தொகுப்பு
ஏனெனில், இவர்கள் மாணவர்கள்!
ஈழப் போராட்டத்தின் போது, இதற்கும் அதிகமான கல்லூரிகள், மாணவர் அமைப்புகளும், வராது வரும் விருந்தாளியாக சில பல பொறியியல் கல்லூரிகளும் கூட இணைந்து போராடிய சமயத்திலேயே அதனை எப்படி அடக்கினர், நீர்த்துப் போகச் செய்தனர் என்பதெல்லாம் எல்லாரும் நேரில் பார்த்த ஒன்றே!
ஈழப்போராட்டங்களில், எல்லாக் கட்சிகளை விடவும், எந்த வித எதிர்பார்ப்புமின்றி, சுய நேர்மையாக, அக்கறை என்ற ஒற்றைபுள்ளியில் எல்லாரும் இணைந்து நின்றனர்.
அவர்களுடைய போராட்டம் வெற்றியடையாமல் போயிருக்கலாம், அவர்களுல் பலருக்கு ஈழத்தின் முழு வரலாறும் கூட தெரிந்திருக்காது, இந்திய, மாநில அரசுகளினுடய அரசியல் முழுமையாக புரிந்திருக்காது. ஆனால் அவர்கள் ஒன்றிணைந்து நின்றதற்கான காரணதிலோ, அந்த நேர்மையின் மேலோ எந்த வித சிறுமையும் படுத்திவிட முடியாது!
அப்படி ஒரு இணைப்பு, அந்த நேர்மை, எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் உவப்பானதாக இருக்க முடியாது! அதனாலேயே அவர்களுடைய போராட்டங்களை நீர்த்துபோகச் செய்வதில் எல்லாக் கட்சிகளுமே மறைமுகமாக இணக்கம் காட்டுவார்கள்!
அந்தக் கூட்டத்தையே கலைத்தவர்களுக்கு, போராட்டத்தை நீர்த்துப் போக வைத்தவர்களுக்கு இப்பொழுது மாணவர்கள் எடுக்கும் போராட்டத்தை கலைப்பது ஒன்றும் கடினமான விஷயமாக இருக்க முடியாது!
வருடந்தோறும் மாணவர்கள் மாறுவார்கள்! ஆனால், காலம் முழுக்க, ஆட்சியாளர்களும், அரசு எந்திரங்களும், அவர்களது சிந்தனைகளும் மாறப் போவதேயில்லை. ஈழப்போராட்டம் முதல், ஏற்கனவே நடந்த போராட்டங்களிலேயே, ஜனநாயக அடக்குமுறைக்கான பாதையை கண்டறிந்திருப்பார்கள்!
ஒரு பக்கம், போராடக்கூடிய மாணவர்களின் யோக்கியதையை அவர்கள் கேள்விக்குள்ளாக்குவார்கள்.
மாணவர்கள், போராட்டத்தினூடே பாட்டில்களை அள்ளுவதாகவோ, அவர்களே குடித்துவிட்டுதான் போராடுவதாகவோ காட்சிகள் பரப்பப்படும். இன்னொரு புறம் அவர்களை ஒடுக்க, கல்லூரிகள் விடுமுறை அறிவிக்கும். காவல்துறை அவர்களை கைது செய்யும் அல்லது பயமுறுத்தும்.
இன்னொரு புறம் மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்தாமல், போராடலாமா, வன்முறையைக் கையில் எடுக்கலாமா? என்பது போன்ற கேள்விகளை பொதுமக்கள் வாயிலாக கேட்க வைக்கும்!
இதில் இரண்டு விதக் கூட்டம் இருக்கிறது. ஒரு கூட்டம், எந்தப் போராட்டத்தையும் தவறு என்று பேசும். சாதீயப் பாகுபாடை பேசும் சமூகத்தில் வளர்ந்து, ஒழுக்கத்தைப் பேசாத கல்வி அமைப்பில் கற்று, மனித நியதிகள் எண்ணாத நிறுவனங்களில் சம்பாதிப்பது மட்டுமே முன்னேற்றம் என்று பேசும். எந்த இடத்திலும் கேள்வி கேட்பவன் பிழைக்கத் தெரியாதவன் என்ற கொள்கையைக் கொண்டிருக்கும்!
இன்னொரு கூட்டம், போராட்டம் தன் சார்புக் கட்சி, அமைப்பு, மதம், சாதிக்கு எதிராக என்றால் அதன் நியாயத்தை பேசாமல், முழுக்க புறம் கூறும். அவர்களை கேவலப்படுத்தும். அதே, தமக்கு ஆதரவாக என்றால், அவர்களை தலைக்கு மேல் தூக்கி வைக்கும்!
ஆனால், எல்லா இடங்களிலும் மாணவர்கள், அதே பக்குவமற்ற, முறையான திட்டமிடல் இல்லாத, முழுச் சித்தாந்த புரிதலற்ற போராட்ட முறையையே மேற்கொண்டிருப்பார்கள்!
ஆளானப்பட்ட, போர்களிலும் சரி, நிர்வாகப் பாடங்களிலும் சரி, வெற்றியடையும் வரை, தோல்விகள் கூட படிப்பினைகளாக ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. அவை வெறும் தோல்விகள் மட்டுமே!
ஆம், வன்முறையை கையில் எடுத்திருக்கிறார்கள்.
ஏனெனில் இவர்கள் மாணவர்கள். எளிதில் உணர்ச்சி வயப்படுபவர்கள். முழு முதிர்ச்சி இல்லாதவர்கள் (?), விழுந்தாலும், திமிறி எழுவதே வெற்றி என்று எண்ணிக் கொண்டிருப்பவர்கள். தூண்டிவிடத் தோதானவர்கள்.
ஏனெனில், சாதீய பாகுபாடு, மதத் தீவிரவாதம், மோசடி, மூடநம்பிக்கைகள் என்று சமூகத்தின் புரையோடிப் போன பிரச்சினைகளினூடே வளர்ந்தாலும், மாணவக் காலத்தில் மட்டுமே இதைத் தாண்டிய ஒற்றுமை சாத்தியம் என்பதை உணர்ந்து, அதனை நோக்கி நகரத்துவங்கியிருப்பவர்கள்.
ஏனெனில், இதைத் தேர்தல் உத்தியாகவோ, வாக்குவங்கி அரசியலாகவோ பார்க்கத் தெரியாதவர்கள். வெறும் பிரச்சினையாக மட்டும் பார்ப்பவர்கள். இதற்கான, முழுமையான தீர்வு கூட இவர்களிடம் இருக்காது. பூரண மதுவிலக்கு சாத்தியமற்ற ஒன்று என்ற நிதர்சனம் இவகளுக்கு புரிந்திருக்காது.
ஏனெனில், ஒரு அரசியல் கட்சியினைப் போல, ஒவ்வொரு கட்டமாக போராட்டத்தைக் கொண்டு செல்லும், பிரச்சினையினை உயிர்ப்புடனே வைத்திருக்கும், அதன் மூலம் எந்தளவு அரசியல் ஆதாயம் அடையமுடியும் என்ற திட்டமிடல் இல்லாதவர்கள்!
ஏனெனில், அறப்போராட்டத்தை வன்முறையாகவோ, வன்முறையே நடந்திருந்தாலும் அதை அறப்போராட்டம் என்று மாற்றக் கூடிய கலையையோ, செல்வாக்கையோ, அதிகாரத்தையோ முழுமையாகக் கொண்டிராதவர்கள்!
ஏனெனில், இவர்களின் யாருடைய உறவினர்களும், சொந்தங்களும் மதுபான ஆலையையோ, ஏன் கடையயோ வைத்திருக்காதவர்கள். மாறாக பெரும்பாலும், மதுவால் பாதிக்கப்பட்டவர்கள். ஏன், நேற்று வரை அது சம்பந்தமான பிரக்ஞையற்றவர்களாய் கூட இருந்திருப்பர். முந்தைய வார இறுதியில் கூட தண்ணியடித்திருப்பார்கள்! அடுத்த வார இறுதியில் தண்ணியடிக்க, எப்படி காசு தேற்றுவது என்ற யோசனையில் இருப்பவர்கள்.
ஏனெனில், கேவலம் ஊழலுக்காக கைதானாலும், நீதிமன்றமே தீர்ப்பு அளித்தாலும், அதை ஏற்க்காமல், வன்முறையை தொடர்ந்து வன்முறைகளை கட்டவிழ்த்த கட்சிகளையும், தொண்டர்களையும், அதனை அனுமதிக்கும் அரசு எந்திரத்தையும் பார்த்தே வளர்ந்தவர்கள். அவர்கள்தான் சொல்லித் தந்தார்கள், வன்முறையை கையில் எடுப்பதே கவனத்தை ஈர்க்கும் என்று! அது ஒன்றும் பெரிய தவறு இல்லை என்று!
ஏனெனில், இவர்கள் வெறும் மாணவர்கள்!