தொகுப்பு
ஆபாவாணன் – ஒரு பன்முகக் கலைஞன்
90 களில் நடந்த சம்பவம் இது. வெறும் பள்ளி ஆண்டு விழாதான் அது. வருடா வருடம் நடக்கும் விழாவைப் போலவே, அந்த வருடமும் எம் பள்ளியில் அந்த விழா கொண்டாடப்பட்டது. ஆனாலும் அந்த வருடம் மட்டும் கட்டுக்கடங்கா கூட்டம் பள்ளி வளாகத்தில். பெற்றோருக்கும், மக்களுக்கும் அனுமதி தரும் விழா அது ஒன்றுதான் என்றாலும், இந்த முறை இந்தளவு கூட்டம் என்பது அனைவரையும் சற்றே ஆச்சரியப்படுத்தினாலும், ஓரளவு அதை முன்னரே ஊகித்து வைத்திருந்தனர் எம் பள்ளியில். சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டவர், அப்பள்ளியின் முன்னாள் மாணவர்தான் என்றாலும், அவருடைய அப்போதைய நிலை பொதுமக்களின் ஆர்வத்திற்கு பெரிதும் காரணமாக இருந்ததுமில்லாமல், வழமையாக கலை நிகழ்ச்சி முடிந்தவுடன் கலைந்து விடும் கூட்டம், அன்று விழா முடியும் வரையும் இருந்து, அந்த சிறப்பு விருந்தினரை கண்டு பேசி, ஆட்டோகிராஃப் வாங்கிக் கொண்டு சென்றது. விருந்தினர் சினிமாத் துறையைச் சேர்ந்தவர் என்ற ஒற்றைக் காரணமே, மக்களின் கவனத்தை இழுக்கும் எனும் போது, இவருடைய சில படங்கள் மாபெரும் வெற்றியடைந்தது மட்டுமில்லாமல், திரைத்துறையில் ஒரு அலையையும் கிளப்பி விட்டது எனில், மக்களின் ஆர்வத்திற்குச் சொல்லவா வேண்டும்??? அந்தப் பள்ளியின் பெயர்: நிர்மலா மேல்நிலைப் பள்ளி, கொளத்தூர், சேலம் மாவட்டம். அந்த சிறப்பு விருந்தினரின் பெயர்: ஆபாவாணன்
80 களின் பிற்பகுதி அது. தமிழ் சினிமாவின் பொற்காலமாகக் கருதப்படும் 70 மற்றும் 80களின் ஆரம்பத்தில் பாலச்சந்தர், பாரதிராஜா, பாலுமகேந்திரா, பாக்கியராஜ் ஆகியோரிடமிருந்து மிகச் சிறந்த கலை(தை)யம்சமுள்ள படங்கள் வெளியாகிக் கொண்டிருந்தன. கமர்ஷியங்கள் படங்களா, கலைப்படங்களா எனத் தன் பாதையை தேர்ந்தெடுப்பதற்கு கமலும் கூட சற்று திணறும் வகையில் ராஜ பார்வை, சகலகலா வல்லவன், மூன்றாம் பிறை என்று எல்லாம் கலந்து படங்கள் வந்து கொண்டிந்தன. ரஜினியும் கூட பாயும் புலி, தாய் வீடு போன்ற கமர்ஷியல் படங்களில் நடித்து வந்தாலும், நெற்றிக்கண், புதுக்கவிதை போன்ற சற்றே வித்தியாசமான படங்களிலும் நடித்து வந்தார்… அந்தக் காலக்கட்டத்தில் நடை பெற்ற மிக முக்கியமான அறிமுகங்கள் என்றால் பாண்டியராஜன் (இயக்குநராக), தொடந்து சட்டம் சம்பந்தமான திரைப்படங்களையே கொடுத்துக் கொண்டிருந்த எஸ்.ஏ. சந்திரசேகர், அவரது பெரும்பான்மை படங்களின் நாயகனான விஜயகாந்த் (முன்பே அறிமுகமாகி இருந்தாலும், இயக்குநர்களும், ரஜினி, கமல் ஆகியோர் ஆக்கிரமித்திருந்த அந்த காலகட்டத்தை நன்றாகவே தாக்குபிடித்தார்) ஆவர். ஆனாலும் இவர்கள் எல்லாவற்றையும் தூக்கிச் சாப்பிடும் மிக முக்கிய அறிமுகம் மைக் மோகனும். ஜெயமாலினியும்தான் 🙂
ஆரம்பத்தில் கலை, பின்பு மெல்ல மெல்ல கமர்ஷியல் என ட்ரெண்ட் மெல்ல மாறினாலும் 86 ல்தான் அந்த பெரியதொரு அலை உருவானது. புதிய தொழில்நுட்ப அலையாக மட்டுமல்லாமல், அதுவரை ஆங்கிலப்படங்களில் மட்டுமே கண்டுவந்த ஒரு அனுபவத்தை தமிழ் சினிமாவில், ரசிகர்களுக்கு ஒரு திரைப்படம் கொடுத்தது மட்டுமல்லாமல், ஓரளவு தாக்குப்பிடித்து வந்த விஜயகாந்திற்கு தனது பாணி என்ன என்பதையும் புரியவைத்தது மட்டுமில்லாமல், அதுவரை மக்கள் அதிகம் அறிந்திருக்காத திரைப்படக் கல்லூரியின் முகவரியையும் அனைவரிடமும் கொண்டு போய் சேர்த்தது அந்தத் திரைப்படம். அதன் பெயர் “ஊமை விழிகள்”. வெறும் கதையில் மட்டுமல்ல, காட்சியமைப்பிலும் சரி, பாடல் வரிகளிலும் சரி, இசையிலும் சரி என எல்லாவற்றிலும் புதியதொரு உணர்வுகளை பரப்பியது ஊமை விழிகள். விஜயகாந்த், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், கார்த்திக், சந்திரசேகர், சரிதா, அருண் பாண்டியன் என ஒரே ஸ்டார் பட்டாளமாக இருந்தாலும், ரவிச்சந்திரன் முதற்கொண்டு அனைவருக்குமே ஒரு பேர் சொல்லும் படமாகவே அது அமைந்தது. தனது முதல் படத்திலேயே, மிக வித்தியாசமாக மட்டுமின்றி, மிக தைரியமான ஒரு படத்தைக் கொடுத்த ஆபாவாணன் என்ற பெயர் தமிழக மக்களிடையே மிக ஆர்வமாக பார்க்கப்பட்டது.
மைக் மோகனின் படங்களின் மூலம் இசைஞானி கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்த ஒரு காலகட்டத்தில், இந்தப்படத்தின் இசையமைப்பாளர்கள் மட்டுமல்ல, இசையும் கூட மிகப் புதிதாய் இருந்தது மக்களுக்கு. அதுவும் ”தோல்வி நிலையென நினைத்தால்” பாடல் ஏற்படுத்திய அதிர்வுகள் தமிழகத்தில் மட்டுமல்ல, ஈழத்திலும் கேட்டது. இத்திரைப்படத்தின் வெற்றிதான் பின்னாட்களில் ஆர்.கே செல்வமணி, ஆர்.வி. உதயகுமார் முதற்கொண்டு பல திரைபடக் கல்லூரி மாணவர்கள் தமிழ் சினிமாவில் கால்பதிக்க காரணமாய் அமைந்தது.
அந்தக் காலகட்டத்தில் வந்த மிக முக்கியமான இந்தத் திரைப்படத்திற்குப் பின்பு ஆபாவாணன் மூலமாக வந்த வெற்றிப்படங்கள் பல இருந்தாலும், முதல் படத்திற்கு இணையான அதிர்வை மற்ற படங்கள் ஏற்படுத்தவில்லை என்றே சொல்லலாம். ஆனாலும், ஏறக்குறைய முதற்படத்திற்கு இணையான ஸ்டார் பட்டாளத்தைக் கொண்டு அவர் கதை மற்றும் தயாரிப்பில் வெளிவந்த இன்னொரு மிகப் பெரிய வெற்றிப் படம் ’செந்தூரப் பூவே’. தொழில்நுட்பத்திலும், கதைக்களனிலும் ஏதாவாது வித்தியாசமாகவே முயற்சி செய்யும் ஆபாவாணன், இந்தப்படத்தில் சிறப்பு சப்தங்களை (ஸ்பெஷல் எஃபக்ட்ஸ்) இணைக்க மிகவும் மெனக்கெட்டிருக்கிறார். படத்தில் வரும் தொடர்வண்டி காட்சிகளில் சிறப்பு சப்தங்களைக் கொடுக்க செண்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில் வரும் போது ஏற்படும் சத்தத்தை பதிவு செய்து இந்தப் படத்தில் பயன்படுத்தினார். இது போன்ற முயற்சிகள்தான் தமிழ் திரை உலகம் சிறப்பு சப்தங்களுக்கு கூடுதல் கவனம் செலுத்த காரணமாய் அமைந்தது. ஏன், சவுண்ட் ரெக்கார்டிஸ்ட் என்ற ஒருவரை அதிகம் தமிழ் படங்களில் பயன்படுத்த ஆரம்பித்ததே ஆபாவாணனுக்கு பிறகுதான்.
செந்தூரப்பூவே படத்தை பார்த்த, அப்போது இயக்குநராகியிராத ராம்கோபால் வர்மா இவரை சந்தித்து தொழில் நுட்ப விஷயங்கள் பெரிதும் கவர்ந்ததாக சிலாகித்ததோடு இல்லாமல் தெலுங்கில் இதனை டப் செய்தால் மிகப் பெரும் வெற்றியடையும் என்று அன்னபூர்ணா ஸ்டூடியோவில் சொல்லியிருக்கிறார். அவர்கள் முடியாது என மறுத்தாலும், வேறொரு தயாரிப்பாளர் அதனை டப் செய்து வெளியிட்டு தெலுங்கில் மிகப் பெரிய ஹிட் (200 நாட்களுக்கும் மேல்) ஆனது படம். படத்தின் வெற்றியை தெளிவாக ஊகிக்க முடிந்ததாலேயே, ராம்கோபால் வர்மாவிற்கு முதல் படத்தை இயக்கும் வாய்ப்பை அதே அன்னபூர்ணா ஸ்டூடியோ வாய்ப்பு கொடுத்தனர். அப்படி அவர்கள் கொடுத்த படம்தான் ‘சிவா’.
இரண்டு படங்களில் இருக்கும் ஸ்டார் பட்டாளங்களுக்கு, படம் வெற்றியடைந்ததில் பெரிய ஆச்சரியமில்லாமல் போகலாம். ஆனால் ஸ்டார் வேல்யூ இல்லாத நடிகர் நடிகைகளை கொண்டு அவர் கொடுத்த படம்தான் ‘இணைந்த கைகள்’. இன்றளவும் எனக்கு மிகப் பிடித்த படமாக இது இருக்கிறது. சிறுவயதில் முதன் முதலில் இந்தப்படத்தைப் பார்த்த போது அதிகம் பார்த்தறியாத ஆங்கிலப்படங்களுக்கு இணையாக அதன் காட்சிகள் இருந்தது அதன் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்திருக்கலாம். மும்பை ட்ரைவ் இன் தியேட்டரில் இந்தப்படம் வெளியான போது ஏற்பட்ட தள்ளு முள்ளு, அந்தத் தியேட்டரையே மூடும் நிலையை உண்டாக்கியது. கோவை சாந்தி தியேட்டரில் இந்தத் திரைப்படம் வெளியான போது ஏற்பட்ட நெரிசலில் இரண்டு பேர் உயிரிழந்த சம்பவமும் நடந்தது. இந்தப் படத்தியில் ஆபாவாணன் பெயர் டைட்டிலில் வரும்பொழுது ரசிகர்கள் சில்லறை காசுகளை வீசி ஆர்பரித்தனர். அந்தளவிற்கு ஒரு பெருமையை சம்பாதித்திருந்தார். இந்தப்படத்தில் வரும் பாகிஸ்தான் சிறைச்சாலை காட்சிகள் தமிழ் ரசிகர்களுக்கு ஆச்சரியம் கலந்த புது உணர்வினை உண்டாக்கின. வெளிநாடுகளில் ஒரே நேரத்தில் ஒரு தமிழ்படத்தை வெளியிடுவது இந்தப்படத்தின் வெற்றியின் மூலமே ஆரம்பிக்கப்பட்டது. இந்தப்படத்தின் பிண்ணனி இசைக்கு இந்தக் குழு செலவிட்ட 40 நாட்களை தமிழ் திரையே அப்போது ஆச்சரியமாக பார்த்தது.
எல்லாவற்றிற்கும் மேலாக இவரது ஆதர்சன நாயகனாக கருதப்பட்ட அருண்பாண்டியன் படித்ததும் அதே எம் நிர்மலா மேல்நிலைப் பள்ளி என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அது கூட அவர்களுக்குள் ஒரு பிணைப்பு ஏற்பட மிக முக்கியக் காரணமாக இருக்கக் கூடும்…
இவருடைய பங்களிப்பில் வந்த மற்ற சில படங்கள் தாய் நாடு, உழவன் மகன், முற்றுகை, காவியத் தலைவன், கருப்பு ரோஜா. இது இல்லாமல் கங்கா யமுனா சரசுவதி என்ற நெடுந்தொடரையும் தந்திருக்கிறார். ஏற்கனவே ஸ்பெஷல் எஃபக்ட்ஸ், சவுண்ட் ரெக்கார்டிஸ்டின் முக்கியத்துவத்தை உணர்த்திய ஆபாவாணனால், கருப்பு ரோஜாவில் அறிமுகப்படுத்தப்பட்ட, டிடிஎஸ் ஒலி நுட்பம் தமிழ் சினிமாவில் இன்று முக்கிய பங்கு வகிக்கிறது. படம் உண்மையில் ஒரு தோல்வியே என்றாலும், ப்ளாக் மேஜிக்கை மையமாக வைத்து வெளிவந்த படம் எனக்குத் தெரிந்து இதுதான். வெளி வரும் படங்களும் ஒன்று ஜமீன் கோட்டை வகையறாவாக இருக்கிறது அல்லது பேய் படங்களாக இருக்கிரது. கதாநாயகி ஆரம்பத்திலேயே இறந்து விட, மிக வித்தியாசமான கதை மாந்தர்களோடு, ஸ்டார் வேல்யூ இல்லாத நாயகனோடு, முழுக்க முழுக்க ஒரு பெண் கதாபாத்திரத்தை மையப்படுத்தி இது போன்றதொரு படம் எடுக்க உண்மையிலேயே ஒரு துணிவு வேண்டும்….
தான் பள்ளியில் படிக்கும் போதே ’சித்திரக் குள்ளர்கள்’ என்ற நூலை எழுதி சொந்தமாக பதிப்பித்து விற்ற ஆபாவாணன், தமிழ் சினிமாவில் சினிமாஸ்கோப் என்ற தொழில் நுட்பம் உருவாகி வளர்வதில் பெரும் பங்கு வகித்தார்.
கதை, இயக்கம், திரைக்கதை என பல தளங்களில் சிறந்திருந்த இவர் இசையையும் விட்டுவைக்கவில்லை. தனக்குப் பிடித்த மெட்டுக்களை கொடுத்து விட்டு மிக நல்ல பாடல்களை இசையமைப்பாளர்கள் (பெரும்பாலும் மனோஜ் கியான்) மூலம் உருவாக்கிக் கொடுத்த ஆபாவாணன் பெயரை சில இடங்களில் இசை உதவி என்ற இடத்தில் பார்த்திருக்கலாம். இசை உதவி என்றிருந்தாலும், இவரது திறன் பார்த்து இசைஞானியே கேப்டனிடம், அவருக்கு நன்றாக இசையமைக்க வருகிறது, தனியாக இசையமைக்கச் சொல்லுங்கள் என்று சொல்லியிருந்திருக்கிறார். தவிர, நான் அதிகம் தியேட்டருக்கு சென்று படம் பார்த்ததில்லை, ஆனால் இந்தப்படத்தின் பிண்ணனி இசைக்காக நான்கு முறை சென்று பார்த்திருக்கிறேன் என இவரது இணைந்த கைகள் படத்தைப் பார்த்துவிட்டு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர். ரகுமான் வியந்திருக்கிறார். ஆபாவாணனின் இசையமைப்பில் பங்கேற்ற சில நபர்களின் பெயர்கள் ஹாரிஸ் ஜெயராஜ், வித்யாசாகர், தினா, சபேஷ் – முரளி (எங்கியோ கேட்ட மாதிரி இருக்குல்ல?). ஒரு சமயத்தில் இவருக்கு 44 படங்களுக்கு இசையமைக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இருந்தாலும் தொடர் பணி காரணமாக இசையமைக்கவில்லை.
