தொகுப்பு
ஹரிதாஸ் – திரைப்பார்வை
நம்ம எல்லாருக்குமே ஆட்டிசம் இருக்கு! இந்தப் பையனுக்கு கொஞ்சம் கூடுதலா இருக்கு, பர்சண்டேஜ்தான் வித்தியாசம்! இது டிசீஸ் இல்லை, ஜஸ்ட் ட்ஸெபிலிட்டி – ஒரு சிறந்த விழிப்புணர்வைத் தரக் கூடிய படமாக வெளிவந்திருக்கிறது ஹரிதாஸ்!
இயக்குநரின் முந்தைய படங்களைப் (நினைத்தாலே இனிக்கும், யுவன் யுவதி) பார்த்தவர்களுக்கு இது மிகப் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தக் கூடும்! இந்தப் படத்தைப் பற்றி நண்பர் மூலமாக அடிக்கடி கேட்டுக் கொண்டிருந்தது படத்தைப் பார்க்கும் ஆவலைத் தூண்டியது! ஆட்டிசத்தை மையமாகக் கொண்டு வெளிவந்திருக்கும் சினிமா என்ற உடனே தாரே சமீன் பரின் சாயல் லைட்டாக வந்து விடுமோ எனப் பயந்தாலும், முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்துடன் இந்தப் படம் மெல்லிய ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது!
எந்த ஒரு குழந்தைக்கும் முதல் ஹீரோ தந்தைதான்! வெறும் தந்தை மகனுக்கிடையேயான பாசம் மட்டுமல்ல, இது போன்ற Special Children வளர்ப்பில் ஏற்படும் சிரமங்கள், அவர்களைப் புரிந்து கொள்ள வேண்டிய முறைகள் எனப் பல பரிமாணங்களைத் தொட்டுச் செல்கிறது படம்!
ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட சிறுவனின் தந்தையாக கிஷோர், எண்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட், ஏற்கனவே மனைவியை இழந்தவர். பாட்டியின் வளர்ப்பில் இருந்த சிறுவனுக்கு, பாட்டியும் இல்லாமல் போக, தான் மட்டும்தான் இனி என்ற உறுதியுடன் வளர்க்க ஆரம்பிக்கும் நிலையில் தெரிகிறது அதிலுள்ள சிரமங்கள்! சமூகம், ஊடகம், கல்வி முறை என அனைத்துமே இயல்பான குழந்தை வளர்ச்சியையே சிரமமாக்கி விட்ட சூழலில், இது போன்ற ஸ்பெஷல் சில்ரன் வளர்ப்பில், பெற்றோர்க்கு இருக்க வேண்டிய அணுகுமுறையை, பொறுமையை மிக இயல்பாய்ச் சொல்லிச் செல்கிறது படம்! தமிழகத்தில் அனைத்து அரசு பள்ளிகளிலும், இது போன்ற சிறுவர்களை, பெற்றோர் உடனிருக்கும் பட்சத்தில் கட்டாயம் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்ற செய்தி கண்டிப்பாக பலரையும் சென்றடையும் இந்தப் படத்தின் முலம்!
கிஷோர், சினேகா, மிக முக்கியமாய் பிரித்திவிராஜ் (சிருவன்) ஆகிய மூவரின் நடிப்பும் மிக அருமை! சின்னச் சின்ன மாற்றங்களிலும், வெறும் ஒற்றை வார்த்தை மட்டுமே வசனம், அதுவும் படத்தின் க்ளைமாக்சில்தான் என்றாலும் படம் முழுக்க பாடி லாங்குவேஜ்களில் வெளுத்து வாங்குகிறான் சிறுவன்! போலீசாய் இருக்கும் போது கம்பீரம், சிறுவனின் தந்தையாக பாசம், போலீசாக் இருந்தாலும், சமூகத்தால் அவமானப்படும் போது இயலாமை எனப் பல பரிமாணங்களில் கிஷோரின் நடிப்பு அருமை! இந்தப்படம் கண்டிப்பாக அவ்ருக்கு ஒரு பேர் சொல்லும் படமாக அமையும்! அமுதவல்லி டீச்சராக சினேகா! கிஷோரின் முன்னால் இயல்பாய் இருக்க முடியாமல் எழும் தடுமாற்றம், சாரியிலிருந்து சிடிதாருக்கு மாறுவது, குழந்தை காணாமல் போன சமயத்தில் எழும் துக்கம், சினச் சின்ன எக்ஸ்பிரசன்ஸ் என எல்லா இடங்களிலும் எங்கும் ஓவர் ஆக்டிங் இல்லாமல் மிக இயல்பான பாத்திரமாய் ஜமாய்த்திருக்கிறார்!
இரு இடங்களில் மட்டுமே வந்தாலும் யூகி சேது அசத்துகிறார்! ராஜ் கபூர், குண்டுப் பையன் ஓமக்குச்சி, எண்கவுண்டர் டீமில் இருக்கும் மற்ற போலீஸ்கள், ஹெட்மாஸ்டராய் வரும் பெண் என எல்லா பாத்திரப்படைப்புகளும் நன்றாகவே அமைந்துள்ளன! சூரியின் காமெடி சற்றே திணிக்கப்பட்டது போல் தோன்றினாலும், ஒரு சிலருக்கு பிடிக்கக் கூடும்!
கிஷோர் சினேகா உறவில் ஏற்படும் திருப்பம், சற்றே சராசரியாக்கிவிடுமோ எனத் தோன்றினாலும், இயக்குநர் மிக அருமையாக அந்த இடத்தைக் கையாண்டுள்ளர்!
படத்தின் மிக முக்கிய பலமாக ரத்னவேலுவும், கதையும், இருந்தாலும், அதற்குச் சரியான வலுவூட்டும் விதத்தில் அமைந்தது ஏஆர். வெங்கடேசனின் வசனமும், விஜய் ஆண்டனியின் இசையும், முகம்மதுவின் எடிட்டிங்கும்! படத்திற்கு முதலில் வசனம் எழுத இருந்தது ஜெமோதான், ஏதோ காரணங்கலுக்காக அது நடைபெறாவிட்டாலும், எந்த இடத்திலும் வசனம் தனிப்பட்டு தெரியாமல் படத்திற்கேற்றார் போல் கலந்து இருப்பது அதன் சிறப்பம்சம்!(மற்றவர்களுக்கெல்லாம் வெற்றி பெற்றால்தான் சார் வெற்றி, ஆனா என் பையனுக்கு கலந்துகிட்டாலே வெற்றி, முடியாதுன்னு சொன்ன என்னை விட, முடியும்னு சொன்ன நீதான்யா கரெக்ட் கோச், எங்களை எப்பவுமே நல்லது நினைக்கச் சொல்லிவிட்டு, நீங்க தப்பா நினைக்கிறீங்களே சார், அவன் கோச் இல்லை, காக்ரோச், இதெல்லாம் சின்னச் சின்ன உதாரணங்கள்) விஜய் ஆண்டனியின் இசை பாடல்களை விட பிண்ணனியில் மிக அருமையாக வந்திருப்பது இந்தப்படத்தில்தான் என நினைக்கிறேன்!
ஆக்ஷன், செண்டிமெண்ட், சோகம் எனக் கொஞ்சம் தவறினாலும் பிரச்சாரமாகவோ அல்லது ஓவர் டோசில் சற்றே டிராமாடிக்காகவோ அலல்து கிளிசேவாகவோ நிரம்பியிருக்கக் கூடிய சூழலில், மிக நேர்த்தியாக எடுத்துச் சென்றது இயக்குநரின் சாமர்த்தியமே! படத்திற்கு கிஷோர்தான் நாயகன் என பலமான யோசனைக்குப் பின்பே முடிவெடுத்திருக்கிறார்! கண்டிப்பாக வெற்றி பெற்றாக வேண்டிய தருணத்தில், அதிநாயகமாக்கம் இல்லாமல், பெரிய நாயகர்கள் இலாமல் கதையை நம்பி இறங்கியிருக்கும் முயற்சிக்கு பாராட்டுகள்! யூகி சேதுவின் பேச்சு, சிநேகாவின் விருப்பத்துக்கு கிஷோரின் மறுமொழி, கோச்சாக வரும் ராஜ்கபூரின் பேச்சு, இடத்தை விற்கச் சொல்லும் இடத்தில் கிஷோரின் முடிவு எனப் பல இடங்களில் இயக்குநர் பளிச்சிடுகின்றார்!
படத்தில் குறைகளோ, லாஜிக்கல் ஓட்டைகளோ இல்லாமலில்லை! மிக மெதுவான திரைக்கதை, முதல் 10 வருடங்களுக்கு வராமலிருந்த கிஷோரைத்தான் ஹீரோவாக நினைக்கும் மகன், எண்கவுண்டருக்கு மட்டுமே என ஒரு டீம், தேவையில்லாத குத்துப்பாட்டு, குழந்தைகளுக்கான(?) படமொன்றில் மிக அதிகமாக மதுவின் பயன்பாடு, குதிரையைப் பார்த்து ஓட ஆரம்பித்த உடனேயே ரன்னாரக்கும் முடிவு என வெவ்வேறு இருந்தாலும், ஒரு நல்ல சினிமாவைத் தந்ததற்காக அதையெல்லாம் விட்டுவிடலாம்!
பின்குறிப்பு: ஐநாக்சில் சின்னத் தியேட்டரிலேயே, குறைந்தது 50 சீட்டுகளேனும் காலியாக இருந்தது! ஏற்கனவே விஸ்வரூபம் ஊர் முழுக்க தியேட்டர்களை ஆக்கிரமித்தது போக மீதியுள்ளவற்றில் பெரும்பகுதி ஆதிபகவனுக்கே! பல இடங்களில் மிகக் குறைந்த தியேட்டர்களிலேயே படம் வெளிவந்துள்ளது! படம் சற்று நல்ல படமாக வேறு இருப்பதால், கமர்ஷியல் வெற்றியினை அறுதியிட்டுச் சொல்லிவிட முடியாது! ஆனாலும் பார்த்தவர்களின் மத்தியிலும், பதிவர்கள், ஊடகக்ங்கள் மத்தியிலும், நல்ல பெயரினை இந்தப் படம் எடுப்பது உறுதி!
நல்லப் படத்தை தவறவிடாதீர்கள்! ஆட்டிசத்தைப் பற்றிய விழிப்புணர்வு கண்டிப்பாக தேவையிருக்கும் சமயத்தில் இந்தப்படத்தைக் கொடுத்த இயக்குநர் மற்றும் படக்குழுவிற்கு பாராட்டுகள்