாகவே அமைந்தது. இருப்பினும் காரின் நீளத்தை சற்றே அதிகப்ப்டுத்தவும், இன்னும் சற்று ஸ்டைலாக்கவும் விரும்பினர் (100 mm). அப்படி என்றால் புது வடிவத்திற்கேற்ற அனைத்து பாகங்களையும் மீண்டும் ஒரு முறை உருவாக்க வேண்டும். அவர்கள் மீண்டும் டிராயிங் ஹாலுக்கு சென்றனர்.
அதுவரை பெரும்பாலும் தோல்விகளையே சந்தித்து வந்த அந்த குழுவிற்கு, மிகப் பெரிய சப்போர்ட் மேனேஜ்மென்ட்டிடமிருந்துதான்! தோல்விக்கான காரணத்தை அவர்கள் யார் தலையிலும் சுமத்த வில்லை! இதில் கடினம் என்னவென்றால் தாங்கள் சாதிக்கப் போகிறோம் என்ற நம்பிக்கையை கைவிடாமல் தொடர்வதுதான்.
எந்தவொரு மாடல் பிளானோ, பெஞ்ச்மார்க்கோ இல்லாததாலோ என்னவோ, ஒவ்வொருவரும் பலவித திட்டங்களை வைத்திருந்தனர். இதன் மிகப் பெரிய சவால் என்னவென்றால் அந்த திட்டங்களை ஒரு ஸ்பெக்குள் (Spec) கொண்டு வருவதுதான். ஒரே ஒரு ஒப்புக்கொள்ளக் கூடிய பெஞ்ச்மார்க் இருந்ததென்றால் அது மாருதி 800 தான். ஆனால் அதுவும் 2 லட்சத்திற்கும் அதிக விலையைக் கொண்டது.
சில சமயங்களில் அவர்கள் திரும்பத் திரும்ப சில கடினமான வேலைகளையே செய்ய வேண்டியிருந்தது. நரேந்திரகுமார் ஜெயின், ஏறக்குறைய 150 தெர்மோடைனமிக் ஸிமுலேசன்களை (ஒவ்வொன்றிற்கும் எட்டு முதல் பத்து மணி நேரம் ஆகும்) மேற்கொண்டார். Bodyshopல் ஏறக்குறைய 10 விதமான் ஃப்ளோர் பிளானை உருவாக்கினர்.
நேனோவின் முழு உடலும் இரண்டு முறையும், எஞ்ஜின் மூன்று முறையும், Bodyshopல் 10 விதமான் ஃப்ளோர் பிளானும், இருக்கைகள் பத்து முறையும், காரின் டேஷ் போர்டு ஒரே சமயத்தில் இரண்டு கான்செப்ட் ரன்னிங் …….. இப்படி ஒவ்வொரு விஷயத்திலும் திரும்பத் திரும்ப திருப்தி அடையும் வரை செய்து கொண்டே இருந்தனர்.
நேனோவின் பின்னால் எஞ்ஜின் வைப்பது என்ற முடிவுக்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்னராகவே அவர்கள் முடிவு செய்திருந்தனர். அவர்களுக்கு பிரச்சனையை ஏற்படுத்திய இன்னொரு விஷயம் உயரும் மூலப்பொருட்களின் விலை. உதாரணமாக ஸ்டீலின் விலை உயர்ந்து கொண்டே இருந்ததால், அவர்கள் ஸ்டீன் பயண்பாட்டை குறைத்து அதே சமயம் சிறந்த முறையில் உபயோகிக்கும் முறையையும் கண்டறிந்திருந்தனர்.
அக்டோபர் 2006, முடிவில் அவர்கள் சிறந்ததொரு என்ஜின் டிசைனை 624CC (34bhp) அடைந்தனர். ஒரு உயர் அழுத்த டை காஸ்ட் என்ஜின் இந்தியாவில் உருவாகுவது அதுதான் முதல் முறை!
நரேந்திரகுமார் ஜெயினின் புரோட்டோ டைப் என்ஜினாக உருமாற ஏறக்குறைய 5 மாதங்கள் ஆகின. இதற்காக அவர்கள் 10 பேடன்ட்ஸ் உரிமையை பதிவு செய்திருந்தனர். கார் உருவாக்கியிருந்த போது மொத்த பேடன்ட்ஸ் உரிமைகளின் எண்ணிக்கை 34. இன்னும் வரிசையில் சில நிற்கின்றன.
பாலசுப்ரமணியம் (Head of sourcing) கண்டிப்பாக அனைத்து வெண்டார்களாலும் வெறுக்கப்பட்ட மனிதராக இருந்திருப்பார். பல சூடான விவாதங்கள் அங்கே அரங்கேறியதற்கும், வெண்டார்களுடன் தொடர்ந்து தொடர்பு வைத்திருந்தற்கும் அதே சமயம் அவர்கள் விலை குறைக்கவும் அதற்கான தொழில் நுட்ப மாற்றங்களை செய்வதற்கும் காரண கர்த்தாவாக இருந்தார்.
ஏனெனில் குறைந்த விலை கார் என்ற கனவு நிறைவேற வெண்டார்களும் தங்களது பொருட்களை குறைந்த விலையில் உற்பத்தி செய்ய வேண்டியிருந்தது. அதற்காக அடுத்த கட்ட முதலீடோ, ரீ இன்ஜினியரிங்கோ செய்ய வேண்டியிருந்தது. அந்த முதலீட்டை திரும்பப் பெற அவர்களுக்கு வருடங்கள் பல கூட ஆகலாம். ஆனால் நிர்வாகம் அவர்கள் உடன் இருக்கும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு ஊட்டப்பட்டது. இருப்பினும் அவர்களை சம்மதிக்க வைத்தது மிக கடினமான காரியம் என்பதை ஒப்புக் கொள்கிறார் பாலசுப்ரமணியம்.
வெற்றியை அப்போதுதான் சுவைக்க ஆரம்பித்திருந்த அவர்கள் வெளியுலகில் எதிர்கொண்ட சவால்கள் என்ன? நேனோவை அறிமுகப்படுத்திய போது கிடைத்த வவேற்ப்பு எத்தகையவை? மீண்டும் விரைவில்…………