பள்ளியிலேயே சொந்தமாக நாடகங்களை எழுதி அரங்கேற்றிய ஆபாவாணன், இசையமைப்பில் பங்கேற்றதுமில்லாமல் பல பாடல்களை எழுதியதுமில்லாமல், சில பாடல்களை பாடியுமிருந்திருக்கிறார்.. மனம் சோர்ந்து கிடக்கும் போதோ, வெறுமையாக உணரும் போதோ, அவர் எழுதிய அந்தப்பாடலைக் கேளுங்கள். மனதில் புது உற்சாகம் பிறக்கும். இந்த சக்தி உணரப்பட்டதால்தானோ என்னமோ, ஈழத்தில் இந்தப் பாடல் மக்களால் பெரிதும் விரும்பப்பட்டது. அந்தப் பாடல்…
நீண்ட இடைவேளைக்குப் பிறகு பி.பி. ஸ்ரீனிவாசை வைத்து பாடிய இந்தப் பாடலில் அனைவரும் சேர்ந்து பாடும் தருணத்தை ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் என் உடல் சிலிர்க்கும். இதே போன்று நீண்ட இடைவேளைக்கு டிஎம்எஸை வைத்து தாய்நாடு படத்தில் எல்லா பாடல்களையும் பாடவைத்தாரென்றாலும், அதே போராட்ட உணர்வை மையப்படுத்தி எழுதிய பாடல், http://www.inbaminge.com/t/t/Thai%20Naadu/Naan%20Muthan%20Muthal.vid.html
சிறுவயதில் எனக்குத் தெரிந்து எல்லா பள்ளி கல்லூரி மேடைகளிலும் இரு பாடல்கள் எப்பொழுதும் நடனத்திற்கு தயாராக இருக்கும். எப்பொழுதும் பெண்களின் நடனத்திற்காகவே எழுதப்பட்டதாக தோன்றும் அந்தப் பாடல்கள் ’பூ பூக்கும் மாசம் தை மாசம்’ மற்றும் ’சின்னச் சின்ன வண்ணக் குயில்’. இதற்கடுத்து ஓரளவு அந்த இடத்தைப் பிடித்தது, அதுவும் ஆண்களால் அதிகம் விரும்பப்பட்டது ’சிக்கு சிக்கு புக்கு ரெயிலே’ தான். இதே வரிசையில் எல்லா பள்ளி, கல்லூரி மேடைகள் மட்டுமல்ல, எல்லா தொலைக்காட்சி சான்ல்களின் போட்டியிலும் தவறாமல் பங்கேற்கும் ஒரு பாடல் இவர் பாடியதுதான். கேட்டுப்பாருங்கள், உங்களுக்கு ஏற்கனவே பிடித்த பாடலாக இது இருக்கும். http://www.inbaminge.com/t/r/Rendu%20Per/Varan%20Varan.eng.html
இவர் இயக்கமாக இல்லாவிட்டாலும், இவருடைய சிஷ்யரின் இயக்கத்தில் வெளிவந்த தம்பி அர்ஜூனா படத்தில் வரும் ஒரு பாடலையும் இவர் பாடியிருக்கிறார். எப்படி ’தோல்விநிலையென நினைத்தால் பாடல்’ போராளிகளுக்காவே எழுதப்பட்டது என்ற செய்தி வந்ததோ, அதே போன்று இந்தப் பாடலும் புலிகளை மையப்படுத்தி எழுதியதாகவே நினைக்கத் தோன்றுகிறது. கேட்டுப்பாருங்கள்.
http://www.inbaminge.com/t/t/Thambi%20Arjuna/Puligal%20Konjam%20ii.eng.html
ஒரு அலையை உருவாக்கிய இந்த திறமைசாலியின் ஆரம்பமும் தற்போதைய நிலையும் ஏறக்குறைய ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது. முதன் முதலில் இவர் தர விரும்பிய படம் ‘இரவுப்பாடகன்’ ஆனால் அது வெளிவரவே இல்லை. இதே போல் விஜயகாந்தை வைத்து இவர் தர நினைத்த மூங்கில் கோட்டையும் வெளிவரவே இல்லை. இறுதியாக இவர் தர நினைத்த ’இரண்டு பேர்’ திரைப்படமும் வெளிவராமலே போய்விட்டது. வித்தியாசமாகவே தர நினைத்தாலும் சில பெரிய பட்ஜெட் படங்கள் தோல்வியடைந்ததால் பெரிய நட்டத்தினை அடைந்தார். இறுதியாக இவர் பங்களிப்பில் வெளி வந்தது கங்கா யமுனா சரசுவதி நெடுந்தொடரே. எனக்குத் தெரிந்து பாலச்சந்தரின் நாடகத்திற்குப் பின்பு, சன் டிவி நெடுந்தொடரில் காலோச்சிய காலத்தில் ராஜ் டிவியில் வந்து ஓரளவு வெற்றியடைந்த தொடரும் அது ஒன்றே! இவருடையது மட்டுமல்ல, ஒரு காலத்தில் இவரால் அறிமுகப்படுத்தப்பட்ட திரைப்படக் கல்லூரி மாணவர்களின் பங்களிப்பும் கூட ஏனோ இப்பொழுது இல்லாமலே போய்விட்டது. கொடுத்ததில் பாதி வெற்றிப்படங்கள், பாதி தோல்வியாக இருந்தாலும், தன் படங்களின் மூலம் ஏற்படுத்திய, அதிர்வுகளையோ, அதில் தொனித்த வித்தியாசங்களையோ, பிண்ணனியிலுள்ள திறமை கலந்த உழைப்பையோ எளிதில் புறந்தள்ளிவிடமுடியாது….