இல்லம் > நினைவுகள் > பள்ளிக்கூடம் போவலாமா?

பள்ளிக்கூடம் போவலாமா?

நண்பர் சரவணகுமரன் ”பள்ளிகூடம் போவலாமா” தொடர் பதிவுக்கு அழைத்திருந்தார்…..அழைப்பிற்கு நன்றி

அழைத்து ஒரு வாரம் ஆகிவிட்டது, தாமதமான பதிவுதான் என்றாலும், இதை விட்டால் நானும் கொஞ்சம் பிசியான ஆள் என்பதைக் காட்ட வேறு வாய்ப்புகளே கிடைக்காது என்பதாலேயே இந்த தாமதமான பதிவு!!!

—————————————————————————————————————

நான் படித்த காலத்தில், எங்கள் ஊரில் மொத்தம் மூன்று பள்ளிக்கூடங்கள் இருந்தன. ஒன்றாவது முதல் ஐந்தாவது வரைக்கான அரசின் ஊ.ஒ.து. பள்ளி, இதில் ஆணும் பெண்ணும் சேர்ந்து ஐந்தாவது வரை படிப்பார்கள். அடுத்து ஆண்களுக்கான மேல் நிலைப்பள்ளி, அரசு உதவியுடன் கிறித்துவ சபை நடத்தும் பள்ளி அது. இங்கு 6வது முதல் 12வது வரைக்கான வகுப்புகள் நடக்கும். அதற்கடுத்து பெண்களுக்கான மேல்நிலைப்பள்ளி, ஆறவது முதல் வரை பத்தாவது வரைக்கான வகுப்புகள் அங்கே நடைபெறும். பெண்கள் 11வது 12வது படிக்க வேண்டுமென்றால் ஒன்று எங்கள் பள்ளிக்கு வரவேண்டும் அல்லது மேட்டூரில் உள்ள ஏதாவது ஒரு பள்ளிக்குச் செல்ல வேண்டும். சுற்றியுள்ள ஊர்களுடன் ஒப்பிடும் போது மேட்டூருக்கு அடுத்தபடியாக அனைத்து வசதிகளையும் கொண்டது எங்கள் ஊர்தான், இதுதான் எங்கள் ஊரின் நிலை….

சுற்றியுள்ள பதினெட்டுப்பட்டி கிராமத்திலிருந்தும் எங்கள் ஊரிலுள்ள மேல்நிலைப்பள்ளியில் வந்துதான் படித்தார்கள், வேறு கிராமங்களில் அந்த வசதி கிடையாது….கல்வியின் தரத்தை உயர்த்த வேண்டும், ஆசிரியர், மாணவர் விகிதம் குறைய வேண்டும் என்றெல்லாம் போராடுபவர்கள் அங்கு வந்து பார்த்தால் பரிதவித்துப் போயிருப்பார்கள், ஆம், ஆறாம் வகுப்பே 5 வகுப்புகள் இருந்தாலும், ஒவ்வொரு வகுப்பிலும் 100க்கும் குறையாத மாணவர்கள் இருப்பார்கள்.

அனைவருக்கும் கல்வி அளிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்தினாலேயே, எவ்வளவு முடியுமோ அவ்வளவு பேருக்கும் அனுமதி என்கிற கொள்கையை எங்கள் பள்ளி கொண்டிருந்தது, அதில் மிகுந்த வறுமையிலிருப்போர் பலர் பாதி கட்டணத்திற்கும், மற்ற பலருக்கு ஊரிலுள்ள பெரியவர்கள் உதவியுடன் படிப்போ நடக்கும். பள்ளியில் இணைந்த பிறகு நல்ல மாணவன் என்றால் ஆசிரியர்களே ஒரு சிலரின் படிப்புக் கட்டணத்தை ஏற்றுக் கொள்வார்கள்….

கிராமத்து பள்ளிக்கூடங்களின் உண்மை நிலையை கண்டறிய, அந்த ஆறாம் வகுப்பில் நுழைந்தால் எளிதில் கண்டுகொள்ளலாம், அந்த வகுப்பில் சிலர் அப்போழுதுதான் எழுத்துக்கூட்டியே படிக்க ஆரம்பிப்பார்கள், இன்னும் சிலருக்கு ஒரு வாக்கியத்தை முழுமையாக எழுதும் திறன் கூட இருக்காது. இப்படி வெவ்வேறு திறன்நிலைகளைக் கொண்ட, 100க்கும் மேற்பட்ட மாணவர்களுக்குத்தான் வகுப்புகள் எடுத்தார்கள் அந்த ஆசிரியர்கள்

அந்த மாணவர்களின் கிராமங்களில் படிப்பிற்கும் வறுமைக்கும் நடைபெறும் போராட்டங்களில் பெரும்பாலும் வறுமையே ஜெயித்துக் கொண்டிருந்தது. எண்ணெயிடாத தலைகளிலும், பொத்தான் இல்லாத டிராயர்களிலும், அழுக்கேறிய வெள்ளைச் சட்டைகளிலும், பத்தாம் வகுப்பில் கூட செருப்பணியாத (முடியாத) கால்களிலும் வறுமையின் திறமை எப்போதும் பளிச்சிட்டேக் காணப்படும். ஏறக்குறைய 500 பேரைக் கொண்டிருக்கும் 6ம் வகுப்பு, போகப் போக பத்தாவது வரும் போது சுமார் 60 பேரை (3 வகுப்புகளில்) மட்டுமே கொண்டிருக்கும். பல சமயங்களில் வறுமையின் காரணமாகவோ அல்லது பையனை கூலி வேலைக்கு அனுப்புவதற்காகவோ படிப்பை பாதியிலேயே நிறுத்தச் செய்யும் காட்சிகள் மிகச் சாதாரணம்…

11வது சேர்க்கும் போதும், 85% சதவீதத்திற்கும் அதிகமான மதிப்பெண்களை வாங்கியவர்களைத்தான் சேர்த்துக்கொள்வது போன்ற தெய்வீகக் கொள்கையின் அடிப்படையிலெல்லாம் மாணவர்களை சேர்த்துக் கொள்வதில்லை. மதிப்பெண்களுக்குத் தகுந்தாற் போல் ஏதாவது ஒரு க்ரூப்பில் எத்தனை பேரை வேண்டுமானாலும் சேர்த்துக் கொள்வர். பள்ளிக்கட்டணமும் கூட மிகக் குறைவுதான், நான் பத்தாவது முடிந்து 11வது சேர்கையில் (96ல்) 100 ரூபாயோ என்னமோதான் கட்டினதாக ஞாபகம் (பத்தாவது டிசி, மதிப்பெண் பட்டியல் வாங்கியது முதல் 11வதிற்கான அனுமதிக் கட்டணம் வரை எல்லாம் சேர்த்து)….

இத்தனை இருந்தாலும் படிப்பிலும், விளையாட்டிலும், தரத்திலும் எங்கள் பள்ளிக்கு மிக நல்லப் பெயர் இருந்தது. கிராமத்தில் உள்ள பள்ளிதானே சின்னதாகத்தானே இருக்கும் என்று யாராவது நினைத்தால் ஏமாந்துதான் போக வேண்டும். மேட்டூரில் கூட விடுதி வசதி இல்லாத நிலையில், எங்கள் பள்ளியில் அப்போதே விடுதி வசதி இருந்தது. சென்னையிலிருந்து வந்து கூட எங்கள் பள்ளி விடுதியில் சேர்ந்து படித்திருக்கின்றனர். கிறித்துவ சபை நடத்தும் பள்ளி என்பதால், கேரளாவிலிருந்து வந்து படிக்கும் கிறித்துவ மாணவர்களும் அங்கு அதிகம் இருந்தனர். அப்போதே மிகப்பெரிய நூலகமும், கம்ப்யூட்டர் லேபும் இருந்திருக்கிறது.

பள்ளியின் தரத்திற்கு இன்னொரு சான்று அதன் தேர்ச்சி நிலை, வெவ்வேறு திறன் கொண்ட மாணவர்கள் இருந்தாலும், எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து எங்கள் பள்ளி, பத்தாவதிலும், 12வதிலும் 90 முதல் 100 சதம் வரை தேர்ச்சி நிலையை அடையக் கூடியதாகவே இருந்தது (பலமுறை 100 சதம் அடைந்திருக்கிறது). விளையாட்டைப் பொறுத்தவரை அந்த மாவட்ட அளவு நடக்கும் தடகளப் போட்டிகளிலும், கால்பந்து போன்றவற்றிலெல்லாம் பல பரிசுகள் வாங்கியிருக்கிறது. சில சமயம் மாநில அளவுப் போட்டிகளில் கூட வென்றிருக்கிறது. மாநில அளவு சென்று வென்றால் அடுத்த நாள் எங்களுக்கு விடுமுறை கிடைக்கும்….

மிகச்சாதாரணமாக 5 விளையாட்டு ஆசிரியர்களை எப்போதும் கொண்டிருக்கும். இரண்டு கால்பந்து மைதானங்கள் (அதில் ஒரு மைதானம் மிகப் பெரியது), இரண்டு கூடைப்பந்து மைதானங்கள் (அதில் ஒன்று அப்போதே கான்கிரீட் போட்டது), இரண்டு கைப்பந்து மைதானங்கள், நீளம் தாண்டுதலுக்கு, உயரம் தாண்டுதலுக்கு, குச்சி வைத்து தாண்டுதலுக்கு குழிகள் அமைத்தது போக இன்னும் நிறையவே அங்கு இடம் இருக்கும். எங்கள் பள்ளியில் எனக்கு மிகப் பிடித்ததும் இந்த மைதானம்தான். விடுமைறை நாட்களில் அந்த மைதானம்தான் எங்களுக்கு கதி. சிறு வயதில், காலை 9 மணி முதல், மாலை வரை அங்கேயே கிரிக்கெட் விளையாடிய உடம்புக்கு தெரியாத வெயில், ஏனோ இப்போது சென்னை வெயில் பயங்கரமாகவே உறைக்கிறது.

வருடத்தின் முதல் பாதியில் படிப்பில் பெரும்பாலும் கழியும் எங்கள் பள்ளியில், வருடத்தின் இரண்டாம் பாதி மிகக் குதூகலமாகவே இருக்கும். விடுமுறைகளும் சரி, விழாக்களும் சரி அந்த சமயத்திந்தான் அதிகமாக இருக்கும். பெற்றோர் தின விழா, இலக்கிய விழா, விளையாட்டு விழா என்று பாதி நாட்கள் இந்த விழா சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளிலேயே போய்விடும். பெற்றோர் தின விழாவிற்கு பேச்சுப் போட்டி முதல் பல்வேறு போட்டிகள் நடைபெற்று பரிசுகள் பெற்றோர் தினத்தன்று வழங்கப்படும். இலக்கிய விழாவிற்கு, ஒவ்வொரு வகுப்புகளுக்குமிடையே கலை நிகழ்ச்சிப் போட்டி வைத்து பரிசுகள் வழங்கப்படும். யாராவது தமிழ் புலவர்கள் அவ்வப்போது வந்து பேசுவார்கள்.

இது போன்றதொரு போட்டிகள் நடத்துவதற்கென்றே மாந்தோப்பு என்று ஒரு இடம் இருக்கும். சுற்றியும் மரத்தின் நிழலில், இயற்கையின் வாசத்தில், இப்போழுது நினைத்தாலும் ஏங்க வைக்கின்ற ஒரு வாழ்க்கையை எங்கள் பள்ளி எங்களுக்கு அமைத்திருந்தது. நான் உட்பட எங்கள் பள்ளியில் பலருக்கும் நாடகம், பேச்சுப்போட்டி என்று பல துறைகளில் கூடுதல் திறன்நிலைகளை வளர்த்துக்கொள்ள தளம் அமைத்துக் கொடுத்தது இந்த மாந்தோப்புதான். எங்கள் பள்ளியில் இருந்து வெளிவந்த ஒவ்வொரு மாணவனின் மனதிலும் இந்த மாந்தோப்பு, மைதானம், இரண்டாம் பாதி விழாக்கள் ஆகியவை நீங்கா இடம் பெற்றிருக்கும்.

சில விஷயங்கள் நடக்கும் பொழுதை விட, முடிந்து நினைவுகளாய் மாறியபின் நெஞ்சில் இன்னும் பசுமையாகவும் சுவையாகவும் இருக்கும். படிக்கும் பொழுது அந்த கள்ளங்கபடமற்ற வாழ்வின் உன்னதம் நம்மில் பலருக்கும் புரிந்திருக்குமா என்று தெரியவில்லை. ஆனால் மீண்டும் அப்படி ஒரு வாழ்வை வாழ்ந்து பார்க்கும் வாய்ப்பு நமக்கு அமையாது என்றாலும், அந்த நிமிடங்களை நினைவு கூர்வதே ஒரு தனி சுவைதான் இல்லையா?????

எங்கள் பள்ளியின் பெயர் நிர்மலா மேல்நிலைப் பள்ளி, கொளத்தூர்

பின்குறிப்பு:
ஒரு விதத்தில் எங்கள் பேட்ச் கொஞ்சம் கொடுத்த வைத்த பேட்ச்தான். எங்கள் முறைக்குப் பின்பு எங்கள் பள்ளியில் 11வது 12வதுக்கு பெண்களைச் சேர்த்துக் கொள்வதில்லை என்று முடிவெடுத்திருந்தார்கள், அவர்களுக்கும் பக்கத்திலிருந்த பெண்கள் பள்ளியிலேயே ஏற்பாடு செய்யப்பட்டது. எங்கள் முறையின் போதுதான், 11வது சேரும் பெண்களுக்கு சுடிதாரை யூனிஃபார்மாக போட்டுக் கொள்ள அனுமதி அளித்தனர். அதற்கு முன்பெல்லாம் தாவணிதான் யூனிஃபார்ம். ஆனால் திடீரென்று எல்லாப் பெண்களும் சுடிதார் அணியச் செய்தது, அங்கு எல்லாருக்கும் ஒரு பெரிய அதிசியமாகத்தான் இருந்தது.

நான் அழைக்க விரும்பும் நபர்கள்

1. மழைக்காதலன் – சார்லஸ்
2. மொழியோடு ஒரு பயணம் – பிரேம்குமார்

பிரிவுகள்:நினைவுகள் குறிச்சொற்கள்:
 1. hari
  9:22 முப இல் ஜூலை 10, 2009

  naan thedum avar meena kasturi madurai

 2. 8:21 பிப இல் ஜூலை 10, 2009

  ஹரி,

  நீங்க என்ன சொல்றீங்க???

 3. 8:27 பிப இல் ஜூலை 10, 2009

  பதிவிற்கு நன்றி நரேஷ்… உங்க பள்ளியை பற்றி உயர்வா சொல்லியிருக்கீங்க… நன்றாக இருந்தது…

 1. No trackbacks yet.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: