தொகுப்பு

Archive for ஒக்ரோபர், 2009

தும்பை விட்டு வாலைப்பிடிக்கும்……

சாட்டர்ஜியும், நீல்சிங்கும் அந்நிறுவனத்தின் நிதித்துறையில் மிக முக்கிய பதவி வகிக்கின்றனர்…

அந்நிறுவனம் ஒரு பழம்பெரும் நிறுவனம். அது கால்பதிக்காத துறையோ, அளிக்காத சேவைகளோ கிடையாது. மிக அதிக எண்ணிக்கையிலான தொழிலாளர்களை மட்டுமல்ல, மிகப் பெரிய வாடிக்கையாளர் தளத்தையும் கொண்டிருக்கிறது. மிகச்சிறந்த வல்லுநர்களைக் கொண்டிருப்பதாகச் சொல்லப்படும் அந்நிறுவனம் சமீப காலங்களில் மிகப் பெரிய பொருளாதாரச் சவால்களைச் சந்தித்து வந்தது. சற்றே சோம்பேறியான புத்திசாலிகளைக்(?) கொண்டிருந்ததனாலோ என்னமோ, மிகத் தாமதமாகத்தான் அந்நிறுவனத்தின் செலவீனங்களைக் குறைக்க வேண்டியிருப்பதை அவர்கள் கண்டறிந்தனர்…

உடனே அது தனது முதல்நிலை நிர்வாகக் குழுவிற்கு செலவினைக் குறைக்க ஆலோசனை கேட்டு அறிக்கை விடுகிறது. ஆலோசனைக் குழுவோ, இந்த இரு நிர்வாகிகளின் பொறுப்பில் அச்செயலை விட்டு இன்னும் ஒரு மாதத்தில் அதற்கான திட்டத்தைக் கொடுக்கச் சொல்லி கட்டளையிடுகிறது….இனி அவர்கள் இருவரும் பேசிக் கொள்கிறார்கள்….

இடம்: ஒரு ஐந்து நட்சத்திர விடுதி!!!

நீல்சிங்ஜி, நாளைக்கு வெள்ளிக்கிழமை

ஆமா சாட்டர்ஜி சார், இன்னிக்கு வியாழக்கிழமை!!!

கடுப்பேத்தாதீங்க நீல்சிங்ஜி, நாளைக்கு நாம திட்டத்தைக் கொடுக்க வேண்டிய கடைசி நாள், இன்னும் உருப்படியா நாம ஒண்ணும் செய்யலை….

என்ன பண்றது சாட்டர்ஜி சார், இவ்ளோ கஷ்டமான விஷயத்தை நம்மளை மட்டும் தீர்த்து வைங்கன்னா நாம என்ன பண்றது? எல்லாரும் சேந்து செலவு பண்ணுவாங்களாம், ஆனா செலவு குறைக்கறது எப்படிங்கறதை மட்டும் நாம ரெண்டு பேருந்தான் சொல்லனும்னா நாம என்ன செய்ய முடியும்? இடியட்ஸ்….

சரி, சரி விடுங்க, சரக்கு வாங்கிட்டு வரச் சொல்லி ஆளை அனுப்பிட்டீங்களா???

ஓ, அப்பவே ஆர்டர் பண்ணிட்டேன், சரக்கு எல்லாம் இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடும், ஆனா இந்தப் பாழாப் போன திட்டந்தான் வரமாட்டேங்குது…..அய்ய்ய்யோ, சட்டர்ஜி சார், சரக்கு, சைட் டிஸ் எல்லாம் ஆர்டர் பண்ணேன், ஆனா இந்த ஊறுகாயை மறந்துட்டேனே!!!

எதையோ யோசித்துக் கொண்டிருந்த சட்டர்ஜியின் முகத்தில் திடீரென்று பல்பு எரிந்தது……நீல்சிங்ஜி ஒரு ஐடியா!!! உடனே நம்ம ஆட்கள் எல்லாருடைய பயணத் திட்டத்துலியும் ஒரு மாற்றம் பண்ணிடலாம்…முதல் கட்டமா, நம்ம ஆட்கள் யாரும், ரஷ்யா, நார்வே, கனடா, ஸ்வீடன், ஆப்பிரிக்கா இங்கல்லாம் போகக் கூடாதுன்னு அறிவிச்சிரலாம்!!!

நீல்சிங் புரியாமல் முழிக்க, சாட்டர்ஜியோ மொபைல் போனில் கால்குலேட்டரை எடுத்து கணக்கு போடுகிறார். நீல்சிங்ஜி, இப்பிடி பண்ணா மாசம் ஒரு கோடி செலவு கம்மியாவும்பா!!!

ஒரு கோடிங்கிறது ரொம்ப சின்ன அமவுண்ட்டு சாட்டர்ஜி சார்!!! சரி, வழக்கமா நம்மாளுங்க பிஸினஸ் க்ளாஸ்லதான் போவாங்க, அதுனால அமவுண்ட்டுல இன்னும் ஒரு 30% சேத்துக்கோங்க….

கரெக்ட், அது மட்டுமில்ல, வழக்கமா நம்மாளுங்க வெளிநாடு போனா, ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்லதான் தங்குவாங்க…அதுனால அதையும் கொறைச்சா மாசம் ரெண்டு கோடி வருது…அப்ப வருசத்துக்கு அப்ராக்ஸிமேட்டா 25 கோடி செலவு கம்மியாகும்!!!

ம்ம்ம், ஆனா 25 கோடி ரொம்ப கம்மியாச்சே?

ஆமால்ல,…………. ஒண்ணு பண்ணுங்க, நீங்க வோர்ல்டு மேப்பை எடுத்துட்டு வாங்க, நான் லேப்டாப்பை எடுக்கறேன், இன்னும் சில நாட்டைச் சேத்தலாம்…

ம்ம்ம், ஆங், ஜப்பானை சேத்துங்க, அப்புறம் சீனா, கொரியா, இத்தாலி….சுவிட்சர்லாந்து

யோவ் அறிவிருக்கா? சுவிட்சர்லாந்தை சேத்தச் சொல்றீங்க, அப்புறம் வெயில் காலத்துல நாம எங்க போறதாம்? இந்த சுவிட்சர்லாந்து, தாய்லாந்துலாம் சேத்த வேணாம்…வேணும்னா சிங்கப்பூர், மலேசியா, துபாய்லாம் சேத்துக்கலாம்….

ஆனா சட்டர்ஜி சார், இங்கல்லாம் நம்மளோட டெவலப்மெண்ட்சுக்கு ஏத்த மாதிரி கத்துக்க வேண்டிய விஷயம் நிறைய இருக்கே?

நீல்சிங்ஜி, அதெல்லாம் கம்பெனியோட தலையெழுத்து!!! நமக்கென்ன வந்துது? நாம இந்த திட்டத்தை சொல்ற மாதிரி சொன்னா, நாம நல்லவங்களா போயிடலாம், இப்போதைக்கு அடுத்தா வாரம் நாம ஆப்பிரிக்கா போக வேண்டிய திட்டத்தை கேன்சல் பண்ணிடலாம், அந்த ஊருக்கெல்லாம் போறதுல எனக்கு முன்னமே புடிக்கலை, இதை சாக்கா வெச்சு கட் பண்ணிட்டம்னா நமக்கு நல்ல புகழ் கிடைக்கும், …இப்ப எக்சல்ல கணக்கு போடுங்க…கூட வேணும்னா இன்னும் நிறைய நாடு சேத்திக்கலாம், ஆனா நம்ம டார்கெட் 200 கோடி வருசத்துக்கு சேமிக்கிற மாதிரி கணக்கு காமிக்கனும் நாளைக்கு, என்ன சொல்றீங்க?

சூப்பர் ஐடியா சட்டர்ஜி சார்!!!

ஓகே, நான் சொல்ற நாட்டையெல்லாம் சேத்துங்க…

டொக் டொக்

என்ன அது?

நாம ஆர்டர் பண்ண சரக்குதான் வந்திருக்கு, ஆனா ஊறுகாய்தான் மறந்துட்டேன்…

பராவாயில்லை, பராவாயில்லை விடுங்க, அதான் திட்டமே ரெடியாயிருச்சே, இனிமே எதுக்கு ஊறுகாய்?

———————————————————————————————————————————————————————————————

அது சுமார் 15 வருடங்களேனும் முந்தைய காலகட்டம். பொருளாதரச் சீர்திருத்தக் கொள்கையால் பல இந்திய நிறுவனங்கள் புதுப்புது போட்டிகளையும் சவால்களையும் சந்தித்துக்கொண்டிருந்தன. இதனை எதிர்கொள்ள அவர்கள் பல்வேறு உத்திகளைக் கையாள வேண்டியிருந்தது. வாகனதயாரிப்புத் துறையில் இருந்த மாருதிசுசூகி நிறுவனமும் அப்போது இதே வகையானச் சவாலைத்தான் சந்தித்தது.

பொதுவாக எந்த ஒரு நிறுவனமும் தனது நிறுவனத்தின் விற்பனையை / சேவையை அதிகரிக்க இரு வகையானச் தத்துவங்களைக் கையாள்வார்கள். ஒன்று காம்பிடிட்டிவ் அட்வாண்டேஜ் (Competitive advantage – தனது பொருளை / சேவையை மற்றவையுடன் இருந்து வித்தியாசப்படுத்திக் காட்டுபவை), மற்றொன்று ப்ரடக்டிவ் அட்வாண்டேஜ் (Productive advantage – மற்ற பொருட்களை விட தனது பொருட்களை குறைந்த விலையில் விற்றல்). விலையைக் குறப்பது என்றால் சும்மாவாக குறைத்து விடவிடியாது.

தனது வாகனங்களை குறைந்த விலைக்கு விற்க மாருதி நிறுவனம் அமல்படுத்திய முதல் விஷயம் லீன் மேனேஜ்மெண்ட் (Lean management). இந்த முறையில், அவர்கள் தங்கள் நிறுவனத்தின் அனைத்து பொருட்கள், செயல்கள் எல்லாவற்றையும் கேள்விக்குட்படுத்தினர் – அதன் தேவை என்ன, செலவு என்ன, எவ்வாறு குறைக்க முடியும் என்று. இந்த முறையில் அவர்கள் மாற்றம் ஏற்படுத்திய முதல் விஷயம் – ஒரு தொழிலாளி அசம்ப்ளிங் யூனிட்டில் வேண்டிய டூல்சை எடுக்க நடக்க வேண்டிய தூரத்தை 15 அடிகளிலிருந்து 6 அடியாகக் குறைத்தனர் (இதற்காகச் செலவு செய்து, ராக் சிஸ்டத்தை இடம் மாற்றி, அதனுடன் ஒரு கண்வேயர் சிஸ்டத்தை இணைத்தார்கள்). மிகச் சாதாரணமாகக் காணப்படும் இந்தச் செயலின் மூலம் அவர்கள் அடைந்த பயன், ஒரு நாளில் 20 நிமிடங்களை அவர்களால் சேமிக்க முடிந்தது. இந்த 20 நிமிடங்களில் அவர்கள் கூடுதலாக இரண்டு கார்களை தயாரித்தனர் (மாசம் சுமாராக 60 கார்கள் – ஒரு காருக்கு அடிப்படை லாபம் ரூபாய் 20,000 எனில், அதே நிலையானச் செயல்களுக்கு அவர்கள் அடைந்த கூடுதல் லாபம் (60*20000*12) வருடத்திற்கு ரூ 14,400,000 (ஒரு கோடியே நாற்பத்து நான்கு லட்சம்). அப்படி ஆரம்பித்த அவர்களது சீர்திருத்தம், வெண்டார் மேனேஜ்மெண்ட், டிஸ்ட்ரிப்யூஷன் சிஸ்டம் என்று பல தளங்களுக்கும் கொண்டு சென்றதன் விளைவுதான், குறைந்த விலையில் அவர்களால் காரினை விற்க முடிந்தது.

———————————————————————————————————————————————————————————————

ஆக ’காஸ்ட் கட்டிங்’ என்ற இந்த தாரக மந்திரம் இந்திய துணைக் கண்டத்தின் நிறுவனங்களில் ஒன்றும் புதிய விஷயம் இல்லை. சில நாட்களாக காணமல் போயிருந்த இந்த தாரக மந்திரம் மீண்டும் பழைய உத்வேகத்துடன் பலருடைய வாயிலிருந்தும் உதிரத்துவங்கியிருக்கிறது. ரிசஷன், பொருளாதார மந்தம் என்று பல சவால்களைச் சந்தித்துக் கொண்டிருக்கும் இந்தியச் சந்தையில் இது ஒன்றும் ஆச்சரியப்படத்தக்க விஷயம் இல்லை என்றாலும், நிறுவனங்களில் மட்டுமே உதிர்க்கப்பட்ட இந்த மந்திரத்தை இந்த முறை பல அரசியல்வாதிகளும் உதிர்த்ததுதான் மிகப் பெரிய ஆச்சரியம்…

காஸ்ட் கட்டிங் என்ற தாரக மந்திரத்தை அரசியல்வாதிகள் உதிர்த்தாலும், அதனைத் தொடர்ந்து செய்த காமெடிதான், இதுவரை எந்த திரைப்படத்திலும் வந்த்தை விட மிகப் பெரிய காமெடியாக இருக்கிறது… செலவுகளைக் குறைக்க மத்திய அரசு எடுத்த முதல் நடவடிக்கை தனது அமைச்சர்களை, பாராளுமன்ற உறுப்பினர்களை வெளிநாட்டுப் பயணங்களைக் குறைத்துக் கொள்ளும்படியும், விமானத்தில் சாதாரண வகுப்பில் பயணம் செய்யும் படியும் அறிவுறுத்தியுள்ளது இது தவிர பிரணாப் கேட்டுக்கொண்ட இன்னொரு விஷயம், அமைச்சர்கள் தங்குவதும், செய்தியாளர்களுடனான சந்திப்பை நடத்துவதையும் ஐந்து நட்சத்திர விடுதிகளில் நடத்தக் கூடாது என்பதுதான், ஏனெனில் அது தேவையற்ற செலவு என்பதுதான் காரணமாம்!!! அப்படி என்றால் இத்தனை நாள் அத்தகைய தேவையற்ற செயல்கள்தான் செய்யப்பட்டனவா என்ற கேள்வி யாரும் கேட்கவுமில்லை, அதற்கு பதிலுமில்லை.

அறிவிப்பு வந்தவுடன் சொல்லி வைத்தாற் போன்று சசி தாரூரும், எஸ்.எம். கிருஷ்ணாவும் தங்களது விடுதி அறையை காலி செய்து விட்டு அரசு விருந்தினர் மாளிகைக்கு ஜாகையை மாற்றினார்கள்… அவர்களுக்கென்று அரசு மாளிகை இருக்கும் போது இத்தனை நாள் ஏன் நட்சத்திர விடுதியில் அவர்கள் தங்கினார்கள் என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம்!!! சரி போனாவர்கள் சும்மா சென்றார்களா? அவர்கள் விடுதியில் தங்கியிருந்த பொழுது சொந்த செலவிலதான் தங்கினோம் என்றும், இருந்தும் பிரணாப்ஜியின் வேண்டுகோளுக்காக காலி செய்கிறோம் என்று அறிக்கை வேறு!!! எனக்கு புரியாத விஷயம் என்னவென்றால், அவர்களுடைய சொந்த காசுன்னா யாரு சொன்னா என்னான்னு அங்கேயே தங்கலாமே!!! எதற்காக இதை செலவைக் கம்மி பண்ணும் விஷயத்தில் செய்தியாகக் கொண்டு வரவேண்டும்? இதுதான் போகட்டும் என்றால், இந்த வேண்டுகோளை ஏற்று பஞ்சாயத்து ராஜ் அமைச்சர், நார்வேக்கு போறதா இருந்த பயணத்தை ரத்து செய்கிறேன்னு பெருமையா அறிக்கை விடுகிறார்!!! எனக்கு தலையே சுத்துது, இந்தியாவோட பஞ்சாயத்து முறைக்கும், நார்வேக்கும் என்ன சம்பந்தம்? ஏற்கனவே கூவத்தை சுத்தம் பண்ண ஐடியா கற்றுக் கொள்கிறோம் என்று அமெரிக்காவிற்கு சுற்று பயணம் சென்று வந்த நம்மாட்கள் காதில் இது போன்ற ஐடியாக்கள் விழுந்தால் என்னாவது?

என்னதான் நகைச்சுவைக்கென்று தனித்தனி சானல்கள் வந்தாலும் அரசாங்கத்தின் செய்திகளில் அல்லது அறிவுப்புகளில் தருகின்ற காமெடிக்கு இணையே இல்லைதான். கூட்டணி அரசு என்பதால் ஒன்றாகவே இருந்தாலும் இந்த விஷயத்தில் போட்டி போட்டுக் கொண்டு காமெடி செய்வதில் மாநில திமுக அரசோ அல்லது மத்திய காங்கிரசு அரசோ சளைப்பதில்லை… மத்திய அரசுக்கு செலவுகள் அதிகமாகிறது என்று அமைச்சர்களை விமானத்தில் சாதாரண வகுப்பில் பயணம் செய்யுங்கள் என்று பிரணாப் சொன்னதன் மூலம் தமிழ் செய்தி ஊடகங்கள் உட்பட அனைத்தும் அவரை மொய்த்ததை காணப் பிடிக்கமாலோ என்னமோ, மாநில அரசின் அத்தனை அமைச்சர்களும், அதிகாரிகளும் வேலை வெட்டியை விட்டு விட்டு கருத்தரங்கு நடத்துகிறார்கள், நமக்கு நாமே திட்டத்தின் மூலமாக விருதினை வழங்குகிறார்கள், உலகத் தமிழ் மாநாடு நடத்துப் போகிறோம் என்று அறிக்கை விடுகிறார்கள்…

தாமதமாக செயல்படுத்திவருவதால் பொதுத்துறையின் 54 திட்டங்களில் (தெர்மல் மற்றும் ஹைட்ரோ) ஏற்பட்டுள்ள நட்டம் மட்டுமே சுமார் ரூ 29,000 கோடிகள். இந்த லட்சணத்தில்தான், இன்னும் வாழ்க்கைத்தரத்தில் மற்ற முன்னேறிய மாநிலங்கள் அளவுக்கு முன்னேறாத உத்திரபிரதேசத்தில் ரூ 2,500 கோடிக்கு சிலைகளை அமைக்கும் திட்டம் கனஜோராக நீதிமன்ற உத்தரவையும் மீறி நடக்கிறது. இதேநிலை தொடர்ந்தால் செலவை ஈடுகட்ட, அமைச்சர்களிடமிருந்து மட்டுமல்ல எல்லாரிடமிருந்தும் சம்பளத்தில் 20% வாங்கினாலும் வாங்குவார்கள் (ஆனால் அமைச்சர்களிடம் சொன்னது போல் கண் துடைப்பாக இல்லாமல், நம்மிடம் உண்மையாக வாங்கி விடுவார்கள்)

என்னதான் ஜனநாயகம், மக்கள் அரசு என்று பெயருக்குச் சொன்னாலும், அரசின் பல நடவடிக்கைகளை விருப்பமிருந்தாலும், இல்லாவிட்டாலும், கேள்விக்குட்படுத்தும் உரிமையோ அல்லது தெளிவோ மக்களுக்கு இருப்பதில்லை. தப்பித்தவறி தெளிவடைந்து விடக் கூடாது என்றுதானோ என்னமோ பல விஷயங்களில், அரசுக்கும், பயனாளர்களுக்கும் இடையே பெருத்த இடைவெளியே இருக்கிறது……காஸ்ட் கட்டிங் என்ற விஷயத்தில் மாருதி முதல் இன்றைய நேனோ வரை பல நிறுவனங்கள் முன்னுதாரணமாக இருந்தது மட்டுமல்ல, உலகையே திரும்பிப் பார்க்கவும் செய்துள்ளனர். ஒரு காலத்தில் இந்தியாவில் பொருளாதார்ச் சீர்திருத்தத்தை அறிமுகப்படுத்திய ஒருவருடைய தலைமையில் அமைந்த ஒரு அரசில்தான் இது போன்ற பொறுப்பற்ற, விளம்பரத்தை மட்டுமே தேடுகின்ற, ஆதாயமளிக்காத வெட்டி விஷயங்கள் நடந்தேறுகின்றன என்பது வேதனையை மட்டுமல்ல, நம் நாட்டின் எதிர்காலம் பற்றிய பயத்தையும் ஏற்படுத்துகிறது….

தொடர்புடைய பதிவு:

http://www.nesamudan.com/blog/2009/09/16/austerity/ 

பிரிவுகள்:அரசியல் குறிச்சொற்கள்: