தொகுப்பு

Archive for the ‘சிறுகதை’ Category

சட்டென்று விழுந்தது நெஞ்சம் – நிறைவு

முதல் பாகத்திற்குச் செல்ல

சட்டென்று விழுந்தது நெஞ்சம் – சிறுகதை (பாகம் 1)

பாகம் – 2

சரி, இப்ப இந்த விஷயத்தை எப்படி எங்க அப்பாஅம்மாவுக்கு எப்படி போய் சொல்றது என்று முணுமுணுத்துக்கொண்ண்டே திரும்பியவனை நந்தினியின் குரல் தடுத்தது……

முரளி, நீங்க தப்பா நினைச்சுக்காட்டி உங்களை ஒண்ணு கேக்கலாமா?

சொல்லுங்க?

இல்ல, பொண்ணு பாக்கப் போனா என்ன பேசுறதுன்னு யோசிச்சேன்னு சொன்னீங்களே!!! அப்படி என்ன யோசிச்சீங்க???

இந்தக் கேள்வி முரளிக்கும் மெல்லிய ஆர்வத்தை ஏற்படுத்தியது…..ஏன் கேக்கறீங்க?

ஒரு கியுரியாசிட்டிதான், நீங்க வேற யோசிச்சிட்டு வந்தேனு சொன்னீங்களா, அதான்……

அவன் கேள்வியாக நோக்கியதை உணர்ந்ததாலோ என்னமோ மீண்டும் சொன்னாள், என்னைப் பொருத்த வரை நான் ஒண்ணுமே யோசிக்கலீங்க. இந்த கல்யாணம் வேணாம்னு சொல்லனுங்கிற ஒரே முடிவுல இருந்ததால வேறெதுவும் யோசிக்கலை!!! அதான் கேக்கறேன்…..

மெல்லிய வெட்கத்துடனும், சிரிப்புடனே முரளி சொன்னான், பெரிசால்லாம் ரொம்ப யோசிக்கலைங்க, அந்தப் பொண்ணுக்கு முழு விருப்பமாங்கிறதை தெரிஞ்சுக்கணும்….அவங்க கேரியர்ல என்ன குறிக்கோள், புத்தகம் படிக்கற பழக்கம் இருக்கா, அவங்களோட விருப்பங்கள், எதிர்பார்ப்புகள் என்னென்ன இதெல்லாம்……..என்று இழுத்தவன் சற்றே யோசனையுடன் சொன்னான், அப்புறம், கல்யாணம் உறுதியாயிடுச்சினா என்னை எப்பவும் பேர் சொல்லி, வா, போ ன்னு சொல்லிதான் கூப்பிடணும்னு கேட்டுக்குவேன்……

மெல்லிய சிரிப்புடன் கேட்டுக் கொண்டிருந்த நந்தினிக்கு இந்தப் பதில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது……பேர் சொல்லி, வா போ ன்னா????

ஆமாங்க, அலுவலகத்துல யார் யாரையோ ஜூனியர், சீனியர்னு வித்தியாசம் இல்லாம, நட்பா  பழகணுங்கிறதுக்காக எல்லாரும் பேர் சொல்லி கூப்பிட்டுக்கறோம்…..ஆனா வாழ்க்கைல காலம் முழுக்க இன்னொருத்தரோட தோழமையோட பழகவேண்டிய நிலைல, வெறும் வார்த்தைகள்ல மரியாதை வேணாம்னு தோணுது…..

முதன் முதலாக முரளி மீதான சுவராசியம் நந்தினிக்கு அதிகமாகியது…..

முரளியே பேசினான், உண்மையில இந்த பொண்ணு பாக்கறதெல்லாம் எனக்கு கொஞ்சம் வேடிக்கையாத்தாங்க இருக்கு….. பத்து நிமிஷத்துல ஒரு பொண்ணுகிட்ட பேசி என்னத்தைப் புரிஞ்சிக்க முடியும்னு தெரியலை……அதுவும் எந்தப் புக்லியும் வேற இந்த விஷயத்தைப் பத்தி போடுலியா அதான் ஒரே குழப்பமா இருக்கு………

இயல்பாக பேசிக்கொண்டிருந்தவன் மெல்ல ஜாலியாகவும் பேச ஆரம்பித்தது, நந்தினிக்கும் மகிழ்ச்சியாக இருந்தது……கிண்டலாகவே கேட்டாள், இவ்ளோ நம்பிக்கையில்லைன்னா எதுக்குங்க பொண்ணு பாக்க வரணும்??? பேசாம யாரையாவது லவ் பண்ணி கல்யாணம் பண்ணியிருக்கலாமே!!!!

லவ்வா!!! நானா!!! திகைப்புடனே கேட்டான் முரளி….

ஏன், நீங்க லவ் பண்ணக் கூடாதுன்னு ஏதாவது இருக்கா என்ன? கண்டிப்பா கோ எட் காலேஜ்லதான் படிச்சிருப்பீங்க, இப்ப ஆஃபிஸ்ல, வெளியன்னு ன்னு நீங்க லவ் பண்றதுக்கு நிறைய சான்ஸ் இருந்துருக்குமே???

தோணலைங்க……

என்ன தோணலை?

இல்லை, இதுவரைக்கும் யார்கிட்டயும் அந்த மாதிரி லவ் பண்ணனும்னு தோணலை!!! காலேஜ்ல, ஆஃபிஸ்லன்னு பொண்ணுங்க நிறைய பேரு இருக்காங்கதான்…..அதுக்காக எல்லார்கிட்டயும் சொல்லிட முடியுமா என்ன?……………அவள் ஜாலியாக பேசினதாலோ என்னமோ முரளியும் கேட்டான், இவ்ளோ பேசுறீங்களே நீங்க ஏன் யாரையும் லவ் பண்ணலை???

இப்போது திகைப்பது அவள் முறையாயிற்று…..நானா?

ஏன், நீங்க லவ் பண்ணக் கூடாதுன்னு ஏதாவது இருக்கா என்ன? நீங்களும் கண்டிப்பா கோ எட் காலேஜ்லதான் படிச்சிருப்பீங்க, இப்ப ஆஃபிஸ்ல, வெளியன்னு நீங்களும் லவ் பண்றதுக்கு நிறைய சான்ஸ் இருந்துருக்குமே??? அவள் கேட்ட பாணியிலேயே முரளி கேட்டதில் நந்தினிக்கும் சிரிப்பு வந்தது…………சீரியசாத்தாங்க கேக்கறேன், ஒரு வேளை நீங்க லவ் பண்ணியிருந்தா இப்ப நீங்க கவலைப்படாம இருந்திருக்கலாமே!!!

மெல்ல யோசித்தவாறே சொன்னாள், லவ் பண்ணனுமேன்னு பண்ண முடியுமா என்ன???

என்னைப் பொறுத்த வரை லவ்வுங்கிறதை நட்போட அடுத்த கட்டமாத்தான் பார்க்கறேன், முழுசா புரிஞ்சுக்கலைன்னாலும், அட்லீஸ்ட் ஒரு பேசிக் அண்டர்ஸ்டாண்டிங்னாச்சும் வேணும்லியா…….. சோ, அப்படி யாரும், எதுவும் எனக்கும் இதுவரைக்கும் தோணலைங்க……….ரொம்ப சீரியசா பேசுவது போல் உணர்ந்ததாலோ என்னமோ திடீரென்று நிமிர்ந்து கிண்டலாகவேச் சொன்னாள்., நம்மூரில ஒரு பொண்ணே முதல்ல போய் லவ் பண்றேன்னு சொன்னாலே ஏதாவது சொல்லுவாங்க…….தவிர என்கிட்டயும் யாரும் வந்து லவ் பண்றேன்னு சொல்லலீங்க…….

ஓகோ, அப்ப இனிமே யாராவது வந்து சொன்னா யோசிப்பீங்களோ????

தோளைக் குலுக்கியவாறே அலட்சியமாகச் சொன்னாள், ம்ம்ம்ம், இனிமே யாராவது சொன்னா யோசிப்பே…..

இடைமறித்தார் போல் அவன் குரல் கேட்டது., “I Love You”

சில நொடிகள் செயலற்றுப் போனாள், என்ன, என்ன சொன்னீங்க???

அழுத்தமாகவே பதில் சொன்னான் முரளி ”I     Love     You”

என்னவென்று சொல்ல முடியாத ஒரு உணர்வு அவளை ஆட்கொண்டது, அதையும் மீறி எங்கோ பார்த்தவாறே கேட்டாள், ஏன்???

எனக்கு உங்களைப் புடிச்சுதான் இங்கியே வந்தேன் நந்தினி!!! உங்ககிட்ட பேசினதுக்கப்புறம் இன்னும் அதிகமா எனக்கு புடிச்சிருக்கு!!!! தவிர இதுக்கு மேல நான் யரையாவது பாத்து லவ் பண்ணி கல்யாணம் பண்றதெல்லாம் வேலைக்காவாதுங்க!!!! கிண்டலாக பேசியவன், அவள் சீரியசாக அவளைப் பார்ப்பதை உணர்ந்ததால், சீரியசாத்தாங்க சொல்றேன்…….நீங்க யாரும் ”I Love You”  சொன்னதில்லைன்னவுடனே, ஏன்னு தெரியலை உடனே சொல்லணும்னு தோணுச்சு, சொல்லிட்டேன்………

மவுனத்தை கலைத்தபடி அவனே சொன்னான், இதைவிட வேறென்னங்க எதிர்பார்க்க முடியும் ஒரு பொண்ணுகிட்ட….. உங்க அப்பாஅம்மாவை கடைசி வரை பாத்துக்கணுங்கறதுக்காக கல்யாணத்தை வேணாம்னு சொன்ன அன்பு, என்கிட்ட நேரா சொன்ன தைரியம், வெட்கம் கலந்த கோபம், கிண்டல், காதல்ல இருந்து எல்லா விஷயங்களையும் பேசக் கூடிய தெளிவு இப்படி எத்தனையோ சொல்லலாம்…….

முகத்தில் எந்த உணர்ச்சியும் வெளிப்பட்டுவிடாமலேயே நந்தினி கேட்டாள்…பத்து நிமிஷத்துல என்ன புரிஞ்சிக்க முடியும்னு சொன்னீங்க, இப்ப ரொம்பப் புரிஞ்சவர் மாதிரி பேசுறீங்க???

உங்களை முழுசா புரிஞ்சிகிட்டேன்னு நான் சொல்லலைங்க, ஆனா உங்களை என்னால புரிஞ்சிக்க முடியும்னு சொல்றேன்………….பதில் இன்னும் சொல்லலையே???

சி(ப)ல நொடிகள் யோசித்தவள், மெல்லிய குரலில் சொன்னால் ‘ம்’

ஒற்றை எழுத்து அதுவும் ஒரு ஒற்றெழுத்து தன் வாழ்க்கைக்கே பொருள் தரக்கூடும் என்பதை அக்கணம் முரளி உணர்ந்தான்……. மிகுந்த சந்தோஷத்துடனே கேட்டான், எப்படி, ஏன்????

தெரியலீங்க, வரும்போது வேணாம்னு சொல்லத்தான் வந்தேன், ஆனா எனக்காக நீங்க பேசுனது, புரிஞ்சுக்க முயற்சி செஞ்சது, உண்மையா இருந்தது எல்லாம் என்னை யோசிக்க வெச்சுது…………..

சற்றே வெட்கத்துடனும், கிண்டலாகவும் எங்கோ பார்த்தபடியே சொன்னாள், இதைவிட வேறென்னங்க எதிர்ப்பார்க்க முடியும் ஒரு ஆண்கிட்ட…..என்னை விட என் உணர்வுகளை மதிக்கிற நேசம், காலம் முழுக்க நட்பைத் தருவேங்கிற உறுதி, கிண்டலுக்கு நடுவே இருக்கற மென்மை இப்படி எத்தனையோச் சொல்லலாமே…………

முதன்முறையாக வாய்விட்டுச் சிரித்த முரளி கிண்டலாகவே கேட்டான், அப்ப உன் அப்பாஅம்மா நம்ம கூட இருக்க நான் ஒத்துக்குவேங்கற நம்பிக்கை வந்துருச்சா???

சற்றே யோசனையுடன் சொன்னாள், உங்க மேல முழு நம்பிக்கை வந்துருச்சுன்னு சொல்ல முடியாது, ஆனா உங்களை எப்படியும் ஒத்துக்க வைக்க முடியும்னு தோணுது…..

சிரிப்போடவே சொன்னான் முரளி, நம்ம வாழ்க்கை சந்தோஷமா இருக்குமா என்னான்னு எனக்குத் தெரியலை, ஆனா ரொம்ப சுவராசியமா இருக்கும்னு தோணுது!!!

ஏன்?

இப்படி பதிலுக்குப் பதில் பேசுறியே!!!!

நந்தினியும் தைரியாமகச் சொன்னாள், போகப் போகப் பாருங்க, ரொம்பவே பதில் வரும்.
பாருங்களா????

ஒரு கணம் யோசித்த நந்தினியின் முகம் சட்டெனப் பளிச்சிட்டது, புன்னகையுடன் சொன்னாள் போகப் போக பாரு முரளி, ரொம்பவே பதில் வரும்….

சற்றே தலையைச் சாய்த்தவாறே முரளி கேட்டான், அப்ப கல்யாணத்துக்கு ஓகே ன்னு வீட்ல சொல்லிடலாமா???

நந்தினியும் கிண்டலாகத் தலையை சாய்த்தவறேச் சொன்னாள் “சொல்லிடலாமே”

ஏதேது அம்மையார் போற போக்கைப் பாத்தா என்னை விட ஸ்பீடா இருப்பீங்க போலிருக்கே என்று சொல்லிக்கொண்டே திரும்பியவனை நந்தினி கேட்டாள், முரளி நாம வேணா ஒண்ணா சேந்து ஒரு புக்கை போட்டுறலாமா???

எந்த புக்கு!!!!

பொண்ணு பாக்கப்போறப்ப என்ன பேசணும்னு!!!!!

ஹா ஹா ஹா!!!!

பிரிவுகள்:சிறுகதை, Uncategorized குறிச்சொற்கள்:

சட்டென்று விழுந்தது நெஞ்சம் – சிறுகதை (பாகம் 1)

எப்படிச் சொல்றதுன்னே தெரியலை, எனக்கு இந்தக் கல்யாணத்துல இஷ்டமில்லை! ஐ யாம் சாரி,…… ஐ யாம் ரியல்லி சாரி!!!

பெண் பார்க்கச் சென்ற இடத்தில் எதேதோ கேள்விகளையும், விஷயங்களையும் எதிர்பார்த்திருந்தாலும் சத்தியமாக இதை முரளி எதிர்பார்த்திருக்கவில்லை. அதுவும் பெரியவர்களுக்கெல்லாம் முதல்நிலையில் ஓரளவு திருப்தியாகப் பட்டவுடன், பெண்ணுடன் கொஞ்சம் தனியாகப் பேசிட்டு வா என்று அனுப்புகையில், என்ன பேசுவது, எப்படி ஆரம்பிப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கையில், டக்கென்று நந்தினியே இப்படிச் சொன்னது அவனை மிகுந்த ஆச்சரியப்படுத்தியது மட்டுமில்லாமல் சற்றே சுவராசியத்தையும் ஏற்படுத்தியது!!!

சில நொடி நேர மவுனத்திற்குப் பின்தான் முரளி கேட்டான், என்ன காரணம்னு நான் தெரிஞ்சுக்கலாமா?

நந்தினியும் சற்றே சங்கடத்துடனும், குழப்பமாகவும் இருந்ததை அவள் முகமே காட்டியது…இதைப் பற்றி அதிகம் பேச விரும்பாதவள் போலதான் அவளும் கேட்டாள், கண்டிப்பா சொல்லணுமா என்று!

ஆமாங்க, கண்டிப்பாச் சொல்லணும், தவிரச் சொல்ல வேண்டிய கடமையும் உங்களுக்கு இருக்கு!

மெல்லிய ஆச்சரியத்துடனே நந்தினி கேட்டாள்? கடமையா, எப்படி?

சொல்றேன், அதுக்கு முன்னாடி நீங்க தப்பா நினைக்காட்டி ஒரு சின்ன கேள்வி, நீங்க யாரையாவது லவ் பண்றீங்களா?

இல்லை….

ம்ம்ம்ம், நினைச்சேன்!!!

தான் காதலித்திருக்க முடியாதுன்னு இவன் எப்படி சொல்லுறான் என்கிற மெல்லிய திகைப்புடனும், சற்றே கோபத்துடனும் கேட்டாள், இன்னும் கடமை என்னான்னு சொல்லவே இல்லை……

இல்லைங்க, இந்தப் பொண்ணு பாக்கற விஷயம் ஒண்ணும் உங்களுக்குத் தெரியாம நடந்திருக்க வாய்ப்பில்லை….பெரியவங்கள்லாம் பேசி, ஃபோட்டோ பாத்து, மத்த எல்லாருக்கும் ஓரளவு பிடிச்சுப் போயிதான் இந்த விஷயமே நடக்குது, அப்படி இருக்கறப்ப வேணம்னா, நீங்க முன்னமே சொல்லியிருக்க வாய்ப்புகள் இருந்தது, ஆனா சொல்லலை………

உண்மைதான் என்பதுபோல் பார்த்துக் கொண்டிருந்த நந்தினியைப் பார்த்தபடியே சொன்னான், நீங்க வேலைக்குப் போய்கிட்டிருக்கீங்க நந்தினி, ஓரளவு சுய முடிவுகள் எடுக்கற சுதந்திரம் இருந்திருக்கும், நீங்களும் யாரையும் காதலிக்கலைன்னு வேற சொல்றீங்க, அப்படி இருக்கறப்ப எல்லாரும் ஏறக்குறைய முடிவாயிருச்சின்னு நினைச்சிட்டிருக்கறப்ப வேண்டாம்னு சொல்றீங்கன்னா, என்ன காரணம்னு தெரியலைன்னா……….எல்லாத்துக்கும் மேல வீட்ல வேற நான் பதில் சொல்லணுங்க, என்னாடா தனியா போய் பேசிட்டு வந்தவுடனே பொண்ணு கல்யாணம் வேணாங்குதுன்னு கேட்டாங்கன்னா என்ன பதில் சொல்றது…….

கொஞ்சம் லிமிட் தாண்டுகிறானோ என்கிற கோபத்தில் டக்கென்று நிமிர்ந்து பார்க்கையில், அவன் புன்சிரிப்போடு இருப்பதைக் கண்டு, கிண்டலாகத்தான் பேசுறான் என்பதை  உணர்ந்தாள். முரளி சொன்னதெல்லாம் உண்மையாயிருந்தாலும், இவன் கிண்டலாக பேசும் போது தான் மட்டும் பேசக் கூடாதா என்று வேண்டுமென்றேதான் நந்தினியும் கேட்டாள், எத்தனையோ ஆம்பளைங்க, நிறைய பொண்ணுங்களை நேர்ல போயி பாத்துட்டு கண்ணை மூடிட்டு வேணாம்னு சொல்றாங்க, இப்ப ஒரு பொண்ணு கல்யாணம் வேணாம்னு சொன்னா மட்டும் காரணம் சொல்றது கடமைன்னு சொல்லுறீங்க, இது என்ன நியாயம்? தவிர வேலைக்குப் போறவங்க மட்டும்தான் சுயமா முடிவெடுப்பாங்களா, வேலைக்கு போகாதவங்களுக்கு முடிவெடுக்கத் தெரியாதா???

மென் சிரிப்போடு நந்தினி பேசியதாலோ என்னமோ, முரளி அவள் வேண்டுமென்றேதான் பேசுகிறாள் என்பதை உணர்ந்தவன் போலே சொன்னான், ஏங்க இது பெண்ணீயம் பேச வேண்டிய நேரம் இல்லீங்க.

வேலைக்குப் போறீங்கங்கறதுனால, உங்களை கேட்டுட்டுதான் எல்லாமே பண்ணியிருப்பாங்கங்கிறதைத்தான் அப்படிச் சொன்னேன். என்னைப் பொறுத்த வரை நான் ஒரு பொண்ணைப் பாக்கப் போறதா இருந்தா  சம்மதம் சொல்றதுக்காகத்தான்னு ஒரு கொள்கையே வெச்சுருக்கேன்…. யார் யாரோ பண்ண தப்புக்கு நான் பெண்ணீயத்துக்கு கணக்கு சொல்ல வேண்டியிருக்குன்னு கிண்டலாகச் சொன்னவன் ஏதோ ஞாபகம் வந்தவன் போல் மெலிதாகச் சிரித்துக் கொண்டான்…..

அவனது பதில் திருப்தியை தந்தாலும் இந்த சமயத்துல சிரிச்சிட்டிருக்கானே என்கிற எண்ணத்தில்தான் நந்தினியும் கேட்டாள், எதுக்கு சிரிக்கறீங்க???

இல்லீங்க வேற ஒண்ணு நினைச்சேன், அதான்…….இதை விடுங்க, நீங்க சொல்லுங்க.

நான் மட்டும் காரணம் சொல்லணும்னு கட்டாயப்படுத்தினீங்க? இப்ப உங்களைக் காரணம் கேட்டா சொல்ல மாட்டேங்கறீங்க???

ஏங்க, நீங்க காரணம் சொல்ல வேண்டியது நாம ரெண்டு பேரும் மட்டுமில்லாம நம்ம குடும்பமே சம்பந்தப்பட்ட விஷயம், ஆனா இது அப்படியில்லை…….சரி இருந்தாலும் சொல்றேன், ஆக்சுவலா, எனக்கு இந்த புக்ஸ் படிக்கற பழக்கம் கொஞ்சம் அதிகம்…. நானும் கதை புக்லருந்து செல்ஃப் டெவெலப்மெண்ட், மேனேஜ்மெண்ட் புக்ஸ் வரை ஓரளவு படிச்சிருக்கேன், ஆனா எந்தப் புக்குலியுமே இந்தப் பொண்ணு பாக்கப் போறப்ப என்ன பேசணும், எப்படி பேசணும்னு இல்லியேன்னு உங்களைப் பாக்க வர்றதுக்கு முன்னாடி யோசிச்சிருந்தேன்…..அதுக்கே புக்கில்லைங்கறப்ப, பொன்ணு பாக்கப் போன இடத்துல, ஒரு பொன்ணு கல்யாணத்துல இஷடமில்லைன்னு சொன்னா என்ன பண்ணனுங்கிறது எப்படி இருக்கப்போவுதுன்னு நினைச்சேன், அதான் சிரிப்பு வந்துது……

வேறெதையோ எதிர்பார்த்திருந்தாலும், இது போன்றதொரு பதிலை அவள் எதிர்பார்த்திருக்கவில்லை என்பதை அவள் சிரிப்பும் காட்டியது. அது மட்டுமில்லாமல் அமர்த்தலாய் இருந்தாலும் தானும் தடுமாறிகிட்டுத்தான் இருக்கேன்னு முரளி ஒத்துக்கொண்டது நந்தினிக்கு அர்த்தமற்ற ஒரு மகிழ்ச்சியையும் தந்தது….. அவளுடைய யோசனையை முரளியின் குரல் தடுத்தது.

என்னுடைய ஊகம் சரியா இருந்தா, நீங்க இந்த முடிவை எடுத்துட்டுத்தான் இன்னிக்கு இந்த பொண்ணு பாக்கற இடத்துக்கே வந்திருக்கீங்களோன்னு தோணுது, சரியா? என்றான் முரளி

மெல்லிய ஆச்சரியத்துடனே நந்தினி பதிலளித்தாள், நீங்க சொன்னது சரிதான்….

இதுவரை ஏற்பட்ட உரையாடல்கள் அவளுள்ளும் ஒரு தோழமையுணர்வை ஏற்படுத்தியிருக்க அவளும் என்ன காரணம் என்பதைச் சொல்ல ஆரம்பித்தாள்……..

உங்களுக்கே தெரியும், நான், எங்க அக்கா ரெண்டு பேருதான் எங்க அப்பா அம்மாவுக்கு…….எனக்கும் கல்யாணம் ஆனதுக்கப்புறம் அவங்களோட நிலை என்னன்னு எனக்கு தெரியலை. என்னதான் முன்னேறிட்டோம்னு நாம சொல்லிகிட்டாலும் இன்னமும் கல்யாணத்துக்கப்புறம் அவங்களும் பொண்ணோட சேர்ந்து இருக்கணுங்கிறதிலெல்லாம் பெரிய அளவுல மாற்றம் வர்லைன்னுதான் தோணுது….அவங்கவங்க அப்பாஅம்மாவை பாத்துகிறதுக்கு கூட கணவர், அவங்க குடும்பம், சமூகம்னு நிறைய பேரோட அனுமதியை ஒரு பொண்ணு எதிர்பார்க்க வேண்டியிருக்கு……அதுனால, இந்த விஷயத்துல நான் ஒரு தெளிவு கிடைக்கிற வரைக்கும் நான் கல்யாணம் பண்ணிக்க வேண்டாம்னு நினைக்கறேன், அதான்……..

இந்த முடிவை எப்ப எடுத்தீங்க நந்தினி? இதுதான் உங்க முடிவுன்னா பொண்ணு பாக்க வர்றோம்னு ஒரு வாரத்துக்கு முன்னாடி சொன்னப்பவே வேணாம்னு சொல்லியிருக்கலாமே, இப்பச் சொல்றீங்கன்னா ஒருவேளை உங்க அப்பாஅம்மாவை பாத்துக்கறதுக்கோ இல்ல நம்ம கூட இருக்கறதுக்கோ நான் அனுமதிக்க மாட்டேன்னு தோணுதா???

அய்யய்யோ, அப்டியெல்லாம் இல்லை…. நான் இந்த முடிவையே ரெண்டு நாள் முன்னாடிதான் எடுத்தேன்……..

ம்ம்ம்ம், இந்த முடிவு உங்க அப்பா அம்மாவுக்கு தெரியுமா???

தெரியாது….

திடீர்னு இந்த முடிவை எடுக்கக் காரணம் என்னான்னு தெரிஞ்சுக்கலாமா?

அது…..

பாருங்க நந்தினி, இது எனக்குத் தேவையில்லாத விஷயமா இருக்கலாம்…. ஆனா திடீர்னு நீங்க இந்த முடிவை எடுத்ததுனால, ஒருவேளை மறைமுகமா நான் இதுக்கு காரணமா இருப்பேனோன்னு எனக்குள்ள ஒரு உறுத்தல் அதான்…… அட்லீஸ்ட், என்ன காரணம்னு முழுசா தெரிஞ்சிகிட்டா என்னால முடிஞ்ச ஹெல்ப் எதாவாது சொல்லுவேன், எனக்கும் எங்க வீட்ல பதில் சொல்ல வசதியா இருக்கும்….

இல்லையில்லை…..உங்களால இந்த முடிவை நான் எடுக்கலை, இன்னும் சொல்லப் போனா உங்களைப் பத்தி முழுசா எதுவும் எனக்குத் தெரியாது……….பொண்ணு பாக்க வர்றோம்னு சொன்னப்பல்லாம் இதைப்பத்தியே நான் நினைச்சுப்பார்க்கலை, அப்போ எனக்கும் ஓகேவாத்தான் இருந்துது……..ஆனா, ரெண்டு நாள் முன்னாடி அக்காகிட்ட பேசினப்ப, கல்யாணம் முடிவாயிடுச்சின்னா அப்பாஅம்மாவுக்குத்தான் ரொம்ப கஷ்டமா இருக்கும்…. உன் கூட கொஞ்ச நாள், என் கூட கொஞ்ச நாள்னு இருக்கட்டுங்கா சொன்னப்பதான் அக்கா அந்த உண்மையைச் சொன்னாங்க……

என்ன உண்மை?

இல்லை, அவங்க வீட்ல இருக்கற பெரியவங்க அப்படி ரொம்ப நாளு அவங்க கூட இருக்க  ஒத்துக்கமாட்டாங்களாம்……..இத்தனைக்கும் கல்யாணத்துக்கு முன்னாடியே மாமாகிட்ட பேசி ஒப்புதல் வாங்கிட்டுதான் கல்யாணம் பண்ணிகிட்டாங்க…….. ஆனா இப்ப மாமாவால அவங்க அப்பாஅம்மாவை எதிர்த்து ஏதும் பண்ண முடியாதாம்…….அக்கா சொன்னதுக்கப்புறம்தான் இதைப்பத்தியே நான் யோசிக்க ஆரம்பிச்சேன்………அதான், இந்த விஷயத்துல எனக்கு ஒரு தெளிவு கிடைச்சதுக்கப்புறம் கல்யாணம்னு யோசிக்கறேன்…..

இதுக்காக கல்யாணம் வேணாம்னு சொன்னா உங்க வீட்லியே ஒத்துக்குவாங்களா???

மாட்டாங்க, அவங்களை எப்படி சமாளிக்கப் போறேன்னு எனக்கே தெரியலை….ஆனா அவங்களை பாத்துக்க  முடியலியேன்னு பின்னாடி வருத்தப்பட்டுகிட்டு இருக்கறதுக்கு, இப்ப அவங்க கோவிச்சுகிட்டாலும் பராவாயில்லைன்னு சமாளிக்க வேண்டியதுதான்…..

உங்க மாமா வீட்ல ஒத்துக்கலைங்கிறதுக்காக எல்லாருமே அப்படித்தான்னு ஏன் முடிவு பண்றீங்க……

இல்லை, அது…….

ஓஹோ, ஏற்கனவே இந்த விஷயத்துல அடிபட்டிருக்கறதுனால் யார் மேலயும் நம்பிக்கை வர்லை, அப்டித்தானே???

………………………..

சங்கடத்துடன் மவுனாமாய் இருந்த நந்தினியை பார்த்தவாறே முரளியும் வேறுவழியில்லாம சொன்னான்……இவ்ளோ தெளிவா நீங்க இருக்கறப்ப, நான் அப்படியில்லைன்னு நான் சொல்ற சுயநிலை விளக்கங்கள் எந்தளவுக்கு உங்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும்னு தெரியலை………

சில நொடிகள் அங்கு கனத்த மவுனம் நிலவியது…….மவுனத்தைக் கலைக்க வேண்டுமென்பதற்காகவே நந்தினி சற்று வருத்தத்துடனே சொன்னாள்……நீங்க கொஞ்சம் எதிர்பார்ப்போட வந்திருப்பீங்கன்னு தோணுது, ஐ யாம் ரியலி சாரி……

இதுவரை இருந்த தோழமையுணர்வு மறைந்து அங்கு ஒரு இறுக்கமான சூழல் உருவானதாலோ என்னமோ முரளி மெல்லிய சிரிப்புடனே பேசினான்…..எதிர்பார்ப்புன்னு பெருசா கிடையாது……ஒரு பொண்ணைப் பாக்கப் போனா சம்மதம் சொல்லணுங்கிறதுக்காகத்தான்னு நினைச்சு வந்தேன், உங்க பக்கம்ல இருந்து வந்த பதில்களும் இந்த சம்பந்தம் ஏறக்குறைய முடிவு  செய்யப்பட்ட மாதிரி இருந்துதா, அதனால வீட்ல எல்லாரும் இந்த சம்பந்தம்தான்னு ஏறக்குறை முடிவு பண்ணியிருந்தாங்க, அதுனாலியே உங்ககிட்ட தனியா பேசும்போது என்ன பேசுறதுன்னு யோசிச்சிட்டு வந்தேன், ஆனா அதுக்கு இப்ப அவசியமில்லா போச்சு…..

சரி, இப்ப இந்த விஷயத்தை எப்படி எங்க அப்பாஅம்மாவுக்கு எப்படி போய் சொல்றது என்று முணுமுணுத்துக்கொண்ண்டே திரும்பியவனை நந்தினியின் குரல் தடுத்தது……

பிரிவுகள்:சிறுகதை குறிச்சொற்கள்: