தொகுப்பு

Archive for the ‘இவனுங்க காமெடி தாங்க முடியலடா சாமி’ Category

இவனுங்க காமெடி தாங்க முடியலடா சாமி!!!!

செப்ரெம்பர் 2, 2009 11 பின்னூட்டங்கள்

முகத்தில் அறைந்தார் போன்றே இருந்தது அந்த உண்மை நிகழ்ந்த போது….நிலையின்மை மட்டுமே நிலையானது என்று நன்கு தெரிந்திருந்தாலும், சில நிதர்சனங்கள் நடந்தேறும் போது தாங்கிக்கக் கூடிய மனநிலையோ, திடமோ ஏனோ நமக்கு வாய்க்கப் பெறுவதில்லை….

யாருக்குத்தான் அதிர்ச்சியாய் இருக்காது அந்த செய்தியைப் பார்த்தாலோ கேள்விப்பட்டாலோ???? சன் டிவியின் டாப் டென் நிகழ்ச்சியில் முதலிடத்திலிருந்த மாசிலாமணி திரைப்படம் இரண்டாவது இடத்திற்கு வந்துவிட்டதாக போன வாரம் கேள்விப்பட்ட போது யாருக்காவது அதிர்ச்சி ஏற்படாதிருக்குமா???? உலகத்தரமான நடிப்பு, இயக்கம் திரைக்கதை என்று பல தரங்கள் இருந்ததனாலேயே அதன் தராதரம் சாதாரண ரசிகர்களுக்கு தெரியாதிருந்தாலும், வழக்கமாக தரமான படங்களை அரவணைத்துச் செல்லும் சன் டிவி, மாசிலாமணியை அரவணைத்துக் கொண்டதில் வியப்பேதுமில்லைதான்

மற்ற குப்பை படங்களான நாடோடிகள், பசங்க எல்லாம் தேவையில்லா விளம்பரங்கள், பில்டப்புகள் மூலம் எதிர்ப்பார்ப்பையும் வெற்றியையும் ஏற்படுத்தியிருந்த நிலையில் மாசிலாமணியோ எந்த வித ஆரவாரமுமின்றி விண்னைத் தொடும் வெற்றியை அடைந்தது.

என்னுடைய ஒரே வருத்தம் என்னவென்றால் சன் டிவி நடுவில் வந்த ஐந்தாம் படை என்ற ஒரு உலகத்தரம் வாய்ந்த படத்தையும் ரிலீஸ் செய்யாமல் ஏன் விட்டார்கள் என்பதுதான், இது போன்ற நல்ல தரமான படங்களை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டிய கடமை உங்களுக்கு இருக்குங்க ஆஃபீசர்!!!!……..

ஆனா ஒண்ணு, உலகத் தரமான படங்களை கொடுப்பது மட்டுமல்ல, திருட்டு விசிடியை ஒழிப்பதிலும் சன் டிவியின் பங்கு அளப்பறியதுதாங்க…சும்மாவா!!!! இவிங்க படம்னா திருட்டு விசிடில வாங்கி பாக்குறதுக்கு கூட பயமா இருக்குன்னா பாத்துக்கோங்களேன்!!!!

——————————————————————————————————————————————————————————————————————

முக்கியமான நிகழ்வுகளை மக்களுக்கு கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்பதில் இந்த பேப்பர்காரங்களுடைய பங்களிப்பை குறைத்து மதிப்பிடவே முடியாது……..

சினேகாவிற்கு குறுஞ்செய்தி மூலம் தொல்லை கொடுத்த ஆளை எப்புடி மடக்கி புடிச்சாங்க, இதே மாதிரி ரம்பா வீட்டுல தகராறு பண்ண ஆளை எப்புடில்லாம் விரட்டுனாங்க, பிரபுதேவாவுக்கும் நயந்தாராவுக்கும் எப்படி அந்த தெய்வீகக் காதல் மலர்ந்தது, சோனியா அகர்வாலுக்கும், செல்வராகவனுக்கும் ஏன் விவாகரத்து நடக்குது இப்படி எல்லாத்தையும் விலாவரியா சொல்றதுனாலத்தான் நாட்டுல மக்களுக்கு ஜெனரல் நாலெட்ஜ்ன்னு ஒண்ணே இருக்கு!!! இவங்க இல்லாமப்போனா நாட்டுல மக்களுடைய நிலையோ, அரிப்போ என்னவாகியிருக்கும்னே சொல்ல முடியலியே????

இதுல தினத்தந்தில கட்டம் கட்டி சில செய்திகளைப் போடுவாங்க பாருங்க, அந்தச் செய்திகள் ஒவ்வொண்ணும் அப்படியே அரிப்புப் (மன்னிக்கவும்) அறிவுப் பொக்கிஷங்கள்……என்னா இதே மாதிரி அந்த பத்திரிக்கைகாரங்க குடும்பத்துலியும் யாரு யாரோட ஓடிப் போனாங்க, யாருக்கு விவாகரத்து நடந்தது, ஏன் நடக்குதுன்னு போட்டாங்கன்னா இன்னும் இண்ட்ரெஸ்ட்டா இருக்கும்

என் சந்தேகம் என்னான்னா, பிரபுதேவா, நயந்தாராவிற்கு இடையே காதல் மலர்ந்தது எப்புடி, அந்தக் காதலோட ஆழம் என்ன, நீளம் என்ன, அகலம் என்னான்னு எல்லாத்தையும் புட்டு புட்டு வெச்சாங்களே எல்லாஞ் சரிதான்…………ஆனா எங்க ஊர்லல்லாம், புருஷனோ, பொண்டாட்டியோ இருக்கறப்பவே, ஒருத்தர் இன்னொரு ஆளு கூட ஊர் சுத்துனா கள்ளக் காதல்னுதான் சொல்லுவாங்க, ஆனா இவனுங்க என்னான்னா, அம்பிகாவதி அமராவதிக்கப்புறம் இதுதான் தெய்வீகக் காதல்ங்கிற ரேஞ்சுக்கு காமிக்குறானுங்க……….

என்னமோ போங்கப்பா, சினிமாவுல வர்ற காதல் ரேஞ்சுக்குதான் இருக்கு பத்திரிக்கைக்காரங்களோட கவரேஜூம்…..

——————————————————————————————————————————————————————————————————————

நடிகர் விஜய்யோட செலக்‌ஷன் எப்பவுமே பிரமாதமாத்தான் இருக்கும், அவருடைய படங்களும் சரி, அதில் வரும் காட்சிகளும் சரி சிறப்பானதாகவே இருக்கும். அவரது திரைப்படங்களில் வரும் காட்சிகளுக்கு சற்றும் குறைவில்லாமல்தான் இருந்தது அந்த சந்திப்புக் காட்சியும். போனவாரம் ராகுல் காந்தி சென்னை வந்தப்ப விஜய் போய் அவரைப் பார்த்திட்டு வந்ததுமில்லாம, அந்தக் கட்சியிலியே சேரப்போறதா பேச்சு வந்ததன் மூலம் தனது செலக்‌ஷன் எப்பொழுதும் ‘சோடை போகாதுன்னு இன்னொரு முறை நிரூபிச்சிருக்காரு….

இந்தப் பேச்சு அடங்கி முடியறதுக்குள்ள விஜய்யோட வேட்டைக்காரன் படத்தை சன் டிவியே ரிலீஸ் பண்ணப் போதுன்னு இன்னொரு அறிவிப்பும் வேற வந்திருக்கு!!! சும்மா சொல்லக் கூடாது ரெண்டு மேட்டருமே குட் காம்பினேஷன்!

விஜய் சார் ஒரே ஒரு வேண்டுகோள், நீங்க பண்ண எல்லாமே சரி, தப்பி தவறி ஒரு ஆசையில உங்களோட ஏதாவது ஒரு படத்தை ராகுல்காந்தி பாத்தே ஆகனும்னு சொல்லி கட்டாயப்படுத்திடாதீங்க, அப்புறம் உங்க பிளான்லாம் வீணாப் போயிடும், உங்க படம் மாதிரியே!!!

————————————————————————————————————————————————————————————

இவனுங்க காமெடி தாங்க முடியலடா சாமி!!!!

இடம்: சத்தியமூர்த்திபவன் வாசல்

ஏங்க, சட்டசபையை ஏதாவது சத்தியமூர்த்திபவனுக்கு மாத்தீட்டாங்களா???

ஏன் கேக்கறீங்க?

இல்லை ஒரே அமளியா இருக்கே, அதான் கேட்டேன்……அதுக்கு ஏன் சார் இப்டி முறைக்கறீங்க?

யோவ், ஏதாவது ஜெயில்ல வருஷக்கணக்கா இருந்துட்டு இப்பதான் ரிலீஸாகி வந்துருக்கீயா?

அய்யோ! எப்டிங்க கண்டுபிடிச்சீங்க?

ம்ம்ம், இப்டி பொது அறிவே இல்லாம இருக்கீயே, அதை வெச்சுதான்!!!. இப்பல்லாம் கட்சி ஆஃபிஸ்ல ஜெயிலுக்கு போயிட்டு வந்தவங்க, ஜெயிலுக்குப் போக வேண்டியவங்கதான்யா இருக்காங்க, அதான் கேட்டேன்….. முறைக்காதய்யா, நான் விளையாட்டுக்குச் சொன்னேன், ஏன் சத்தியமூர்த்திபவன்ல ஒரு அமளியுமே இல்லைன்னு கேட்டா ஒரு அர்த்தம் இருக்கு, நீ என்னான்னா ஏன் ஒரே அமளியா இருக்குனு புதுசா கேக்கறீயே!!! இங்க சண்டை நடக்கறது புதுசா என்ன???

என்ன சார் சொல்றீங்க, சட்டசபைலதான் இப்டி கண்டபடி சண்டை போட்டுக்குவாங்க, அதனாலதான் சட்டசபையை மாத்திட்டாங்களான்னு கேட்டேன், நீங்க என்னான்னா இப்டி சொல்றீங்க…

யோவ், நீ நினைக்கிற மாதிரில்லாம், சட்டசபை முன்னைமாதிரி இல்லை……இப்பல்லாம் சட்டசபையே அதிகமா கூடுறது இல்லை, அப்டியே கூடுனாலும் முக்கியமான பிரச்சனையைப் பத்தியெல்லாம் பேசறது இல்லை, தப்பித்தவறி அதையும் பேசிட்டாங்கனு வையுங்க, கொஞ்ச நேரத்துலியே எதிர்கட்சில்லாம் ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி வெளிநடப்பு செஞ்சுருவாங்க, அதுனால இந்த அடிச்சுக்க வேண்டிய வேலை இருக்காது….

என்னங்க இப்டி சொல்லிபுட்டீங்க, நாட்ல இப்ப ஏகப்பட்ட பிரச்சனை இருக்கு, அதுக்காக விவாதம் பண்றப்ப கூட சண்டை வராதா?

எந்த மாதிரி பிரச்சனையைச் சொல்ற???

ம்ம்ம்ம்ம், இந்த கச்சத்தீவு பிரச்சனை மாதிரின்னு வெச்சுக்குங்களேன்…

சே சே, இந்த மாதிரி அல்ப பிரச்சனைன்னா வெறும் அறிக்கை மட்டும்தான் விட்டுக்குவாங்க….ஒருவேளை கலைஞரை அதிமுககாரங்க திட்டிட்டாலோ, இல்லை ஜெயலலிதாவை திமுககாரங்க திட்டிட்டாலோ, வடக்குப்பட்டி ராமசாமி மாதிரி யாராவது சோனியாகாந்தியை திட்டிட்டாலோதான் சண்டை போட்டுக்குவாங்க, ரோட்லல்லாம் வந்து கூட போரட்டம் பண்ணுவாங்க…

ஓ, அப்புடியா…, பக்கமா ஏதாவது ரோட்ல வந்து போராட்டம் பண்ணாங்களா???

ஓ, இதே காங்கிரசுகாரங்க பண்ணாங்களே!!!

எதுக்குங்க?

அதுவா, இந்த ராகுல்காந்தி பிறந்தாநாளுக்கு, மவுண்ட்ரோடுல இருந்த பேனரை தூக்கினாங்களே அதுக்கு பெரிய ஆர்ப்பாட்டம் பண்ணாங்களே, தெரியாதா???

ஓஹோ, ஏங்க கேக்கறேன்னு கோவிச்சுக்காதீங்க, மவுண்ட்ரோடுல யாருமே பேனர் வைக்கக் கூடாதுன்னு ஏதோ அறிவிப்பு இருக்குன்னு கேள்விப்பட்டேன், அப்டி இருக்கறப்ப இவங்க எதுக்கு பேனர் வெச்சாங்க, தப்பி வெச்சாலும் தூக்கறதுதானே நியாயம்!!!

யோவ், இந்த சட்டம்லாம் மனுஷங்களுக்குதான்!!

என்னாது?

இல்லைப்பா சாதாரண மனுஷங்களுக்குதான்னு சொல்ல வந்தேன்…

சரி, இப்ப எதுக்கு உள்ளாற இந்த மாதிரி அடிச்சுக்குறாங்கன்னு தெரியலியே?

தெரியலீயே, இரு யாராவது வெளிய வந்தா கேக்கலாம்

…………………………..அங்க பாருங்க உள்ளருந்து ஒரு தலைவரு வராரு!!!

தலைவா வணக்கம்….வணக்கம் தலீவா

ஆங், வணக்கம், வணக்கம்…

என்ன தலைவா, உள்ளே ஒரே அடிதடியா இருந்துதே என்னாச்சு?

டேய் உண்மையிலியே நீங்கள்லாம் காங்கிரசு தொண்டங்கதானா?

ஏன் தலைவா இப்புடி கேக்கறீங்க?

பின்னே காரணத்துக்காகத்தான் நாங்கள்லாம் முன்ன அடிச்சுகிட்டமா? இப்ப மட்டும் என்னமோ பெருசா காரணம் கேக்குறீங்க???

இல்ல தலீவா, எதோ ஒரு காண்டை மனசுல வெச்சுகிட்டு அடிச்சுகிட்டாலும், வெளில பத்திரிக்கைல சொல்றதுக்காக ஏதாவது ஒரு காரணத்தை சொல்லுவோமல, அதைக் கேட்டேன்…

ஓ அதுவா, முதல்ல இந்த கக்கன் பிறந்த நாளைக்கு ஏன் நிறைய பேரு போலைன்னு சண்டை போட்டுகிட்டோம்…..

ஆமா தலைவா, பக்கமா நம்ம கட்சியோட ஒரு பெரிய புள்ளி அம்மாவோட பிறந்த நாளைக்கு கூட ஒரு எம்எல்ஏ அன்னதானம் அது இதுன்னு அமர்க்களப்படுத்துனாங்க, ஆனா கக்கன் விஷயத்துல சொதப்பிட்டாங்களே… தலைவா, சரி என்ன முடிவு எடுத்தீங்க தலைவா, இந்த பிறந்த நாள் விஷயத்துல?

அதுவா, முதல்ல கக்கன், காமராஜர்லாம் யாருன்னு நம்ம கட்சி தலைவர்கள் எல்லாத்துக்கும் விளக்கவுரை கொடுத்து படிச்சி தெரிஞ்சிக்கச் சொன்னோம், அடுத்த வருஷத்துல இருந்து அவங்களோட பிறந்தநாளை எல்லாம் மிகச் சிறப்பா கொண்டாடுண மாதிரி பேப்பர்ல நியூஸ் வர்றதுக்கு ஏற்பாடுகளை பண்ணனும்னு தீர்மானம் போட்டிருக்கோம், இன்னும் முடிவு பண்ணனும்….

அப்ப அதுக்கு கூட இன்னும் முடிவு பண்ணுலியா தலீவா?

யோவ், இப்பதானே கூட்டமே முடிஞ்சிருக்கு, தீர்மானம் இனிமேதான் டெல்லிக்கு போயி சோனியா அம்மாகிட்ட ஒப்புதல் வாங்கிட்டு வரணும், அதுக்கப்புறம்தான் எல்லாம்..

ஓ ஓ, சரி அதுக்கப்புறம் ஏதோ ரொம்பப் பெரிய கலாட்டாவ இருந்துச்சே அது என்ன தலீவா???

ஓ அதுவா!!! அது மிகப் பெரிய பிரச்சனையாச்சே!!!

அப்டி என்ன தலீவா பிரச்சனை???

டேய், இப்ப நம்ம தலைவர் ராகுல்காந்தி பிறந்த நாள் வந்துது இல்லியா, அப்ப அவரு 2011ல காங்கிரசுதான் தமிழ்நாட்டுல ஆட்சியைப் பிடிக்கணும், அதுக்கான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள்ல ஈடுபடுங்கன்னு சொன்னதா ஒரு பேச்சு வந்துச்சு!!!

அப்டியா, உண்மையிலியே சொன்னாரா தலீவா?

அதெல்லாம் தெரியாது, அப்டி சொன்னாருன்னு ஒரு பேச்சு அவ்வளவுதான்…

சரி…

இல்ல பேச்சு வந்ததில்லியா, அப்டி 2011 ல காங்கிரசு ஆட்சியைப் புடிச்சா, யாரு முதலமைச்சரு, யாரு யாருக்கு எந்த துறைன்னுதான் சண்டை…….ஏண்டா மூஞ்சை, மூஞ்சை பாத்துக்கறீங்க? ஒவ்வொரு க்ரூப்பும், அவங்கதான் முதலமைச்சரு, அவங்க சொல்ற ஆளுக்குதான் முக்கிய மந்திரி பதவின்னு அடிச்சுகிட்டாங்க, அதான் ஒரே அடிதடி…

சூப்பரு தலீவா, கடைசியா முடிவு என்னாச்சி தலீவா???

எல்லா க்ரூப்பும் நாளைக்கே டெல்லிக்கு போயி சோனியாம்மாவை சந்திச்சு, இவங்க இவங்களுக்குதான் பதவில இருக்கணும்னு வேண்டுகோள் வைக்கப் போறாங்க…….டேய், டேய், இவன் ஏண்டா ஓடுறான்???

தெரியலியே தலீவா, இப்பதான் ஜெயில்ல இருந்து வந்தேன்னான்!!! ைருங்க புடிச்சிட்டு வந்துடறேன்………யோவ், எதுக்குய்யா ஓடுற? நில்ல்லுய்யா!!!……………………..யோவ் எவ்ளோ தூரம் தொரத்திட்டு வர்றது, எதுக்குய்யா இப்டி ஓடுற???

தெய்வமே, சாமி சாமியா இருப்பீங்க….நான் திருப்பி ஜெயில்லுக்கே கூட போயிடுறேன்…இந்தக் கொடுமையெல்லாம் பாக்க என்னால முடியாது, என்னை விட்டுருங்கய்யா….

யோவ், பதறாதய்யா, நான் என்ன உன்னை புடிக்கவா உன்னை தொரத்துனேன், அந்தாளு சொன்னதைக் கேட்டுட்டு, நானே உன்னை புடிக்குற சாக்குல பிச்சுகிட்டு வந்திருக்கேன்…….இங்க பாரு திருப்பி ஜெயிலுக்கே போகணும்னு அவசரப்பட்டு முடிவெடுத்துடாத, மனுஷனுக்கு நம்பிக்கைதான் வாழ்க்கை, என்ன, கம்முனு வீட்டுக்கு போ………………….

இவனுங்க காமெடி தாங்க முடியலடா சாமி!!!

என்னடா, வாரக் கடைசில குவார்ட்டர் அடிக்கப் போகாம விஜய் படம் பாத்துட்டு வந்த மாதிரி ‘திரு’ ‘திரு’ ன்னு முழிச்சிட்டிருக்க?

டேய், வவுத்தெரிச்சலை கிளப்பாத, ஏற்கனவே குவார்ட்டர் அடிச்சிட்டுதான் வந்தேன்!

அப்புறம் ஏண்டா இப்படி உக்காந்துட்டிருக்க?

இல்லடா, ரொம்ப நாளாச்சேன்னு கொஞ்சம் நியூஸ்லாம் படிச்சேன்னா, ஒரேடியா குழம்பிட்டேன், அதான்…

அப்படி என்னாத்தைடா படிச்சு குழம்பிட்ட?

இல்லடா, கொஞ்ச நாளைக்கு முன்னால கலைஞர், யாரோ தலைவர் பதவிக்கு ஆசைப்பட்டதுனால, குட்டை மனப் பேராசை அப்படி இப்படின்னு என்னன்னமோ சொல்லி ஒரு கவிதை படிச்சாரு ஞாபகமிருக்கா?

ஆமா, அவரு யாரை திட்டுனாருன்னு யோசிச்சு குழம்பிட்டியாக்கும்?

அது யாரோவோவா இருந்துட்டுப் போகட்டும், என் சந்தேகம் அதைப் பத்தி இல்லை, என் சந்தேகம் என்னன்னா, ஒரு தொண்டனா இருக்கறவன், கட்சித் தலைவர் பதவிக்கு ஆசைப் படறது தப்பா என்ன? சரி அது அப்படியே தப்புன்னு வெச்சுகிட்டாலும், ஒரு முறை தலைவனாவனும்னு நினைக்கிறதே பேராசைன்னா, எப்பவும் தான் மட்டும் தலைவரா இருக்கனும்னு நினைச்சா அது எவ்ளோ பெரிய பேராசை, இல்ல தனக்கப்புறம் தன் புள்ளைங்க மட்டும் தலைவனா இருக்கனும்னு நினைச்சா அது எவ்ளோ பெரிய பேராசை?…… ஏண்டா எதுவும் பேசமாட்டேங்குற?

அடியேய் உனக்கு சனி பக்கத்துல டபுள் காட் பெட் போட்டு படுத்துட்டு இருக்குடியேய்!!! எலக்சன் டைம்ல மக்கள் யோசிக்கவே கூடாது, அதுவும் இந்த மாதிரில்லாம் யோசிக்க அரம்பிச்சா, வீட்டுக்கு ஆட்டோதாண்டி!!!

ஏண்டா சந்தேகம் கேக்கறது தப்பா என்ன? சரி, சட்டக் கல்லூரி பிரச்சனையில, ஏண்டா போலீஸ் வேடிக்கை பாத்துட்டு இருந்தது, உள்ள போயி தடுத்துருக்கலாமேன்னு கேட்டா, அனுமதி இல்லாம போகக் கூடாதுன்னு சொன்னாங்க, ஆனா அதே கோர்ட்டுல, அனுமதி இல்லாமயே, 4000 பேரு உள்ள பூந்து போட்டு தாக்குனாங்க. இதுல காமெடி என்னான்னா, மும்பைல, தாஜ் ஹோட்டல்ல எல்லாம் தீவிரவாதிகள் பூந்து அட்டூழியம் பண்ணப்ப கூட, துணை ராணுவப்படை வந்ததுக்கு 6 மணி நேரம் பண்ணாங்கன்னு பிரச்சனை ஆச்சு, ஆனா இங்க, ஒரு மணிநேரத்துக்குள்ளியே, 4000 பேரை கொண்டு வந்துருக்காங்க அப்படின்னுல்லாம் வக்கீல் சொல்றாங்களே அப்படீன்னா இது திட்டமிட்ட தாக்குதலா இருக்கும்னு சொல்றாங்களே அதுக்கு என்ன பதில்?

ம்ம்ம், டேய், நம்ம அரசாங்கம் அவ்ளோ விரைவா செயல்படுதுன்னு அர்த்தம்டா! இதை ஏன் நீ இந்த மாதிரி பாக்க கூடாது. டேய், உன்பேரை பேரை பேசாம செந்தில்னு மாத்திக்கோ, செந்தில்தான் கவுண்டமணிகிட்ட இப்படில்லாம் சந்தேகம் கேட்டுகிட்டே இருப்பாரு………………….டேய் திடிர்னு ஏண்டா இப்படி யோசிக்கிற?

இல்ல மச்சி, நீ பேர்னு சொன்னவுடனே திடீர்னு எனக்கு ஒரு சந்தேகம்!,……. காந்தி யாரு?

என்னடா, டீக்கடையில பழைய பேப்பர் படிச்சவனாட்டம் கேக்கற?

டேய் கிண்டல் பண்ணாம சொல்டா?

காந்தி வந்து, நம்ம நாடு சுதந்திரம் அடையறதுக்கு, அஹிம்சை போராட்டத்தை எடுத்துச் சென்றதுல முக்கிய காரணமானவர். இதுல உனக்கு என்ன சந்தேகம்?

எனக்கு அவர் மேல எந்த சந்தேகமும் இல்ல, காந்தி சுதந்திரத்திற்காக பாடு பட்டது எனக்கும் தெரியும், ஆனா அதுக்காக ஒரு சிலர் அவரு பேரை பின்னாடி சேத்துகிட்டு பண்ற அழிச்சாட்டியம், பேசுற பேச்சு தாங்க முடியலைடா!

ஏண்டா, சந்திராசாமிக்கும், அரவிந்த்சாமிக்கும் சாமின்னு முடியுது. அதுக்காக ரெண்டு பேருக்கும் ஒரே கொள்கைன்னு அர்த்தமா? இதுல எல்லாம் இவ்ளோ டீப்பா யோசிக்க கூடாதுடா!

இல்லா மச்சான், இவங்க, பண்ணாத அழிச்சாட்டியம் எல்லாம் பண்ணிட்டு, ஒவ்வொரு முறையும் பேரு பின்னாடி காந்தின்னு வர்றப்ப சங்கடமா இருக்குடா, இவங்க எல்லா தப்பும் பண்ணட்டும், தயவு செஞ்சு அந்த பேருல இருந்து காந்தியை தூக்கிருங்கன்னு மனு கொடுக்கலாம்னு யோசிக்கிறேன். சரி இதுலதான் இந்தப் பிரச்சனைன்னா, ராஜீவை தப்பா பேசுனாவோ, சோனியாவை விமரிசனம் பண்ணாவோ, மன்மோகன் சிங்கை விமரிசனம் பண்ணாவோ தேசிய பாதுகப்பு சட்டதுல கலைஞர் உள்ள தூக்கி போட்டுறாரே, அதுக்கு பேசாம “கூட்டணி பாதுகாப்பு சட்டம்னு“ பேரு வைக்கலாம்ல, அதை ஏன் “தேசிய பாதுகாப்பு சட்டம்”னு சொல்லனும். தயவு செஞ்சு இது ரெண்டுக்கும் பேரு மாத்த சொல்லனும்டா!!!

நீ ரொம்ப ஓவரா பேசுற! இவ்ளோ பேசுறியே நீ ஏன் எலக்சன்ல நிக்கக் கூடாது?

இது கூட நல்ல ஐடியாதான், அதுக்கு என்னடா தகுதி வேணும்?

ஐய்யோ, அந்த கருமத்துக்கு தகுதியே வேணாண்டா! ரவுடி, கொலைகாரன், ரெண்டு பொண்டாட்டி கட்டுனவன், ஜெயிலுக்குப் போனவன், யாரு வேணா நிக்கலாம், சொல்லப் போனா அவங்கதான் நிக்கறாங்க!

டேய் சீரியசா சொல்லுடா…

டேய், ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு தகுதிடா. இப்ப திமுகன்னா, உன் நெருங்கிய சொந்தக்காராங்கள்ல யாருக்காவது பேரு, அழகிரி, கனிமொழி, ஸ்டாலின்னு இருக்கனும். அதிமுகன்னா, நவகிரகத்தை சுத்தி வர்ற மாதிரி சுத்தி வந்து அம்மா கால்ல உழுவணும், இப்படி பல இருக்குடா!!!

சரி காங்கிரஸ் சார்பா நிக்கனும்னா?

ம்க்கும்ம், அதுக்கு நீ நிக்காமயே இருக்கலாம்!

இல்லடா, திமுக பாட்டுக்கு, 16 தொகுதின்னு அள்ளி வழங்கிடுச்சி, தொகுதிக்கு ஒரு வேட்பாளர்னு வெச்சுகிட்டா கூட, மொத்தம் 16 பேரு வேணுமே, அவ்ளோ பேரு அந்தக் கட்சில இருக்காங்களா என்ன?—————-என்னடா பதில் சொல்லாம அப்படி பாக்கற?

டேய் என் வாழ்க்கைல நான் தண்ணியே அடிச்சதில்லை, இன்னும் கொஞ்சம் நேரம் உன்கிட்ட பேசுனா, என்னையே தண்ணி அடிக்க வெச்சிருவ போலிருக்கு! என்னை உட்டுடு!

சரி கடைசியா ஒரு கேள்வி இருக்கு பதில் சொல்லு, எலக்சன்ல யாருக்கு ஓட்டுப் போடறது?

ம்ம்ம்ம், முதல்ல குருவி படம் நல்லாயிருந்துதா இல்லை வில்லு படம் நல்லாயிருந்துதான்னு சொல்லு, அப்புறம் அதுக்கு பதில் சொல்லுறேன்!!!

இவனுங்க காமெடி தாங்க முடியலடா சாமி….

டேய், வாரக்கடைசியும் அதுவுமா ஏண்டா இங்கிலீஸ் படம் போட்டு உயிரை வாங்குற, தயவு செஞ்சு எதாவது தமிழ் சேனல் வையேன்?

மச்சான், நீ சாதா நாள்லியே சும்மா தூங்க மாட்ட, இன்னிக்கு வெள்ளிக்கிழமை வேற, வழக்கமா பண்ற மாதிரி குவார்ட்டர் அடிச்சிட்டு, கமுந்தடிச்சு தூங்க வேண்டியதுதானே, அதை விட்டுட்டு என் உயிரை ஏண்டா வாங்கற?

இல்லடா, நான் இனிமே தண்ணி அதிகம் அடிக்க வேண்டாம்னு இருக்கேன், அது மட்டுமில்ல இந்த சமுதாயத்தைப் பத்தியும் கொஞ்சம் கவலைப் படலாம்னு இருக்கேன்…

அய்யய்யோ, இது எப்பருந்து?

இன்னைல இருந்துதான், இன்னிக்குதான் நீ சொன்ன இந்த வலைப்பதிவு, குழுமத்துலலாம் போய் படிச்சி பாத்தேன், அதுல எத்தனை பேரு இந்த சமூகத்தைப் பத்தி கவலைப்பட்டு என்னென்னமோ பண்றாங்க, அதான் நானும் இப்படி…

டேய், நீ தண்ணி அடிக்கறதை நிறுத்தினது கூட பெரிய விஷயமில்லை, ஆனா சமூகத்தைப் பத்தி கவலைப் படறேன்னு சொன்ன பாத்தியா, அது போதுண்டா, இன்னிக்கு நீ எந்த சானல் சொல்றியோ அதையே நானும் பாக்குறேன். சொல்லு எதைப் போடுறது?

சரி, எதாவது காமெடி வையி…
……………
……………
…………….
என்னடா எல்லாத்துலியும் பாட்டு இல்லாட்டி சீரியலே ஓடுது?உருப்படியா ஒன்னுமே இல்லியா?

மிட்னைட் மசாலாவையும், மெகா சீரியலையும் ஒன்னா பாக்குறியா?

அது எப்படிடா முடியும்?

‘மானாட மயிலாட’ வைக்கிறேன், இல்லாட்டி இதே மாதிரி நிறைய புரோகிராம் இருக்கு, பாரு…

டேய் வேணாண்டா, வாரக்கடைசி, காமெடியா எதாவது பாக்கலாம்னா கடுப்பேத்துறானுங்க…

மச்சான், காமெடி பாக்கனும்னா, காமெடி சானலேதான் பாக்கனுமா? சன் நியுஸோ இல்ல ஜெயா நியுஸோ பாரு, அது சினிமா காமெடியை விட பயங்கரமா இருக்கும்.

உண்மையாவா?

செத்துபோன எங்க மேனேஜரோட தாத்தா மேல சத்தியமா சொல்றேன்…

சரி நியுஸே வெய்யி, அதுல எது நல்லா காமெடியா இருக்கும்?

ரெண்டும் நல்ல காமெடிதான், ஒண்ணு வடிவேலு காமெடி, இன்னொன்னு கவுண்டமணி காமெடி, உனக்கு எது வேணும்னு சொல்லு

அதென்னடா வடிவேலு காமெடி, கவுண்டமணி காமெடி?

சன் நியூஸ் வந்து வடிவேலு காமெடி, ஜெயா நியூஸ் கவுண்டமணி காமெடி!!!

எப்படி?

வடிவேலு காமெடி எப்படி இருக்கும்? தான் அடி வாங்கியே மத்தவங்களை சிரிக்க வைக்கறது வடிவேலு காமெடி!!!

ஓ! அதாவது வக்கீல்கள் போராட்டத்தை நிறுத்தாட்டி, நான் ஆஸ்பித்திரிலியே உண்ணாவிரதம் இருப்பேன்னு சொன்னாங்களே அது மாதிரியா?

அதேதான்!!!

ஆனா அடிவாங்குனதுக்கப்புறம், ‘நீ ரொம்ப நல்லவன்னு’ சொல்ல நாலு பேரு கூட வேணுமே?

அதான் அவரு உண்ணாவிரதம் இருக்கறேன்னு சொன்னதுக்கப்புறம் அறிக்கை நிறைய வந்துதே?

ஆமாமா!!! கரெக்டுதான்!!!

சரி கவுண்டமணி காமெடி எப்படி?

கவுண்டமணி அடி வாங்க மாட்டாரு, ஆனா மத்தவங்களை திட்டியோ, அடிச்சோதான் காமெடி பண்ணுவாரு…

ஓ, அடிக்கடி நியுஸ்ல தலைவி அறிக்கை விடுறப்ப ‘மைனாரிட்டி திமுக’ன்னுலாம் சொல்றாங்களே அதுமாதிரி!!!

அதேதாண்டா, இப்பதான் நீ நம்ம லைனுக்கே வந்துருக்க!!!

சரி எனக்கு ஒரு சந்தேகம்?

என்ன?

இல்ல எல்லா கட்சியுமே மைனாரிட்டி மக்களை முன்னேத்துவோம், மைனாரிட்டி மக்களுக்காக போராடுவோம்னு சொல்றாங்களே, அப்படி பாத்தா கவுண்டமணி வடிவேலுவை முன்னேத்த போராடுனும்தானே?…. டேய், டேய் ஏண்டா அப்படி பாக்குற?

இன்னிக்கு ரொம்ப நேரம் வலைப்பதிவுல, குழுமத்துல இருந்தியா?

ஆமா, ஏன் கேக்குற?

உன் பேச்சுலியே தெரியுது!!!!

சரி சரி, கவுண்டமணி காமெடியே போடு…
………..
………….
…………
செய்தி: ஈழத்தமிழர்களுக்காக ‘தாயுள்ளம்’ அவர்கள் வருகிற பத்தாம் தேதி உண்ணாவிரதம் இருக்கப் போகிறார்கள்…………..

ஹா ஹா ஹா ஹா ஹா

டேய் இதுக்கு ஏண்டா இப்படி சிரிக்கிற? அரசியல்ல இதெல்லாம் சகஜம்தானே?

இல்ல கவுண்டமணி, வடிவேலு காமெடி பண்றாரே அதை நினைச்சேன் சிரிச்சேன்…….ஹா ஹா ஹா…….. சரி, நீ எங்க கிளம்பிட்ட?

ம்ம்ம், குவார்ட்டர் வாங்கறதுக்கு!

அடக்கடவுளே, இப்பதான் நல்லவனான, அதுக்குள ஏண்டா?

இல்ல மச்சான், என் போதைக்கே நான் ஊறுகாயா இருந்துக்கறேன்!!!

?????????????????

இவனுங்க காமெடி தாங்க முடியலடா சாமி….

பிப்ரவரி 27, 2009 1 மறுமொழி

அதிமுக கட்சியில் இருக்கும் ஒருவர் செல்வி.ஜெயலலிதாவை எதிர்த்து குரல் எழுப்ப முடியுமா? கிண்டல் பண்ணி போஸ்டர்லாம் ஒட்ட முடியுமா?

முடியும் என்று நிரூபித்திருக்கிறார்கள் ஒரு சில தொண்டர்கள். நானும் ஆரம்பத்தில் அப்படி எல்லாம் நடக்க வாய்ப்பில்லை என்றே நினைத்திருந்தேன். ஆனால் அந்த பேனரை பார்த்த பொழுது என் கண்களையே என்னால் நம்ப முடியவில்லை.

பிப்ரவரி 24 ஆம் தேதியன்று செல்வி அவர்களின் பிறந்த நாள் வந்ததல்லவா? அதையொட்டி அவருக்கு வாழ்த்து தெரிவிக்க ஒட்டப்பட்ட பேனர்தான் அது. கிண்டி ஸ்டேட் பாங்க் ஆஃப் இண்டியா க்கு பக்கத்தில்தான் வைக்கப்பட்டிருந்தது அந்த பானர்.

அப்படி என்ன சொல்லியிருந்தாங்கன்னு கேக்கறீங்களா? இவங்க ஒழுங்கா ‘அம்மா’வுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் சொன்னதோட நிப்பாட்டியிருக்கலாம். ஆனா ஆரம்பிக்கறதே, “இலங்கைத் தமிழர்களுக்குகாக பாடுபடும் ஒரே தலைவி…..”
அப்படின்னு என்னென்னமோ எழுதியிருந்தாங்க!!!!

எனக்கோ பயங்கர ஷாக், இவங்க தெரிஞ்சுதான் வெச்சாங்களா, இல்லியா?. பொதுவாகவே ஈழப் பிரச்சனையில் ”தாயுள்ளத்தின்” நிலைப்பாடு எல்லாருக்கும் தெரிந்ததே. அப்படியிருக்க இப்படி ஒரு பேனர் வெச்சிருக்காங்களே, இந்த விஷயம் தலைமைக்கு தெரியுமா? தெரிஞ்சா சும்மா விடுவாங்களா?

ஐயா, பேனர் வெச்ச நல்லவங்களே, சீக்கிரம் பேனரை தூக்கிருங்க, தப்பி தவறி அம்மா அந்தப் பக்கம் போகறப்ப அந்த பேனரை பாத்தாலோ, அல்லது கட்சிகாரங்களே யாராவது உங்க மேல பொறாமை கொண்டவங்க அம்மா காதுக்கு கொண்டு போயிட்டாங்கன்னா அப்புறம் உங்களை கட்சியை விட்டே தூக்கிடுவாங்க அது மட்டுமில்லாம தங்கள் தலைவியை அவமானப் படுத்துனதால கட்சிகாரங்க முழுக்க எதிரி ஆகிடுவாங்க, சொல்லிபுட்டேன்…..
*******************************************************************************
”ஹிந்துஸ்தான் பெட்ரோல் பங்க்குல இந்துக்கள் மட்டும்தான் பெட்ரோல் போடுறாங்களா? முஸ்லீம்கள் போடுறதில்ல!!!!

…..காதர் பாய் கறி கடையில முஸ்லீம்கள் மட்டும்தான் கறி வாங்குறாங்களா? இந்துக்கள் வாங்குறதில்ல!!!!

வரிசையாக சானல் மாற்றிக் கொண்டே வரும் போது ”கலைமாமணி.திரு, சுந்தர்.சி” அவர்கள் ஒரு வில்லனிடம் இந்த டயலாக் சொல்லிக்கொண்டிருந்தார்.

அட, வித்தியாசமான சிந்தனையா இருக்கே, இந்த சிந்தனை ஏன் இத்தனை நாளா எனக்கு தோணவே இல்லைன்னு நான் யோசிக்க ஆரம்பிக்கும் போதே ‘நமீதா’ சேலை கட்டிய படி (இந்த மாதிரில்லாம் சேலை கட்ட யார் சொல்லி கொடுத்தாங்க மேடம்?), தன்னுடைய வழக்கமான பாணியில் ஆடிக்கொண்டே வந்தார்.

அப்புறம்தான் தெரிந்தது அது கலைமாமணி.திரு, சுந்தர்.சி அவர்கள் நடிக்கும் ‘தீ’ படத்தின் டிரைலராம். அடுத்து வந்த காட்சிகள், எல்லாம் அந்தப் படம் எந்த லட்சணத்தில் இருக்கும் என்பதை தெளிவாக காட்டின.

அதுவும் படம் சன் குழுமத்தோடது. செத்தானுங்கடா தமிழ்நாட்டுக் காரனுங்க, இனி இந்த படம் வெளி வரும் வரை 5 நிமிஷத்துக்கொரு முறை இதுக்கு விளம்பரம் வரும், படம் வந்ததுக்கப்புறம் சன் நியூஸிலேயே, இது தலைப்பு செய்தியாக வரும், தொடர்ந்து அடுத்த படம் இதே குழுமம் வெளியிடும் வரை டாப் டென்ல முதல் இடத்துல வரும் (இப்படியே வரும் வரும்னு குணா ஸ்டைல்ல சொல்லிகிட்டே இருக்க வேண்டியதுதான்…..)

சரி இவனுங்க தொந்தரவு தாங்க முடியலைன்னு இன்னொரு சானலில் ‘சிம்பு’ “நான் தமிழண்டா, தமிழன்னா எழுந்து நில்லுடா” னு கூவிகிட்டு இருந்தாரு. ஆகா, நமக்கு அடுத்த தமிழினத் தலைவர் கிடைச்சிட்டாருடான்னு சிலாகிக்கும் போதே, கொஞ்ச நேரத்திலியே “where is the party” போட்டாங்க. சும்மா சொல்லக் கூடாது, பாரதி கண்ட புதுமைப் பெண்ணை இயக்குநர் என்னாமா படைச்சிருந்தாரு!!! நடன அசைவுகள்லாம் உலகத் தரம்….

பாட்டையே இந்த லட்சணத்துல எடுத்துட்டு அப்புறம் என்ன வெங்காயத்துக்கு “தமிழா நிமிர்ந்து நில், குமிஞ்சு நில், கமுந்து படு” னு பாட்டு எழுதறாங்களோன்னு தெரியலை. இவங்க போதைக்கு நம்மளை ஊறுகாய் ஆக்கிட்டே இருக்கானுங்க.

கொடுக்கறது டப்பா மசாலா படம், அதுல எதுக்கு ஹிந்துஸ்தான் பெட்ரோலியமும், காதர் பாய் கறி கடையும், தமிழாவும்…

யப்பா புண்ணியவான்களே, நீங்க மசாலா படம் எடுங்க இல்ல மலையாளப் படம் எடுங்க, ஆனா தயவு செஞ்சு அதுல கருத்து சொல்லாதீங்க!!!, நாடு தாங்காது.

இவனுங்க காமெடி தாங்க முடியலடா சாமி….

பிப்ரவரி 24, 2009 1 மறுமொழி

இந்திய விமானப்படை தனது சாதனையில் இன்னொரு மைல்கல்லை எட்டியுள்ளது. ஆம், இந்திய விமானப்படை, திருவனந்தபுரத்தில் உள்ள தென்னக விமானப்படை பிரிவில் ‘ஏர்சோட்’ என்ற அதிநவீன ராடார் நிறுவ போகிறார்களாம். இந்த ராடார்,மிக சக்தி வாய்ந்ததாம், இது இலக்குகளை மிகத் துல்லியமாக, நெருக்கமாக காட்டக் கூடியதாம். எல்லாம் சரி இதுல காமெடி என்னன்னு கேக்கறீங்களா?

இதை நிறுவ, நம்மாளுங்க சொன்ன காரணம்தான் காமெடி. அதவது 20 ஆம் தேதி, குட்டி விமானங்கள் மூலம் விடுதலைப்புலிகள் கொழும்பில் தாக்குதல் நட்த்தியுள்ளதால், தென்னிந்தியாவை காப்பாற்ற முன்னெச்சிரிக்கையாக இந்த ராடாரை நிறுவியுள்ளனர். எனக்கு என்ன புரியலைன்னா, விடுதலைப் புலிகள் விமானப் படை வெச்சிருக்கறது எனக்கு நினைவு தெரிஞ்ச நாள்லருந்து தெரியும், அதே மாதிரி இலங்கை அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் சண்டை நடப்பதும், விடுதலைப் புலிகள்  ஏற்கனவே இலங்கையில் கொழும்பில் விமானம் மூலம் சென்று தாக்குதல் நடத்தியிருப்பதும் தெரிந்த விஷயமே.

அப்டியிருக்க இத்தனை நாள் இல்லாம இப்பதான் நம்ம ஆளுங்களுக்கு அவங்க குட்டி விமானம் வெச்சிருக்கறது ஞாபகத்துக்கு வந்துதா?.    கொழும்புல நடந்த மாதிரி இங்கேயும் தாக்குதல் நடத்தலாம்னு முன்னெச்செரிக்கையாக இந்த நடவடிக்கை எடுத்துருக்காங்க. சரி அப்படித்தான் ராடாரை நிறுவிட்டாங்களே, இனிமே நாம் நிம்மதியா இருக்கலாம்னு நினைச்சா அதுலியும் மண். அதாவது, இப்ப போட்டிருக்கறது ஒரு திட்டம்தான். இந்த திட்டம் முடிய இன்னும் ரெண்டு வருஷம் ஆகுமாம். அப்புறம் அதுவரைக்கும், நாங்க எப்டிங்க நிம்மதியா இருக்கறது? ஏன்னா ஒருவேளை யாராவது விமானம் மூலம் தாக்கனும்னு நினைச்சா வந்து சேரவே ரெண்டு வருஷம் ஆகுமா இல்ல தாக்கறவங்க ரெண்டு வருஷம் காத்திருந்து நாம ராடார் வைத்ததுக்கப்புறம் வந்து தாக்குவாங்களா?

ைதுல இன்னொரு விஷயம் என்னான்னா, ஏற்கனவே 2007 ல விடுதலைப்புலிகள் நடத்திய கொழும்பு தாக்குதலில் இருந்தே தென்னிந்திய கடலோர பகுதி முழுதும் விமான எதிர்ப்பு பீரங்கிகளையும், நடமாடும் ராடார்களையும் நிருவி இருப்பதால், அவை 24 மணி நேரமும் கண்காணிப்பில் இருப்பதால் எதிரிகளின் ஊடுருவலை சமாளிக்க எந்நேரமும் தயார் நிலையில் இருக்காங்களாம்.

எனக்கு என்ன சந்தேகம்னா!!! இந்த பீரங்கி மற்றும் ராடார்களாலியோ இல்ல புதுசா நீங்க கொண்டு வர்ற ராடார் மூலமாவோ எங்க மீனவர்களை இலங்கை ராணுவம் எப்பவுமே சுட்டுகிட்டே இருக்கே, அதை தடுக்க முடியாதா? ஏன்னா எனக்கு தெரிஞ்சு விடுதலைப் புலிகள் சம்பந்தப் பட்டு இந்தியாவில் நடந்த ஒரு வன்முறை சம்பவம், ராஜீவ் காந்தி, சில போலீஸ்காரர்கள் மற்றும் சில பொது ஜனங்களின் சாவுதான் (வேறெந்த காங்கிரசு தலைவர்களும் இல்லை!!!!?). அது நடந்து வருஷக் கணக்கு இருக்கும். அதுக்கப்புறம் அவர்கள் தலையிட்டு எந்த வன்முறையோ, அல்லது அவர்கள் தாக்குதலோ தமிழ்நாட்டிலோ அல்லது இந்தியாவின் வேறெந்த பகுதிகளிலோ நடந்தது இல்லை. ஆனா இன்னமும் எங்க மீனவர்களை இலங்கை ராணுவம் சுட்டுடுதான் இருக்கு. அதை தடுக்கறதுக்கு ஏதாவது ஒரு கருவி கண்டு பிடியுங்களேன்….

அப்புறம் இதே மாதிரி ராடார்களை மும்பை கடல் பகுதி, காஷ்மீர், டெல்லி இது மாதிரி இடங்கள்லியும் வெச்சிருங்க. இல்லாட்டி திருப்பி, திருப்பி இன்னொரு கார்கில், இன்னொரு மும்பை சம்பவம்னு ஏதாவது நடந்திட்டே இருக்கும், அப்புறம் நம்ம பத்திரிக்கைகளும் தாஜ் ஹோட்டல்ல செத்தாதான் உயிர் என்று அழுவாச்சி காவியம் படைத்துக் கொண்டே இருக்கும், எல்லாத்துக்கும் மேல இந்தியாவின் பாதுகாப்பு கேள்விக்குள்ளாகிறதா என்று விவாதம் சாருக்கானுக்கு அடுத்த காயம் ஏற்படும்வரையோ, இல்லை ஐஸ்வர்யா அடுத்த படம் நடிப்பதை சொல்லும் வரையிலோ நடத்திக் கொண்டே இருக்கும்…