இல்லம் > அரசியல் > தும்பை விட்டு வாலைப்பிடிக்கும்……

தும்பை விட்டு வாலைப்பிடிக்கும்……

சாட்டர்ஜியும், நீல்சிங்கும் அந்நிறுவனத்தின் நிதித்துறையில் மிக முக்கிய பதவி வகிக்கின்றனர்…

அந்நிறுவனம் ஒரு பழம்பெரும் நிறுவனம். அது கால்பதிக்காத துறையோ, அளிக்காத சேவைகளோ கிடையாது. மிக அதிக எண்ணிக்கையிலான தொழிலாளர்களை மட்டுமல்ல, மிகப் பெரிய வாடிக்கையாளர் தளத்தையும் கொண்டிருக்கிறது. மிகச்சிறந்த வல்லுநர்களைக் கொண்டிருப்பதாகச் சொல்லப்படும் அந்நிறுவனம் சமீப காலங்களில் மிகப் பெரிய பொருளாதாரச் சவால்களைச் சந்தித்து வந்தது. சற்றே சோம்பேறியான புத்திசாலிகளைக்(?) கொண்டிருந்ததனாலோ என்னமோ, மிகத் தாமதமாகத்தான் அந்நிறுவனத்தின் செலவீனங்களைக் குறைக்க வேண்டியிருப்பதை அவர்கள் கண்டறிந்தனர்…

உடனே அது தனது முதல்நிலை நிர்வாகக் குழுவிற்கு செலவினைக் குறைக்க ஆலோசனை கேட்டு அறிக்கை விடுகிறது. ஆலோசனைக் குழுவோ, இந்த இரு நிர்வாகிகளின் பொறுப்பில் அச்செயலை விட்டு இன்னும் ஒரு மாதத்தில் அதற்கான திட்டத்தைக் கொடுக்கச் சொல்லி கட்டளையிடுகிறது….இனி அவர்கள் இருவரும் பேசிக் கொள்கிறார்கள்….

இடம்: ஒரு ஐந்து நட்சத்திர விடுதி!!!

நீல்சிங்ஜி, நாளைக்கு வெள்ளிக்கிழமை

ஆமா சாட்டர்ஜி சார், இன்னிக்கு வியாழக்கிழமை!!!

கடுப்பேத்தாதீங்க நீல்சிங்ஜி, நாளைக்கு நாம திட்டத்தைக் கொடுக்க வேண்டிய கடைசி நாள், இன்னும் உருப்படியா நாம ஒண்ணும் செய்யலை….

என்ன பண்றது சாட்டர்ஜி சார், இவ்ளோ கஷ்டமான விஷயத்தை நம்மளை மட்டும் தீர்த்து வைங்கன்னா நாம என்ன பண்றது? எல்லாரும் சேந்து செலவு பண்ணுவாங்களாம், ஆனா செலவு குறைக்கறது எப்படிங்கறதை மட்டும் நாம ரெண்டு பேருந்தான் சொல்லனும்னா நாம என்ன செய்ய முடியும்? இடியட்ஸ்….

சரி, சரி விடுங்க, சரக்கு வாங்கிட்டு வரச் சொல்லி ஆளை அனுப்பிட்டீங்களா???

ஓ, அப்பவே ஆர்டர் பண்ணிட்டேன், சரக்கு எல்லாம் இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடும், ஆனா இந்தப் பாழாப் போன திட்டந்தான் வரமாட்டேங்குது…..அய்ய்ய்யோ, சட்டர்ஜி சார், சரக்கு, சைட் டிஸ் எல்லாம் ஆர்டர் பண்ணேன், ஆனா இந்த ஊறுகாயை மறந்துட்டேனே!!!

எதையோ யோசித்துக் கொண்டிருந்த சட்டர்ஜியின் முகத்தில் திடீரென்று பல்பு எரிந்தது……நீல்சிங்ஜி ஒரு ஐடியா!!! உடனே நம்ம ஆட்கள் எல்லாருடைய பயணத் திட்டத்துலியும் ஒரு மாற்றம் பண்ணிடலாம்…முதல் கட்டமா, நம்ம ஆட்கள் யாரும், ரஷ்யா, நார்வே, கனடா, ஸ்வீடன், ஆப்பிரிக்கா இங்கல்லாம் போகக் கூடாதுன்னு அறிவிச்சிரலாம்!!!

நீல்சிங் புரியாமல் முழிக்க, சாட்டர்ஜியோ மொபைல் போனில் கால்குலேட்டரை எடுத்து கணக்கு போடுகிறார். நீல்சிங்ஜி, இப்பிடி பண்ணா மாசம் ஒரு கோடி செலவு கம்மியாவும்பா!!!

ஒரு கோடிங்கிறது ரொம்ப சின்ன அமவுண்ட்டு சாட்டர்ஜி சார்!!! சரி, வழக்கமா நம்மாளுங்க பிஸினஸ் க்ளாஸ்லதான் போவாங்க, அதுனால அமவுண்ட்டுல இன்னும் ஒரு 30% சேத்துக்கோங்க….

கரெக்ட், அது மட்டுமில்ல, வழக்கமா நம்மாளுங்க வெளிநாடு போனா, ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்லதான் தங்குவாங்க…அதுனால அதையும் கொறைச்சா மாசம் ரெண்டு கோடி வருது…அப்ப வருசத்துக்கு அப்ராக்ஸிமேட்டா 25 கோடி செலவு கம்மியாகும்!!!

ம்ம்ம், ஆனா 25 கோடி ரொம்ப கம்மியாச்சே?

ஆமால்ல,…………. ஒண்ணு பண்ணுங்க, நீங்க வோர்ல்டு மேப்பை எடுத்துட்டு வாங்க, நான் லேப்டாப்பை எடுக்கறேன், இன்னும் சில நாட்டைச் சேத்தலாம்…

ம்ம்ம், ஆங், ஜப்பானை சேத்துங்க, அப்புறம் சீனா, கொரியா, இத்தாலி….சுவிட்சர்லாந்து

யோவ் அறிவிருக்கா? சுவிட்சர்லாந்தை சேத்தச் சொல்றீங்க, அப்புறம் வெயில் காலத்துல நாம எங்க போறதாம்? இந்த சுவிட்சர்லாந்து, தாய்லாந்துலாம் சேத்த வேணாம்…வேணும்னா சிங்கப்பூர், மலேசியா, துபாய்லாம் சேத்துக்கலாம்….

ஆனா சட்டர்ஜி சார், இங்கல்லாம் நம்மளோட டெவலப்மெண்ட்சுக்கு ஏத்த மாதிரி கத்துக்க வேண்டிய விஷயம் நிறைய இருக்கே?

நீல்சிங்ஜி, அதெல்லாம் கம்பெனியோட தலையெழுத்து!!! நமக்கென்ன வந்துது? நாம இந்த திட்டத்தை சொல்ற மாதிரி சொன்னா, நாம நல்லவங்களா போயிடலாம், இப்போதைக்கு அடுத்தா வாரம் நாம ஆப்பிரிக்கா போக வேண்டிய திட்டத்தை கேன்சல் பண்ணிடலாம், அந்த ஊருக்கெல்லாம் போறதுல எனக்கு முன்னமே புடிக்கலை, இதை சாக்கா வெச்சு கட் பண்ணிட்டம்னா நமக்கு நல்ல புகழ் கிடைக்கும், …இப்ப எக்சல்ல கணக்கு போடுங்க…கூட வேணும்னா இன்னும் நிறைய நாடு சேத்திக்கலாம், ஆனா நம்ம டார்கெட் 200 கோடி வருசத்துக்கு சேமிக்கிற மாதிரி கணக்கு காமிக்கனும் நாளைக்கு, என்ன சொல்றீங்க?

சூப்பர் ஐடியா சட்டர்ஜி சார்!!!

ஓகே, நான் சொல்ற நாட்டையெல்லாம் சேத்துங்க…

டொக் டொக்

என்ன அது?

நாம ஆர்டர் பண்ண சரக்குதான் வந்திருக்கு, ஆனா ஊறுகாய்தான் மறந்துட்டேன்…

பராவாயில்லை, பராவாயில்லை விடுங்க, அதான் திட்டமே ரெடியாயிருச்சே, இனிமே எதுக்கு ஊறுகாய்?

———————————————————————————————————————————————————————————————

அது சுமார் 15 வருடங்களேனும் முந்தைய காலகட்டம். பொருளாதரச் சீர்திருத்தக் கொள்கையால் பல இந்திய நிறுவனங்கள் புதுப்புது போட்டிகளையும் சவால்களையும் சந்தித்துக்கொண்டிருந்தன. இதனை எதிர்கொள்ள அவர்கள் பல்வேறு உத்திகளைக் கையாள வேண்டியிருந்தது. வாகனதயாரிப்புத் துறையில் இருந்த மாருதிசுசூகி நிறுவனமும் அப்போது இதே வகையானச் சவாலைத்தான் சந்தித்தது.

பொதுவாக எந்த ஒரு நிறுவனமும் தனது நிறுவனத்தின் விற்பனையை / சேவையை அதிகரிக்க இரு வகையானச் தத்துவங்களைக் கையாள்வார்கள். ஒன்று காம்பிடிட்டிவ் அட்வாண்டேஜ் (Competitive advantage – தனது பொருளை / சேவையை மற்றவையுடன் இருந்து வித்தியாசப்படுத்திக் காட்டுபவை), மற்றொன்று ப்ரடக்டிவ் அட்வாண்டேஜ் (Productive advantage – மற்ற பொருட்களை விட தனது பொருட்களை குறைந்த விலையில் விற்றல்). விலையைக் குறப்பது என்றால் சும்மாவாக குறைத்து விடவிடியாது.

தனது வாகனங்களை குறைந்த விலைக்கு விற்க மாருதி நிறுவனம் அமல்படுத்திய முதல் விஷயம் லீன் மேனேஜ்மெண்ட் (Lean management). இந்த முறையில், அவர்கள் தங்கள் நிறுவனத்தின் அனைத்து பொருட்கள், செயல்கள் எல்லாவற்றையும் கேள்விக்குட்படுத்தினர் – அதன் தேவை என்ன, செலவு என்ன, எவ்வாறு குறைக்க முடியும் என்று. இந்த முறையில் அவர்கள் மாற்றம் ஏற்படுத்திய முதல் விஷயம் – ஒரு தொழிலாளி அசம்ப்ளிங் யூனிட்டில் வேண்டிய டூல்சை எடுக்க நடக்க வேண்டிய தூரத்தை 15 அடிகளிலிருந்து 6 அடியாகக் குறைத்தனர் (இதற்காகச் செலவு செய்து, ராக் சிஸ்டத்தை இடம் மாற்றி, அதனுடன் ஒரு கண்வேயர் சிஸ்டத்தை இணைத்தார்கள்). மிகச் சாதாரணமாகக் காணப்படும் இந்தச் செயலின் மூலம் அவர்கள் அடைந்த பயன், ஒரு நாளில் 20 நிமிடங்களை அவர்களால் சேமிக்க முடிந்தது. இந்த 20 நிமிடங்களில் அவர்கள் கூடுதலாக இரண்டு கார்களை தயாரித்தனர் (மாசம் சுமாராக 60 கார்கள் – ஒரு காருக்கு அடிப்படை லாபம் ரூபாய் 20,000 எனில், அதே நிலையானச் செயல்களுக்கு அவர்கள் அடைந்த கூடுதல் லாபம் (60*20000*12) வருடத்திற்கு ரூ 14,400,000 (ஒரு கோடியே நாற்பத்து நான்கு லட்சம்). அப்படி ஆரம்பித்த அவர்களது சீர்திருத்தம், வெண்டார் மேனேஜ்மெண்ட், டிஸ்ட்ரிப்யூஷன் சிஸ்டம் என்று பல தளங்களுக்கும் கொண்டு சென்றதன் விளைவுதான், குறைந்த விலையில் அவர்களால் காரினை விற்க முடிந்தது.

———————————————————————————————————————————————————————————————

ஆக ’காஸ்ட் கட்டிங்’ என்ற இந்த தாரக மந்திரம் இந்திய துணைக் கண்டத்தின் நிறுவனங்களில் ஒன்றும் புதிய விஷயம் இல்லை. சில நாட்களாக காணமல் போயிருந்த இந்த தாரக மந்திரம் மீண்டும் பழைய உத்வேகத்துடன் பலருடைய வாயிலிருந்தும் உதிரத்துவங்கியிருக்கிறது. ரிசஷன், பொருளாதார மந்தம் என்று பல சவால்களைச் சந்தித்துக் கொண்டிருக்கும் இந்தியச் சந்தையில் இது ஒன்றும் ஆச்சரியப்படத்தக்க விஷயம் இல்லை என்றாலும், நிறுவனங்களில் மட்டுமே உதிர்க்கப்பட்ட இந்த மந்திரத்தை இந்த முறை பல அரசியல்வாதிகளும் உதிர்த்ததுதான் மிகப் பெரிய ஆச்சரியம்…

காஸ்ட் கட்டிங் என்ற தாரக மந்திரத்தை அரசியல்வாதிகள் உதிர்த்தாலும், அதனைத் தொடர்ந்து செய்த காமெடிதான், இதுவரை எந்த திரைப்படத்திலும் வந்த்தை விட மிகப் பெரிய காமெடியாக இருக்கிறது… செலவுகளைக் குறைக்க மத்திய அரசு எடுத்த முதல் நடவடிக்கை தனது அமைச்சர்களை, பாராளுமன்ற உறுப்பினர்களை வெளிநாட்டுப் பயணங்களைக் குறைத்துக் கொள்ளும்படியும், விமானத்தில் சாதாரண வகுப்பில் பயணம் செய்யும் படியும் அறிவுறுத்தியுள்ளது இது தவிர பிரணாப் கேட்டுக்கொண்ட இன்னொரு விஷயம், அமைச்சர்கள் தங்குவதும், செய்தியாளர்களுடனான சந்திப்பை நடத்துவதையும் ஐந்து நட்சத்திர விடுதிகளில் நடத்தக் கூடாது என்பதுதான், ஏனெனில் அது தேவையற்ற செலவு என்பதுதான் காரணமாம்!!! அப்படி என்றால் இத்தனை நாள் அத்தகைய தேவையற்ற செயல்கள்தான் செய்யப்பட்டனவா என்ற கேள்வி யாரும் கேட்கவுமில்லை, அதற்கு பதிலுமில்லை.

அறிவிப்பு வந்தவுடன் சொல்லி வைத்தாற் போன்று சசி தாரூரும், எஸ்.எம். கிருஷ்ணாவும் தங்களது விடுதி அறையை காலி செய்து விட்டு அரசு விருந்தினர் மாளிகைக்கு ஜாகையை மாற்றினார்கள்… அவர்களுக்கென்று அரசு மாளிகை இருக்கும் போது இத்தனை நாள் ஏன் நட்சத்திர விடுதியில் அவர்கள் தங்கினார்கள் என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம்!!! சரி போனாவர்கள் சும்மா சென்றார்களா? அவர்கள் விடுதியில் தங்கியிருந்த பொழுது சொந்த செலவிலதான் தங்கினோம் என்றும், இருந்தும் பிரணாப்ஜியின் வேண்டுகோளுக்காக காலி செய்கிறோம் என்று அறிக்கை வேறு!!! எனக்கு புரியாத விஷயம் என்னவென்றால், அவர்களுடைய சொந்த காசுன்னா யாரு சொன்னா என்னான்னு அங்கேயே தங்கலாமே!!! எதற்காக இதை செலவைக் கம்மி பண்ணும் விஷயத்தில் செய்தியாகக் கொண்டு வரவேண்டும்? இதுதான் போகட்டும் என்றால், இந்த வேண்டுகோளை ஏற்று பஞ்சாயத்து ராஜ் அமைச்சர், நார்வேக்கு போறதா இருந்த பயணத்தை ரத்து செய்கிறேன்னு பெருமையா அறிக்கை விடுகிறார்!!! எனக்கு தலையே சுத்துது, இந்தியாவோட பஞ்சாயத்து முறைக்கும், நார்வேக்கும் என்ன சம்பந்தம்? ஏற்கனவே கூவத்தை சுத்தம் பண்ண ஐடியா கற்றுக் கொள்கிறோம் என்று அமெரிக்காவிற்கு சுற்று பயணம் சென்று வந்த நம்மாட்கள் காதில் இது போன்ற ஐடியாக்கள் விழுந்தால் என்னாவது?

என்னதான் நகைச்சுவைக்கென்று தனித்தனி சானல்கள் வந்தாலும் அரசாங்கத்தின் செய்திகளில் அல்லது அறிவுப்புகளில் தருகின்ற காமெடிக்கு இணையே இல்லைதான். கூட்டணி அரசு என்பதால் ஒன்றாகவே இருந்தாலும் இந்த விஷயத்தில் போட்டி போட்டுக் கொண்டு காமெடி செய்வதில் மாநில திமுக அரசோ அல்லது மத்திய காங்கிரசு அரசோ சளைப்பதில்லை… மத்திய அரசுக்கு செலவுகள் அதிகமாகிறது என்று அமைச்சர்களை விமானத்தில் சாதாரண வகுப்பில் பயணம் செய்யுங்கள் என்று பிரணாப் சொன்னதன் மூலம் தமிழ் செய்தி ஊடகங்கள் உட்பட அனைத்தும் அவரை மொய்த்ததை காணப் பிடிக்கமாலோ என்னமோ, மாநில அரசின் அத்தனை அமைச்சர்களும், அதிகாரிகளும் வேலை வெட்டியை விட்டு விட்டு கருத்தரங்கு நடத்துகிறார்கள், நமக்கு நாமே திட்டத்தின் மூலமாக விருதினை வழங்குகிறார்கள், உலகத் தமிழ் மாநாடு நடத்துப் போகிறோம் என்று அறிக்கை விடுகிறார்கள்…

தாமதமாக செயல்படுத்திவருவதால் பொதுத்துறையின் 54 திட்டங்களில் (தெர்மல் மற்றும் ஹைட்ரோ) ஏற்பட்டுள்ள நட்டம் மட்டுமே சுமார் ரூ 29,000 கோடிகள். இந்த லட்சணத்தில்தான், இன்னும் வாழ்க்கைத்தரத்தில் மற்ற முன்னேறிய மாநிலங்கள் அளவுக்கு முன்னேறாத உத்திரபிரதேசத்தில் ரூ 2,500 கோடிக்கு சிலைகளை அமைக்கும் திட்டம் கனஜோராக நீதிமன்ற உத்தரவையும் மீறி நடக்கிறது. இதேநிலை தொடர்ந்தால் செலவை ஈடுகட்ட, அமைச்சர்களிடமிருந்து மட்டுமல்ல எல்லாரிடமிருந்தும் சம்பளத்தில் 20% வாங்கினாலும் வாங்குவார்கள் (ஆனால் அமைச்சர்களிடம் சொன்னது போல் கண் துடைப்பாக இல்லாமல், நம்மிடம் உண்மையாக வாங்கி விடுவார்கள்)

என்னதான் ஜனநாயகம், மக்கள் அரசு என்று பெயருக்குச் சொன்னாலும், அரசின் பல நடவடிக்கைகளை விருப்பமிருந்தாலும், இல்லாவிட்டாலும், கேள்விக்குட்படுத்தும் உரிமையோ அல்லது தெளிவோ மக்களுக்கு இருப்பதில்லை. தப்பித்தவறி தெளிவடைந்து விடக் கூடாது என்றுதானோ என்னமோ பல விஷயங்களில், அரசுக்கும், பயனாளர்களுக்கும் இடையே பெருத்த இடைவெளியே இருக்கிறது……காஸ்ட் கட்டிங் என்ற விஷயத்தில் மாருதி முதல் இன்றைய நேனோ வரை பல நிறுவனங்கள் முன்னுதாரணமாக இருந்தது மட்டுமல்ல, உலகையே திரும்பிப் பார்க்கவும் செய்துள்ளனர். ஒரு காலத்தில் இந்தியாவில் பொருளாதார்ச் சீர்திருத்தத்தை அறிமுகப்படுத்திய ஒருவருடைய தலைமையில் அமைந்த ஒரு அரசில்தான் இது போன்ற பொறுப்பற்ற, விளம்பரத்தை மட்டுமே தேடுகின்ற, ஆதாயமளிக்காத வெட்டி விஷயங்கள் நடந்தேறுகின்றன என்பது வேதனையை மட்டுமல்ல, நம் நாட்டின் எதிர்காலம் பற்றிய பயத்தையும் ஏற்படுத்துகிறது….

தொடர்புடைய பதிவு:

http://www.nesamudan.com/blog/2009/09/16/austerity/ 

Advertisements
பிரிவுகள்:அரசியல் குறிச்சொற்கள்:
  1. 8:12 முப இல் ஒக்ரோபர் 6, 2009

    பின்குறிப்பு:

    ஒரு சின்ன புள்ளி விவரம் சொல்றாங்க…சோனியா அம்மையார் பாதுகாப்பு கொடுக்க வேண்டியங்க லிஸ்ட்டுல ரொம்ப முக்கியமான இடத்துல இருக்கறதுனால, விமானத்துல பயணம் செய்யுறப்ப 5 வரிசைக்கு மத்தவங்க யாரும் உக்கார முடியாது. அப்ப பக்கமா அவங்க எக்கனாமி கிளாஸ்ல மும்பைக்கு வந்தப்ப 15 சீட்டுக்கு ஆகியிருக்கக் கூடிய செலவு ரூ. 55,000. இதே பிஸினஸ் கிளாஸ்ல வந்திருந்தா ஆகியிருக்கக் கூடிய செலவு சுமார் ரூ 62,000. ஆக மொத்தம் 7,000 ரூவாய்க்குதான் இத்தனை அளப்பறையும்!!!! (http://www.indiavoting.com/satyamev-jayate/upas-austerity-drive-does-it-serve-any-purpose)

    உதவிய தளங்கள்:
    http://www.mrv.net.in (கதை)

    http://www.indiavoting.com/satyamev-jayate/upas-austerity-drive-does-it-serve-any-purpose

    http://www.expressbuzz.com/edition/story.aspx?Title=Congress+austerity+drive+doesn%E2%80%99t+pass+muster&artid=Ob8gseCvpB4=&SectionID=b7ziAYMenjw=&MainSectionID=b7ziAYMenjw=&SectionName=pWehHe7IsSU=&SEO=Pranab%20Mukherjee,%20Rahul%20Gandhi,%20Rajiv%20Pratap%20Rudy

    http://news.outlookindia.com/item.aspx?666209

    http://karsewak.blogspot.com/2009/09/sonia-gandhi-mm-singh-austerity-call-is.html

    http://acorn.nationalinterest.in/2009/09/09/in-defence-of-messrs-krishna-and-tharoor/comment-page-1/

    http://www.financialexpress.com/news/aiyer-favours-norwegian-experience-to-make-panchayati-raj-vibrant/235952/

  2. 11:30 பிப இல் ஒக்ரோபர் 6, 2009

    Superb NARESH

  3. 7:13 முப இல் ஒக்ரோபர் 7, 2009

    நன்றி ஸ்டாலின்!!!

  4. அகமது சுபைர்
    8:51 முப இல் ஒக்ரோபர் 8, 2009

    நரேஷ்,

    ஒரு அருமையான விவாதத்திற்கான வித்து பொதிந்திருக்கும் இந்த கட்டுரையை அப்படியே உள்வாங்கிக்கொண்டு பதிலளிப்பது என்பதற்கு ஒரு தேர்ந்த அறிவாற்றல் தேவையாயிருக்கிறது நண்பா.

    அதற்கான அறிவாற்றலை வளர்த்துக்கொள்ளும் உத்வேகம் இருக்கும் அதே நேரத்தில், அறிந்தவற்றைப் பகிர்ந்துகொள்வதில் உண்டாகும் ஆனந்தத்தை அறிந்தவர்கள் அமைதியாய் இருப்பதில்லை.

    இங்கே விவாதப் பொருளாய் இருப்பது அரசாங்கத்தின் “காஸ்ட் கட்டிங்”.

    ஒன்றை நாம் அங்கீகரித்தே ஆக வேண்டும், காஸ்ட் கட்டிங் என்ற ஒன்று அரசியல்வாதிகளின் வாயிலிருந்து வெளிவந்திருப்பதே நாம் செய்த புண்ணியம். 🙂
    ஒரு தொழில் நிறுவனத்தின் “காஸ்ட் கட்டிங்”கும் அரசின் செலவினங்களின் “காஸ்ட் கட்டிங்க்”கும் எப்போதும் ஒப்பிட்டுப் பார்க்க இயலாதவை.

    அரசிற்கு “காஸ்ட் கட்டிங்” என்பது “Reducing Overhead” மட்டும் தான்.

    இங்கே ஓவர்ஹெட் என்ற சொல்லில் அடங்கும் செலவினங்கள், சம்பளம், மானியம் உட்பட அரசின் அத்தனை செலவும்.

    ஒரு சின்ன கணக்குக்காய் சொல்லும்போது “Number of people Involved will be directly proportional to the Cost” – அதாவது ஆட்களின் தேவைக்கேற்ப செலவினங்களிலும் மாற்றம் இருக்கும்.
    அரசாங்க சக்கரம் சுழல சில அத்தியாவசிய செலவு இருந்தே ஆக வேண்டும். நாட்டின் பாதுகாப்பு முதலானவற்றில் செலவினங்கள் இருந்தே ஆகவேண்டும்.

    அதனை ஏற்றுக்கொள்ளும் அதே பட்சத்தில் துணை, இணை அமைச்சர்கள் என்பதே தேவையில்லாத ஒன்று என அடித்துச்சொல்லலாம்.

    அவர்களுக்கான அலுவலகம், 4 செயலர்கள், வாகனம், வீடு, பாதுகாப்பு, இத்யாதிகளை நினைத்தாலே பற்றிக்கொண்டு வருகிறது..

    காபினெட் அந்தஸ்தில் இருப்பவர்களும் முழுநேரமாய் அதே வேலை செய்தால் இத்தனை பேருக்கு காபினெட் அந்தஸ்தும் தேவை இல்லை.

    என்னத்த சொல்லி என்னத்த செய்ய.. இதெல்லாம் மன்மோகன் ஐயாவுக்கு ஒருத்தர் சொல்லியா தரணும். சாதாரண குடிமகன் ஏமாந்தா போதும்னு நினைக்குறாங்க.

    படிச்ச நாமெல்லாம் ஓட்டுப்போடாம உக்கார்ந்து பேசி என்ன ஆகப் போகுது?? (நான் என்-ஆர்- ஐ என்பதால் எனக்கு ஓட்டுரிமை இல்லை)

  5. 8:54 முப இல் ஒக்ரோபர் 8, 2009

    என்ன செய்வது… ??? இதை ஒரு பெரிய விடயமாக எல்லா தொலைக்காட்சி செய்தி நிறுவனங்களும் போட்டி போட்டுக்கொண்டு சொல்கின்றன… மக்களை முட்டாளாக்குகிறான் என்று சொல்ல ஒருவருக்கும் துணிவில்லை… துணிவிருப்பவனுக்கு இருக்கும் ஊடகத்தின் துணை குறைவு….

  6. 8:55 முப இல் ஒக்ரோபர் 8, 2009

    சுபைர், காஸ்ட் கட்டிங் பற்றிய கருத்துப்பகிர்வுக்கு நன்றி!!!

    //ஒரு தொழில் நிறுவனத்தின் “காஸ்ட் கட்டிங்”கும் அரசின் செலவினங்களின் “காஸ்ட் கட்டிங்க்”கும் எப்போதும் ஒப்பிட்டுப் பார்க்க இயலாதவை.//

    மிக உண்மையே!!!

    எல்லாமே காஸ்ட் கட்டிங் என்ற ஒற்றை விஷயத்தில் வந்தாலும், இடத்தின் தன்மையைப் பொறுத்து செயல்பட வேண்டிய முறை மாறுபடுகிறது….அப்படிப்பட்ட ஒரு விஷயத்தை இவர்கள் என்னமோ மிகச் சாதாரணமாக எல்லாரும் இரண்டாம் வகுப்பில் போங்க, ரெண்டு டீக்கு பதிலா ஒரு டீயா குடிங்க சரியாகிவிடும் என்ற ரேஞ்சில் பேசிக்கொண்டிருப்பதுதான் மிகப் பெரிய வேதனை!!!

    நிறுவனங்களில் செயல்படுத்துவதை அப்படியே, அரசுக்கு செயல்படுத்த முடியாதெனினும், சில அடிப்படை தத்துவங்களை பின்பற்றலாம். உதாரணத்திற்கு மாருதியின் லீன் மேனேஜ்மெண்ட் விஷயத்தை எடுத்துக் கொள்ளலாம்…இதில் அவர்கள் அந்நிறுவனத்தின் எல்லாப் பொருட்களுக்கான செலவீனங்கள், ஒவ்வொரு செயல்முறையும் (ப்ராசஸ்) நடைபெறும் விதம், அதற்கான செலவீனங்கள், அதைக் குறைக்கும் முறைகள் என்று ஆராய்ந்தனர்…ஒரு சின்ன டேபிள் லேம்ப்பைக் கூட அவர்கள் விட்டு வைக்க வில்லை. அதற்கான செலவையும் ஆராய்ந்தனர்….

    அரசின் அமைப்பிலோ நடைபெறும் வெட்டிச் செலவுகள் பல இன்னமும் கவனிக்கபடாமலேயே இருக்கின்றன. அரசின் ஓய்வு விடுதிகள் இருக்கும் பொழுது, நட்சத்திர விடுதிகளில் தங்கவேண்டிய, பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்த வேண்டிய அவசியம் என்ன என்று யாரும் கேட்பதில்லை!!!

    எந்தக் காரியத்திற்காக ஒரு பயணம் மேற்கொள்ளப்படுகிறதோ, அந்தக் காரியத்தை நிறைவேற்ற அந்தப்பயணம் சரியாக அமைந்ததா என்பதனைக் கேள்விக்குட்படுத்த முடிவதில்லை…ஒரு நிறுவனத்தில் ஒரு விற்பனை அதிகாரி, மார்க்கெட்டிங்கிற்காக வெளியூர் பயணம் மேற்கொண்டால், முடிவில் விரிவான அறிக்கையை, அதன் வெற்றி விபரம் முதற்கொண்டு அளிக்க வேண்டும்….இரண்டு மூன்று பயணங்களுக்குப் பின்பும், அதில் ஆதாயம் கிடைக்கவில்லையெனில் அவர் பல முனைகளிலிருந்தும் நெருக்கடிக்கு உள்ளாவார்….ஆனால் அந்தக் கஷ்டமெல்லாம் நம் அரசியல்வாதிகளுக்கோ, சில அரசு அதிகாரிகளுக்கோ கிடையாது!!!

    சுமார் ஒரு வருடத்திற்கு முன்பே இந்தியா டுடேயில், இது போன்றா தேவையற்ற வெளிநாட்டுப் பயணங்கள் பற்றி கட்டுரை வந்திருந்தது…பயணமே தேவையற்றதாக இருக்கும் போது, அதில் இரண்டாம் வகுப்பில் போனால் என்ன? ஓசியில போனால் என்ன?

    கூவத்தை சுத்தம் பண்ண நயாகராவுக்கோ எங்கேயோ போனர்கள் நம்முடைய ஆட்கள், ஆனா இன்னமும் கூவம் சுத்தம் ஆகலியே??? அப்புறம் அடுத்த ஆட்சி வரும், அவங்க தனியா ஒரு பயணம் போவாங்க….நிறுவனத்திலோ இது போன்ற விஷயங்கள் ப்ராசஸ் பண்ணி வைக்கப்படும்…அந்த விற்பனை அதிகாரி வேலையை விட்டு போனாலும், அடுத்து வருபவருக்கு எல்லா விஷயங்களும் டாக்குமெண்ட் பண்ணி வைக்கப்பட்டிருக்கும்…..

    ஏமாறுதலை விட, இயலாமைதான் அதிகம் வாட்டுகிறது….

  7. சகாராத்தென்றல்
    8:57 முப இல் ஒக்ரோபர் 8, 2009

    இன்று எனக்கு மடலில் வந்த ஒரு செய்தி இது. கூகுளில் மெனக்கெட்டுத்
    தேடியதில் இதற்கான சுட்டியும் கிடைத்தது. “காஸ்ட் கட்டிங்” என்பதை
    தப்புத்தப்பாக விளங்கிக் கொண்டு (விளங்கிக் கொண்டிருக்கிறார்களா என்பது
    வேறு விஷயம்) அரசியல் பண்ணும் தலைவலிகளைப் பற்றிய ஒரு பதிவு இது.

    சுட்டி: http://www.nesamudan.com/blog/2009/09/16/austerity/

  8. 8:57 முப இல் ஒக்ரோபர் 8, 2009

    கட்டுரைக்கு நன்றி சாகாரா!!!

    அரசின் அறிவிப்பில் நன்மையையை விட விளம்பரம் மட்டுமே பிரதானமாயிருக்கிறது…

    அடிப்படை அறிவு கூட இல்லாதவர்கள் பேசும் பேச்சைப் போலவே இருக்கிறது…ஒரு பக்கம் 2500 கோடி செல்வில் வெறுமனே, யாருக்கும் பயனற்ற சிலைகளை நட்டு விடுவது, இலவசமாக எல்லாவற்றையும் அள்ளி வழங்குவது, இன்னொரு பக்கம் காசு இல்லை என்பதெல்லாம் என்னவென்று சொல்வது….

    ஒரு நாளில் முதமைச்சர்கள் முதற்கொண்டு அமைச்சர்கள் வரை அனைவரது வசிதிக்காகவும், பாதுகாப்புக்காகவும் அரசாங்கத்தால் செலவளிக்கப்படும் பணம் எவ்வளவோ??? ஆனால் அதைப்பற்றிய கவலை இல்லாமல் முதல்வரை மாறி மாறி புகழ்வதை வேடிக்கை பார்க்க என்று எல்லாரும் வேலையை விட்டு விட்டு சென்றால் அதெல்லாம் வீண் இல்லையா? இது போன்ற மறைமுகச் செலவுகள் எத்தனையோ இருக்கின்றனவே!!!

    கடைசியா ஒண்ணே ஒண்ணுதான் தோணுது!!! அய்யா புண்ணியவானுங்களா, உலக வங்கில காசு வாங்கி கூட செலவு பண்ணுங்க, ஆனா வேலை பண்ணுங்க!!! இதைச் சொன்னா சண்டைக்கு வந்துடுவாங்க!!!

  9. சகாராதென்றல்
    8:59 முப இல் ஒக்ரோபர் 8, 2009

    //ஒரு தொழில் நிறுவனத்தின் “காஸ்ட் கட்டிங்”கும் அரசின் செலவினங்களின்
    “காஸ்ட் கட்டிங்க்”கும் எப்போதும் ஒப்பிட்டுப் பார்க்க இயலாதவை.//

    இக்கருத்து சரியே. ஆனால், செலவினங்களைக் குறைப்பது என்ற நோக்கில்
    பார்க்கும் போது இரண்டின் அடிப்படைகளும் ஒன்றுதான். முற்றிலுமாகத்
    தவிர்க்கப்பட வேண்டியவை அல்லது தற்போதைய சூழலுக்கு இச்செலவு தேவையில்லை
    என்பது ஒரு வகை. அன்றாட செயல்பாடுகளில் எவ்விதம் முன்னேற்றத்தைக்
    கொண்டுவருவது என்பது இன்னொரு வகை (இதைத் தான் மாருதி பின்பற்றியது) இந்த
    இரண்டுமே நிறுவனங்களுக்கும் அரசுக்கும் பொருந்தும்.

    6 சிக்மா கான்செப்டை ஓரளவிற்கு உபயோகத்தில் கொண்டு வந்தாலே பெரும் அளவில்
    செலவினங்களைக் குறைத்து அதிக பயனீட்டைப் பெற முடியும். இதன் அடிப்படைத்
    தத்துவமே ‘Reduce the variance and focus on the target’ என்பது தான்.
    இம்முறை நிறுவனங்களுக்கோ அல்லது சிறு புராஜெக்ட்டுகளுக்கோ அல்லாமல்
    பொதுவாக எல்லாவற்றிற்கும் பயனளிக்கக் கூடியவையே (தனி மனிதனின் அன்றாட
    செயல்பாடுகளும் இதனுள் அடக்கம்)

    இங்கே நமது அரசியல்வாதிகளுக்கு டார்கெட் என்றால் என்னவென்று புரிந்து
    கொள்வதற்குள்ளாகவே 5 வருடங்கள் ஓடி விடுகிறது. அவ்வளவு மந்தநிலையில்
    ஓடிக்கொண்டிருக்கிறது அரசு இயந்திரம். இதில் போய் 6 சிக்மா, காஸ்ட்
    கட்டிங் என்றால் பேந்தப் பேந்த விழிப்பார்கள் அல்லது உதைக்க வருவார்கள்.

  10. 9:00 முப இல் ஒக்ரோபர் 8, 2009

    //6 சிக்மா கான்செப்டை ஓரளவிற்கு உபயோகத்தில் கொண்டு வந்தாலே பெரும் அளவில்
    செலவினங்களைக் குறைத்து அதிக பயனீட்டைப் பெற முடியும்//

    அருமை சகாரா!!!

    6 சிக்மாவைப் பற்றி பல விஷயங்கள் சொல்லியிருக்கிறீர்கள்….நானே 6 சிக்மாவைப் பற்றி ஒரு பதிவு போட வேண்டும் என்று நினைக்கிறேன், முடியவில்லை….

    அரசு எந்திரத்துகிட்ட வேலை செய்யச் சொன்னாலே கெட்ட வார்த்தை பேசுனதா நினைச்சி அடிக்க வருவாங்க…இதுல டார்கெட் வெச்சு வேலை செய்யச் சொன்ன அவ்ளோதான்…

  11. 11:15 பிப இல் ஒக்ரோபர் 9, 2009

    மிகச் சிறப்பான பதிவு. தாமதமான பின்னூட்டத்திற்கு வருந்துகிறேன்.

    நானே இதைப் பற்றி ஒரு பதிவு இட வேண்டுமென்று இருந்தேன்.

    6 சிக்மா, செலவு மேலாண்மை பற்றியெல்லாம் வெளிநாடுகளில் படித்த இவர்களுக்கு தெரியாமல் இருக்காது. இருந்தும் செயல்படுத்தாமல் இருப்பதற்கு வேறு காரணங்கள் உண்டு.

    காங்கிரஸ் கலாச்சாராங்களில் முக்கியமான ஒன்று. முழுமையாக எதிலும் ஈடுபடாமல் தலையையும் வாலையும் மட்டுமே காட்டி கொண்டிருப்பது. இந்தியாவின் இன்றைய பல பிரச்சினைகளுக்கு, இந்தியாவை பல ஆண்டுகள் ஆண்டு வந்தாலும், காங்கிரஸ் ஆட்சி, முழுமையான தீர்வு காண முயற்சிக்காததே காரணம்.

    பல பிரச்சினைகளை உதாரணமாக சொல்லிக் கொண்டே போகலாம். நான் சொல்ல விரும்பும் முக்கிய பிரச்சினை அடிப்படை கல்வி. இந்த விஷயத்தில் மத்திய அரசுகள் எப்போதுமே உறுதியான நடவடிக்கை எடுத்ததில்லை. கல்வி அனைவரிடமும் சென்று சேர்ந்திருந்தால், மற்ற ஆசிய நாடுகளைப் போல நாமும் குறைந்த பட்ச மனித வள வளர்ச்சியையாவது பெற்றிருப்போம். இப்போதிருப்பதை போல உலக தர வரிசையில் கடைசியாக இருந்து, மக்களா மாக்களா என்ற கேள்வி எழுந்திருக்காது.

    இதே போல இன்னும் பல சிறப்பான பதிவுகளை இட வாழ்த்துக்கள்.

  12. 11:58 முப இல் ஒக்ரோபர் 15, 2009

    பதிவு அருமை,மாருதியின் சிக்கன நடவடிக்கை படித்து வியந்தேன். பாராட்டுக்கள் நரேஷ்.

    //என்னதான் ஜனநாயகம், மக்கள் அரசு என்று பெயருக்குச் சொன்னாலும், அரசின் பல நடவடிக்கைகளை விருப்பமிருந்தாலும், இல்லாவிட்டாலும், கேள்விக்குட்படுத்தும் உரிமையோ அல்லது தெளிவோ மக்களுக்கு இருப்பதில்லை//
    தெளிவான வார்த்தை சேர்ப்பு.

  1. No trackbacks yet.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: