இல்லம் > சினிமா > தனி ஒருவன் – திரைப்பார்வை!

தனி ஒருவன் – திரைப்பார்வை!

“இப்படத்தில் வரும் சம்பவங்கள் யாவும் கற்பனையே!, நிஜத்தில் வருவது போன்று கொடூரமானவையல்ல”- என்ற டிஸ்க்ளெய்மருடன்தான் படமே ஆரம்பமாகிறது!

ஹீரோவுக்கென்று ஃப்ளாஸ்பேக் வைத்து பழகிய தமிழ் சினிமாவில், வில்லனின் ஃப்ளாஸ்பேக்குடன், அதுவும் ஒரு பெரும் கட்சியின் தலைவராக வரும் நாசரையே தடுமாறச் செய்யும் காட்சியுடன் அரவிந்த் சாமியின் வாழ்க்கையும், திரைப்படமும் ஆரம்பமாகிறது!

தனி-ஒருவன்-படத்திற்காக-ஒரு-மாதம்-பயிற்சி-எடுத்த-’சித்தார்த்-அபிமன்யு’

காட்சிகளில் ஆங்காங்கே சின்னச் சின்ன ட்விஸ்ட்டுகள், பின் திடீரென பெரியதொரு ட்விஸ்ட் என்று படம் முழுக்க நம்முடைய சுவாரசியத்தை கூட்டிக் கொண்டே செல்கின்றனர்.

டீசர்களுக்கு கூட விமர்சனம் வைக்கின்ற, அதுவும் போஸ்டர் பார்த்தே கதையைச் சொல்கின்ற சோஷியல் மீடியா காலத்தில், நாளை வெளியாகும் படத்தின் நடிகர் ந்டிகைகளை கூட்டி வந்து, முந்தைய நாளே படத்தின் வெற்றி விழாவைக் கொண்டாட வைத்து, அந்த நிகழ்வை ஒளிபரப்பு செய்து, இடையிடையே கேள்வி கேட்கிறேன் பேர்வழி என்று படத்தின் கதையையும், முக்கியக் காட்சிகளையும் காட்டிவிடும் ஊடகங்கள் இருக்கும் காலத்தில் த்ரில்லர், விறுவிறுப்பான படங்களைக் கொடுப்பதே ஒரு சாகசம்தான்!

ஏனெனில் படம் முடிந்து சில நாட்கள் கழித்துச் சென்று படம் பார்க்கும் நபர்களுக்கு, அந்த சுவாரசியத்தில் பலதைக் கெடுத்து விடுவார்கள். நானெல்லாம் படம் பார்ப்பது என்று முடிவெடுத்து விட்டால், படம் பார்க்கும் வரை அதன் ப்ரமோஷன் காட்சிகள், அந்த படக்குழுவின் பேட்டிகள், முக்கியமாக படத்தின் திரை விமர்சனம் என எதையும் பார்க்க மாட்டேன்! படத்தையும், பெயர் போடுவதற்க்கு முன்பிருந்தே பார்க்க வேண்டும், இல்லாவிடின் கடுப்பாகிவிடும். அப்படி ஒரு வியாதி நமக்கு!

படம் பார்த்து முடிந்தவுடன் தோன்றியது, கனக்கச்சிதமான க்ரைம் நாவல் போல் இருக்கிறதே? என்றுதான். சுபா அல்லது பிகேபி போன்ற ஆட்கள் யாருடைய பங்காவது இருக்குமோ என்ற சந்தேகம் இருந்தது! ஆனாலும், டைட்டிலில் அவர்கள் யாருடைய பெயரையும் பார்த்த ஞாபகம் இல்லை. கதை, வசனம், இயக்கம் ஆகியவற்றில் மோகன் ராஜாவின் பெயரே இருந்தது! பின் செய்திகளில் படித்தபின் தான் தெரிந்தது, சுபாவின் பங்கும் படத்தில் இருந்திருக்கிறது!கச்சிதமான பங்களிப்பு! மிக விறுவிறுப்பான திரைக்கதை இப்படத்தின் இன்னொரு ஹீரோ!

ஏறக்குறைய பேராண்மை கெட்டப்பில் ஜெயம் ரவி! ஆக்‌ஷன் படங்களில் ஒன்று ஹீரோ அல்லது வில்லன் கத்தவேண்டும் அல்லது பஞ்ச் டயலாக் பேசவேண்டும் என்கிற விதியை மீறி, அந்தந்த கேரக்டர்களாகவே வரும் அரவிந்தசாமியும், ஜெயம் ரவியும் படத்தின் பெரும் பலம்! ‘ஏய்’ என்ற டயலாக்கே படத்தில் இல்லை!

நயந்தாராவிற்கு வருடங்கள் கூடக் கூட, அழகும், மார்க்கெட்டும் கூடிக் கொண்டே போகின்றது!

jayam1-600x300

வழக்கமான டூயட்டுக்காக மட்டுமான அல்லது லூசுத்தனமாக மட்டுமே நடந்துகொள்வதற்கான ஹீரோயினாக இல்லாமல், ஜெயம் ரவியின் உறுதுணையாக நிற்கின்றார்! அதிலும், ஜெயம் ரவி மனமுடைந்திருக்கும் சமயத்தில் வரும் காட்சியிலும், ப்ரபோஸ் பண்ணும் காட்சியிலும் அள்ளுகின்றார்! அறிமுகக் காட்சியில், ஜெயம் ரவியை விட அதிகம் கைத்தட்டுகள் அவருக்குதான்!
ஜெயம் ரவியின் நண்பர்களுக்கும் சரி, தம்பி ராமையாவிற்கும் சரி, ஏறக்குறைய படத்தில் எல்லாருக்கும் முக்கிய பங்கு இருக்கின்றது!

மோகன் ராஜா இத்தனை நாளாக, புளி சோற்றில் முட்டையை வைத்து பிரியாணி என்று ஏமாற்றியிருந்திருக்கிறார்! இப்பொழுது கச்சிதமான மசாலாவுடன், மொகல் பிரியாணி விருந்து படைத்திருக்கிறார்! கண்டிப்பாக, தெலுங்கு, ஹிந்தியில் இதற்கு கடும் கிராக்கி உண்டு! அரவிந்தசாமி மற்றும் ஜெயம் ரவி எந்தளவு இந்தப்படத்திற்கு பலமோ, அதைவிட பெரும் பலம் மோகன் ராஜா! அதுவும் வசனங்கள் அட்டகாசம்! மிகவும் சின்சியரான உழைப்பைக் கொடுத்திருக்கிறார்! பாராட்டுக்கள்!

TO10

நயந்தாரா மற்றும் ஜெயம் ரவி கேரக்டரைசேஷன் அருமை என்றால், அரவிந்த்சாமியின் கேரக்டரைசேஷன் மிக அருமை! கம்போஸ்டு வில்லன்! வாய்ஸ் மாடுலேஷன்களில் நயந்தாராவும், அரவிந்த்சாமியும் மனதைக் கவர்கிறார்கள்!

”உன் நண்பன் யார்னு தெரிஞ்சா உன் கேரக்டர் தெரியும், ஆனா உன் எதிரி யார்னு தெரிஞ்சாதான் உன் கெப்பாசிட்டி தெரியும்”, வணிகச் செய்தி என்னமோ ஒரு பக்கம்தான், ஆனா அந்த ஒரு பக்கம்தான் மத்த எல்ல பக்கச் செய்திகளுக்கும் காரணம்”,” பணம் இருக்குற இடத்துல எல்லாம் குற்றம் கண்டிப்பா இருக்கும், வாழ்க்கை முழுக்க குற்றங்களைத் தேடி போறவன் நான், வாழ்க்கை முழுக்க பணத்தைத் தேடிப் போறவன் அவன், அதுனால நாங்க கண்டிப்பா சந்திப்போம்” போன்ற ஹீரோவுக்கான வசனமாகட்டும்…

”காதலி சுட்டால், எதிரி மடியில் மரணம்”, “நீ கொடுத்த வாழ்க்கையை நான் எடுத்துக்கலை, ஆனா, நீ கேட்ட வாழ்க்கையை, நான் உனக்கு கொடுக்குறேன், நாட்டுக்காகல்லாம் இல்ல, உனக்காக, எடுத்துக்கோ”, ‘அவ, உலகத்தையெல்லாம் சுத்த வேணாம், என்னச் சுத்தி வந்தா போதும்”, போன்ற, கடைசி வரை கெத்து குறையாத, வில்லன் வசனமாகட்டும், எதையும் பஞ்ச் டயலாக்காக வைக்காமல், இயல்பாக பேசியதுதான் படத்திற்கு பெரிய பில்டப் கொடுக்கிறது!

நகைச்சுவையும் மிக இயல்பாக படத்துடன் வருவது படத்தின் இன்னொரு பலம்! நம்மூரில், அறிவுஜீவிகள் என்ன பண்றாங்கங்கிற வசனம் க்ளாஸ்!

படத்தில் எனக்குப் பிடித்த இன்னொரு மிக முக்கிய விஷயம், ஆர்கனைஸ்டு க்ரைம் பற்றி பேசியிருப்பதுதான்! – எல்லாச் சின்னச் சின்னக் குற்றங்களுக்கு பின்னாடியும் ஒரு பெரிய காரணம் இருக்கனும்னு அவசியமில்ல, ஆனா ஒவ்வொரு ஆர்கனைஸ்டு க்ரைமுக்கு முன்னாடியும் இதுமாதிரியான சின்னச் சின்ன குற்றங்களை வெச்சு திசை நம்மை திருப்பிட்டிருக்காங்க!
நாம் செய்தித்தாள்களில் படித்திருக்கும், எதோ ஒரு தீ விபத்து, எங்கோ நடக்கும் சாலை விபத்து, சாதாரண கடத்தல் போன்ற சம்பவங்களின் பின்புலம் வேறொன்றாகவும் இருக்கக் கூடும்! செய்தித் தாளின் வெவ்வேறு செய்திகளுக்கிடையே இருக்கக் கூடிய தொடர்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது இத்திரைப்படம்! இப்பொழுதும், ஏதேனும் மத்திய அரசு அல்லது மாநில அரசு அலுவலகத்தில் தீ விபத்து ந்டந்தது, உயிரிழப்பு இல்லை, ஆனாலும் மதிப்பு மிக்க ஆவணங்கள் தீயில் அழிந்தன என்ற செய்தியின் பிண்ணனி வெறெதுவுமாகவும் இருக்கக் கூடும்!

சண்டைக்காட்சிகள் அதிகம் இல்லாத ஆக்‌ஷன் படம், நாயகன் ஜெயம் ரவியை விட அதிகம் அபிமானத்தை ஏற்படுத்தும் வில்லனாக அரவிந்த்சாமி, பஞ்ச் டயலாக் இல்லாமலேயே கொடுக்கும் பில்டப்புகள், இரட்டை அர்த்த வசனங்கள் இல்லாத நகைச்சுவை, நாயகனின் காதலுக்காக இல்லாமல், அவனின் கொள்கைக்காக உதவும் நண்பர்கள் கூட்டம் என்று, தனி ஒருவன், தனித்து நிற்கிறான்!

Don’t miss it!

பிரிவுகள்:சினிமா குறிச்சொற்கள்:
  1. இன்னமும் ஒரு பின்னூட்டமும் இல்லை
  1. No trackbacks yet.

பின்னூட்டமொன்றை இடுக