தொகுப்பு

Posts Tagged ‘ஈழம்’

எல்லோரும் சுயநலப் பேய்கள்தான்…

ஆரம்பித்து விட்டது தேர்தல் கூத்துகள். யார் கேவலமாக நடந்து கொள்வது என்று கட்சிகளுக்குள் கடும் போராட்டம் நடைபெறுகிறது. எததனை காலமானாலும் நாங்கள் மாறப் போவதில்லை என்று ஆரம்பத்திலேயே தங்களது முகத்தை பாஜக ‘வருண் காந்தி மூலம் வெளிப்படுத்தியது. அதை விடக் கொடுமை, ஜெயிலுக்குள் சென்று பார்த்து விட்டு வந்த மேனகா காந்தி ‘தன் மகன் மிகுந்த தைரியசாலி, அவனை நினைத்து பெருமைப் படுகிறேன் என்று கூறியது!

 

ஒரு காலத்தில் மிருகங்களின் முறையான வாழ்விற்கு கடுமையாகப் போராடியதற்காக நன்மதிப்பைப் பெற்ற இவர், மிருகங்களுக்கான அன்பைக் கூட மனிதர்களிடத்தில் செலுத்த மறுப்பதேனோ? மக்கள் வருண்காந்தியின் பேச்சை ஒத்துக் கொண்டார்களோ இல்லையோ, தாங்கள் நினைத்த புகழ் கிடைத்த திருப்தி பாஜகவிற்கு.

 

இந்தியாவின் மிகப் பெரிய முதியோர் இல்லமாக பாராளுமன்றம் காட்சி அளிக்கின்றது. என் நாட்டின் பிரதமர், முன்னாள் பிரதமர், என் மாநிலத்தின் முதல்வர் என அனைவருமே மருத்துவமனையில் இருந்து வந்த காட்சிகளையெல்லாம் மக்கள் காண வேண்டி வந்தது

 

மத்தியில் நடப்பதை விட, தமிழ் நாட்டில் நடக்கும் கூத்துகள்தான் மிகக் கொடுமை. தமிழகத்தில் வரலாற்றில் எங்கும் கண்டிராத படி, அத்தனை கட்சிகளும் ஈழ மக்களுக்காக அனுதாபம் காட்டினாலும், அங்கு போர், ஏன் முற்றுப் பெற வில்லை என்ற மர்மம் மக்கள் மனதை விட்டு நீங்கவே இல்லை.

 

நேற்றுவரை காங்கிரசுடன் கூட்டணி அமைத்த பாமக இன்று அதிமுகவுடன், ஒருவருடன் ஒருவர் கை கலப்பு வரை சென்ற விடுதலை சிறுத்தைகளும் காங்கிரசும் ஒரே கூட்டணி!. அணிதாவல், கொள்கை மாற்றம் என்று நம் அரசியல்வியாதிகளின் திறமையை கண்டு பச்சோந்திகள் கூட பொந்தை விட்டு வெளி வர மறுக்கின்றன. ஈழப் பிரச்சனையில் கலைஞர் ஏன், தன் எம்பிக்களையும், அமைச்சர்களையும் பதவி விலகச் சொல்ல வில்லை என்று கேள்வி எழுப்பிய அதே பாமக, தனது மகனையும், அமைச்சர்களையும் பதவி விலகச் சொல்லாத அதே பாமக, இப்போது அதிமுகவுடன் கூட்டணி வைத்தவுடன் அவர்களை பதவி விலக வைத்திருக்கிறது. கேட்டால் கூட்டணி தர்மம் என்று வியாக்கியாணம் பேசுகிறது.

 

இவர்கள் எல்லாரையும் தூக்கிச் சாப்பிடும் காமெடியை திமுகவும், காங்கிரசும் அரங்கேற்றி வருகிறது. என்னதான் முதுகெலும்பு ஆபரேசன் வெற்றி என்று மருத்துவர்கள் சொன்னாலும், செய்திகள் வந்தாலும், அப்படி ஒன்றும் வெற்றி இல்லை என்பதை ஈழத் தமிழர்களுக்காக திமுக என்றும் பாடுபடும், ஈழத்தில் அமைதி ஏற்பட பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற வார்த்தைகளின் மூலம் நிரூபித்துக் கொண்டே இருக்கிறார் தமிழினத் தலைவர். இதன் அடுத்த கட்ட காமெடிதான், வியாழக்கிழமை (09.04.09) அன்று கட்சி பேதமின்றி பேரணி நடத்துகிறாராம். தவிர பிரதமர் மன்மோகன்சிங்குக்கும், உண்மைப் பிரதமர் சோனியாவுக்கும், ஈழப் பிரச்சனை சார்பாக தந்தி கொடுத்திருக்காராம்.

 

இந்த விஷயத்தில் மட்டும் மிகச் சரியாகவே நடந்து கொண்டிருக்கிறார் தலைவர். இன்னமும் கிராமங்களில், எழவு செய்தியைச் சொல்ல தந்தி முறையைத்தான் பயன்படுத்துகிறார்கள். அப்படி இருக்கையில், இப்போது தந்தி அடித்து, நடவடிக்கை எடுக்கச் சொல்லியிருக்கிறார். என்ன ஒரே குழப்பம் என்றால், பிரதமர்களை நடவடிக்கை எடுக்கச் சொல்லுகிறாரா, அல்லது எல்லாவற்றையும் முடித்து விட்டு எழவுக்கு வந்து சேருங்கள் என்று அழைக்கிறாரா என்றுதான் புரியவில்லை. அதற்கு சப்பைகட்டு கட்டிக்கொண்டு, தலைவர்தான் மிகப் பெரிய தியாகி, அவரளவு இந்த விஷயத்தில் ஒழுக்கம் வேறு யாரும் கிடையாது என்று புள்ளி விவரம் பேசும் அறிவுஜீவிகளைப் பார்க்கும் போது, படிப்பறிவுக்கும் பகுத்தறிவுக்கும் சம்பந்தம் கிடையாது என்ற உண்மையே மனதில் நிற்கிறது

 

தனது கட்சிக்கு, இந்திய நாட்டிலிருந்து ஒரு தலைவரை தேர்ந்தெடுக்க திராணியில்லாத காங்கிரசின் கையில் அடுத்த 5 வருடங்கள் இருந்தால் என்ன ஆகும் என்று நினைத்தாலே பயமாய் இருக்கிறது. இலங்கையில் எம்மக்களை அழிப்பதோடில்லாமல், இந்திய நாட்டையும் தூக்கி தீவிரவாதிகளிடமும், அமெரிக்காவிடமும் அடகு வைத்து விடுவார்களோ என்ற அளவிலேயே ஆட்சி இருக்கிறது. தேசிய பாதுகாப்பு சட்டத்திற்கும், பொடாவிற்கும் உள்ள வித்தியாசம்தான் காங்கிரசுக்கும், பாஜகவுக்கும் இருக்கிற வித்தியாசம்

 

இவர்கள் எல்லாரையும் தூக்கிச் சாப்பிட்டுவிடுவார்கள் என் நாட்டு மக்கள். சுரணை என்றால் விலை எவ்வளவு என்று கேட்பார்கள். சீக்கியர்கள் தனது தலைப்பாகைக்கு கொடுக்கும் மரியாதையை, எம்மக்கள் தனது சகோதரர்களின் தலைகளுக்கு கொடுப்பதில்லை. இவர்களுக்கு தன்மானத்தை போதிக்க கூட, அதே சீக்கியர்கள் மத்தியில் இருந்து ஒருவர் ஷூவை வீச வேண்டி இருக்கிறது.

 

யாருக்காவது அடிமையாய் இருப்பது என்றால் அவர்களுக்கு கொள்ளை விருப்பம். குவார்ட்டரும், கொஞ்சம் காசும் போதும், ஒரு சிலருக்கு, யாருக்கு ஓட்டு போடுவது என்று தீர்மானிக்க. அரசு அலுவலர்களுக்கோ, ஒழுங்காய் வேலை செய்யச் சொல்லி வற்புறுத்தாமல், கேட்கும் போனசை கொடுக்கும் கலைஞருக்குத்தான் அவர்களது நிரந்த ஓட்டு. சில கிருத்துவ அமைப்புகளுக்கோ, மதமாரற்ற தடைச் சட்டத்தை கொண்டு வராமல் இருப்பவர்களுக்கே ஓட்டு. நடுத்தர மக்களோ, டிவிக்கு அடுத்து டிவிடி பிளேயர் கொடுத்தால் ஓட்டுப் போட ரெடியாகி விடுகிறார்கள். ஆக மொத்தத்தில் எல்லாரும் சுயநலப் பிசாசுகளாய் இருப்பதில் கூச்சமே அடைவதில்லை.

 

பிச்சைக்காரனிடம், பத்து ரூபாய் கொடுத்தாலே நடு ரோட்டில் பல்டி அடிப்பான். அதற்கு அடுத்தக் கட்டதிலிருப்பவனுக்கு, நூறு ரூபாய் கொடுத்தால் போதும். நடுத்தரவாசிக்கு, ஆயிரம் கொடுத்தால் போதும், அரசியல்வாதிக்கு, அவரது தலைவர் விருப்பம் என்றால் போது. ஆக மொத்தத்தில் ஈனத்தனத்தை செய்ய எல்லாருமே தயாராக இருக்கிறோம், என்ன, அதற்கான விலைதான் ஆளைப் பொறுத்து மாறுகிறது.

பிரிவுகள்:அரசியல் குறிச்சொற்கள்:,

இன அழித்தலுக்கு எதிராய் ஒன்று கூடுவோம்…

மாபெரும் ஒன்றுகூடல்


சென்னை பெப்ரவரி 22 – 2009 மெரினா கடற்கரை போர் நினைவகம் முதல் காந்திசிலை வரை

அன்புள்ள நண்பர்களுக்கு,

நிறைய பேசியாயிற்று. நிறைய விவாதித்தாயிற்று. மனிதாபிமானம் பற்றி. தற்கொலைப் படையைப்பற்றி. தற்கொலையின் முட்டாள்தனம் பற்றி. தற்கொலையின் தியாகம் பற்றி. ராஜீவ் காந்தியின் கொலைப்பற்றி. அதன் துன்பியல் பற்றி. அதன் மர்மங்கள் பற்றி. இந்திய தேச இறையாண்மைப் பற்றி. தடைசெய்யப்பட்ட இயங்கங்கள் பற்றி. அவைகளைப்பற்றி பேசுவதின் சட்ட சிக்கல் பற்றி. அந்த தடையின் நியாயங்கள் பற்றி .அந்த தடையை உடைப்பதை பற்றி. இனவெறுப்புகள் பற்றி. மனிதக் கேடயங்கள் பற்றி. பாதுகாப்பு வளையம் பற்றி. Cocentration Camp பற்றி. இந்திய தேசிய ஒருமைப்பாடு பற்றி. தமிழ்தேசிய பிரிவினைவாதம் பற்றி. இந்தியனாய் இணைவோம் பற்றி. தமிழனாய் எழுவோம் பற்றி. பயங்கரவாதிகள் பற்றி. விடுதலைப்போராளிகள் பற்றி. மதவெறிகளைப்பற்றி. எல்லாம் கடந்த மனிதநேயம் பற்றி…..

எல்லாம் கடந்து ஒன்று மட்டும் நிச்சயம் அங்கே பிணங்கள் குவிவதை யாரும் மறுப்பதற்கில்லை. இன அழித்தல் நடப்பதை யாரும் அறியாமலில்லை. பிணங்களின் மேல் ஒன்றும் நடக்கவில்லை என்று சத்தியம் செய்ய நாம் தயாராயில்லை.

நேற்று(17- பெப்ரவரி-2009) கொல்லப்பட்ட 104 (50 குழந்தைகள் உள்பட) உயிர்களுக்காய்

இந்த புத்தாண்டில் மட்டும் இறந்த 1700 உயிர்களுக்காய்

4000 மேற்பட்ட படுகாயப்பட்டவர்களுக்காய

இதுவரை 60 ஆண்டுகளில் இறந்த 70 000 அப்பாவி தமிழர்களுக்காய்

ஒன்று கூடுவோம் ஒரே குரலாய் ஒரே குறிக்கோளோடு

‘போர் நிறுத்தம் வேண்டும்.இனஅழித்தலை நிறுத்த வேண்டும். எந்த அரசியல் உள்நோக்கமுமில்லை. எந்த அரசியல் கட்சியுமில்லை

பொதுமக்கள் இணைந்து பொதுமக்களால் நடத்தப்படும் இந்த  மாபெரும் அமைதி நடைக்கு ஒன்று கூடுவோம்

இடம்: போர் நினைவகம் தொடங்கி காந்தி சிலை வரை, மெரினா கடற்கரை, சென்னை

நாள் :  22- பெப்ரவரி – 2009 (ஞாயிறு)

நேரம் : மாலை 4 மணி

இதுவரை வர  அழைப்பு விடப்பட்டவர்கள் மற்றும் சம்மதித்திருப்பவர்கள்

1.இந்து மதம் சார்ந்த அமைப்புகள் (வாழும்கலை (ART OF LIVING),), இன்னும் பிற அமைப்புகள்
2. முஸ்லீம் மதம் சார்ந்த மதத்தலைவர்கள் மற்றும் அமைப்பினர்
3. எல்லா கிருஸ்து அமைப்புகள்
4. புத்த பிக்குகள்
5. திராவிடர் கழகம் (கட்சிகள் அல்ல)
6. மருத்துவர்கள் அமைப்புகள்
6. பொறியாளர் சங்கம்
7. வணிகர் சங்கங்கள்
8.ஆட்டோ ஓட்டுனர்கள்
9. அரசுத்துறை ஊழியர்கள்
10. அனைத்து கல்லூரி மாணவர்கள் கூட்டமைப்பு
11. விளையாட்டுதுறை சார்ந்த சங்ககங்கள்
12 .கலைத்துறையினர் (நடிகர் சங்கம், துனை நடிகர் சங்கம், இயங்குனர்கள்)
13. தன்னாற்வ தொண்டு நிறுவனங்கள்
14. வணிக நிறுவனங்கள்
15. அனைத்து மீனவ அமைப்புகள்
16. பத்திரிக்கையாளர்கள்
17. பதிவர்கள்

இன்ன பிற அமைப்புகளும்…

ஓர் இனம் அழியும் பொழுது நடுநிலைமை என்பது மனிதத்தன்மை அல்ல. ஒன்று படுவோம்  இன அழித்தலைத் தடுப்போம்

இனஅழித்தலுக்கு எதிரான இந்தியர்கள்  www.indiansagainstgenocide.org

உங்கள் நண்பர்களுக்கு தெரியபடுத்துங்கள். அழைத்து வாருங்கள். இந்த அமைதி நடையின் மூலம் ஓர் அமைதியைக்கோருவோம்.

பிரிவுகள்:ஈழம் குறிச்சொற்கள்:

பதிவர் சந்திப்பு , வீரவணக்கக் கூட்டம்

பிப்ரவரி 6, 2009 1 மறுமொழி

தோழர்கள் முத்துக்குமார் மற்றும் ரவிக்கான வலைப்பதிவாளர்களின் வீரவணக்கக் கூட்டம்.

வலைப்பதிவுத் தோழர்களே!

ஈழத்தில் இனப்படுகொலைகளை நிகழ்த்திவரும் சிங்களப் பேரினவாதப் பாசிச அரசிற்கு எதிராகவும் அப்பேரின அரசிற்கு ஆயுதங்கள் கொடுத்து போரை வளர்த்து வரும் இந்திய ஏகாதிபத்தியப் பேரரசிற்கு எதிராகவும் அம்மத்திய அரசிற்குத் துணைபோகும் கருணாநிதியின் தமிழினத்துரோக அரசை அம்பலப்படுத்தும் விதமாகவும் தீக்குளித்து மாண்டுபோன போராளித்தோழர்கள் முத்துக்குமார், ரவி மற்றும் ஏனையோருக்கான வீரவணக்கக்கூட்டத்தில் உங்களையும் கலந்துகொள்ள அழைக்கிறோம்.

நாள் : 08.02.2009 ஞாயிறு மாலை 4 மணி

இடம் : நடேசன் பூங்கா, தி.நகர், சென்னை.

மேலும் தொடர்புகளுக்கு :

அதிஷா – 9884881824
ஆழியூரான் – 9840903590
சுகுணாதிவாகர் – 9790948623
லக்கிலுக் – 9841354308

ஒருங்கிணைப்பு : ஒடுக்குமுறைக்கு எதிரான வலைப்பதிவர் குழு.

இப்பதிவை வாசிக்கும் அனைத்து வலைப்பதிவு தோழர்களும் அவரவர் பதிவில் இந்த வீரவணக்க கூட்டத்துக்கான அறிவிப்பினை வெளியிடும்படி கேட்டுக் கொள்கிறோம்

பிரிவுகள்:ஈழம் குறிச்சொற்கள்:

தகவல் தொழில்நுட்பத்துறையினர் மற்றும் மாணவர்கள் நடத்திய போராட்டக் குறிப்புகள்

திசெம்பர் 16, 2008 2 பின்னூட்டங்கள்

ஒன்றுக்கொன்று சற்றும் பரிச்சயமில்லாத முகங்கள்தான்; ஆனால் எல்லாருக்கும் ஒரே முகம்!

14.12.08 (சனிக்கிழமை) கூடியிருந்த அந்தக் குழுவினர் அனைவருமே ஒரே உணர்வால் இணைக்கப் பட்டிருந்தனர். ஏறக்குறைய 200 பேர் இருந்த அந்தக் குழு ஒரு உன்னத இலக்கை நோக்கிய நீண்ட பயணத்தின் முதல் படியை அன்றுதான் தாண்டியது

மனித சங்கிலியில் ஆரம்பித்த அந்தப் போராட்டம் அடுத்த கட்டத்தை அன்றுதான் அடைந்திருந்தது. தகவல் தொழில் நுட்பத்துறையினர் மற்றும் மாணவர்கள் இணைந்து நடத்திய உண்ணாநிலைப் போராட்டம் பழ. நெடுமாறன் அவர்களால் துவக்கி வைக்கப் பட்டது

சுமார் 9.30 மணிக்கு போராட்டம் துவங்கிய போது 100க்கும் குறைவான தோழர்களே இருந்தாலும், நேரம் செல்ல செல்ல எண்ணிக்கை 200ஐ தாண்டியிருக்கும் என்றே தோன்றுகிறது.

அழைப்பிதழில் தகவல் தொழில் நுட்பத்துறையினர் நடத்தும் போரட்டம் என்று போட்டிருந்தாலும், பேனரில் தகவல் தொழில் நுட்பத்துறையினர் மற்றும் மாணவர்கள் இணைந்து நடத்தும் போரட்டம் என்று உருமாறியதிலேயே போராட்டம் மெல்ல மெல்ல அதன் தளத்தை விரிவுபடுத்தி வருவதும், பல்துறையிலிருந்தும் அதன் ஆதரவு பெருகுவதும் புரிந்தது. இதற்கு சாட்சியாக வெவ்வேறு துறைகளில் இருந்து கலந்து கொண்ட நண்பர்களும், வலைப்பதிவிற்கோ, குழுமத்திற்கோ எந்தவித சம்மந்தமும் இல்லாமல் வெறுமனே ஃபார்வார்டு செய்த மடலைப் பார்த்தும், அழைப்பிதழைப் பார்த்தும் உணர்வால் உந்தப்பட்டும் வந்தவர்களே சாட்சி

பழ.நெடுமாறன், சுப.வீரபாண்டியன், சீமான், விடுதலை ராசேந்திரன், தோழர் தியாகு, தோழர் மகேந்திரன், இலங்கை நாடளுமன்றப் எம்பி சிவாஜிலிங்கம், ஊடகவியலார் டிஸ்ஸ் மணி, பேரா.கல்யாணி, வழக்குரைஞர் அருள்மொழி, கவிஞர் அறிவுமதி, திரு. ஜெகத் கஸ்பார், கவிஞர் தாமரை, எழுத்தாளர் ராசேந்திரச் சோழன் மற்றும் பலர் கலந்து உரையாற்றினார்கள்!

இடையே கவிஞர், வலைப்பதிவாளர் தமிழ் நதி ஈழப் போராட்டம் பற்றிய தமது கவிதையை படைத்தார்.

வெறுமனே உண்ணாவிரதம் இருப்பதே கடினம் என்ற நிலையில், தொடர்ச்சியாக உரையை ஊன்றி கவனித்து, போராட்டத்தின் தேவைக்கேற்ப செயல் புரிவது என்பது சற்றே கடினம்தான். ஆனால் தோழர்கள் மிக அழகாக கஷ்டங்களை தாங்கிக் கொண்டனர்

ஈழப்பிரச்சனையின் முழு வரலாறும், அதிலுள்ள நுண்ணரசியலும், வெவ்வேறு காலகட்டங்களில் இந்தியாவின் நிலைப்பாடுகளும், தற்போதைய நிலைப்பாட்டின் பிண்ணனியும், ஈழப் போராளிகளைப் பற்றியும் மற்றும் மக்களின் மனதில் இருக்கும் பல்வேறு கேள்விகளுக்கும் விளக்கமாக பழ.நெடுமாறன், சுப.வீரபாண்டியன், விடுதலை ராசேந்திரன், தோழர் மகேந்திரன், இலங்கை நாடளுமன்றப் எம்பி சிவாஜிலிங்கம், ஊடகவியலார் டிஎஸ்எஸ் மணி, பேரா.கல்யாணி போன்றோரின் உரை அமைந்ததென்றால், ஈழப் போராட்டத்தில் நம் போன்றோரின் பங்கு எவ்வாறாக இருக்க வேண்டும் என்ற விளக்கம் திரு. ஜெகத் கஸ்பாரின் உரை அமைந்திருந்தது.

சுமார் 3.30 மணி அளவில் போரட்டத்தைப் பற்றி கேள்விப் பட்டு திரு வைகோ அவர்களும், திருமாவளவன் அவர்களும் கலந்து கொண்டு உரையாற்றியதோடு, படித்த, வேலைக்கு செல்லும் இளைஞர்கள் உணர்வோடு நடத்தும் போராட்டத்தில் கலந்து கொண்டு போராட்டக் குழுவை பாரட்டுவது தமது க்டமை என்பதாலேயே, இதே போன்ற இன்னொரு போராட்டத்திற்கு செல்லுமுன் வந்ததாக கூறினார்கள்

போராட்டத்தில் ஆணித்தரமாக வைக்கப் பட்ட நமது நான்கு கோரிக்கைகள்

1. எங்களது வரிப்பணத்தில் வாங்கப்படும் ஆயுதங்களை இலங்கை அரசுக்கு தராதே!
2. இந்திய அரசே! தமிழீழ மக்கள் விடுதலைப் போராட்டத்தை ஆதரி (அங்கீகரி)!
3. ஈழ அரசு உடனான அரசியல், பொருளாதார, விளையாட்டு உறவினை துண்டித்துக் கொள்1
4. இந்திய மீனவர்களை இலங்கை ராணுவம் சுட்டால் திருப்பி தாக்கு!

இந்த போராட்டம் உணர்ச்சிப் பூர்வமாக இல்லாமல், உணர்வுப் பூர்வமாக இருக்க, நம்முடைய தீவிரத்தை காட்ட, தொடர்ந்து 15.12.08 (ஞாயிற்றுக் கிழமையும்) உண்ணாவிரதத்தை சுமார் 30 பேர் தொடர்வதாக தோழர்கள் அறிவித்தனர்

தொடர்ந்து ஞாயிறு நடந்த போராட்டத்தில் ஓவியர் புகழேந்தி அவர்களின் ஓவியம் வெளியிடப்பட்டது. தோழர் தியாகு, காசி அனந்தன் ஆகியோர் உரையாற்றினர்

இறுதியில் திரு காசி அனந்தன் அவர்களால் இந்த உண்ணாவிரதம் முடித்து வைக்கப்பட்டது. இறுதியில் தோழர் தியாகு முன்னிலையில் இந்தப் போராட்டத்தை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் செல்வது பற்றி ஆலோசிக்கப் பட்டது

பி.கு.
1. மிகப் பெரிய சபாஷ்: சிறிய மனித சங்கிலியில் ஆரம்பித்து, இன்று 200 பேர் பங்கேற்ற உண்ணாநிலைப் போராட்டமாக வளர்ச்சி பெறச் செய்ததோடு இல்லாமல், அதற்கு இந்தப் போராட்டத்தில் நீண்ட காலமாக பங்கு பெற்று வரும் அறிஞர்களை அழைத்து வந்து உரையாற்றச் செய்த, எல்லாரும் பேசிக் கொண்டிருந்த சமயத்தில் களத்தில் இறங்கி ஒருங்கிணைத்த அந்த ஒருங்கிணைப்பாளர்கள் குழுவுக்கு எங்கள் சபாஷ்!!!!

2. மிகப் பெரிய நெருடல்: ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக பல்வேறு குரல்கள் வலைப்பதிவில் எழுப்பப் பட்டு வரும் நிலையில், இந்த போராட்டத்திற்கு வருகை தந்த வலைப்பதிவர்கள் மற்றும் குழும நண்பர்களின் எண்ணிக்கை மிக மிகக் குறைவு

3.. போராட்டம் சார்பாக கோயம்பேடைச் சுற்றி நோட்டீஸ் கொடுக்கச் சென்ற போதும், இந்திய அரசை இலங்கை அரசுக்கு ஆயுதம் கொடுக்க கூடாது என்று பலரை பேனரில் கையெழுத்து வாங்கும் போது சில டீக் கடைகளிலும், சலூன் கடைகளிலும் கொடுத்த போது வாங்கிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும், அவர்கள் கண்ணில் தோன்றிய மெல்லிய தயக்கம் ஈழப்போராட்டத்தைப் பற்றி பேசுவதை, ஆதரிப்பதைக் கூட குற்றம் (அ) தவறு என்ற எண்ணத்தை ஏற்படுத்தியிருக்கிறார்களோ என்ற எண்ணம் தோன்றியது.

அதே போல் இந்திய அரசை இலங்கை அரசுக்கு ஆயுதம் கொடுக்க கூடாது என்று பலரை பேனரில் கையெழுத்து வாங்கும் போதும் நோட்டீஸ் கொடுக்கும் போதும்,  படித்தவர்கள் (அல்லது படித்தவர்கள் போன்று காட்சி அழைத்தவர்கள்) நோட்டீஸ் வாங்கவும், கையெழுத்து போடவும் தயங்கும் போது, படிப்பறிவு குறைவாக இருந்த பலர் முன்வந்து கையெழுத்து போட்டதும், ஆட்டோ மற்றும் மினி லாரி டிரைவர்கள், எல்லாரும் போராடுறீங்க, ஆனால் தீர்வுதான் இன்னும் கிடைக்கலை என்று அங்கலாய்த்த படியே நோட்டீஸ் வாங்கியது இன்றைய கல்வி முறை மனிதனுக்குள் தயக்கங்களை குடியேற்றியிருக்கிறதோ என்ற எண்ணத்தை வலுப்பெறச் செய்ததுடன், இந்த தயக்கங்களை களையவும், எம்.ஜி.ஆர் காலத்தில் மக்களிடையே வெளிப்படையாக இருந்த ஆதரவு குறைந்து பல்வேறு தயக்கங்களாகவும், கேள்விகளாகவும் மாறியிருப்பது, நம்முள்ளேயே நாம் ஆற்ற வேண்டிய நீண்ட கடமையை நினைவுறுத்தியது

பி.பி.கு.

போராட்டத்தில் ஈழ வரலாறு பற்றிய அறிஞர்களின் சுருக்கமான உரையும், அடுத்து நாம் என்ன செய்ய வேண்டும் என்ற அறிஞர்களின் கருத்தும் மிக விரைவில்……….

பிரிவுகள்:ஈழம் குறிச்சொற்கள்:

ஈழப் பிரச்சனைக்காக தகவல் தொழில்நுட்பத்துறையினர் மற்றும் மாணவர்கள் நடத்திய (தொடர்கின்ற) உண்ணாநிலைப் போராட்டம்

திசெம்பர் 14, 2008 6 பின்னூட்டங்கள்

நேற்று, சனிக்கிழமை (13.12.08) காலை 09:30 முதல் மாலை 06:00 வரையில் சென்னையில் கோயம்பேடு அருகில் நடைபெற்ற உண்ணாநிலைப் போராட்டம் எதிபார்த்ததற்கும் மேற்பட்ட கவனத்தை ஈர்த்தது என்பதற்கு எதிர்பாராத இன்ப அதிர்ச்சியாக வைகோ மற்றும் திருமாவளவன் வருகையே சான்றாக அமைந்தது

சிறிய மனிதசங்கிலிப் போராட்டம், உண்ணாநிலைப் போராட்டமாக உருப்பெற்றதும், ஈழப் பிரச்சனை தொடர்பான போராட்டம் பல்வேறு தளங்களிலிருந்தும், பல்வேறு துறையினரும் போராட வேண்டியதன் அவசியத்தையும், இந்தப் போராட்டத்தில் தகவல் தொழில்நுட்பத்துறையினரும், மற்ற துறையினரும் மற்றும் மாணவர்களும் இயங்க வேண்டிய தளமும் அவர்கள் ஆற்ற வேண்டிய பணியும்   ஆலோசிக்கப் பட்டது

போரட்டத்தில் பழ.நெடுமாறன், சுப.வீரபாண்டியன், சீமான், விடுதலை ராசேந்திரன், தோழர் தியாகு, தொழர் மகேந்திரன், இலங்கை நாடளுமன்றப் எம்பி சிவாஜிலிங்கம், ஊடகவியலார் டிஸ்ஸ் மணி, பேரா.கல்யாணி, வழக்குரைஞர் அருள்மொழி, கவிஞர் அறிவுமதி, ஜெகத் கஸ்பார் மற்றும் பலர் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்

ஈழப் பிரச்சனையில் இந்திய அரசின் போக்கை கண்டித்தும், இந்திய அரசுக்கும் நம்முடைய கோரிக்கைகளாக நம்முடைய (இந்திய மக்களின்) வரிப்பணத்தில் இருந்து இலங்கை அரசுக்கு ஆயுதம் தராதே, இலங்கையுடனான பொருளாதார, அரசியல், விளையாட்டு உறவுகளை துண்டித்துக்கொள், தமிழீழ மக்களின் விடுதலைப்போராட்டத்தை அங்கீகரி போன்றவை எழுப்பப்பட்டன.

வெறும் உணர்ச்சிப் போராட்டமாக இல்லாமல், உணர்வுப் போராட்டமாக இருக்கவும், இந்தப் போராட்டத்தில் நம்முடைய அர்ப்பணிப்பு மற்றும் தீவிரத்தை உணர்த்தவும் 30 பேர் மட்டும் இன்றும் உண்ணாவிரத்தை தொடர்ந்து கடைப் பிடிக்கப் போவதாக அறிவித்துள்ளனர்.

இன்று ஓவியக் கண்காட்சி தொடக்கமும், காசி அனந்தன் போன்றோர் கலந்து உண்ணாநிலையை முடித்து வைக்கப் போவதாக அறிவித்துள்ளனர்

தோழர்கள் இன்றும் போராட்டத்தில் கலந்து கொண்டு நம்முடைய நிலைப்பாடையும், போராட்ட உணர்வையும் பதிவு செய்யலாம்

போராட்டத்தில் விவாதிக்கப் பட்டது, நிகழ்ச்சிகள் பற்றிய நீண்ட பதிவு விரைவில்………

பிரிவுகள்:ஈழம் குறிச்சொற்கள்: