முதல் டெஸ்ட்டில் பாஸ்!

அதீதத்தில் வெளிவந்தது: http://www.atheetham.com/?p=4159
தோல்விகள் எங்களுக்கு சகஜம் என்ற நிலையில்தான் ஆஸ்திரேலியாவுடனான இந்த டெஸ்ட் தொடரை ஆரம்பித்தது இந்தியா! ஏற்கனவே டிராவிட், லக்ஸ்மனின் இடத்தை நிரப்ப புஜாராவும் கோலியும் போக வேண்டிய தூரம் அதிகம் இருக்க, ஓபனிங் பிரச்சினை வேறு பெரிதாகியுள்ளது! வழக்கமாக ஒருவரை தேர்வு செய்ய, குறிப்பிட்ட மாட்சுகளுக்கு வாய்ப்பு கொடுத்து பார்க்கும் முறை போய், இந்த முறை ஒருவருக்கு கொடுக்கும் வாய்ப்பு, இனி அவரை உபயோகிப்பதா, அடுத்த தொடருக்கு உட்கார வைத்த காம்பீரை திரும்ப உள்ளே கொண்டு வருவதா, சேவாக்கை வெளியேற்றுவதா எனப் பல கேவிகளுக்கு விடையளிக்கக் கூடும் என்ற நம்பிக்கையில் இருக்கிறது இந்தியா!
பல மாற்றங்கள் இருந்தாலும், அவை பெரிய மாற்றங்களாகத் தெரியவில்லை! அதே சரியாக விளையாடுவார்கள் என்ற சந்தேகத்திலுள்ள ஓபனிங் ப்ளேயர்ஸ், எதிர்பார்க்கும் ப்ரேக்த்ரூவை ஆரம்பத்தில் கொடுப்பார்கள் என்ற நம்பிக்கையில் இரு மிதவேகப் பந்து வீச்சாளர்கள் என்று போகிறது அணியின் லிஸ்ட்! 130 கிமீ வேகத்தைக் கூட தொடாத பந்துவீச்சுதான் நம்முடையது! இதற்கு பந்துவீச்சாளர்களைக் குறை சொல்லி பயனில்லை!
இந்தியாவைப் போன்றே ஆஸியும் தங்களுடைய ஜாம்பவான்களுடைய இடத்தை நிரப்ப போராடிக் கொண்டு இருக்கிரது! பாண்டிங் போனது போக, ஹஸியும் போயாச்சு! வார்னர்ருடைய அக்ரசிவ்னெசுக்கு ஈடு கொடுக்கும் ஒரு சாலிட் டிஃபண்டிங் பாட்ஸ்மேனை அவர்களால் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை! வெஸ்ட் இண்டீஸ் அணியால் கூட நரைனை கண்டு பிடிக்க முடிந்தது. ஆனால் வார்னேயைக் கொடுத்த அணியால், இன்னும் ஒரு நல்ல ஸ்பின்னரைக் கொடுக்க முடியவில்லை! அதுவும் இந்தியாவில் டெஸ்ட் தொடரை ஆடப்போகும் நிலையில், லியான் மட்டும் என்ன செய்துவிட முடியும்? இந்தியாவில் அதிவேகப்பந்துவீச்சாளர்கள் உருவாகமுடியாதது போல், ஆஸியில் ஸ்பின்னர் உருவாக முடியாதோ என்னமோ?
மாற்றமென்று சொன்னால், காம்பீருக்குப் பதில் முரளி விஜய் (சென்னையாக இருப்பதனாலோ என்னமோ!), ஓஜாவிற்குப் பதில் ஹர்பஜன், புவனேஷ்வர் உள்ளே அவ்வளவுதான்! ஏற்கனவே வேகப்பந்தில் நம்முடைய நம்பிக்கை சற்று குறைவுதான். ஸ்பின்னை பெரிதும் நம்பிதான் மொத்தத் திட்டமுமே! அதுவும் சொதப்பியதால், இங்கிலாந்து எல்லாத் துறைகளிலும் நம்மை விட நன்றாக இருந்ததால், தோற்றோம்! ஆனால் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் அப்படியில்லை! இங்கிலாந்து அளவிற்கு நல்ல இரு ஸ்பின்னர்கள் ஆஸ்திரேலிய அணியில் இல்லாமலிருப்பதும் நமக்கு சாதகம்!
India's spinners kept the pressure on Australia
ஹர்பஜனின் 100வது போட்டி, தொடரின் முதல் டெஸ்ட்! எதிர்பார்த்தது போல் ஹர்பஜனும், அஸ்வினும் அணியில் இருந்தனர்! ஸ்லோ லெஃப்ட் ஆர்முக்கு ஜடேஜா இருக்கும் நிலையில், இரண்டு ஸ்பின்னர் மட்டுமே என்ற நிலையில் ஓஜாவிற்கு வாய்ப்பு இல்லைதான்! ஹர்பஜனுக்கும் வாய்ப்பு கொடுக்க சில குரல்கள் வரும் நிலையில், அஸ்வினுக்கு இது லோக்கல் இடம் என்பதால், ஓஜாவிற்கு சின்ன இடைவெளி கொடுக்க நினைத்திருக்கலாம்! பத்தாதற்கு ஆஸி அணியில் 6  பேர் இடக்கை ஆட்டக்காரர்கள் (4 பேர் பேட்ஸ்மேன்கள்)! அதனால் ஹர்பஜன், அஸ்வின் என்ற தேர்வு சரியே! அது மட்டுமல்லாமல், தோனியின் கணக்கு, ஜடேஜாவின் பேட்டிங் இன்னும் நிரூபணமாகாத நிலையில், அதனைச் சரி செய்ய அஸ்வின், ஹர்பஜன், புவனேஷ் குமாரின் சுமாரான பேட்டிங் ஓராளவு ஈடு செய்யும் என்பதும் கூட!
ஆனாலும், இனி அடுத்த போட்டியில் ஓஜாவை எடுத்தால், யாரும் ஹர்பஜன் என்று முணுமுணுத்து விட முடியாது! அந்தளவே இருந்தது ஹர்பஜனின் ஆட்டம்! அதிக சுழலவிடக்குடிய நபர் அல்ல என்று தெரிந்த அஸ்வின் கூட ஆர்த்தடாக்ஸ் ஆஃப் ஸ்பின் போடும் போது, ஹர்பஜன் 90 கிமீல் ஓரளவு ஃப்ளாட்டாகவே வீசுவதை என்னச் சொல்ல? தன்னுடைய தவறினை சரி செய்யும் வகையில், தேவையில்லாமல் ஏகப்பட்ட மாற்றங்களுக்கு முயற்சிக்காமல், லைன் அண்ட் லெந்த்தில் மெய்ண்டெய்ன் செய்வது, பந்தை நன்றாக சுழல விட்டது, சென்னை பிட்சினுடைய தன்னுடைய அறிவினை மிகச் சிறப்பாக பயன்படுத்திக் கொண்டதற்காக கண்டிப்பாக பாராட்டவேண்டும், அஸ்வினை!
முதல் போட்டியில் வென்றாயிற்று! பல காரணங்களை நாம் சொல்லிக் கொள்ளலாம் என்றாலும் என்னைப் பொறுத்தவரை ஒரே ஒரு காரணம்தான்! தோற்ற தொடர்களில் தோனி உட்பட முக்கிய ஆட்கள் ஒழுங்காக விளையாடவில்லை! இன்னிங்சை ஆரம்பிப்பதே ஒரு விக்கட் என்ற கணக்கில்தான் மாதிரியான ஓபனிங் பார்ட்னர்ஷிப்தான் இருந்தது, சச்சினுக்கு ரிஃப்ளக்சன் குறைந்தது, கோலியின் திறமை மேல் சந்தேகம் வந்தது! தோனியின் பேட்டிங் பெரிய விளைவை ஏற்படுத்தவில்லை, சமயங்களில் பேட்ஸ்மேன்களை விட டெய்லண்டர்கள் நன்றாக விளையாடினார்கள், பந்து வீச்சில் வீச்சே இல்லாமல் இருந்தது… ஆனால் இந்தப் போட்டியில் எல்லாமே நன்றாக அமைந்தது, ஓபனிங் விக்கட் பார்ட்னர்ஷிப்பைத் தவிர்த்து!
ஜடேஜாவின் நிலையை உணர்ந்து 6வது இடத்தில் தோனி வந்து மட்டுமல்லாமல், அதில் நிரூபித்தது மிக முக்கிய காரணமாக அமைந்தது! இனி வரும் போட்டிகளில் இந்த நிலை தொடர்வதும், இன்னும் சில மாட்சுகளுக்கு, ஜடேஜாதான் 7வது ஆட்டக்காரர் என்பதும்தான் இப்போதைய ப்ளான்! இதை தக்க வைத்துக் கொள்வது, இனி ஜடேஜாவின் கையில்! முரளி விஜய்க்கும், ஹர்பஜனுக்கும் அடுத்த போட்டியில் வாய்ப்பு கிடைக்குமா என்பதே சந்தேகம். மிஞ்சிப்போனால், இன்னும் ஒரு போட்டி மட்டும் வாய்ப்பு இருக்கலாம்! ஆனால் அணியின் கவலை, சேவாக்கும் சரியாக விளையாட வில்லை என்கிற பட்சத்தில், இரண்டு புதிய ஆட்கள் என்பது சற்று யோசிக்கக் கூடியதே! அதனால், சேவாக்கிற்கு, இந்தத் தொடர் ஒரு லாங் டெர்ம் தீர்மானத்தை கொடுக்கலாம்! புவனேஷ்வரைப் பற்றியோ, இஷாந்த்தைப் பற்றீயோ இப்போ யாருமே யோசிக்க மாட்டார்கள்! அடுத்த போட்டிகளில், ஸ்பின்னும் வேலை செய்யாமல் போகும் பட்சத்தில், அவர்களின் மேல் பார்வை விழலாம்! மற்றபடி, மித வேகப்பந்தில், ஸ்விங்கும் இல்லாமல், அவர்கள் ஆஸி விக்கட் எடுப்பார்கள் என்று நம்புவது கவர்ச்சி நடிகையை கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்டாக நடிக்க வைப்பது போன்றுதான்!
இங்கிலாந்திற்கெதிரான தொடர் போல் அல்லாமல், இதே பாசிடிவ் அப்ரோச் அடுத்தடுத்த போட்டிகளில் தொடர, வெல்ல வாழ்த்துக்கள்!
பிரிவுகள்:கிரிக்கெட் குறிச்சொற்கள்:

ஹரிதாஸ் – திரைப்பார்வை

பிப்ரவரி 24, 2013 1 மறுமொழி

நம்ம எல்லாருக்குமே ஆட்டிசம் இருக்கு! இந்தப் பையனுக்கு கொஞ்சம் கூடுதலா இருக்கு, பர்சண்டேஜ்தான் வித்தியாசம்! இது டிசீஸ் இல்லை, ஜஸ்ட் ட்ஸெபிலிட்டி – ஒரு சிறந்த விழிப்புணர்வைத் தரக் கூடிய படமாக வெளிவந்திருக்கிறது ஹரிதாஸ்!

Image

இயக்குநரின் முந்தைய படங்களைப் (நினைத்தாலே இனிக்கும், யுவன் யுவதி) பார்த்தவர்களுக்கு இது மிகப் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தக் கூடும்! இந்தப் படத்தைப் பற்றி நண்பர் மூலமாக அடிக்கடி கேட்டுக் கொண்டிருந்தது படத்தைப் பார்க்கும் ஆவலைத் தூண்டியது! ஆட்டிசத்தை மையமாகக் கொண்டு வெளிவந்திருக்கும் சினிமா என்ற உடனே தாரே சமீன் பரின் சாயல் லைட்டாக வந்து விடுமோ எனப் பயந்தாலும், முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்துடன் இந்தப் படம் மெல்லிய ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது!

எந்த ஒரு குழந்தைக்கும் முதல் ஹீரோ தந்தைதான்! வெறும் தந்தை மகனுக்கிடையேயான பாசம் மட்டுமல்ல, இது போன்ற Special Children வளர்ப்பில் ஏற்படும் சிரமங்கள், அவர்களைப் புரிந்து கொள்ள வேண்டிய முறைகள் எனப் பல பரிமாணங்களைத் தொட்டுச் செல்கிறது படம்!

 இயக்குநரும், ரத்னவேலுவும் நல்ல நண்பர்கள்! இருந்தும் முதல் இரு படங்களில் இல்லாமல், இந்தப்படத்திற்கு ஒளிப்பதிவிற்கு ஒத்துக் கொண்டதற்குக் காரணம் படத்தின் கதையாகக் கூட இருக்கக் கூடும்! இயக்குநரின் முந்தைய படங்களைப் பார்த்தாலே ஒரு விஷயம் தெரிந்திருக்கும், படமும் கதையும் எப்படியிருந்தாலும், காட்சிகள் மிக அழகாக இருக்கும் எப்பொழுதும்! அப்படிப்பட்டவருடன் ரத்னவேலு சேரும் போது? நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள்!

ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட சிறுவனின் தந்தையாக கிஷோர், எண்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட், ஏற்கனவே மனைவியை இழந்தவர். பாட்டியின் வளர்ப்பில் இருந்த சிறுவனுக்கு, பாட்டியும் இல்லாமல் போக, தான் மட்டும்தான் இனி என்ற உறுதியுடன் வளர்க்க ஆரம்பிக்கும் நிலையில் தெரிகிறது அதிலுள்ள சிரமங்கள்! சமூகம், ஊடகம், கல்வி முறை என அனைத்துமே இயல்பான குழந்தை வளர்ச்சியையே சிரமமாக்கி விட்ட சூழலில், இது போன்ற ஸ்பெஷல் சில்ரன் வளர்ப்பில், பெற்றோர்க்கு இருக்க வேண்டிய அணுகுமுறையை, பொறுமையை மிக இயல்பாய்ச் சொல்லிச் செல்கிறது படம்! தமிழகத்தில் அனைத்து அரசு பள்ளிகளிலும், இது போன்ற சிறுவர்களை, பெற்றோர் உடனிருக்கும் பட்சத்தில் கட்டாயம் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்ற செய்தி கண்டிப்பாக பலரையும் சென்றடையும் இந்தப் படத்தின் முலம்!

Image

கிஷோர், சினேகா, மிக முக்கியமாய் பிரித்திவிராஜ் (சிருவன்) ஆகிய மூவரின் நடிப்பும் மிக அருமை! சின்னச் சின்ன மாற்றங்களிலும், வெறும் ஒற்றை வார்த்தை மட்டுமே வசனம், அதுவும் படத்தின் க்ளைமாக்சில்தான் என்றாலும் படம் முழுக்க பாடி லாங்குவேஜ்களில் வெளுத்து வாங்குகிறான் சிறுவன்! போலீசாய் இருக்கும் போது கம்பீரம், சிறுவனின் தந்தையாக பாசம், போலீசாக் இருந்தாலும், சமூகத்தால் அவமானப்படும் போது இயலாமை எனப் பல பரிமாணங்களில் கிஷோரின் நடிப்பு அருமை! இந்தப்படம் கண்டிப்பாக அவ்ருக்கு ஒரு பேர் சொல்லும் படமாக அமையும்! அமுதவல்லி டீச்சராக சினேகா! கிஷோரின் முன்னால் இயல்பாய் இருக்க முடியாமல் எழும் தடுமாற்றம், சாரியிலிருந்து சிடிதாருக்கு மாறுவது, குழந்தை காணாமல் போன சமயத்தில் எழும் துக்கம், சினச் சின்ன எக்ஸ்பிரசன்ஸ் என எல்லா இடங்களிலும் எங்கும் ஓவர் ஆக்டிங் இல்லாமல் மிக இயல்பான பாத்திரமாய் ஜமாய்த்திருக்கிறார்!

இரு இடங்களில் மட்டுமே வந்தாலும் யூகி சேது அசத்துகிறார்! ராஜ் கபூர், குண்டுப் பையன் ஓமக்குச்சி, எண்கவுண்டர் டீமில் இருக்கும் மற்ற போலீஸ்கள், ஹெட்மாஸ்டராய் வரும் பெண் என எல்லா பாத்திரப்படைப்புகளும் நன்றாகவே அமைந்துள்ளன! சூரியின் காமெடி சற்றே திணிக்கப்பட்டது போல் தோன்றினாலும், ஒரு சிலருக்கு பிடிக்கக் கூடும்!

கிஷோர் சினேகா உறவில் ஏற்படும் திருப்பம், சற்றே சராசரியாக்கிவிடுமோ எனத் தோன்றினாலும், இயக்குநர் மிக அருமையாக அந்த இடத்தைக் கையாண்டுள்ளர்!

Image

படத்தின் மிக முக்கிய பலமாக ரத்னவேலுவும், கதையும், இருந்தாலும், அதற்குச் சரியான வலுவூட்டும் விதத்தில் அமைந்தது ஏஆர். வெங்கடேசனின் வசனமும், விஜய் ஆண்டனியின் இசையும், முகம்மதுவின் எடிட்டிங்கும்! படத்திற்கு முதலில் வசனம் எழுத இருந்தது ஜெமோதான், ஏதோ காரணங்கலுக்காக அது நடைபெறாவிட்டாலும், எந்த இடத்திலும் வசனம் தனிப்பட்டு தெரியாமல் படத்திற்கேற்றார் போல் கலந்து இருப்பது அதன் சிறப்பம்சம்!(மற்றவர்களுக்கெல்லாம் வெற்றி பெற்றால்தான் சார் வெற்றி, ஆனா என் பையனுக்கு கலந்துகிட்டாலே வெற்றி, முடியாதுன்னு சொன்ன என்னை விட, முடியும்னு சொன்ன நீதான்யா கரெக்ட் கோச், எங்களை எப்பவுமே நல்லது நினைக்கச் சொல்லிவிட்டு, நீங்க தப்பா நினைக்கிறீங்களே சார், அவன் கோச் இல்லை, காக்ரோச், இதெல்லாம் சின்னச் சின்ன உதாரணங்கள்) விஜய் ஆண்டனியின் இசை பாடல்களை விட பிண்ணனியில் மிக அருமையாக வந்திருப்பது இந்தப்படத்தில்தான் என நினைக்கிறேன்!

ஆக்‌ஷன், செண்டிமெண்ட், சோகம் எனக் கொஞ்சம் தவறினாலும் பிரச்சாரமாகவோ அல்லது ஓவர் டோசில் சற்றே டிராமாடிக்காகவோ அலல்து கிளிசேவாகவோ நிரம்பியிருக்கக் கூடிய சூழலில், மிக நேர்த்தியாக எடுத்துச் சென்றது இயக்குநரின் சாமர்த்தியமே! படத்திற்கு கிஷோர்தான் நாயகன் என பலமான யோசனைக்குப் பின்பே முடிவெடுத்திருக்கிறார்! கண்டிப்பாக வெற்றி பெற்றாக வேண்டிய தருணத்தில், அதிநாயகமாக்கம் இல்லாமல், பெரிய நாயகர்கள் இலாமல் கதையை நம்பி இறங்கியிருக்கும் முயற்சிக்கு பாராட்டுகள்! யூகி சேதுவின் பேச்சு, சிநேகாவின் விருப்பத்துக்கு கிஷோரின் மறுமொழி, கோச்சாக வரும் ராஜ்கபூரின் பேச்சு, இடத்தை விற்கச் சொல்லும் இடத்தில் கிஷோரின் முடிவு எனப் பல இடங்களில் இயக்குநர் பளிச்சிடுகின்றார்!

படத்தில் குறைகளோ, லாஜிக்கல் ஓட்டைகளோ இல்லாமலில்லை! மிக மெதுவான திரைக்கதை, முதல் 10 வருடங்களுக்கு வராமலிருந்த கிஷோரைத்தான் ஹீரோவாக நினைக்கும் மகன், எண்கவுண்டருக்கு மட்டுமே என ஒரு டீம், தேவையில்லாத குத்துப்பாட்டு, குழந்தைகளுக்கான(?) படமொன்றில் மிக அதிகமாக மதுவின் பயன்பாடு, குதிரையைப் பார்த்து ஓட ஆரம்பித்த உடனேயே ரன்னாரக்கும் முடிவு என வெவ்வேறு இருந்தாலும், ஒரு நல்ல சினிமாவைத் தந்ததற்காக அதையெல்லாம் விட்டுவிடலாம்!

பின்குறிப்பு: ஐநாக்சில் சின்னத் தியேட்டரிலேயே, குறைந்தது 50 சீட்டுகளேனும் காலியாக இருந்தது! ஏற்கனவே விஸ்வரூபம் ஊர் முழுக்க தியேட்டர்களை ஆக்கிரமித்தது போக மீதியுள்ளவற்றில் பெரும்பகுதி ஆதிபகவனுக்கே! பல இடங்களில் மிகக் குறைந்த தியேட்டர்களிலேயே படம் வெளிவந்துள்ளது! படம் சற்று நல்ல படமாக வேறு இருப்பதால், கமர்ஷியல் வெற்றியினை அறுதியிட்டுச் சொல்லிவிட முடியாது! ஆனாலும் பார்த்தவர்களின் மத்தியிலும், பதிவர்கள், ஊடகக்ங்கள் மத்தியிலும், நல்ல பெயரினை இந்தப் படம் எடுப்பது உறுதி!

நல்லப் படத்தை தவறவிடாதீர்கள்! ஆட்டிசத்தைப் பற்றிய விழிப்புணர்வு கண்டிப்பாக தேவையிருக்கும் சமயத்தில் இந்தப்படத்தைக் கொடுத்த இயக்குநர் மற்றும் படக்குழுவிற்கு பாராட்டுகள்

பிரிவுகள்:சினிமா

தமக்குத் தாமே வலையா???

படத்தைப் பார்க்காமலே தடை விதித்தார்கள் என்பது குற்றச்சாட்டாக இருந்தாலும், எனக்கென்னமோ மிகவும் முக்கியமான ஒரு விஷயத்தை யாரும் பேசவில்லை அல்லது தேவையனவர்கள் மட்டுமே கவனித்துக் கொள்கிறார்களோ என்பதே! மிக முக்கியமாக இஸ்லாம் அமைப்புகளே இந்த விஷயத்தைக் கவனிக்கவில்லை!

Image

  • ஊடகங்களில் எல்லாம் இஸ்லாமியர்களின் மனதைப் புண்படுத்தியிருக்கிறது என்றுதான் விவாதம் போகிறது அல்லது கருத்துச் சுதந்திரம் பற்றி பேசுகிறது! ஆனால் ஆரம்பத்திலிருந்தே அரசு இதனை சட்டம் ஒழுங்கோடு முடிச்சு போட்டு வருகிறது!
  • சொல்லி வைத்தாற் போன்று சில தியேட்டர்களில் வெடிகுண்டு மிரட்டல், பேனர் கிழிப்பு, சின்ன வன்முறை!
  • எல்லா இடங்களிலும் அமைதியாக ஓடும் படத்திற்கு இங்கு மட்டும் கலவரம் வருமென்று சொல்வதன் மூலம் யாரைக் கை காட்டுகிறது இந்த அரசு??? – இயல்பாய் அலுவலக நண்பர் ஒருவர் சொன்னது, பண்ணாலும் பண்ணுவாங்க, அமெரிக்க எம்பசியையே அடிச்சாங்கள்ல கொஞ்ச நாள் முன்னாடி. என்பதே…
  • ஆக பொது புத்தி மனப்பான்மையை சினிமாதான் விதைக்க வேண்டியதில்லை. அதைவிட எளிதாகவும், அழுத்தமாகவும் அரசு விதைக்க முடியும். அதற்கு எதிராக எப்படி போராடப் போகிறது, இந்த அமைப்புகள்?
  • கமலின் முந்தைய படங்களில் வரும் பல விஷயங்கள் விவாதத்திற்குரியது என்றாலும், இந்தப் பிரச்சினையில், வேறு மாநிலத்திற்குச் செல்கிறேன் என்ற வலி கலந்த வார்த்தைகளின் மூலமும், சொத்தை விற்றுதான் படம் எடுத்தேன் என்கிற உண்மையின் மூலமும், அனைவரது அனுதாபத்தையும் சம்பாதித்தது கமல் என்றால், ஏறக்குறைய பலரது கடுப்பை சம்பாதித்துக் கொண்டது இந்த இஸ்லாம் அமைப்புகள் மட்டுமே. ஆனால் அரசு எங்குமே சிக்கவில்லை! அல்லது செயல்கள் எங்குமே கேள்விக்குள்ளாகவில்லை! அரசியல் கட்சிகள் உட்பட அனைவருமே பேசி தீருங்கள் என்று நழுவலாகவே பேசுகிறார்கள்!
  • ஏனெனில், அரசின் பிரதிநிதிகளாக மக்கள் முன் தோன்றுவதும், இதே இஸ்லாம் அமைப்புகள்தான்! மிகப்பெரிய நகைமுரண், எந்த இஸ்லாமிய அடையாளங்கள் மக்கள் மனதில் ஒரு கருத்தை விதைக்கிறது என்று எதிர்ப்பு வருகிறதோதோ, அதே அடையாளங்களுடன் ஊடகங்களில் தோன்றி அரசின் சார்பில் பேசும் போது, கடுப்பு, அரசின் மேல் ஏற்படவில்லை. மாறாக, அமைப்புகளின் மேலேதான்…
  • இன்னொரு ஆச்சரியம், படம் சிலரைக் காயப்படுத்துகிறது என்றால், படத்தைப் பார்க்க வேண்டும், பின் கருத்து சொல்லலாம் என்று பேசலாம்! ஆனால் சட்டம் ஒழுங்கு என்று வாதத்தை அரசு வைக்குமானால், அதுவும் நடு ராத்திரியில் போய் தடை வாங்கக்கூடிய அளவுக்கு சமூக அக்கறை அரசிற்கு இருக்குமானால், படம் பார்க்கும் தேவையை விட, வெளிச்சூழலையும், அதற்கு காரணமாக யார் அல்லது எது இருக்க முடியும் என்ற திசையில்தானே வாதம் போக வேண்டும்? மாறாக அப்படிப் போகவில்லை என்பதன் காரணம் என்ன? கொலைக்கான குற்றத்தை, கொலையை நேரில் பார்த்தால்தான் தண்டனை வழங்க முடியுமா என்ன???
  • என் எண்ணமெல்லாம், யாருக்கோ விரித்த வலையில் மாட்டுவதென்பது வேறு! ஆனால் தனக்குத்தானே வலை விரித்துக் கொள்வதென்பது வேறு! அப்படித்தான் அமைப்புகள் மாட்டிக் கொண்டனவா???
பிரிவுகள்:அரசியல், சினிமா

காட்சிகள் மாறுதடா!

சரியோ தவறோ, அம்மையார் எதையும் தைரியாமாகச் செய்வார், பூசி மெழுக மாட்டார், என்பதெல்லாம் அவருடைய நிர்வாகத் திறமைக்கு உதாரணமாகச் சொல்லப்படும் வார்த்தைகள்!

சட்டமன்றம் சரியில்லை, நூலகம் இடமாற்றம் போன்ற செயல்களின் போதே இந்த வார்த்தைகளைச் சொன்னவர்கள் சப்பைக் கட்டு கட்ட வேண்டியதன் அவசியம் வந்தது! இருப்பினும் இதுவே தைரியத்தின் வெளிப்பாடுதான் என்றெல்லாம் சமளிக்க முடிந்தது…

Image

ஆனால், எல்லா இடங்களிலும் அமைதியாக ஒடும் ஒரு படத்திற்கு, தமிழ்நாட்டில் மட்டும் சட்டம் ஒழுங்கு பாதிக்கபடும் என்று தொடர்ந்து ஒரு அரசே சொல்லி வருவது, அதுவும் படத்தைப் பார்க்காமலேயே சொல்லி வருவது, அதன் இயலாமையா, அரசியல் பிண்ணனியா, அல்லது யார்ருக்காக போராடுவதாகச் சொல்கிறார்களோ அவர்களைப் பற்றியே ஒரு தவறான பிம்பத்தை ஏற்படுத்தும் முயற்சியா??? நரேந்திர மோடியை வரவழைத்த அரசுதான், சிறும்பான்மை மக்களின் உணர்வுகளைப் புரிந்து நடந்துகொள்வதாக அமைப்புகளின் தலைவர்களே சிலாகிப்பது….

டாவின்சி கோட் படத்தை தடை செய்தபோது கூட, சிறும்பான்மை மக்களின் உணர்வு பாதிக்கப்படும் என்று சொல்லிய திமுக அரசை விமர்சனம் செய்தவர்கள் யாரும் இதற்கு அதிமுகவை விமர்சனம் செய்யவில்லை??? ஜிகே வாசன், சீமான் உட்பட பலரும், கமலை அமைப்புகளுடனும், அரசுடனும் பேச்சுவார்த்தை நடத்தச் சொல்கிறார்கள்!
போலி பகுத்தறிவுவாதிகள் இந்துக்களை மட்டும் விமர்சிக்கிறார்கள் என்ற கருத்துக்களைப் போலே, போலி புரட்சியாளர்களும் திமுகவை மட்டுமே விமர்சிக்கிறார்கள் என்பதும் வலுப்பெறும்!
யாருக்காக டிடிஎச் ஒளிபரப்பில் மாற்றம் செய்தாரோ, அந்த தியேட்டம் உரிமையாளர்கள் கடைசி தீர்ப்பு வரை காத்திருக்கித் தயார் என்று சொல்வதும், 50 வருடம் தமிழ் சினிமாவில் இருந்தவர் என்று ஒட்டு மொத்த திரையுலகமும் பாரட்டு விழா நடத்திய தங்கள் சக கலைஞனுக்கு பிரச்சினை எனும்போது வெளிப்படையாக ஆதரவு தெரிவிக்காத திரையுலகத்தின் நிலையும், போயும் போயும் இவர்களையெல்லாம் நம்பி, அதே விழாவில் கமல் சமத்துவம் நிகழும் உலகம் என்று புகழ்ந்தது பரிதாபத்தையே வரவழைக்கிறது!!!
எல்லாவற்றுக்கும் மேலாக இது வெறுமனே கருத்து சுதந்திரத்திற்கும், குறிப்பிட்ட மதத்தினரின் உணர்வுக்கும் மட்டுமேயான போராட்டம் என்று கட்டும் சப்பைக்கட்டுகள் பதிவின் முதல் வரியைப் பார்த்து கெக்கலிக்கிறது!!!
பிரிவுகள்:அரசியல், சினிமா

BCCI @ Cat

உலகக் கோப்பைக்கு மட்டுமல்ல, ஐபிஎல் உருவாகவே ஒருவகையில் காரணமாக இருந்தது மட்டுமல்ல, கிரிக்கெட் வணிகரீதியாகவும், அதிக புகழுடனும் இந்தியாவில் காலூன்றக் காரணமாக இருந்ததும் கபில் தேவ்தான்! ஐசிஎல் என்ற மணியை கட்டியிருக்காவிட்டின், பிசிசிஐ என்கிற பூனையின் கொட்டம் அதிகரித்துக் கொண்டே இருந்திருக்கும்! வணிக ரீதியிலோ, எதிர்பார்ப்பிலோ வெற்றியை அடைந்திருக்காவிடினும், முழுக்க முழுக்க பழைய ரஞ்சி போட்டிகளை மட்டுமே ஏனோதானோவென நடத்தி வந்த பிசிசிஐ, அதிலிருந்து ஒருவரை தேர்வு செய்த தேர்வு முறை எல்லாவற்றையும் ஐசிஎல் ஏளனம் செய்ததாலேயே, இப்பொழுது நடந்து வரும் ஐபிஎல்லும், ரோகித், யூசூப், போலார்டு, வாட்சன், மார்ஷ், வால்தாட்டி, பாண்டே, மண்டீப் சிங், ஜடேஜா, அஸ்வின், முரளி விஜய் போன்ற வீரர்களும்!

ஐபிஎல்லை வைத்து தேர்வு செய்ய மாட்டோம் என்று சொல்லிக் கொண்டாலும், இந்தியா மட்டுமல்ல, ஆஸ்திரேலியா உட்பட பல நாடுகளும் ஐபிஎல்லில் வெளிப்படும் ஆட்டத்தை மறைமுகமாக கணக்கில் வைத்துக் கொண்டுதான் உள்ளனர்! இப்படி பலவற்றிற்கு காரணமாக இருந்தாலும், ஐபிஎல்லில் வரும் லாபத்தை தரும் லிஸ்ட்டில் கபில்தேவிற்கு இடமில்லை இதுவரை! முழுக்க முழுக்க அணிக்காக (தேசத்திற்காக) ஆடியதோ, முதல் உலகக் கோப்பையை ப்ற்றுத் தந்தது, கிரிக்கெட்டின் நலனுக்காக கமிட்டியை விமர்சனம் செய்ததோ, கோட் சூட் போட்டுக் கொண்டு பல தவறுகளுக்கு மேல் பூச்சு பூசாதது போன்ற பல குற்றங்களை செய்தது அவரை அந்த பட்டியலில் இடம் பெற வைக்காமல் போயிருக்கலாம்!

அரசியல்வாதிகள் அமைப்பாளர்கள், நடிகர்கள், நடிகைகள், வியாபாரிகள் அணியின் உரிமையாளர்களாக இருக்கின்ற நிலையில், டன்னிற்கும் மேலாக உணவு தாணியங்கள் வீணாவதற்கு போதுமான சாக்குப் பைகள் இல்லை என்ற காரணத்தை வெட்கமின்றி பத்திரிக்கைகளில் சொல்லுகின்ற அமைச்சர்கள் இருக்கும் நாட்டில், நாட்டின் தானியக் கிடங்க இந்த லட்சணத்தில் இருக்கும் நிலையிலும், உலகக் கோப்பையின் போது மூன்று மாதங்கள் போட்டி நடக்கும் இடங்களுக்கு போய் வருவதை மட்டுமே வேலையாகக் கொண்டுருந்த வேளாண்மைத் துறை அமைச்சர் தலைவராக இருக்கும் ஒரு அமைப்புல், கபில்தேவிற்கு பட்டியலில் இடமில்லாத செய்தி பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்த தேவையில்லைதான்!

மேற்கு வங்கம், தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் ஆட்சியை பறிகொடுத்தவர்கள் எதுவும் செய்ய வேண்டாம், ஆட்சியாளர்களே மீண்டும் அவர்களுக்கு வழியை ஏற்படுத்து தந்துவிடுவார்கள்! கிரிக்கெட் எதிர்ப்பாளர்களுக்கும் அதுவே செய்தி. நீங்கள் ஒன்றும் செய்யாதீர்கள், ஆமை புகுந்த வீடு போன்று, அரசியல் புகுந்த விளையாட்டும், தன் வீழ்ச்சிக்கு தானே வழிவகுக்கும்!

பிரிவுகள்:கிரிக்கெட்

மூன் டிவியில் நான்!

திங்கட்கிழமை மதியம் 12.15 மணி! அலைபேசிக்கு ஒரு அழைப்பு! தமிழ் குரலோன் அப்துல் ஜப்பார் ஐயா! இணையத்தில் நான் எழுதியிருந்த ஐபிஎல் சம்பந்தமான என்னுடைய கட்டுரைகளை ஆசிஃப் அண்ணாச்சி அவருக்கு அனுப்பியிருந்தார்! கட்டுரைகளைப் படித்துவிட்டு நன்றாக இருக்கிறது என பாராட்டியிருந்தார் ஏற்கனவே மடலில்!

மூன் டிவியில் மதியம் 1.15 மணியில் இருந்து 2 மணிவரை தினசரி நடக்கும் ஐபிஎல் ஸ்பெஷல் அம்பயர் நிகழ்ச்சியை வழங்கிக் கொண்டியிருக்கும் அவர் நிகழ்ச்சிக்கு வரமுடியுமா என கேட்டார்! கரும்பு தின்னக் கூலியா? உடனே ஒத்துக் கொண்டேன்!

இந்த வாரத்தில் திங்கட் கிழமையிலிருந்து இந்த நிகழ்ச்சிக்காக அப்துல் ஜாப்பார் ஐயாவுடன் இணைந்து வருகின்றேன்… டிவியில் வருவது மட்டுமில்லாமல், எனக்குப் பிடித்த ஒரு தலைப்பு என்றில்லாமல், இந்த விஷயத்தில் முன்னோடியான ஐயாவுடன் இணைந்து வருவது பன்மடங்கு மகிழ்ச்சி! வெள்ளிக் கிழமை வரை வருவேன் என நினைக்கின்றேன்! துரதிஷ்டவசமாக சென்னையில் இந்நிகழ்ச்சி தெரிவதில்லை! ஆனால் சென்னை தவிர்த்த பிற நகரங்களில் தெரிகிறது எனச் சொன்னார்கள்!

ஊரில் யார் யாரோ, எதெதுக்கோ விளம்பரம் செய்கிறார்கள்!நான் பண்ணக் கூடாதா???

நன்றிகள் ஐயாவிற்கும், அண்ணாச்சிக்கும், நண்பர்களுக்கும்!

பிரிவுகள்:கிரிக்கெட் குறிச்சொற்கள்:

நிழல்களைத் தாண்டிய நிஜம்…

இருப்பது இன்னும் ஒரே ஒரு போட்டிதான். ஆனாலும் தன் பழக்கத்தை மட்டும் விடவில்லை. எப்போதும் போல அணியின் மற்ற வீரர்கள் பயிற்சிக்கு வருவதற்கு ஒரு மணி நேரம் முன்பே அன்றும் வந்திருந்தார். தன்னுடைய ஆட்ட நுணுக்கத்தில் தேவைப்படும் சின்னச் சின்ன மாற்றங்களிலேயே பயிற்சிகளின் போது கவனம் இருந்தது. அவர் ஒரு நாள் போட்டிகள் விளையாடுவதற்கான முழுத் தகுதிகளையும் பெற்றிருக்கவில்லைதான். ஆனாலும் அதற்கான திறமைகளுக்கு தன்னை உட்படுத்திக் கொண்டும், வளர்த்துக் கொண்டே இருந்தார். தன் கேரியர் முழுக்க தன்னை முழுக்க முழுக்க அணிக்காகவே அர்ப்பணித்துக் கொண்ட அந்த சாதனையாளனின் கடைசி ஒரு நாள் போட்டி இன்று… அந்த வீரனுக்கு என் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்

உண்மையில் அவருடைய கடைசி டெஸ்ட் போட்டி விளையாடும் போது இந்த பதிவினை எழுதுவதை விட, கடைசி ஒரு நாள் போட்டியின் போது வாழ்த்தவே என் மனம் விரும்பியது. காரணம், டெஸ்ட் போட்டிகளுக்கென்றே உருவான ஒரு மனிதன் அதில் சாதிப்பது ஒன்றும் பெரிய விஷயமல்லவே?

ஜாம்பவான்களுக்கு இருக்கும் ஒரு முக்கிய தகுதி இவருக்கும் இருக்கிறது. அது, தன்னைப் பற்றி, மற்ற யாரையும் விட தான் மிகச் சரியாக புரிந்து வைத்திருப்பது. அந்த புரிதல்தான், தான் டெஸ்ட்டுகளை விட ஒரு நாள் போட்டிகளுக்கு அதிகம் பயிற்சி பெற வேண்டியிருந்தது என்பதனை ஒத்துக் கொள்ள வைத்தது. ஆரம்பத்தில் தான் தடுமாறியதை ஒத்துக் கொள்ளும் அதே சமயத்தில், அந்த தடுமாற்றம்தான் தன்னுடைய கவனம் எது என்பதையும், ஆட்டிடியூட் எது என்பதையும் தனக்கு போதித்தது என்கிறார். அவருடைய ஒரு நாள் போட்டி வாழ்வில் ஏற்றங்களும் இறக்கங்களும் இல்லாமல் இல்லை. நடுவில் அணியில் இல்லாமலும் இருக்க வேண்டியிருந்தது. ஆனாலும் எந்த சமயத்திலும் அவருடைய கற்றலும், கவனமும் குறையவே இல்லை, மாறாக அதிகரித்துக் கொண்டே இருந்தது


99 வரை ஒரு நாள் போட்டிகளில் மிகவும் தடுமாறிய டிராவிட், 99 லிருந்து 2005 வரையிலான ஆட்டங்களில் ஸ்ட்ரைக் ரேட்டை கங்குலி, இன்சமாமிற்கு இணையாகவே வைத்திருந்தார். வெறும் புள்ளி விவரம் மட்டுமே சாதனைகளைச் சொல்லும் என்றால், பெவன் போன்றோர் நினைவிலே இருக்க முடியாது. ஏனெனில் பெவனின் மேன் ஆஃப் தி மேட்ச் விருதுகள் 12 மட்டுமே. பெவன், டிராவிட் போன்றோரின் சாதனைகளை புள்ளி விவரங்கள் சொல்வதில்லை, உணர்வுகளே சொல்கின்றன. அவருடைய விளையாட்டுக்காலம் எப்படி இருந்தது என்பதற்கு இந்த இங்கிலாந்து தொடரே உதாரணம். ஒபனிங் பேட்ஸ்மேன்கள் காயம், டிராவிட்டை இறக்கு. கீப்பிங் ஆள் வேண்டும், கூப்பிடு அவரை. ஒரு நாள் போட்டிக்கு ஆளில்லை, கூப்பிடு. மிடில் ஆர்டர் ஸ்ட்ராங்காக இல்லை, அவருடைய பேட்டிங் ஆர்டரை மாத்து. அணிக்கு தேவைப்படும் சமயங்களில், எல்லாவித மாற்றங்களுக்கும் தன்னை உட்படுத்திக் கொள்ளுவதில் அவர் தயாராகவே இருந்தார். இன்னமும், கங்குலியின் தலைமையில் நாம் அதிக வெற்றிகளை பெற ஒரு காரணமாக இருந்தது, டிராவிட்டை கீப்பராக இருக்கச் செய்து, அந்த இடத்தில் ஒரு கூடுதல் பேட்ஸ்மேனை வைத்ததே…

டிராவிட், லாரா, கங்குலி போன்ற ஜாம்பவான்களின் காலத்தில் இருந்ததும், ஒரு ஹிட்டராக இல்லாமல் இருந்ததும் ஏனோ அவருடைய புகழை சற்று மங்கலாகவே வைத்தது. இன்றும் அவர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு தன்னுடைய பேட்டிங்கிலேயே பதில் சொல்லியிருந்தாலும் கவனம் அவர் மேல் விழவில்லை. டிராவிட் ஒரு நாள் போட்டிகளுக்கு தகுதியில்லை, வெல் ஒரு நாள் போட்டிகளின் ரன் குவிப்பில் 7 வது இடத்தில் இருக்கிறார். ஓ, அவரால ரொம்ப அடிச்சு ஆட முடியாதே – மிக விரைவாக 50 ரன் குவித்த இந்திய வீரர்களில் இரண்டாம் இடத்தில் இருக்கிரார். தன்னுடைய முதல் மற்றும் கடைசி 20-20யில் தொடர்ச்சியாக மூன்று சிக்சர்கள் அடித்திருக்கிரர். இதுவரை இதை யாரும் செய்ததில்லை.. ம்ம்ம், அவர் அதிகமாக பந்தினை வேஸ்ட் செய்கிறார், அதுனால மற்றவர்கள் டென்ஷன் ஆகி விக்கட்டுகளை விடுகின்றனர் – கிரிக்கெட் வரலாற்றில் இரு முறை 300 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் கொடுத்தவர். இந்தியாவின் 7 சிறந்த பார்ட்னர்ஷிப்பில் 3ல் அவருடைய பங்கிருக்கிறது. தான் விளையாடிய 343 போட்டிகளில் 160ல் இந்தியா வெற்றி. அந்த 160 போட்டிகளில் அவருடைய பங்கு 5729 ரன்கள் (சராசரி 50.69)

டிராவிட் அதிக பட்ச ஸ்கோரினை எடுத்த போட்டிகளில் கங்குலியும், சச்சினும் 200 ரன்களுக்கு அருகே ரன் எடுத்திருந்தனர். அவருடைய முதல் செஞ்சுரியின் போது அன்வர் 194 ரன்களை எடுத்திருந்தார். டிராவிட்டின் தலைமை தோனிக்கு அடுத்த படியான வெற்றிச் சதவீதத்தைக் கொன்டிருந்தாலும், தொடர்ச்சியாக இந்தியாவின் அதிக வெற்றிகளைக் கொண்டிருந்தாலும், ஞாபகத்தில் இருப்பதென்னமோ 2007ல், அவருடைய தலைமையில் இந்திய அணியின் தோல்வியைத்தான். விக்கட் கீப்பர் பேட்ஸ்மேனாக உலகின் இரண்டாவது (முதல் இடம் தோனிக்கு – 49.09, அப்புறமே சங்கா, கில்லி எல்லாம்) சிறந்த சராசரியைக் (44.23) கொண்டிருந்தாலும், அவர் இன்னும் சிறப்பாக கீப்பிங் செய்திருக்க வேண்டும் என்ற எண்ணமே பலருக்கு தோன்றுகிறது. உலகக் கோப்பைகளில் 750க்கும் மேலான ரன்களை குவித்தவர்களில் இரண்டாவது (இதில் முதல் இடம் விவியன் ரிச்சர்ட்ஸ் – 85) அதிக சராசரியைக் (75) கொன்டிருந்தாலும் மனதில் நிற்ப்பதென்னமோ 2007 உலகக் கோப்பைதான்

சமகாலங்களில் விளையாடிய சாதனையாளர்களான, டிராவிட், சச்சின், கும்ளே ஆகிய மூவருக்கும் வேற்றுமைகள் பல இருந்தாலும், ஒரு ஒற்றுமை இருக்கிறது. அது, மூவருமே அர்ப்பணிப்பிற்கும், பயிற்சிகளுக்கும், ஆடிடியூட் மற்றும் கடின உழைப்பிற்கும் கொடுக்கும் முக்கியத்துவமே. இன்றும் சச்சின், டிராவிட், கும்ளே என சிலர் மட்டுமே ஆராதிக்கப்படுவதன் பிண்ணனி வெறும் சாதனைகள் மட்டுமல்ல. அதன் பின்னே நி(ம)லைத்து நிற்கும் ஒழுங்கும், உண்மையும், நடந்து கொள்ளும் முறைகளுமே. இந்த பண்புகள்தான் ஏனோ அணியின் மற்ற சாதனையாளர்களுக்கு மத்தியிலும் கில்கிரிஸ்ட், கல்லிஸ், ஃபிளமிங், கபில் தேவ் எனச் சிலரை மட்டும் தனியாக முன்னிறுத்துகிறது

அணிக்காகவே விளையாடிய அந்த மனிதனின், தென் ஆப்பிரிக்க டூரின் போது, தந்தை பைபாஸ் அறுவை சிகிச்சைக்கு உட்பட்ட போதும் சதத்தினை அடித்த மனிதனின், தன்னால் ஒரு பணியை சிறப்பாக செய்ய முடியவில்லை எனத் தெரிந்த உடன் தலைமையை ராஜினாமா செய்த மனிதனின், எந்தச் சமயத்திலும் திறமையையும் உண்மையையும் முன்னிறுத்திய மனிதனின் சாதனைகளை மனமார வாழ்த்துகிறேன்…

டிராவிட் – வீ வில் மிஸ் யூ

இந்த வாழ்த்துக்களும், பாராட்டுகளும், பதிவும் வெறும் சாதனைகளுக்காக மட்டுமல்ல, அவருடைய அர்ப்பணிப்பிற்கு…

பிரிவுகள்:சாதனை

ஆபாவாணன் – ஒரு பன்முகக் கலைஞன்

90 களில் நடந்த சம்பவம் இது. வெறும் பள்ளி ஆண்டு விழாதான் அது. வருடா வருடம் நடக்கும் விழாவைப் போலவே, அந்த வருடமும் எம் பள்ளியில் அந்த விழா கொண்டாடப்பட்டது. ஆனாலும் அந்த வருடம் மட்டும் கட்டுக்கடங்கா கூட்டம் பள்ளி வளாகத்தில். பெற்றோருக்கும், மக்களுக்கும் அனுமதி தரும் விழா அது ஒன்றுதான் என்றாலும், இந்த முறை இந்தளவு கூட்டம் என்பது அனைவரையும் சற்றே ஆச்சரியப்படுத்தினாலும், ஓரளவு அதை முன்னரே ஊகித்து வைத்திருந்தனர் எம் பள்ளியில். சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டவர், அப்பள்ளியின் முன்னாள் மாணவர்தான் என்றாலும், அவருடைய அப்போதைய நிலை பொதுமக்களின் ஆர்வத்திற்கு பெரிதும் காரணமாக இருந்ததுமில்லாமல், வழமையாக கலை நிகழ்ச்சி முடிந்தவுடன் கலைந்து விடும் கூட்டம், அன்று விழா முடியும் வரையும் இருந்து, அந்த சிறப்பு விருந்தினரை கண்டு பேசி, ஆட்டோகிராஃப் வாங்கிக் கொண்டு சென்றது. விருந்தினர் சினிமாத் துறையைச் சேர்ந்தவர் என்ற ஒற்றைக் காரணமே, மக்களின் கவனத்தை இழுக்கும் எனும் போது, இவருடைய சில படங்கள் மாபெரும் வெற்றியடைந்தது மட்டுமில்லாமல், திரைத்துறையில் ஒரு அலையையும் கிளப்பி விட்டது எனில், மக்களின் ஆர்வத்திற்குச் சொல்லவா வேண்டும்??? அந்தப் பள்ளியின் பெயர்: நிர்மலா மேல்நிலைப் பள்ளி, கொளத்தூர், சேலம் மாவட்டம். அந்த சிறப்பு விருந்தினரின் பெயர்: ஆபாவாணன்

80 களின் பிற்பகுதி அது. தமிழ் சினிமாவின் பொற்காலமாகக் கருதப்படும் 70 மற்றும் 80களின் ஆரம்பத்தில் பாலச்சந்தர், பாரதிராஜா, பாலுமகேந்திரா, பாக்கியராஜ் ஆகியோரிடமிருந்து மிகச் சிறந்த கலை(தை)யம்சமுள்ள படங்கள் வெளியாகிக் கொண்டிருந்தன. கமர்ஷியங்கள் படங்களா, கலைப்படங்களா எனத் தன் பாதையை தேர்ந்தெடுப்பதற்கு கமலும் கூட சற்று திணறும் வகையில் ராஜ பார்வை, சகலகலா வல்லவன், மூன்றாம் பிறை என்று எல்லாம் கலந்து படங்கள் வந்து கொண்டிந்தன. ரஜினியும் கூட பாயும் புலி, தாய் வீடு போன்ற கமர்ஷியல் படங்களில் நடித்து வந்தாலும், நெற்றிக்கண், புதுக்கவிதை போன்ற சற்றே வித்தியாசமான படங்களிலும் நடித்து வந்தார்… அந்தக் காலக்கட்டத்தில் நடை பெற்ற மிக முக்கியமான அறிமுகங்கள் என்றால் பாண்டியராஜன் (இயக்குநராக), தொடந்து சட்டம் சம்பந்தமான திரைப்படங்களையே கொடுத்துக் கொண்டிருந்த எஸ்.ஏ. சந்திரசேகர், அவரது பெரும்பான்மை படங்களின் நாயகனான விஜயகாந்த் (முன்பே அறிமுகமாகி இருந்தாலும், இயக்குநர்களும், ரஜினி, கமல் ஆகியோர் ஆக்கிரமித்திருந்த அந்த காலகட்டத்தை நன்றாகவே தாக்குபிடித்தார்) ஆவர். ஆனாலும் இவர்கள் எல்லாவற்றையும் தூக்கிச் சாப்பிடும் மிக முக்கிய அறிமுகம் மைக் மோகனும். ஜெயமாலினியும்தான் 🙂

ஆரம்பத்தில் கலை, பின்பு மெல்ல மெல்ல கமர்ஷியல் என ட்ரெண்ட் மெல்ல மாறினாலும் 86 ல்தான் அந்த பெரியதொரு அலை உருவானது. புதிய தொழில்நுட்ப அலையாக மட்டுமல்லாமல், அதுவரை ஆங்கிலப்படங்களில் மட்டுமே கண்டுவந்த ஒரு அனுபவத்தை தமிழ் சினிமாவில், ரசிகர்களுக்கு ஒரு திரைப்படம் கொடுத்தது மட்டுமல்லாமல், ஓரளவு தாக்குப்பிடித்து வந்த விஜயகாந்திற்கு தனது பாணி என்ன என்பதையும் புரியவைத்தது மட்டுமில்லாமல், அதுவரை மக்கள் அதிகம் அறிந்திருக்காத திரைப்படக் கல்லூரியின் முகவரியையும் அனைவரிடமும் கொண்டு போய் சேர்த்தது அந்தத் திரைப்படம். அதன் பெயர் “ஊமை விழிகள்”. வெறும் கதையில் மட்டுமல்ல, காட்சியமைப்பிலும் சரி, பாடல் வரிகளிலும் சரி, இசையிலும் சரி என எல்லாவற்றிலும் புதியதொரு உணர்வுகளை பரப்பியது ஊமை விழிகள். விஜயகாந்த், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், கார்த்திக், சந்திரசேகர், சரிதா, அருண் பாண்டியன் என ஒரே ஸ்டார் பட்டாளமாக இருந்தாலும், ரவிச்சந்திரன் முதற்கொண்டு அனைவருக்குமே ஒரு பேர் சொல்லும் படமாகவே அது அமைந்தது. தனது முதல் படத்திலேயே, மிக வித்தியாசமாக மட்டுமின்றி, மிக தைரியமான ஒரு படத்தைக் கொடுத்த ஆபாவாணன் என்ற பெயர் தமிழக மக்களிடையே மிக ஆர்வமாக பார்க்கப்பட்டது.

மைக் மோகனின் படங்களின் மூலம் இசைஞானி கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்த ஒரு காலகட்டத்தில், இந்தப்படத்தின் இசையமைப்பாளர்கள் மட்டுமல்ல, இசையும் கூட மிகப் புதிதாய் இருந்தது மக்களுக்கு. அதுவும் ”தோல்வி நிலையென நினைத்தால்” பாடல் ஏற்படுத்திய அதிர்வுகள் தமிழகத்தில் மட்டுமல்ல, ஈழத்திலும் கேட்டது. இத்திரைப்படத்தின் வெற்றிதான் பின்னாட்களில் ஆர்.கே செல்வமணி, ஆர்.வி. உதயகுமார் முதற்கொண்டு பல திரைபடக் கல்லூரி மாணவர்கள் தமிழ் சினிமாவில் கால்பதிக்க காரணமாய் அமைந்தது.

அந்தக் காலகட்டத்தில் வந்த மிக முக்கியமான இந்தத் திரைப்படத்திற்குப் பின்பு ஆபாவாணன் மூலமாக வந்த வெற்றிப்படங்கள் பல இருந்தாலும், முதல் படத்திற்கு இணையான அதிர்வை மற்ற படங்கள் ஏற்படுத்தவில்லை என்றே சொல்லலாம். ஆனாலும், ஏறக்குறைய முதற்படத்திற்கு இணையான ஸ்டார் பட்டாளத்தைக் கொண்டு அவர் கதை மற்றும் தயாரிப்பில் வெளிவந்த இன்னொரு மிகப் பெரிய வெற்றிப் படம் ’செந்தூரப் பூவே’. தொழில்நுட்பத்திலும், கதைக்களனிலும் ஏதாவாது வித்தியாசமாகவே முயற்சி செய்யும் ஆபாவாணன், இந்தப்படத்தில் சிறப்பு சப்தங்களை (ஸ்பெஷல் எஃபக்ட்ஸ்) இணைக்க மிகவும் மெனக்கெட்டிருக்கிறார். படத்தில் வரும் தொடர்வண்டி காட்சிகளில் சிறப்பு சப்தங்களைக் கொடுக்க செண்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில் வரும் போது ஏற்படும் சத்தத்தை பதிவு செய்து இந்தப் படத்தில் பயன்படுத்தினார். இது போன்ற முயற்சிகள்தான் தமிழ் திரை உலகம் சிறப்பு சப்தங்களுக்கு கூடுதல் கவனம் செலுத்த காரணமாய் அமைந்தது. ஏன், சவுண்ட் ரெக்கார்டிஸ்ட் என்ற ஒருவரை அதிகம் தமிழ் படங்களில் பயன்படுத்த ஆரம்பித்ததே ஆபாவாணனுக்கு பிறகுதான்.

செந்தூரப்பூவே படத்தை பார்த்த, அப்போது இயக்குநராகியிராத ராம்கோபால் வர்மா இவரை சந்தித்து தொழில் நுட்ப விஷயங்கள் பெரிதும் கவர்ந்ததாக சிலாகித்ததோடு இல்லாமல் தெலுங்கில் இதனை டப் செய்தால் மிகப் பெரும் வெற்றியடையும் என்று அன்னபூர்ணா ஸ்டூடியோவில் சொல்லியிருக்கிறார். அவர்கள் முடியாது என மறுத்தாலும், வேறொரு தயாரிப்பாளர் அதனை டப் செய்து வெளியிட்டு தெலுங்கில் மிகப் பெரிய ஹிட் (200 நாட்களுக்கும் மேல்) ஆனது படம். படத்தின் வெற்றியை தெளிவாக ஊகிக்க முடிந்ததாலேயே, ராம்கோபால் வர்மாவிற்கு முதல் படத்தை இயக்கும் வாய்ப்பை அதே அன்னபூர்ணா ஸ்டூடியோ வாய்ப்பு கொடுத்தனர். அப்படி அவர்கள் கொடுத்த படம்தான் ‘சிவா’.

இரண்டு படங்களில் இருக்கும் ஸ்டார் பட்டாளங்களுக்கு, படம் வெற்றியடைந்ததில் பெரிய ஆச்சரியமில்லாமல் போகலாம். ஆனால் ஸ்டார் வேல்யூ இல்லாத நடிகர் நடிகைகளை கொண்டு அவர் கொடுத்த படம்தான் ‘இணைந்த கைகள்’. இன்றளவும் எனக்கு மிகப் பிடித்த படமாக இது இருக்கிறது. சிறுவயதில் முதன் முதலில் இந்தப்படத்தைப் பார்த்த போது அதிகம் பார்த்தறியாத ஆங்கிலப்படங்களுக்கு இணையாக அதன் காட்சிகள் இருந்தது அதன் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்திருக்கலாம். மும்பை ட்ரைவ் இன் தியேட்டரில் இந்தப்படம் வெளியான போது ஏற்பட்ட தள்ளு முள்ளு, அந்தத் தியேட்டரையே மூடும் நிலையை உண்டாக்கியது. கோவை சாந்தி தியேட்டரில் இந்தத் திரைப்படம் வெளியான போது ஏற்பட்ட நெரிசலில் இரண்டு பேர் உயிரிழந்த சம்பவமும் நடந்தது. இந்தப் படத்தியில் ஆபாவாணன் பெயர் டைட்டிலில் வரும்பொழுது ரசிகர்கள் சில்லறை காசுகளை வீசி ஆர்பரித்தனர். அந்தளவிற்கு ஒரு பெருமையை சம்பாதித்திருந்தார். இந்தப்படத்தில் வரும் பாகிஸ்தான் சிறைச்சாலை காட்சிகள் தமிழ் ரசிகர்களுக்கு ஆச்சரியம் கலந்த புது உணர்வினை உண்டாக்கின. வெளிநாடுகளில் ஒரே நேரத்தில் ஒரு தமிழ்படத்தை வெளியிடுவது இந்தப்படத்தின் வெற்றியின் மூலமே ஆரம்பிக்கப்பட்டது. இந்தப்படத்தின் பிண்ணனி இசைக்கு இந்தக் குழு செலவிட்ட 40 நாட்களை தமிழ் திரையே அப்போது ஆச்சரியமாக பார்த்தது.

எல்லாவற்றிற்கும் மேலாக இவரது ஆதர்சன நாயகனாக கருதப்பட்ட அருண்பாண்டியன் படித்ததும் அதே எம் நிர்மலா மேல்நிலைப் பள்ளி என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அது கூட அவர்களுக்குள் ஒரு பிணைப்பு ஏற்பட மிக முக்கியக் காரணமாக இருக்கக் கூடும்…

இவருடைய பங்களிப்பில் வந்த மற்ற சில படங்கள் தாய் நாடு, உழவன் மகன், முற்றுகை, காவியத் தலைவன், கருப்பு ரோஜா. இது இல்லாமல் கங்கா யமுனா சரசுவதி என்ற நெடுந்தொடரையும் தந்திருக்கிறார். ஏற்கனவே ஸ்பெஷல் எஃபக்ட்ஸ், சவுண்ட் ரெக்கார்டிஸ்டின் முக்கியத்துவத்தை உணர்த்திய ஆபாவாணனால், கருப்பு ரோஜாவில் அறிமுகப்படுத்தப்பட்ட, டிடிஎஸ் ஒலி நுட்பம் தமிழ் சினிமாவில் இன்று முக்கிய பங்கு வகிக்கிறது. படம் உண்மையில் ஒரு தோல்வியே என்றாலும், ப்ளாக் மேஜிக்கை மையமாக வைத்து வெளிவந்த படம் எனக்குத் தெரிந்து இதுதான். வெளி வரும் படங்களும் ஒன்று ஜமீன் கோட்டை வகையறாவாக இருக்கிறது அல்லது பேய் படங்களாக இருக்கிரது. கதாநாயகி ஆரம்பத்திலேயே இறந்து விட, மிக வித்தியாசமான கதை மாந்தர்களோடு, ஸ்டார் வேல்யூ இல்லாத நாயகனோடு, முழுக்க முழுக்க ஒரு பெண் கதாபாத்திரத்தை மையப்படுத்தி இது போன்றதொரு படம் எடுக்க உண்மையிலேயே ஒரு துணிவு வேண்டும்….

தான் பள்ளியில் படிக்கும் போதே ’சித்திரக் குள்ளர்கள்’ என்ற நூலை எழுதி சொந்தமாக பதிப்பித்து விற்ற ஆபாவாணன், தமிழ் சினிமாவில் சினிமாஸ்கோப் என்ற தொழில் நுட்பம் உருவாகி வளர்வதில் பெரும் பங்கு வகித்தார்.

கதை, இயக்கம், திரைக்கதை என பல தளங்களில் சிறந்திருந்த இவர் இசையையும் விட்டுவைக்கவில்லை. தனக்குப் பிடித்த மெட்டுக்களை கொடுத்து விட்டு மிக நல்ல பாடல்களை இசையமைப்பாளர்கள் (பெரும்பாலும் மனோஜ் கியான்) மூலம் உருவாக்கிக் கொடுத்த ஆபாவாணன் பெயரை சில இடங்களில் இசை உதவி என்ற இடத்தில் பார்த்திருக்கலாம். இசை உதவி என்றிருந்தாலும், இவரது திறன் பார்த்து இசைஞானியே கேப்டனிடம், அவருக்கு நன்றாக இசையமைக்க வருகிறது, தனியாக இசையமைக்கச் சொல்லுங்கள் என்று சொல்லியிருந்திருக்கிறார். தவிர, நான் அதிகம் தியேட்டருக்கு சென்று படம் பார்த்ததில்லை, ஆனால் இந்தப்படத்தின் பிண்ணனி இசைக்காக நான்கு முறை சென்று பார்த்திருக்கிறேன் என இவரது இணைந்த கைகள் படத்தைப் பார்த்துவிட்டு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர். ரகுமான் வியந்திருக்கிறார். ஆபாவாணனின் இசையமைப்பில் பங்கேற்ற சில நபர்களின் பெயர்கள் ஹாரிஸ் ஜெயராஜ், வித்யாசாகர், தினா, சபேஷ் – முரளி (எங்கியோ கேட்ட மாதிரி இருக்குல்ல?). ஒரு சமயத்தில் இவருக்கு 44 படங்களுக்கு இசையமைக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இருந்தாலும் தொடர் பணி காரணமாக இசையமைக்கவில்லை.
பள்ளியிலேயே சொந்தமாக நாடகங்களை எழுதி அரங்கேற்றிய ஆபாவாணன், இசையமைப்பில் பங்கேற்றதுமில்லாமல் பல பாடல்களை எழுதியதுமில்லாமல், சில பாடல்களை பாடியுமிருந்திருக்கிறார்.. மனம் சோர்ந்து கிடக்கும் போதோ, வெறுமையாக உணரும் போதோ, அவர் எழுதிய அந்தப்பாடலைக் கேளுங்கள். மனதில் புது உற்சாகம் பிறக்கும். இந்த சக்தி உணரப்பட்டதால்தானோ என்னமோ, ஈழத்தில் இந்தப் பாடல் மக்களால் பெரிதும் விரும்பப்பட்டது. அந்தப் பாடல்…

நீண்ட இடைவேளைக்குப் பிறகு பி.பி. ஸ்ரீனிவாசை வைத்து பாடிய இந்தப் பாடலில் அனைவரும் சேர்ந்து பாடும் தருணத்தை ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் என் உடல் சிலிர்க்கும். இதே போன்று நீண்ட இடைவேளைக்கு டிஎம்எஸை வைத்து தாய்நாடு படத்தில் எல்லா பாடல்களையும் பாடவைத்தாரென்றாலும், அதே போராட்ட உணர்வை மையப்படுத்தி எழுதிய பாடல், http://www.inbaminge.com/t/t/Thai%20Naadu/Naan%20Muthan%20Muthal.vid.html

சிறுவயதில் எனக்குத் தெரிந்து எல்லா பள்ளி கல்லூரி மேடைகளிலும் இரு பாடல்கள் எப்பொழுதும் நடனத்திற்கு தயாராக இருக்கும். எப்பொழுதும் பெண்களின் நடனத்திற்காகவே எழுதப்பட்டதாக தோன்றும் அந்தப் பாடல்கள் ’பூ பூக்கும் மாசம் தை மாசம்’ மற்றும் ’சின்னச் சின்ன வண்ணக் குயில்’. இதற்கடுத்து ஓரளவு அந்த இடத்தைப் பிடித்தது, அதுவும் ஆண்களால் அதிகம் விரும்பப்பட்டது ’சிக்கு சிக்கு புக்கு ரெயிலே’ தான். இதே வரிசையில் எல்லா பள்ளி, கல்லூரி மேடைகள் மட்டுமல்ல, எல்லா தொலைக்காட்சி சான்ல்களின் போட்டியிலும் தவறாமல் பங்கேற்கும் ஒரு பாடல் இவர் பாடியதுதான். கேட்டுப்பாருங்கள், உங்களுக்கு ஏற்கனவே பிடித்த பாடலாக இது இருக்கும். http://www.inbaminge.com/t/r/Rendu%20Per/Varan%20Varan.eng.html

இவர் இயக்கமாக இல்லாவிட்டாலும், இவருடைய சிஷ்யரின் இயக்கத்தில் வெளிவந்த தம்பி அர்ஜூனா படத்தில் வரும் ஒரு பாடலையும் இவர் பாடியிருக்கிறார். எப்படி ’தோல்விநிலையென நினைத்தால் பாடல்’ போராளிகளுக்காவே எழுதப்பட்டது என்ற செய்தி வந்ததோ, அதே போன்று இந்தப் பாடலும் புலிகளை மையப்படுத்தி எழுதியதாகவே நினைக்கத் தோன்றுகிறது. கேட்டுப்பாருங்கள்.
http://www.inbaminge.com/t/t/Thambi%20Arjuna/Puligal%20Konjam%20ii.eng.html

ஒரு அலையை உருவாக்கிய இந்த திறமைசாலியின் ஆரம்பமும் தற்போதைய நிலையும் ஏறக்குறைய ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது. முதன் முதலில் இவர் தர விரும்பிய படம் ‘இரவுப்பாடகன்’ ஆனால் அது வெளிவரவே இல்லை. இதே போல் விஜயகாந்தை வைத்து இவர் தர நினைத்த மூங்கில் கோட்டையும் வெளிவரவே இல்லை. இறுதியாக இவர் தர நினைத்த ’இரண்டு பேர்’ திரைப்படமும் வெளிவராமலே போய்விட்டது. வித்தியாசமாகவே தர நினைத்தாலும் சில பெரிய பட்ஜெட் படங்கள் தோல்வியடைந்ததால் பெரிய நட்டத்தினை அடைந்தார். இறுதியாக இவர் பங்களிப்பில் வெளி வந்தது கங்கா யமுனா சரசுவதி நெடுந்தொடரே. எனக்குத் தெரிந்து பாலச்சந்தரின் நாடகத்திற்குப் பின்பு, சன் டிவி நெடுந்தொடரில் காலோச்சிய காலத்தில் ராஜ் டிவியில் வந்து ஓரளவு வெற்றியடைந்த தொடரும் அது ஒன்றே! இவருடையது மட்டுமல்ல, ஒரு காலத்தில் இவரால் அறிமுகப்படுத்தப்பட்ட திரைப்படக் கல்லூரி மாணவர்களின் பங்களிப்பும் கூட ஏனோ இப்பொழுது இல்லாமலே போய்விட்டது. கொடுத்ததில் பாதி வெற்றிப்படங்கள், பாதி தோல்வியாக இருந்தாலும், தன் படங்களின் மூலம் ஏற்படுத்திய, அதிர்வுகளையோ, அதில் தொனித்த வித்தியாசங்களையோ, பிண்ணனியிலுள்ள திறமை கலந்த உழைப்பையோ எளிதில் புறந்தள்ளிவிடமுடியாது….

பிரிவுகள்:சினிமா குறிச்சொற்கள்:

ர.சு. நல்லபெருமாள்

எல்லாருடைய எழுத்துக்களும் அவ்வளவு எளிதில் நம்மை வசீகரித்து விடுவதில்லை. வசீகரிக்கும் எழுத்துக்கள் அனைத்துமே நம் சிந்தையையும் தூண்டுவதில்லை. எனது பால்யப் பருவத்தில் என்னை வசீகரித்த எழுத்துக்களின் சொந்தக்காரரைப் பற்றி திடீரென்று நினைத்தாற் போல் இணையத்தில் தேடிய போது என்னால் அவரைப் பற்றி அதிகம் கண்டு பிடிக்க முடியவில்லை. அப்பொழுது விளைந்த எண்ணம்தான் இந்த பதிவு. அந்த எழுத்துகளுக்குச் சொந்தக்காரர் .சு. நல்ல பெருமாள். சிறு வயதில் நடந்திருந்தாலும், இவரது எழுத்தை நான் தேடிப் படிக்க ஆரம்பித்ததற்கு காரணமான சம்பவம் இன்றும் நினைவிலிருக்கிறது.

அது, தந்தையை நாயகனாக பாவிப்பதற்கும், வில்லனாகப் பார்ப்பதற்கும் இடைப்பட்ட ஒரு பருவம். ராஜேஷ்குமார், பிகேபி, சுபா, போன்றோரின் மாத நாவல்களிலும், மற்ற சில எழுத்தாளர்களின் படைப்புகளிலும் சற்றே சலிப்பு ஏற்பட்டிருந்த சமயம். இளமையின் காரணமாக மெலிதாக அரசியல், சமூகம், புரட்சி சம்பந்தப்பட்ட புத்தகங்களில் ஈடுபாடு ஏற்பட்டிருந்த சமயம். எங்கள் ஊரில் ஒரு மிகப் பெரிய கொடுப்பினையாக, அரசாங்கத்தால் நிறுவப்பட்டிருந்த நூலகம் ஒழுங்காக பராமரிக்கப்பட்டு வந்தது. வேலையை முடித்த பல குடும்பத் தலைவிகளுக்கும் (மெகா சீரியல்கள் அப்பொழுது மனிதர்களை முழுமையாக ஆக்கிரமித்திருக்கவில்லை), படிப்பை முடித்து வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்களுக்கும், சிறு வயது பிள்ளைகளுக்கும் அதுதான் ஒரு பொழுது போக்கும் இடமே.

வாசிப்பனுபவத்தில் அடுத்தடுத்த கட்டங்களுக்குச் செல்வதற்கு மிகுந்த உதவியாக இருந்ததும் அந்த நூலகந்தான். மாத நாவல் எழுத்தாளர்களையும், கல்கி, அனுராதா ரமணன், சிவசங்கரி, சாண்டில்யன், தவிர எனக்கு அதிகம் மற்ற எழுத்தாளர்களைப் பற்றி தெரிந்திருக்கவில்லை. ஆகையால் நூலகத்தில் இருந்து நானாக மூன்று புத்தகங்களை எடுத்து வந்து படிப்பது வழக்கமாகியிருந்தது. எப்போதும் மாத நாவல்களையோ அல்லது நூலக புத்தகங்களையோ நான் படிப்பதை பார்க்க நேர்ந்தால், சும்மா புரட்டி மட்டும் பார்த்துவிட்டு செல்லும் எந்தை (அதற்கு மேல் அவருக்கு நேரம் கிடைப்பதில்லை, என்னைப் பொறுத்த வரை அதுவே ஒரு பெரிய கொடுப்பினை. ஏனெனில், பாட புத்தகங்கள் மட்டும்தான் வாழ்க்கை என்ற சூழ்நிலை நிலவும் ஒரு சமூகத்தில், மற்ற புத்தகங்களை படிக்க அனுமதிப்பது என்பதையும் தாண்டி அதை ஊக்குவிக்கவும்கூடிய ஒரு குடும்ப அமைப்பை பெற்றிருப்பது எனக்கு கிடைத்த மிகப் பெரிய வரந்தான்) அன்று மட்டும் நான் எடுத்து வந்த ஒரு நூலை மிக ஆர்வத்துடன் பார்த்தது மட்டுமில்லாமல் ஒரு மணி நேரம் இருந்து படித்துவிட்டுச் சென்றார்.

அது மட்டுமில்லாமல் அந்த புத்தகத்தை படிக்குமாறு என்னையும் சொல்லிவிட்டுச் சென்றார். அந்தச் செயல் என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தியது, ஏனெனில் அதற்கு முன் அவராக என்னைப் படிக்கச் சொன்ன ஒரு புத்தகம், காமராசருடைய வாழ்க்கை வரலாறு தான், காமராசருடைய நெருங்கிய நண்பர் (பெயர் முத்துசாமி என்று நினைக்கிறேன்) ஒருவரால் எழுதப்பட்ட புத்தகம் அது, மற்றபடி அவர் எனது ரசனையிலோ, வாசிப்பிலோ தலையிடுவதேயில்லை. இப்போது அவர் படிக்கச் சொன்ன புத்தகம், ர.சு. நல்ல பெருமாள் என்பவர் எழுதிய மயக்கங்கள்”. என் தந்தை விரும்பி படித்த அந்தச் செயல்தான் ர.சு. நல்லபெருமாளின் மற்ற புத்தகங்களை அந்த நூலகத்திலிருந்து தேடி எடுத்து வந்து படிப்பதற்கும் முக்கியமாக என் தந்தைக்கு படிக்கக் கொடுப்பதற்கும் காரணமாக இருந்தது (நமக்கு பிடித்தமானவர்களுடைய விருப்பங்களுக்கான தேடலும் மிகச் சுகமானதுதானே!!!)

எந்தைக்காக படிக்க ஆரம்பித்தாலும் படிக்க படிக்க அவரது எழுத்துக்கள் மீதான ஈர்ப்பு அதிகரித்துக் கொண்டேச் சென்றது. இளமைப்பருவத்தில் வருகின்ற காதல் மட்டுமல்ல, சில சமயங்களில் நம்மை வியக்க வைக்கிற மனிதர்களும், சில நூல்களும், சம்பவங்களும் கூட நம் நெஞ்சில் பசுமையாக நிலைக்கத்தான் செய்கின்றன.

சற்றே புரட்சி சம்பந்தப்பட்ட நூல்களில் ஆர்வம் இருந்ததாலோ என்னமோ “ஆத்திகம், நாத்திகம்” இரண்டையும் கேள்விக்குட்படுத்தி அவர் எழுதியிருந்த ”மயக்கங்கள்” நாவல் என்னுள் மிகுந்த ஈடுபாட்டை ஏற்படுத்தியது. நாவலின் முடிவில் எது உண்மை எது பொய், எது சரி, எது தவறு என்பதைப் பற்றியெல்லாம் முடிவுகள் ஏதும் தராமல் வாசகனை சிந்திக்க விட்டிருந்தது என்னை மிகவும் ஈர்த்தது.

அந்த புத்தகம் ஏற்படுத்திய நம்பிக்கைதான் அடுத்த முறை அவர் எழுதிய கல்லுக்குள் ஈரம்(1966-1969), போராட்டங்கள் (1972) ஆகிய இரு நூல்களைக் கொணரச் செய்தது. இந்த இரு நாவல்களும் ஏற்படுத்திய சிந்தனைகள், ஆச்சரியங்கள், திடுக்கிடல்களை வார்த்தைகளில் சொல்ல முடியாது. அதுவும் ”கல்லுக்குள் ஈரம்” புத்தகத்தில் சொல்லப்பட்டிருந்த விஷயங்கள், சுதந்திரப் போராட்டக் காலத்தை அப்படியே நம் கண்முன்னே கொண்டு வந்தது. திலகர், பாரதி, காந்தி என்று பலருடைய சிந்தனைகளை நடவடிக்கைகளை, அவர்களைப் பற்றி படிக்கும் போதும் சரி, ”சிலைகளுக்கு மாலைகளை அணிவிக்கிறார்கள், சிந்தனைகளுக்கு மலர்வளையம் வைக்கிறார்கள்” என்பது போன்ற வரிகளை படிக்கும் போதும் சரி ஏற்படுத்திய உணர்வுகள் ஏராளம்!!!

பின்னாளில், இந்த ”கல்லுக்குள் ஈரம்” என்ற இந்த நாவல், இன்னொரு நாட்டின் சுதந்திரப்போருக்கு ஒரு வித்தாக அமைந்ததை அறிந்த போது மிகுந்த வியப்புமேற்பட்ட்து!!! இதில் வரும் ரங்கமணி பாத்திரம்தான் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு ஒரு தூண்டுகோலாக அமைந்தது என்று அவரே பேட்டி கொடுத்திருக்கிறார். நம் நாட்டின் சுதந்திரப் போராட்டத்தைப் பற்றிய நாவல், இன்னொரு நாட்டின் சுதந்திர வேட்கையில் பங்கு வகித்தது பெரிய விஷயம்தானே!!!…பின்னாளில் ஹேராம் திரைப்படம் பார்க்க நேர்ந்த போது, படத்தில் வரும் பல சம்பவங்கள் இந்த நாவலைத் தழுவியிருந்த போது (கமல் அதை ஒற்றுக் கொள்ளாவிடினும்) அந்த நாவலின் வெற்றியை என்னால் உணர முடிந்தது!!! இந்த நாவல்தான் கல்கி வெள்ளி விழா ஆண்டிற்கான போட்டியில் இரண்டாம் பரிசையும் வென்றிருந்த்து!

அவருடைய மற்றொரு நாவலான போராட்டங்கள், அது தொட்டுச் சென்ற தளங்களோ ஏற்படுத்திய அதிர்வுகளோ சாதாரணமானதன்று. 1960களில் கம்யூனிச சித்தாந்தம் நிலவிய விதமும், அந்தக் கட்சியின் செயல்பாடுகள், அதில் தலைமைப் பொறுப்பை ஏற்க நடந்த கொலைகள், சீனப் போரின் போது நடைபெற்ற பாராளுமன்ற பேச்சுக்கள், நேருவின் தவறுகள் என பலவற்றையும் தொட்டுச் சென்றது. இத்தனைக்கும் நடுவில் வெறுமனே பரப்பரப்புச் செய்திகளை விரும்பிப் படிக்கும் மக்களும், அதனைத் தரும் செய்தி ஊடகங்களும் இருக்கும் சூழலில் ஒரு நேர்மையான பத்திரிக்கையை நடத்தும்  வேட்கைக் கொண்ட நாயகன், அவனது உணர்வுகள், சந்திக்கும் சோதனைகள் என அந்தக் காலத்திலேயே சொல்லியிருப்பது சற்றே ஆச்சரியத்தையும் ஏற்படுத்துகிறது!!!

இதே போன்று பத்திரிக்கைத் தொழில் நடத்துவதை அடிப்படையாகக் கொண்டு அவர் எழுதியிருக்கும் மற்றொரு நாவல்தான் மாயமான்கள். சமூகத்தில் உயர்வாகக் கருதப்பட்ட சிலரது மூகமூடியைக் கிழிக்கும் வகையிலும், அதிக அளவில் பெண்ணீயம் பேசும் வகையிலும் இவர் எழுதிய  மற்றொரு நாவல் திருடர்கள்(1976).

இந்த நாவல்கள் எந்த அளவிற்கு இவருக்கு வாசகர் வட்ட்த்தைப் பெற்றுத் தந்ததோ அதே அளவிற்கு சில பல சிக்கல்களையும் கொணர்ந்தது. கம்யூனிஸ்ட் கட்சியினர் பலரின் அதிருப்திக்கு இவரது ”போராட்டங்கள்” உண்டாக்கியதென்றால், ”கல்லுக்குள் ஈரம்” நாவல் தன்னுள் விடுதலை உணர்வைத் தூண்டியது என்ற ‘பிரபாகரன்’ அவர்களின் பேட்டி, சிபிஐ, சிஐடி போலீசாரால் இவரை விசாரிக்க வைத்தது.

ஆத்திகம், நாத்திகம், கம்யூனிசம் என்றெல்லாம் சற்றே சர்ச்சையான நூல்களை எழுதிய அதே நல்ல பெருமாள்தான், தனது பிரம்ம ரகசியம்(19820 என்ற நூலின் மூலம் பல்வேறு தத்துவ ஞானிகளின் கருத்துக்கள், சமய அறிஞர்களின் கருத்துக்கள், புத்த மதம் முதல் சைவ சமயம் வரை பல சமயக் கருத்துக்களை, தத்துவங்களை எளிமைப்படுத்தி கொடுத்திருக்கிறார் என்பது சற்றே ஆச்சரியமூட்டும் விஷயந்தான். எனக்குத் தெரிந்த இவருடைய மற்ற நூல்கள் எண்ணங்கள் மாறலாம் (1976), வீண் வேதனை (1950), நம்பிக்கைகள் (1981)  மற்றும் மருக்கொழுந்து மங்கை

நல்லபெருமாளின் சமூக நாவல்கள் பிரபலம் அடைந்த அளவிற்கு அவரது சிறுகதைகள் பெரிதாகப் பேசப் படவில்லை. மிகச் சாதாரணமாகவே கருதப்பட்டது. அவரது கல்லூரிக் காலத்திலேயே அவர் சிறுகதைகளை எழுத ஆரம்பித்ததோ அல்லது அவருக்கு பெருமை சேர்த்த சமூகச் சாடல்கள் அவரது சிறுகதைகளில் இல்லாததோ அதற்குக் காரணமாயிருந்திருக்கலாம்.

இத்தனை நூல்களை எழுதிய நல்ல பெருமாள் சட்டம் படித்தவர் என்பது பண்பலையில் அவர் கொடுத்த ஒரு நேர்காணலில்தான் எனக்கு தெரிந்தது. காந்தீயக் கொள்கைகளுக்கு தன்னுடைய ”கல்லுக்குள் ஈரத்தில்” குரல் கொடுத்த இதே நல்ல பெருமாள், அதே பேட்டியில் இந்தக் காலகட்டத்திற்கு காந்தீயக் கொள்கைகள் ஒத்து வராது என்று சொன்னது ஒரு நகை முரணாகவும் இருந்தது.

ர.சு நல்லபெருமாள் மொத்தம் 10 சமூக நாவல்கள், 2 சரித்திர நாவல்கள், 1 தத்துவ நூல், 2 சிறுகதைத் தொகுப்பு மற்றும் ஒரு சுய முன்னேற்ற நூலினை எழுதியுள்ளார். மிகப் பரவலாக அறியப்பட்ட நல்லபெருமாள், 1990க்குப் பிறகு எழுதவில்லை. எழுத வேண்டுமே என்று எழுத முடியாது, எனக்கு அதன் பின் நடை வரவில்லை, அதனால்தான் எழுதவில்லை, எழுத்தாளர்களுக்கு ஒரு சாச்சுரேஷன் பாயிண்ட் வருவது இயற்கை, எனக்கு அது ஏற்பட்டிருக்கலாம் என தைரியமாகத் தன் பேட்டியில் சொன்னது எனக்கு சற்று ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது.

பிரிவுகள்:புத்தகம் குறிச்சொற்கள்:,

அங்காடித் தெரு – திரைப் பார்வை

திரைப்படம் என்பது வெறும் பொழுது போக்கு சாதனம் மட்டும் அல்ல. நம் திரைப்படங்கள் சற்றே தரத்துடனும், பன்முகத் தன்மையும் கொண்டிருக்க வேண்டும் என்ற அங்கலாய்ப்போ, விருப்பமோ கொண்டிருப்பவர்களா நீங்கள்??? அப்படியெனில் எந்த ஒரு விமர்சனத்தையும், விளம்பரக் காட்சிகளையும் கவனிக்காமல் தைரியமாக அங்காடித் தெரு படத்திற்குச் செல்லுங்கள்!!! ஏனெனில், மிகப் புதிதாய் படத்தின் காட்சிகளைக் காணும் போது ஏற்படு(த்து)ம் அதிர்வுகள் வார்த்தைகளில் விவரிக்க முடியாதவை!!!

************************************************************************************************************

இவர்கள், தான் படித்துக் கொண்டிருந்தாலும், தன்னுடைய அடுத்த வேளை சோற்றுக்கு தந்தையை எதிர்பார்த்திருந்து காத்திருந்தாலும், பார்த்தவுடன் ஏற்பட்டு விடும் காதலுக்காக 50 ரவுடிகளை அடித்து துவைக்கக் கூடிய மாவீரர்கள் இல்லை!!! சமூகத்தில் புரையோடிப் போன அக்கிரமங்களைக் கண்டு வெகுண்டு, வில்லினின்று புறப்பட்ட அம்பாக ஓரிரு வாரங்களில் எல்லா ரவுடிகளையும், அரசியல்வாதிகளையும் தீர்த்து சொர்க்க பூமியைப் படைக்கும் பராக்கிரமசாலிகளும் இல்லை!!! ஆனால் இவர்கள் நாயக, நாயகியர்கள்!!!

இவர்களுக்கு வாழ்வில் பெரிய குறிக்கோள்கள் இல்லை, வாழ்வதைத் தவிர! வாழ்வின் அழகியலைப் ப(டி)டைக்க காதலன், காதலி அழகாக இருக்க வேண்டும் என்று எண்ணுபவர்கள் இல்லை, அந்தக் காதல் மட்டும் அழகாக இருக்க வேண்டும் என்று எண்ணுபவர்கள்!!! சிறுவயதில் நமக்குச் சொல்லிக் கொடுக்கப்படும் மனிதனின் அடிப்படைத் தேவைகள் எவை என்ற கேள்விக்கான விடை தேடலிலேயே தம் வாழ்வின் பெரும்பகுதியைச் செலவு செய்பவர்கள்!!! இத்தனைக்கும் நடுவில் இவர்கள் மகிழ்ச்சியைக் காண்பவர்கள்!!! இவர்களே நாயகர்கள்!!!

சற்றே நிறைவான சம்பளமோ, கட்டமைக்கப்பட்ட ஏட்டுக் கல்வியோ, ஏதோ ஒன்றின் காரணமாக நம்மால் சற்றே அசுவாரசியத்துடனோ, சிலரால் முகச் சுளிப்புடனோ எளிதில் கடந்து செல்ல முடிகின்ற அல்லது கவனிக்க மறுத்த கடை நிலை மக்களைப் பற்றிய பதிவு இது!!! சினிமா என்பது வெறுமனே வண்ணக் கனவுகளை உருவாக்குபவையோ அல்லது நம்முடைய கற்பனையையோ, நம்மால் கற்பனை கூட செய்ய முடியாத காட்சிகளைக் கூடவோ நம் கண் கொண்டு வருபவை மட்டும் அல்ல!!! சில மற(றை)க்கப்படுகின்ற உண்மைகளை, உண்மைகளாகவே காட்டவேண்டுபவையும் கூட என்பதை உணர்த்தும் படம்!!! புறக்கணிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை முறையை, உணர்வை மிக அழகாக வெளிப்படுத்தியுள்ள படம்!!! முகத்திற்கு நேரெதிராக நின்று பளீரென்று அறைகின்ற உண்மையின் வெப்பம் இவ்வளவு சூடாகத்தான் இருக்கும் போல!!!

அங்காடித் தெரு

படத்தின் கதையென்று ஒன்று தனியாக இருந்தாலும், அனாயசமாக, போகிற போக்கில் வரும் காட்சிகள் வெளிப்படுத்தும் க(வி)தைகள் பல!!! காதலாக, ஒருவர் காலினை ஒருவர் மிதித்து விளையாடும் காட்சியில் ஆரம்பித்து, அதே காதலாக, கால் போன பின் வாழும் வாழ்க்கையில் முடிகிறது திரைப்படம்!!! படத்தில் எங்கும் எதற்கும் தீர்வினைச் சொல்லிவிடவில்லை இயக்குநர்!!! உன்னுடைய ஊரின் முழு உருவம் எது என்று நீ பார்த்துக் கொள் என்று காட்டியிருக்கிறார், அவ்வளவே!!! சென்னையை மட்டும் முன்னிருத்தி இதுதான் தமிழகம் என்று பழகிப் போன மனதிற்கு தெற்கு மாவட்டங்களின் வாழ்க்கையை நமக்கு காண்பித்திருக்கிறார்!!!

அஞ்சலி, பாண்டி தவிர மற்ற அனைவரும் புதுமுகங்கள்(?)! ஒட்டுமொத்தமாக எல்லாரும் வாழ்ந்திருக்கிறார்கள், ஒரிரு காட்சிகளில் மட்டும் வந்தாலும் சரி, படம் நெடுக வந்தாலும் சரி!!! அத்தனை பேரையும் மீறி அஞ்சலியின் நடிப்பு!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

நாமல்லாம் வாழுறதுக்கே யோசிக்கனும், விக்கத்தெரிஞ்சவன் வாழத்தெரிஞ்சவன், இங்க சிலருக்கு கையில்ல, காலில்ல ஆனா எல்லாருக்கும் வாயும், வயிறும் இருக்கு, இருட்டு குடவுனிலிருந்து ஏசி ஹாலுக்கு செல்வது ’ப்ரமோஷன்’ என சொல்வது என பல இடங்களில் போகிற போக்கில் சொல்லும் வசனங்கள், கருத்துக்கள் மிக அருமை!!! பெரும்பாலும் வேதனைகளை பதிவு செய்திருந்தாலும், ஆங்காங்கு வெளிப்படும் மனிதம், மகிழ்வான தருணங்கள் எல்லாம் வாழ்வில் நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.

படத்தில் குறைகள் இல்லாமலில்லை. இரண்டாம் பாதியில் ஏற்படும் தொய்வு, சற்றே அதிகப்படியான பாடல்கள், எடிட்டிங் என்று பல இருந்தாலும் ஒட்டுமொத்தப் படைப்பின் முன் அவை ஒன்றும் இல்லாமல் போய்விடுகின்றன!!!

மிகச் சாதாரணமாக நமக்கு காட்டிவிட்டாலும், இந்தக் கூட்டத்திற்கு நடுவில் காட்சிகளை எப்படி எடுத்திருக்க முடியும் என்ற சந்தேகமும் அதற்காக ஒட்டு மொத்தக் குழுவும் எந்த அளவு உழைத்திருக்கும் என்ற எண்ணமும் ஏற்படுத்தும் பிரமிப்பு கொஞ்ச நஞ்சமன்று!!! ஒளிப்பதிவு, இசை, நடிகர் நடிகையர்கள் தேர்வு, வசனம் என பல்துறையும் மிக்க் கடுமையாக உழைத்திருப்பதை உணர முடிகிறது. ஒட்டு மொத்தக் குழுவிற்கும் மிகப் பெரிய வணக்கங்கள்!!!

படம் என்னைப் பல விதங்களில் பாதித்திருக்கிறது…

·         முன்பு போல அந்தக் கடைக்கு மனுஷன் போவ முடியாது, கஸ்டமர்சை மதிக்கவே மாட்டாங்க, சேல்ஸ்ம்மேனுங்க என்று முன்பு போல சொல்ல முடிவதில்லை…

·         ரங்கநாதன் தெரு போன்ற தெருக்களை சற்றே வித்தியாசமாக பார்க்க வைத்திருக்கிறது…

·         படத்தை மறுபடி பார்க்க வேண்டும் என்ற உந்துதலுக்கும், ஏன் பார்த்தோம் என்ற நிம்மதியின்மைக்கும் இடையே சிக்கி தவிக்க வைத்திருக்கிறது!!!

பிடித்திருக்கு, பிடிக்கவில்லை, கமர்சியல் வெற்றி, தோல்வி என்பதையெல்லாம் தாண்டி, படத்தின் ஒருகாட்சியாவது பார்ப்பவர் மனதில் மெல்லிய சலனத்தையாவது ஏற்படுத்தாமல் விட்டுவிடாது!!! என்னுடைய ஒரே விருப்பம் இது சரவணா ஸ்டோர் போன்ற ஒற்றை அல்லது சில கடைகளில் மட்டுமோ அல்லது, அண்ணாச்சி போன்ற ஒற்றை மனிதர்களின் குரூரம் மட்டுமோ இல்லை. இந்தக் கட்டமைப்பின் பின்னே அரசு எந்திரம், அரசியல்வாதிகள், அதிகாரிகள், சமூகம், முதலாளிகள் ஏன் சில தொழிலாளிகள் என எல்லாரும் தெரிந்தோ, தெரியாமலோ காரணமாய் இருக்கிறார்கள் என்பதை சரியாகப் புரிந்து கொள்ளவேண்டும் என்பதே!!!

அசாமுக்கு வேலைக்கு செல்லும் சிறு பெண்ணின் தைரியம், அண்ணன் வேலை பார்க்கும் கடையின் பையை சாமி ஃபோட்டோவிற்கு அருகே மாட்டியிருப்பது, பாலியல் தொந்தரவுக்கிற்கு உள்ளானதற்கு அப்புறம் மிகச் சாதாரணமாக துணி விற்பனையில் ஈடுபடும் நாயகி என அதிர்வுகளை ஏற்படுத்தும் காட்சிகளைச் சொல்ல ஆரம்பித்தால் ஏறக்குறைய முக்கால் படத்தை சொல்ல வேண்டியிருக்கும்!!!

வசந்தபாலன் சார், தலைவணங்குகிறேன். உங்களுக்கு என் வணக்கங்களும் மரியாதைகளும்!!!

பிரிவுகள்:சினிமா குறிச்சொற்கள்: