தொகுப்பு

Posts Tagged ‘மும்பை’

மும்பை மேரி ஜான்-ஒரு வித்தியாசமான அனுபவம்

“இருந்தாக்கா அள்ளிக்கொடு”
“தெரிஞ்சாக்கா சொல்லிக்கொடு”

வரிகளை ரசித்து கேட்டுக் கொண்டிருக்கும் போதே கைப்பேசி அழைத்தது. எடுத்துப் பார்த்தால் அலுவலக நண்பன் கார்த்திக். தலைவர் பாட்டை ரசிக்க விட மாட்டாங்களே என்ற கடுப்பில் கைப்பேசியை எடுத்து ஹல்லோ என்றேன்.

நரேஷ், நான் கார்த்தி பேசறேன், எப்படியிருக்க, சாயங்காலம் படத்துக்கு வர்றீல்ல? ஆஃபிஸ் முடிந்ததும் அங்கருந்தே எல்லாரும் போயிரலாம் சரியா என்றான். அதற்கப்புறம்தான், அன்று மாலை ”மும்பை மேரி ஜான்” ஹிந்தி படத்துக்கு போகலாம் என்று ஏற்கனவே பேசி வைத்திருந்தது ஞாபகத்திற்கு வந்தது.

நான் வரலை கார்த்தி என்று நான் தயங்கிய படியே கூறினேன். யோவ், ஆஃபிஸ்ல எல்லாரும் வற்ராங்கயா, நீ மட்டும் ஏன் முருங்கை மரம் ஏறுர இப்ப என்றான். யோவ் எனக்கு ஹிந்தி தெரியாதுன்னு தான் உனக்கே தெரியும். ஹிந்தி தெரியாம எப்படி ஹிந்தி படம் பாக்கறது, என்னத்த ரசிக்கிறது, தவிர ஷோகா அலி கான் ஒன்னும் எனக்கு பிடித்த நடிகை கிடையாதுப்பா, அப்புறம் எதுக்கு அந்த படத்துக்கு வரணும் என்றேன்.

டே இந்த கதையெல்லாம் எல்லாம் இங்க வேண்டாம், மகேஸ் பெங்களூரிலிருந்து வந்துருக்கான், அவந்தான் எல்லாருமா சேர்ந்து படம் போகலாம்னு சொன்னான், பத்தாதக்கு நம்ம மேனேஜர் வேற வர்றாரு, நீ கண்டிப்பா வந்தாகணும், சாயங்காலம் அப்படியே போயிரலம், நீ ரெடியா வந்திரு என்று கைப்பேசியை வைத்து விட்டான்.

சலிப்புடன் கைப்பேசியை வைத்து விட்டுப் பார்த்தால் இங்கே தலைவர் பாட்டு முடிந்திருந்தது. அடச்சே இதுக்கு கொடுத்து வைக்கிலியே, என்று அலுவலகம் கிளம்ப ஆரம்பித்தேன்.

இப்படி அலுவலக நண்பர்களின் வற்புறுத்தலுக்காகத்தான் ”மும்பை மேரி ஜான்” படத்துக்கே போனது. தவிர அந்த படம் வேண்டாம் என்றதற்கு தனிப் பட்ட முறையில் வேறொரு காரணமும் இருந்தது. இதே ஐநாக்ஸில் தான் தலைவரோட “நாயகன்” படம் ஓடுது. அந்த படத்தை விட்டுட்டு ஒரு ஹிந்தி படத்துக்கு டிக்கெட் வாங்கிட்டாங்களே என்ற தமிழ் பற்றும், “நாயகன்” படத்துக்கு எங்கும் டிக்கட் கிடைக்காத கோபமும் தான் காரணம் (அந்தளவுக்கு அருமையா ஓடிட்டிருக்கு).

இப்படி என்னுடைய சொந்த விருப்பு, வெறுப்புகளை எல்லாம் மனதில் அடக்கியவாறு தியேட்டருக்குள் நுழைந்த போது முக்கால் வாசி தியேட்டர் காலியாக இருந்தது. அப்போதே நினைத்துக் கொண்டேன், இந்தப் படம் ஒரு “ஓம் ஷாந்தி ஓம்” ஆகவோ அல்லது ஒரு “சிங் ஈஸ் கிங்” ஆகவோ இருக்க வாய்ப்பில்லை என்று.

பெயர் போடும் போதே பிண்ணனியில், சுதந்திரம் அடைந்ததில் இருந்து மும்பை எப்படி வளர்ந்தது மாதிரியான காட்சிகளை காட்டிக் கொண்டிருக்க, ஒரு வேளை மும்பையின் கலாச்சாரம் சம்பந்தப் பட்ட படமாக இருக்கலாம் என்று நினைத்துக் கொண்டேன். பால் தாக்கரே வேசம், மராட்டி மொழி பிரச்சனை எல்லாத்தையும் கொண்டு வந்திருவாங்களே என்று நினைத்துக் கொண்டேன்.

ஆனால் படம் என்னை மிகவும் ஆச்சரியப் படுத்தியது.

மும்பை ரயிலில் நடந்த வெடிகுண்டு சம்பவமும், அதனோடு ஏதாவது ஒரு விதத்தில் தொடர்பு கொண்டிருந்த 6 பேருடைய வாழ்க்கையிலும், மனதிலும் ஏற்படும் போராட்டங்களும்தான் படமே. சோகங்களையும், இழப்புகளையும், போராட்டங்களையும் காண்பித்தாலும், முகத்தில் ஒரு குறும்புன்னகையுடன் படத்தை பார்க்க வைத்தது.

ஏறக்குறைய இன்னும் ஒரு வாரத்தில் ரிடையர் ஆகப் போகிற ஒரு சாதரண, லஞ்சம் வாங்குகிற, எதற்கும் அலட்டிக் கொள்ளாத போலீஸ்காரர் வேடத்தில் பரேஷ் ராவல். மும்பை வெடிகுண்டு சம்பவம் இந்த ஒரு வார காலத்தை தூக்கமில்லா இரவுகளாலும், மனச் சஞ்சலங்களாலும் நிரப்பியிருந்து. இவை யாவற்றையும் தனது வேடிக்கைப் பேச்சுக்களாலும், அலட்டிக் கொள்ளாத பழக்க வழக்கங்களாலும் சமாளிக்கும் வேடம் பரேஷ் ராவலுக்கு.

ஒரு போலீஸாக இருந்துக் கொண்டு தம்மால் எதுவும் செய்ய முடியவில்லையே என்ற கோபத்திலும், இயலாமையிலும் தவித்துக் கொண்டு, மனசாட்சிக்கும் உண்மைக்கும் நடுவில் போராடிக் கொண்டிருப்பவராகவும் பரேஷ் ராவலின் நண்பருமாகவும்,
போதாக்குறக்கு மும்பை வெடிகுண்டு சம்பவம் அவரது தேனிலவு பயணத்தை நிறுத்தி விட்ட கடுப்பில் இருக்கும் வேடத்தில் விஜய் மவுரியா.

சமூகத்தில் வறுமைக் கோட்டிற்கு கீழ் நிலையிலும், வீட்டு வேலை செய்து கொண்டே கூடுதல் வருமானத்திற்காக, வார இறுதியில் தெருவில், மிதி வண்டியில் டீ விற்றுக் கொண்டு, வெடிகுண்டு சம்பவம் அதையும் தடை செய்து விட்ட நிலையில் என்ன செய்வது என்று புரியாமல் தவிக்கும் வேடத்தில் இர்ஃபான் கான்.

வேலையில்லாப் பட்டதாரியும், முஸ்லீம்களின் மேல் கோபம் கொண்டு, வெடிகுண்டு விபத்திற்கு தான் டீ குடிக்கும் கடையில் தான் அடிக்கடி பார்த்த, தன்க்குப் பிடிக்காத ஒரு முஸ்லீமும் காரணமாக இருக்கக் கூடும் என்ற சந்தேகத்துடன் அவரை தேடும் வேடத்தில் கேகே மேனன்.

சுற்று சூழல் முன்னேர்றத்தில் ஆர்வம் கொண்டு தெருவோர கடை வாசிகளை பிளாஸ்டிக் உபயோகிக்க வேண்டாம் என்று அறிவுரை செய்து கொண்டு, வாங்கும் திறன் இருந்தும், கார் வாங்க விருப்பமின்றி, ரயிலில் பயணம் செய்து கொண்டு, வெளிநாடு செல்ல வாய்ப்புகள் பல வந்தும் அதை நிராகரித்து, தான் இந்தியாவில்தான் வேலை செய்ய வேண்டும் என்ற உறுதியும் கொண்ட, ஒரு தேசப் பற்று கொண்ட, உயர் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த வேடத்தில் மாதவன்.

கேவலம், டிஆர்பி ரேட்டிங்காகவும், பரபரப்பிற்ககவும் பேட்டிகளையும்
செய்திகளையும் வெளியிடும் இன்றைய டிவி நியூஸ் சேனல்களின் பிரதிபலிப்பாக காட்டப் படும் ஒரு நியூஸ் சேனலில் வேலை பார்ப்பவரும், இந்தத் தொழிலை எந்தவொரு குற்ற உணர்ச்சியோ, வருத்தமோ இல்லாமல் மாறாக ஒருவித பெருமிதத்துடன் வேலை செய்யும் வேடத்தில் ஷோகா அலி கான் (வெடிகுண்டு சம்பவத்தில் பாதிக்கப் பட்டவர்களிடம் போய், போலீஸ் சரியான நேரத்தில் வந்ததா, மருத்துவர்கள் சரியாக பார்க்கிறார்களா, அவர்களுடைய மனநிலை எவ்வாறிருந்தது மாதிரியான கேள்விகளை கேட்கும் வேடம்).

இவர்கள் அனைவருக்கும் மும்பை வெடிகுண்டு சம்பவத்துடன் இருந்த
தொடர்பு, சம்பவத்திற்குப் பின் இவர்கள் மனதிலும், வாழ்க்கையிலும்
ஏற்படும் போராட்டங்கள் ஆகியவர்றைச் சுற்றி நகர்கிறது படம்.

படத்தில் அதிக பபட்சம் 20 முதல் 30 நிமிடத்திற்குதான் பிண்ணனி இசையே. மீதி நேரங்களில் அந்தந்த காட்சி சம்பந்தப் பட்ட சத்தங்களோடு படத்தை உலவ விட்டிருக்கின்றார் இயக்குனர். படதில் பரேஷ் ராவல், கேகே மேனன் தவிர வேறு யாரும் அதிகம் ஒருவருக்கொருவர் அதிகம் சந்தித்துக் கொள்வதுமில்லை, பேசிக் கொள்வதுமில்லை. இது போன்ற படங்கள் நம்மூரிற்கு புதிது என்றே நினைக்கிறேன்.

வெடிகுண்டு சம்பவத்தால் எல்லாரும் சோகத்தில் மூழ்கியிருக்க, ஷோகா அலி கானோ, இதில் பாதிக்கப்பட்ட ஒரு சிலரை கொண்டு எவ்வாறு ஒரு செண்டிமெண்டலான, பரபரப்பான வீடியோ கிளிப்பிங்கை உருவாக்குவது பற்றி தனது நியூஸ் சேனல் ஆட்களுடன் ஆலோசனை செய்கிறார். ஆனால் அதே சமயம்தான் அவருக்கும் தெரிய வருகிறது, தான் கல்யாணம் பண்ணிக் கொள்ளப் போகும் தனது காதலனும் அதே ரயிலில் பயணம் செய்தார் என்று.

அவரைத் தேடி மருத்துவ மனைகளில் அலையும் போது ஷோகா அலி கானை வைத்தே அவருடைய மனநிலை எவ்வாறிருந்தது என்பது போன்ற கேள்விகளை அவர் வேலை பார்க்கும் நியூஸ் சேனலே கேட்கும் போதும், எந்த வீடியோ கிளிப்பிங்கை உருவாக்க வேண்டும் என்று ஷோகா அலி கான் நினைத்தாரோ அதே வீடியோ கிளிப்பிங்கை அவரை வைத்தே உருவாக்கும் போது அவருடைய மனநிலையை காண்பிக்கும் போதும் இன்றைய டிவி நியூஸ் சேனல்களை சாட்டையால் அடித்திருப்பார் இயக்குநர்.

படத்தில் அனைவருமே அருமையாக நடித்திருந்தாலும் பரேஷ் ராவலும், இர்ஃஃபான் கானும் மிரட்டியிருகிறார்கள். தனது அலட்டலில்லாத நகைச்சுவை பேச்சாலும், இறுதியில் தனது நண்பரிடம் வெடித்து உருகும் பாத்திரத்தில் பரேஷ் ராவல் பட்டையை கிளப்பினாரென்றால் , வெறும் கண்ணசைவாலும், உடலசைவாலும் பட்டையை கிளப்பியிருக்கிறார் இர்ஃபான் கான். (தயவு செய்து நம்ம இளைய தளபதி மாதிரி ஆட்களை அவங்ககிட்ட போய் பயிற்சி எடுத்துட்டு வரச் சொல்லுங்களேன்).

கேகே மேனன் ஏறக்குறைய மனம் திருந்தும் சமயத்தில், அவர் வளர்ந்த குடும்பச் சூழலையும், அவர் முஸ்லீம்களை வெறுப்பதற்கான காரணத்தை சொல்லியது, கடைசி கட்ட காட்சிகளில் கேகே மேனனின் நடிப்பு மிக அருமை.

படத்தின் இயக்குநர் யார் தெரியுமா? எவனோ ஒருவன் படத்தை இயக்கிய நிஷிகாந்த் காமத்.

படத்தின் பெரிய பலம் பாத்திரப் படைப்புகள், அதை தூக்கி நிறுத்தும்
நடிப்பு, அருமையான திரைக்கதை, குறியீடுகளில் பல விஷயங்களை உணர்த்தும் உத்தி மற்றும் காமிரா. இரண்டாம் பாதி சற்றே தொய்வடைந்தாற் போல் தோன்றினாலும் பல நல்ல விஷயங்களுக்காக இந்தக் குறையை மன்னித்து விடலாம்.

பின்குறிப்பு: முடிந்த வரையில் கதையை அதிகம் சொல்லாமல் சில முக்கிய விஷய்ங்களை மட்டுமே சொல்லியிருக்கிறேன். மாதவன், கேகே மேனன், விஜய் மவுரியா, இர்ஃபான் கான் நடிப்பு பற்றி இன்னும் பல விஷயங்கள் சொல்ல ஆசைதான். ஆனால் அது முழு கதையையும் சொல்ல வேண்டியிருக்குமே என்பதால் அதை தவிர்க்கிறேன். என்னைப் பொருத்த வரையில் இது அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் என்றே நினைக்கிறேன் அது மட்டுமல்ல, ஹிந்தி தெரியவில்லையே என்ற எனது ஏக்கத்தையும் அதிகப்படுத்திய படம்.

பிரிவுகள்:சினிமா குறிச்சொற்கள்:,