இல்லம் > கவிதை > தமிழ் பேச்சு எங்கள் மூச்சு – கவிதைச் சுற்று

தமிழ் பேச்சு எங்கள் மூச்சு – கவிதைச் சுற்று

“இன்றையதேதியில்
அஜீத், விஜய்யை விட
மின்சாரத்தடைக்குத்தான்
விசிறிகள் அதிகமாக இருக்கின்றது”

வெள்ளிக்கிழமை மாலை வரிசையாக சேனல்களை மாற்றிக் கொண்டே வரும் போது விஜய் டிவியில் ராஜ் மோகனின் இந்தக் கவிதையை தொடர்ந்து ஞாயிற்றுக் கிழமை காலை 9.00 மணிக்கு இந்த வாரம் கவிதைச் சுற்று என்று விளம்பரம் செய்தனர். என்னதான் விரும்பி பார்க்கும் நிகழ்ச்சி என்றாலும் சில காரணங்களால் தொடர்ச்சியாக பார்க்க முடியாத சூழ்நிலையில், இந்த வாரம் கண்டிப்பாக பார்ப்பது என்ற முடிவுடன் ஞாயிற்றுக் கிழமை காலை அதிகாலை 8.45க்கே எழுந்து டீ குடித்து விட்டு வரும் போது மணி சரியாக 9.00.

தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சு நிகழ்ச்சி கடைசி கட்டத்தை நெருங்கியிருந்தது. இதில் விஜயன், நெல்சன், அருள் பிரகாஷ் மற்றும் ராஜ் மோகனின் பேச்சுகள் எனக்கு மிகப் பிடிக்கும்.

அதிலும் விஜயனின் பாவனைகள், பேச்சுகள் அனைத்தும் வைகோவை ஞாபகப் படுத்துவதாக நெல்லைக் கண்ணனே நெகிழ்ந்திருக்கிறார்.

கவிதையாகப் பொழிந்த இந்த ஞாயிறில், கலக்கியதில் முதலிடம் அருள் பிரகாஷுக்குதான். அவரது கவிதைப் பேச்சு சில இடங்களில் ஏனோ எனக்கு வைரமுத்துவை ஞாபகமூட்டியது. நிகழ்ச்சி மரபுச் சுற்ரறு மற்றும் புதுக்கவிதை என இரண்டாகப் பிரிக்கப் பட்டிருந்தது.

மரபுக்கவிதைகள் பகுதிக்கு ”ஆற்றுக்கு பாதையிங்கே யார் போட்டது” எழுதிய கவிஞர் புலமைப்பித்தன் தலைமை வகித்தார். அவர் பேசும் போது,  மழை வறண்டு இருக்கும் சமயத்தில் நீருக்கு என்ன செய்வது என்று சிந்தித்து, நீரை தேக்க வேண்டும் என்று சிந்தித்தவன் தமிழன். உலகில் முதன் முதலில் ஆற்றுக்கு குறுக்கே அணையைக் கட்டியவன் கரிகாலன். அப்பேர்பட்ட தமிழனுக்குத்தான் இன்று தண்ணீரில்லை என்று கூறினார்.

தொடர்ந்து நெல்லைக் கண்ணன் பேசும் போது, நம் பெரியவர்கள் கங்கை, சிவன் தலையில் உதிக்கிறது, திருமால் கடலில் பள்ளி கொண்டுள்ளார். குளக்கரையில் பிள்ளையாரை கொண்டுவந்து வைத்தார்கள், கடலுக்கருகில் முருகனை வைத்தார்கள், வேப்ப மரம் அம்மனுக்கு உகந்தது…. இப்படி இயற்கையை கடவுளோடு சேர்த்து சொன்னதே அதை பாதுகாக்க வேண்டுமென்றுதான். ஆனால் நம்மாட்கள் அப்போதும் கோட்டை விட்டார்கள் என்றார்.

அடுத்து “ஆகஸ்ட் 15” (ஆ’கஷ்டப்’ 15) தலைப்பில்  தேவகோட்டை ராமநாதன் பேசினார். அவர் கவிதையில் சில வரிகள்,

”காசில்லாமல் கல்வி கஷ்டம்
காவேரியில் தண்ணீர் கஷ்டம்
பாமரருக்கு கஞ்சி கஷ்டம்
படித்தவனுக்கு வேலை கஷ்டம்
…………………………………………………………..
…………………………………………………………..
தமிழைப் படிக்க தமிழருக்கே கஷ்டம்
ஒருமைப்பாடு நாட்டில் கஷ்டம்
ஒலிம்பிக்கில் தங்கம் கஷ்டம்”
தட்சணை வாங்கி தாலியின் ஆயுள்
நிச்சயம் செய்கிற நிதர்சனம் விடுமா?” என்றும் வினவினார்.

அவரைத்தொடர்ந்து சுந்தரராமன் “புவி வெப்பமயமாதல்” தலைப்பில் இரு வெண்பாக்களை பதிவு செய்தார்.

அவரைத் தொடர்ந்து பேசிய நெல்சன் மரபுக் கவிதை சுற்றில் அந்தளவுக்கு சோபிக்க வில்லையென்றாலும், அவரது பேச்சு அர்த்தம் நிறைந்ததாக இருந்தது

மரபுக்கவிதை சுற்றைத் தொடர்ந்து கவிஞர் நந்தலாலா தலைமையில் புதுக் கவிதை மற்றும் ஹைக்கூ கவிதைச் சுற்று ஆரம்பமாகியது.

கவிஞ்ர் நந்தலாலா சொன்ன இரு ஹைக்கூ கவிதைகள்

“கையிலே மை
முகத்திலே கரி’
வருகிறது தேர்தல்”

”பூங்காவில் மாமிச நாற்றம்
காதலர்கள் பேசிக் கொள்கிறார்கள்
ஏதோ ஓர் இதயம் எரிகிறதென்று”

புதுக்கவிதை சுற்றில் முதலில் பேசியது அபிராமி அவர்கள் “இயற்கை” என்ற தலைப்பில்
“அரும்புகழ் கொண்ட உங்கள் முன் இந்த
அரும்புகளின் அரைகுறை கவிதைகள்தான் இதுவும்” என்று ஆர்ப்பாட்டமாக ஆரம்பித்தார்..

“நான் பேருந்தில் பயணம் செய்துகொண்டிருந்தேன்
என்னை ஓர் அழகான் இளம்பெண் கடந்து சென்றாள்
அவள் கைகளில் சூரிய வெப்பம் படாதிருக்க கையுறை அணிந்திருந்தாள்
சுத்தமான காற்றை சுவாசிக்க வேண்டுமென்பதற்காக முகமூடி அணிந்திருந்தாள்
முகம் முழுக்க முகப்பூச்சு!
அழகான பெண்ணுக்கு இந்த நிலைமை என்றால்,
என் பூமித்தாய் எவ்வளவு அழகானவள்!!!
அவளுக்கு நாம் எந்தப் பாதுகாப்பையும் செய்வதில்லையே?” என்பதைத் தொடர்ந்து
“வரமும் சாபமானது – இங்கே
மழையும் அமிலமானது
என் ஓசோன் படலத்தில் ஓட்டையிட்டாய்
உன் பசுமைப் படலத்தை ஏனோ கோட்டை விட்டாய்
உருவாக்க உனக்கு திறமையில்லாத போது
அழிக்கத் தந்தது யார் தந்த உரிமை”

இவரைத் தொடர்ந்து “மின்சாரம்” தலைப்பில் ராஜ்மோகன் பேசினார்
அவரது கவிதை வரிகளில் சில…

“தடங்கலுக்கு வருந்துகிறோம்

வீட்டில் இருப்பதென்னவோ
வண்ணத்தொலைக்காட்சிப் பெட்டிதான்.
மின்சாரம் இல்லாததால் அது
கறுப்பாகவே இருக்கிறது.

அம்மாக்கள் அனைவரும்
எந்த பயமும் இல்லாமல்
கொடிக்கம்பிக்கு பதிலாக
மின்சாரக்கம்பியிலேயே
துணி காயப்போடுகிறார்கள்.

சங்ககாலம் பொற்காலம்
எல்லாம் அந்தக்காலம்
வெளிச்சமில்லாமல்
வகுப்புகளெல்லாம்
வீதிக்கு வந்துவிட்டதே
இதுதான் இருண்டகாலம்.

இன்றையதேதியில்
அஜீத், விஜய்யை விட
மின்சாரத்தடைக்குத்தான்
விசிறிகள் அதிகமாக இருக்கின்றது.

வ.உ.சி. கப்பல்களை
ஒட விட்டார்.
இன்று வ.உ.சி.வீட்டில்கூட
மிக்சி, க்ரைண்டர்
எதுவுமே ஓடுவதில்லை.

குழந்தைகளின்
பிறப்பைத் தடுப்பது
கருத்தடை.
குழந்தைகளின்
சிரிப்பைத் தடுப்பது
மின்தடை.

அதிகாரிகளே…
சீக்கிரம்
எங்கள் வீடுகளுக்கு
சிம்னி விளக்காவது தாருங்கள்.
அதற்கும் பட்ஜெட் போதவில்லையென்றால்
சிக்கிமுக்கி கற்களையாவது தாருங்கள்.

இந்த இருண்ட இரவுகள்
நெருங்கிக் கொண்டிருக்கும்
எங்கள் கடைசி இரவுகளை
நினைவுறுத்துகிறது..”

“மின்சாரத்தடை
முதிர்கன்னியாய்
இருந்த மெழுகுவர்த்திகளுக்கு
முகூர்த்தம் கொடுத்திருக்கிறது….”

ராஜ்மோகனைத் தொடர்ந்து அருள் பிரகாஷ் “காதல்” தலைப்பில் புதுக்கவிதை வழங்கினார்.

“பொறு பெண்ணே!
தாடியின் தத்துவம் தெரியுமா உனக்கு?
காதலிக்கும் போது, என் காதலி முகம் பார்க்க வேண்டுமென்பதற்காக
சவரம் செய்து எங்கள் முகத்தை சலவைக் கல்லாக வைத்திருக்கிறோம்!
பிரிவு நேர்ந்தால்,
அவள் முகம் பார்த்த கண்ணாடியில், வேறு யாரும்
முகம் பார்த்து விடக் கூடாது என்பதற்காக
ஒரு கருப்புத் திரை போட்டு வைத்திருக்கிறோம்
அதற்கு நீங்கள் தாடி என்று பெயர் வைத்திருக்கிறீர்கள்!!!!
காதல் சட்டமன்றத் தேர்தலில்
இதயமெனும் தொகுதிக்கு வேட்பு மனு தாக்கல் செய்தேன்!
விழிப்பார்வையெனும் வாக்குகள் விழந்ததென்னவோ உண்மைதான்,
ஆனால் இந்த வேட்பாளன் தொகுதியிடம் தோற்றுப் போனான்!
இதய டெபாசிட் இழந்து போனான்!
நம் காதல் கூட ஒரு சுதந்திரப் போராட்டம்தான்!
இதயம் நடத்தும் ஒத்துழையாமை இயக்கம்
கண்கள் நடத்தும் உப்புச் சத்தியாகிரகம்
கனவுகள் நடத்தும் வட்ட மேஜை மாநாடு
ஆங்கிலேயப் பிரதிநிதியாய் ஜாதியின் பெயரைச் சொல்லி
பெற்றவர்கள் நடத்தும் ஜாலியின் வாலாபாக் படுகொலை!
நம் காதல் கூட ஒரு சுதந்திரப் போராட்டம்தான்!
இரண்டையுமே கண்டுபிடித்த பின்
தொலைத்து விட்டோம்!!!!!”

அருள்பிரகாஷ் ஹைக்கூவைப் பற்றி பேசும் போது,
“முதல் இரண்டு வரிகளில் வியப்பை ஏற்படுத்த வேண்டும்
கடைசி வரியில் புருவத்தை உயர்த்த வேண்டும்
இதுதான் ஹைக்கூவின் இலக்கணம்..”
தமிழில் இதை குறும்பா என்பார்கள்,
குறுகிய பாவாக இருப்பதாலும்
அடிக்கடி குறும்பு செய்வதாலும் இதைக் குறும்பா என்பார்கள்!!!

இவரைத்  தொடர்ந்து “தண்ணீர் பஞ்சம்” தலைப்பில் விஜயன் பேசினார். அவரது கவிதை வரிகளில் சில..
“தண்ணீர் வெறும் தண்ணீரல்ல
நீல வானத்தின் ஆனந்தக் கண்ணீர் இந்த தண்ணீர்
பூமித்தாய் சுரக்கும் தாய்ப்பால் தண்ணீர்
தண்ணீர் வெறும் தண்ணீரல்ல
வானம் பூமிக்கு வீசி எறிகிற வைரக் கற்கள் தண்ணீர்
விண்ணுக்கும், மண்ணுக்கும் இயற்கை அமைத்த பாலம் இந்த தண்ணீர்!
தண்ணீர் வெறும் தண்ணீரல்ல
குழந்தையைச் சுமந்த இடுப்புகளெல்லாம் – இன்று
குடங்களைச் சுமந்து அலைவது ஏனோ
குடமே குழந்தையாய் மாறியதால் தானோ!
பனிக்குடம் உடைத்த மனிதா – உனக்கு
மண்குடம் உடைக்க தண்ணீர் உண்டா?
முடிந்த போருக்கே கண்ணீரில்லை
தண்ணீருக்காக இன்னொரு போரா?”
என்று அசத்திய விஜயனின் ஹைக்கூ கவிதைகள்,

“முத்தமிடாத காவிரி
ஏக்கத்தில் பெருமூச்சு விடும்
வங்கக்கடல்”

“காவிரிப்பிரச்சனை
காவிரிப்பபிரச்சனை
இப்படிப் பேசிப்பேசியே
வறண்டுபோகும் நாக்கு”

எனக்கு நினைவில் இருக்கும் வரிகளை அளித்துள்ளேன். உண்மையில் இது அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய நிகழ்ச்சி……..

பி.கு.1. கவிதை மட்டும் அசத்தலல்ல. அதை கம்பீரமான குரலில் கேட்கும் போது மிக அருமை!

பி.கு.1. இந்த அசத்தலான நிகழ்ச்சியின் மறு ஒளிபரப்பு, வாரநாட்களில் ஏதோ ஒரு நாளில், மாலை வேளையில் இருக்கிறது.  வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக பாருங்கள்.

தொடர்பான பதிவு்:

http://www.parisalkaaran.com/2008/11/blog-post_10.html

பிரிவுகள்:கவிதை குறிச்சொற்கள்:
 1. 10:25 பிப இல் நவம்பர் 10, 2008

  நல்ல பகிர்தல்.

  நன்றி நண்பரே!!!

 2. 7:09 முப இல் நவம்பர் 11, 2008

  தொடர்ந்து பார்த்துக்கொண்டிருந்த நிகழ்ச்சி. இப்போது சில வாரங்களாக பார்க்க முடியவில்லை…. மீண்டும் நிகழ்ச்சியை பார்க்க வேண்டும் என்ற அவாவை தூண்டியதற்கு நன்றி நரேஷ் 🙂

  அப்புறம் தல, உங்கள் நினைவாற்றல் அபாரம் 🙂

  பிரேம்குமார்
  http://premkumarpec.blogspot.com

 3. 9:49 முப இல் நவம்பர் 11, 2008

  //அப்புறம் தல, உங்கள் நினைவாற்றல் அபாரம்//

  மனப்பாடம் செய்து ஒப்புவிக்கும் நம் கல்விமுறையின் நன்மைகளில் ஒன்று! 🙂

  இந்த நிகழ்ச்சி பற்றி ஒரு பதிவு போடனும்னு என்னைத் தூண்டியது, மரபுக்கவிதைச் சுற்றில் முதலில் பேசிய அருள் பிரகாஷ்தான். அவருடைய அந்த கிராமத்து பாணி கவிதையை நான் மிக ரசித்தேன்.

  உடனே அடுத்தடுத்த கவிதைகளில் சற்று குறிப்பு எடுத்துக்கொண்டு விட்டு பதிவிட்டேன்.

  ஆனால் உண்மையில், கவிதைகள் மட்டுமல்ல, கவிதைகளை அவர்கள் சொல்லும் போது அதன் அழகு பன்மடங்கு அதிகம் (அதிலும் குறிப்பாக, அருள்பிரகாஷ், விஜயன் மற்றும் ராஜ்மோகனின் பேச்சு)!!!

 4. 9:49 முப இல் நவம்பர் 11, 2008

  நன்றி பரிசலார் மற்றும் பிரேம்!

 5. 4:03 பிப இல் நவம்பர் 11, 2008

  பகிர்தலுக்கு நன்றி நண்பரே !!!!!

 6. 7:27 பிப இல் நவம்பர் 11, 2008

  வருகைக்கு நன்று அணிமா!!!!!

 7. தங்க கம்பி
  9:09 பிப இல் நவம்பர் 11, 2008

  தங்களின் பங்களிப்பு மிக அருமை. நண்பர்கள் யாராவது நிகழ்ச்சியை பார்க்கதவறியிருந்தால் கீழ்கண்ட தளத்திற்கு சென்று பார்த்துமகிழலாம்.
  http://tamil.techsatish.net/file/tamil-petchu-engal-mutchu-6/

 8. 9:42 முப இல் நவம்பர் 12, 2008

  நன்றி தங்க கம்பி!

  உபயோகமான இணைப்பு 🙂

 9. Murugesan
  10:17 முப இல் ஜனவரி 5, 2009

  மிக அருமையான நிகழ்ச்சி……………

 1. No trackbacks yet.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: