தொகுப்பு

Archive for ஓகஸ்ட், 2013

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்!

சத்தமேயில்லாமல் ரெண்டு பேர் குழு அறிக்கையை சமர்பித்திருக்கிறது!  அக்னி நட்சத்திரம் படத்தில் வருவது போல் எத்தனை பிரச்சினை வந்தாலும் நேர்மையான அறிக்கையை சமர்பிக்கும் அதிகாரியை சினிமாவில் பார்ப்பதே அரிதாகிக் கொண்டு வரும் நிலையில்,  நேரில் சாத்தியமா என்ன???

கிரிக்கெட்டில் ஊழல், அடுத்து என்ன,விவாதம் அது இது என்று பொங்கிய ஊடகங்கள் எதுவும் இந்த அறிக்கையை இதுவரை கண்டுகொள்ளவேயில்லை!

வண்ணாந்துறையில் பாவாடை காணமல் போனதற்கும், பேருந்து பிக்பாக்கெட் அடிப்பவர்களுக்கும் காவல் துறையிடம் விட்டுவிட்டு பெரிய கொலை வழக்குகளுக்கு உள்ளூர் செக்யூரிட்டி சர்வீசிடம் விடுவது போல், ஸ்ரீசாந்தையெல்லாம் போலீசிடம் விட்டுவிட்டு, பிசிசிஐ என்ற பெரிய மலை விழுங்கியை கண்காணிக்க இரண்டு பேர் கொண்ட குழு? அதுவும் ஏன் தேவையில்லாம் பெரிய விவகாரமாக்குகிறீர்கள் என்று வேறு சீனிவாசன் பொங்குகிறார்!

இறந்த மனிதனுக்கு வைத்தியம் செய்வது போன்று, 13 வருடம் கழித்து குரோனியே மேல் சார்ஜ் சீட் பதிவு செய்ததற்கு டெல்லி காவல்துறையை எல்லாரும் கிண்டல் செய்தாயிற்று!

ஆனாலும், ஏற்கனவே இந்த விஷயத்துல அடிப்பட்டிருந்தாலும், ஐபிஎல்லிலேயே ஏற்கனவே லலித் மோடி ஆட்டம் காட்டியிருந்தாலும், இந்த வருடமும் பெரிய அளவில் பிரச்சினைகள் வெடித்திருந்தாலும், இன்னமும் இது போன்ற விளையாட்டுகளில் இருக்கும் அரசியலை களையும், வெளிப்படைத் தன்மையை ஏற்படுத்தும் நடை முறை எதுவும் இல்லாத நிலையில், இது போன்ற குற்றங்களுக்கு சரியான வழிகாட்டுதலோ அலல்து சட்டங்களோ இல்லாத நிலையை வைத்திருக்கும் முக்கிய பிரமுகர்களின் மேலோ, அமைப்புகளின் மேலோ எந்த விமர்சனமோ நடவடிக்கையோ இருப்பதில்லை!

இப்பொழுது மீண்டும் பழைய நிலையே வந்தாயிற்று. சீனிவாசன் திரும்ப பதவியேற்றாயிற்று. பிசிசிஐயும் இன்னமும் அதே நாதாரித்தனத்தை நாசூக்காய் செய்யும் அமைப்பாகவே இருக்கும்! யார் கண்டார்கள்? எங்களது ஆட்சியில் ஏழைகள் குறைந்திருக்கிறார்கள் என்ற காங்கிரசின் சாதனையைப் போல, சூதாட்டத்திற்கெதிரான நடவடிக்கைகளை எடுத்திருக்கிறோம் என்று கூட அறிக்கைகளை வெளிவரக் கூடும்!

பை தவே, இன்னிக்கு அடுத்த மேட்சுல்ல? ஸ்கோர் என்ன?

பிரிவுகள்:கிரிக்கெட்