தொகுப்பு

Archive for ஏப்ரல், 2009

இவனுங்க காமெடி தாங்க முடியலடா சாமி!!!

என்னடா, வாரக் கடைசில குவார்ட்டர் அடிக்கப் போகாம விஜய் படம் பாத்துட்டு வந்த மாதிரி ‘திரு’ ‘திரு’ ன்னு முழிச்சிட்டிருக்க?

டேய், வவுத்தெரிச்சலை கிளப்பாத, ஏற்கனவே குவார்ட்டர் அடிச்சிட்டுதான் வந்தேன்!

அப்புறம் ஏண்டா இப்படி உக்காந்துட்டிருக்க?

இல்லடா, ரொம்ப நாளாச்சேன்னு கொஞ்சம் நியூஸ்லாம் படிச்சேன்னா, ஒரேடியா குழம்பிட்டேன், அதான்…

அப்படி என்னாத்தைடா படிச்சு குழம்பிட்ட?

இல்லடா, கொஞ்ச நாளைக்கு முன்னால கலைஞர், யாரோ தலைவர் பதவிக்கு ஆசைப்பட்டதுனால, குட்டை மனப் பேராசை அப்படி இப்படின்னு என்னன்னமோ சொல்லி ஒரு கவிதை படிச்சாரு ஞாபகமிருக்கா?

ஆமா, அவரு யாரை திட்டுனாருன்னு யோசிச்சு குழம்பிட்டியாக்கும்?

அது யாரோவோவா இருந்துட்டுப் போகட்டும், என் சந்தேகம் அதைப் பத்தி இல்லை, என் சந்தேகம் என்னன்னா, ஒரு தொண்டனா இருக்கறவன், கட்சித் தலைவர் பதவிக்கு ஆசைப் படறது தப்பா என்ன? சரி அது அப்படியே தப்புன்னு வெச்சுகிட்டாலும், ஒரு முறை தலைவனாவனும்னு நினைக்கிறதே பேராசைன்னா, எப்பவும் தான் மட்டும் தலைவரா இருக்கனும்னு நினைச்சா அது எவ்ளோ பெரிய பேராசை, இல்ல தனக்கப்புறம் தன் புள்ளைங்க மட்டும் தலைவனா இருக்கனும்னு நினைச்சா அது எவ்ளோ பெரிய பேராசை?…… ஏண்டா எதுவும் பேசமாட்டேங்குற?

அடியேய் உனக்கு சனி பக்கத்துல டபுள் காட் பெட் போட்டு படுத்துட்டு இருக்குடியேய்!!! எலக்சன் டைம்ல மக்கள் யோசிக்கவே கூடாது, அதுவும் இந்த மாதிரில்லாம் யோசிக்க அரம்பிச்சா, வீட்டுக்கு ஆட்டோதாண்டி!!!

ஏண்டா சந்தேகம் கேக்கறது தப்பா என்ன? சரி, சட்டக் கல்லூரி பிரச்சனையில, ஏண்டா போலீஸ் வேடிக்கை பாத்துட்டு இருந்தது, உள்ள போயி தடுத்துருக்கலாமேன்னு கேட்டா, அனுமதி இல்லாம போகக் கூடாதுன்னு சொன்னாங்க, ஆனா அதே கோர்ட்டுல, அனுமதி இல்லாமயே, 4000 பேரு உள்ள பூந்து போட்டு தாக்குனாங்க. இதுல காமெடி என்னான்னா, மும்பைல, தாஜ் ஹோட்டல்ல எல்லாம் தீவிரவாதிகள் பூந்து அட்டூழியம் பண்ணப்ப கூட, துணை ராணுவப்படை வந்ததுக்கு 6 மணி நேரம் பண்ணாங்கன்னு பிரச்சனை ஆச்சு, ஆனா இங்க, ஒரு மணிநேரத்துக்குள்ளியே, 4000 பேரை கொண்டு வந்துருக்காங்க அப்படின்னுல்லாம் வக்கீல் சொல்றாங்களே அப்படீன்னா இது திட்டமிட்ட தாக்குதலா இருக்கும்னு சொல்றாங்களே அதுக்கு என்ன பதில்?

ம்ம்ம், டேய், நம்ம அரசாங்கம் அவ்ளோ விரைவா செயல்படுதுன்னு அர்த்தம்டா! இதை ஏன் நீ இந்த மாதிரி பாக்க கூடாது. டேய், உன்பேரை பேரை பேசாம செந்தில்னு மாத்திக்கோ, செந்தில்தான் கவுண்டமணிகிட்ட இப்படில்லாம் சந்தேகம் கேட்டுகிட்டே இருப்பாரு………………….டேய் திடிர்னு ஏண்டா இப்படி யோசிக்கிற?

இல்ல மச்சி, நீ பேர்னு சொன்னவுடனே திடீர்னு எனக்கு ஒரு சந்தேகம்!,……. காந்தி யாரு?

என்னடா, டீக்கடையில பழைய பேப்பர் படிச்சவனாட்டம் கேக்கற?

டேய் கிண்டல் பண்ணாம சொல்டா?

காந்தி வந்து, நம்ம நாடு சுதந்திரம் அடையறதுக்கு, அஹிம்சை போராட்டத்தை எடுத்துச் சென்றதுல முக்கிய காரணமானவர். இதுல உனக்கு என்ன சந்தேகம்?

எனக்கு அவர் மேல எந்த சந்தேகமும் இல்ல, காந்தி சுதந்திரத்திற்காக பாடு பட்டது எனக்கும் தெரியும், ஆனா அதுக்காக ஒரு சிலர் அவரு பேரை பின்னாடி சேத்துகிட்டு பண்ற அழிச்சாட்டியம், பேசுற பேச்சு தாங்க முடியலைடா!

ஏண்டா, சந்திராசாமிக்கும், அரவிந்த்சாமிக்கும் சாமின்னு முடியுது. அதுக்காக ரெண்டு பேருக்கும் ஒரே கொள்கைன்னு அர்த்தமா? இதுல எல்லாம் இவ்ளோ டீப்பா யோசிக்க கூடாதுடா!

இல்லா மச்சான், இவங்க, பண்ணாத அழிச்சாட்டியம் எல்லாம் பண்ணிட்டு, ஒவ்வொரு முறையும் பேரு பின்னாடி காந்தின்னு வர்றப்ப சங்கடமா இருக்குடா, இவங்க எல்லா தப்பும் பண்ணட்டும், தயவு செஞ்சு அந்த பேருல இருந்து காந்தியை தூக்கிருங்கன்னு மனு கொடுக்கலாம்னு யோசிக்கிறேன். சரி இதுலதான் இந்தப் பிரச்சனைன்னா, ராஜீவை தப்பா பேசுனாவோ, சோனியாவை விமரிசனம் பண்ணாவோ, மன்மோகன் சிங்கை விமரிசனம் பண்ணாவோ தேசிய பாதுகப்பு சட்டதுல கலைஞர் உள்ள தூக்கி போட்டுறாரே, அதுக்கு பேசாம “கூட்டணி பாதுகாப்பு சட்டம்னு“ பேரு வைக்கலாம்ல, அதை ஏன் “தேசிய பாதுகாப்பு சட்டம்”னு சொல்லனும். தயவு செஞ்சு இது ரெண்டுக்கும் பேரு மாத்த சொல்லனும்டா!!!

நீ ரொம்ப ஓவரா பேசுற! இவ்ளோ பேசுறியே நீ ஏன் எலக்சன்ல நிக்கக் கூடாது?

இது கூட நல்ல ஐடியாதான், அதுக்கு என்னடா தகுதி வேணும்?

ஐய்யோ, அந்த கருமத்துக்கு தகுதியே வேணாண்டா! ரவுடி, கொலைகாரன், ரெண்டு பொண்டாட்டி கட்டுனவன், ஜெயிலுக்குப் போனவன், யாரு வேணா நிக்கலாம், சொல்லப் போனா அவங்கதான் நிக்கறாங்க!

டேய் சீரியசா சொல்லுடா…

டேய், ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு தகுதிடா. இப்ப திமுகன்னா, உன் நெருங்கிய சொந்தக்காராங்கள்ல யாருக்காவது பேரு, அழகிரி, கனிமொழி, ஸ்டாலின்னு இருக்கனும். அதிமுகன்னா, நவகிரகத்தை சுத்தி வர்ற மாதிரி சுத்தி வந்து அம்மா கால்ல உழுவணும், இப்படி பல இருக்குடா!!!

சரி காங்கிரஸ் சார்பா நிக்கனும்னா?

ம்க்கும்ம், அதுக்கு நீ நிக்காமயே இருக்கலாம்!

இல்லடா, திமுக பாட்டுக்கு, 16 தொகுதின்னு அள்ளி வழங்கிடுச்சி, தொகுதிக்கு ஒரு வேட்பாளர்னு வெச்சுகிட்டா கூட, மொத்தம் 16 பேரு வேணுமே, அவ்ளோ பேரு அந்தக் கட்சில இருக்காங்களா என்ன?—————-என்னடா பதில் சொல்லாம அப்படி பாக்கற?

டேய் என் வாழ்க்கைல நான் தண்ணியே அடிச்சதில்லை, இன்னும் கொஞ்சம் நேரம் உன்கிட்ட பேசுனா, என்னையே தண்ணி அடிக்க வெச்சிருவ போலிருக்கு! என்னை உட்டுடு!

சரி கடைசியா ஒரு கேள்வி இருக்கு பதில் சொல்லு, எலக்சன்ல யாருக்கு ஓட்டுப் போடறது?

ம்ம்ம்ம், முதல்ல குருவி படம் நல்லாயிருந்துதா இல்லை வில்லு படம் நல்லாயிருந்துதான்னு சொல்லு, அப்புறம் அதுக்கு பதில் சொல்லுறேன்!!!

எல்லோரும் சுயநலப் பேய்கள்தான்…

ஆரம்பித்து விட்டது தேர்தல் கூத்துகள். யார் கேவலமாக நடந்து கொள்வது என்று கட்சிகளுக்குள் கடும் போராட்டம் நடைபெறுகிறது. எததனை காலமானாலும் நாங்கள் மாறப் போவதில்லை என்று ஆரம்பத்திலேயே தங்களது முகத்தை பாஜக ‘வருண் காந்தி மூலம் வெளிப்படுத்தியது. அதை விடக் கொடுமை, ஜெயிலுக்குள் சென்று பார்த்து விட்டு வந்த மேனகா காந்தி ‘தன் மகன் மிகுந்த தைரியசாலி, அவனை நினைத்து பெருமைப் படுகிறேன் என்று கூறியது!

 

ஒரு காலத்தில் மிருகங்களின் முறையான வாழ்விற்கு கடுமையாகப் போராடியதற்காக நன்மதிப்பைப் பெற்ற இவர், மிருகங்களுக்கான அன்பைக் கூட மனிதர்களிடத்தில் செலுத்த மறுப்பதேனோ? மக்கள் வருண்காந்தியின் பேச்சை ஒத்துக் கொண்டார்களோ இல்லையோ, தாங்கள் நினைத்த புகழ் கிடைத்த திருப்தி பாஜகவிற்கு.

 

இந்தியாவின் மிகப் பெரிய முதியோர் இல்லமாக பாராளுமன்றம் காட்சி அளிக்கின்றது. என் நாட்டின் பிரதமர், முன்னாள் பிரதமர், என் மாநிலத்தின் முதல்வர் என அனைவருமே மருத்துவமனையில் இருந்து வந்த காட்சிகளையெல்லாம் மக்கள் காண வேண்டி வந்தது

 

மத்தியில் நடப்பதை விட, தமிழ் நாட்டில் நடக்கும் கூத்துகள்தான் மிகக் கொடுமை. தமிழகத்தில் வரலாற்றில் எங்கும் கண்டிராத படி, அத்தனை கட்சிகளும் ஈழ மக்களுக்காக அனுதாபம் காட்டினாலும், அங்கு போர், ஏன் முற்றுப் பெற வில்லை என்ற மர்மம் மக்கள் மனதை விட்டு நீங்கவே இல்லை.

 

நேற்றுவரை காங்கிரசுடன் கூட்டணி அமைத்த பாமக இன்று அதிமுகவுடன், ஒருவருடன் ஒருவர் கை கலப்பு வரை சென்ற விடுதலை சிறுத்தைகளும் காங்கிரசும் ஒரே கூட்டணி!. அணிதாவல், கொள்கை மாற்றம் என்று நம் அரசியல்வியாதிகளின் திறமையை கண்டு பச்சோந்திகள் கூட பொந்தை விட்டு வெளி வர மறுக்கின்றன. ஈழப் பிரச்சனையில் கலைஞர் ஏன், தன் எம்பிக்களையும், அமைச்சர்களையும் பதவி விலகச் சொல்ல வில்லை என்று கேள்வி எழுப்பிய அதே பாமக, தனது மகனையும், அமைச்சர்களையும் பதவி விலகச் சொல்லாத அதே பாமக, இப்போது அதிமுகவுடன் கூட்டணி வைத்தவுடன் அவர்களை பதவி விலக வைத்திருக்கிறது. கேட்டால் கூட்டணி தர்மம் என்று வியாக்கியாணம் பேசுகிறது.

 

இவர்கள் எல்லாரையும் தூக்கிச் சாப்பிடும் காமெடியை திமுகவும், காங்கிரசும் அரங்கேற்றி வருகிறது. என்னதான் முதுகெலும்பு ஆபரேசன் வெற்றி என்று மருத்துவர்கள் சொன்னாலும், செய்திகள் வந்தாலும், அப்படி ஒன்றும் வெற்றி இல்லை என்பதை ஈழத் தமிழர்களுக்காக திமுக என்றும் பாடுபடும், ஈழத்தில் அமைதி ஏற்பட பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற வார்த்தைகளின் மூலம் நிரூபித்துக் கொண்டே இருக்கிறார் தமிழினத் தலைவர். இதன் அடுத்த கட்ட காமெடிதான், வியாழக்கிழமை (09.04.09) அன்று கட்சி பேதமின்றி பேரணி நடத்துகிறாராம். தவிர பிரதமர் மன்மோகன்சிங்குக்கும், உண்மைப் பிரதமர் சோனியாவுக்கும், ஈழப் பிரச்சனை சார்பாக தந்தி கொடுத்திருக்காராம்.

 

இந்த விஷயத்தில் மட்டும் மிகச் சரியாகவே நடந்து கொண்டிருக்கிறார் தலைவர். இன்னமும் கிராமங்களில், எழவு செய்தியைச் சொல்ல தந்தி முறையைத்தான் பயன்படுத்துகிறார்கள். அப்படி இருக்கையில், இப்போது தந்தி அடித்து, நடவடிக்கை எடுக்கச் சொல்லியிருக்கிறார். என்ன ஒரே குழப்பம் என்றால், பிரதமர்களை நடவடிக்கை எடுக்கச் சொல்லுகிறாரா, அல்லது எல்லாவற்றையும் முடித்து விட்டு எழவுக்கு வந்து சேருங்கள் என்று அழைக்கிறாரா என்றுதான் புரியவில்லை. அதற்கு சப்பைகட்டு கட்டிக்கொண்டு, தலைவர்தான் மிகப் பெரிய தியாகி, அவரளவு இந்த விஷயத்தில் ஒழுக்கம் வேறு யாரும் கிடையாது என்று புள்ளி விவரம் பேசும் அறிவுஜீவிகளைப் பார்க்கும் போது, படிப்பறிவுக்கும் பகுத்தறிவுக்கும் சம்பந்தம் கிடையாது என்ற உண்மையே மனதில் நிற்கிறது

 

தனது கட்சிக்கு, இந்திய நாட்டிலிருந்து ஒரு தலைவரை தேர்ந்தெடுக்க திராணியில்லாத காங்கிரசின் கையில் அடுத்த 5 வருடங்கள் இருந்தால் என்ன ஆகும் என்று நினைத்தாலே பயமாய் இருக்கிறது. இலங்கையில் எம்மக்களை அழிப்பதோடில்லாமல், இந்திய நாட்டையும் தூக்கி தீவிரவாதிகளிடமும், அமெரிக்காவிடமும் அடகு வைத்து விடுவார்களோ என்ற அளவிலேயே ஆட்சி இருக்கிறது. தேசிய பாதுகாப்பு சட்டத்திற்கும், பொடாவிற்கும் உள்ள வித்தியாசம்தான் காங்கிரசுக்கும், பாஜகவுக்கும் இருக்கிற வித்தியாசம்

 

இவர்கள் எல்லாரையும் தூக்கிச் சாப்பிட்டுவிடுவார்கள் என் நாட்டு மக்கள். சுரணை என்றால் விலை எவ்வளவு என்று கேட்பார்கள். சீக்கியர்கள் தனது தலைப்பாகைக்கு கொடுக்கும் மரியாதையை, எம்மக்கள் தனது சகோதரர்களின் தலைகளுக்கு கொடுப்பதில்லை. இவர்களுக்கு தன்மானத்தை போதிக்க கூட, அதே சீக்கியர்கள் மத்தியில் இருந்து ஒருவர் ஷூவை வீச வேண்டி இருக்கிறது.

 

யாருக்காவது அடிமையாய் இருப்பது என்றால் அவர்களுக்கு கொள்ளை விருப்பம். குவார்ட்டரும், கொஞ்சம் காசும் போதும், ஒரு சிலருக்கு, யாருக்கு ஓட்டு போடுவது என்று தீர்மானிக்க. அரசு அலுவலர்களுக்கோ, ஒழுங்காய் வேலை செய்யச் சொல்லி வற்புறுத்தாமல், கேட்கும் போனசை கொடுக்கும் கலைஞருக்குத்தான் அவர்களது நிரந்த ஓட்டு. சில கிருத்துவ அமைப்புகளுக்கோ, மதமாரற்ற தடைச் சட்டத்தை கொண்டு வராமல் இருப்பவர்களுக்கே ஓட்டு. நடுத்தர மக்களோ, டிவிக்கு அடுத்து டிவிடி பிளேயர் கொடுத்தால் ஓட்டுப் போட ரெடியாகி விடுகிறார்கள். ஆக மொத்தத்தில் எல்லாரும் சுயநலப் பிசாசுகளாய் இருப்பதில் கூச்சமே அடைவதில்லை.

 

பிச்சைக்காரனிடம், பத்து ரூபாய் கொடுத்தாலே நடு ரோட்டில் பல்டி அடிப்பான். அதற்கு அடுத்தக் கட்டதிலிருப்பவனுக்கு, நூறு ரூபாய் கொடுத்தால் போதும். நடுத்தரவாசிக்கு, ஆயிரம் கொடுத்தால் போதும், அரசியல்வாதிக்கு, அவரது தலைவர் விருப்பம் என்றால் போது. ஆக மொத்தத்தில் ஈனத்தனத்தை செய்ய எல்லாருமே தயாராக இருக்கிறோம், என்ன, அதற்கான விலைதான் ஆளைப் பொறுத்து மாறுகிறது.

பிரிவுகள்:அரசியல் குறிச்சொற்கள்:,