தொகுப்பு

Archive for the ‘சினிமா’ Category

தனி ஒருவன் – திரைப்பார்வை!

“இப்படத்தில் வரும் சம்பவங்கள் யாவும் கற்பனையே!, நிஜத்தில் வருவது போன்று கொடூரமானவையல்ல”- என்ற டிஸ்க்ளெய்மருடன்தான் படமே ஆரம்பமாகிறது!

ஹீரோவுக்கென்று ஃப்ளாஸ்பேக் வைத்து பழகிய தமிழ் சினிமாவில், வில்லனின் ஃப்ளாஸ்பேக்குடன், அதுவும் ஒரு பெரும் கட்சியின் தலைவராக வரும் நாசரையே தடுமாறச் செய்யும் காட்சியுடன் அரவிந்த் சாமியின் வாழ்க்கையும், திரைப்படமும் ஆரம்பமாகிறது!

தனி-ஒருவன்-படத்திற்காக-ஒரு-மாதம்-பயிற்சி-எடுத்த-’சித்தார்த்-அபிமன்யு’

காட்சிகளில் ஆங்காங்கே சின்னச் சின்ன ட்விஸ்ட்டுகள், பின் திடீரென பெரியதொரு ட்விஸ்ட் என்று படம் முழுக்க நம்முடைய சுவாரசியத்தை கூட்டிக் கொண்டே செல்கின்றனர்.

டீசர்களுக்கு கூட விமர்சனம் வைக்கின்ற, அதுவும் போஸ்டர் பார்த்தே கதையைச் சொல்கின்ற சோஷியல் மீடியா காலத்தில், நாளை வெளியாகும் படத்தின் நடிகர் ந்டிகைகளை கூட்டி வந்து, முந்தைய நாளே படத்தின் வெற்றி விழாவைக் கொண்டாட வைத்து, அந்த நிகழ்வை ஒளிபரப்பு செய்து, இடையிடையே கேள்வி கேட்கிறேன் பேர்வழி என்று படத்தின் கதையையும், முக்கியக் காட்சிகளையும் காட்டிவிடும் ஊடகங்கள் இருக்கும் காலத்தில் த்ரில்லர், விறுவிறுப்பான படங்களைக் கொடுப்பதே ஒரு சாகசம்தான்!

ஏனெனில் படம் முடிந்து சில நாட்கள் கழித்துச் சென்று படம் பார்க்கும் நபர்களுக்கு, அந்த சுவாரசியத்தில் பலதைக் கெடுத்து விடுவார்கள். நானெல்லாம் படம் பார்ப்பது என்று முடிவெடுத்து விட்டால், படம் பார்க்கும் வரை அதன் ப்ரமோஷன் காட்சிகள், அந்த படக்குழுவின் பேட்டிகள், முக்கியமாக படத்தின் திரை விமர்சனம் என எதையும் பார்க்க மாட்டேன்! படத்தையும், பெயர் போடுவதற்க்கு முன்பிருந்தே பார்க்க வேண்டும், இல்லாவிடின் கடுப்பாகிவிடும். அப்படி ஒரு வியாதி நமக்கு!

படம் பார்த்து முடிந்தவுடன் தோன்றியது, கனக்கச்சிதமான க்ரைம் நாவல் போல் இருக்கிறதே? என்றுதான். சுபா அல்லது பிகேபி போன்ற ஆட்கள் யாருடைய பங்காவது இருக்குமோ என்ற சந்தேகம் இருந்தது! ஆனாலும், டைட்டிலில் அவர்கள் யாருடைய பெயரையும் பார்த்த ஞாபகம் இல்லை. கதை, வசனம், இயக்கம் ஆகியவற்றில் மோகன் ராஜாவின் பெயரே இருந்தது! பின் செய்திகளில் படித்தபின் தான் தெரிந்தது, சுபாவின் பங்கும் படத்தில் இருந்திருக்கிறது!கச்சிதமான பங்களிப்பு! மிக விறுவிறுப்பான திரைக்கதை இப்படத்தின் இன்னொரு ஹீரோ!

ஏறக்குறைய பேராண்மை கெட்டப்பில் ஜெயம் ரவி! ஆக்‌ஷன் படங்களில் ஒன்று ஹீரோ அல்லது வில்லன் கத்தவேண்டும் அல்லது பஞ்ச் டயலாக் பேசவேண்டும் என்கிற விதியை மீறி, அந்தந்த கேரக்டர்களாகவே வரும் அரவிந்தசாமியும், ஜெயம் ரவியும் படத்தின் பெரும் பலம்! ‘ஏய்’ என்ற டயலாக்கே படத்தில் இல்லை!

நயந்தாராவிற்கு வருடங்கள் கூடக் கூட, அழகும், மார்க்கெட்டும் கூடிக் கொண்டே போகின்றது!

jayam1-600x300

வழக்கமான டூயட்டுக்காக மட்டுமான அல்லது லூசுத்தனமாக மட்டுமே நடந்துகொள்வதற்கான ஹீரோயினாக இல்லாமல், ஜெயம் ரவியின் உறுதுணையாக நிற்கின்றார்! அதிலும், ஜெயம் ரவி மனமுடைந்திருக்கும் சமயத்தில் வரும் காட்சியிலும், ப்ரபோஸ் பண்ணும் காட்சியிலும் அள்ளுகின்றார்! அறிமுகக் காட்சியில், ஜெயம் ரவியை விட அதிகம் கைத்தட்டுகள் அவருக்குதான்!
ஜெயம் ரவியின் நண்பர்களுக்கும் சரி, தம்பி ராமையாவிற்கும் சரி, ஏறக்குறைய படத்தில் எல்லாருக்கும் முக்கிய பங்கு இருக்கின்றது!

மோகன் ராஜா இத்தனை நாளாக, புளி சோற்றில் முட்டையை வைத்து பிரியாணி என்று ஏமாற்றியிருந்திருக்கிறார்! இப்பொழுது கச்சிதமான மசாலாவுடன், மொகல் பிரியாணி விருந்து படைத்திருக்கிறார்! கண்டிப்பாக, தெலுங்கு, ஹிந்தியில் இதற்கு கடும் கிராக்கி உண்டு! அரவிந்தசாமி மற்றும் ஜெயம் ரவி எந்தளவு இந்தப்படத்திற்கு பலமோ, அதைவிட பெரும் பலம் மோகன் ராஜா! அதுவும் வசனங்கள் அட்டகாசம்! மிகவும் சின்சியரான உழைப்பைக் கொடுத்திருக்கிறார்! பாராட்டுக்கள்!

TO10

நயந்தாரா மற்றும் ஜெயம் ரவி கேரக்டரைசேஷன் அருமை என்றால், அரவிந்த்சாமியின் கேரக்டரைசேஷன் மிக அருமை! கம்போஸ்டு வில்லன்! வாய்ஸ் மாடுலேஷன்களில் நயந்தாராவும், அரவிந்த்சாமியும் மனதைக் கவர்கிறார்கள்!

”உன் நண்பன் யார்னு தெரிஞ்சா உன் கேரக்டர் தெரியும், ஆனா உன் எதிரி யார்னு தெரிஞ்சாதான் உன் கெப்பாசிட்டி தெரியும்”, வணிகச் செய்தி என்னமோ ஒரு பக்கம்தான், ஆனா அந்த ஒரு பக்கம்தான் மத்த எல்ல பக்கச் செய்திகளுக்கும் காரணம்”,” பணம் இருக்குற இடத்துல எல்லாம் குற்றம் கண்டிப்பா இருக்கும், வாழ்க்கை முழுக்க குற்றங்களைத் தேடி போறவன் நான், வாழ்க்கை முழுக்க பணத்தைத் தேடிப் போறவன் அவன், அதுனால நாங்க கண்டிப்பா சந்திப்போம்” போன்ற ஹீரோவுக்கான வசனமாகட்டும்…

”காதலி சுட்டால், எதிரி மடியில் மரணம்”, “நீ கொடுத்த வாழ்க்கையை நான் எடுத்துக்கலை, ஆனா, நீ கேட்ட வாழ்க்கையை, நான் உனக்கு கொடுக்குறேன், நாட்டுக்காகல்லாம் இல்ல, உனக்காக, எடுத்துக்கோ”, ‘அவ, உலகத்தையெல்லாம் சுத்த வேணாம், என்னச் சுத்தி வந்தா போதும்”, போன்ற, கடைசி வரை கெத்து குறையாத, வில்லன் வசனமாகட்டும், எதையும் பஞ்ச் டயலாக்காக வைக்காமல், இயல்பாக பேசியதுதான் படத்திற்கு பெரிய பில்டப் கொடுக்கிறது!

நகைச்சுவையும் மிக இயல்பாக படத்துடன் வருவது படத்தின் இன்னொரு பலம்! நம்மூரில், அறிவுஜீவிகள் என்ன பண்றாங்கங்கிற வசனம் க்ளாஸ்!

படத்தில் எனக்குப் பிடித்த இன்னொரு மிக முக்கிய விஷயம், ஆர்கனைஸ்டு க்ரைம் பற்றி பேசியிருப்பதுதான்! – எல்லாச் சின்னச் சின்னக் குற்றங்களுக்கு பின்னாடியும் ஒரு பெரிய காரணம் இருக்கனும்னு அவசியமில்ல, ஆனா ஒவ்வொரு ஆர்கனைஸ்டு க்ரைமுக்கு முன்னாடியும் இதுமாதிரியான சின்னச் சின்ன குற்றங்களை வெச்சு திசை நம்மை திருப்பிட்டிருக்காங்க!
நாம் செய்தித்தாள்களில் படித்திருக்கும், எதோ ஒரு தீ விபத்து, எங்கோ நடக்கும் சாலை விபத்து, சாதாரண கடத்தல் போன்ற சம்பவங்களின் பின்புலம் வேறொன்றாகவும் இருக்கக் கூடும்! செய்தித் தாளின் வெவ்வேறு செய்திகளுக்கிடையே இருக்கக் கூடிய தொடர்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது இத்திரைப்படம்! இப்பொழுதும், ஏதேனும் மத்திய அரசு அல்லது மாநில அரசு அலுவலகத்தில் தீ விபத்து ந்டந்தது, உயிரிழப்பு இல்லை, ஆனாலும் மதிப்பு மிக்க ஆவணங்கள் தீயில் அழிந்தன என்ற செய்தியின் பிண்ணனி வெறெதுவுமாகவும் இருக்கக் கூடும்!

சண்டைக்காட்சிகள் அதிகம் இல்லாத ஆக்‌ஷன் படம், நாயகன் ஜெயம் ரவியை விட அதிகம் அபிமானத்தை ஏற்படுத்தும் வில்லனாக அரவிந்த்சாமி, பஞ்ச் டயலாக் இல்லாமலேயே கொடுக்கும் பில்டப்புகள், இரட்டை அர்த்த வசனங்கள் இல்லாத நகைச்சுவை, நாயகனின் காதலுக்காக இல்லாமல், அவனின் கொள்கைக்காக உதவும் நண்பர்கள் கூட்டம் என்று, தனி ஒருவன், தனித்து நிற்கிறான்!

Don’t miss it!

Advertisements
பிரிவுகள்:சினிமா குறிச்சொற்கள்:

ஹரிதாஸ் – திரைப்பார்வை

பிப்ரவரி 24, 2013 1 மறுமொழி

நம்ம எல்லாருக்குமே ஆட்டிசம் இருக்கு! இந்தப் பையனுக்கு கொஞ்சம் கூடுதலா இருக்கு, பர்சண்டேஜ்தான் வித்தியாசம்! இது டிசீஸ் இல்லை, ஜஸ்ட் ட்ஸெபிலிட்டி – ஒரு சிறந்த விழிப்புணர்வைத் தரக் கூடிய படமாக வெளிவந்திருக்கிறது ஹரிதாஸ்!

Image

இயக்குநரின் முந்தைய படங்களைப் (நினைத்தாலே இனிக்கும், யுவன் யுவதி) பார்த்தவர்களுக்கு இது மிகப் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தக் கூடும்! இந்தப் படத்தைப் பற்றி நண்பர் மூலமாக அடிக்கடி கேட்டுக் கொண்டிருந்தது படத்தைப் பார்க்கும் ஆவலைத் தூண்டியது! ஆட்டிசத்தை மையமாகக் கொண்டு வெளிவந்திருக்கும் சினிமா என்ற உடனே தாரே சமீன் பரின் சாயல் லைட்டாக வந்து விடுமோ எனப் பயந்தாலும், முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்துடன் இந்தப் படம் மெல்லிய ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது!

எந்த ஒரு குழந்தைக்கும் முதல் ஹீரோ தந்தைதான்! வெறும் தந்தை மகனுக்கிடையேயான பாசம் மட்டுமல்ல, இது போன்ற Special Children வளர்ப்பில் ஏற்படும் சிரமங்கள், அவர்களைப் புரிந்து கொள்ள வேண்டிய முறைகள் எனப் பல பரிமாணங்களைத் தொட்டுச் செல்கிறது படம்!

 இயக்குநரும், ரத்னவேலுவும் நல்ல நண்பர்கள்! இருந்தும் முதல் இரு படங்களில் இல்லாமல், இந்தப்படத்திற்கு ஒளிப்பதிவிற்கு ஒத்துக் கொண்டதற்குக் காரணம் படத்தின் கதையாகக் கூட இருக்கக் கூடும்! இயக்குநரின் முந்தைய படங்களைப் பார்த்தாலே ஒரு விஷயம் தெரிந்திருக்கும், படமும் கதையும் எப்படியிருந்தாலும், காட்சிகள் மிக அழகாக இருக்கும் எப்பொழுதும்! அப்படிப்பட்டவருடன் ரத்னவேலு சேரும் போது? நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள்!

ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட சிறுவனின் தந்தையாக கிஷோர், எண்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட், ஏற்கனவே மனைவியை இழந்தவர். பாட்டியின் வளர்ப்பில் இருந்த சிறுவனுக்கு, பாட்டியும் இல்லாமல் போக, தான் மட்டும்தான் இனி என்ற உறுதியுடன் வளர்க்க ஆரம்பிக்கும் நிலையில் தெரிகிறது அதிலுள்ள சிரமங்கள்! சமூகம், ஊடகம், கல்வி முறை என அனைத்துமே இயல்பான குழந்தை வளர்ச்சியையே சிரமமாக்கி விட்ட சூழலில், இது போன்ற ஸ்பெஷல் சில்ரன் வளர்ப்பில், பெற்றோர்க்கு இருக்க வேண்டிய அணுகுமுறையை, பொறுமையை மிக இயல்பாய்ச் சொல்லிச் செல்கிறது படம்! தமிழகத்தில் அனைத்து அரசு பள்ளிகளிலும், இது போன்ற சிறுவர்களை, பெற்றோர் உடனிருக்கும் பட்சத்தில் கட்டாயம் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்ற செய்தி கண்டிப்பாக பலரையும் சென்றடையும் இந்தப் படத்தின் முலம்!

Image

கிஷோர், சினேகா, மிக முக்கியமாய் பிரித்திவிராஜ் (சிருவன்) ஆகிய மூவரின் நடிப்பும் மிக அருமை! சின்னச் சின்ன மாற்றங்களிலும், வெறும் ஒற்றை வார்த்தை மட்டுமே வசனம், அதுவும் படத்தின் க்ளைமாக்சில்தான் என்றாலும் படம் முழுக்க பாடி லாங்குவேஜ்களில் வெளுத்து வாங்குகிறான் சிறுவன்! போலீசாய் இருக்கும் போது கம்பீரம், சிறுவனின் தந்தையாக பாசம், போலீசாக் இருந்தாலும், சமூகத்தால் அவமானப்படும் போது இயலாமை எனப் பல பரிமாணங்களில் கிஷோரின் நடிப்பு அருமை! இந்தப்படம் கண்டிப்பாக அவ்ருக்கு ஒரு பேர் சொல்லும் படமாக அமையும்! அமுதவல்லி டீச்சராக சினேகா! கிஷோரின் முன்னால் இயல்பாய் இருக்க முடியாமல் எழும் தடுமாற்றம், சாரியிலிருந்து சிடிதாருக்கு மாறுவது, குழந்தை காணாமல் போன சமயத்தில் எழும் துக்கம், சினச் சின்ன எக்ஸ்பிரசன்ஸ் என எல்லா இடங்களிலும் எங்கும் ஓவர் ஆக்டிங் இல்லாமல் மிக இயல்பான பாத்திரமாய் ஜமாய்த்திருக்கிறார்!

இரு இடங்களில் மட்டுமே வந்தாலும் யூகி சேது அசத்துகிறார்! ராஜ் கபூர், குண்டுப் பையன் ஓமக்குச்சி, எண்கவுண்டர் டீமில் இருக்கும் மற்ற போலீஸ்கள், ஹெட்மாஸ்டராய் வரும் பெண் என எல்லா பாத்திரப்படைப்புகளும் நன்றாகவே அமைந்துள்ளன! சூரியின் காமெடி சற்றே திணிக்கப்பட்டது போல் தோன்றினாலும், ஒரு சிலருக்கு பிடிக்கக் கூடும்!

கிஷோர் சினேகா உறவில் ஏற்படும் திருப்பம், சற்றே சராசரியாக்கிவிடுமோ எனத் தோன்றினாலும், இயக்குநர் மிக அருமையாக அந்த இடத்தைக் கையாண்டுள்ளர்!

Image

படத்தின் மிக முக்கிய பலமாக ரத்னவேலுவும், கதையும், இருந்தாலும், அதற்குச் சரியான வலுவூட்டும் விதத்தில் அமைந்தது ஏஆர். வெங்கடேசனின் வசனமும், விஜய் ஆண்டனியின் இசையும், முகம்மதுவின் எடிட்டிங்கும்! படத்திற்கு முதலில் வசனம் எழுத இருந்தது ஜெமோதான், ஏதோ காரணங்கலுக்காக அது நடைபெறாவிட்டாலும், எந்த இடத்திலும் வசனம் தனிப்பட்டு தெரியாமல் படத்திற்கேற்றார் போல் கலந்து இருப்பது அதன் சிறப்பம்சம்!(மற்றவர்களுக்கெல்லாம் வெற்றி பெற்றால்தான் சார் வெற்றி, ஆனா என் பையனுக்கு கலந்துகிட்டாலே வெற்றி, முடியாதுன்னு சொன்ன என்னை விட, முடியும்னு சொன்ன நீதான்யா கரெக்ட் கோச், எங்களை எப்பவுமே நல்லது நினைக்கச் சொல்லிவிட்டு, நீங்க தப்பா நினைக்கிறீங்களே சார், அவன் கோச் இல்லை, காக்ரோச், இதெல்லாம் சின்னச் சின்ன உதாரணங்கள்) விஜய் ஆண்டனியின் இசை பாடல்களை விட பிண்ணனியில் மிக அருமையாக வந்திருப்பது இந்தப்படத்தில்தான் என நினைக்கிறேன்!

ஆக்‌ஷன், செண்டிமெண்ட், சோகம் எனக் கொஞ்சம் தவறினாலும் பிரச்சாரமாகவோ அல்லது ஓவர் டோசில் சற்றே டிராமாடிக்காகவோ அலல்து கிளிசேவாகவோ நிரம்பியிருக்கக் கூடிய சூழலில், மிக நேர்த்தியாக எடுத்துச் சென்றது இயக்குநரின் சாமர்த்தியமே! படத்திற்கு கிஷோர்தான் நாயகன் என பலமான யோசனைக்குப் பின்பே முடிவெடுத்திருக்கிறார்! கண்டிப்பாக வெற்றி பெற்றாக வேண்டிய தருணத்தில், அதிநாயகமாக்கம் இல்லாமல், பெரிய நாயகர்கள் இலாமல் கதையை நம்பி இறங்கியிருக்கும் முயற்சிக்கு பாராட்டுகள்! யூகி சேதுவின் பேச்சு, சிநேகாவின் விருப்பத்துக்கு கிஷோரின் மறுமொழி, கோச்சாக வரும் ராஜ்கபூரின் பேச்சு, இடத்தை விற்கச் சொல்லும் இடத்தில் கிஷோரின் முடிவு எனப் பல இடங்களில் இயக்குநர் பளிச்சிடுகின்றார்!

படத்தில் குறைகளோ, லாஜிக்கல் ஓட்டைகளோ இல்லாமலில்லை! மிக மெதுவான திரைக்கதை, முதல் 10 வருடங்களுக்கு வராமலிருந்த கிஷோரைத்தான் ஹீரோவாக நினைக்கும் மகன், எண்கவுண்டருக்கு மட்டுமே என ஒரு டீம், தேவையில்லாத குத்துப்பாட்டு, குழந்தைகளுக்கான(?) படமொன்றில் மிக அதிகமாக மதுவின் பயன்பாடு, குதிரையைப் பார்த்து ஓட ஆரம்பித்த உடனேயே ரன்னாரக்கும் முடிவு என வெவ்வேறு இருந்தாலும், ஒரு நல்ல சினிமாவைத் தந்ததற்காக அதையெல்லாம் விட்டுவிடலாம்!

பின்குறிப்பு: ஐநாக்சில் சின்னத் தியேட்டரிலேயே, குறைந்தது 50 சீட்டுகளேனும் காலியாக இருந்தது! ஏற்கனவே விஸ்வரூபம் ஊர் முழுக்க தியேட்டர்களை ஆக்கிரமித்தது போக மீதியுள்ளவற்றில் பெரும்பகுதி ஆதிபகவனுக்கே! பல இடங்களில் மிகக் குறைந்த தியேட்டர்களிலேயே படம் வெளிவந்துள்ளது! படம் சற்று நல்ல படமாக வேறு இருப்பதால், கமர்ஷியல் வெற்றியினை அறுதியிட்டுச் சொல்லிவிட முடியாது! ஆனாலும் பார்த்தவர்களின் மத்தியிலும், பதிவர்கள், ஊடகக்ங்கள் மத்தியிலும், நல்ல பெயரினை இந்தப் படம் எடுப்பது உறுதி!

நல்லப் படத்தை தவறவிடாதீர்கள்! ஆட்டிசத்தைப் பற்றிய விழிப்புணர்வு கண்டிப்பாக தேவையிருக்கும் சமயத்தில் இந்தப்படத்தைக் கொடுத்த இயக்குநர் மற்றும் படக்குழுவிற்கு பாராட்டுகள்

பிரிவுகள்:சினிமா

தமக்குத் தாமே வலையா???

படத்தைப் பார்க்காமலே தடை விதித்தார்கள் என்பது குற்றச்சாட்டாக இருந்தாலும், எனக்கென்னமோ மிகவும் முக்கியமான ஒரு விஷயத்தை யாரும் பேசவில்லை அல்லது தேவையனவர்கள் மட்டுமே கவனித்துக் கொள்கிறார்களோ என்பதே! மிக முக்கியமாக இஸ்லாம் அமைப்புகளே இந்த விஷயத்தைக் கவனிக்கவில்லை!

Image

  • ஊடகங்களில் எல்லாம் இஸ்லாமியர்களின் மனதைப் புண்படுத்தியிருக்கிறது என்றுதான் விவாதம் போகிறது அல்லது கருத்துச் சுதந்திரம் பற்றி பேசுகிறது! ஆனால் ஆரம்பத்திலிருந்தே அரசு இதனை சட்டம் ஒழுங்கோடு முடிச்சு போட்டு வருகிறது!
  • சொல்லி வைத்தாற் போன்று சில தியேட்டர்களில் வெடிகுண்டு மிரட்டல், பேனர் கிழிப்பு, சின்ன வன்முறை!
  • எல்லா இடங்களிலும் அமைதியாக ஓடும் படத்திற்கு இங்கு மட்டும் கலவரம் வருமென்று சொல்வதன் மூலம் யாரைக் கை காட்டுகிறது இந்த அரசு??? – இயல்பாய் அலுவலக நண்பர் ஒருவர் சொன்னது, பண்ணாலும் பண்ணுவாங்க, அமெரிக்க எம்பசியையே அடிச்சாங்கள்ல கொஞ்ச நாள் முன்னாடி. என்பதே…
  • ஆக பொது புத்தி மனப்பான்மையை சினிமாதான் விதைக்க வேண்டியதில்லை. அதைவிட எளிதாகவும், அழுத்தமாகவும் அரசு விதைக்க முடியும். அதற்கு எதிராக எப்படி போராடப் போகிறது, இந்த அமைப்புகள்?
  • கமலின் முந்தைய படங்களில் வரும் பல விஷயங்கள் விவாதத்திற்குரியது என்றாலும், இந்தப் பிரச்சினையில், வேறு மாநிலத்திற்குச் செல்கிறேன் என்ற வலி கலந்த வார்த்தைகளின் மூலமும், சொத்தை விற்றுதான் படம் எடுத்தேன் என்கிற உண்மையின் மூலமும், அனைவரது அனுதாபத்தையும் சம்பாதித்தது கமல் என்றால், ஏறக்குறைய பலரது கடுப்பை சம்பாதித்துக் கொண்டது இந்த இஸ்லாம் அமைப்புகள் மட்டுமே. ஆனால் அரசு எங்குமே சிக்கவில்லை! அல்லது செயல்கள் எங்குமே கேள்விக்குள்ளாகவில்லை! அரசியல் கட்சிகள் உட்பட அனைவருமே பேசி தீருங்கள் என்று நழுவலாகவே பேசுகிறார்கள்!
  • ஏனெனில், அரசின் பிரதிநிதிகளாக மக்கள் முன் தோன்றுவதும், இதே இஸ்லாம் அமைப்புகள்தான்! மிகப்பெரிய நகைமுரண், எந்த இஸ்லாமிய அடையாளங்கள் மக்கள் மனதில் ஒரு கருத்தை விதைக்கிறது என்று எதிர்ப்பு வருகிறதோதோ, அதே அடையாளங்களுடன் ஊடகங்களில் தோன்றி அரசின் சார்பில் பேசும் போது, கடுப்பு, அரசின் மேல் ஏற்படவில்லை. மாறாக, அமைப்புகளின் மேலேதான்…
  • இன்னொரு ஆச்சரியம், படம் சிலரைக் காயப்படுத்துகிறது என்றால், படத்தைப் பார்க்க வேண்டும், பின் கருத்து சொல்லலாம் என்று பேசலாம்! ஆனால் சட்டம் ஒழுங்கு என்று வாதத்தை அரசு வைக்குமானால், அதுவும் நடு ராத்திரியில் போய் தடை வாங்கக்கூடிய அளவுக்கு சமூக அக்கறை அரசிற்கு இருக்குமானால், படம் பார்க்கும் தேவையை விட, வெளிச்சூழலையும், அதற்கு காரணமாக யார் அல்லது எது இருக்க முடியும் என்ற திசையில்தானே வாதம் போக வேண்டும்? மாறாக அப்படிப் போகவில்லை என்பதன் காரணம் என்ன? கொலைக்கான குற்றத்தை, கொலையை நேரில் பார்த்தால்தான் தண்டனை வழங்க முடியுமா என்ன???
  • என் எண்ணமெல்லாம், யாருக்கோ விரித்த வலையில் மாட்டுவதென்பது வேறு! ஆனால் தனக்குத்தானே வலை விரித்துக் கொள்வதென்பது வேறு! அப்படித்தான் அமைப்புகள் மாட்டிக் கொண்டனவா???
பிரிவுகள்:அரசியல், சினிமா

காட்சிகள் மாறுதடா!

சரியோ தவறோ, அம்மையார் எதையும் தைரியாமாகச் செய்வார், பூசி மெழுக மாட்டார், என்பதெல்லாம் அவருடைய நிர்வாகத் திறமைக்கு உதாரணமாகச் சொல்லப்படும் வார்த்தைகள்!

சட்டமன்றம் சரியில்லை, நூலகம் இடமாற்றம் போன்ற செயல்களின் போதே இந்த வார்த்தைகளைச் சொன்னவர்கள் சப்பைக் கட்டு கட்ட வேண்டியதன் அவசியம் வந்தது! இருப்பினும் இதுவே தைரியத்தின் வெளிப்பாடுதான் என்றெல்லாம் சமளிக்க முடிந்தது…

Image

ஆனால், எல்லா இடங்களிலும் அமைதியாக ஒடும் ஒரு படத்திற்கு, தமிழ்நாட்டில் மட்டும் சட்டம் ஒழுங்கு பாதிக்கபடும் என்று தொடர்ந்து ஒரு அரசே சொல்லி வருவது, அதுவும் படத்தைப் பார்க்காமலேயே சொல்லி வருவது, அதன் இயலாமையா, அரசியல் பிண்ணனியா, அல்லது யார்ருக்காக போராடுவதாகச் சொல்கிறார்களோ அவர்களைப் பற்றியே ஒரு தவறான பிம்பத்தை ஏற்படுத்தும் முயற்சியா??? நரேந்திர மோடியை வரவழைத்த அரசுதான், சிறும்பான்மை மக்களின் உணர்வுகளைப் புரிந்து நடந்துகொள்வதாக அமைப்புகளின் தலைவர்களே சிலாகிப்பது….

டாவின்சி கோட் படத்தை தடை செய்தபோது கூட, சிறும்பான்மை மக்களின் உணர்வு பாதிக்கப்படும் என்று சொல்லிய திமுக அரசை விமர்சனம் செய்தவர்கள் யாரும் இதற்கு அதிமுகவை விமர்சனம் செய்யவில்லை??? ஜிகே வாசன், சீமான் உட்பட பலரும், கமலை அமைப்புகளுடனும், அரசுடனும் பேச்சுவார்த்தை நடத்தச் சொல்கிறார்கள்!
போலி பகுத்தறிவுவாதிகள் இந்துக்களை மட்டும் விமர்சிக்கிறார்கள் என்ற கருத்துக்களைப் போலே, போலி புரட்சியாளர்களும் திமுகவை மட்டுமே விமர்சிக்கிறார்கள் என்பதும் வலுப்பெறும்!
யாருக்காக டிடிஎச் ஒளிபரப்பில் மாற்றம் செய்தாரோ, அந்த தியேட்டம் உரிமையாளர்கள் கடைசி தீர்ப்பு வரை காத்திருக்கித் தயார் என்று சொல்வதும், 50 வருடம் தமிழ் சினிமாவில் இருந்தவர் என்று ஒட்டு மொத்த திரையுலகமும் பாரட்டு விழா நடத்திய தங்கள் சக கலைஞனுக்கு பிரச்சினை எனும்போது வெளிப்படையாக ஆதரவு தெரிவிக்காத திரையுலகத்தின் நிலையும், போயும் போயும் இவர்களையெல்லாம் நம்பி, அதே விழாவில் கமல் சமத்துவம் நிகழும் உலகம் என்று புகழ்ந்தது பரிதாபத்தையே வரவழைக்கிறது!!!
எல்லாவற்றுக்கும் மேலாக இது வெறுமனே கருத்து சுதந்திரத்திற்கும், குறிப்பிட்ட மதத்தினரின் உணர்வுக்கும் மட்டுமேயான போராட்டம் என்று கட்டும் சப்பைக்கட்டுகள் பதிவின் முதல் வரியைப் பார்த்து கெக்கலிக்கிறது!!!
பிரிவுகள்:அரசியல், சினிமா

ஆபாவாணன் – ஒரு பன்முகக் கலைஞன்

90 களில் நடந்த சம்பவம் இது. வெறும் பள்ளி ஆண்டு விழாதான் அது. வருடா வருடம் நடக்கும் விழாவைப் போலவே, அந்த வருடமும் எம் பள்ளியில் அந்த விழா கொண்டாடப்பட்டது. ஆனாலும் அந்த வருடம் மட்டும் கட்டுக்கடங்கா கூட்டம் பள்ளி வளாகத்தில். பெற்றோருக்கும், மக்களுக்கும் அனுமதி தரும் விழா அது ஒன்றுதான் என்றாலும், இந்த முறை இந்தளவு கூட்டம் என்பது அனைவரையும் சற்றே ஆச்சரியப்படுத்தினாலும், ஓரளவு அதை முன்னரே ஊகித்து வைத்திருந்தனர் எம் பள்ளியில். சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டவர், அப்பள்ளியின் முன்னாள் மாணவர்தான் என்றாலும், அவருடைய அப்போதைய நிலை பொதுமக்களின் ஆர்வத்திற்கு பெரிதும் காரணமாக இருந்ததுமில்லாமல், வழமையாக கலை நிகழ்ச்சி முடிந்தவுடன் கலைந்து விடும் கூட்டம், அன்று விழா முடியும் வரையும் இருந்து, அந்த சிறப்பு விருந்தினரை கண்டு பேசி, ஆட்டோகிராஃப் வாங்கிக் கொண்டு சென்றது. விருந்தினர் சினிமாத் துறையைச் சேர்ந்தவர் என்ற ஒற்றைக் காரணமே, மக்களின் கவனத்தை இழுக்கும் எனும் போது, இவருடைய சில படங்கள் மாபெரும் வெற்றியடைந்தது மட்டுமில்லாமல், திரைத்துறையில் ஒரு அலையையும் கிளப்பி விட்டது எனில், மக்களின் ஆர்வத்திற்குச் சொல்லவா வேண்டும்??? அந்தப் பள்ளியின் பெயர்: நிர்மலா மேல்நிலைப் பள்ளி, கொளத்தூர், சேலம் மாவட்டம். அந்த சிறப்பு விருந்தினரின் பெயர்: ஆபாவாணன்

80 களின் பிற்பகுதி அது. தமிழ் சினிமாவின் பொற்காலமாகக் கருதப்படும் 70 மற்றும் 80களின் ஆரம்பத்தில் பாலச்சந்தர், பாரதிராஜா, பாலுமகேந்திரா, பாக்கியராஜ் ஆகியோரிடமிருந்து மிகச் சிறந்த கலை(தை)யம்சமுள்ள படங்கள் வெளியாகிக் கொண்டிருந்தன. கமர்ஷியங்கள் படங்களா, கலைப்படங்களா எனத் தன் பாதையை தேர்ந்தெடுப்பதற்கு கமலும் கூட சற்று திணறும் வகையில் ராஜ பார்வை, சகலகலா வல்லவன், மூன்றாம் பிறை என்று எல்லாம் கலந்து படங்கள் வந்து கொண்டிந்தன. ரஜினியும் கூட பாயும் புலி, தாய் வீடு போன்ற கமர்ஷியல் படங்களில் நடித்து வந்தாலும், நெற்றிக்கண், புதுக்கவிதை போன்ற சற்றே வித்தியாசமான படங்களிலும் நடித்து வந்தார்… அந்தக் காலக்கட்டத்தில் நடை பெற்ற மிக முக்கியமான அறிமுகங்கள் என்றால் பாண்டியராஜன் (இயக்குநராக), தொடந்து சட்டம் சம்பந்தமான திரைப்படங்களையே கொடுத்துக் கொண்டிருந்த எஸ்.ஏ. சந்திரசேகர், அவரது பெரும்பான்மை படங்களின் நாயகனான விஜயகாந்த் (முன்பே அறிமுகமாகி இருந்தாலும், இயக்குநர்களும், ரஜினி, கமல் ஆகியோர் ஆக்கிரமித்திருந்த அந்த காலகட்டத்தை நன்றாகவே தாக்குபிடித்தார்) ஆவர். ஆனாலும் இவர்கள் எல்லாவற்றையும் தூக்கிச் சாப்பிடும் மிக முக்கிய அறிமுகம் மைக் மோகனும். ஜெயமாலினியும்தான் 🙂

ஆரம்பத்தில் கலை, பின்பு மெல்ல மெல்ல கமர்ஷியல் என ட்ரெண்ட் மெல்ல மாறினாலும் 86 ல்தான் அந்த பெரியதொரு அலை உருவானது. புதிய தொழில்நுட்ப அலையாக மட்டுமல்லாமல், அதுவரை ஆங்கிலப்படங்களில் மட்டுமே கண்டுவந்த ஒரு அனுபவத்தை தமிழ் சினிமாவில், ரசிகர்களுக்கு ஒரு திரைப்படம் கொடுத்தது மட்டுமல்லாமல், ஓரளவு தாக்குப்பிடித்து வந்த விஜயகாந்திற்கு தனது பாணி என்ன என்பதையும் புரியவைத்தது மட்டுமில்லாமல், அதுவரை மக்கள் அதிகம் அறிந்திருக்காத திரைப்படக் கல்லூரியின் முகவரியையும் அனைவரிடமும் கொண்டு போய் சேர்த்தது அந்தத் திரைப்படம். அதன் பெயர் “ஊமை விழிகள்”. வெறும் கதையில் மட்டுமல்ல, காட்சியமைப்பிலும் சரி, பாடல் வரிகளிலும் சரி, இசையிலும் சரி என எல்லாவற்றிலும் புதியதொரு உணர்வுகளை பரப்பியது ஊமை விழிகள். விஜயகாந்த், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், கார்த்திக், சந்திரசேகர், சரிதா, அருண் பாண்டியன் என ஒரே ஸ்டார் பட்டாளமாக இருந்தாலும், ரவிச்சந்திரன் முதற்கொண்டு அனைவருக்குமே ஒரு பேர் சொல்லும் படமாகவே அது அமைந்தது. தனது முதல் படத்திலேயே, மிக வித்தியாசமாக மட்டுமின்றி, மிக தைரியமான ஒரு படத்தைக் கொடுத்த ஆபாவாணன் என்ற பெயர் தமிழக மக்களிடையே மிக ஆர்வமாக பார்க்கப்பட்டது.

மைக் மோகனின் படங்களின் மூலம் இசைஞானி கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்த ஒரு காலகட்டத்தில், இந்தப்படத்தின் இசையமைப்பாளர்கள் மட்டுமல்ல, இசையும் கூட மிகப் புதிதாய் இருந்தது மக்களுக்கு. அதுவும் ”தோல்வி நிலையென நினைத்தால்” பாடல் ஏற்படுத்திய அதிர்வுகள் தமிழகத்தில் மட்டுமல்ல, ஈழத்திலும் கேட்டது. இத்திரைப்படத்தின் வெற்றிதான் பின்னாட்களில் ஆர்.கே செல்வமணி, ஆர்.வி. உதயகுமார் முதற்கொண்டு பல திரைபடக் கல்லூரி மாணவர்கள் தமிழ் சினிமாவில் கால்பதிக்க காரணமாய் அமைந்தது.

அந்தக் காலகட்டத்தில் வந்த மிக முக்கியமான இந்தத் திரைப்படத்திற்குப் பின்பு ஆபாவாணன் மூலமாக வந்த வெற்றிப்படங்கள் பல இருந்தாலும், முதல் படத்திற்கு இணையான அதிர்வை மற்ற படங்கள் ஏற்படுத்தவில்லை என்றே சொல்லலாம். ஆனாலும், ஏறக்குறைய முதற்படத்திற்கு இணையான ஸ்டார் பட்டாளத்தைக் கொண்டு அவர் கதை மற்றும் தயாரிப்பில் வெளிவந்த இன்னொரு மிகப் பெரிய வெற்றிப் படம் ’செந்தூரப் பூவே’. தொழில்நுட்பத்திலும், கதைக்களனிலும் ஏதாவாது வித்தியாசமாகவே முயற்சி செய்யும் ஆபாவாணன், இந்தப்படத்தில் சிறப்பு சப்தங்களை (ஸ்பெஷல் எஃபக்ட்ஸ்) இணைக்க மிகவும் மெனக்கெட்டிருக்கிறார். படத்தில் வரும் தொடர்வண்டி காட்சிகளில் சிறப்பு சப்தங்களைக் கொடுக்க செண்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில் வரும் போது ஏற்படும் சத்தத்தை பதிவு செய்து இந்தப் படத்தில் பயன்படுத்தினார். இது போன்ற முயற்சிகள்தான் தமிழ் திரை உலகம் சிறப்பு சப்தங்களுக்கு கூடுதல் கவனம் செலுத்த காரணமாய் அமைந்தது. ஏன், சவுண்ட் ரெக்கார்டிஸ்ட் என்ற ஒருவரை அதிகம் தமிழ் படங்களில் பயன்படுத்த ஆரம்பித்ததே ஆபாவாணனுக்கு பிறகுதான்.

செந்தூரப்பூவே படத்தை பார்த்த, அப்போது இயக்குநராகியிராத ராம்கோபால் வர்மா இவரை சந்தித்து தொழில் நுட்ப விஷயங்கள் பெரிதும் கவர்ந்ததாக சிலாகித்ததோடு இல்லாமல் தெலுங்கில் இதனை டப் செய்தால் மிகப் பெரும் வெற்றியடையும் என்று அன்னபூர்ணா ஸ்டூடியோவில் சொல்லியிருக்கிறார். அவர்கள் முடியாது என மறுத்தாலும், வேறொரு தயாரிப்பாளர் அதனை டப் செய்து வெளியிட்டு தெலுங்கில் மிகப் பெரிய ஹிட் (200 நாட்களுக்கும் மேல்) ஆனது படம். படத்தின் வெற்றியை தெளிவாக ஊகிக்க முடிந்ததாலேயே, ராம்கோபால் வர்மாவிற்கு முதல் படத்தை இயக்கும் வாய்ப்பை அதே அன்னபூர்ணா ஸ்டூடியோ வாய்ப்பு கொடுத்தனர். அப்படி அவர்கள் கொடுத்த படம்தான் ‘சிவா’.

இரண்டு படங்களில் இருக்கும் ஸ்டார் பட்டாளங்களுக்கு, படம் வெற்றியடைந்ததில் பெரிய ஆச்சரியமில்லாமல் போகலாம். ஆனால் ஸ்டார் வேல்யூ இல்லாத நடிகர் நடிகைகளை கொண்டு அவர் கொடுத்த படம்தான் ‘இணைந்த கைகள்’. இன்றளவும் எனக்கு மிகப் பிடித்த படமாக இது இருக்கிறது. சிறுவயதில் முதன் முதலில் இந்தப்படத்தைப் பார்த்த போது அதிகம் பார்த்தறியாத ஆங்கிலப்படங்களுக்கு இணையாக அதன் காட்சிகள் இருந்தது அதன் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்திருக்கலாம். மும்பை ட்ரைவ் இன் தியேட்டரில் இந்தப்படம் வெளியான போது ஏற்பட்ட தள்ளு முள்ளு, அந்தத் தியேட்டரையே மூடும் நிலையை உண்டாக்கியது. கோவை சாந்தி தியேட்டரில் இந்தத் திரைப்படம் வெளியான போது ஏற்பட்ட நெரிசலில் இரண்டு பேர் உயிரிழந்த சம்பவமும் நடந்தது. இந்தப் படத்தியில் ஆபாவாணன் பெயர் டைட்டிலில் வரும்பொழுது ரசிகர்கள் சில்லறை காசுகளை வீசி ஆர்பரித்தனர். அந்தளவிற்கு ஒரு பெருமையை சம்பாதித்திருந்தார். இந்தப்படத்தில் வரும் பாகிஸ்தான் சிறைச்சாலை காட்சிகள் தமிழ் ரசிகர்களுக்கு ஆச்சரியம் கலந்த புது உணர்வினை உண்டாக்கின. வெளிநாடுகளில் ஒரே நேரத்தில் ஒரு தமிழ்படத்தை வெளியிடுவது இந்தப்படத்தின் வெற்றியின் மூலமே ஆரம்பிக்கப்பட்டது. இந்தப்படத்தின் பிண்ணனி இசைக்கு இந்தக் குழு செலவிட்ட 40 நாட்களை தமிழ் திரையே அப்போது ஆச்சரியமாக பார்த்தது.

எல்லாவற்றிற்கும் மேலாக இவரது ஆதர்சன நாயகனாக கருதப்பட்ட அருண்பாண்டியன் படித்ததும் அதே எம் நிர்மலா மேல்நிலைப் பள்ளி என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அது கூட அவர்களுக்குள் ஒரு பிணைப்பு ஏற்பட மிக முக்கியக் காரணமாக இருக்கக் கூடும்…

இவருடைய பங்களிப்பில் வந்த மற்ற சில படங்கள் தாய் நாடு, உழவன் மகன், முற்றுகை, காவியத் தலைவன், கருப்பு ரோஜா. இது இல்லாமல் கங்கா யமுனா சரசுவதி என்ற நெடுந்தொடரையும் தந்திருக்கிறார். ஏற்கனவே ஸ்பெஷல் எஃபக்ட்ஸ், சவுண்ட் ரெக்கார்டிஸ்டின் முக்கியத்துவத்தை உணர்த்திய ஆபாவாணனால், கருப்பு ரோஜாவில் அறிமுகப்படுத்தப்பட்ட, டிடிஎஸ் ஒலி நுட்பம் தமிழ் சினிமாவில் இன்று முக்கிய பங்கு வகிக்கிறது. படம் உண்மையில் ஒரு தோல்வியே என்றாலும், ப்ளாக் மேஜிக்கை மையமாக வைத்து வெளிவந்த படம் எனக்குத் தெரிந்து இதுதான். வெளி வரும் படங்களும் ஒன்று ஜமீன் கோட்டை வகையறாவாக இருக்கிறது அல்லது பேய் படங்களாக இருக்கிரது. கதாநாயகி ஆரம்பத்திலேயே இறந்து விட, மிக வித்தியாசமான கதை மாந்தர்களோடு, ஸ்டார் வேல்யூ இல்லாத நாயகனோடு, முழுக்க முழுக்க ஒரு பெண் கதாபாத்திரத்தை மையப்படுத்தி இது போன்றதொரு படம் எடுக்க உண்மையிலேயே ஒரு துணிவு வேண்டும்….

தான் பள்ளியில் படிக்கும் போதே ’சித்திரக் குள்ளர்கள்’ என்ற நூலை எழுதி சொந்தமாக பதிப்பித்து விற்ற ஆபாவாணன், தமிழ் சினிமாவில் சினிமாஸ்கோப் என்ற தொழில் நுட்பம் உருவாகி வளர்வதில் பெரும் பங்கு வகித்தார்.

கதை, இயக்கம், திரைக்கதை என பல தளங்களில் சிறந்திருந்த இவர் இசையையும் விட்டுவைக்கவில்லை. தனக்குப் பிடித்த மெட்டுக்களை கொடுத்து விட்டு மிக நல்ல பாடல்களை இசையமைப்பாளர்கள் (பெரும்பாலும் மனோஜ் கியான்) மூலம் உருவாக்கிக் கொடுத்த ஆபாவாணன் பெயரை சில இடங்களில் இசை உதவி என்ற இடத்தில் பார்த்திருக்கலாம். இசை உதவி என்றிருந்தாலும், இவரது திறன் பார்த்து இசைஞானியே கேப்டனிடம், அவருக்கு நன்றாக இசையமைக்க வருகிறது, தனியாக இசையமைக்கச் சொல்லுங்கள் என்று சொல்லியிருந்திருக்கிறார். தவிர, நான் அதிகம் தியேட்டருக்கு சென்று படம் பார்த்ததில்லை, ஆனால் இந்தப்படத்தின் பிண்ணனி இசைக்காக நான்கு முறை சென்று பார்த்திருக்கிறேன் என இவரது இணைந்த கைகள் படத்தைப் பார்த்துவிட்டு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர். ரகுமான் வியந்திருக்கிறார். ஆபாவாணனின் இசையமைப்பில் பங்கேற்ற சில நபர்களின் பெயர்கள் ஹாரிஸ் ஜெயராஜ், வித்யாசாகர், தினா, சபேஷ் – முரளி (எங்கியோ கேட்ட மாதிரி இருக்குல்ல?). ஒரு சமயத்தில் இவருக்கு 44 படங்களுக்கு இசையமைக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இருந்தாலும் தொடர் பணி காரணமாக இசையமைக்கவில்லை.
பள்ளியிலேயே சொந்தமாக நாடகங்களை எழுதி அரங்கேற்றிய ஆபாவாணன், இசையமைப்பில் பங்கேற்றதுமில்லாமல் பல பாடல்களை எழுதியதுமில்லாமல், சில பாடல்களை பாடியுமிருந்திருக்கிறார்.. மனம் சோர்ந்து கிடக்கும் போதோ, வெறுமையாக உணரும் போதோ, அவர் எழுதிய அந்தப்பாடலைக் கேளுங்கள். மனதில் புது உற்சாகம் பிறக்கும். இந்த சக்தி உணரப்பட்டதால்தானோ என்னமோ, ஈழத்தில் இந்தப் பாடல் மக்களால் பெரிதும் விரும்பப்பட்டது. அந்தப் பாடல்…

நீண்ட இடைவேளைக்குப் பிறகு பி.பி. ஸ்ரீனிவாசை வைத்து பாடிய இந்தப் பாடலில் அனைவரும் சேர்ந்து பாடும் தருணத்தை ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் என் உடல் சிலிர்க்கும். இதே போன்று நீண்ட இடைவேளைக்கு டிஎம்எஸை வைத்து தாய்நாடு படத்தில் எல்லா பாடல்களையும் பாடவைத்தாரென்றாலும், அதே போராட்ட உணர்வை மையப்படுத்தி எழுதிய பாடல், http://www.inbaminge.com/t/t/Thai%20Naadu/Naan%20Muthan%20Muthal.vid.html

சிறுவயதில் எனக்குத் தெரிந்து எல்லா பள்ளி கல்லூரி மேடைகளிலும் இரு பாடல்கள் எப்பொழுதும் நடனத்திற்கு தயாராக இருக்கும். எப்பொழுதும் பெண்களின் நடனத்திற்காகவே எழுதப்பட்டதாக தோன்றும் அந்தப் பாடல்கள் ’பூ பூக்கும் மாசம் தை மாசம்’ மற்றும் ’சின்னச் சின்ன வண்ணக் குயில்’. இதற்கடுத்து ஓரளவு அந்த இடத்தைப் பிடித்தது, அதுவும் ஆண்களால் அதிகம் விரும்பப்பட்டது ’சிக்கு சிக்கு புக்கு ரெயிலே’ தான். இதே வரிசையில் எல்லா பள்ளி, கல்லூரி மேடைகள் மட்டுமல்ல, எல்லா தொலைக்காட்சி சான்ல்களின் போட்டியிலும் தவறாமல் பங்கேற்கும் ஒரு பாடல் இவர் பாடியதுதான். கேட்டுப்பாருங்கள், உங்களுக்கு ஏற்கனவே பிடித்த பாடலாக இது இருக்கும். http://www.inbaminge.com/t/r/Rendu%20Per/Varan%20Varan.eng.html

இவர் இயக்கமாக இல்லாவிட்டாலும், இவருடைய சிஷ்யரின் இயக்கத்தில் வெளிவந்த தம்பி அர்ஜூனா படத்தில் வரும் ஒரு பாடலையும் இவர் பாடியிருக்கிறார். எப்படி ’தோல்விநிலையென நினைத்தால் பாடல்’ போராளிகளுக்காவே எழுதப்பட்டது என்ற செய்தி வந்ததோ, அதே போன்று இந்தப் பாடலும் புலிகளை மையப்படுத்தி எழுதியதாகவே நினைக்கத் தோன்றுகிறது. கேட்டுப்பாருங்கள்.
http://www.inbaminge.com/t/t/Thambi%20Arjuna/Puligal%20Konjam%20ii.eng.html

ஒரு அலையை உருவாக்கிய இந்த திறமைசாலியின் ஆரம்பமும் தற்போதைய நிலையும் ஏறக்குறைய ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது. முதன் முதலில் இவர் தர விரும்பிய படம் ‘இரவுப்பாடகன்’ ஆனால் அது வெளிவரவே இல்லை. இதே போல் விஜயகாந்தை வைத்து இவர் தர நினைத்த மூங்கில் கோட்டையும் வெளிவரவே இல்லை. இறுதியாக இவர் தர நினைத்த ’இரண்டு பேர்’ திரைப்படமும் வெளிவராமலே போய்விட்டது. வித்தியாசமாகவே தர நினைத்தாலும் சில பெரிய பட்ஜெட் படங்கள் தோல்வியடைந்ததால் பெரிய நட்டத்தினை அடைந்தார். இறுதியாக இவர் பங்களிப்பில் வெளி வந்தது கங்கா யமுனா சரசுவதி நெடுந்தொடரே. எனக்குத் தெரிந்து பாலச்சந்தரின் நாடகத்திற்குப் பின்பு, சன் டிவி நெடுந்தொடரில் காலோச்சிய காலத்தில் ராஜ் டிவியில் வந்து ஓரளவு வெற்றியடைந்த தொடரும் அது ஒன்றே! இவருடையது மட்டுமல்ல, ஒரு காலத்தில் இவரால் அறிமுகப்படுத்தப்பட்ட திரைப்படக் கல்லூரி மாணவர்களின் பங்களிப்பும் கூட ஏனோ இப்பொழுது இல்லாமலே போய்விட்டது. கொடுத்ததில் பாதி வெற்றிப்படங்கள், பாதி தோல்வியாக இருந்தாலும், தன் படங்களின் மூலம் ஏற்படுத்திய, அதிர்வுகளையோ, அதில் தொனித்த வித்தியாசங்களையோ, பிண்ணனியிலுள்ள திறமை கலந்த உழைப்பையோ எளிதில் புறந்தள்ளிவிடமுடியாது….

பிரிவுகள்:சினிமா குறிச்சொற்கள்:

அங்காடித் தெரு – திரைப் பார்வை

திரைப்படம் என்பது வெறும் பொழுது போக்கு சாதனம் மட்டும் அல்ல. நம் திரைப்படங்கள் சற்றே தரத்துடனும், பன்முகத் தன்மையும் கொண்டிருக்க வேண்டும் என்ற அங்கலாய்ப்போ, விருப்பமோ கொண்டிருப்பவர்களா நீங்கள்??? அப்படியெனில் எந்த ஒரு விமர்சனத்தையும், விளம்பரக் காட்சிகளையும் கவனிக்காமல் தைரியமாக அங்காடித் தெரு படத்திற்குச் செல்லுங்கள்!!! ஏனெனில், மிகப் புதிதாய் படத்தின் காட்சிகளைக் காணும் போது ஏற்படு(த்து)ம் அதிர்வுகள் வார்த்தைகளில் விவரிக்க முடியாதவை!!!

************************************************************************************************************

இவர்கள், தான் படித்துக் கொண்டிருந்தாலும், தன்னுடைய அடுத்த வேளை சோற்றுக்கு தந்தையை எதிர்பார்த்திருந்து காத்திருந்தாலும், பார்த்தவுடன் ஏற்பட்டு விடும் காதலுக்காக 50 ரவுடிகளை அடித்து துவைக்கக் கூடிய மாவீரர்கள் இல்லை!!! சமூகத்தில் புரையோடிப் போன அக்கிரமங்களைக் கண்டு வெகுண்டு, வில்லினின்று புறப்பட்ட அம்பாக ஓரிரு வாரங்களில் எல்லா ரவுடிகளையும், அரசியல்வாதிகளையும் தீர்த்து சொர்க்க பூமியைப் படைக்கும் பராக்கிரமசாலிகளும் இல்லை!!! ஆனால் இவர்கள் நாயக, நாயகியர்கள்!!!

இவர்களுக்கு வாழ்வில் பெரிய குறிக்கோள்கள் இல்லை, வாழ்வதைத் தவிர! வாழ்வின் அழகியலைப் ப(டி)டைக்க காதலன், காதலி அழகாக இருக்க வேண்டும் என்று எண்ணுபவர்கள் இல்லை, அந்தக் காதல் மட்டும் அழகாக இருக்க வேண்டும் என்று எண்ணுபவர்கள்!!! சிறுவயதில் நமக்குச் சொல்லிக் கொடுக்கப்படும் மனிதனின் அடிப்படைத் தேவைகள் எவை என்ற கேள்விக்கான விடை தேடலிலேயே தம் வாழ்வின் பெரும்பகுதியைச் செலவு செய்பவர்கள்!!! இத்தனைக்கும் நடுவில் இவர்கள் மகிழ்ச்சியைக் காண்பவர்கள்!!! இவர்களே நாயகர்கள்!!!

சற்றே நிறைவான சம்பளமோ, கட்டமைக்கப்பட்ட ஏட்டுக் கல்வியோ, ஏதோ ஒன்றின் காரணமாக நம்மால் சற்றே அசுவாரசியத்துடனோ, சிலரால் முகச் சுளிப்புடனோ எளிதில் கடந்து செல்ல முடிகின்ற அல்லது கவனிக்க மறுத்த கடை நிலை மக்களைப் பற்றிய பதிவு இது!!! சினிமா என்பது வெறுமனே வண்ணக் கனவுகளை உருவாக்குபவையோ அல்லது நம்முடைய கற்பனையையோ, நம்மால் கற்பனை கூட செய்ய முடியாத காட்சிகளைக் கூடவோ நம் கண் கொண்டு வருபவை மட்டும் அல்ல!!! சில மற(றை)க்கப்படுகின்ற உண்மைகளை, உண்மைகளாகவே காட்டவேண்டுபவையும் கூட என்பதை உணர்த்தும் படம்!!! புறக்கணிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை முறையை, உணர்வை மிக அழகாக வெளிப்படுத்தியுள்ள படம்!!! முகத்திற்கு நேரெதிராக நின்று பளீரென்று அறைகின்ற உண்மையின் வெப்பம் இவ்வளவு சூடாகத்தான் இருக்கும் போல!!!

அங்காடித் தெரு

படத்தின் கதையென்று ஒன்று தனியாக இருந்தாலும், அனாயசமாக, போகிற போக்கில் வரும் காட்சிகள் வெளிப்படுத்தும் க(வி)தைகள் பல!!! காதலாக, ஒருவர் காலினை ஒருவர் மிதித்து விளையாடும் காட்சியில் ஆரம்பித்து, அதே காதலாக, கால் போன பின் வாழும் வாழ்க்கையில் முடிகிறது திரைப்படம்!!! படத்தில் எங்கும் எதற்கும் தீர்வினைச் சொல்லிவிடவில்லை இயக்குநர்!!! உன்னுடைய ஊரின் முழு உருவம் எது என்று நீ பார்த்துக் கொள் என்று காட்டியிருக்கிறார், அவ்வளவே!!! சென்னையை மட்டும் முன்னிருத்தி இதுதான் தமிழகம் என்று பழகிப் போன மனதிற்கு தெற்கு மாவட்டங்களின் வாழ்க்கையை நமக்கு காண்பித்திருக்கிறார்!!!

அஞ்சலி, பாண்டி தவிர மற்ற அனைவரும் புதுமுகங்கள்(?)! ஒட்டுமொத்தமாக எல்லாரும் வாழ்ந்திருக்கிறார்கள், ஒரிரு காட்சிகளில் மட்டும் வந்தாலும் சரி, படம் நெடுக வந்தாலும் சரி!!! அத்தனை பேரையும் மீறி அஞ்சலியின் நடிப்பு!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

நாமல்லாம் வாழுறதுக்கே யோசிக்கனும், விக்கத்தெரிஞ்சவன் வாழத்தெரிஞ்சவன், இங்க சிலருக்கு கையில்ல, காலில்ல ஆனா எல்லாருக்கும் வாயும், வயிறும் இருக்கு, இருட்டு குடவுனிலிருந்து ஏசி ஹாலுக்கு செல்வது ’ப்ரமோஷன்’ என சொல்வது என பல இடங்களில் போகிற போக்கில் சொல்லும் வசனங்கள், கருத்துக்கள் மிக அருமை!!! பெரும்பாலும் வேதனைகளை பதிவு செய்திருந்தாலும், ஆங்காங்கு வெளிப்படும் மனிதம், மகிழ்வான தருணங்கள் எல்லாம் வாழ்வில் நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.

படத்தில் குறைகள் இல்லாமலில்லை. இரண்டாம் பாதியில் ஏற்படும் தொய்வு, சற்றே அதிகப்படியான பாடல்கள், எடிட்டிங் என்று பல இருந்தாலும் ஒட்டுமொத்தப் படைப்பின் முன் அவை ஒன்றும் இல்லாமல் போய்விடுகின்றன!!!

மிகச் சாதாரணமாக நமக்கு காட்டிவிட்டாலும், இந்தக் கூட்டத்திற்கு நடுவில் காட்சிகளை எப்படி எடுத்திருக்க முடியும் என்ற சந்தேகமும் அதற்காக ஒட்டு மொத்தக் குழுவும் எந்த அளவு உழைத்திருக்கும் என்ற எண்ணமும் ஏற்படுத்தும் பிரமிப்பு கொஞ்ச நஞ்சமன்று!!! ஒளிப்பதிவு, இசை, நடிகர் நடிகையர்கள் தேர்வு, வசனம் என பல்துறையும் மிக்க் கடுமையாக உழைத்திருப்பதை உணர முடிகிறது. ஒட்டு மொத்தக் குழுவிற்கும் மிகப் பெரிய வணக்கங்கள்!!!

படம் என்னைப் பல விதங்களில் பாதித்திருக்கிறது…

·         முன்பு போல அந்தக் கடைக்கு மனுஷன் போவ முடியாது, கஸ்டமர்சை மதிக்கவே மாட்டாங்க, சேல்ஸ்ம்மேனுங்க என்று முன்பு போல சொல்ல முடிவதில்லை…

·         ரங்கநாதன் தெரு போன்ற தெருக்களை சற்றே வித்தியாசமாக பார்க்க வைத்திருக்கிறது…

·         படத்தை மறுபடி பார்க்க வேண்டும் என்ற உந்துதலுக்கும், ஏன் பார்த்தோம் என்ற நிம்மதியின்மைக்கும் இடையே சிக்கி தவிக்க வைத்திருக்கிறது!!!

பிடித்திருக்கு, பிடிக்கவில்லை, கமர்சியல் வெற்றி, தோல்வி என்பதையெல்லாம் தாண்டி, படத்தின் ஒருகாட்சியாவது பார்ப்பவர் மனதில் மெல்லிய சலனத்தையாவது ஏற்படுத்தாமல் விட்டுவிடாது!!! என்னுடைய ஒரே விருப்பம் இது சரவணா ஸ்டோர் போன்ற ஒற்றை அல்லது சில கடைகளில் மட்டுமோ அல்லது, அண்ணாச்சி போன்ற ஒற்றை மனிதர்களின் குரூரம் மட்டுமோ இல்லை. இந்தக் கட்டமைப்பின் பின்னே அரசு எந்திரம், அரசியல்வாதிகள், அதிகாரிகள், சமூகம், முதலாளிகள் ஏன் சில தொழிலாளிகள் என எல்லாரும் தெரிந்தோ, தெரியாமலோ காரணமாய் இருக்கிறார்கள் என்பதை சரியாகப் புரிந்து கொள்ளவேண்டும் என்பதே!!!

அசாமுக்கு வேலைக்கு செல்லும் சிறு பெண்ணின் தைரியம், அண்ணன் வேலை பார்க்கும் கடையின் பையை சாமி ஃபோட்டோவிற்கு அருகே மாட்டியிருப்பது, பாலியல் தொந்தரவுக்கிற்கு உள்ளானதற்கு அப்புறம் மிகச் சாதாரணமாக துணி விற்பனையில் ஈடுபடும் நாயகி என அதிர்வுகளை ஏற்படுத்தும் காட்சிகளைச் சொல்ல ஆரம்பித்தால் ஏறக்குறைய முக்கால் படத்தை சொல்ல வேண்டியிருக்கும்!!!

வசந்தபாலன் சார், தலைவணங்குகிறேன். உங்களுக்கு என் வணக்கங்களும் மரியாதைகளும்!!!

பிரிவுகள்:சினிமா குறிச்சொற்கள்:

தமிழ்ப் பட(ங்களின்)த்தின் அராஜகம் – திரைப் பார்வை

முன்பெல்லாம் ஒரு படம் பார்க்க விரும்பினால் அதைப் பற்றிய விமர்சனத்தை வலைப்பதிவுல படிச்சிட்டு அதுக்கப்புறம் போய் பார்ப்பதுதான் வழக்கம். ஆனா, இப்பவோ, ஒரு படம் பாக்க நினைச்சிட்டா அதுவரைக்கும் வலைப்பதிவுக்குள்ள எட்டிபாக்காம இருக்கனும் போல இருக்கு!!! ஜேம்ஸ்பாண்ட் படத்துல இன்விசிபிள் காரை பாண்ட் ஓட்டுற மாதிரி காட்டுன உடனே பலரும் சைண்ட்டிஸ்ட்டை விட டைரக்டர்ஸ் பயங்கரமா யோசிக்கிறாங்க, கண்டு பிடிக்கிறாங்கன்னு பேச்சு வந்தது!!! அதே மாதிரிதான் நம்ம ஊர்லியும், இப்பல்லாம் நம்ம டைரக்டர்சை விட வலைப்பதிவர்கள் பயங்கரமா சிந்திக்கிறாங்க. டைரக்டருக்கு கூட தெரியாத புதுப் புது கோணங்கள், கான்செப்ட்டெல்லாம் சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க. அதுவும் படம் உண்மையிலியே நல்லாயிருக்கான்னு தெரிஞ்சிக்க ரெண்டு மூணு விமர்சனம் மட்டும் படிச்சிட்டு படத்துக்கு போனோம்னா தீந்தோம், எந்த படத்தைப் பாத்துட்டிருக்கோங்கிற சந்தேகமே வந்துடுது சமயங்கள்ல….

டேய், தமிழ்ப் படத்தைப் பத்தி சொல்றேன்னு சொல்லிட்டு எதுக்குடா இதெல்லாம் இப்ப சொல்றன்னு கேக்கறீங்களா??? நம்மூரு ஹீரோ பில்டப் படங்கள் பெரும்பாலும் இப்படித்தானே இருக்கும். சொல்ல வந்த்தை வுட்டுட்டு சம்பந்தமே இல்லாம் பஞ்ச் டயலாக் பேசிகிட்டு இருப்பாங்கள்ல…அதை நக்கல் பண்ணி வந்திருக்கிற படம்தான் இந்த தமிழ்ப் படம். ஒரு லொல்லு சபாவையே ஹை லெவல்ல எடுத்துருக்காங்க. படம் எடுக்க சொன்னா அராஜகம் பண்ணியிருக்காங்க…

ஏற்கனவே பாடல்களும், ட்ரெய்லரும், விளம்பரங்களும் பலத்த எதிர்பார்ப்பைக் கிளப்பியிருந்தாலும் மனதில் இருந்த ஒரே சந்தேகம், படத்தின் ஃப்ளோ எப்படி கொண்டுவந்திருக்கிறார்கள் என்பதில்தான் வெற்றியே அடங்கியிருக்கிறது என்பதுதான். ஆனால் மிக கவனமாகவும், அருமையாகவும் படத்தை நடத்திச் செல்கிறார்கள். வரிசையாக கலாய்ப்பது என்று முடிவெடுத்திருந்தாலும், வழக்கமான ஒரு கதை, திரைக்கதை எல்லாம் எழுதி வரும் பல படங்களை விட இதன் ஃப்ளோ நன்றாகவே இருக்கிறது…

நன்றாக்க் கலாய்த்தாலும், வழமையான மசாலா படங்களுக்கே உரிய எடுத்தவுடன் அமர்க்களமான காமெடி, பில்டப் பாடல், காதல் ஆரம்பம், இடையில் சற்று தொய்வு பின் இடைவேளை வரை அராஜகமான காமெடிகள் என்று முதல் பாதி எப்படி போனது என்பதே தெரியவில்லை. இரண்டாம் பாதியில் சற்று தொய்வு இருந்தாலும், இடையிடையே எட்டிப் பார்க்கும் காமெடிகள், கடைசி நிமிடங்களில் மீண்டும் அராஜகங்கள் என கொடுத்த காசுக்கு மேல சிரிக்க வைக்கக் கூடிய ஒரு படத்தைதான் தந்திருக்கிறார்கள்….

ஒரு லோ பட்ஜெட் படம் என்றாலும் நிரவ் ஷாவின் கேமிரா, இசை, கலை, எடிட்டிங் அனைத்தும் அப்படி ஒரு உணர்வே ஏற்படுத்தாத வகையில் அமைந்திருக்கிறது. சிவாவே ஒரு காட்சியில் அந்நியன் பாணியில் எருமை மாடுகளை வைத்து கொல்ல முயற்சி செய்யும் போது லோ பட்ஜெட் படத்துலல்லாம் செய்ய மாட்டீங்களா என எருமைகளை கேட்கும் போதுதான் நமக்கே தோன்றுகிறது. அதுவும் எருமைகளை எருமை மாடுகளா என திட்டும் போது சிரிப்பு களை கட்டுகிறது.

இப்படியும் கொல்லலாம் கான்செப்ட், ஃபாமிலி சாங் டிவிடி, சைக்கிளை சுத்தியவுடன் பெரிய ஆளாவது,  காஃபி கொண்டு வருவதற்குள் பணக்காரனாவது, மவுன ராகம் ஸ்டைலில் காதல் சொல்லும் இடம் என்று பல இடங்களில் நம்மை வயிறு வலிக்க சிரிக்க வைக்கிறார்கள்.

திரைக்கு பின்னால் சி.எஸ் அமுதன், கண்ணன் (இசை), நீரவ் ஷா(ஒளிப்பதிவு), சந்தானம் (கலை) ஆகியோர் பெரிய பலம் என்றால், திரையில் சிவா, வெண்ணிற ஆடை மூர்த்தி, பாஸ்கர், மனோபாலா ஆகியோர் பெரிய பலம். வெண்ணிற ஆடை மூர்த்தி டபுள் மீனிங்கில் பேசும் இடங்களில் காக்கா வர வைத்திருப்பது எல்லாம் தாறுமாறு!!!

வெறும் திரைப்படங்களை மட்டும் கலாய்ப்பார்கள் என்று பார்த்தால், ஹட்ச், வோடாஃபோன், வசந்த் அண்ட் கோ என்று விளம்பரங்களையும் விட்டு வைக்கவில்லை. படத்தின் இன்னொரு முக்கிய ஹைலைட், அந்த பரத நாட்டிய சீன். எல்லாராலும் நடனம் ஆட முடியும் என்ற நம்பிக்கையையே ஏற்படுத்தியிருக்கிறார்கள்JJJ. அதைவிட அராஜகம் தப்பு பண்ணா அந்த கையை ஆட்டி நடிப்பானே அந்த தம்பி படத்தை பத்து தடவை பாக்கனும் என்பது, முதல் பில்டப் பாடலில் ”இந்தப் பாடலை பாடிக் கொண்டிருப்பவர் உங்கள் சிவா” என்று சொல்லி சிறிது இடைவெளியில் ”என்று போடுமாறு கேட்டுக் கொண்டார்” என்பது, பெரிய தளபதி, வைஸ் கேப்டன் போன்ற பட்டங்கள், அரசி சினிமா பட்டிக்கு ஏன் கரண்ட், தண்ணீர், ரோடு வசதி எல்லாம் தருவதில்லை என்பதற்கான காரணங்கள் என பல சொல்ல்லாம்.

ஒரு வலைப்பதிவருக்கே உரிய அடிப்படைத் தகுதியான படம் பார்க்கும் போது அடுத்த காட்சி எப்படி இருக்கும் என்பதை சில இடங்களில் நம்மால் கணிக்க முடிந்தாலும், காட்சி வரும் போது நம்மால் சிரிக்காமல் இருக்க முடியாது!!! முதல் தடவை பார்க்கும் போது இந்தக் காட்சி, இந்தப் படம் என்பதிலெல்லாம் ரசிகர்கள் அதிக கவனத்தை கொண்டு செல்ல வேண்டியிருப்பதால் இதற்கு ரிப்பீட்டிவ் ஆடியன்ஸ் வருவதற்கான வாய்ப்புகளும் மிக அதிகம்.

சும்மா சொல்லக் கூடாது, ரெண்டரை மணி நேரம் பக்கத்துல உக்காந்து கிச்சு கிச்சு மூட்டி அனுப்புறாங்க!!!

பி.கு:

கஸ்தூரி கண் முன்னாடியே இருக்காங்க!!! சத்தியமா இது ஒரு வித்தியாசமான படந்தான்….

பிரிவுகள்:சினிமா