இல்லம் > பயணக் குறிப்பு > அர்த்தமற்ற ஒரு பயணக் குறிப்பு

அர்த்தமற்ற ஒரு பயணக் குறிப்பு

இரண்டு வாரம் முன்னாடி ஒரு சனிக்கிழமை இரவு ”ஜெயம் கொண்டான்” படம் பார்த்துட்டு நண்பர்களுடன் வீட்டுக்கு வரும் போது சற்றே தாமதமாகியிருந்தது. படத்தில் பாவனா அழகா இல்லை லேகா அழகா என்று விவாதம் நடத்திக் கொண்டே தொலைகாட்சியைப் பார்த்தா, டில்லியில் குண்டு வெடிப்பு, பலர் பலி என்று ஃப்ளாஸ் நியூஸ் ஓடிக் கொண்டிருந்தது.

விவாதம் நடத்திக் கொண்டிருந்த அனைவரும் சற்று நேரம் நியூஸ் பார்த்துட்டு பின் அனைவரும் ஒன்று சேர்ந்து என்னைப் பார்த்து சிரிக்க ஆரம்பித்தனர். பாவனாவின் தாக்கத்தில் இருந்த எனக்கு ஆரம்பத்தில் ஒன்றும் புரியாவிட்டாலும் மெதுவாக புரிந்தது. விஷயம் என்னவென்றால் விடியற்காலை 6 மணிக்கு அலுவலக காரியமாக டெல்லிக்கு நான் கிளம்புகிறேன். அதான் இந்தச் சிரிப்பு என்னைப் பார்த்து. நண்பர்கள்னா உங்களை மாதிரிதான்டா இருக்கணும் என்ற படியே கைப்பேசியை எடுத்துப் பார்த்தால் 8 மிஸ்டு கால்ஸ். எல்லாம் வீட்டிலிருந்துதான்.

சொல்லாமலேயே எனக்கு காரணம் புரிந்தது. உடனேயே வீட்டிற்கு அழைத்தால் அம்மாவின் கவலையான குரல் என்னைக் கேட்டது, கண்டிப்பா டெல்லிக்கு போகணுமா என்று?. நான் கால் பண்ணி கேட்டுட்டேண்மா, டிவியில காட்டுற அளவு பயப்படற மாதிரி ஒன்னும் இல்லியாம்மா, அது டெல்லியில வேற பகுதி, நாங்க இருக்கிறது வேற பகுதி. அதனால பயப்படாதீங்க, ஏதாவது பிரச்சனை இருக்கிற மாதிரின்னா அவங்களே என்னை வரச் சொல்ல மாட்டாங்க என்றேன். மறுமுனையில் சற்றே நிம்மதியடைந்தாலும் முழுத் திருப்தி அடையவில்லை என்பது மெல்லிய சரி என்ற வார்த்தையில் புரிந்தது.

அம்மாவை ஆறுதல் படுத்தும் விதமாகவும், நண்பர்களுக்கு பதில் தரும் விதமாகவும் சொன்னேன், அது மட்டுமில்லாம, செய்திலியே அவங்களுடைய அடுத்த குறி சென்னையா இருக்கற வாய்ப்பு அதிகம்னு சொல்றாங்க. அதனால் நான் இங்க இருக்கறதுதான் எனக்கு ரிஸ்க்கே ஒழிய டெல்லி போறதில் இல்லமா, தவிர இப்பதான் இங்க குண்டு வெச்சவங்க உடனடியா அடுத்து அங்கியே குண்டு வெக்கிறது வாய்ப்பு ரொம்ப கம்மிமா என்று போலீஸ்காரர் ரேஞ்சுக்கு பேசிட்டு, அதனால நீங்க என்னைப் பற்றி கவலைப் படாம சென்னையிலியே இருக்கப் போற உடன்பிறப்பை எச்சரிக்கை செய்யுங்க என்று கைப்பேசியை அவனிடம் கொடுத்து விட்டு நான் தப்பித்துக் கொண்டேன்.

நண்பர்களின் கண்டிப்பா போகனுமா என்ற கேள்விக்கு ஆமாண்டா என்று சொன்னாலும், இதில் எவன் சந்தோஷமா கேக்கறான், எவன் வருத்தமா கேக்கறான் என்பதை என்னால் அனுமாணிக்க முடியவில்லை. எப்படியோ டெல்லியை அடைந்த போது, டெல்லி தன் பழைய நிலைக்குத் திரும்பியிருந்தது. அலுவலகம் சென்று, சில பல நலம் விசாரிப்புகள் முடிந்த பின் வேலையை ஆர்ம்பிக்கும் போதுதான் உணர்ந்தேன், இந்த நகரத்தில்தான் இரண்டு நாட்களுக்கு முன்பு நாட்டையே உலுக்கிய, ஊடகங்களுக்கு தீனிப் போட்ட, என் நண்பர்களுக்கு சந்தோசமூட்டிய குண்டு வெடிப்பு நிகழ்ந்தது என்பதற்கான அறிகுறியே இல்லை என்று. பழகிப் போயிடுச்சோ என்பது போன்ற பல கேள்விகள் மனதில் எழுந்தாலும், இதை விட நமது உறுதியை திருப்பிக் காட்ட முடியாது என்ற திருப்தியும் எழுந்ததால் வேலையைப் பார்க்கத் தொடங்கினேன் (இதுக்குத்தானே இவ்ளோ தூரம், அதுவும் இந்த நேரத்துல பாசமா கூப்பிட்டுறுக்காங்க).

ஐந்து நாட்கள் எப்படி ஓடியது என்றே தெரிய வில்லை, அலுவலகம், அதை விட்டால் கெஸ்ட் ஹவுஸ் என்று மாறி மாறி போய்கிட்டிருந்தாலும் ஒரே ஒரு விஷயம் மட்டும் எனக்கு சங்கடம் உண்டு பண்னிக் கொண்டே இருந்தது. ஹிந்தி தெரியாத காரணத்தால் என்னிடம் பேசும் போது மட்டும் ஆங்கிலத்தில் பேசும் அலுவலக நண்பர்கள் நான் அருகில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மற்றவர்களோடு பேசும் போது ஹிந்தியிலேயே பேசியதைக் கண்டேன், அதுவும் ஆங்கில வார்த்தைகள் அதிகம் கலக்காததையும் கண்டேன். ஒரு பக்கம் கடுப்பா இருந்தாலும், மறுபுறம் மெல்லிய வியப்பும் ஏற்பட்டது.

ஏனென்றால் நம்மூரில் ஆங்கிலக் கலப்பு அதிகம் என்பது ஒரு புறம் இருந்தாலும், இங்கு அலுவலக விஷயமாக வெளி ஆட்களுடன் பேசும் போது, தமிழில் பேசினால் என்னை உயர்ந்த ஸ்தானத்தில் வைத்துப் பார்க்க மாட்டார்கள் (இத்தனைக்கும் ஒரு சிலருக்கு ஆங்கிலம் சரியாக வராது). ஆனால் இங்கே வெளி ஆட்களிடம் கூட ஹிந்தியில் பேசுகிறார்கள். ஒரு புறம் அவர்களது செயல் எனக்கு மகிழ்ச்சியையே தந்தது. எப்படியோ ஐந்து நாட்கள் ஓட்டினால் வார இருதி நெருங்கியது. ரெண்டு நாட்கள் என்ன செய்வது என்று புரிய வில்லை. வேலை சற்று இருந்தாலும், வார இறுதியிலும் வேலை செய்யும் அளவுக்கு, அதுவும் இவ்வளவு தூரம் வந்து விட்டு வெளியே சுற்றி பார்க்காமல் வேலை செய்யும் அளவுக்கு நான் பழம் இல்லை என்பதால் என்ன செய்யலாம் என்று யோசித்தேன்.

கண்டிப்பா தாஜ்மகால் போயிட்டு வந்துடு என்று என் அக்கா சொல்லியிருந்ததாலும், வார இறுதியில் ஷாப்பிங் போறேன்னு எந்த கடைவீதிக்கும் போகக் கூடாது என்று வீட்டிலிருந்தும், கடைவீதிக்குப் போயிட்டு வாடா என்று என் நண்பர்களும் கூறியிருந்ததாலும் கடைவீதிக்கும் போகாமல் என்ன செய்வது என்று யோசித்து இறுதியில் தனியாகவே ஆக்ரா சுற்றுலா போக முடிவு செய்து விட்டு, எனக்குத் தெரிந்த ஒரு டிராவல்ஸில் ஒரு டிக்கட் பதிவு செய்து விட்டேன். தனியாகவே போவது ஒரு சவுரியம், ஏனென்றால் பக்கத்தில் பேசுவதை விட, இடத்தை அதிகம் சுற்றிப் பார்க்கலாம்.

ஞாயிறு, அதிகாலை பேருந்து ஏறியவுடன் ஒரு சந்தோசம், ஒரு வருத்தம். சந்தோசத்துக்கு காரணம், ஏறக்குறைய பேருந்தில் இருந்த எல்லாரும் தென்னிந்திய ஆட்கள். வருத்ததிற்கு காரணம் வயசுப் பொண்ணுங்க யாருமே இல்லை!. ஏறக்குறைய டெல்லியை தாண்டும் போது 26 வயசுப் பசங்க ரெண்டு பேரு ஏறுனாங்க. பேசிக்கிட்டு வரும் போதே தெரிந்தது அவங்க தமிழ் ஆளுங்க என்று.
வண்டி ஓரிடதில் காலை உணவுக்கு நின்றது. 25 நிமிஷத்துல சாப்பிட்டு வந்திடணும் என்று டிரைவர் சொல்லியிருந்தாலும், டோக்கன் வாங்கினால்தான் உணவு வாங்க முடியும் என்பதால் டோக்கன் வாங்கும் இடத்தில் கூட்டமாக இருந்தது. அந்த ஹோட்டலில் எங்கள் பேருந்தில் வந்த ஆட்கள்தான் மட்டும்தான் சாப்பிடுகிறார்கள் என்றாலும், தன் முறை வந்தவுடந்தான் என்ன உணவு சாப்பிடலாம் என்று யோசிக்க ஆரம்பிக்கும் நம் ஆட்களின் கைங்கர்யத்தாலும், டோக்கன் கொடுப்பவரின் சுறுசுறுப்பாலும் கூட்டம் மிக மெதுவாக நகர்ந்தது. அதிலும் ஒரு 55 வயது பெரியவர், ஆர்டர் கொடுக்க 5 நிமிடம், காசு தேடிக் கொடுக்க 5 நிமிடம் எடுத்துக் கொண்டதில் (இத்தனைக்கும் கண் முன்னாடியே மெனுவும், அதற்குரிய விலையும் போட்டிருந்தார்கள்), நான் வேறு ஏறக்குறைய கடைசியில் நின்றிருந்ததால் டிரைவர் சொன்ன நேரத்திற்குள் டோக்கன் வாங்க முடியமா என்றே சந்தேகம் ஏற்பட்டது.

நல்ல வேளையாக இன்னொருவர் டோக்கன் கொடுக்க வர, கூட்டம் சீக்கிரம் நகர்ந்தது. மசால் தோசைக்கும், வடைக்கும் ஆர்டர் கொடுத்து விட்டு காத்திருக்க, டோக்கன் வாங்க பத்து நிமிடம் பண்னிய பெரியவர் தான் கேட்டது முழுதாய் வரவில்லை என்று கடைக்காரரிடமும் தனது நண்பரிடமும் பொரிந்து கொண்டிருந்தார். என்னுடைய மசால் தோசையும், வடையும் வர எடுத்துக்கொண்டு திரும்பும் போது, பாரு நமக்கு அப்புறம் வந்தவன் சீக்கிரம் வாங்கிட்டு போறான், நமக்கு ஒன்னும் தர மாட்டேங்கிறான், டிரைவர் வண்டி எடுத்துடப் போறான் என்று தமிழில் முணு முணுத்தது காதில் விழுந்தது. சுளீர் என்று கோபம் வந்தாலும், அவர் வயதின் காரணமாகவும், எனது மூடை நானே கெடுக்க விரும்பாததாலும், அவரைப் பார்த்து, பெரியவரே, நானும் ரொம்ப நேரமாத்தான் நிக்கறேன், நாம இல்லாம வண்டியை எடுக்க மாட்டாங்க, என்னை சொன்ன மாதிரி மத்தவங்களைப் பார்த்து சொல்லாதீங்க, ஏன்னா வந்திருக்கறவங்கள்ல நிறைய பேரு தமிழ் ஆளுங்கதான் என்று அமைதியாக சொல்லி விட்டு, டெல்லியோட எல்லையில ஏறுன என்னோட செட் பசங்க பக்கத்துல உக்காந்து சாப்பிட ஆரம்பித்தேன்.

வேறு இடம் இல்லாததால் அந்தப் பெரியவரும், அவருடைய நண்பரும் எனது எதிரில் அமர்ந்து சாப்பிட்டாலும் என்னைப் பார்ப்பதை தவிர்த்தனர். மசால் தோசையை முடித்து விட்டு வடையை சாம்பாரில் தொட்டு சாப்பிடுவதற்கு, சும்மாவே சாப்பிடலாம் போலிருந்தது. பக்கதிலிருந்த பசங்க வேறு சாம்பார் மயிரு மாதிரி இருக்கு என்ற சொன்ன சமயத்தில், அந்தப் பெரியவர் தனது நண்பரிடம் இன்னொரு கிண்ணம் சாம்பார் எடுத்து வரச் சொல்லிக் கொண்டிருந்தார். இவருக்கு இயற்கையிலேயே எதாவது கோளாறோ என்ற எனது சிந்தனையை பேருந்தில் இருந்து வந்த ஹார்ன் சத்தம் கலைக்க சீக்கிரம் சாப்பிட்டு பேருந்துக்கு சென்றேன்.

முதலில் ஆக்ரா கோட்டை, என்னதான் டிஜிட்டல் காமிரா வைத்திருந்தாலும் மற்றவர்களையும், இடத்தையும் என்னால் எடுக்க முடிந்ததே தவிர என்னை என்னால் எடுக்க முடியவில்லை என்ற உண்மை என்னை கடுப்பேற்றிக் கொண்டிருந்தது. நான் இருப்பது போன்ற போட்டோ காண்பித்தாலொழிய நான் ஆக்ராவிற்கு போனேன் என்பதை ஒப்புக் கொள்ளப் போகாத எனது நண்பர்களை எப்படி ஒப்புக்கொள்ள வைப்பது என்று யோசிக்கும் போது, அந்த பசங்க பக்கத்தில் இருந்தைப் பார்த்து, அவர்களிடம் பாஸ், என்னை ஒரு போட்டோ எடுங்க என்றேன்.

ஆக்ரா கோட்டை முடிந்து, மதியம் சாப்பிடும் போது நான் தனியாக உட்கார்ந்திருப்பதைப் பார்த்து, அவர்களே என்னை அவர்களுடன் வந்து இணைந்து கொள்ளுமாறு அழைத்தனர். இப்படியே ஒன்று சேர்ந்து, அடுத்து தாஜ்மகாலைப் பார்க்கச் சென்றோம். பார்க்க, பார்க்க பிரமிப்பை ஏற்படுத்துகிறது தாஜ்மகால். இந்த பக்கம் திரும்பி விட்டு, திரும்பி தாஜ் மகாலைப் பார்த்தால் மீண்டும் வியப்பு ஏற்படுகிறது. அந்தப் பிரமிப்பின் காரணமாகவும், நண்பர்கள் நம்ப வேண்டும் என்ற காரணத்திற்காகவும், அங்கேயே இருக்கும் போட்டோகிராபர்களிடம் சொல்லி, போட்டோ எடுத்துக் கொண்டேன். மூன்று மணி நேரம் அங்கேயே செலவளித்து விட்டு, திரும்பும் போது, என்னதான் தாஜ்மகால் என்னை பிரமிக்க வைத்தாலும் சில விஷயங்கள் என்னை சங்கடப் படுத்தியது. முதலாவது, டிக்கட் கொடுக்கவும், செக் பண்ணவும் எல்லாரும் குறைந்தப் பட்சம் ஒரு மணி நேரம் காத்திருக்க நேரிட்டது.

இத்தனைக்கும் அன்று ஞாயிற்றுக்கிழமை, அதி பயங்கற கூட்டம் இல்லாவிட்டாலும் ஓரளவு நல்ல கூட்டம் இருந்தது. விடுமுறை நாட்களிலாவது கூட்டம் சீக்கிரம் நகர அரசு ஏற்பாடு செய்திருக்கலாம். செக் பண்ணுகிற இடத்தில் உள்ளே நுழையும் போது கைப்பேசியின் ஹெட்போனை உள்ளே விடமாட்டேன் என்று பிரச்சனை பண்ண, லாக்கர் ரூமில் வைக்கலாம் என்று அங்கே சென்றால், அங்கே அவர்கள் வேலை செய்யும் வேகத்தைப் பார்த்தால் மீண்டும் ஒரு மணி நேரம் காத்திருக்க வேண்டும் என்று தோன்றியது. கடுப்பில் ஹெட்போனை தூக்கி எறிந்து விட்டு வரவேண்டியிருந்தது.

இன்னொரு விஷயம் வரிசையில் நகரும் போது ஏகப்பட்ட பேர் குழந்தையை வைத்து பிச்சை எடுப்பதும் மற்றும் சிறு வயது பையன்கள் ஏதாவது பொருட்கள் விற்பதும் சாதரணமாக இருந்தது. குழந்தை தொழிலாளர்கள் கூடாது என்று பிரச்சாரம் செய்யும் அரசாங்கம் எப்படி, ஏழு அதிசியங்களில் ஒரு அதிசியமாக கருதப்படும் இடத்தில், வெளி மாநிலத்தவரும், வெளி நாட்டினரும் அதிகம் வரும் இடத்தில் இப்படி ஒரு நிலையை ஏற்படுத்தியுள்ளனர் என்று புரியவில்லை.

எல்லாவற்றையும் முடித்துவிட்டு டெல்லி வந்து சேர்ந்து மீண்டும் வேலை பார்க்க ஆரம்பித்து, இன்னொரு ஒரு வாரத்தை ஓட்டும் போது வெள்ளிக்கிழமை அலுவலகத்தில் சொன்னார்கள் நாளை நீ கிளம்பலாம் என்று. சனிக்கிழமை மெதுவாக தூங்கி எழுந்து, மிச்ச மீதியிருந்த வேளைகளை முடித்து விட்டு கிளம்பும் போது தொலைக்காட்சியில் ஃபிளாஸ் நியூஸ், டெல்லியில் மீண்டுமொரு இடத்தில்
குண்டு வெடிப்பு, 4 பேர் பலி என்று. உடனடியாக வீட்டிற்கு அழைத்து, நான் கிளம்பப் போகிறேன், இங்கு ஒரு பிரச்சனையும் இல்லை என்று அறிவித்து விட்டு மெதுவாக போகும் போது என் காதுகளில் எதிரொலித்துக் கொண்டிருந்தது நான் முன்பு சொன்ன வார்த்தைகள் “இப்பதான் இங்க குண்டு வெச்சவங்க, உடனடியா அடுத்து அங்கியே குண்டு வெக்கிறது வாய்ப்பு ரொம்ப கம்மிமா”……..

பிரிவுகள்:பயணக் குறிப்பு குறிச்சொற்கள்:, , ,
 1. நல்லதந்தி
  8:45 பிப இல் ஒக்ரோபர் 14, 2008

  🙂

 2. mappla
  8:56 பிப இல் ஒக்ரோபர் 14, 2008

  NICE to Read. Keep posting..

 3. 9:50 பிப இல் ஒக்ரோபர் 14, 2008

  நன்றி மாப்ள, நல்லதந்தி

 4. 12:19 பிப இல் ஒக்ரோபர் 15, 2008

  நண்பரே நீங்க டெல்லி யா , நானும் டெல்லி தான் , டெல்லில எங்க ?

 5. நான் ஆதவன்
  1:04 பிப இல் ஒக்ரோபர் 15, 2008

  nice naresh. keep posting…

 6. 2:15 பிப இல் ஒக்ரோபர் 15, 2008

  வருகைக்கு நன்றி அடலேறு!

  நான் டெல்லி இல்லீங்க, சென்னைதான். அலுவலக விஷயமா டெல்லி வந்தேன். டெல்லில குண்டு வெடிச்சதுக்கு அடுத்த நாள் சென்னைலருந்து கிளம்பினேன், இன்னொரு குண்டு வெடிச்ச அன்னிக்கு டெல்லிலருந்து கிளம்பினேன்.

  என்ன கொடுமை சார் இது??????

 7. 2:16 பிப இல் ஒக்ரோபர் 15, 2008

  நன்றி நான் ஆதவன்!!!

 8. ksmuthukrishnan
  6:37 முப இல் செப்ரெம்பர் 10, 2009

  உங்களுடைய பயணக் கட்டுரையைப் படித்தேன். நல்ல சரளமான நடை. உண்மையாகப் பயணிப்பது போல இருந்தது. அருமையான கட்டுரை. தாஜ் மகாலைப் பார்க்க வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் கனவு. இந்த ஆண்டு இறுதி வாக்கில் நானும் என் மனைவியும் வட இந்தியா பயணத்திற்கு முடிவு செய்துள்ளோம். கோலாலம்பூரிலிருந்து திருச்சிக்கு விமானம் பிடித்து, அங்கிருந்து பெங்களூருக்கு இரயில் பிடித்து, பெங்களூரிலிருந்து டில்லிக்கு பேருந்து பிடிக்கலாம் என்பது எங்களுடைய திட்டம். இந்த ஆண்டு டிசம்பரில்தான் முடியும். தமிழ் நாட்டில் நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்?

 9. 9:11 முப இல் செப்ரெம்பர் 10, 2009

  நன்றி முத்து கிருஷ்ணன்!!!!

  என் வசிப்பிடம் சென்னையில் (வடபழனி)…

  உங்கள் முழு பயணத் திட்டம் தெரியாது இருந்தாலும், பெங்களூரிலிருந்து டெல்லிக்கு பேருந்து என்பது கஷ்டமாயிற்றே…

  பயணம் இனிதே அமைய வாழ்த்துக்கள்…

 1. No trackbacks yet.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: