இல்லம் > சினிமா > நினைத்தாலே இனிக்கும் – திரைப்பார்வை

நினைத்தாலே இனிக்கும் – திரைப்பார்வை

சன் டிவியின் திரைப்படம் என்றாலே பின்னங்கால் பிடறியிலடிக்க ஓடும் நான் துணிந்து அவர்களுடைய ‘நினைத்தாலே இனிக்கும்’ படத்தை பார்க்கச் சென்றேனென்றால் அதற்குக் காரணம் நண்பர் மூலமாக இந்தத் திரைப்படத்தைப் பற்றிய செய்திகளைத் தொடர்ந்து கேள்விப்பட்டிருந்ததும், படத்தின் இயக்குநர் கல்யாணராமன், கடல் மீன்கள், மீண்டும் கோகிலா போன்ற மிகச் சிறந்த திரைப்படங்களை அளித்த ரங்கராஜன் அவர்களின் புதல்வர் என்பதும், ஏற்கனவே வெளியாகியிருந்த இந்தப் படத்தின் பாடல்கள் ஏற்படுத்தியிருந்த எதிர்பார்ப்பும்தான்…

மற்ற படங்களையும், பாடல்களையும் அப்படியே காப்பி+பேஸ்ட் செய்து விட்டு இயக்குநர் என்ற இடத்திலும், இசையமைப்பாளர் என்ற இடத்திலும் தனது பெயரை போட்டுக் கொள்ளும் ஆட்களுக்கு மத்தியில், படத்தின் பெயர் ஆரம்பிக்கும் முன்னரே இந்தப் படம் மலையாளத்தின் ’கிளாஸ்மேட்ஸ்’ திரைப்படத்தை தழுவி எடுக்கப்பட்டது (பல மாற்றங்கள் செய்து வந்திருந்தாலும்) என்று அறிவித்ததற்காகவே  இயக்குநரை தாராளமாகப் பாராட்டலாம் (எனக்கு தெரிந்து இதுதான் இப்படி வருவது இதுதான் முதல் படம் என்று நினைக்கிறேன்)….

படத்தின் பெயர் போடும் போது, கறுப்பு வெள்ளையில், மென்மையான இசையின் பிண்ணனியில் காமிராக்கள் கல்லூரிக் கட்டிடங்களினூடே மெல்ல நம்மை அழைத்துச் சென்று, இறுதியில் மழைநீரில் மேலிருந்து ஒரு வண்ணப் பூ உதிர்ந்து விழும் இடத்தில் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் என்று இயக்குநர் குமரவேல் (முதல் படம்!) என்று பெயர் போடும் போது மெல்லிய புன்னகையையும், சற்றே எதிர்பார்ப்பையும்  ஏற்படுத்துகிறது…

படத்தின் ஆரம்பக் காட்சிகளிலேயே இது ஒரு ’லோ பட்ஜெட் படம்’ என்பது மிகத் தெளிவாக உணர்ந்தாலும், ஒளிப்பதிவின் நேர்த்தியும், அழகும் அதனை ஒத்துக் கொள்ளவைக்க மறுக்கிறது. ’இது மாணவர் உலகம்’ பாடலை காட்டும் போதே ஒளிப்பதிவின் நேர்த்தி மனதில் அழுத்தமாகப் பதிகின்றது.

'இது மாணவர் உலகம்; பாடம்

'இது மாணவர் உலகம்; பாடல்

நட்பையும், கல்லூரி நினைவுகளையும் சொல்லும் படமென்றால், கல்லூரி கலாட்டாக்களையும், அட்டகாசங்களையும், நெகிழ்வுகளையும், மென்மையான காதலையும் சொல்லி அசத்தியிருக்க வேண்டாமா??? மெதுவாக ஆரம்பிக்கும் திரைக்கதை, முதல் பாதி முழுக்க ஆமை வேகத்திலேயே செல்கிறது. இடைவேளைக்கு சற்று முன்பு வரை படத்தில் கவனத்தை ஈர்க்கும் சம்பவங்களோ, காட்சிகளோ, வசனங்களோ இல்லவே இல்லை….அதிலும் முதல் பாதியில் சில காட்சிகள் ஏனோ ஒரு முழுமையாக இல்லாதது போன்ற ஒரு உணர்வை ஏற்படுத்துகிறது. முதல் திரைப்படம் என்பதனால் இது பராவாயில்லையாகத் தோன்றினாலும், கமலஹாசன், பாலுமகேந்திரா போன்றோரிடம் உதவி இயக்குநராக இருந்து வந்தவரிடம் இதை ஒப்புக் கொள்ள முடியவில்லை.

பாக்யராஜ் வசனம் பேசுவதற்காகவும், சக்திக்கு ஆஸ்துமா இருக்கிறது என்பதை உணர்த்துவதற்காகவே ஒரு கால்பந்து போட்டியை வைத்தது போலிருந்தது, சமீப காலங்களில் இவ்வளவு மோசமாக ஒரு விளையாட்டுப் போட்டியைக் காட்டி நான் பார்த்த்தில்லை….அதற்கு முந்தைய காட்சிகளிலெல்லாம் பயங்கரமாக சண்டை போட்டு விட்டு திடிரென்று கல்லூரி கலாட்டாவின் போது, பிரியாமணியை பிருத்விராஜ் காப்பாற்றியவுடன், அவரது பர்சில் தனது புகைப்படம் இருக்கக் காரணம் தன்னைக் காதலிப்பதுதான் என்று உணர்ந்தவுடன் காதலை ஒத்துக் கொள்ளும் போது ’இந்த மேட்டருல உன் டோடல் ரியாக்‌ஷனே அவ்ளோதானா???’ என்றுதான் பிரியாமணியைப் பார்த்து கேட்கத் தோன்றுகிறது”…

ஆமை வேகத்தில் செல்லும் திரைக்கதைக்கு மத்தியில் முதல் பாதியிலேயே நான்கு பாடல்கள் வருவது சற்றே சலிப்பை ஏற்படுத்தினாலும், அனைத்து பாடல்களையும் படமாக்கியிருக்கும் விதம் மிக மிக அழகு…’செக்சி லேடி’ பாடல் (யாருங்க அந்த அம்மிணி???) அருமையாக இருந்தாலும், அந்தப் பாடல் எதற்காக அங்கு வருகிறது என்பது தியேட்டரில் இருக்கும் யாருக்குமே புரியவில்லை… எடிட்டிங் கோளாறா, என்ன பிரச்சினையென்று தெரியவில்லை, முழு படமுமே இரண்டே கால் மணி நேரம்தான் என்றாலும், மூணு மணி நேரம் ஓடிய ஒரு உணர்வை ஏற்படுத்துகிறது…

'அழகாய் பூக்குதே' பாடல்

'அழகாய் பூக்குதே' பாடல்

முதல் பாதியில் ரொம்ப லேசானதாக இருந்த்தாலோ என்னமோ இரண்டாவது பாதியில் வரும் திடுக்கிடும் திருப்பங்களோ, வேகமோ, காட்சிகளோ எதுவுமே மனதில் பதிய மறுக்கிறது. ’அழகாய் பூக்குதே’ பாடல் படமாக்கியிருக்கும் விதம் மிக மிக அருமை என்றாலும், பாடல் வரும் போது தியேட்டரில் பலருக்கு சலிப்பு ஏற்பட்டு விடுகிறது. இறுதிக் காட்சியில் பாக்யராஜ் அனைவரையும் நிற்க வைத்து வசனம் பேசும் போது நாடக பாணியாகத் தோன்றுகிறது.

இறுதிக் காட்சியில் வரும் ‘உங்க எல்லார்கிட்டயும் நான் ஃப்ரெண்ட்சா பழகுனேன், ஆனா என் பையன்கிட்ட நான் வெறும் அப்பாவா பழகிட்டேன்”, கால்பந்து போட்டியின் போது பேசும் வசனம் என்று சில இடங்களைத் மற்ற இடங்களிலெல்லாம் வசனம் மிகச் சாதாரணம். சன் டிவி படம் என்பதை, பிரித்விராஜ் மற்றும் நண்பர்கள் தியேட்டரில் திருநங்கைகளுடன் அமர்ந்து படம் பார்க்கும் காட்சியின் மூலம்தான் நிரூபிக்க வேண்டுமா??? ராம்கி திரைப்படம், ஈரமான ரோஜாவே முதற்கொண்டு இன்னும் எத்தனைக் காலத்துக்கு திருநங்கைகளை அவமானப் படுத்த வேண்டும்????

லோ பட்ஜெட் படமாக இருந்தாலும், காட்சிகளை மிக அழகாக காட்டுவதில் இயக்குநர் பட்ட மெனக்கெடல், நுட்பமாக அமைப்பதில் படவில்லை என்றே தோன்றுகிறது.

கல்லூரி திரைப்படங்கள் என்றாலே, ஒற்றைத் தூணாய் நாயகன், அவனைச் சுற்றி அல்லக்கையாக நண்பர்கள் என்று காட்டும் வழக்கத்தை தாண்டி எல்லாருக்கும் சமமான பாத்திரங்கள் உள்ள திரைப்படமாக இருப்பது பெரிய ஆறுதல். படத்தின் நாயகன் பிரித்விராஜ் என்பதை விட, படத்தின் நாயகர்கள் என அனைவரையும் சொல்லலாம். அந்தளவு பிரித்விராஜை விட நடிப்பில் நம்மைக் கவர்வது சக்தி, புதுமுகம் விஷ்ணு மற்றும் கார்த்திக் தான்.

அமெரிக்க மாப்பிள்ளை, சாஃப்ட் கேரக்டரில் பார்த்து பழகிய கார்த்திக், எதிர்மறை வேடம் என்றாலும், சில காட்சிகளில் மட்டுமே வந்தாலும் தனது வாய்ப்பினை மிக அருமையாக (தப்பு பண்ணிட்டேன்னு பாக்யராஜிடம் வார்த்தைகள் நடுங்கியவாறே பேசுவது அருமை!!!) பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்று அடம்பிடிக்காமல், நல்ல பாத்திரத்தில் தன்னைப் பொருத்திக் கொண்ட சக்தியின் நடிப்பு மிக இயல்பாக இருந்த்து. யாருப்பா இந்த ஆளு என்ற எண்ணத்தை ஏற்படுத்தும் நடிப்பு புதுமுகம் விஷ்ணுவுடையது (நல்ல எதிர்காலம் இருக்கு இவருக்கு…..). பிரியாமணியை விட தோழியாக வரும் அனுஜா மிக அழகாக இருக்கிறார், அதிலும் கடைசிக் காட்சியில் பிரித்விராஜிடம் விடை பெற தலையசைக்கும் போது அவர் மட்டுமல்ல, அந்த காட்சியமைப்பும் மிக அழகாக அமைந்துள்ளது….

நாயகர்கள்

நாயகர்கள்

இயக்குநர்கள் முதற்கொண்டு டான்ஸ் மாஸ்டர்ஸ் வரை எல்லாரும் ஹீரோ ரோலுக்கே அலைந்து கொண்டிருக்கும் தமிழ் சினிமாவில் கேரக்டர் ரோல் செய்வதற்கும், சப்போர்டிவ் ரோல் செய்வதற்கும் ஏற்பட்டிருக்கும் வெறுமையை கார்த்திக், விஷ்ணு போன்றோர் மிக அழகாக நிறைவு செய்யலாம்…

வெறுமனே ஒளிப்பதிவோடு இல்லாமல், வண்ணமயமான காட்சிகளை படம் முழுக்க்க் கொடுத்திருப்பதும், அருமையான பாடல்களை உள்ளடக்கியிருப்பதும், பாடல்காட்சிகளை படமாக்கியிருக்கும் அழகும் படத்திற்கு மிகப் பெரிய பலம் (அழகாய் பூக்குதே பாடல் இன்னும் கண்ணுக்குள்ளேயே இருக்கு!!!) என்றால், முதல் பாதியின் மிகச் சாதாரணமான காட்சியமைப்புகளும் (இதே திரைப்படம் முதல் பாதியில் கவனமாக கையாளப்பட்டிருந்தால் அடைந்திருக்கும் வெற்றியே வேறு!!!), குறைந்த பட்சம் ஒரு ஐந்து வருடத்திற்கும் முந்திய ‘ஸ்கிரிப்டோ’ என்ற உணர்வைத் தரும் திரைக்கதையும் இதன் பலவீனங்கள்…

மாசிலாமணி போன்ற திரைப்படங்களையே வெற்றிப்படமாக்கிய சன் டிவிக்கு ’நினைத்தாலே இனிக்கும்’ ஒரு நல்ல வெற்றியாக அமையும் என்பதிலோ, லோ பட்ஜெட் படத்தையே அழகாக கொடுத்ததனால் அடுத்த வாய்ப்பு இயக்குநருக்கு எளிதில் கிடைக்கலாம் என்பதிலோ ஆச்சரியப்பட அதிகம் இல்லை என்றாலும் இரண்டாம் பாதியில் வரும் சில காட்சிகளையும், பாடல் காட்சிகளையும் தவிர்த்து ஒரு நல்ல இயக்குநர் என்ற பெயரை எடுப்பதற்கு இயக்குநர் நிரூபிக்கவேண்டியது இன்னும் அதிகம் இருக்கிறது!!!

மொத்தத்தில் சிரிப்பை வரவழைக்கும் பஞ்ச் டயலாக்குகளோ, முகத்தைச் சுளிக்க வைக்கும் ஆபாச காட்சிகளோ, அதே சமயம் புருவத்தை உயர்த்த வைக்கும் அற்புதக் காட்சிகளோ இல்லாமல் வெளிவந்திருக்கும் ஒரு சராசரி, வண்ணமயமான திரைப்படம் இந்த ‘நினைத்தாலே இனிக்கும்’.

சன் டிவி பாணியில் சொல்வதென்றால் நினைத்தாலே இனிக்கும் – சுகர் குறைவு!!!!

தொடர்புடைய மற்ற பதிவுகள்

சரவணகுமரன்

பரிசல்காரன்

பிரிவுகள்:சினிமா குறிச்சொற்கள்:
 1. 6:30 முப இல் செப்ரெம்பர் 9, 2009

  புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
  தமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
  http://www.ulavu.com
  (ஓட்டுபட்டை வசதிஉடன் )
  உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ….

  இவண்
  உலவு.காம்

 2. 7:55 முப இல் செப்ரெம்பர் 9, 2009

  நல்ல விமர்சனம்

 3. 7:56 முப இல் செப்ரெம்பர் 9, 2009

  //சன் டிவி படம் என்பதை, பிரித்விராஜ் மற்றும் நண்பர்கள் தியேட்டரில் திருநங்கைகளுடன் அமர்ந்து படம் பார்க்கும் காட்சியின் மூலம்தான் நிரூபிக்க வேண்டுமா??? //

  சன் டிவி படம் என்றில்லை, நாம் மெச்சிக்கொள்ளும் பெரிய இயக்குனர்கள் படங்களிலும் இதே நிலைதான்.

 4. 8:15 முப இல் செப்ரெம்பர் 9, 2009

  நன்றி சரவணகுமரன்!!!!

 5. 9:52 முப இல் செப்ரெம்பர் 9, 2009

  /படத்தின் பெயர் ஆரம்பிக்கும் முன்னரே இந்தப் படம் மலையாளத்தின் ’கிளாஸ்மேட்ஸ்’ திரைப்படத்தை/

  காப்பியடிச்சத்தை ஒத்துக்கிட்டாலும், இல்லேன்னாலும் பாக்கறவங்க என்னமோ கண்டுபுடிக்கத் தான் போறாங்க! மாட்டரு அது இல்ல! காப்பியடிச்சதையாவது ஒழுங்காச் செஞ்சாங்களான்றதுதான் மாட்டரே!

  /’இந்த மேட்டருல உன் டோடல் ரியாக்‌ஷனே அவ்ளோதானா???’/ன்னு ப்ரியா மணிய நீங்க கேக்கறது ஒருபக்கம் இருக்கட்டும்!

  மாட்டரே இல்லாத ஒரு படத்துக்கு இம்மாம் பெரிய விமரிசனம் தேவைதானா?

 6. 10:07 முப இல் செப்ரெம்பர் 9, 2009

  வாங்க கிருஷ்ணமூர்த்தி,

  கிண்டலுக்கு கேட்டுருக்கீங்களா என்னான்னு புரியலை!!!

  சினிமா பார்வைகளை, விமர்சனங்களை பதிவாக போடக் கூடாதா???

  எப்படியோ, கருத்துகளுக்கு நன்றி!!!

 7. Senthilkumar
  10:58 முப இல் செப்ரெம்பர் 9, 2009

  நல்ல விமர்சனம்.
  குறிப்பாக கல்லூரி வாழ்கையை இன்னும் சுவாரசியமாக காட்டியிருக்கலாம்.
  அதிலும் லொள்ளு சபா ஜீவா வை வீனாக்கிவிட்டர்கள்..
  எனக்கு தெரிந்து சந்தானம் மாதிரி ஜீவாவும் சிறந்த நகைச்சுவை நடிகராக வருவார்.

 8. 11:06 முப இல் செப்ரெம்பர் 9, 2009

  உங்களோட சுய அறிமுகம் ‘முதல் மொக்கைன்னு’இப்படி ஆரம்பிச்சதைப் படிச்சேன்!

  /ஆங்கிலத்தில் ஒரு பழமொழி இருக்கு (Its always better to learn from other’s mistakes). அதே மாதிரி மத்தவங்களை படிக்க வெச்சு என்னுடைய இயங்கு வெளியை மேம்படுத்தலாம்னு இருக்கேன்!/

  யாம் பார்த்த மொக்கையை அடுத்தவன் தலையில் கட்டுவதே இன்பம்!

  அதாவது படம் பாக்கப் போகலைன்னாலும் விமரிசனத்தைப் படிக்க வச்சுப் பழி தீத்துக்கற மாதிரி!

  இப்படி ஒரு பரந்த பார்வைக்கு வந்து சேந்துகிட்டீங்களோன்னு ….:-))

 9. 12:10 பிப இல் செப்ரெம்பர் 9, 2009

  //நல்ல விமர்சனம்.
  குறிப்பாக கல்லூரி வாழ்கையை இன்னும் சுவாரசியமாக காட்டியிருக்கலாம்.
  அதிலும் லொள்ளு சபா ஜீவா வை வீனாக்கிவிட்டர்கள்..
  எனக்கு தெரிந்து சந்தானம் மாதிரி ஜீவாவும் சிறந்த நகைச்சுவை நடிகராக வருவார்//

  உண்மைதான்…

  ஜீவாவை வைத்து காமெடி ரவுண்டு கட்டி அடிச்சிருக்கலாம்…மிஸ் பண்ணிட்டாங்க… அப்பிடியும் ப்ரியாமணிகிட்ட ’இது சாராயம்னு தெரியாமத்தான அடிச்ச’ இடம் டாப்பு!!!

 10. 12:14 பிப இல் செப்ரெம்பர் 9, 2009

  //இப்படி ஒரு பரந்த பார்வைக்கு வந்து சேந்துகிட்டீங்களோன்னு ….:-))//

  நீங்களும் ஃபுல் ஃபார்ம்ல இருக்கீங்கன்னு தெரியுது!!!

  படம் என்னைப் பொறுத்தவரை ஒரு சராசரி படம் என்ற கணக்கில் வைக்கலாமே தவிர சுத்தமாக மொக்கை என்று தள்ளிவிட முடியாது என்றே நினைக்கிறேன்….

  //அதாவது படம் பாக்கப் போகலைன்னாலும் விமரிசனத்தைப் படிக்க வச்சுப் பழி தீத்துக்கற மாதிரி!//

  ஆவ்வ்வ்வ்வ், அவ்ளோ மோசமாவா இருக்கு என் விமர்சனம்……

  நன்றி!!!

 11. 1:46 பிப இல் செப்ரெம்பர் 9, 2009

  ஒரு மொக்கைப் படத்திற்கு உலகப்பட விமர்சனம் மாதிரி உட்கார்ந்து யோசித்து மெனக்கெட்டு எழுதியிருக்கும் நீங்க நிஜமாவே நல்லவரு தாங்க! 🙂

 12. 2:01 பிப இல் செப்ரெம்பர் 9, 2009

  //ஒரு மொக்கைப் படத்திற்கு உலகப்பட விமர்சனம் மாதிரி உட்கார்ந்து யோசித்து மெனக்கெட்டு எழுதியிருக்கும் நீங்க நிஜமாவே நல்லவரு தாங்க! //

  வாங்க லக்கி!!!

  நீங்கனாச்சும் ஒத்துக்கறீங்களே நான் நல்லவந்தான்னு!!!!

 13. ksmuthukrishnan
  6:40 முப இல் செப்ரெம்பர் 10, 2009

  நல்ல விமர்சனம். நன்றாக எழுதுகிறீர்கள். வாழ்த்துகள்.
  தொடர்ந்து எழுதுங்கள்.

 14. 9:12 முப இல் செப்ரெம்பர் 10, 2009

  மிக்க நன்றிகள் முத்துகிருஷ்ணன்….

 15. 7:03 பிப இல் ஒக்ரோபர் 5, 2009

  நீளமான ஆனால் சுவையான விமர்சனம்

 16. 11:50 முப இல் ஒக்ரோபர் 6, 2009

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி முரளி கண்ணன்…

 1. No trackbacks yet.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: