தொகுப்பு
ர.சு. நல்லபெருமாள்
எல்லாருடைய எழுத்துக்களும் அவ்வளவு எளிதில் நம்மை வசீகரித்து விடுவதில்லை. வசீகரிக்கும் எழுத்துக்கள் அனைத்துமே நம் சிந்தையையும் தூண்டுவதில்லை. எனது பால்யப் பருவத்தில் என்னை வசீகரித்த எழுத்துக்களின் சொந்தக்காரரைப் பற்றி திடீரென்று நினைத்தாற் போல் இணையத்தில் தேடிய போது என்னால் அவரைப் பற்றி அதிகம் கண்டு பிடிக்க முடியவில்லை. அப்பொழுது விளைந்த எண்ணம்தான் இந்த பதிவு. அந்த எழுத்துகளுக்குச் சொந்தக்காரர் ர.சு. நல்ல பெருமாள். சிறு வயதில் நடந்திருந்தாலும், இவரது எழுத்தை நான் தேடிப் படிக்க ஆரம்பித்ததற்கு காரணமான சம்பவம் இன்றும் நினைவிலிருக்கிறது.
அது, தந்தையை நாயகனாக பாவிப்பதற்கும், வில்லனாகப் பார்ப்பதற்கும் இடைப்பட்ட ஒரு பருவம். ராஜேஷ்குமார், பிகேபி, சுபா, போன்றோரின் மாத நாவல்களிலும், மற்ற சில எழுத்தாளர்களின் படைப்புகளிலும் சற்றே சலிப்பு ஏற்பட்டிருந்த சமயம். இளமையின் காரணமாக மெலிதாக அரசியல், சமூகம், புரட்சி சம்பந்தப்பட்ட புத்தகங்களில் ஈடுபாடு ஏற்பட்டிருந்த சமயம். எங்கள் ஊரில் ஒரு மிகப் பெரிய கொடுப்பினையாக, அரசாங்கத்தால் நிறுவப்பட்டிருந்த நூலகம் ஒழுங்காக பராமரிக்கப்பட்டு வந்தது. வேலையை முடித்த பல குடும்பத் தலைவிகளுக்கும் (மெகா சீரியல்கள் அப்பொழுது மனிதர்களை முழுமையாக ஆக்கிரமித்திருக்கவில்லை), படிப்பை முடித்து வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்களுக்கும், சிறு வயது பிள்ளைகளுக்கும் அதுதான் ஒரு பொழுது போக்கும் இடமே.
வாசிப்பனுபவத்தில் அடுத்தடுத்த கட்டங்களுக்குச் செல்வதற்கு மிகுந்த உதவியாக இருந்ததும் அந்த நூலகந்தான். மாத நாவல் எழுத்தாளர்களையும், கல்கி, அனுராதா ரமணன், சிவசங்கரி, சாண்டில்யன், தவிர எனக்கு அதிகம் மற்ற எழுத்தாளர்களைப் பற்றி தெரிந்திருக்கவில்லை. ஆகையால் நூலகத்தில் இருந்து நானாக மூன்று புத்தகங்களை எடுத்து வந்து படிப்பது வழக்கமாகியிருந்தது. எப்போதும் மாத நாவல்களையோ அல்லது நூலக புத்தகங்களையோ நான் படிப்பதை பார்க்க நேர்ந்தால், சும்மா புரட்டி மட்டும் பார்த்துவிட்டு செல்லும் எந்தை (அதற்கு மேல் அவருக்கு நேரம் கிடைப்பதில்லை, என்னைப் பொறுத்த வரை அதுவே ஒரு பெரிய கொடுப்பினை. ஏனெனில், பாட புத்தகங்கள் மட்டும்தான் வாழ்க்கை என்ற சூழ்நிலை நிலவும் ஒரு சமூகத்தில், மற்ற புத்தகங்களை படிக்க அனுமதிப்பது என்பதையும் தாண்டி அதை ஊக்குவிக்கவும்கூடிய ஒரு குடும்ப அமைப்பை பெற்றிருப்பது எனக்கு கிடைத்த மிகப் பெரிய வரந்தான்) அன்று மட்டும் நான் எடுத்து வந்த ஒரு நூலை மிக ஆர்வத்துடன் பார்த்தது மட்டுமில்லாமல் ஒரு மணி நேரம் இருந்து படித்துவிட்டுச் சென்றார்.
அது மட்டுமில்லாமல் அந்த புத்தகத்தை படிக்குமாறு என்னையும் சொல்லிவிட்டுச் சென்றார். அந்தச் செயல் என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தியது, ஏனெனில் அதற்கு முன் அவராக என்னைப் படிக்கச் சொன்ன ஒரு புத்தகம், காமராசருடைய வாழ்க்கை வரலாறு தான், காமராசருடைய நெருங்கிய நண்பர் (பெயர் முத்துசாமி என்று நினைக்கிறேன்) ஒருவரால் எழுதப்பட்ட புத்தகம் அது, மற்றபடி அவர் எனது ரசனையிலோ, வாசிப்பிலோ தலையிடுவதேயில்லை. இப்போது அவர் படிக்கச் சொன்ன புத்தகம், ர.சு. நல்ல பெருமாள் என்பவர் எழுதிய “மயக்கங்கள்”. என் தந்தை விரும்பி படித்த அந்தச் செயல்தான் ர.சு. நல்லபெருமாளின் மற்ற புத்தகங்களை அந்த நூலகத்திலிருந்து தேடி எடுத்து வந்து படிப்பதற்கும் முக்கியமாக என் தந்தைக்கு படிக்கக் கொடுப்பதற்கும் காரணமாக இருந்தது (நமக்கு பிடித்தமானவர்களுடைய விருப்பங்களுக்கான தேடலும் மிகச் சுகமானதுதானே!!!)
எந்தைக்காக படிக்க ஆரம்பித்தாலும் படிக்க படிக்க அவரது எழுத்துக்கள் மீதான ஈர்ப்பு அதிகரித்துக் கொண்டேச் சென்றது. இளமைப்பருவத்தில் வருகின்ற காதல் மட்டுமல்ல, சில சமயங்களில் நம்மை வியக்க வைக்கிற மனிதர்களும், சில நூல்களும், சம்பவங்களும் கூட நம் நெஞ்சில் பசுமையாக நிலைக்கத்தான் செய்கின்றன.
சற்றே புரட்சி சம்பந்தப்பட்ட நூல்களில் ஆர்வம் இருந்ததாலோ என்னமோ “ஆத்திகம், நாத்திகம்” இரண்டையும் கேள்விக்குட்படுத்தி அவர் எழுதியிருந்த ”மயக்கங்கள்” நாவல் என்னுள் மிகுந்த ஈடுபாட்டை ஏற்படுத்தியது. நாவலின் முடிவில் எது உண்மை எது பொய், எது சரி, எது தவறு என்பதைப் பற்றியெல்லாம் முடிவுகள் ஏதும் தராமல் வாசகனை சிந்திக்க விட்டிருந்தது என்னை மிகவும் ஈர்த்தது.
அந்த புத்தகம் ஏற்படுத்திய நம்பிக்கைதான் அடுத்த முறை அவர் எழுதிய ”கல்லுக்குள் ஈரம்” (1966-1969), ”போராட்டங்கள்” (1972) ஆகிய இரு நூல்களைக் கொணரச் செய்தது. இந்த இரு நாவல்களும் ஏற்படுத்திய சிந்தனைகள், ஆச்சரியங்கள், திடுக்கிடல்களை வார்த்தைகளில் சொல்ல முடியாது. அதுவும் ”கல்லுக்குள் ஈரம்” புத்தகத்தில் சொல்லப்பட்டிருந்த விஷயங்கள், சுதந்திரப் போராட்டக் காலத்தை அப்படியே நம் கண்முன்னே கொண்டு வந்தது. திலகர், பாரதி, காந்தி என்று பலருடைய சிந்தனைகளை நடவடிக்கைகளை, அவர்களைப் பற்றி படிக்கும் போதும் சரி, ”சிலைகளுக்கு மாலைகளை அணிவிக்கிறார்கள், சிந்தனைகளுக்கு மலர்வளையம் வைக்கிறார்கள்” என்பது போன்ற வரிகளை படிக்கும் போதும் சரி ஏற்படுத்திய உணர்வுகள் ஏராளம்!!!
பின்னாளில், இந்த ”கல்லுக்குள் ஈரம்” என்ற இந்த நாவல், இன்னொரு நாட்டின் சுதந்திரப்போருக்கு ஒரு வித்தாக அமைந்ததை அறிந்த போது மிகுந்த வியப்புமேற்பட்ட்து!!! இதில் வரும் ’ரங்கமணி’ பாத்திரம்தான் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு ஒரு தூண்டுகோலாக அமைந்தது என்று அவரே பேட்டி கொடுத்திருக்கிறார். நம் நாட்டின் சுதந்திரப் போராட்டத்தைப் பற்றிய நாவல், இன்னொரு நாட்டின் சுதந்திர வேட்கையில் பங்கு வகித்தது பெரிய விஷயம்தானே!!!…பின்னாளில் ஹேராம் திரைப்படம் பார்க்க நேர்ந்த போது, படத்தில் வரும் பல சம்பவங்கள் இந்த நாவலைத் தழுவியிருந்த போது (கமல் அதை ஒற்றுக் கொள்ளாவிடினும்) அந்த நாவலின் வெற்றியை என்னால் உணர முடிந்தது!!! இந்த நாவல்தான் கல்கி வெள்ளி விழா ஆண்டிற்கான போட்டியில் இரண்டாம் பரிசையும் வென்றிருந்த்து!
அவருடைய மற்றொரு நாவலான ”போராட்டங்கள்”, அது தொட்டுச் சென்ற தளங்களோ ஏற்படுத்திய அதிர்வுகளோ சாதாரணமானதன்று. 1960களில் கம்யூனிச சித்தாந்தம் நிலவிய விதமும், அந்தக் கட்சியின் செயல்பாடுகள், அதில் தலைமைப் பொறுப்பை ஏற்க நடந்த கொலைகள், சீனப் போரின் போது நடைபெற்ற பாராளுமன்ற பேச்சுக்கள், நேருவின் தவறுகள் என பலவற்றையும் தொட்டுச் சென்றது. இத்தனைக்கும் நடுவில் வெறுமனே பரப்பரப்புச் செய்திகளை விரும்பிப் படிக்கும் மக்களும், அதனைத் தரும் செய்தி ஊடகங்களும் இருக்கும் சூழலில் ஒரு நேர்மையான பத்திரிக்கையை நடத்தும் வேட்கைக் கொண்ட நாயகன், அவனது உணர்வுகள், சந்திக்கும் சோதனைகள் என அந்தக் காலத்திலேயே சொல்லியிருப்பது சற்றே ஆச்சரியத்தையும் ஏற்படுத்துகிறது!!!
இதே போன்று பத்திரிக்கைத் தொழில் நடத்துவதை அடிப்படையாகக் கொண்டு அவர் எழுதியிருக்கும் மற்றொரு நாவல்தான் ”மாயமான்கள்”. சமூகத்தில் உயர்வாகக் கருதப்பட்ட சிலரது மூகமூடியைக் கிழிக்கும் வகையிலும், அதிக அளவில் பெண்ணீயம் பேசும் வகையிலும் இவர் எழுதிய மற்றொரு நாவல் ”திருடர்கள்” (1976).
இந்த நாவல்கள் எந்த அளவிற்கு இவருக்கு வாசகர் வட்ட்த்தைப் பெற்றுத் தந்ததோ அதே அளவிற்கு சில பல சிக்கல்களையும் கொணர்ந்தது. கம்யூனிஸ்ட் கட்சியினர் பலரின் அதிருப்திக்கு இவரது ”போராட்டங்கள்” உண்டாக்கியதென்றால், ”கல்லுக்குள் ஈரம்” நாவல் தன்னுள் விடுதலை உணர்வைத் தூண்டியது என்ற ‘பிரபாகரன்’ அவர்களின் பேட்டி, சிபிஐ, சிஐடி போலீசாரால் இவரை விசாரிக்க வைத்தது.
ஆத்திகம், நாத்திகம், கம்யூனிசம் என்றெல்லாம் சற்றே சர்ச்சையான நூல்களை எழுதிய அதே நல்ல பெருமாள்தான், தனது ”பிரம்ம ரகசியம்” (19820 என்ற நூலின் மூலம் பல்வேறு தத்துவ ஞானிகளின் கருத்துக்கள், சமய அறிஞர்களின் கருத்துக்கள், புத்த மதம் முதல் சைவ சமயம் வரை பல சமயக் கருத்துக்களை, தத்துவங்களை எளிமைப்படுத்தி கொடுத்திருக்கிறார் என்பது சற்றே ஆச்சரியமூட்டும் விஷயந்தான். எனக்குத் தெரிந்த இவருடைய மற்ற நூல்கள் எண்ணங்கள் மாறலாம் (1976), வீண் வேதனை (1950), நம்பிக்கைகள் (1981) மற்றும் மருக்கொழுந்து மங்கை
நல்லபெருமாளின் சமூக நாவல்கள் பிரபலம் அடைந்த அளவிற்கு அவரது சிறுகதைகள் பெரிதாகப் பேசப் படவில்லை. மிகச் சாதாரணமாகவே கருதப்பட்டது. அவரது கல்லூரிக் காலத்திலேயே அவர் சிறுகதைகளை எழுத ஆரம்பித்ததோ அல்லது அவருக்கு பெருமை சேர்த்த சமூகச் சாடல்கள் அவரது சிறுகதைகளில் இல்லாததோ அதற்குக் காரணமாயிருந்திருக்கலாம்.
இத்தனை நூல்களை எழுதிய நல்ல பெருமாள் சட்டம் படித்தவர் என்பது பண்பலையில் அவர் கொடுத்த ஒரு நேர்காணலில்தான் எனக்கு தெரிந்தது. காந்தீயக் கொள்கைகளுக்கு தன்னுடைய ”கல்லுக்குள் ஈரத்தில்” குரல் கொடுத்த இதே நல்ல பெருமாள், அதே பேட்டியில் இந்தக் காலகட்டத்திற்கு காந்தீயக் கொள்கைகள் ஒத்து வராது என்று சொன்னது ஒரு நகை முரணாகவும் இருந்தது.
ர.சு நல்லபெருமாள் மொத்தம் 10 சமூக நாவல்கள், 2 சரித்திர நாவல்கள், 1 தத்துவ நூல், 2 சிறுகதைத் தொகுப்பு மற்றும் ஒரு சுய முன்னேற்ற நூலினை எழுதியுள்ளார். மிகப் பரவலாக அறியப்பட்ட நல்லபெருமாள், 1990க்குப் பிறகு எழுதவில்லை. எழுத வேண்டுமே என்று எழுத முடியாது, எனக்கு அதன் பின் நடை வரவில்லை, அதனால்தான் எழுதவில்லை, எழுத்தாளர்களுக்கு ஒரு சாச்சுரேஷன் பாயிண்ட் வருவது இயற்கை, எனக்கு அது ஏற்பட்டிருக்கலாம் என தைரியமாகத் தன் பேட்டியில் சொன்னது எனக்கு சற்று ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது.